வேலியில் போவது…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 28, 2024
பார்வையிட்டோர்: 468 
 
 

(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீட்டின் பூமுகத்தில் சற்றே சாய்வான சூரல் நாற்காலியில் கும்பமுனி தாம்பூலம் தரித்துக்கொண்டிருந்தார். அணிற்பிள்ளை போல் முன்னம் பற்கள் நான்கு. கடைவாய் பற்களும் வாராது காண் கடை வழிக்கே!

தினமும் தபால்காரன் வரும்வரை, குத்துக்கால் வைத்த இருப்பு. வெற்றிலையும் பாக்கும் சிறிது வதைப்பட்டு மாற்றுருவம் பெறாமலேயே வாசலின் இடதுபுறம் உமிழப்பட்டுக் கிடக்கும். அதுவே ஒரு உரக்குண்டு போல ஆகிக்கொண்டிருந்தது.

எழுதுவதில், படிப்பதில் நாட்டம் குறைந்துவிட்டது. சமையலுக்கும் புறச்சுற்று வேலைகளுக்குமான தவசிப்பிள்ளை தவிர்த்து பிற உறவுகள் சட்டை செய்வதில்லை. காலையில் கட்டன் காப்பி, பதினோரு மணியளவில் புழுங்கலரிசிச் சோறு வடித்தது, தொடுகறி காணத் துவையல், ரசம், மோர், பிற்பகலில் ஒரு கட்டன் காப்பி. முன்னிரவில் பயத்தங்கஞ்சி, சுட்ட பப்படம். இதுவென்ன பூனைக்காலி கடிக்கான பத்தியமா என வினவலாம்தான்.பத்தியமோ, பைத்தியமோ, சீலம் அதுவெனக் கொண்டாயிற்று பலகாலம். துவையல் வேண்டுமானால் காணத்துக்குப் பதில் சிறுபயிறு, பொரிகடலை, துவரம் பருப்பு, பெரும்பயிறு, எள்ளு, தேங்காய், பீர்க்கன் காய், வல்லாரை என மாற்றம் கொள்ளும்.

தபால்காரன் வரும்வரை அந்த இருப்பு. காலனுக்கான காத்திருப்பின் நாள் அட்டவணை என்றும் கொள்ளலாம். நவீன படைப்பாளி என்றும் திறனாய்வாளன் என்றும் பெத்த பேர் எடுத்தாயிற்று. எனவே கட்டுத் தபால்களுக்குப் பஞ்சமில்லை. இறந்துபோன பின்பும் சிலகாலம் வந்து கொண்டிருக்கும் இலக்கிய நிகழ்ச்சி அழைப்பிதழ்கள், இலவச வெளியீடுகள், இலக்கியச் சிற்றிதழ்கள், மதிப்புரைக்கும் கருத்துரைக்கும் வரும் கவிதை, கதைப் புத்தகங்கள், சில அஞ்சலட்டைகள், எப்போதாவது பிரசுரமான படைப்புக்கான அல்லது மதிப்புரைக்கான நூற்றிருபத்தைந்து ரூபாய் காசோலை, சென்னை வங்கிக்கிளையில் மாற்றத்தக்கதாக. வங்கியில் கொண்டு கொடுத்தால், இருபது நாட்களுக்குப் பிறகு, எல்லாம் போக, எண்பத்தைந்து ரூபாய் கணக்கில் சேரும். மாப்பிள்ளை பிடித்த காசு பிள்ளை அழிக்க ஆச்சு. தோட்டத்தில் பாதி கிணறு. சுண்டைக்காய் கால்பணம், சுமட்டுக் கூலி முக்கால் பணம். வங்கி ஊழியர் மட்டும் வாழ்க! அரசு ஊழியர் அவரோடு வாழ்க! ஆசிரியர் அதிக நாள் வாழ்க!!!

கும்பமுனி முழுநேர எழுத்தாளர். முழுநேர எழுத்து என்பது அல்லும் பகலும் அறுபது நாழிகையும் சுத்தத் தமிழில் சொல்வதானால் ட்வென்டி ஃபோர் அவர்ஸும் எழுதிக் கொண்டிருப்பது என்பதல்ல. வேறு தொழிலுக்குப் போவதில்லை என்பது. தகப்பனார் சொத்து – பல இடங்களில் மழைக்கு ஒழுகும் பழைய நாழி ஓடு பாவிய வீடு. எட்டாக்கையில் பதினேழு மரக்கால் விதைப்பாடு நெல்வயல். ஆறு தென்னை, மூன்று பூவரசு, வேம்பும் முருங்கையும் ஒன்று என நிற்கும் வீட்டை அடுத்த தோப்பு. தோப்பில் கன்னி மூலையில் சுடலைமாடன் – சுடலைப் பேய்ச்சி யின் மஞ்சணை மெழுகிய பீடங்கள். சோற்றுக்குப் புத்திமுட்டுக் கிடையாது. அந்தக் கால இன்டர்மீடியட். அதாவது இன்றைய முனைவர் பட்டத்துக்கு சமம்.

நாற்பது ஆண்டுகளாய் வாங்கிச் சேர்த்த புத்தகங்களின் நடுவே, கும்பமுனி பழைய புத்தகக்கடை போலத் தெரிந்தார். படிக்காதவை, பாதி படித்தவை, பலமுறை படித்தவை, படிக்க இயலாதவை, படித்தும் பயனற்றவை, படிக்க லாயக்கற்றவை என.

வீட்டின் முன்பக்கம் பார்த்தீனியம். சீமைக் கருவேலம், தங்கரளி, துளசி, தொட்டாவாடி, பூச்சி முள், முள் முருங்கை வனம். தங்கரளி மூட்டடியில் மைனாக்கள் புழுக்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கும். புத்தகப் புழுக்களின் தொந்தரவில்லாதபோது.

தபால்காரன் மணி அடித்தபோது, வெற்றிலையைத் துப்பிவிட்டு தபால் வாங்க எழுந்து போனார் கும்பமுனி.மறுபடியும் வந்து அமர்ந்து, தண்ணீர் குடித்துவிட்டு, தபால்களை மேற்பார்வை இட்டார். நூலஞ்சல்களை, அழைப்பிதழ்களை ஓரமாக வைத்தார். இரண்டு அஞ்சலட்டைகளும் ஒரு உள்நாட்டு அஞ்சலும். கையெழுத்தில் தெரிந்தது அம்பர் நாத்தில் வாழும் சகோதரி என்பது. கிழமை முறைபோல, அது ஒருவாரச்சடங்கு.

அடுத்த அஞ்சலட்டை சக விமர்சகத் தொழிலாளி நாறும் பூ நாதன். அந்தப் பெயருக்கு கும்பமுனி ஒரு பாடபேதம் வைத்திருந்தார்.இன்னொரு உள்நாட்டு அஞ்சல் புதியதாக இருந்தது அனுப்பியவர் முகவரி ரப்பர்ஸ்டாம்பில்.

கவிஞர். தே.குணசீலன்
M.A (தமிழ்), M.A (மலையாளம்), M.A (இந்தி)
S.T.H.C.NGL.
கானங்கோழி விளை
அம்மன் கோயில் சமீபம்
தாழக்குடி – 629 901
கன்னியாகுமரி மாவட்டம்
தமிழ்நாடு, தென்னிந்தியா.
நாள் 13-8-2002 காலை 3-15 மணி

கும்பமுனிக்கு S.T.H.C.NGL. என்பது என்ன பட்டப் படிப்பு என்பது விளங்கவில்லை. ஏதாவது புதிய கணிப்பொறிக் கல்வியாக இருக்கும். நமக்கென்ன? அப்பம் தின்னவோ அலால் குழி எண்ணவோ! உள்நாட்டு அஞ்சலை வாசிக்கலானார்.

மதிப்பிற்குரிய முது படைப்பாளி, திறனாய்வுத் திங்கள் (சினிமா நடிகை நடிகர்தான் பட்டங்கள் சூடிக் கொள்ளலாமா? படைப்பாளிகள் வைத்துக் கொள்ளக் கூடாதா?) திரு. கும்பமுனி அவர்களுக்கு-

வணக்கம். என்னை உங்களுக்கு நினைவிருக்கும். பூதப்பாண்டித் தேராட்டத்தன்று, கோயில் வாசலில், குரங்குகளின் தொந்தரவுக்கு இடையில், உங்களைப் பார்த்தேன். தேர் நிலைக்கு நின்ற நெரிசலில் விரிவாகப் பேச முடியவில்லை. என் பெயர் கவிஞர் தே. குணசீலன். முச்சை எம்.ஏ. பட்டதாரி. வேலை இல்லாமல் இருக்கிறேன். முப்பத் தெட்டு வயதாகிறது. வேலை இல்லாததால் கல்யாணமும் இல்லை. போனமாதம் என்னைக் கொலை செய்யும் நோக்கத்துடன் நாலைந்து பேர் தாக்கியதில் எட்டு நாட்கள் மருத்துவமனையில் கிடந்து பிழைத்தேன். சமீபத்தில் வெளியான என் கவிதைத் தொகுப்பு உங்களுக்குத் தர வேண்டும். இந்த முகவரி ‘குமரி முரசு’ அலுவலகத்தில் வாங்கினேன். சரியானதுதானா என்றும் தெரியவில்லை. நீங்கள் ஒரு அஞ்சலட்டை எழுதினால் எனது புத்தகம் அனுப்பித் தருவேன்.

மிக்க அன்புடன்

கவிஞர். தே. குணசீலன் M.A (தமிழ்), M.A (மலையாளம்), M.A (இந்தி)’S.T.H.C.NGL.

கவிஞர்களைப் போய் எதற்குக் கொலை செய்ய முயற்சிக்க வேண்டும்? ஏதும். I.S.I/ K.G.B/ C.I.A MOSSAD/ MI-5 சதியாக இருக்க வேண்டும். மனிதப் பிறவியிலேயே மகத்தானது கவிஞர் பிறவி அல்லவா? மேலும் எவ்வளவு பட்டங்கள் வாங்கிய கவிஞர்? அந்த S.T.H.C.NGL என்பதுதான் என்னவென்று தெரியவில்லை.

கும்பமுனிக்கு யோசனைக் கதிர்களின் ஊடே மின்னணுக்கள் ஊடுருவி வயிறு கலங்கியது. பார இழவு தவசிப்பிள்ளை சீதப்பாலுக்கு செத்த துட்டி கேட்கப் போனவன் இன்னும் வரவில்லை. நேற்றிரவு பக்கத்து ஊரின் விலக்கு ஒத்தைக் கடையில் வாங்கி வைத்த பேயன் பழங்கள் இரண்டு கனிந்து கிடந்தன. காலை மதிய உணவாக அதுவே கூடப் போதும். பாய்ந்தது கும்பமுனியின் சிந்தாகதி, நளனின் தேர் போல.

பேயனுக்குகந்த பழங்கள்
பேயனுகந்த பழங்கள்
கந்த பேயனுக்குப் பழங்கள்
பழங்கள் உகந்த பேயன்

பழங்கள் தின்று, துண்டு சுக்குக் கருப்புக்கட்டியும் மென்று செம்பு பச்சைத் தண்ணீரும் குடித்த பின்பும் கும்பமுனிக்கு எரிந்தது கும்பி. கடிதம் உலைத்துப் போட்ட வைக்கோல் போர் பற்றி எரிந்தது.முப்பத்தெட்டு வயது. இன்னும் வியாழ நோக்கு வரவில்லை.

பித்தம் தெளியப் பெண்ணொன்று கொள்ளு
பெண்ணெனக் கொண்டால் பித்தம் பெருகும்
பெருகும் பித்தம் பெண்ணுக் காகா
காவா வா கந்தாவாகாவா
பித்தன் என்றாலும் பேயன் என்றாலும்
பொன்னில் தாலி
புற்றில் பாம்பு
மாலை பூத்ததடி வாலைப்பெண்ணே

தீக்குச்சியால் புறங்கையில் சுட்டுக்கொள்ளலாமென எழுந்த தோர் அவா சுருண்டு புகைந்து, கொப்புளங்கள் மொச்சைக் கொட்டைகள் போலப் பொங்கின.

கவிதைத் தொகுப்பு – காற்றுக்கும் காதல் வரும் – கவிஞர். தே. குணசீலன் M.A (தமிழ்), M.A (மலையாளம்), M.A (இந்தி) S.T.H.C.NGL.

மறுபடியும் முப்பது ரூபாய் விலையில், புத்தம் புதிய காப்பி. நெஞ்சில் கொஞ்சம் கவிச்சாயம் ஏறிய உளறல்களும் ஏழாயிரம் ரூபாயும். நாடன் சரக்கு, ஹைக்கூ, வீரிய ஒட்டு ரகங்கள். காதல் மறுப்பு, யுகப் புரட்சி, பண்பாட்டு மறுமலர்ச்சி, சாதி ஒழிக, பெண்ணடிமை ஒழிக, அநீதி ஒழிக, தமிழ் வாழ்க, இனமானம் வாழ்க..

கும்பமுனிக்கு தபாலில் வரும் கவிதைகள் படித்தே மூலநோய் முற்றிக் கிடந்தது. குத்துக்காலில் உட்கார்வது ஒரு வசதி மட்டுமல்ல; நிவாரணமும் ஆகும்.

கவிதைப் புத்தக முகப்பில் பெண் வடிவு. நான்கு வண்ணங்கள். உடலெல்லாம் காட்டுப் பூக்கள். அல்குலில் பூவரசு. நாபியில் நந்தியா வட்டை. கூம்புக் காம்புகளில் மரமல்லி. மலர்ந்த தாமரை வாய், கண்களுக்கு சங்கு புட்பங்கள், மூக்குக்கு அந்தி மந்தாரைகள், மயிரெல்லாம் மயில் மாணிக்கம். பூவரசம் பூ பூத்தாச்சு, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு. அச்சும் அமைப்பும் அன்னை அமலோத்பலம் ஆர்ட் பிரின்டேர்ஸ், திட்டுவிளை. கல்யாணம், வளைகாப்பு, பால் காய்ச்சு, காது குத்து, பூப்புனித நீராட்டு, பதினாறு அடியந்திர அழைப்பிதழ்கள் அச்சடித்த தேர்ச்சி தெரிந்தது அச்சில். இன்னும் ஹைடில்பெர்க் ட்ரெடில் உபயோகத்தில் இருந்தது.

கும்பமுனி கவிதைகளைத் திருப்பிக் கொண்டே போனார். மெய்ப்பு எந்த கண்ணவிஞ்ச பாவி பார்த்தானோ? ‘திக்குக்கள் எட்டும் சிதறி’ என்று மனதில் சுடலையாட்டம்.

சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவ…
நீத்தார் கடனெனக் கிடந்த ஹைக்கூ-
அவனுக்கு அம்மைக்க பதினாறு அடியந்திரம்

அன்று தவசிப்பிள்ளை இருந்தார். நேரம் வெகுவாகிவிட்டது. பசிப் பொருமல்.

“அங்க என்ன மயித்த வோய் புடுங்குகீரு? அவனுக்க கவிதையும் உமக்க காணத் தொவையலும்… எனக்குண்ணுதான் எழவெடுப் பானுகவாறானுவோ..”

“ஆச்சு…ஆச்சு… கை களுவீட்டு வாரும் போத்தி…”

“சீர் கெட்ட கழுதைக்கு சினைக்கழுதை வைப்பாட்டி… நீளமாய்… வேண்டியதுமில்லே, ஆழமாய்ப் புணர வேண்டியது மில்லே..”

கரை காணாக் கடல் நடுவே கவிஞர் தீவு ஒன்று அமைத்து எல்லாக் கவிஞர்களையும் ஆங்கே கடத்திவிட வேண்டும். ஆனால் கவிஞர் இனமே பூண்டோடு அழிந்துவிடும் அபாயமும் உண்டு. எல்லாம் குடியரசுத் தலைவர் நினைத்தால் ஒருவேளை முடியலாம். கும்பமுனி நினைத்தால் முடியுமா?

பதினைந்து நாட்கள் பொறுத்து கவிஞர் குணசீலனிடம் இருந்து அஞ்சலட்டை.

“ஐயா,நான் அனுப்பிய கவிதைப் புத்தகம் – காற்றுக்கும் காதல் வரும் – கிடைத்திருக்கும். எனது கவிதைகள் பற்றிய உங்கள் மேலான, வெளிப்படையான, நியாயமான, கருத்துக்களுக்காகக் காத்துக் கிடக்கின்றேன்.

காத்துக் காத்து கண்பூத்துப் போச்சு
பூத்து பூத்து அது புகைஞ்சு போச்சு
புகைஞ்சு புகைஞ்சு அது கரிஞ்சு போச்சு
கரிஞ்சு போச்சு எரிஞ்சு போச்சு சாம்பலாச்சு
கண்ணீரில் கரைச்சாச்சு
தண்ணீரில் கரைச்சாச்சு
அவயானுக்கு மண்ணு பறிக்க வேலை
அவனவனுக்கு ஆயிரத்தெட்டு வேலை

கும்ப முனிக்கு அன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முறை. குளித்துவிட்டு வந்தால் தவசிப்பிள்ளையின் வெள்ளாய்ங்கம் தீயலும் பருப்புத் துவையலும். சாப்பிட்டுப் படுத்தால் கும்பி குளிர்ந்து மலையாடும் குளிர்காற்று மரமாட மனதாட உறக்கம் சுருண்டு வரும்.

அஞ்சலட்டையில் கவிஞனின் ஆவி கிடந்து அடிக்கிறது.
சக கவிஞனின் ஆவலாதி
எரியும் தீ.கவிஞன் ஆகுதி…

மிகுந்த கரிசனத்துடன் மாலை அஞ்சலட்டை எழுதினார் – ‘உங்கள் கவிதைகளைப் படித்தேன். எல்லாம் ஆரம்ப நிலைக் கவிதைகள். அதில் அதைரியப்பட ஒன்றுமில்லை. இது ஒரு நல்ல தொடக்கம் என்றெண்ணி மேலும் எழுதுங்கள். மனுஷ்யபுத்திரன், தேவதேவன், சேரன், விக்ரமாதித்யன், கலாப்ரியா, யூமா வாசுகி, உமா மகேஸ்வரி, க்ருஷாங்கினி, குட்டி ரேவதி, கனிமொழி என நிறையப் படியுங்கள்.வாழ்த்துக்கள். கும்பமுனி. 28-9-2002’

கருத்தரித்தல், குறைப்பிரசவம், கர்ப்ப சோகம், பிரசவ வேதனை – சிருஷ்டி என்பது உயிர்வாதை எனில் ஏதுக்கது வாலைப் பெண்ணே!

படைப்பென்பது மழை தழுவிய நிலத்தில்
முதல் கொழுமுனை.
ஓடிக்களைத்த எருதின் இளைப்பாறல்.
தாய்ப்பசுவின் பாச நக்கல்.
மூத்திரம் குடித்திளிக்கும் காளைக்கன்று.

எழுதிக்கொண்டிருந்த கும்பமுனிக்கு, தபால்காரன் வந்து நின்றது கூடத் தெரியவில்லை. மறுபடியும் கவிஞர் தே. குணசீலன். நாயர் பிடித்த புலிவால் – ஆப்புருவிய குரங்கு – ஏதுக்கிது வாலைப் பெண்ணே!

‘ஐயா

புத்தகம் அனுப்பி ஒரு மாதம் ஆனபின்பு நினைவூட்டலும் செய்தபின்பு, உங்கள் கடிதம்.

ஆரம்ப நிலைக் கவிதைகள். ம்… அவற்றை நான் பதினெட்டு ஆண்டுகள் முன்பே எழுதியாயிற்று. அதை இன்று யாரும் சொல்லித்தர அவசியமில்லை. அறுபது ஆண்டுகளாய் எழுதிவரும் விமர்சனப் பொய்கை, பெரியவர் காரல் கலம்பகவண்ணன் என் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி வெகுவாகப் பாரட்டியுள்ளார். தமிழ்த்துறைத் தலைவர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், வானொலி இயக்குநர்கள், நகைச்சுவை நடிகர்கள் எனப் பலரும்.

அவற்றை ஒளி நகல் செய்து உங்களுக்கு அனுப்பலாம் என்றால் கையில் காசில்லை.

முப்பத்தெட்டு வயதாகிற, வேலை கிடைக்காத, திருமணம் செய்ய வாய்ப்பில்லாத, கொலை மிரட்டலுக்கு அஞ்சி வாழ்கிற என் மீது சற்றும் இரக்கமின்றி எழுதியுள்ளீர்கள். பெரிய எழுத்தாளர் களுக்கு இப்படி சின்ன புத்தி இருப்பது கேவலம்.

தமிழ்க் கவிதையின் எதிர்காலம் குறித்து எனக்கு அச்சமாக இருக்கிறது.

தயவுசெய்து நான் அனுப்பிய புத்தகத்தைத் திருப்பித் தாருங்கள். தகுதி இல்லாதவர் கையில் அது இருக்க வேண்டாம். ஒருவேளை திருப்பித் தரும் உத்தேசம் இல்லை என்றால், அதற்குரிய விலையாவது தாருங்கள்.

இப்படிக்கு உங்களிடம் கருத்துக் கேட்ட மூடன்

கவிஞர். தே. குணசீலன் M.A (தமிழ்), M.A (மலையாளம்), M.A (இந்தி) S.T.H.C.NGL.

கும்ப முனிக்கு, தடிகொடுத்து அடிவாங்கியது போலிருந்தது.

புண்ணாக்குத் தா, இல்லேண்ணா செக்கிலே பேலுவேன், என்கிறான்.

புத்தகம் எங்கே கிடக்கிறது என்று தெரியவில்லை.

பணவிடை அனுப்புவது செய்யக்கூடியது.

தவசிப்பிள்ளை அடிக்கடி சொல்லும் வசை ஞாபகம் வந்தது. ‘வேலியில் போவதைப் பிடித்து….. விட்டுக் கொள்வதைப் போல’ என்று குத்தும்தான், குடையும்தான்.

நன்றி: https://nanjilnadan.com/2011/03/30/வேலியில்போவது-2/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *