(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கந்தையா றாலாமி ரென் ஈயர்ஸ் சேவிஸ்’ல் இந்த ‘இலங்கைச் சிலோன்’ முழுவதையும் கரைத்துக் குடித்தவர்; காடு, மேடு, நாடு, நகரம் எல்லாம் அடியுண்ட படு கட்டை பற்பல ‘காடையர்’களையும் ‘சண்டியா’களையும் கண்டு, அவன்களுக்கு அப்பனான அப்பன்களையெல்லாம் பழமும் தின்று கொட்டையும் போட்ட ஒரு பெரும் புள்ளி.
வின்ஸர் தியேட்டரில் தியாகராஜ பாகவதரின் ‘சிந்தாமணி’ செக்கண்ட் ஷோ’ முடிகிற நேரமாச்சு. சாமம் கழிந்து மணி இரண்டு இரண்டரையாகிவிட்டது. கந்தையா றாலாமி ‘டியுட்டி சேஞ்ச்’ பண்ண இன்னும் எவ்வளவோ நேரமிருக்கிறது.
ஒரே கண்ட சீருக்குக் கொட்டாவி அவர் வாயைப் பிளந்து அடிக்கடி அலகு முறிவு எடுத்தது. வெற்றிலை வாயும் வெறிசானதால், அதுவேறு ‘வாய்ப் புளிப்பாக. அருக்கூட்டிற்று. ‘றெயின் கோட்’டை அள்ளித் தோளில் சுமந்து கொண்டு நடத்தார் அதனகத்தியால் அவர் சடலவிறைப்பு. சாடையாக எடுபட்டது.
‘பொலிஸ் வேலைக்கு எடுபட்டுப் பத்து வருஷமாப் போச்சு. எப்ப பார்த்தாலும் இப்படி ‘டியூட்டி’தான் வந்து விழுகுது’ என்று றாலாமி அவ்வேளை நினைக்க, அவர் மனசில் ஆகவும் சலிப்புத் தட்டிற்று,
அப்போது நித்திரைக் கும்பகர்ணன் வந்து அவர் கண்களில் கவர்க் கட்டிற்று. அதை ‘முறிக்க’ வென்று எழுந்து ஒரு சிறு ‘வோக்’ பண்ணினார் றாலாமி ஆயினும் முகப் பாத்தி. ஒன்றுமாயில்லை. உடலில் கிடந்த சுறுசுறுப்பும் அவ் வேளை கலைந்து விட்டது. ஒரு ‘சிகரற்’ வாங்கி நாலு ‘தம்’ இழுக்கலாம் என்று ‘பொக்கற்’றுக்குள் கையை வைத்தார். இழவு, அதுவும் ‘எம்ரி’.
றாலாமிக்கு முகம் கறுத்தது. சந்திக் கடைகளும் மூடப் பட்டு விட்டன. மலையாளத்து முட்டாஸ் சந்தி நாயர் கடை றேறைக்கதவும் மூடியாகிவிட்டது அவர் நெஞ்சில் இருள் படர்ந்த மாதிரி ஒரு திகைப்பு. ஆளுக்கு ஒரே ‘டள்’
அப்போது கிழக்கு வீதி பக்கம் ‘சல சல’த்துக் கேட்டது.
வெகு உஷாரோடு ருலாமி நிமிர்ந்து பார்த்தார்.
‘செக்கண்ட் ஷோ’ முடிந்து வெளியேறுகிற ஜன நெரிச்சலின் இரைச்சல் அது. உடனே ‘ஸ்டாண்டற் ஈஸி’யில் வந்து, வெகு சிக்காராய் நின்று கொண்டார் றாலாமி.
சினிமா நட்சேத்திர நாயக நாயகிகளைப் பற்றியே, ‘வீணீர் சொட்டு’ம் வாலயப் பேச்சுக்கள் வீதியில் ஒரே சுதி தட்டிக்கொண்டிருந்தன. பெற்றோல்செட் எதிரேயுள்ள தேனீர்க் கடைகளுக்குள் ஒற்றைக் கதவால் புகுவோரையும், புகுந்து வெளியே வருவோடையும் கந்தையா றாலாமி வெகு பதனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒரு ‘பிளேன் டீ’க்கும் வழியில்லாத அவரின் இரு விழிகள், அந்த இருளில் யாருக்கும் தெரியாமல் அவருள்ளே தீய்ந்து செத்துக்கொண்டிருந்தன.
‘க்ணிங் க்ணிங்’ கென்று சயிக்கில்கள் ‘பெல்’ அடித்து இரைச்சல் போட்டு ஒரு கன்னையால் ஓடிக்கொண்டிருந்தன. முடக்கால் வெட்டித் திரும்புகின்ற சில சயிக்கில்கள் மறு கன்னையால் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தன
‘வெளிச்சங் கிளிச்சமில்லாம ஏதாவது சைக்கிள் கிபிக் கிள் வருகுநா’வென்று றாலாமி உற்றுப் பார்த்தார்.
அப்படி ஒன்றேனும் ‘மூளைகெட்டு’ வருவதாயில்லை. எல்லாம் ராஜாதி ராஜகம்பீரகளாகப் போய்க்கொண்டிருக்கின்றன. ‘டபில்’கூட ஒரு பயலும் ஏற்றக் காணோம். போகிற இரண்டொரு மாட்டு வண்டிகளிலோ. குடுமிக் கிழங்கள் ஏற்றிய அரிக்கன் லாம்புகளில் வெளிச்சம் வடிவா மின்னித் தெரிகிறது. ‘பச்சைத் தமிழனுக்கு வாகிற ஞானம் அவன் மண்டைக்குள்ளிருந்தல்ல; அவன் ‘குடுமி’க்குள்ளிருந்தே கிளம்புகிறது’ என்கிற சங்கதி தெரியாத இந்தக் கந்தையா றாலாமி முழிக்கலானார்.
‘ஒண்டும் வாய்க்காது போலிருக்கு. இனி என்ன செய்யிறது’ என்று றலாமி கடுமையாக யோசித்து விட்டுத் திரும்பி வந்து, பேவ்மெண்ட் ஒரத்தில் ஒதுங்கி நின்று கொண்டார்.
கொஞ்ச நேரத்திற்குள் பெரிய கடைச் சந்தியிலிருந்த பரபரப்பும் கெட்டு, சந்தடியும் முற்றாக ஓய்ந்து விட்டது. ஏறக்குறைய சினிமாப் பார்த்த ஜனக்கூட்டம் முழுதும் போய்ட்டது.
சப்பாத்துகள் ‘கிறிச்’சிடா வண்ணம் மெல்ல நகர்ந்து ‘றெயின் கோட்’டை எடுத்து விரித்து, அதன் மீது ஒரு சாய்வு குந்து குந்தி இருந்துவிட்டார், றாலாமி.
மறுபடியும் நித்திரை றாலாமியை முறித்துக்கொண்டு வந்து மொய்ததது.
சாடையாக அயர்ந்தும் அயராததுமான அரைக் கிறக்கத்தில், அவர் உடல், அப்பிடியே ‘றெயின் கோட்’டின் மேல், ‘திக்’கிட்டுக் கிடந்தது.
றாலாமி சோழித் தூக்கம்.
“டேய் பொலிசுக் காறன்ரா!”
அந்த அகால வேளையில் ஒரு,திடீர்’ச் சத்தய, நெஞ்சி விடித்தமாதிரி எங்கிருந்தோ வந்து அவர் காது கிழிய கேட்டது.
‘சடா’ரென்று ‘திடுக்கிட்டு’ எழுந்தார் றாலாமி.
றாலாமியின் சடலம் நடுங்கிற்று.
உற்றுப் பார்த்தார். அவர் எதிரில் சடைமுனி வயிரவ ராட்டம் ஓடிவந்து விழுந்த ரத்தினம், றாலாமியைக் கண்டதும் கோழிக் குஞ்சாட்டம் ஒடுங்கி முழுசிக் கொண்டிருந்தான்.
‘பொடியன ஏன் இப்படி எலும்பு முறிய நடுங்கிச் சாகிறான்’ என்று றாலாமி வலுவாக யோசிக்கலானார்.
‘டேய், ஏன்ரா உப்பிடி முழுசுறாய்?’ என்று ‘சும்மா’ அதட்டிப் பார்த்தார்.
”கொழுத்திக் கொண்டு தானய்யா வந்தனான். அது சாத்துக்கு நூந்து போச்சு” என்று அழாக் குறையாக ரத்தினததிடமிருந்து பதில் வந்தது.
அப்போது றாலாமிக்கு வடிவாக ‘விஷயம்’ புரிந்து விட்டது.
நெஞ்சைக் கொஞ்சம் நிமிர்த்திக் கொண்டு உடனே குனிந்து சயிக்கிளைப் பார்த்தார்.
அதில் லாம்பு இருந்தது; வெளிச்சம் இல்லை.
“டேய் சயிக்கிளுக்கு ‘லைசென்ஸ்’ இருக்கா?”
“இருக்கய்யா”
பொடியனின் நடுக்கம் றாலாமிகு பெரும் மகிழ்வை யூட்டிற்று.
‘ஆசாமி சின்னப் பொடியன். வெருட்டினால் வாய்க்கும்’ என்று நினைத்துக்கொண்டு, ”லாம்பு இல்லாம ஓடுறது சட்டத்துக்கு மாறெண்டு தெரியுமல்லோ?” என்று ஒரு ‘குண்டு’ விட்டார்.
”ஓமய்யா. ஆனா, லாம்பு இருக்கு, வெளிச்சந்தான் நூந்து போச்சு” என்றான் ரத்தினம்.
”வடுவா, எனக்கா ‘ஹன்ற்’ அடிக்கிறாய்? நடவடா பொலிசுக்கு”
‘பொலிசுக்கு என்றதும் பொடியனுக்கு தேகம் மலாரிட்டு நெஞ்சு விறைத்தது.’
‘இண்டைக்கு வீட்ட போனபாடில்ல. சிக்காரா அம்புட்டுப் போனன்’ என்று நினைத்தபோது அவன் நாக்கு வறண்டு தேகம் உப்பிற்று. ‘காலில் விழுந்து கும்பிட்டாவது தப்பிக் கொள்ள வேண்டு’ என்று நினைக்க அவனுக்கு அழுகை குமட்டி வருவது போல நெஞ்சு விம்மிற்று. கண்ணீர் வரவில்லை. ‘இண்டைக்கு எந்தச் சனியனில முளிச்சனோ?’ என்று எரிந்து கொண்டான்.
“உங்களைக் கும்பிட்டன். என்னை விட்டுடுங்கோ. நான் இனி உறுட்டிக் கொண்டு போறனையா?” என்று கெஞ்சினான்.
‘காலில் விழுந்தும் கெஞ்சிய யிற்று இனி விஷயம் லேசில நடக்காது போலிருக்கு’ என்று ரத்தினம் தீர்மானித்துக் கொண்டான்.
அவன் தேகம் வறண்டு எரிந்தது; கண்கள் ‘தறுதறு’த்து முழிசின. மெல்லத் திரும்பி நடந்தான் றாலாமி உறுமிய குரலோடும், உறுத்திய பார்வையோடும் அவன் பின்னே நடந்தார்.
‘இப்படியே நெடுக விட்டால் பொடியன் நேரே பொலிஸ் ஸ்ரேஷனுக்கு வந்து விடுவான். இதனால் என்ன பிரயோசனம்?’ என்று தனனுள்ளே தர்க்கித்த றாலாமி, சற்றுத் தொலை தூரம் போனபின் நாலா பக்கமும் கண் எறிந்து பார்த்துவிட்டு “பொலிஈக்குப் போனான் என்ன நடக்கும் தெரியுமா?” என்று ஒரு ‘எறிகுண்டை’ப் போட்டு வெருட்டினார்.
“பேந்தென்ன, அடிதான்” என்று தனக்குள் நினைத்துக்கொண்ட ரத்தினம், ”தெரியாதையா, என்ன நடக்கும்?” என்று ஒரு பதட்டக் குரலில் கேட்டான்.
“முதல்ல அடி; பிறகு தான் விசாரிப்பு” என்று சற்று அழுத்திச் சொன்ன றாலாமி, தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டார்.
”ஐயோ! அப்ப, நான் இண்டைக்கு செத்தேன்”
ரத்தினம் அழுகிற பாவனையில், தொண்டை கரகரத்து நாக்கு தடம்புரள, “ஐயா உங்களைக் கும்பிட்டன் என்னை விடுங்கோ” என்று கை எடுத்தே கும்பிட்டுக் கேட்டான்.
றாலாமி யோசிக்கத் தொடங்கினார். அவர் கால்கள் தரித்தன. அங்கு மிங்கும் வடியாய்ப் பார்த்தார். எதுவித சந்தடியுமில்லை.
“டேய் அப்ப ஒண்டு செய்யன்?”
”என்னய்யா, சொல்லுங்கோ செய்யிறன்”
“வாய் புளிக்குது. முதல்ல ஒரு வெத்திக்கூறு வேண்டியா, போ”
அந்த வாய்ப் பேச்சோடு, தான் சல்லி எடுத்துக் கொடுக்கிற பாவனையில், ‘பொக்கற்’றுக்குள் கையைப், போட்டுக்கொண்டே அகனைப் பார்த்தார், றாலாமி ஆனால் அவர் ‘பொக்கற்றுக்குள் அந்தக் கை வெளியேறாது அதற்குள்ளேயே உறங்கியது.
ரத்தினம் முழுசினாள்.
“என்ன முழுசிறாய்?”
“இன்னும் கடையொண்டும் திறக்கேலயா?”
றாலாமி நாலா பக்கமும் பார்த்தார். கடைகளெல்லாம் பூட்டிக் கிடந்தன. சற்றுத் தூரத்தில் ஒரு கடைமட்டும் வெளிச்சமிட்டுக் கொண்டிருந்தது.
“ஐயா அந்தா தெரியுதே தேத்தண்ணிக் கடை, அங்க போய் வாங்கியாறன்”
“வேண்டாம். நீ போக வேண்டாம். எனக்கும் அது தான் போற பாதை. நான் பார்த்துக் கொள்ளுறன்” என்று சொன்னவர், கழுத்து நெரிட திரும்பவும் நாலா திக்கும் பார்த்துவிட்டு, கொஞ்சம் ‘நைஸா’க “சல்லி கில்லி வைச்சிருக்கிறியா, இருந்தால் எடு” என்று, ‘அவுக்’ கென்று கேட்டார், றாலாமி.
ரத்தினம் ‘சடா’ரென்று ‘சேட் பொக்கற்’றுக்குள் கையைப் போட்டுப் பார்த்தான். இரண்டு ஐந்து சதக் குத்திகளாக, ஆக மொத்தம், ஒரு பத்துச் சதம் மட்டுமே இருந்தது.
‘ஒரு பத்துச் சதத்தை எடுத்து வெக்கமில்லாமல் எப் படிக் கை நீட்டிக் குடுக்றது?’ என்ற வினாத் தடங்கலிட யோசித்த ரத்தினம், “காசு அப்புடி ஒண்டுமில்ல ஐயா, எல்லாம் படம் பார்த்துச் செலவழிஞ்சு போச்சு, இப்ப ஆக ஒரு பத்துச் சதம் தான் கிடக்கு” என்றான்.
“வடிவாத் தடவிப் பார்”
“அப்பிடித்தான் பார்த்தன். ஆக, இதுதான் கிடக்கு.”
“சரி அதையெண்டாலும் தா”
ரத்தினம் வெகு பதனமாக அதை எடுத்துக் கொடுத்து விட்டு, விழிகள் பேந்த நின்றான்.
“சரி சரி இதில நின்டு கள்ளனாட்டம் முழுசாம, இனி நீ போ”
‘போ என்று றாலாமி சொன்னபோது அவன் மனசு குளிர்ந்தது. ஆயினும் தணக்குப் பின்னே நிரைகட்டி வரும் தனது நண்பர்கள். இந்தப் பொலிஸ் கண்ணில் பட்டால் அவர்களுக்கும் இதே கதிதான் நடக்கும்’ என்று எண்ணிய போது, ரத்தினத்திற்கு நடையில் மந்தம் தட்டியது. கூட்டாளிகளை ‘நழுவி’ விட்டு விட்டு, வாசி பார்த்துத் தான் மட்டும் தனியே போவது சரியா என்ற ஒரு சிக்கல் குறுக்கே இழுக்க, மனசு புழுங்கியவாறு கொஞ்சத் தூரம் நடந்து போய், தெரு ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டான்
போன றாலாமி போவதாகத் தெரியவில்லை; திம்பி வருவதாகவும் இல்லை.
அப்போது ரண்டாம் பாட்டமாக சயிக்கிள்களின் மணி யோசைகள் ‘கணீரி’த்துக் கேட்டன.
‘டே, கண்கடை தெரியாமல் டபிளும் போட்டாறாங் களே; எக்கணம் சிக்காரா அம்புடப் போறாங்கள்’ என்று ரத்தினம் தன்னுள் கறுவிக் கொண்டபோது, நெஞ்சு கூடவே பறை தட்டிற்று.
ரத்தினம் நினைத்தது அப்படியே அங்கே நிகழ்ந்து விட்டது.
றாலாமியிடம் அத்தனை காளைகளும் நல்ல செப்பமாக மாட்டிக்கொண்டார்கள்.
வெளிச்சக் கட்டையின் கீழே கூட்டாளிகள் நின்று தறு தறுத்து முழுசுகிற காட்சி, ரத்தினத்திற்குப் பளிச்சிட்டுத் தெரிந்தது.
மெதுவாக அங்கு நடந்து சென்றான், ரத்தினம்.
அங்கே ஒரு சிறு ‘கோட்’ வீசாரணையை நடத்திக் கொண்டிருந்தார் றாலாமி.
“டபிள் ஏத்தினா எவ்வளவு குற்றமெண்டு தெரியுமா?”
”ஓமய்யா”
“லாம் பில்லாட்டி?”
“அதுவும் அப்பிடித்தான்”
“இதையெல்லாம் தெரிஞ்சு கொண்டுதான் பெரிய கவு ணர் ஜெனரல்கள் மாதிரி றோட்டை அடைச்சுப் பிடிச்சுக் கொண்டு, லா புமில்லாம, டபுளும் ஏத்திக்கொண்டு வாறியளா? உங்களுக்குத் திமிர் முத்திப் போச்சு, என்ன? நடவுங்கோ பொலிசுக்கு. உங்கடை திமிரை ஒருக்கா அடக்கிக் காட்டுறன்” சன்னதமாடினார், றாலாமி.
‘திமிரில்ல எலும்புதான் முறியும்’ என்று ஒவ்வொருத் தரும் தங்களுக்குள் நினைத்துக் கொண்டார்கள். நெஞ்சுகன் ‘படக் படக’கென்று அடிக்கலாயின; கேகங்கள் பச்சைத் தண்ணீராய்க் குளிர்ந்து போய் விட்டன. வாய் திறந்து பேச்சு எடுக்க நாக்குகள் அலகு விட்டு எடுபடுகின்றதாயில்லை. முழிசாட்டந்தான்.
றாலாமி மேகத்தைப் பார்த்தார். விடிவெள்ளி காலித்துக்கொண்டு வந்தது. உடனே அவர் உடம்பில் ஒரே சுறு சுறுப்புக் காணப்பட்டது ‘டியூட்டி சேஞ்ச்’ பண்ண இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரமிருக்கிறது’ என்று தெரிந்து கொண்டார்.
அவ்வேளை ‘பொடியள்’ றாலாமிக்குத் தெரியாமல் சமிக்ஞை செய்து வைத்த ஒரு ‘குட்டி மகாநாட்டுத் தீர்மானமும் படு தோல்வியில் முடிந்தது. அதாவது, பொடியளின் ‘பொக்கற்’றுகள் எல்லாம் ‘எம்ரி’! ஒரு வெள்ளிச் சல்லி கூட எந்தப் பொடியனிடமும் இருக்கவில்லை. இனி மரியாதையோடு பொலிஸ் ஸ்ரேஷனுக்கு நடையைக் கட்ட வேண்டியது தான். தப்ப ‘வழி’ இல்லை.
கந்தையா றாலாமி ‘ரென் ஈயர்ஸ் சேவிஸ்’ல் இந்த ‘இலங்கைச் சிலோன்’ முழுதையும் கரைத்துக் குடித்தவர்; காடு, மேடு, நாடு, நகரம் எல்லாம் அடியுண்ட படு கட்டை. பற்பல ‘காடையர்’களையும் ‘சண்டியர்’களையும் கண்டு, அவன்களுக்கு அப்பனான அப்பன்களையெல்லாம் பழமும் தின்று கொட்டையும் போட்ட ஒரு பெரும் புள்ளி. அந்தச் சங்கதிகளெல்லாம் இந்தச் சிறு காளைகளுக்குத் தெரியாது. அப்பேர்பட்ட ருலாமியை இந்தச் சின்னஞ் சிறு காளைகள் சுளுவில் ‘சுழித்து’விட முடிபுமா?
றாலாமி தனக்கே உரித்தான ‘பொலிஸ் றிக்ஸ்’ஸால், இவருக்குத் தெரியாதென்று அவர்கள் வைத்த குட்டி மகா நாட்டை, அவர்களுக்குத் தெரியாமலே இவர் தெரிந்து கொண்டார். பையன்களின் ‘பொக்கற்’றுகள் எல்லாம் ‘எம்ரி’ என்கிற ‘றிசல்ட்’ பையன்களை விட றாலாமிக்கே பெரும் துக்கமாகவிருந்தது. ‘இவங்களை வெருட்டுறதில இனி ஒரு பிரயோசனமுமில்லை. பானைக்குள் இல்லாதது அகப்பையில் வராது’ என்று தெரிந்து கொண்டார் றாலாமி.
இந்த முடிவுக்கு வந்ததும் உடனே றாலாமிக்கு முகம் சுண்டிற்று; கோபம் தலை தூக்கிற்று. சினம் வாய்ப் பேச்சில் குதித்தது.
“என்ரா முழுசுறியள்?”
”ஒண்டுமில்லயையா”
“ஒண்டுமில்லாமல் ‘சும்மா’ நிண்டு யோசிச்சு வேலையில்லை. மரியாதையா நடவுங்கோ, பொலிசுக்கு”
பொடியன்களின் இரக்க விழிகள் ஏக காலத்தில் அவர் கண்களில் விழுந்தன. ஆனால் றாலாமியோ நெஞ்சு இரங்குவதாயில்லை.
‘திரும்பிப் பார்க்காம, நேர நடவுங்கோடா, செம் மறியள்’
அலுகோசுவுக்கு முன்னே கொலைக் களத்துக்கு ஏகிற மரணத் தீர்ப்பாளி போல பைடன்கள் றாலமிக்கு முன்னே நடையைக் கட்டினார்கள்.
அங்குமிங்கும் கண்களை எறிந்த எண்ணம், றாமி அந்தச் ‘செம்மறி’களுக்குப் பின்னே சென்று கொண்டிருந்தார்.
அப்போது ரத்தினம் றோட்டோரமாக வந்துகொண்டிருப்பது றாலாமி கண்களில் பட்டது. ‘அவுக்’கென்று திரும்பிப் பார்த்தார்.
“டேய், உன்னைத்தான் ‘போ’வெண்டு சொல்லியிட்டனே, பேந்தேன் நீ பிறகால வாறாய்?”
“நானும் அவயளோடதானய்யா படம் பாக்க வந்தனான்”
”அதுக்கு?”
“அவயளயும் விடுங்கோ”
“அவங்கள் எல்லாரும் லாம்புமில்லாம, டபுளு ஏத்திக் கொண்டந்திட்டு, விறும தடியராட்டம் ஒரு பயமுமில்லாம நிற்கிறாங்கள். உன்ர சங்கதி வேற, நீ, போ”
“நானும் அப்பிடித்தானே வந்தனான்? என்னை விட்ட மாதிரி அவயளயும் விடுங்கோய்யா. உங்களைக் கும்புட்டன்”
“டேய். ஏன்ரா உனக்கும் ‘ஒண்டு’ வேணுமா? போடா, போட ஈண்டாப் போ”
ரத்னம் தயங்கினாள். பையன்கள் தங்கள் நடையைத் தளர்த்திக் கொண்டார்கள். அது கண்டு ஆத்திரம் பீறிட்ட றாலாமி உரக்கக் கத்தினார் :
“டேய், நெதியா நடவுங்கோடா”
‘திடுக்’கிட்ட நெஞ்சுகளோடு மீண்டும் பையன்களின் கால்கள் மெதுவாக அசைந்து, சாடையாக நகர்ந்தன.
வெகு ‘குஷி’யாகப் போய்க்கொண்டிருந்த றாலாமி, ரத்தினத்தின் ‘கரைச்சல் பிடிச்ச கதை’யால், அது இழந்து என்னவோ எல்லாம் ‘யோசித்த’ வண்ணம், முகத்தில் லேஞ்சி போட்டுத் துடைத்துக் கொண்டார்.
சொற்ப வேளை மௌனமாகவே நடை ‘பறிந்து’கொண்டிருந்தது. உருளும் சயிக்கில் பிறிவில்’களின் சத்தம் இரவின் ஊமையைக் கலைத்துக் கொண்டிருந்தது.
நடந்தாயிற்று: பொலிஸ் ஸ்டேஷன் நெருங்கிவிட்டது.
ரத்தினம் சற்று வேகமாக அடியெடுத்து வந்து, றாலாமியை ‘உற்றுப்’ பார்த்தான்.
றாலாமி ‘திடுக்கிட்டுப் போனார்.
“டேய், நீ இன்னும் போகேல்லியா?”
“அவயள விட்டிட்டுத் தனிய நான் என்னண்டய்யா போறது?”
”அப்ப, நீ என்ன ‘ஸ்ரைக்’கா பண்ணப் போறாய்?”
“அதில்லய்யா. அது தான் அப்பவே சொன்னேனே”
”ஓகோ, அதுவா? அதேப்புற வழி அவேக்குத் தெரியும். நீ தப்புற வழி தெரிஞ்சு நீ தம்பியிட்டாய். நீ, போ”
“அப்ப அவயள விடமாட்டியளே?”
”விடுறதோ? அப்பிடி விடேலாது. நீ உன் பாட்டில் போ”
”அப்ப, நானும் அவயளோட பொலிசுக்கு வாறன்”
“டே, நல்ல ஒத்துமைமாயிருக்கே? அப்ப சரி, நீயும் வா. வந்து, நல்லா வாங்கிக் கட்டு”
“அப்பிடியெண்டா, நான் தந்த காசு பத்துச் சதத்தையும் தா…”
இடியேறு விழுந்த நெஞ்சனராய் கந்தையா றாலாமி ஏங்கி, தோம் விறைக்க, அப்படியே நின்று விட்டார்: கை கால் அசையவில்லை: வாய்க்குள் கிடந்த நாக்குப் புரளாமல் அதுவும் செயற்றுச் செத்து விட்டது. நெஞ்சுப் பூணாரம் இடியுண, நடு றோட்டில் குந்திவிட்டார், றாலாமி.
பொடியள், வீடு திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள்.
கந்தையா றாலாமி, சலித்தபடி அவர்களைப் பார்த்துக் கொண்டே விறைத்து நின்றார்.
– 1964 தாமரை
– அகஸ்தியர் கதைகள், முதற் பதிப்பு: 1987, ஜனிக்ராஜ் வெளியீடு, ஆனைக்கோட்டை.