கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 14,245 
 

கடற்கரையில் உட்கார்ந்து அலைகளையே வெறித்துக் கொண்டிருந்தான் வினோத். பாக்கெட்டில் வைபரேஷன் மோடில் இருந்த மொபைல் கிர்…கிர்ர்.. என்றது.

அம்மாதான் ஆறாவது முறையாக போன் செய்கிறாள். ‘ப்ச் ‘ என்று சலித்துக்கொண்டே செல்லை ஆப் செய்துவிட்டு வேடிக்கை பார்த்தான்.

நாய் பொம்மையை கையில் இடுக்கிக் கொண்டு அலையை நோக்கி பயமில்லாமல் ஓடிக்கொண்டிருந்த அந்த வாண்டுவை அதட்ட முதுகை காட்டி பேசிக்கொண்டிருந்த அந்த ஜோடி.. வேகமாக வந்து குழந்தையை பிடித்தார்கள்.

” ஏய்.. சுமதி சுண்டல் திங்கறதுலயே இரு.. குழந்தையை ஒரு பார்வை பார்த்திட்டிருக்ககூடாது..? திட்டிக்கொண்டே திரும்பிய அவன் வினோத்தை பார்த்ததும் ஆச்சரியத்துடன்,

” ஏய் மச்சான் நீ வினோத் இல்ல…? ” கேட்டவனை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது.

தொடர்ந்து அவனே, ” நான் ‘ பாலு ‘ ப்பா… எட்டாம் கிளாஸ் வரை தாம்பரம் கவெர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சோமே.. ஞாபகமில்லையா…?”

கணக்கு வாத்தியாரிடம் தினம் பிரம்படி வாங்கி கொண்டிருந்த பாலுவா இவன்..? முகம் மட்டும்தான் சாயல் தெரிந்தது.

ஒல்லிப்பிச்சானாட்டம் இருந்தவன் வாட்ட சாட்டமாய் மாறி இருக்கிறான்… கையில் பிரெஸ்லெட்டும்.. கழுத்தில் மைனர் செயினும் அவனை கிராமத்தானாய் காட்டியது.

“ஹேய் … இது கனவா… நினைவா.. பத்து வருஷத்துக்கு அப்புறம் உன்னை பார்க்கிறேன்.. சட்டுனு புரியலை…”

” அது சரி.. நான் கடைசி பென்ச். நல்லா படிக்கிற உனக்கு என் ஞாபகமெல்லாம் இருக்குமா ?…”

“ச்சே.. அதெல்லாம் ஒண்ணுமில்ல… நீ ஸ்கூலை விட்டு நின்ன பிறகு உன்ன பத்தி தெரியாமயே போயிடுச்சி எங்க இருக்க…? என்ன வேலை செய்றே…?”

“க்கும்… நானென்ன உன்னாட்டம் நல்லா படிச்சேனா…? ஆபிசரு உத்தியோகம் பார்க்க…? நம்ம ராமசாமி வாத்தி என்னை அடிச்சி அடிச்சி பார்த்துட்டு.. ‘ டேய் உனக்கு படிப்பே வராதுடா.. மாடு
மேய்க்கதான் லாயக்குன்னு திட்டிட்டே இருப்பாரு இல்ல..எங்கப்பாவும் வெறுப்பாயி ஒரு நாள் கிராமத்துல இருக்கிற என் அத்தை வீட்டுக்கு துரத்தி விட்டுட்டாருடா.. அங்க நிஜமாவே
ரெண்டு மாடு மேய்ச்சேன்… தெரு தெருவா சைக்கிள்ல பால் வியாபாரத்தை தொடங்கி இப்போ திருச்சியில பெரிய ‘ டெய்ரி பண்ணை வச்சிட்டிருக்கேன்.அத்தை பொண்ணோட கல்யாணம்..
நல்ல வருமானம். வாழ்க்கை நல்லா போயிட்டிருக்கு.. நாம படிச்சஸ்கூலுக்கு ஏதாவது செய்யனும்னு தோணுச்சி. அதான் இங்க வந்தேன். அது சரி.. என்னை பத்தியே பேசிட்டிருக்கேன்.நீ என்ன பண்றே.. கல்யாணம் ஆயிடுச்சா..?

” உங்கப்பா நல்லவருடா.. அப்பவே நல்ல வேலை செஞ்சார்..எங்கப்பா என் லைப்பையே கெடுத்திட்டாருடா… படி…படின்னு இன்ஜினியருக்கு படிக்க வைச்சிட்டு.. இப்ப நாய் மாதிரி கம்பெனி கம்பெனியா … ஏறி இறங்கிட்டிருக்கேன். ‘ மொக்க பிகர் ‘ கூட என்னை
திரும்பி பார்க்க மாட்டேங்குது.. கல்யாணம் ஆயிடுச்சான்னு கேள்வி வேற கேட்கிற…”

புலம்பியனை பார்த்து என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ….”சரிப்பா.. திருச்சி வந்தா என் வீட்டுக்கு வா.. இதான் என் விசிட்டிங்கார்டு.. ” கொடுத்து விட்டு சாலையோரம் நிறுத்தியிருந்த காரில் ஏறிக்கொண்டார்கள்.

” ஓ.. இது வேறயா…? டேய் அப்பா பேசாம எனக்கு ரெண்டு மாடு வாங்கி தந்திருக்கலாம்லே…’ கோபமாக தானாக பேசிக்கொண்டு மணலை காலால் தள்ளிவிட.

” பாவம் டி.. லூஸூ போல இருக்கு…’!” அவனை கடந்து சென்ற இரண்டு சுடிதார்கள் பேசிக்கொண்டது.

– மே 4- 10, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *