ஷாலினிக்குப் பாராட்டு….!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 16, 2019
பார்வையிட்டோர்: 5,894 
 
 

அன்னை அருள்மேரி ஆங்கிலப் பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தினுள் வெகு விமர்சையாக நடந்து கொண்டிருந்தது.

பார்வையாளர்களாக மாணவ, மாணவியர்கள் பெற்றோர், உற்றார் உறவினர், பொது மக்கள் என அனைவரும் திரண்டிருந்தனர். இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்கள் போக மீதி சூழ்ந்திருந்தனர்.

மேடையில்… சிறப்பு விருந்தினராக கல்வித்துறை அதிகாரி ஆரோக்கியதாஸ் அமர்ந்திருந்தார்.

ஆசிரியை ஆர்த்தியின் அறிவிப்பின்படி…தலைமை ஆசிரியை மரிபிலோமினா மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்பித்துக் கொண்டிருந்தாள்.

“எங்கள் பள்ளியில் ஆங்கிலத்திற்கு மட்டுமில்லாமல் தமிழுக்கும் முதலிடம், முக்கியத்துவம் கொடுத்து மாணவமணிகளைத் தாய்மொழியிலும் சிறப்பாக வர ஊக்குவிக்கிறோம். என்பதற்கு அடையாளமாக இந்த பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் மாணவி ஷாலினி திருக்குறளில் உள்ள மொத்தக் குரள்களையும் சொல்லி பரிசு பெரும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறாள் என்பதை மகிழ்வோடு சொல்லி அவளைப் பரிசு பெற மேடைக்கு அழைக்கிறேன்.” ஆர்த்தி ஒலிபெருக்கியில் அறிவித்தாள்.

அதைத் தொடர்ந்து மேடைக்கு முன் முதல் வரிசையில் பெற்றோர்களுடன் அமர்ந்திருந்த அந்த ஆறு வயது குழந்தை மேடை ஏறி தலைமை ஆசிரியைக் கொடுத்த பரிசைப் பெற்றாள்.

அடுத்த வினாடி…

“வேண்டாம் மிஸ் !” அவளிடமே திருப்பி நீட்டினாள்.

மேடையில் இருந்தவர்கள், பார்வையாளர்களுக்குச் சிறு குழப்பம் அதிர்ச்சி.

பரிசைக் கொடுத்த தலைமை ஆசிரியை மரிபிலோமினாவிற்குள்ளும் சிறு திடுக்கிடல்.

“ஏன்..?” மறைத்து புன்னகையுடன் வாஞ்சையுடன் கேட்டாள்.

“நான் திருக்குறள் சொன்னதுக்குத் தமிழ் புத்தகம்தான் தரனும். ஆங்கிலப் புத்தகம் வேண்டாம் !” என்றாள் அந்த சுட்டி.

“அப்படியா..??!!”அடுத்த அதிர்வையும் புன்னகையால் மறைத்த தலைமை ஆசிரியை அடுத்த வினாடி…

“இந்தக் குழந்தையின் புத்திசாலித்தனம், தைரியத்திற்காக இந்த ஆண்டு இந்தப் பள்ளியின் சிறந்த மாணவி என்கிற சிறப்புப் பரிசையும் பெறுகிறாள். ! ” – சொல்லி மேசை மீதிருந்த சால்வை ஒன்றை எடுத்துப் போர்த்தி அங்கிருந்த சுழற்கோப்பை ஒன்றையும் எடுத்துக் கொடுத்து அவளுக்கு முத்தம் கொடுத்தாள்.

கூட்டம் மகிழ்ச்சி ஆரவாரத்தின் ஒலி விண்ணை முட்டியது.

விழா முடிந்த ஒரு மணி நேரத்தில்….

“நீங்க சிறப்பு விருந்தினருக்கு வாங்கி வைத்திருந்த பொன்னாடை, சுழற்கோப்பையை ஷாலினிக்குப் போர்த்தி இந்த ஆண்டின் சிறந்த மாணவி என்கிற புது அறிவிப்பும் செய்து அவளைக் கௌரவித்திருக்கக் கூடாது மேடம் !” குறை பட்டாள் ஆர்த்தி.

அவளைத் தொடர்ந்து மற்ற ஆசிரியைகளும்….

“ஆமாம் மேடம் !” சொல்லி தங்கள் அதிருப்தியை வெளியிட்டார்கள்.

“நியாயம்தான். ! எனக்கு வந்த ஆத்திரத்துக்கு ஷாலினி முதுகுல ஒன்னு வைச்சி ஓன்னு அழவிட்டு ” போடி ” ன்னு துரத்த முடியலை. அதான் அந்த அறிவிப்பு, பரிசு, சமாளிப்பு !! ” என்று சொல்லி பல்லைக்கடித்தாள் தலைமை ஆசிரியை மரிபிலோமினா.

“புரியலை..?!” எல்லோர் குரல்களும் ஒன்றாக ஒலித்து முகங்கள் குழம்பியது.

“நிகழ்ச்சியைப் பார்வையாளர்கள் எல்லோரும் தங்கள் கை பேசிகளிலும் கேமராக்களிலும் பதிவு செய்து படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஷாலினி திருப்பிய பரிசுப் புத்தகத்தை வாங்கிக் கொண்டு சும்மா திருப்பி அனுப்பினால் நமக்கு அவமானம்.

‘ஒரு ஆறு வயசு குழந்தைக்கு இருக்கும் புத்திசாலித்தனம் பள்ளிக்கூடத்தை நிர்வகிக்கும் உங்களுக்கு இல்லையே.. ! ‘ என்கிற குறை எல்லாருக்குள்ளும் எதிரொலித்து சின்ன சலசலப்பு, கலவரம் ஏற்பட வாய்ப்பு அதிகம். இது நமக்கும் பள்ளிக்கும் களங்கம். மேலும் பள்ளி வளர்ச்சிக்கும் தடை குறை. இதைக் களையத்தான் புத்திசாலித்தனமாய் அப்படி ஒரு அறிவிப்பு காரியம் செய்தேன். இதனால் இப்போ நமக்கும் நல்ல பெயர். பள்ளிக்கும் பாதிப்பு இல்லே. இன்னைக்குக் குழந்தைகளெல்லாம் ரொம்ப புத்திசாலித்தனமாய் இருக்காங்க. அவர்களைச் சமாளிக்க நீங்க அவர்களைவிட புத்திசாலித்தனமாய் இருக்கனும். ஜாக்கிரதை !” எச்சரித்தாள்.

ஆசிரியைகள் முகங்களில் பயம் வந்து உறைந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *