கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 7,161 
 

வாசலில் நிழலாடியதை கணிப்பொறியின் திரை உணர்த்திவிட்டது. முதலாளி. திரும்பவில்லை நான். வேலையில் மனம் குவித்திருந்தேன். அடிக்கடி வந்து அவருக்குள்ளிருக்கும் பயத்தை எனக்கும் தொற்ற வைத்துப் போய்க்கொண்டிருந்தார். பதட்டங்களாலேயே தவறுகள் கூடின. திருத்தங்களுக்கு மேலும் சில மணி நேரங்கள் தேவைப்பட்டன. இன்னும் அவர் அங்கேயே நின்றிருப்பதை உணர்ந்தேன். மரியாதையின் நிமித்தம் திரும்பி அவர் பக்கம் புன்னகை சிந்தினேன். சட்டென அவர் என்னை நெருங்கிவிட்டார். அமைதி குலைந்திருந்தன அவர் கண்கள். குளிர் அறையிலும் முகமெங்கும் வேர்வையின் பெருக்கு.

முடித்து விடுவீர்களா ?

அவர் முகத்தில் சந்தேகக் கோடுகள். சங்கடத்துடன் கையைப் பிசைந்து கொண்டிருந்தார்.

எப்படியாவது இதை முடிக்க வேண்டும். இரவுக்குள். அச்சுக் கூடத்துக்கே இது மானப் பிரச்சனை. அரசாங்கத்தில் இருந்து நமக்கு வந்திருக்கும் முதல் வேலை. தலைவரே தந்திருப்பது. இதில் பெறும் வெற்றிதான் நம் எதிர்கால வாய்யப்புகளைத் தீர்மானிக்கப் போகிறது.

நிச்சயம் முடிக்கலாம். கவலைப் படாதீர்கள்.

மெதுவாக எழுந்து அவருக்குச் சமாதானம் சொன்னேன். பதைக்கும் அவர் கண்களுக்குள் சின்ன வெளிச்சம் மின்னி மறைந்தது. புகைக்க வேண்டும் போலிருந்தது. அறையைவிட்டு வெளியேறினேன்.

நான் அந்நியன். வேலைக்காக இந்த தேசத்துக்கு வந்திருந்தேன். இதன் மொழியில் எனக்கிருந்த பயிற்சியும் பெற்றிருந்த பட்டங்களும் உதவியாக இருந்தன. கூடவே கணிப்பொறியை ஆளும் திறமைக்குச் சிற்சில சான்றிதழ்கள். வேலையைத் தேடிக் கொள்ளப் போதுமானாவயாக இருந்தன அவை. முதலாளியின் கவலை புரிந்து கொள்ள முடிந்த ஒன்றுதான். அரசாங்கம் கொடுத்திருக்கும் முதல் வேலை. முக்கியமான பலரின் பரிந்துரையின் பேரில்தான் இதையும் பெற்றிருந்தார் முதலாளி. கண்ணுக்குப் புலப்படாத சங்கிலிக் கண்ணிகள் போல பற்பலரின் உறவை வேலையில் உருவாகும் தாமதம் குலைத்துவிடும். சங்கிலிக் கண்ணிகளின் அதிருப்தியைச் சம்பாதிப்பது அழிவையே சம்பாதிப்பது போல. அதை எண்ணித்தான் அத்தனை நடுக்கம். வேலையை என்னால் முடிக்க முடியும் என மனசார நம்பத்தான் செய்தார். அதே சமயத்தில் உள்ளுர ஒரு அவநம்பிக்கையையும் வைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருந்தார். மொத்தம் ஐந்நூற்று சொச்ச பக்கங்கள். தலைவர் எழுதியது. அந்த தேசத்தின் சரித்திரம். அரசியலைப் போலவே எழுத்தும் அவருக்கு பொழுதுபோக்கு. நூற்றாண்டுகளின் ஊடே வளர்ந்து வந்திருக்கும் தன் இனத்தின் சரித்திரத்தையும் தேசத்தின் சரித்திரத்தையும் தன் ஆட்சிக் காலத்தில் அது பெற்றிருக்கும் பொற்காலத்தையும் பற்றிய விளக்க நூல். அவர் பிறந்த நாள் விழாவும் புத்தக வெளியீட்டு விழாவும் ஆட்சிக்கு வந்த ஓராண்டு நிறைவு விழாவும் ஒரே தினத்தில் கொண்டாடப் பட இருந்தன.

புகைத்துவிட்டு வந்து மீண்டும் வேலையை ஆரம்பத்தேன். கண்கள் சிவந்துவிடும் அளவுக்கு தொடர்ந்து கணிப்பொறியின் பக்கத்திலேயே பழியாய்க் கிடந்தேன். இன்னும் சில பத்து பக்கங்களே பாக்கி. தட்டச்சு செய்ய வேண்டும். முடிந்தால்தான் நிம்மதி. ஏற்கனவே தட்டச்சு செய்து முடித்த பக்கங்களில் முக்கால் பங்குக்கு மேல் நிழற்படப் பிரிவிலும் அச்சுத்தட்டு ஆக்கப் பிரிவிலும் துரித வேலையின் பொருட்டு பிரித்துத் தரப்பட்டிருந்தன. மொத்தத்தில் அச்சுத்தட்டுகள் தயாரானதும் பொறியில் ஏற்றி இறக்கி வெட்டித் தைத்து அட்டை ஒட்டி வெளியேறுகிற வரைக்கும் அமைதி இல்லை.

அன்று இரவு முழுக்க வேலை செய்தேன். கண்கள் எரிந்தன. எழுத்துக்கள் மாறி மாறி விழுந்தன. சமாளித்தேன். என் கண்களுக்குள் இருள் கவிந்து விலகியது. திரை எழுத்துகள் நட்சத்திரங்கள் போல மங்கித் தெரிந்தன. கண்களைக் கசக்கிக் கொண்டு மீண்டும் தொடர்ந்தேன். விரல்கள் முளையின் ஆணையைச் செயல்படுத்தவில்லை. ஏதோ கரங்கள் நெருங்கி அழுத்துவது போல உணர்ந்தேன். மேசையிலேயே சரிந்து தூங்கிவிட்டேன். எத்தனை மணிநேரம் அப்படிக் கிடந்தேனோ எழுந்திருந்தபோது விடிந்திருந்தது. ஓடிக் கொண்டிருந்த திரையைப் பார்த்ததும் தடுமாறிவிடடேன். பெருமுச்சுடன் எழுந்து உட்கார்ந்தேன். கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தேன். மழை பொழிந்தபடி இருந்தது. மழையின் சாரல் கண்ணீன் சூட்டுக்கு இதமாக இருந்தது. தண்ணீரை வாரி இறைத்துக் கொண்டு வந்த வண்டியிலிருந்து இறங்கி வந்தார் முதலாளி.

முடித்துவிட்டார்களா ?

படியேறும்போதே அவர் கேள்வி. இன்னும் கொஞ்சம் ஆறேழு பக்கங்கள் . அவ்வளவுதான்.

ஐயோ என்றார். மீண்டும் அவர் முகத்தில் பயமும் பதட்டமும் . அசந்து தூங்கிவிட்டதைச் சொல்ல வெட்கமாக இருந்தது.

உங்களுக்குத் தெரியாதா ? இன்று சாயங்கால வண்டியில் கட்டுகளை ஏற்றிவிட வேண்டும். நாளைக் காலை அவர்கள் விழா. இன்னும் கூட முடியவில்லை எனறால் எப்படி நடக்கும் சொல்லுங்கள்.

இன்னும் இரண்டு மணிநேரத்துக்குள் முடிந்துவிடும்.

திரும்பிக் கணிப்பொறி அறைக்குள் நுழைந்தேன். அவர் அச்சுப் பொறியின் அறைக்குள் போனார்.

சிறிது நேரத்தில் தோலைபேசி மணி அடித்தது. அவர்கள்தான் . புத்தகம் பற்றிக் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அடங்கிய பணிவான குரலில் முதலாளி சமாதானம் சொன்னார். சீக்கிரம் ..சீக்கிரம்.. என்று எல்லாரைச் சுற்றியும் ஒரு பரபரப்பையும் பீதியையும் உருவாக்கினார். அனைவரும் மீண்டும் புத்தக வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார்கள். மறுகணம் மின்சாரம் நின்றது. பதட்டத்தில் ஐயோ என்று முதலாளி தலையில் கை வைத்துக் கொண்டார்.

மனம் திகைத்தது. மழைக்காக மின்சாரத்தை நிறுத்தி இருக்கக் கூடும். திரும்பி வந்துவிடும் என்றுதான் முதலில் சாதாரணமாக நினைத்திருந்தேன். அதற்குள் கடவுளே கடவுளே என்று நூறுதரம் புலம்பிவிட்டார் அவர். அழாத குறை. உட்கார மனமில்லாமல் குறுக்கும் நெடுக்குமாய் அமைதியின்றி நடந்தார். கையைப் பிசைந்தபடி நாங்கள் உட்கார்ந்திருந்தோம்.

காலை கடந்து பகல் வரைக்கும் கூட மின்சாரம் வரவில்லை. யாருக்கும் சாப்பாட்டுக்குப் போகக் கூட மனமில்லை. முதலாளியின் புலம்பலையும் குழம்பிய முகத்தையும் பார்க்கச் சங்கடமாக இருந்தது. முடித்துவிட முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வந்தது. தொலைபேசியில் மின்சார அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டேன். முழு நகரத்திலுமே மின்வெட்டு என்றும் மின் உற்பத்தி நிலையத்தில் கோளாறு என்றும் பழுது பார்த்து சரிசெய்ய ஆகும் காலத்தை உத்தேசமாய்ச் சொல்வது சிரமம் என்றும் சொல்லப்பட்டது. தகவல்கள் எங்களை அவநம்பிக்கையின் விளிம்புக்கே தள்ளிவிட்டன.

தலைவரின் வீட்டிலிருந்து வண்டிகள் வரத் தொடங்கிவிட்டன. அனைவருக்கும் துவண்ட முகத்தோடு பதில் சொன்னார் முதலாளி. அரைகுறையாய் நடந்த வேலையைப் பார்த்துவிட்டுப் போனார்கள். அந்த சமயத்துக்குப் புத்தக அட்டை மட்டும்தான் தயாராக இருந்தது. சாயங்காலமாய் தலைவரின் அந்தரங்கக் காரியதரிசியே வந்துவிட்டார். எல்லார் முன்னிலையிலும் மின்துறையைப் பழித்துப் பேசினார். தகுதியற்ற நிர்வாகம் என்றார். மீண்டும் தொலைபேசி அழைப்புகள். கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே மீண்டும் மீண்டும் சொன்னது மின்துறை. அரசுத் தரப்பில் வந்தவர்களுக்கெல்லாம் தாழ்மையான பதில்களைச் சொல்லி அனுப்பினார் முதலாளி. அன்றைய இரவும் அச்சகத்திலேயே எல்லாரையும் தங்கிக் கொள்ளச் சொன்னார். மின்சாரம் வந்துவிடும் பட்சத்தில் உடனடியாய் வேலையைத் தொடங்கி முடிக்கலாம் என்பது அவர் திட்டம்.

நொந்து போய் இருக்கும் அவர் மனத்தை மேலும் குலைக்க விருப்பமில்லை எனக்கு. வந்தாலும் முடிக்க முடியாது என்று என் உள்மனம் கூவிக் கொண்டிருந்தது. எனினும் சம்மதத்துடன் தலையசைத்தேன். மற்றவர்களும் ஒப்புக் கொண்டார்கள். எல்லாருக்கும் இரவு உணவு வரவழைக்கப் பட்டது. முதலாளியும் தங்கிக் கொண்டார்.

விடிந்தது. இரவு முழுக்க விழித்திருந்து கண்கள் எரிந்ததுதான் மிச்சம். மின்சாரம் வரவில்லை. மீண்டும் மின் அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டோம். இன்னும் மின்தடம் பழுது பார்க்கப்படவில்லை என்றார்கள். சலித்துப்போய் உட்கார்ந்தோம். அதற்குள் அரசு வண்டிகள் வந்துவிட்டன. தலைவரின் அந்தரங்க்க காரியதரிசியும் காவல் துறையைச் சார்ந்த உயர் அதிகாரியும் வந்தார்கள். முதலாளியைத் தனி அறைக்கு அழைத்துப் போய் தணிந்த குரலில் ஏதோ சொன்னார்கள். முதலாளி தலையை மட்டும் அசைத்துக் கொண்டார். உடனே வந்தவர்கள் போய்விட்டார்கள்.

முதலாளி என்னை அழைத்தார். அவர்கள் திட்டத்தை என்னிடம் சொன்னார். தயாராய் இருக்கும் அட்டையை வைத்துக் கொண்டு வெறும் வெள்ளைத் தாட்களைப் புத்தகங்களாக உருவாக்க வெண்டும். பத்துப் புத்தகங்கள் பொதும். தோற்றத்துக்குப் புத்தகங்கள். உள்ளே வெறும் தாட்கள். வெளியே யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது. ரகசியம் காப்பாற்றப் படவேண்டும். மனத்தை அழுத்தி இருந்த பாரம் விலகியது போல இருந்தது. பத்துப் புத்தகங்களைத் தயாரிப்பது அரைமணிநேர வேலை. தைத்து ஒட்டி உலர்த்தி அழகாகக் கட்டினோம். கொண்டு போய் கொடுத்துவிட்டுவர என்னையும் அழைத்தார். சேர்ந்து போய்க் கொடுத்தோம். ரகசியம் ரகசியம் என்று எச்சரித்து அனுப்பினார்கள்.

பத்து மணி வெளியீட்டு விழாவுக்கு நாங்களும் சென்றிருந்தோம். ராட்சச ஜெனரேட்டர் உற்பத்தி செய்த மின்சாரத்தில் மண்டப விளக்குகள் வெளிச்சத்தைப் பொழிந்து கொண்டிருந்தன. எந்திரத் துப்பாக்கிகள் ஏந்திய காவலர்கள் அடிக்கு ஒருவராய் நின்று கொண்டிருந்தார்கள் முதுபெரும் அரசியல்வாதி ஒருவரால் நூல் வெளியிடப்பட தலைவரின் தாய் ஆனந்தத்தோடு முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். கேமிரா வெளிச்சங்களும் வீடியோ வெளிச்சங்களும் மேடையில் மின்னியது. அச்சகத்தார் என்கிற வகையில் முதலாளிக்குப் பொன்னாடை போர்த்தப் பட்டது. தலைவர் எழுந்தார். சபையின் முன் அவர் வணங்கிய தோற்றம். ஒரே கரகோஷம். வாழ்தொலிகள். மண்டபம் மீண்டும் சமன நிலைக்கு வர பத்து நிமிடம் ஆயிற்று.

பாராட்டுரை தொடங்கியது. முதலாவதாக ஒரு பல்கலைக் கழகத் துணைவேந்தர். அழுத்தமான குரல் நெளிவு சுளிவுடன் ஏற்ற இறக்கம். தகவல்களுக்குத் தர வேண்டிய அழுத்தம். தலைவரைப் புகழும் போது தர வேண்டிய அழுத்தம் பற்றிய கலையில் தேர்ச்சி பெற்றவராயிருந்தார் அவர். நூலின் சிறப்பை அடுக்கிக் கொண்டே போனார். உடனுக்குடன் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகப் புகழுக்குத் தன் மொழியை உட்படுத்தத் துடிப்பதாகச் சொன்னார். ஆங்கிலத்தில் உருவான மறுகணமே நோபெல் பரிசு தன் மொழியின் கதவைத் தட்ட ஓடிவந்து விடும் என்றார். அடுத்து வந்தது ஒரு கவிஞர். புத்தகத்தின் நயமான பகுதிகளையும் அவற்றில் பொதிந்திருக்கும் நாட்டுப்பற்றைப் பற்றியும் உதாரணங்கள் காட்டிப் பேசினார். அவர் கையில் நாங்கள் தயாரித்த புத்தகம். அடுத்துப் பேச வந்தார் பேராசிரியர் ஒருவர். பல்கலைக் கழக ஆய்வுகளைவிட தலைவரின் ஆய்வு தரத்திலும் சம்பவத் தொகுப்புப் பாங்கிலும் மிக உயர்ந்திருப்பதாய் மதிப்பிட்டுப் புகழ்ந்தார். அடுத்து வந்தவர் பிரபல சமுக சேவகர். சரித்திரச் சம்பவங்களைப் பாரபட்டசமின்றித் தொகுத்திருபதாகவும் மானுடம் பேசும் அவரது எழுத்து நடையையும் நாவாரப் புகழ்ந்தார். தொடர்ந்து எழுத்தரசர் என்று விருது பெற்ற எழுத்தாளர் ஒருவரும் கட்சியின் மகளிர் அணிப் பிரிவுத் தலைவியும் கொள்கை பரப்புச் செயலாளரும் பேசினர். வார்த்தைக்கு வார்த்தை தலைவர் புகழுரை, கைதட்டல். மண்டபமே மயங்கிக் கிடந்தது.

எனக்கு உடம்பு உதறியது. உண்மையைப் போலப் பேசும் அவர்கள் வார்த்தைகள் என்னைக் குழப்பின. உயர்த்திக் காட்டப்படும் புத்தகத்தைப் பர்த்ததுமே எனக்கு உண்மையிலேயே சந்தேகமே வந்துவிட்டது. நமது தயாரிபபுதானா அல்லது வேறா என்று. மகாஜனங்களே இது புத்தகமே அல்ல, வெறும் தாட்கள் எனறு கூட்டத்தைப் பார்த்துக் கூவ வேண்டும் போல இருந்தது. நானோ அந்நியன். என்ன செய்ய ? முதலாளியிடம் கிசுகிசுத்தேன். அவரோ அந்த நாடகத்தை மிகவும் ரசித்தபடி இருந்தார். எதுவும் பேசாதே என்பது போல தலையை அசைத்தார். இரண்டு நாட்களாய் அவர் முகத்தில் அப்பி இருந்த பீதியும் குழப்பமும் முற்றாய் விலகி இருந்தன. சுற்றி இருக்கும் ஜனங்களைப் பார்க்குமாறு சொன்னார். எல்லாரும் ஒரு வசப்பட்ட மனநிலையில் பக்திச் சிலிர்ப்பில் கண் செருக உட்கார்ந்திருந்தார்கள். இது மோசடி இல்லையா என்று காதுக்குள் ரகசியமாய்க் கேட்டேன். முதலாளி என்னைப் பார்த்த பார்வை அட சிறுவனே என்பது போல இருந்தது. மெல்லச் சாய்ந்து என் காதில் அவர் இதுதான் இந்தச் தேசத்தின் சரித்திரம் என்றார். தொடர்நது நாமும்தானே இதற்கு உடந்தை என்றார் ரகசியக் குரலில்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *