ஸ்லீப்பர் செல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 1,243 
 
 

காலை நேரம். முகில்களுக்கு அருகில் உள்ள குளுகுளு மலை நகர் உதகையில் தன்னுடைய மாளிகையில் சோபாவில் அமர்ந்து இருந்தாள் ஒல்லியான உடல்வாகு கொண்ட அழகான இளம்பெண் ரத்னா. சாதாரண சேலை அணிந்து இருந்த அவள் ஒரு இளம் தொழிலதிபர். இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவருடைய தந்தையார் அகால மரணமடைந்ததால் அவருடைய பிசினஸ் சாம்ராஜ்யத்தை கட்டிக் காப்பதில் மும்முரமாக இருந்து வருபவள். சற்றே மாறுதலுக்காக, கோடை காலத்தில் அவளுடைய நிறுவன ஊழியர்களை ஊட்டிக்கு சுற்றுலா அழைத்து வந்தாள். அவர்களை விடுதியில் தங்க வைக்கும் /சுற்றிப் பார்க்க அவர்களை அழைத்துச் செல்லும் பொறுப்பை சிற்றப்பா சத்யாவிடமும் பொது மேலாளர் ராஜாவிடமும் ஒப்படைத்து விட்டு இன்று காலை தன்னுடைய மாளிகைக்கு வந்தாள் ரத்னா. குளித்து முடித்து அவளுடைய அப்பாவுக்குப் பிடித்த மாளிகையைச் சுற்றிப் பார்த்து கூடத்தில் உள்ள சோபாவில் அமர்ந்தாள். அவள் செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருந்த போது மாளிகை பாதுகாப்பாளர் நடுத்தர வயது கனமான தேகம் கொண்ட பாலமுருகன் வந்து நின்றார்.

‘வாங்க அண்ணா’ ‘

‘காலை உணவு சாப்பிட்டிங்களா அம்மா’

‘ஒங்க மனைவி ராஜாத்தி கொடுத்தாங்க சாப்பிட்டேன்… நல்லா இருந்துச்சு பங்களாவை நல்லா பராமரிக்கறீங்க… ஏன் இங்கே கிச்சன் ரெடி பண்ணலையா அவங்க ஒங்க வீட்ல சமைத்து கொண்டு வந்ததா சொல்றாங்க…’

‘கொஞ்சம் ரிப்பேர் செய்யும் பணி இருக்கும்மா ரெடி பண்ணிடறேன் ‘

‘அடுத்த தடவை பக்காவா இருக்கணும். எனக்கு நல்ல மூட் இருந்தா நானே சமைத்து சாப்பிடுவேன்.. ‘

‘சரிங்க அம்மா அம்மா நான் ஒரு விஷயம் பேசணும்.. சொல்லறதுக்கு தயக்கமா இருக்கு… ‘

‘இவ்வளவு இழுத்து பேசற ஆள் இல்லையே நீங்க தேங்காய் உடைக்கறா மாதிரி உடைச்சிடுவீங்களே ‘

‘அது வந்து….’

‘சொல்லுங்க நான் கோபக்காரி இல்ல ‘

‘மெட்ராஸ்லேந்து எனக்கு வந்த ரகசிய தகவல் என்னன்னா..

‘பரவாயில்லையே… மெட்ராஸ்ல கம்பெனி நடத்தற எனக்கே வராத தகவல், நீலகிரியில் இருக்கும் உங்களுக்கு வந்துடுச்சா… உங்களோட இன்டலிஜென்ஸ் என்ன சொன்னாங்கன்னு சொல்லுங்க கேட்போம்.. ‘ரத்னா புன்னகை செய்தாள்.

‘ஐயா போனப்புறம் மலேசியா ல இருந்து வந்த சித்தப்பா ன்னு ஒங்களோட இருக்கிறவர்… ‘

‘சொல்லுங்க ‘

‘ஐயா வோட தம்பி இல்லையாம் அவரை மாதிரியே உருவம் கொண்ட கணேஷ் என்கிறவராம் சென்னையில் நம்ம போட்டி கம்பெனி காரங்களோட அது என்னவோ சொன்னாங்க. ‘

‘ஸ்லீப்பர் செல்லா…?’

‘ஆமாம் அம்மா அதான் சொன்னாங்க.. மன்னிக்கணும் காதுல விழுந்த செய்தியை ஒங்களுக்கு சொல்லணும் இல்ல’

ரத்னா சிரித்தாள்.

‘ஏன் நான் பேசினது தப்பா? ‘

‘தப்பு எதுவும் இல்லை. என்னை எச்சரிக்கை செய்ய நினைக்கிறீங்க இதுல அதிகப்பிரசங்கித் தனம் எதுவும் இல்லை. உங்கள் அக்கரைக்கு நன்றி. ஆள் மாறாட்டம் எனக்கு தெரியாம இருக்குமா? அப்பாவோட சண்டை போட்டு மலேசியா போன சத்யா சித்தப்பா என்ன ஆனார் ன்னு தெரியலை எங்க அப்பா இருந்தப்பவே மலேசியா வுல இருந்த உறவினர்கள் கிட்ட விசாரித்து பார்த்தோம். தகவ‌ல் கிடைக்கல. நான் இன்னும் அவர் படத்தை அனுப்பி மலேசிய நண்பர்கள் கிட்ட விசாரிச்சுகிட்டு தான் இருக்கேன்… இப்ப வந்து கூட இருக்கிறது எங்க தந்தையாரோட தம்பி இல்லைங்கிற உண்மை தெரிஞ்சும் நான் ஏன் ஏத்துகிட்டேன்னு ஒங்க மனசுல கேள்வி ஓடுதா….. நான் சிறுமியா இருந்தப்ப எங்க அம்மா அப்பா ரெண்டு பேரும் பிசியாக இருப்பாங்க ஊர் உலகத்துக்கு விடுமுறை நாட்களில் கூட அவங்கள பிடிக்க முடியாது… ஒரு முறை புதுசா சேர்ந்த பணியாள் ஒருவன் என்கிட்ட பேட் டச் பண்ணான் அப்ப தற்செயலாக அங்க வந்த எங்க சித்தப்பா அவனை அடிச்சு துரத்தினாரு அன்னிலிருந்து அப்பாவோட கம்பெனிக்கு போறத விட்டு விட்டு என்னை கண்ணை இமை காப்பது போல காப்பாத்தினாரு.. ஸ்கூல், ட்யூஷன், டான்ஸ் கிளாஸ் எங்கே போனாலும் கூட வருவாரு. நான் என்னை தற்காத்து கொள்ள தயார் ஆகிற வரைக்கும் என் கூட இருந்தாரு.. நான் காலேஜ் போகும் காலகட்டத்தில் சித்தப்பா கிட்ட ஏன் வெட்டியா இருக்கே எப்படி கல்யாணம் பண்ண பொண்ணு கேட்க முடியும் ன்னு பேசின எங்க அம்மாவும் அப்பாவும் தகாத வார்த்தைகளைக் கொட்டிட்டாங்க. சித்தப்பா எனக்காக அரணாக இருந்தாரு ங்கறதை நானும் சொன்னேன் வீட்டில் இருந்த சீனியர் பணியாளர்களும் எடுத்து சொன்னாங்க… அம்மாவும் அப்பாவும் சோம்பேறித் தனத்துக்கு சாக்கு ன்னு கொச்சைப் படுத்தினாங்க. சித்தப்பா அவர் சேவிங்ஸ் ல இருந்த பணத்தை எல்லாம் வெச்சு மலேசியா போறேன் ன்னு என் கிட்ட மட்டும் சொல்லிட்டு போய்ட்டாரு. அதற்கு அப்புறம் அவர் தொடர்பு கொள்ளலை… இவரைப் பார்க்கும் போது அறியாத வயசுல எனக்கு விபரீதம் நடக்காம என் பெண்மையை காப்பாற்றிய சித்தப்பாவை ஒரு பெண் பிறவி தன்னை எப்படி தற்காத்துக் கொள்ளணும்னு சொல்லிக் கொடுத்த சித்தப்பாவை பார்க்கற மாதிரி இருக்கறதுனால சேர்த்துக்கிட்டேன்.

ஸ்லீப்பர் செல் ன்னு பார்த்தால் எங்க கம்பெனில நிறைய பேர் இருப்பாங்க இவங்களால என்னை வீழ்த்தி விட முடியாது ‘

ரத்னா பேசி முடிக்கும் போது வாசலில் நின்று கொண்டு இருந்தவரைப் பார்த்தாள்.

அவளுடைய சிற்றப்பாவாக மாறாட்டம் செய்த கணேஷ் என்கிற பருமனான தேகம் கொண்ட நடுத்தர வயது நபர் நின்று கொண்டு இருந்தார். மெல்ல நடந்து அருகில் வந்தார். ‘ என்னை மன்னித்து விடுங்கள் மேடம் ‘ என்றார். அவர் கண்களில் நீர் வழிவதைப் பார்த்தாள் ரத்னா.

‘ஆம்பிளை அழக் கூடாது ன்னு சொல்வாங்க. உறவுகளை வெச்சு வேஷம் போடுற வேலைய வெச்சுக்காதீங்க. உளவு பார்த்து தகவல் கசிய விடற வேலையை வெச்சுக்காதீங்க. ஒங்கள மன்னிக்கறேன். போய் ஸ்டாப்புக்கு ஊரை சுத்தி காமிங்க… ‘என்றாள் ரத்னா. அவர் அங்கிருந்து சென்றார். பாலமுருகனும் அங்கிருந்து சென்றார். ரத்னா டேப்லெட்டில் மூழ்கினாள். சற்று நேரத்தில் பாலமுருகன் மீண்டும் வந்தார்.

நிமிர்ந்து பார்த்தாள்.

‘என்ன அண்ணா … ‘

‘அது என்ன சொல்வாங்க இன்ப அதிர்ச்சி… சர்ப்ரைஸ் இதோ ஒங்க நிஜமான சித்தப்பா வந்துட்டாரு பாருங்க…’

ரத்னா வாசல் பக்கம் பார்த்தாள். உடல் இளைத்து தலை நரைத்துப் போய், கண்களில் கண்ணாடி அணிந்து அவளுடைய சிற்றப்பா சத்யா நின்று கொண்டிருந்தார். ‘ சித்தப்பா நீயா..’ என்றாள் ரத்னா. அவள் அருகில் வந்தார்.

‘ஏன் அடையாளம் தெரியலையா? ‘

‘இல்லை நீன்னு சொல்லிட்டு…. ‘

‘எல்லா கதையும் பாலா சொன்னாரு.. நான் ஒன் சித்தப்பா சத்யா தான்’ என்றார் அவர்.

‘இவரு நம்ம சின்ன ஐயா தான் ம்மா’ என்றார் பாலமுருகன்.

‘எதை வெச்சு சொல்றீங்க ‘ ரத்னா கேட்டாள்.

‘கண் கண்ணாடி தாண்டி அந்த முழியே காட்டிக் கொடுக்குதே… ‘என்றார் பாலமுருகன். ‘ அடப் பாவி ‘ என்றார் சத்யா. ரத்னா புன்னகை பூத்தாள்.

– என்னைப் போல் ஒருவன் – உருவ ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட 10 கதைகள்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *