“என்னடா ராம்கி, இஞ்சினியரிங் படிச்சு கோல்ட் மெடல் வாங்கி நீ பாஸ் பண்ணியது ரொம்ப சந்தோஷம். ஆனா இப்படி வர்ற நல்ல நல்ல வேலைகளையெல்லாம் வேண்டாம்னு ஒதுக்கி வச்சா என்னடா அர்த்தம்?”
“அப்பா ப்ளீஸ் நான் வேலை பார்க்கப் போவது வெறும் மாதச் சம்பளத்திற்காக மட்டும் அல்ல. அந்த வேலையில் இருந்துகொண்டு நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். வித்தியாசமா மாற்றி யோசித்து புதியவைகளைப் புகுத்த வேண்டும். எனக்கு முழு சுதந்திரம் வேண்டும்… அந்த மாதிரியான ஒரு சிறந்த நிர்வாகத்தைத்தான் நான் முடிவு செய்வேன்.”
“மைக்ரோசாப்ட், கூகுள், ஐபிஎம், ஹெச்பி, அமேஸான் போன்ற பெரிய நிறுவனங்களை விடவா ஒனக்கு இன்னமும் நல்ல கம்பெனியில் இருந்து வேலைக்கு அழைப்பு வந்து விடப்போகிறது?”
“ஆமாம்… நான் யாருக்காக எந்த கம்பெனிக்காக எனது உழைப்பையும் என்னுடைய thought process ஐயும் செலவழிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன் அப்பா…”
“யார்றா அது?”
“வேலை செய்தால் அவரிடம்தான் வேலை செய்வேன்; நிறையக் கற்றுக் கொள்வேன். புதிது புதிதாக என் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்வேன்…”
“அதுசரிடா…. யார் அது?”
“அவர்தான் எலான் மஸ்க். அவர் ஒரு பிரமிப்பூட்டும் அதிசய புருஷர். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்… இன்னும் பத்து வருடங்களில் அவர்தான் இந்த உலகத்தின் முதல் ஆக்கபூர்வமான மனிதர். அவருடைய SpaceX நிறுவனத்திலோ அல்லது அவரின் Hyperloop திட்டத்திலோ என்னை முற்றிலுமாக இணைத்துக் கொண்டு விடுவேன் அப்பா…”
“அப்படியா? நான் அவரைப்பற்றி எதுவும் இன்னமும் எதுவும் கேள்விப் பட்டதில்லை ராம்கி…”
“அப்படியென்றால் உங்களுக்கு உலக நடப்புகள் எதுவும் தெரியவில்லை என்றுதான் அர்த்தம்…. அவரைப்பற்றி நன்கு தெரிய வேண்டுமென்றால் இந்த பிரிண்ட்அவுட்டைப் படித்துப் பாருங்கள் அப்பா…”
ராம்கி அந்த பிரிண்ட்அவுட்டை எடுத்து அப்பாவிடம் கொடுத்து விட்டுச் சென்றான். அவர் நிதானத்துடன் அதை ஆர்வமாகப் படிக்க ஆரம்பித்தார்…
எத்தர் எலான் மஸ்க் :
தனது பன்னிரண்டாவது வயதில் தென்னாப்பிரிக்காவில் படித்தபோது, கம்ப்யூட்டரில் சிறுவர்களுக்கான Blaster என்கிற விளையாட்டுச் செயலியை உருவாக்கினார் எலான்.
அந்தச் செயலி சிறுவர்கள், மாணவர்களிடையே மிகப் பிரபலமானது. அதை, கம்ப்யூட்டர் தொடர்பான செய்திகளை வெளியிடும் பத்திரிகை ஒன்று ஐந்நூறு டாலர்களுக்கு எலானிடமிருந்து வாங்கிக் கொண்டது.
பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் கனடாவிலும், அமெரிக்காவிலும் பட்டப்படிப்பு படித்து பொருளாதாரத்திலும், இயற்பியலிலும் பட்டம் பெற்றார் எலான். அதைத் தொடர்ந்து பிஹெச்டி படிப்பை மேற்கொண்டவர், அதைப் பாதியிலேயே விட்டுவிட்டு தனது சகோதரர் கிம்பெல் மற்றும் நண்பர் ஒருவருடன் சேர்ந்து Zip2 என்கிற ஆன்லைன் City Guide ஐ உருவாக்கினார்.
இது நமது நாட்டின் Yellow Pages ஐப் போன்றது. நகரின் எல்லா விவரங்களையும் உள்ளடக்கியது. இது பிரபலமாகவே ‘காம்ப்பேக் கம்ப்யூட்டர் கார்ப்பொரேஷன்’ என்கிற கம்பெனி 307 மில்லியன் டாலர் கொடுத்துவிட்டு Zip2 வை தனதாக்கிக் கொண்டது.
பிறகு மின்னணு மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய X-Com என்கிற செயலியை உருவாக்கினார் எலான். இதுவே பின்னாளில் Paypal என்று பிரபலமானது.
eBay என்கிற நிறுவனம் Paypal ஐ 1.5 பில்லியன் டாலர் அளித்து தனக்குச் சொந்தமாக வாங்கியது. இந்தத் தொகையில் தனது பங்கிற்குக் கிடைத்ததைக் கொண்டு Space Exploration Technologies Corp என்கிற நிறுவனத்தைத் தொடங்கி, விண்வெளி ஆராய்ச்சியில் இறங்கினார் எலான். இது மிக வித்தியாசமான முயற்சி.
SpaceX என்று அழைக்கப்படும் இந்நிறுவனம், 2002 ல் வணிக நோக்கிலான விண்வெளி சேவையை ஆரம்பித்தது. அமெரிக்காவின் ‘நாஸா’தான் விண்வெளியில் நிறுத்தியிருக்கும் Space Station க்கு விண்வெளி வீரர்களையும், அதற்குத் தேவையான பொருட்களையும் அனுப்பும் பொறுப்பை 2012 ல் SpaceX நிறுவனத்திற்கு அளித்தது.
விண்வெளி வீரர்களையும் பொருட்களையும் Falcon-9 என்ற ராக்கெட் மூலம் வெற்றிகரமாக அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்கிற பெருமையைப் பெற்றது SpaceX. தவிர, 2019 ல் சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இவருக்கு அமெரிக்க அரசு ஸ்பெஷல் அனுமதி அளித்தது.
இவ்வாறு சிறப்பு அனுமதியைப் பெற்ற எலான், ஆறு மாத இடைவெளியில் 120 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி அசத்தினார். இவற்றில் Starlink என்ற செயற்கை கோளும் அடங்கும். இந்த Starlink வகை செயற்கை கோள்கள், துருவ வட்டப்பாதையில் (Polar Orbit) மற்ற செயற்கைக் கோள்களை விட தாழ்வாக நிலை நிறுத்தப் படுகின்றன.
இந்த செயற்கைக் கோள்கள் இன்டர்நெட் சேவை வழங்குவதற்காக அனுப்பப் பட்டவை. இவை தாழ்வாக நிலை நிறுத்தப் பட்டுள்ளதால் இன்டர்நெட் சேவை விரைவாகவும், இடையூறு இன்றியும் கிடைப்பதாக இச்சேவையை பயன் படுத்துவோர் கூறுகின்றனர்.
2017 ஆம் ஆண்டு நம் நாட்டின் இஸ்ரோ நிறுவனம் ஒரே சமயத்தில் நூற்றி நான்கு செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பியது. ஆனால் எலான் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஏவுகணை தளத்தில் இருந்து 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை, Falcon-9 என்கிற மீண்டும் உபயோகப் படுத்தக்கூடிய ராக்கெட் மூலம் சென்ற ஜனவரி 24 ஆம் தேதி ஏவினார்.
இதே கால கட்டத்தில் தன் கவனத்தை, மின்சாரத்தில் இயங்கக்கூடிய கார் தயாரிப்பதிலும் செலுத்தினார் எலான். Tesla Motors என்கிற நிறுவனத்தை நிறுவி, Tesla வாகனங்களை உற்பத்தி செய்தார். பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள் தேவையில்லாமல், வெறும் லித்தியம் பேட்டரிகளைக் கொண்டு கார்கள் தயாரிக்கப்பட்டன. Tesla கார்களிலேயே பல மாடல்களை உற்பத்தி செய்து, இதுவரை சுமார் எட்டு லட்சம் கார்களை விற்பனை செய்து அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ விற்பனையையும் மிஞ்சினார் எலான்.
தற்போது Hyperloop என்கிற பெயரில், பூமிக்கடியில் செல்லும் ரயில் சேவையைத் தொடங்கி உள்ளார். மனிதர்களின் பயண நேரத்தை மிக வெகுவாகக் குறைக்க இந்த Hyperloop திட்டம் உதவும் என்கிறார். இதற்கான பிரம்மாண்டமான சுரங்கங்கள் அமைப்பதற்காக, தான் நிறுவிய போரிங்க் கம்பெனியை மட்டுமே பயன் படுத்தி வருகிறார்.
தனது SpaceX நிறுவனத்தின் மூலம் மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்றுவதே தனது லட்சியம் என்கிறார் எலான். அதற்கான கடின முயற்சிகளிலும் இடைவிடாது ஈடுபட்டு வருகிறார்.
இப்படி, எதையும் ஒதுக்கி விடாமல் முயற்சி செய்துதான் பார்ப்போமே என்பதை அடிப்படைக் குணமாகக் கொண்ட எலான் மஸ்க் ஒரு மஹா புருஷர். உலகளவில் மிகப்பெரிய பாராட்டுதலுக்கு உரியவர்…
பிரிண்ட்அவுட்டைப் படித்து முடித்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார் ராம்கியின் அப்பா. ஆமாம் ராம்கி சரியான திசையில்தான் பயணிக்கிறான் என்று பெருமையுடன் நினைத்துக் கொண்டார்.