சுப்ரமணிக்கு ‘கொச்சு முதலாளி’ என்று பெயர் ஏற்பட்டதற்குக் காரணம், அவனுடைய அப்பா அல்ல. அதற்கான முழுப் பொறுப்பு தகழி சிவசங்கரன் பிள்ளையை சாரும். அந்த சிறந்த மாலையாள எழுத்தாளரின் ‘செம்மீன்’ அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருந்த நேரம் அது.முதல் வருடப் பரீட்சையை எழுதிவிட்டு மொத்த வகுப்பும் தியேட்டரில் வந்து உட்கார்ந்திருந்தது. கருப்பாக, சற்றே பூசினாற்போன்ற மேனியும், வெள்ளைச் சட்டையும், அழுந்த சீவிய தலை அலங்காரமுமாக மது அந்தப் படித்தில் சின்ன முதலாளியாகத் தோன்றியபோது அந்த உருவத்தைப் பார்த்த ஆதிக்கக்குழு – அவர்கள்தான் வகுப்பின் பெருந்தலைகள் – ‘ அட சுப்ரமணி ’ என்று கூவியது.
என்றாலும் சுப்ரமணி சின்ன முதலாளி ஆனதற்கு மொத்த பொறுப்பையும் தகழி மீது போட்டுவிட முடியாது.இந்திரா காந்திக்கும் அதில் கணிசமான பங்குண்டு.சமூகச் சீர்திருத்தம் என்ற பெயரில் அடுத்தடுத்து வீசிய அரசியல் அலைகளின் சிறு திவலை எங்கள் வகுப்றைக்குள்ளும் தெறித்தது.திடும் என்று ஒரு நள்ளிரவில் நாட்டின் பெரிய வங்கிகள் அரசுடைமை ஆக்கப்பட்டன.பிர்லா, டாட்டாக்களுக்கு மட்டுமல்ல, தெருமுனை பூக்காரிகளுக்கும் இனிமேல் பாங்கில் கடன் கிடைக்கும் என்பதைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் புரியவில்லை.
ஆனால் சுப்ரமணி, அதை எதிர்த்து ஹாஸ்டல் மெஸ்சில் அரை மணிக்கு மேல் ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் பிளந்து கட்டிக் கொண்டிருந்தான். ஃப்ரீ எண்டர்பிரைசஸ், பாங்க்கிங் பிரின்சிபிள், டீ கண்ட்ரோல் என்றெல்லாம் அவன் சொன்ன வார்த்தை ஜாலங்களை உதிர்த்துவிட்டுப் பார்த்தால் இப்போது என் நினைவில் நிற்பது ‘அரசாங்கத்தின் வேலை வியாபாரம் செய்வதல்ல’ என்ற ஒற்றை வாசகம்தான். அந்த அரற்றலை யாரும் பொருட்படுத்தவில்லை சிவானந்தத்தைத் தவிர.
சிவானந்தம் வகுப்பில் இருந்த இன்னொரு அறிவுஜீவி.இடது சாரி.அறை சுவர்களை ஷர்மிளா டாகூர் ஆக்கிரமித்திருந்த ஹாஸ்டலில் லெனின் படம் மாட்டிய அறை அவனுடையது. பளபளவென்று அட்டைபோட்டுப் போர்த்திய தடிதடியான கார்ல் மார்க்ஸின் தாஸ் காபிடலின் மூன்று வால்யூம்களையும் பதினைந்து ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு வந்து மேஜை மீது நிறுத்தி வைத்திருப்பவன். அதை எல்லாம் படித்து விட்டுத்தான் பேசினானோ அல்லது அவ்வளவும் அவனுடைய சொந்த மூளையோ தெரியாது.சுப்ரமணிக்கு சளைக்காமல் வரிக்கு வரி பதில் சொல்வான். அவனுக்கு சமமான இவனது அலங்கார வார்த்தைகளைக் கழித்து விட்டுப் பார்த்தால், ‘மூலதனம் அனைத்தும் மக்களுடையதே‘ என்பதுதான் சிவானந்தத்தின் முழக்கம்.
எங்களுக்கு இவர்களது பொருளாதாரத்தில் அக்கறை இல்லை.ஆனால் கோழிச்சண்டை பார்ப்பதில் கொள்ளை விருப்பம்.அவ்வப்போது வாழ்க்கை சலித்துப் போகும்போது இவர்களை சீண்டி விட்டுப் பார்ப்பதில் ஆனந்தம்.எப்போது எதிலிருந்து பொறி கிளம்பும் என்று எவருக்கும் தெரியாது.கைமாறாக வாங்கிய கடனை யாராவது கழுத்தில் துணியைப் போட்டுக் கேட்கும் நெருக்கடியில் “கொடுக்க முடியாது போடா!ராஜமானியமே ரத்தாகும்போது உன் கடன் என்னடா பிச்சாத்து!” என்று நழுவப் பார்த்தால் சிவானந்தம் சீறிக் கொண்டு வருவான்.“அது கடன் அல்ல, லஞ்சம்.நிலப்பிரபுத்துவ அமைப்பை நிலைநிறுத்த பூர்ஷ்வாக்கள் கொடுத்து வந்த லஞ்சம்.இந்த மன்னர்களுக்கு நாடு ஒரு ம.யி…ம் கடன்பட்டதில்லை” என்று பேச ஆரம்பிப்பான்.
மே தினத்தை ஒட்டி சிவானந்தம் ஊர்வலம் புறப்பட்டால் இதழ் கடையில் எகத்தாளம் முறுவலிட சுப்பிரமணி, “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!உள்ளூர்த் தொழிலாளர்களே சந்தா கொடுங்கள்!” என்று நையாண்டி செய்வான்.
எலியும் பூனையும் ஒரு நாள் களத்தில் இறங்கின. அது கல்லூரி வளாகத்திற்குள் ஜனநாயகக் காற்று வீசிய காலம்.அரசியலுக்கு அனுமதி இல்லை.ஆனால், தேர்தலுக்கு இடம் உண்டு.கல்லூரிப் பேரவைக்கு ஒருவர், மலர்க் குழுவிற்கு ஒருவர் என ஒவ்வொரு வகுப்பும் இரண்டு பேரைத் தேர்ந்தெடுத்து அனுப்ப மாணவர்களுக்கு உரிமை உண்டு.
தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் ஆதிக்கக்குழு சுறுசுறுப்பாயிற்று.கல்லூரி வளாகம் முழுதும் தேர்தல் திருவிழாவில் கலகலத்தாலும், எங்கள் வகுப்பைப் பொறுத்தவரை வாக்கெடுப்பு கிடையாது.கருத்தொற்றுமைதான்.அதற்குக் காரணங்கள் பற்பல.முப்பதுபேர் இருக்கிற வகுப்பு மூன்று நான்காய்ப் பிரிந்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ள வேண்டாம் என்ற நல்லெண்ணம் ஒரு காரணம்.படிப்புத் தன்மையின் காரணமாகப் பாடப்புத்தகத்திற்கு அப்பால் இருக்கும் விஷயங்கள் எல்லாம் வேண்டாத விருதா வேலை என்ற பரவலான அபிப்ராயம் இன்னொரு காரணம்.முப்பது பேர் கொண்ட வகுப்பில் பதவி ஆசை கொண்டவர்கள் ஏழெட்டு பேர் மட்டுமே இருந்தார்கள்.எங்களுடையது நாலு வருடப் படிப்பு.எப்படியும் எல்லோருக்கும் ஒரு சான்ஸ் கிடைத்துவிடும் என்ற உறுதி ஒரு காரணம்.
கருத்தொற்றுமையை உருவாக்கு என்ற கைங்கர்யத்தை ஆதிக்கக்குழு செய்து வந்தது.பெருமாள், வாசுதேவன், நாகராஜன், தமிழழகன் என்ற அந்த நால்வர் குழுவின் தீர்மானங்களை மற்றவர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டு விடுவது ஒரு மரபு.
பெருந்தலைகள் கூடி இந்தத் தேர்தலில் சுப்ரமணியைப் பேரவைக்கு அனுப்புவதென்று முடிவு செய்தன.அந்தச் செய்தி கேட்டு அடுத்த நாள் தடுப்பு தணல்போல் முகம் சிவக்க வகுப்புக்குள் வந்த சிவானந்தம், “என்ன முடிவு இது?” என்று கூச்சலிட்டான்.அவனை அணைத்துக் கொண்டு அமரச் செய்த வாசுதேவன், “ஏன் இந்தக் கத்து கத்துகிறாய்?என்ன கெட்டுவிட்டது இப்போது?” என்று மெல்ல விசாரித்தான்.
“சுப்ரமணி நம் பிரதிநிதியாகப் போகக்கூடாது” என்றான் சிவானந்தம்.
“முப்பது பேருக்குள் ஏண்டா முட்டிக்கிறீங்க?அவன் பேரவைக்குப் போகட்டும்.நீ மலர்க் குழுவுக்குப் போ” என்று பெருமாள் சமாதானம் செய்தான்.
“நான் போக வேண்டுமென்று சொல்லவில்லை.அவன் போகக்கூடாது” என்றான் சிவானந்தம் மறுபடியும்.
“ ஏன்? ”
“ஒரு பிற்போக்குவாதி நமது பிரதிநிதியாகப் போனால் அது வகுப்புக்கே அவமானம் என்று மேஜையைக் குத்தினான்.
“பிற்போக்காவது, முற்போக்காவது, எனக்குத் தெரிந்தது ஒன்றுதான்.பொறம்போக்கு!” என்ற அவனது ஆட்சேபணையை பெருமாள் அலட்சியமாக ஒதுக்கித் தள்ளினான்.
அடுத்த நிமிடம் அறையை விட்டு வெளியேறினான் சிவானந்தம்.விடுவிடு என்று வேகமாக நடந்தான்.தேர்தல் அதிகாரியாக அறிவிக்கப்பட்டிருந்த புரொபசர் ஆசீர்வாதம் முன்னால் போய் மனுதாக்கல் செய்தான்.
போட்டி நிச்சயம் என்பது ஆனதும் பெருந்தலைகளுக்கு வீம்பு பிறந்தது.“ஒரு பய அவனுக்கு ஓட்டு போடக்கூடாது” என்று பிரகடனம் போல அறிவித்தான் பெருமாள்.
ஒரு ஓட்டுகூட நிச்சயம் விழாது என்று தெரிந்த பின்னும் சிவானந்தம் சமரசம் செய்துகொள்ள முயற்சிக்கவில்லை.பின்வாங்கி விடவில்லை.பிரசாரத்தில் இறங்கினான்.சுப்ரமணியைப் பற்றி அத்தனை கத்தியிருந்தபோதும் ஆள் அடிக்கிற பிரசாரத்தில் அவன் இறங்கவில்லை.அறிவு ஜீவித்தனமான பிரசுரங்களில் இறங்கினான்.
அவ்வளவு ஆர்வமாகப் பிரசாரத்தில்இறங்கியவன், அனைவரும் ஆச்சரியப்படும்படி ஒரு காரியம் செய்தான்.தேர்தலுக்கு முன்தினம் பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஊருக்குப் புறப்பட்டான்.
“என்னடா இது, பின்வாங்கிட்ட?”
“பின்னும் வாங்கலை, ஊசியும் வாங்கலை.நான் ஜெயித்துவிட்டேன்.”
“ஜெயிச்சிட்டியா?உனக்கு விழக்கூடியது உன்னடைய ஒரே ஓட்டு.நீ ஊருக்குப் போனா அதுவும் போச்சு.ஜெயிச்சுட்டேன்னு சொல்லிக்கிறியே.உடம்புக்கு ஒண்ணும் இல்லையே கண்ணு?– எக்களிப்பும் எகத்தாளமுமாகக் கேட்டான் வாசு.
“எண்ணிக்கை கணக்குப் பார்த்தா எனக்குத் தோல்வி.கருத்து ரீதியா வெற்றி.”
“புரியலை.”
“உனக்குப் புரியாது.”
ஓட்டு எண்ணிக்கை துவங்கியபோது ஒரு சஸ்பென்ஸ்.ஒவ்வொரு சீட்டாய்ப் பிரித்து சுப்ரமணி என்று உரக்கக் கூவி ஆசிரியர் அடுக்கத் துவங்கியபோது உற்சாகம் கரை புரண்டது.எண்ணிக்கை பாதியளவைக் கடந்ததும் பட்டாசு வாங்க ஓடினான் ஒருவன்.இனிமேல் இதில் சுவாரஸியமில்லை என்று பலர் கலைந்து போயினர்.ஆனால், ஆதிக்ககுழு ஆவலோடு காத்திருந்தது.சுப்ரமணி ஜெயிக்கிறானா என்பதல்ல அதனுடைய ஆர்வம்.சிவானந்தத்துக்கு எதுவும் ஓட்டு விழுகிறதா என்று தெரிந்து கொள்ளும் குறுகுறுப்பு.
25 ஓட்டு எண்ணி முடித்தாயிற்று.இன்னும் இரண்டோ, மூன்றோ இருக்கும்.சுப்ரமணி.சுப்ரமணி என்று நாமாவளி நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் ஒரு நிமிடம் தயங்கினார்.ஓட்டுச் சீட்டை உற்றுப் பார்த்தார்.சிவானந்தம் என்று அறிவித்தார்.அணுகுண்டு வெடித்ததுபோல் ஆதிக்கக்குழு முகத்தில் ஒரு திகைப்பு.
“அந்தச் சீட்டைப் பார்க்கலாமா?” என்றான் பெருமாள்.அதை ஆட்சேபிக்க எதிர்த்துப் போட்டியிடுபவனுக்கு உரிமை உண்டு.வேட்பாளரே ஓடிப் போய்விட்ட பிறகு, ஏஜெண்டாவது எதிர்ப்பாவது?ஆசிரியர் அமைதியாக அந்தச் சீட்டைப் பெருமாளிடம் நீட்டினார்.உண்மைதான்.முத்திரை தெள்ளத் தெளிவாக சிவானந்தம் பெயருக்கு எதிரே விழுந்திருந்தது.
யாருடையது அந்த ஓட்டு என்ற கேள்வி அடுத்த நாள் வகுப்பில் அனைவர் முகத்திலும் முளைத்து நின்றது.அவரவருக்கு அடுத்தவர் மீது சந்தேகம்.அந்தோணிதான் செய்திருக்க வேண்டும் என்று வாசுதேவன் உறுதியாக நம்பினான். அவன்தான் யாருடனும் ஒட்ட மாட்டான் என்று அவன் சொன்ன காரணம் அவ்வளவாக எடுபடவில்லை,
இதயதுல்லாதான் இதை செய்திருக்க வேண்டும் என்று நாகராஜன் வாதாடினான்.அவனுக்குத்தான் நம்மைப் பிடிக்காது.ஆனால்.அதை வாய்விட்டுச் சொல்ல முடியாத கோழை.முகத்தில் கரியைப் பூச இதைப் பயன்படுத்திக் கொண்டுவிட்டான் என்று நாகராஜன் சொன்னபோது அதை நம்பலாம் போலிருந்தது.இதயதுல்லாவை வழிமறித்துக் கேட்டபோது அவன் அம்மா மீது சத்தியம் செய்தான்.அப்பழுக்கு இல்லாத உண்மை சத்தியம்.அம்மா மீது அவன் வைத்திருக்கும் அபிமானம் ஹாஸ்டல் முழுவதுக்கும் தெரியும்.
சிவானந்தத்தின் ஜாதியை நோக்கி விசாரணை திரும்பியது.கலப்பு திருமணத்தில் பிறந்தவன் என்பதால் அவனுக்கு ஜாதியே இல்லை என்று முடிவாயிற்று.இடதுசாரி அபிமானமாக இருக்குமோ என்று இன்னொரு திசை நோக்கி ஆராய்ச்சி திரும்பியது.இதுவும் தெளிவாய்த் தெரியவில்லை.
யார் அந்த ஒருவன், யார் அந்த ஒருவன் என்று ஆதிக்கக்குழு அலசிப் பார்த்து ஓய்ந்து போனது.அமளியெல்லாம் முடிந்த பிறகு மாலை காபிக்காக மெஸ்சில் உட்கார்ந்திருந்தபோது சுப்ரமணி முடிச்சை அவிழ்த்தான்.“சிவானந்தத்துக்கு ஓட்டு போட்டது யார் என்று எனக்குத் தெரியும்” என்றான் அமைதியாக.
“யார் அந்தத் திருடன்?” என்று எதிரே உட்கார்ந்திருந்த பெருமாள் எழுந்து அருகே வந்தான்.
“நான்தான்” என்றான் சுப்ரமணி முறுவல் சற்றும் மாறாமல்.
“என்ன விளையாடறியா?”
“இல்லை.நிஜமாகவே நான்தான்!”
“என்ன நான்தான்?” என்று ஆத்திரத்தில் அவன் குரலைப் போல மிமிக்ரி செய்தான் வாசுதேவன்.
“எனக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை உண்டு…”
“பொடலங்காய்” என்று கத்தினான் பெருமாள்.
“என்னைப் பேசவிடு!எனக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை உண்டு.என்னுடைய கருத்துக்கு மாற்றுக் கருத்தே கூடாது என்று சொல்வது இடதுசாரிகளின் எதேச்சாதிகாரம்” என்றான் சுப்ரமணி அமைதியாக.
“இடதுசாரி, வலதுசாரின்னு பேசினே, இன்னிக்குக் கொலை விழும். ராஸ்கல்! என்றான் நாகராஜன் கொதிப்பாக.
“உனக்கு வால்டேர் தெரியுமா?”
“யார்றா அவன்?அவனையும் தொலைச்சிர்றேன்!” என்றான் நாகராஜன் மறுபடியும்.
“அவன் போய்ப் பல வருடமாச்சு. ஆனால், அவன் சொன்னது என் மனத்தில் அப்படியே தங்கி இருக்கு : ‘உனது கருத்தை ஏற்க மாட்டேன். ஆனால், அதைச் சொல்லும் உன் உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன்.”