வீழ்வேனென்று நினைத்தாயோ!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 6,550 
 
 

அந்த வரிசையில் கடைசி ஆளாக உட்காந்திருந்தான் கருப்பசாமி. மாநிறம்தான் இருப்பான். கொஞ்சமாய் மீசையும் அரும்பியிருந்தது. ஒல்லியான உடம்பு. உடம்புக்கு சற்றும் பொருத்தமில்லாத பேண்டும் சட்டையும் தொளதொளவென்று அணிந்திருந்தான். தலையில் தேங்கண்ணெய் நிறையவே தடவி அழகாய் முடியை சீவி விட்டிருந்தான். தன்னுடைய கண்ணாடியை அவ்வவ்போது மூக்குக்கு மேலே தூக்கி விட்டுக்கொண்டான். அவனைப் போலவே இன்னும் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் அந்த நேர்காணலுக்கு ஆண்களும் பெண்களுமாய் வந்திருந்தனர். ஆனால் கருப்பசாமியை விட மற்றவர்கள் தங்களின் உடையிலேயே வேலையை வாங்கி விடுவார்கள் போல் இருந்தார்கள். மிடுக்காக வந்திருந்தார்கள்.

வெளிநாட்டு உயர்தர கம்ப்யூட்டர் நிறுவனம். கை நிறைய சம்பளம். வீடு வாங்கலாம். கார் வாங்கலாம். நல்ல பொண்ணு கிடைப்பா. இப்படி யாருக்குத்தான் ஆசை வராது. கருப்பசாமிக்கும் ஆசை வந்தது. பி.இ இன்ஜினியரிங் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளான். வீட்டில் அம்மாவுக்காகவாவது கண்டிப்பாக வேலைக்கு சென்றே ஆக வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். படிப்பு முடிஞ்சு நாலு வருஷம் ஆச்சு. இன்னும் வேலை கிடைக்கல. அப்பாவும் எப்ப பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்கார். எந்தக் கம்பெனிக்கு போனாலும் போன வேகத்திலேயே சுவத்துல அடிச்ச பந்து மாதிரி திரும்ப வந்திடுறேன். ஞா வேலை கிடைக்கலன்னு சத்தியமா எனக்கு புரியல. கம்பெனிக்காரங்க எதிர்ப்பார்க்கிற திறமை என்கிட்ட இல்லையா? இல்லை.. என் திறமையை அவங்ககிட்ட காட்ட என்னால முடியலயா? தெரியலையே… கேட்கிற கேள்விக்குச் சரியா விடைய சொன்னாலும் போங்க கூப்பிட்டு அனுப்புறோம்ன்னு சொல்லிடுறாங்களே… எனக்குன்னு ஒரு தடம் எப்ப அமையும்மின்னு தெரியலயே! மனதில் நிறைய குழப்பங்களோடு உட்காந்திருந்தான் கருப்பசாமி.

“அடுத்தது கருப்பசாமி… உள்ள போங்க…” என்றாள். அந்தப்பெண் மிகவும் ஒய்யாரமாய் சிரித்து அழகாய் பேசினாள்.

அவள் சொன்னதும் கருப்பசாமிக்கு உடம்பு வேர்த்தது. எழுந்து நேராக அந்த அறைக்குள் சென்றான். ஏசி காற்று ஜில்லென்று வீசியது. உடம்பு குளிர்ந்தது. ஆனால் கைகள் மட்டும் வியர்த்துக் கொட்டின. உள்ளே மிகவும் கம்பீரத்துடனும் குகைக்குள் கர்ஜிக்கும் சிங்கத்தைப்போலவும் கோர்ட் அணிந்து டை கட்டி நால்வர் அமர்ந்திருந்தார்கள். கருப்பசாமியை உச்சி முதல் உள்ளங்கால் வரை தங்களின் கண்களாலயே அளவெடுத்துக் கொண்டார்கள். கருப்பசாமி கொடுத்த பைலை திறந்து பார்க்காமலே ஏதோ இரண்டு மூன்று கேள்விகள் கேட்டார்கள். அந்தக் கேள்விகள் பன்னிரெண்டாம் வகுப்பு கம்ப்யூட்டர் படிக்கும் மாணவனைக் கேட்டால் கூடச்சொல்லி விடுவான்.

“சரிப்பா போ… சொல்லி அனுப்புறோம்” என்றார்கள்.

இந்த இரண்டு நிமிடத்தில் நான் எவ்வாறு என்னை நிருபித்திருக்க முடியும். இல்லை… அவர்களும் என்னை எவ்வகையில் மதிப்பிட முடியும். போ… என்றால் என்ன அர்த்தம். வேலை கிடைக்கும் போ என்றா…. வேலை கிடைக்காது போ என்றா…. தெரியவில்லை. கருப்பசாமி என்னன்வோ நினைத்துக் கொண்டிருந்தான்.

“சரிப்பா போ… சொல்லி அனுப்புறோம்” என்று மீண்டும் கூறினார்கள்.

“எனக்கு வேலை இருக்கா.. இல்லையா சார்..” நேரடியாகவே கேட்டுவிட்டான் கருப்பசாமி. உட்கார்ந்திருந்த நான்கு பேரும் ஒருவர்க்கொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“வேல இல்ல போ…” என்றார்கள்

“ஏன் வேல இல்ல… என்னோட பைலை கூட பார்க்காம போ.. ன்ன.. என்ன அர்த்தம்?”

“இனிமேல் பார்க்க என்ன இருக்கிறது. உன்னோட டிரஸ் சரியில்ல.. பேச்சு சரியில்ல.. கண்ணாடி போட்டுறுக்க… ஆளும் ஒல்லியா இருக்க… மொத்தத்தில உன்னோட மூஞ்சே சரியில்ல… நீயெல்லாம் கம்ப்யூட்டர் வேலைக்கு லாயக்கே இல்லாதவன். முதல்ல இடத்த காலி பண்ணு” நால்வரில் ஒருவர் மிகவும் கடுமையாகவே பேசினார்.

எழுந்து நின்றான் கருப்பசாமி. உட்காந்திருந்த சேரை தூக்கி ஒரே வீசாக வீசி அவர்கள் மேல் அடித்து விடலாம் என்று கூட எண்ணினான். என்ன செய்வது தனிமரம் தோப்பாகதே… அவர்களைப் பார்த்துச் சின்னதாய் ஒரு புன்னகை செய்தான். இந்தப் புன்னகையைக் கருப்பசாமியிடமிருந்து அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஏதோ தங்களைப் பார்த்து நகைத்த மாதிரி அவர்கள் உணர்ந்தார்கள்.

தன்னுடைய எந்த துக்கமானாலும் சரி அஞ்சல் தாத்தாவிடம் சென்று முறையிடுவதை வாடிக்கையாகவே வைத்திருந்தான் கருப்பசாமி. அன்றும் நேர்காணலில் நடந்ததை அப்படியே சொன்னான். அவனின் முகம் வாடிப்போயிருந்தது.

“அதெல்லாம் ஒன்னுமில்ல கருப்பு… உன்னோட திறமைய பத்தி அவனுங்களுக்கு என்ன தெரியும்? நீ யாருன்னு எனக்குத்தானே தெரியும். நீ நடந்ததை நினைச்சி வருத்தப்படாத. உனக்குன்னு ஒரு நேரம் வரும். அதுவரை பொருமையா இருய்யா…” என்றார் அஞ்சல் தாத்தா.

அந்தக் கிராமத்துல அப்பவே பத்தாவது படிச்சவரு. அவரு வீடுதான் நூலகம், அஞ்சல் பெட்டி எல்லாமுமே.. கல்யாணம் பண்ணிக்கல. ஒண்டிக்கட்டையாவே வாழ்ந்துட்டாரு. அந்த ஊரு மக்கள் எதையாவது கேட்கனுமின்னா அவருகிட்டதான் ஓடி வருவாங்க. இந்தக் கிராமத்துப் பயலுவள நல்லா படிக்க வைச்சு பெரிய ஆளாக்கனுமுன்னு நினைப்பாரு. அவுங்கள்ள கருப்பசாமின்னா அவருக்கு உசுரு. கருப்புசாமிகிட்ட ஏதோ ஒன்னு இருக்குன்னு மட்டும் நினைச்சாரு.

அந்த நேரம் பார்த்துக் கருப்பசாமியின் தொலைபேசியில் குறுந்தகவல் ஒன்று வந்தது. வங்கியிலிருந்து எஸ்எம்எஸ்-காக பதினெட்டு ரூபாய் பிடிக்கப்பட்டது. “காசு இல்லாத நேரத்துல இது ஒன்னா?” என்று மனதில் திட்டிக்கொண்டே தொலைபேசியை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். அஞ்சல் தாத்தாவும் கருப்பசாமியும் நிறைய பேசினார்கள். அவ்வவ்போது கருப்பசாமியின் தொலைபேசியில் மெசேஜ் வந்த வண்ணமே இருந்தன.

“என்னப்பா மெசேஜ் வந்துகிட்டே இருக்கு. யாருப்பா அது? பதில்தான் அனுப்பி வைச்சிடேன்” என்றார் அஞ்சல் தாத்தா.

“இல்ல தாத்தா… பேங்கல இருந்து எஸ்.எம்.எஸ் சார்ஜ், மெயின்டனஸ் சார்ஜ், லோ பேலன்ஸ் சார்ஜின்னு டெபிட் பண்ணிட்டே இருக்காங்க”

அஞ்சல் தாத்தா கருப்பசாமியைப் பார்த்துச் சிரித்தார்.

“என்ன பாத்தா சிரிப்பா வருதா தாத்தா…”

ம்… என்று தலையை மட்டும் ஆட்டுவித்தார். “கருப்பு நீ என்ன பேங்கல அக்கௌண்ட் வச்சிருக்க”

“மக்கள் மணி பேங்க் – சுருக்கமா எம்.எம்.பி னு சொல்லுவாங்க..”

“இந்தப் பேங்குல இந்தியா முழுவதும் ஒரு பத்து இலட்சம் பேரு அக்கௌண்ட் வைச்சிருப்பாங்களா”

“அதுக்கு மேலேயும் இருக்கும். ஏன் தாத்தா கேட்குரீங்க”

“எல்லா பேங்குலேயும் நீ சொல்ற மாதிரி ஒவ்வொரு மாசமும் பணம் எடுத்துட்டுத்தான் இருக்காங்க. இது மட்டும் இல்லாம சின்னதா ஒரு கணக்கு சொல்றன் கேளு… உதாரணமா நீ எனக்கு ஒரு ஆயிரம் ரூபா நெட் பேங்கிங் மூலமா அனுப்புறன் வச்சுக்கு. ஏதோ காரணத்தனால பெயில்டுன்னு வந்திருச்சுன்னா… சில நேரங்களில்ல பணம் உனக்கு டெபிட் ஆயிடும். எனக்கு பணம் வராது. உனக்கு டெபிட் ஆன ஆயிரம் ரூபா கண்டிப்பா மீண்டும் உன்னோட அக்கௌண்ட்க்கே வந்திரும். உடனேவும் வரும். சில மணி நேரங்களிலும் வரும். ஒரு நாள் ரெண்டு நாள்… ஏன் ஒரு வாரம் கூட ஆயிடும். உனக்கு என்னுமோ வெறும் ஆயிரம் ரூபாதான். அந்தப் பணம் ரெண்டு நாள் கழிச்சு வந்தா கூட உனக்கு பெரிய அளவு பாதிப்பு கிடையாது. வங்கிகளில் இருக்கும் தவிற்க முடியாத காரணங்கள் எவ்வளவுதான் இருப்பினும் முடிந்தவரை இருபத்திநாலு மணி நேரத்திற்குள்ளாகவே பணம் திரும்ப வந்து விட வேண்டும். ஆனால் ஒரு வாரமோ அல்லது பதினைந்து நாளோ ஆவது எவ்வாறு?

இன்னும் சொல்லப்போனால் ஒருசில நேரங்களில் நேரடியாகப் பேங்கிற்கே சென்று விவராமாகக் கடிதம் கொடுத்தால்தான் பணம் திரும்ப கிடைக்கும். இப்படி ஒருவரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை சுமார் ஒரு இலட்சம் பேரிடம் இதுபோல் பிடித்தம் செய்து ஒரு வாரம் கழித்து மீண்டும் அக்கௌண்டில் போடப்பட்டால், அவ்வளவு பணம் ஒரு வாரம் முழுக்க எங்கேயிருக்கும்? நம்முடைய அக்கௌண்டிலும் இருக்காது. பிடித்தம் செய்த அவ்வளவு பணத்தை ஒரு வாரம் மட்டும் வட்டிக்குக் கொடுத்தால் எவ்வளவு வரும். ஆனால் நமக்கு பிடித்தம் செய்த ஆயிரம் ரூபாய் மட்டும் ஒரு வாரத்தில் வந்து சேரும். எந்தவித நன்மையும் இல்லாமல்”

“இதுவெல்லாம் நீங்க நினைக்கிறபடி நடக்குமா தாத்தா? அதெப்படி ஒரே சமயத்துல இப்படி பணம் புடிப்பாங்க… அந்தப் பணம் எங்கேயும் போகாம அப்படியே மறைஞ்சுதான இருக்கும். நாம் டெபிட் செஞ்சது சரிதான்னு தெரிஞ்சவுடனே அமோண்ட்டும் கிரிடிட் ஆகிடுது இல்லையா…” இது கருப்பசாமியின் வாதம்.

“நீ சொல்றது நூத்துக்கு நூறு சதவீதம் சரிதான். மற்ற வாடிக்கையாளர்க்கிட்ட பணம் புடிக்கிறது உனக்கு எப்படி தெரியும். நீ சொல்ற மாதிரி யாரும் நம்மோட பணத்த எடுக்காம இருந்தா சரி.. ஒருவேளை எடுத்தா… ” அஞ்சல் தாத்தா கண்களை உருட்டி கருப்பசாமியைப் பாரத்தார்.

“அப்படி எடுத்தாங்கன்னா… சாதாரணமாவே பத்துக்கோடி வருமே. அவ்ளோ பணமா..” கருப்பசாமி மனதில் கை வைத்துக்கொண்டான்.

“இன்னொன்னு சொல்ற கேளு… நீ உன்னோட தொலைபேசிக்கு ரீசார்ஜ் நூறுக்குப் பன்ற. ரீஜார்ஜ் ஆகல. பணம் மட்டும் டெபிட் ஆகிடுது. பேங்குல கடிதம் குடுங்க செக் பன்றோம்முன்னு சொல்லுவாங்க. தொலைபேசி வாடிக்கையாளர் இன்னும் உங்க நெம்பருக்கு ரீஜார்ஜ் ஆகலம்பார். நீ என்ன பன்னலாம்முன்னு முழிச்சிட்டு நிப்ப” என்று கருப்பசாமியை நேருக்கு நேராய் பார்த்தார் அஞ்சல்காரர்.

முன்பு இன்ஜினியரிங் படிக்கும் போது ஒரு புரோஜெக்ட்டோடு அஞ்சல் தாத்தாவைப் பார்க்க வந்திருந்தான் கருப்பசாமி. கருப்பசாமி புரோஜெக்ட் பற்றி சொல்லசொல்ல வாயடைத்துப் போனார். இந்தப் பையன்கிட்ட இவ்வளவு திறமையா என்று வியந்து போனார். அவனுடைய புரோஜெக்ட் பேங் ஹேக்கிக் பற்றியது. இந்தப் புரோஜெக்ட் வெளியே வந்தால் என்னன்ன நடக்குமோ என்று பயந்தார். ஒருவேளை தீயவர்களின் கைகளில் கிடைத்துவிட்டால் அவ்வளவுதான். நம் நாடே பிச்சைக்கார நாடாக மாறிவிடும். அஞ்சல் தாத்தா அவனை கண்டித்து வைத்தார். இந்தப் புரோஜெக்ட் இனி இவ்வுலகத்தில் இருக்கக் கூடாது என்பதற்காக அன்றே முழுவதுமாக அழித்து விட்டார். ஆனால் இன்று மீண்டும் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றினார் போல் பற்ற வைத்துள்ளார். அழித்து விட்டால் எல்லாம் போய்விடுமோ? கருப்பசாமி என்னும் ஹேக்கர் இன்னும் உயிரோடுதானே இருக்கிறார். உண்மையாலுமே அஞ்சல்காரர் கில்லாடிதான்.

கருப்பசாமி அஞ்சல் தாத்தாவின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தான். அஞ்சல் தாத்தா என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று ஆராய முற்பட்டிருந்தான். இரண்டு மனமும் ஒன்றாய் பயணித்தன.

“வாய்ப்பு கிடைக்கும்போது உச்சியில் ஏறி அடித்து விடு கருப்பு. இது உனக்கான நேரம். நீ யாரென்று இவ்வுலகத்திற்கு நிரூபித்துக் காட்டு” அஞ்சல் தாத்தாவின் நம்பிக்கையான வார்த்தைகள் கருப்பசாமிக்கு என்னவோ செய்தன.

இரவு பத்து மணிக்குத்தான் வீட்டிற்கே சென்றான். விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு இருட்டாயிருந்தது. அம்மாதான் வந்து கதவை திறந்தாள்.

“இன்டர்வியூக்குப் போனியே என்னாட ஆச்சு.. வேலை கிடைச்சுதா இல்லையா”

எதுவும் பேசாமல் அம்மாவைத் தாண்டி உள்ளே சென்றான். நேராய் சமையற்கட்டிற்குச் சென்று காய்ந்த ரெண்டு தோசையைத் தட்டில் போட்டுச் சாப்பிட ஆரமித்தான்.

“ஏன்டா நான் கேட்டுட்டே இருக்க. நீ சாப்பிட்டு இருக்க. பதில் சொல்றா.. உங்க அப்பா வேற ரொம்ப கோவத்துல இருக்குறாரு. சாயங்காலம் வந்ததிலிருந்தே உன்னை கேட்டுட்டே இருந்தார். உனக்கு வேல கிடைச்சுதா இல்லையான்னு… இதுல எனக்கு வேற திட்டு. புள்ளைய ஒழுங்க வளக்கலன்னு…”

“உன்னைய ஞா திட்டுறாரு.. இன்ஜினியரிங் முடிச்சிட்டு நாலு வருஷமா நான்தானே வேலைக்குப் போகமா சும்மா தின்னுட்டு இருக்கேன். ஞா விதி. இன்னைக்கும் வேல கிடைக்கல..” கொஞ்ச நேர அமைதி. இருவரும் எதுவும் பேசவில்லை. கருப்பசாமியே பேச ஆரமித்தான்.

“அப்பா சொல்ற மாதிரி நான் தண்டச்சோறு… உதாவாக்கரை… உருப்படாதவன்… நைட்டுல எல்லாம் இந்த லேப்டாப்ப நோண்டிக்கிட்டே இருக்கிறனல்ல அதனால நான் சாமக்கோழிதான்… எதிர்த்த வீட்டுப் பையன் இவ்வளவு சம்பாதிக்கிறான். பக்கத்து வீட்டு பையன் இவ்வளவு சம்பாதிக்கிறான். நீ மட்டும் திங்கற… தூங்குற… அவ்வளவுதான். திட்டுங்க.. திட்டுங்க… நல்லா திட்டுங்க… எனக்குன்னு ஒரு காலம் வராமலா போயிடும். அப்பெல்லாம் நான் உங்கள திட்ட மாட்டேன். என்னோட உள்ளங்கையில வைச்சு தாங்குவ பாருங்க…”

“இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. இப்படி டிரஸ் போட்டுட்டு போன யாரு வேல தருவா.. நல்லா டிப்டாப்பா டிரஸ் போட்டாதானே வேல தருவாங்க” என்றால் அம்மா.

“வேல எனக்கா! இல்ல டிரஸ்க்கா..” சொல்லிக்கொண்டே படுக்கைக்குச் சென்றான்.

விடிகின்ற காலை கருப்பசாமியை எப்படியெல்லாம் அலைகழிக்கப்போகிறது என்பது தெரியவில்லை. எப்போதும் போலத்தான் அன்றும் கொஞ்சம் தாமதமாகவே எழுந்தான். உடம்பில் சுறுசுறுப்பு இல்லை. மந்தமாகவே காணப்பட்டான். தங்கை வந்து வம்பிலுத்து விட்டு சென்றாள். அம்மா வந்து வசை பாடிவிட்டு சென்றாள். அப்பாவின் குரல் மட்டும் கேட்கவில்லை. எப்போதும் அவர்தான் திட்டுவார். இன்று இவர்கள் எல்லாம் என்னை காலையிலே வறுத்துதெடுக்கிறார்கள். சோம்பலுடனே வெளியே வந்தான். மேசையின் மீது அப்பாவின் ஏடிஎம் இருந்தது. அதை பார்த்தும் பாக்காமலும் இருந்தான்.

“டே கருப்பு… சீட்டுக்குப் பணம் கட்டணுமிண்டா. ஐஞ்சாயிரம் பணம் ஏடிஎம் ல போயி எடுத்துட்டு வாடா..” அம்மா

“சும்மா இருக்கன்னு எனக்கு வேல வைக்கிரிங்களா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லடா.. நாம நைட்டு பேசிட்டு இருந்தத உங்கப்பாவும் கேட்டுட்டுத்தான் இருந்திருக்காரு. மத்த பசங்கள வச்சு உன்ன திட்டிட்டோம்முன்னு ரொம்ப வருத்தப்பட்டாருடா…” சமையல் கட்டிலிருந்தே பேசினாள் அம்மா.

“நான் போயி பணம் எடுத்துட்டு வரன். அதுக்காக ரொம்ப பில்டப்பெல்லாம் பண்ண வேண்டாம்”

பக்கத்தில் இருக்கும் ஏ.டி.எம் சென்டருக்கு சென்று பின்னை அழுத்தி ஐஞ்சாயிரத்தை எண்ணால் பதிவு செய்தான் கருப்பசாமி. மிஷின் சுற்றியது. திரையில் பணம் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. சீட்டு மட்டும் வெளியே வந்தது. பணம் வர வில்லை. டெக்லைன் என்று சீட்டில் போடப்பட்டிருந்தது. திரையும் பழைய படிக்கு வந்திருந்தது. இப்போது அப்பா போன் செய்து பணம் டெபிட் ஆகிவிட்டது எனக் கூறினார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நேரடியாகவே பேங்கிற்கே சென்றேன்.

எம்எம்பி பேங். எப்போதும் கூட்டமாகவே இருக்கும் வங்கி. நான் போகும்போது கூட்டம் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. ஒவ்வொரு கௌவுண்ட்டரிலும் யாரோ ஒருவர் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு பெண்மணி மட்டும் கணினியில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் யாரும் இல்லை. நேராக அப்பெண்மணியிடம் சென்றேன்.

“எக்ஸ்கீயூஸ் மீ மேம்… மேம்… மேம்…” அவர்கள் நிமிர்ந்து பார்ப்பதாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்த வண்ணமாய் இருந்தான். அப்பெண்மணி கைகளில் இருந்த பணத்தை அவ்வளவு மெதுவாக எண்ணிக்கொண்டிருந்தார்கள். எண்ணிய பணத்தை டிராயரில் வைத்து விட்டு மீண்டும் எடுத்து எண்ணினார்கள். கருப்பசாமிக்குத் தாங்க முடியவில்லை. மீண்டும் அழைத்தான்.

“என்னப்பா.. என்ன வேணும்” கோபமாய் முறைத்துக் கேட்டாள்.

“ஏடிஎம் ல பணம் ஐஞ்சாயிரம் எடுத்தேன். பணம் வரல. டெக்லைன்னு ரெசிப்ட் மட்டும் வந்தது. ஆனா பேங்குல இருந்து பணம் டெபிட் ஆயிடுச்சு மேம்”

“நீங்க எங்க ஏடிஎம் ல பணம் எடுத்திங்களா?”

“இல்ல. வேற பேங் ஏடிஎம் ல மேம்”

“நீங்க கண்ட கண்ட ஏடிஎம் ல பணம் எடுப்பிங்க. அப்புறம் பணம் வரல. அது வரலன்னு இங்க வந்து புலம்ப வேண்டியது” காட்டமாகவே பேசினார் அந்தப்பெண் ஊழியர்.

“நாங்க வாடிக்கையாளர். இப்படி ஏதாவது பிரச்சனைன்னு வந்தா பேங்குக்கு வராம, வேற எங்க போறது”

“எங்கையாச்சும் போ.. நானா உன்ன இங்க வரசொன்னேன். ஞா உயிர வாங்குறதுக்கே எங்கிருந்துதான் வருங்கீளோ தெரியல. போ.. போ…” அப்பெண்ணின் கையை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்ட சொன்னாள். வாய் ஒரு பக்கமாய் போனது.

“மேம் மரியாதையா பேசுங்க.. இப்படியெல்லாம் பேசாதீங்க.. எனக்கு பணம் டெபிட் ஆயிடுச்சு.. என்ன பண்ணனுமுன்னு சொல்லுங்க”

“மரியாதையா பேசனுமா… எப்படி பேசனும்… நீ வந்து சொல்லி கொடு. வா.. வா..” என்று அழைத்தாள்.

எழுந்து நின்று கைக்கட்டி வாய்பொத்தி நின்றாள். “இப்படி மரியாதை சாருக்குக் கொடுத்தா போதுமா?” நக்கலாகச் சிரித்தாள். கொஞ்ச நேரத்தில் இருவருக்கும் சண்டை முற்றிப்போனது. வங்கியில் உள்ள அனைவரும் அவர்களின் வாய்ச்சண்டையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அப்பெண்ணிற்குத் துணையாக வங்கியில் உள்ளவர்களும் சேர்ந்து கொண்டார்கள். கருப்பசாமியும் அவர்களுக்கு ஈடு கொடுத்துத் திருப்பிக் கொடுத்துக்கொண்டிருந்தான். சத்தம் கேட்டு மேனேஜரும் வெளியே வந்தார்.

“என்ன சத்தம். இது பேங்கா இல்ல சந்த கடையா.. யாருய்யா நீ முதல்ல வெளிய போ..” என்று எந்தவொரு விசாரணையும் இல்லாம கருப்பசாமியை வெளியே போகச்சொன்னார்.

“சார் அது வந்து….” என்று சொல்லுவதற்கு முன்னாலே பியூன் வந்து கருப்பசாமியை கழுத்தைப் பிடித்து வெளியே இழுத்துக்கொண்டு வந்து வாசலிலே கீழே தள்ளினான். வாசல் மண்ணில் முதுகுபட விழுந்தான். அப்படியே அண்ணாந்து மேலே பார்த்தான். அங்கிருந்தவர்கள் அச்சம்பவத்தைப் பார்த்து நகைத்தார்கள். வேடிக்கைப்பார்த்தார்கள். பரிதாப்பட்டார்கள். வங்கி ஊழியர்கள் கருப்பசாமியை ஒருபொருட்டாகவே நினைக்கவில்லை. கீழே விழுந்த கருப்பசாமிக்கு ரொம்ப அவமானமாகப் போய்விட்டது. முகம் வேர்த்தது. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

“ஏ… ஞா பணத்த கேட்க வந்த என்னை கீழ தள்ளி அவமானப்படுத்திட்டிங்கள்ள…” சின்னதாய் சிரித்து, “நான் இதுலதாண்டா பெஷலிஸ்டே.. உங்கள எல்லாரையும் இன்னும் இருபத்திநாலு மணி நேரத்திற்குள்ளாக என் வீட்டு வாசலில் நிக்க வைக்கிறேன் பாருங்க….”

“போ..போ… முதல்ல அத செய்யி…” என்று கிண்டலடித்தாள் அந்த வங்கி ஊழியப்பெண்.

தண்ணீரைத் தலையில் மொண்டு மொண்டு ஊற்றிக்கொண்டான். தன்னுடைய புரோஜக்ட்டைப் பற்றி நினைத்துப்பார்த்தான். பேங்கில் நாம் அக்கௌண்ட் வைத்திருந்தாலே போதும். அதன் மூலமாகவே அந்த பேங்கின் மொத்த கணினியையும் நம்முடைய கண்ட்ரோல்க்கு கொண்டு வரமுடியும். மேனேஜரின் கணினி நம் கைக்கு வந்து விட்டால் அதன்மூலம் தலைமை அலுவலகத்தின் கணினி என இந்தியாவின் ஒட்டு மொத்த நெட்வெர்க்கையும் ஹேக் செய்து விடலாம். ஒரு உணவு சங்கிலியைப் போல. தலையைத் துவட்டிக்கொண்டே கணினியை ஆன் செய்தான். தன் திட்டத்தை மிக சாதாரணமாகச் செய்தான். கொஞ்சகொஞ்சமாய் எம்எம்பி வங்கியின் அனைத்து சர்வர்களும் கருப்பசாமியின் கணினியில் வந்து கொண்டேயிருந்தன. இப்பொழுது ஒவ்வாரு அக்கௌண்டாகப் பணம் முழுமையாக காலியாகிக்கொண்டிருந்தது. எம்எம்பியில் அக்கௌண்ட் வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ஜீரோ பேலன்ஸ் மட்டுமே காட்டியது. மொத்த பணமும் கருப்பசாமியின் கைகளில்.

அனைத்து எம்எம்பி பேங்குகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. “என்னோட பேலன்ஸ் ஜீரோ காட்டுது” “என்னோட பேலன்ஸ் ஜீரோ காட்டுது” என ஒவ்வொருவராய் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இப்போது எம்எம்பியின் தலைமை அக்கௌண்டிலும் ஜீரோ பேலன்ஸ் வந்தது. ஆக எம்எம்பியின் மொத்த அக்கௌண்டும் ஜீரோதான். கிட்டதட்ட எம்எம்பி பேங் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டது. காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விசாரணையின் போது முதலில் ஒரு குறிப்பிட்ட பேங்கில் இருந்துதான் அனைத்துப் பணமும் டெபிட் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எந்தவொரு ஹேக்கராலும் கருப்பசாமியை நெருங்ககூட முடியவில்லை. சம்பந்தப்பட்ட வங்கியின் மேனேஜருக்கு விசாரணைக்கான பேக்ஸ் அனுப்பப்பட்டது. வங்கியில் உள்ளிருந்த பொதுமக்கள் காவல் துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டனர். வங்கி ஊழியர்கள் மட்டும் சிபிஐ வருவதற்காகக் காவல் துறையினரால் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள். தாங்கள் கூண்டில் சிக்கிய எலியாய் ஆகிவிட்டதை உணர்ந்திருந்தார்கள். அப்பொழுதுதான் காலையில் நடந்த கருப்பசாமியின் சம்பவம் நினைவுக்கு வந்தது அந்தப்பெண் ஊழியருக்கு. காவல் துறை உதவியுடன் அடுத்த பத்து நிமிடத்தில் வங்கி ஊழியர்கள் அனைவரும் கருப்பசாமியின் வீட்டு வாசலில் வந்து நின்றார்கள்.

போலிஸ் மறைந்திருக்க வங்கி ஊழியர்கள் மட்டும் வீட்டினுள்ளே சென்றார்கள். கருப்பசாமியின் அப்பா மகனின் அறையைக் காட்டினார். சேரில் நன்றாகச் சாய்ந்து உட்காந்திருந்தான். அவனின் முன்னால் அனைவரும் யு வடிவில் நின்றார்கள்.

கருப்பசாமி சிரித்தான். “நீங்களெல்லாம் வருவீங்கன்னு தெரியும். ஏன்னா உங்க குடுமி என்னோட கைல”

“நீதான் பணத்தை எடுத்தியா” மேனேஜர்.

“ஆமா! நான்தான் எடுத்தேன். மொத்த பணத்தையும் ஹேக்கிங் பண்ணி சுட்டுட்டேன்”

“ஏ இப்படி பண்ண? உனக்கு என்ன வேணும்” மேனேஜர்

“எனக்கு என்னோட பிடித்தம் செய்யப்பட்ட ஐஞ்சாயிரம். ஒருநாளுக்கான வட்டி நாற்பதைந்து ரூபாய். மொத்தம் ஐஞ்சாயிரத்து நாற்பதைந்து ரூபாய் கொடுங்க. உங்க பிரச்சனைய முடிச்சு வைச்சுடுறேன்”

“சார்…. இவனை புடிச்சு போலிஸ்கிட்ட கொடுத்து, அடிக்கிற அடியில பணம் எப்படி வருதுன்னு பாருங்க. உடனே வெளிய நிக்கிற போலிஸ உள்ள வரச்சொல்லுங்க சார்” என்றார் அந்த வம்புக்கார பெண்.

பலமாகச் சிரித்தான். விழுந்து விழுந்து சிரித்தான் கருப்பசாமி. “ஏங்க சார் கொஞ்சம் கூட யோசனையே பண்ண மாட்டிங்களா? போலிஸ கூட்டிட்டு வந்திருக்கிங்களா! எப்படி இப்படி முட்டாள இருக்கிங்க..” மீண்டும் சிரித்தான்.

கருப்பசாமி சிரிக்கும்போதே சிபிஐ வீட்டிற்குள் வந்து விட்டார்கள். பேங்க் மேனேஜர் கருப்பசாமியைக் கை நீட்டினார். சிபிஐ அதிகாரி கருப்பசாமியை உற்றுப்பார்த்தார். இவனா பல கோடிகளைத் திருடியது. மனதில் குழப்பங்களோடு மேனேஜரைப் பார்த்தார். இப்போது மேனேஜரின் தொலைபேசியில் குறுஞ்செய்தி ஒன்று வந்ததற்கான சத்தம் கேட்டது. மேனேஜர் எடுத்துப் பார்த்து வாயடைத்துப் போனார். அவரது அக்கௌண்டில் சில கோடி ரூபாய்கள் கிரிடெட் ஆகியிருந்தது. அடுத்தடுத்த மற்ற வங்கி ஊழியர்களின் தொலைபேசியிலும் குறுஞ்செய்தி வந்த வண்ணம் இருந்தன. வங்கி ஊழியர்களின் அனைவரின் அக்கௌண்டிலும் சில பல கோடிகள் என மொத்த பணமும் அவர்களிடத்தில் கிரிடெட் ஆகியிருந்தன. சிபிஐ அதிகாரிகள் இப்பொழுது வங்கி ஊழியர்களைக் கோபக்கண்களோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *