மாத்திரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 7, 2023
பார்வையிட்டோர்: 1,500 
 
 

இன்று நல்ல நாள்; மனது நினைத்துக் கொண்டது.

உலகை உலுக்கிய கொடிய ரக நோயிலிருந்து பூரண நிவாரணம் அளிக்கும் மாத்திரைகளில் என்னால் விலை கொடுத்து வாங்க முடிந்த சிலதை இந்த மருத்துவ மனைக்கு வழங்கவென வந்திருப்பது முதலாவது காரணம்.

பல் வேறு வியாதிகளுடன் போராடிய ஒரு லட்சம் நோயாளர்களையாவது வெறும் மருந்து மாத்திரை மூலமும் ஆயிரம் பேர்களையாவது சத்திர சிகிச்சை மூலமும் இதுவரை குணமாக்கியிருக்கும் டாக்டர் பலராமை சந்திக்கப் போவது அடுத்த காரணம்.

வழமைக்கு மாறாக இன்றைய பத்திரிகையின் முகப்புப் பக்கத்தில் போதை மருந்துப் பாவனை தீராநோய் கொலை கொள்ளை போன்ற மனதைப் பாதிக்கும் எந்தவொரு அவலச் செய்தியும் இடம் பெற்றிருக்காதது அதற்கும் அடுத்த காரணம்.

முன்னொரு காலத்தில் மனதை பாதிக்கும் இவ்வாறான செய்திகள் முன் பக்கத்தில் வெளிவராதிருப்பதை எழுதப்படாத ஒரு சட்டமாகவே பத்திரிகைகள் பேணிண. இயற்கையின் சீற்றம் தலைவர்களின் மறைவு போன்ற சில விதி விலக்குகள் இருந்தாலும் அத்தகைய காலம் இனியும் வருமா என்ற ஏக்கம் மனதை நெருடியது.

மருத்துவ மனையின் வரவேற்பு அறையில்; காத்திருந்தேன். ஒரு மூலையில் இருந்த தொலைக் காட்சியில் சிறுவர் கேலிச்சித்திர நிகழ்ச்சி. பூனையும் எலியும் குறுக்கும் மறுக்குமாக ஓடித்திரிந்தன. பூனை குறுக்கால் போனால் சகுனம் என்பவர்கள் இதனை எந்த விதத்தில் பார்பார்கள்? தேவையில்லாமல் பூனையின் பின் சென்றது யோசனை.

சுண்டெலி பூனையைப் பார்த்துச் சிரித்தால் அதன் அருகே வளை இருக்குது என்று அர்த்தம். சின்ன வயதில் சொல்லித் தந்த வாத்தியார் நினைவில் வந்து மீண்டார்.

“வாருங்கள். டாக்டர் உங்களை உள்ளே வரச் சொன்னார்” என அழைத்தார் தாதி.

சம்பிரதாய வரவேற்பைத் தொடர்ந்து “அன்றாட மருந்துகளுக்கே அல்லாடும் நோயாளர்கள்; அத்தியாவசிய மருந்துகளுக்கு அலறியடிக்கும் காலத்தில் உங்களின் உதவி நிகரற்றது. கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு வெளிநாடுகளில் இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடிய இந்த அபூர்வ ரக மாத்திரை மருந்தை சட்ட விரோதமாக இறக்குமதி செய்பவர்கள் பெரும் தொகை பணத்துக்கு விற்று கொள்ளை லாபமீட்டுவதால் தட்டுப்பாடு தாண்டவமாடுகின்றது. இது எல்லோருக்கும் தெரிந்தாலும் எதுவுமே செய்ய முடியாத நிலைமை.” என்றார் டாக்டர் பலராம்.

எனது பெயர் கணேஷ். நான் விடுமுறைக்காக கனடாவிலிருந்து வந்துள்ளேன். கொடிய ரக நோய் வியாபிக்கின்றது முன்னரே எனக்குத் தெரியும். கொ.ர.நோ என்ற தமிழ் எழுத்துக்களே உலகெங்கும் அந் நோய்கான பெயரை கொடுத்தன என்று அவசர ஆய்வாளர் எவராவது இதுவரை அறிக்கை விடாததால் வரும் சிரிப்பையும் சிரமப்பட்டு அடக்கிக்கொள்வேன். ஆனால் நாடெங்கும் உள்ள நோயின் உக்கிரத்தையும் பரவும் தீவிரத்தையும் இங்கு வந்த பின்பே விரிவாக அறிந்தேன். இவற்றுடன் மருத்துவர்களின் பற்றாக்குறை வேறு பயமுறுத்துகின்றது.

நீங்கள் உதவ முன்வந்தது மகிழ்ச்சி கணேஷ். உங்கள் பரோபகார சிந்தை பேருவகை அளிக்கின்றது. நீங்கள் அன்பளிப்பு செய்யவுள்ள மருந்து வீரியம் மிக்கது.பத்தாயிரம் ரூபாய் சந்தை விலை உள்ள அதனை இப்பொழுது இருபது லட்சத்துக்கும் பெற்றுக் கொள்ள முடியாதிருக்கின்றது.

சரிதான் டாக்டர். பாதி ஊர்கள் பகலிலும் உறங்கிக் கொண்டிருப்பதை அவதானித்ததன் விளைவே என்னாலான உதவிகளை செய்யத் தூண்டியது.அதனால் மனம் மாறி எனது விடுமுறைக்கென ஒதுக்கியிருந்த காசை இதற்கு வழங்குவதெனத் தீர்மானித்தேன். பதுக்குபவர்கள் மட்டுமல்ல நோயால் பாதிப்புக்குள்ளானோரும் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளனர். என்னிடம் இருக்கும் காசுக்கு ஆகக் குறைந்தது அறுநூறு பேருக்காவது மருந்து வாங்க முடியும் என நினைத்திருந்தேன். ஆனால் அதே காசுக்கு இப்பொழுது ஆறு பேருக்கான மருந்தை மட்டும் வாங்க முடிந்தது மனதை உறுத்துகின்றது.

நான் வெட்கத்தை விட்டுச் சொல்கின்றேன். நான் டாக்டர்தான். எனது வருமானத்தில் எனக்குத் தேவை என்றால் கூட உந்த மருந்தை என்னால் வாங்க முடியாது. என்னைப் போல் மேலும் ஐந்து டாக்டர்கள் கனத்த மனதுடன் இவ்விதம் இங்கு பணி புரிகின்றார்கள்.

ஓம்! ஓம்! எல்லோருமே திறமைசாலிகள். கருணை மிக்கவர்கள். கைராசிக்காரர்கள் சமூக அக்கறை நிறைந்தவர்கள் என்று நானும் கேள்விப்பட்டுள்ளேன்.

இந்த நோயால் பீடிக்கப்பட்டுள்ளவர்கள் தினம் தினம் படும் வாதைகளைத் தாங்கும் சக்தி மனதுக்கும் கிடையாது. உடம்புக்கும் கிடையாது என்றார் டாக்டர்.

எண்பது வயதுக்கு மேற்பட்ட எனது நெருங்கிய உறவினர்கள் ஐவர் இங்கு தங்கி சிகிச்சை பெறுகின்றனர். அவர்களும் உதனையே சொன்னார்கள் என்றேன் நான்.

சென்று பார்ப்போமா? என்றார் டாக்டர்.

விண்வெளி வீரரின் கவசஆடைக்குள் திணிக்கப்பட்டது நான்.

உட்புக முடியாமல் திணறியது நுண்ணுயிரி.

நோயாளர் பராமரிக்கும் பகுதி. வயது பேதமின்றி துவண்ட நிலையில் சுமார் நூறு பேர்;. அவர்களது பயம் பார்வையாளர்களையும் பயமுறுத்தும் போலிருந்தது. எலும்புக் கூடுகளில் பிதுங்கிய முழிகள் கோரம் காட்டின.

இறைவன் இவர்களுக்காக காத்திருக்கின்றானா? இவர்கள் இறைவனுக்காக காத்திருக்கின்றனரா? என்பது எவருக்குமே தெரியாது என்றார் பலராம்.

மனம் உடையார் எதற்கும் உடையார் என்றேன் நான்.

இறைவா! என்னால் செய்ய முடிந்ததற்கு மேலேயே செய்வதற்கு ஆசைப்படும் படி என்னை ஆக்கு! மனம் தன் பாட்டுக்கு பிரார்த்தித்தது.

தெய்வ நம்பிக்கை என்பது வருத்தக்காரர்களின் வருத்தமல்ல. ஆரோக்கியமானவர்களின் சுகானுபவம்! யாரோ ஞானி சொன்னது ஞாபகத்தில் வந்தது.

அறிந்தவர்கள் ஆற்றல் பெறுகிறார்கள். மறுப்பவர்கள் மயக்கத்தில் இருக்கின்றார்கள்.

எங்கும் நிசப்தம். கடைநிலை ஊழியரின் தள்ளு வண்டில்களின் ஒலி மட்டும் அவ்வப்பொழுது அங்குமிங்கும் ராணுவ வாகனங்கள் உறுமியபடி செல்வது போலத் திகிலை ஏற்படுத்தின.

பலராமின் அலுவலக அறைக்குத் திரும்பினோம்.ஏனைய ஐந்து டாக்டர்களும்; அங்கு எனக்காக காத்திருந்தார்கள். அனைவர் முன்னிலையிலும் என்னிடமிருந்த ஆறு மாத்திரைகளையும் கொடுத்தேன். அது மிகவும் சொற்பம் என்று அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் அவர்கள் அனைவரது முகங்களிலும் மகிழ்ச்சி அப்பிக் கொண்டதோர் உணர்வு என்னுள் ஏற்பட்டது.

அவசியம் தேவையானோருக்கு உயிர் கொடுக்கப் போகும் கடவுளைப் போல் என்னைப் பார்த்து மானஸீகமாக வணங்குவது போலிருந்தது அவர்களின் முறுவல்.

அங்கு தங்கியிருக்கும் எனது நெருங்கிய உறவினர்களின் ஐந்து சோடி கண்களும் சோர்ந்த நிலையிலும் ஆவலுடன் என்னையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போலவும் மருந்து தமக்கு கிடைத்த பின் என்னைக் கண்டதும் மத்தாப்பு போன்ற சின்னச் சிரிப்பை உதிர்ப்பது போலவும் எனது கற்பனை விரிந்தது.

உணர்வுபூர்வமாகவும் தகவல்களின் அடிப்படையிலும் சமூக நலன் கருதி நான் கொண்டு வந்துள்ள இந்த மாத்திரைகள் ஏற்கனவே உள்ள நோயை விரட்டுவதுடன் மேலும் நோய் புதிதாகத் தொற்றாமலும்; தடுக்கும் என்கிறார்களே? அப்படியா? என்றேன்

முடிவு பரிசீலனையில் உள்ளதால் உறுதியாகக் கூற முடியாது. எனினும் சித்தர்கள் அருளிய நோய் அணுகா விதிகளில் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கது காயகல்ப்பம் என்பது போலத்தான் இது. கிழவருக்கும் கிளர்ச்சி ஊட்டும். என்றார் பலராம்.

சித்தர்களின் சூத்திரத்தின் சூட்சுமத்தை சிந்தித்து வாழ்க்கைக்கு பயன் படுத்தும் முடிவுக்கு வர வேண்டும். தாக்கத்திலிருந்து தப்பிக்க நம்மை நாமே தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவர்களுக்கான பால பாடம் இது என்றார் அவர்களுள் வயதில் மிக இளையவரான டாக்டர் ஜீவன்;.

மருத்துவ மனையில் அவசர காலத்திலும் ஆறுதலாக பணி புரிபவர்கள் அனைவருமே சாமிக்கு மேலே! என்றேன்.

ஓ! எந்தக் கடவுளும் எந்த மருந்தையும் தொட்டதில்;லை என சொல்ல வருகின்றீர்களா? அரை குடத்தை புத்திசாலி என்பதே நிறை குடத்தின் புத்திசாலித்தனம் என்பதை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி என்றார் மீண்டும் டாக்டர் ஜீவன்.

அடுத்த வினாடி

சிறிதும் எதிர்பாராத அக்கிரமம் ஒன்று மின்னல் வேகத்தில் அங்கு நடந்தேறியது.

பலராமின் கையில் இருந்த மாத்திரைகளில் ஒன்றை பலவந்தமாக நிமிண்டி கண் மூடித்திறப்பதற்குள் விழுங்கி ஏனையோரையும் அவ்வாறே செய்யுமாறு நிர்ப்பந்;தித்தது அவர்களுள் வயதில் மிக இளைய டாக்டரான ஜீவன்.

மாத்திரை அளவிலும் நம்ப முடியாத ஒரு மனிதாபிமானத் திருட்டு மாத்திரை மருந்து வடிவில் மாத்திரை நேரத்தில் கண்ணெதிரே ஒப்பேறியது.

கர்வம் போய்விட்டாலே சர்வமும் நல்லதாகவே நடக்கும்.யோசிக்காமல் எதையும் செய்யவும் கூடாது. செய்து விட்டால் எதையும் யோசிக்கவும் கூடாது என்ற ஜீவனின் முகத்தில் மின்னி மறைந்தது புன்சிரிப்பா இகத்தாளமா? அனுமானிக்க முடியவில்லை!

ஊனமுற்று மனம் மரத்துப் போவதற்கு நோயும் துயரங்களும் தேவையில்லை.ஏமாற்றங்களும் சில நம்பிக்கைத் துரோகங்களும் மட்டும் போதும்;. இப்படியான வாய்ப்பு வரும் என்ற மதப்புடன் காத்திருந்தாயோ? ; குமுறினேன்.

உங்கள் கையில் உள்ள அளவுகோலை கொண்டு மற்றவர்களை அளப்பது மகா தப்பு என்ற ஜீவனின் முகத்தில் ஒரு புன்சிரிப்பு மின்னி மறைந்தது.

இது கிரைம் என்பது எனக்கும் தெரியும். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.எது நல்லது எது கெட்டது என்று உங்களுக்கே புரியும். நலிவடையாமலிருப்பதற்கான தென்பு மருத்துவர்களுக்கும் வேண்டும். யாருமே மருந்துகளை நினைக்கும் அளவிற்கு மருத்துவர்களை நினைப்பதில்லையே. இந்த மாத்திரைகளை; நோயாளிகளுக்கு கொடுத்திருக்கலாம். தேறாத ஆறு பேர் மட்டும் தேற்றம் பெற்றிருப்பர். நீங்கள் சொல்லாவிடினும் தார்மீக கடமை என கருதி இங்குள்ள உங்கள் நெருங்கிய உறவினர்கள் ஐவருக்கும் முன்னுரிமை கொடுத்திருந்தாலும் எண்பது வயதுக்கு மேற்பட்ட அவர்களிடமிருந்த வருத்தம் மட்டுமே மாறியிருக்கும். பின்பு அவர்களால் எனையோரை பராமரிக்கவோ பாதுகாக்கவோ முடிந்திருக்குமா? முறைத்த ஜீவனின் மென்று விழுங்கிய வார்த்தைகள் சன்னமாக வெளி வந்தன.

எல்லை தாண்டிய எனது ஆத்திரம் ஆவேசமாகிற்று!

எனக்குத் தெரிந்த அத்தனை மொழிகளிலும் உள்ள கெட்ட வார்த்தைகள் மூளையிலும் வந்தன. வாயிலும் வந்தன.

கொஞ்சமும் கருணையே இல்லாத நஞ்சு உள்ளம் கொண்ட உங்களையெல்லாம் டாக்டர்கள் என்று சொல்லவே நாக்கூசுது என்றவாறே கதறக் கதற அவனை துவம்சம் செய்தேன்.

விறைத்த அந்த ஜீவனின் உரத்த குரலில் நடுக்கம் இருந்தாலும் வார்த்தைகள் தடித்தன!

“ஐயா!.எமக்கென்று ஒரு நியமம் உள்ளது. அதற்கு ஒரு நியதியும் உண்டு. நியாயமும் உண்டு. நீங்கள் நினைப்பது போல் நோயாளர்களை பரிதவிக்க விட்டுவிட்டு நாம் மட்டும் இந்த அபூர்வ மாத்திரையை உட்கொண்டால் காணும் என்ற எண்ணம்; எனக்கும் இல்லை.எமக்கும் இல்லை! பல நோயாளிகளுடன் அன்றாடம் புழங்கும் கடற்பாடும் கட்டுப்பாடும் உள்ளவர்கள் நாம் என்பது உங்களுக்கும் நன்கு தெரியும். நாம் ஒன்றும் வானத்தில் இருந்து வந்து குதிக்கவில்லை. மிகவும் தட்டுப்பாடு நிலவும் இந்த நிலை நீடித்தால் எம்மையும் நோய் பீடிக்கும் தூரம் அதிகமில்லை என்ற வேளையில்தான் கடவுள் கிருபையால் நீங்கள் வந்தீர்கள.; நாம் ஆரோக்கியமாக அல்லது தென்பாக இருந்தால் மட்டுமே அனைவரையும் பாதுகாக்கவும் முடியும.; பராமரிக்கவும் முடியும். நீங்கள் கொடுத்த மாத்திரை ஆறு பேருக்கல்ல. அறுநூறு பேருக்கு நிகரானது. எனவே இது மருத்துவம் மட்டுமல்ல. மகத்துவம்.”

எமக்கு ஏன் இந்த எண்ணம் தோன்றவில்லை?

மனசின் உயரம் தாண்டி வளர்ந்து ஜீவனின் பெறுமதி!

வான் நோக்கி உயந்தது மாத்திரையின் பெறுமதி!

– யாழ். ஈழநாட்டிலும், அவுஸ்திரேலியா அக்கினிக்குஞ்சிலும் 2023 ம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி இக்கதை வெளி வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *