பிரமை அல்ல

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 4,749 
 

(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பண்ணையார் சூரியன் பிள்ளை தமது அனுபவத்தை யாரிடமாவது சொல்லவேண்டும் என்று ஆசைப்பட்டார். சொல்வதற்கும் தயக்கமாக இருந்தது அவருக்கு. தான் ஆலோசனை கோரி அதைச் சொல்லப் போக, மற்றவர்கள் கேலி செய்து பரிகாசிக்கத் துணிந்தால் தனது கௌரவம் என்ன ஆவது என்ற அச்சமும் அவருக்கு இருந்தது. ஆகவே, ‘பார்க்கலாமே, பார்க்கலாமே!’ என்று தன் எண்ணத்தை ஏலத்தில் விட்டுவந்தார் அவர்.

ஆனால் தொடர்ந்து நாள்தோறும் அதே நிகழ்ச்சி எதிர்ப்படவும் அவர் உள்ளம் குழம்பியது. உணர்வுகள் தறிகெட்டு, உடல் பலவீனம் ஏற்பட்டது. தனது எண்ணங்களை வெளியிடாமல், தன் உணர்ச்சிகளை வெளியே காட்டாது ஓடுக்கி வந்தால் கட்டாயம் தனக்குப் பைத்தியமே பிடித்துவிடும் என்று கருதினார் அவர் ஒருவேளை இப்பொழுதே பைத்தியம் பிடித்திருந்ததோ என்னவோ! இல்லையென்றால் அதை நிஜமாக நிகழ்ந்தது என்று எப்படிக் கொள்வது? யார்தான் அதை நம்புவார்கள்?

அது நிஜமான தோற்றம் அல்ல என்றும் உறுதியாக நம்ப இயலவில்லை அவரால். அவருடைய கண்கள் அவரை ஏமாற்றிக் கொண்டிருந்தன என்று நினைக்க அவர் தயாராக இல்லை . அவர் மூளைதான் ஏதாவது சித்து விளையாட்டு புரிந்து கொண்டிருந்ததோ? இந்தச் சந்தேகம் அவருக்குச் சிறிதே உண்டு. ஆனால் இதர விஷயங்களில் எவ்விதமான குழப்பமும் ஏற்படவில்லையே, கொடுக்கல் வாங்கல், கணக்கு வழக்கு , பண்ணை விவகாசங்கள் முதலியவற்றில் எல்லாம் அவருடைய அறிவுத் தெளிவு வழக்கம் போல் மிளிரவில்லையா என்ன? அப்படியென்றால் இந்த நிகழ்ச்சிக்கு என்ன விளக்கம் கொடுப்பது. இதைப் புரிந்துகொள்ள முடியாமல் தான் திணறினார் பண்ணையார்.

முதன் முதலில் அது எப்பொழுது எப்படிக் காட்சி அளித்தது என்பது அவருக்கு வெகு நன்றாக ஞாபகமிருந்தது…

அப்பொழுது அந்திவேளை, மாடுகள் எல்லாம் தொழுவத்தில் ஒழுங்காகக் கட்டப்பட்டுள்ளனவா அவற்றுக்குத் தீவனம் சரியாக வைக்கப்பட்டிருக்கிறதா என்று ‘மேற்பார்வை’ இட்டுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார் சூரியன் பிள்ளை. திடீரென்று அவர் உடலில் புல்லரிப்பு ஏற்பட்டது. அவருக்கு முன்னால் கறுப்பாக ஏதோ ஒன்று ஓடுவதுபோல் தோன்றியது. அவர் கண்களைக் கசக்கிவிட்டு நன்றாகக் கவனித்தார். அது நின்றும் நகர்ந்தும் முன்னேறி வந்தது. நன்கு வளர்ந்து கொழுத்த காட்டுப் பன்றி அது என்பதை அவர் புரிந்து கொண்டார். எனினும் அவர் உள்ளத்தில் பயம் பரவியது உடல் நடுக்கியது. “சீ” என்று காரித்துப்பினார்.

அந்தப் பன்றி – சிற்றானைக் குட்டி மாதிரி இருந்த மிருகம் – நின்று நிமிர்ந்து பார்த்தது. சிறிய வட்டக் கண்களால் அவரை வெறித்து. நோக்கி, “உார்-உர்ர்” என்று உறுமியது. பிறகு அவரை அலட்சியப் படுத்திவிட்டு நகர்ந்தது.

‘இந்தத் தடிப்பண்ணி இங்கே எப்படி வந்தது? நம்ம சுற்று வட்டாரத்திலே இதுமாதிரிப் பண்ணி எதுவும் கிடையாது’ என்று எண்ணினார் அவர்.

அந்நேரத்தில் தோட்டத்தில் வேலையாட்கள் யாருமில்லை. எல்லோரும் அன்றைய அலுவல்களை முடித்துவிட்டு, அவரவர் வீட்டுக்குப் போய்விட்டார்கள். வண்டிக்காரன் மட்டும் இரவு ஏழு மணிக்கு வருவான். வீட்டிலும் யாரும் கிடையாது. பண்ணையாரின் மனைவி விசாலாட்சி அம்மாள் “மஞ்சளும் குங்குமமுமாக” போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்து சில வருஷங்கள் ஆகிவிட்டன. அவருடைய புத்திரபாக்கியம் பட்டணத்திலே படித்துக் கொண்டிருந்தான். ‘பனைகுடி ஆச்சி’ என்று பெயர் பெற்ற ஒரு பெரியம்மா பகலில் சாதம் ஆக்கி வைத்துவிட்டுப் போய்விடுவாள். இரவு நேரத்துக்கு வெந்நீர்ப் பழையது தான். காப்பி-டீ என்கிற நாகரிகமெல்லாம் பண்ணையாருக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவை வேண்டும் என்று அவர் கவலைப்பட்டதுமில்லை. அதனால் சமையல்காரி மாலை வேளையில் வந்து எட்டிப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லாது போயிற்று.

ஆகவே, சாத்திரம் மாதிரி மிக விசாலமான – பெரிய – அறைகள் மலிந்த – அந்த வீடு வெறிச்சோடியே கிடக்கும் எப்போதும் தனியாகவே வாழ்ந்து பழக்கப்பட்ட சூரியன் பிள்ளைக்கு தனிமை ஒரு சுமையாகவோ வேதனையாகவோ தோன்றியதில்லை. இது வரையில் தான். ஆனால் அன்று எதிர்பாராத வகையிலே அந்தத் தடிப்பன்றியைப் பார்த்ததும் – அவருக்கு அவருடைய தனிமையே சோகமாய் சுமையாய் தோன்றியது.

அதன் பிறகு அந்த உணர்வு வளர்ந்து வந்ததே தவிர, இல்லாது தேய்ந்துவிடவில்லை. காரணம், அந்தப் பன்றிதான். அவருடைய தனிமையைப் பயன்படுத்திக் கொண்டு அவருக்குத் தொல்லை கொடுப்பதற்காகவே எங்கிருந்தோ வந்து முளைத்திருந்தது அது!

‘பன்றியா அது? எனக்கு என்னமோ அப்படித் தோணலே!’. இந்த எண்ணம் பண்ணையாரின் உள்ளத்தில் நன்கு வேரோடி விட்டது. அவர்சுற்றி வளைத்து விசாரித்துப் பார்த்ததில், அண்டை அயலில் பன்றி வளர்ப்பவர் எவருமேயில்லை என்று நிச்சயமாகிவிட்டது. சேரியில் வளரும் பன்றிகள் ஊருக்குள் வருவதில்லை. அப்படியே தப்பித் தவறி ஒன்றிரண்டு வரக்கூடும் என்று சொல்லலாமென்றாலோ, பண்ணையார் பார்வையில் பட்டது போன்ற கொழுத்த பன்றி சேரியில் இல்லவே இல்லை. பின், ‘தடிப்பண்ணி’ எங்கேயிருந்து வருகிறது?. அதுதான் அவருக்குப் புரியவில்லை .

காலையில், பட்டப்பகலில், ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்கும் சமயங்களில் எல்லாம் அந்தப் பன்றி தலை காட்டுவதே இல்லை அந்திசந்தியில், ஆட்கள் எல்லோரும் வீட்டுக்குப் போய்விட்ட பிறகு, யாருமே இல்லாமல் பண்ணையார் மட்டும் தனியாக இருக்கிறபோதுதான் அது வரும். தோட்டத்தில் திரியும் தொழுவத்தில் நிற்கும். வாசல் படியண்டை வரும். ஒரு நாள் திண்ணை மீது கூட ஏறிவிட்டது.

அப்போதெல்லாம் அவர் உடல் பதறும், உள்ளம் நடுங்கும், தெளிவற்று – காரணம் புரியாத – ஒருபயம் அவரை ஆட்கொள்ளும் அவர் மிகுந்த பிரயாசையோடு ‘தூ’ என்று துப்பமுயன்று. ‘சீ போ சனியனே!’ என்று சொல்லி முடிப்பார். அது – எருமைக் கன்றுக்குட்டி மாதிரி வளர்ந்துவிட்ட தடிப்பன்றி – நிதானமாக நின்று, மந்தமான – அழுக்குப் படிந்து மங்கிவிட்ட மஞ்சள் நிறக் கண்ணாடி வட்டங்கள் போன்ற சிறு கண்களால் அவரை வெறித்துப் பார்க்கும்.

அக் கண்கள். அவற்றை அவர் எங்கே பார்த்திருக் கிறார்? அவரை என்னென்னவோ செய்யும். அவற்றில் பிறக்கிற ஒளியற்ற ஒளி அவருக்கு அச்சமும் அருவருப்பும் தரும், அந்தப் பன்றி வாயை விசித்திரமாக இழுத்துச் சுளிக்கும், அது அவரைப் பரிகாசிப்பது போலிருக்கும். அவருக்கு விளக்க முடியாத வெறுப்பும் வேதனையும் எழும்.

ஒரு நாள் அந்திக் கருக்கலில் – அவர் பட்டாசாலையில் இருந்த குத்து விளக்கை ஏற்றிவிட்டு, அரிக்கன் லைட்டில் ஒளி ஏற்படுத்தி அதை எடுத்துக்கொண்டு திண்ணைக்கு வந்த கொண்டிருந்தார். திண்ணைக்கும் இரண்டாம் கட்டுக்கும் இடையில் உள்ள வாசல் படியில் கறுப்பாய். உயரமாய், அது என்ன?… அவர் தேகம் நடுங்கியது. ஆமாம். அந்தப் பன்றிதான். ஏனோ அவர் அலறிவிட்டார். தெளிவற்ற ஓலம் தெறித்து விழுந்தது அவர் வாயிலிருந்து. நடுங்கிய கையிலிருந்து நழுவி விழுந்தது விளக்கு . விழுந்த விளக்கின் சிம்னி ‘சிலீர்’ என்ற ஒலியோடு உடைந்து சிதறியது. ஒளி அவிந்துவிட்டது.

அந்தக் கணத்தில் அவர் அனுபவித்த பயம் – தெளிவற்றது; அளவற்றது; அர்த்தமற்றது. அந்தப் பன்றி வீட்டுக்குள்ளேயே வந்து விடுமோ என்ற அச்சம், வந்துவிட்டது போல் தன்னை நெருங்கிக் கொண்டிருப்பதுபோல், அசிங்கமான அதன் வாய் தன் உடல் மீது பதிவதற்காகத் துணிவதுபோல் ஒரு குழப்பம்… அது நீங்குவதற்குச் சில நிமிஷங்கள் பிடித்தன. தெளிவு ஏற்பட்ட பிறகுகூட அவரது உடல் நடுக்கம் தீர்ந்து விடவில்லை .

அவர் உள்ளே சென்று வேறொரு விளக்கை எடுத்து ஏற்றிக்கொண்டு வெளியே வந்தார். அப்பொழுது தெருவில் காலடி ஓசை கேட்கவும் அவருக்குத் ‘திக்திக்’ கென்றது. ‘யாரது’ என்று கத்தினார் அவர். கூப்பாடாக வெடித்த அக்கேள்வி அவர் குரலை விசித்திரமானதாக ஒலிபரப்பியது.

அதனால் திகைப்படைந்த வண்டிக்காரன், “என்ன எசமான், நான் தான் – மாணிக்கம்!” என்று அறிவித்தான்.

‘நீ வந்துட்டியா!’ இதில் அவருக்கு ஏற்பட்ட ஆனந்தம் நன்கு ஒலி செய்தது. ‘நல்ல வேளை, இப்பவாவது வந்து சேர்ந்தியே!’ என்ற அர்த்தம் தொனித்தது. ‘என்ன, சாப்பாடெல்லாம் ஆச்சுதா?’ என்று கேட்டுவைத்தார் அவர். பேச வேண்டும் – பேச்சுக் குரலைக் கேட்கவேண்டும் – என்ற துடிப்பு அவருக்கு.

‘நீ உள்ளே வரும்பொழுது வாசல் பக்கமாக ஒரு பன்றி போச்சுதா? தடியாய், உயரமாய், கொழு கொழு என்று…’

பண்ணையாரின் கேள்வி மாணிக்கத்தின் ஆச்சரிய உணர்வையும் திகைப்பையும் அதிகப்படுத்தியது. ‘பன்றியா? இங்கே எதுவும் வரலியே, எசமான்!’ என்றான் அவன். ‘காம்பவுண்டின் கம்பிக் கதவு அடைத்தேதான் கிடந்தது. உள்ளே சிறு நாய்கூட வந்திருக்க முடியாது. எசமான்’ என்றும் உறுதியாகச் சொன்னான் அவன்.

‘உம், உம்’ என்று முனகினார் பண்ணையார். சில தினங்களாகத் தனக்கு நேர்ந்த அனுபவங்களை – தன் வாழ்க்கையில் பூத்துவிட்ட விசித்திரத்தை பற்றி அவனிடம் சொல்லலாமா, வேண்டாமா என்று யோசித்தார் அவர். பலத்த ஆலோசனைக்குப் பிறகு, மிகுந்த தயக்கத்தின் மீது. அவர் எல்லாவற்றையும் அவனிடம் கூறினார்.

அவனுடைய அபிப்பிராயத்தை விசாரித்தார்.

‘இது ஏவல்தான் எசமான். அதிலே சந்தேகமே வேண்டாம்’ என்று அறிவித்தான் மாணிக்கம். ஏவல்” என்கிற மாயத்தைப் பற்றியும் அவன் சொன்னான். கண்ணுக்குப் புலனாகாத சக்தி எதுவோ விட்டெறியக்கூடிய கற்களைப் பற்றியும், திடீர்திடீர் என்று தீப்பற்றி எரிவது போல் தோன்றுவது பற்றியும், ஒருவர் பார்வையில் மட்டும் கோரமான – கொடுமையான – அசிங்கமான விஷயங்கள் பலவும் தென்படக்கூடிய விதம் பற்றியும், இன்னும் பல மர்மங்கள் பற்றியும் அவன் எடுத்துச் சொன்னான். ‘அவருக்கு இப்படித்தான் நேர்ந்தது’ ‘இங்கே எனக்குத் தெரிஞ்ச ஒருவருக்கு இதுமாதிரித்தான்…’ என்று ஆரம்பித்து, கதை கதையாகச் சொன்னான் அவன். அவற்றில் அநேகம் நம்பக்கூடியனவாகவும், சில நம்ப முடியாதவையாகவும் தொனித்தன.

‘இப்படியெல்லாம் நடக்குமா. மாணிக்கம்?’ என்று சந்தேகத்தோடு கேட்டார் பண்ணையார்.

‘நடக்குமாயின்னு மெதுவாக் கேக்கிறீங்களே நடக்குது எசமான். நடந்து கொண்டே இருக்குது. இந்த உலகத்திலே என்னென்ன அநியாய மெல்லாமோ அதிசயமெல்லாமோ நடக்குது. எவ்வளவோ சங்கதிகளை நம்மாலே புரிஞ்சுகொள்ள முடியலே” என்றான் மாணிக்கம் உங்களுக்கு சந்தேகமிருந்தால் மாடசாமியிடம் கேட்டுப் பாருங்கள். நாளைக்கு நானே அவனைக் கூட்டி வாறேன்’ என்றும் கூறினான்.

மறுநாள் மாடசாமி வந்து சேர்ந்தான். அவ்வூர் அம்மன் கோயில் பூசாரி அவன், ‘விபூதி மந்திரித்துப் போடுதல்’, ‘திருவிளக்கு மை வைத்து நடந்தது நடக்கப் போவது எல்லாம் அறிந்து சொல்லுதல்’ போன்ற வித்தைகளையும் அவன் ஒரு சிறிது கற்றிருந்தான். அதனால் அவனுக்கு நல்ல செல்வாக்கும், திருப்திகரமான வரும்படியும் கிடைத்தன.

அவன் வந்தான். ‘மை போட்டு’ப் பார்த்தான். ‘இதெல்லாம் சூனியக்காரன் ஒருவன் செய்கிற வேலைதான்’ என்று சொன்னான். அதற்கு மாற்று வைக்கும்படி மாணிக்கம் வேண்டிக் கொள்ளவும் மாடசாமி பணிவுடன் தலை அசைத்தான்.

‘எனக்கு அவ்வளவு தூரத்துக்கு சக்தி இல்லை. இது மாதிரி மந்திர தந்திர வேலைகள், சூனியம் வைப்பது. வைத்ததை எடுப்பது. செய்வினை வைத்திருந்தால் அதை முறிக்கத் தகுந்த நடவடிக்கைகளைக் கையாள்வது முதலியவற்றுக்கெல்லாம் மலையாளத்து மந்திரவாதிள்தான் கைகாரர்கள். எனக்கு அவ்வளவாக ஞானம் பற்றாது’ என்று சொன்னான் அவன்.

‘அது சரி. இந்தப் பண்ணி கண்ணிலே படாமல் இருக்கணு மின்னா என்ன செய்யவேண்டும்?’ என்று சூரியன்பிள்ளை கேட்டார்.

‘உங்க பண்ணையிலே வேலை செய்கிற ஆட்களிலே ஒருவனேதான் இதுக்கு மூலகாரணம். நீங்க ஒண்ணு பண்ணுங்க, கொதிக்கக் கொதிக்க வெந்நீரை ரெடியா வச்சிருங்க. அந்தப் பண்ணி கண்ணிலே படும் போதெல்லாம் வெந்நீரை அள்ளி அது மேலே வீசி அடியுங்க பயப்படாமே – என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்று கவலைப்படாமல் – வெந்நீரைக் கொட்டிக்கொண்டே இருங்க. அப்புறம் என்ன நடக்குதோ, பார்ப்போம்’ என்று மாடசாமி வழி வகுத்துக் கொடுத்தான்.

சூரியன் பிள்ளைக்கு இந்த வழி மிகவும் பிடித்துவிட்டது. சுலப் சாத்தியமானதாகவும் தோன்றியது. அந்தத் தடிப்பன்றி அந்தி நேரத்தில் தானே ஆஜராகிறது? சாயங்காலம் அஞ்சு மணியிலிருந்தே வெந்நீர் தயாராக இருக்கவேண்டும் என்று உத்திரவிட்டார் அவர்.

தொழுவத்தில் அடுப்புக் கட்டிகள் மீது ஒரு கொப்பரை நிறையத் தண்ணீர். தோட்டத்தில் அடுப்பு மீது ஒரு ‘அண்டா’விலே தண்ணீர். வாசலில் திண்ணை ஓரத்தில் விசேஷமாக அடுப்பு அமைத்து அதான் மீதும் ஒரு கொப்பரைத் தண்ணீர். இவற்றைச் சூடுபடுத்தத் தனித்தனி ஆட்கள். அருகிலே கைக்கு வசதியாக வாளி செம்பு வகையரா தீவிரமாகச் செயல் புரிவதற்கு வழி கிடைத்துவிட்ட உற்சாகத்திலே திட்டம் தீட்டினார் பண்ணையாளர்.

இவ்விஷயம் வேலையாட்கள் எல்லோர் காதுகளையும் எட்டியது. ஒவ்வொருவரும் பண்ணையாரின் போக்கைப் பற்றி ஒவ்வொரு விதமாகப் பேசினார்கள். ஆயினும் அதிசயம் நிகழாது போகவில்லை.

வெந்நீர் தயாரிக்கத் தொடங்கிய நாளிலிருந்து தடிப் பன்றி தலைகாட்டாமலே போய்விட்டது. ஒருநாள், இரண்டு நாள், ஒரு வாரம் -ஊம் ஹூம் , அது விஜயம் செய்யவே இல்லை.

“வெந்நீர் வைத்தியம் பற்றி பண்ணியா பிள்ளைக்கு தெரிஞ்சு போச்சு! அதனாலதான் அவரு பயந்துபோயிப் பம்மிகிட்டாரு’ என்று பண்ணையார் மாணிக்கத்திடம் சொன்னார். ரசித்துச் சிரித்தார்.

அதற்காக வெந்நீர் தயாரிப்பை நிறுத்திவிடவில்லை அவர். அதுபாட்டிற்கு ஒழுங்காக தினந்தோறும் மூன்று கொப்பரை நிறைய வெந்நீர் கொதிக்கக் கொதிக்கத் தயாராகி வந்தது. பண்ணையாருக்கு என்ன! விறகு இல்லையே என்ற கவலை ஏற்படப் போகிறதா? தண்ணீர் கஷ்டமா? இல்லை, வேலை ஆட்களுக்குத்தான் குறைவா? ஆகவே தினசரி சாயங்காலம் வெந்நீர் தயாராகிக் கொண்டிருந்தது.

‘வரும் வரும். என்றாவது ஒரு நாள் அந்தத் தடிப்பண்ணி திரும்பவும் வராமலா இருந்துவிடும்? அப்ப பார்த்துக்கொள்வோம்’ என்று நம்பியிருத்தார் பண்ணையார்.

அவர் நம்பிக்கை வீண் போகவில்லை.

பத்து நாட்கள் வராதிருந்த பன்றி பதினோராவது நாள் வந்து சேர்ந்தது.

அப்பொழுதும் அந்தி நேரம்தான், ஆட்கள் எல்லோரும் விடை பெற்றுக்கொண்டு போய் விட்டார்கள். மாணிக்கம் மாத்திரம் இருந்தான்.

பண்ணையார் தொழுவத்தின் பக்கம் நின்றார். மாணிக்கம் மாடுகளுக்குப் பருத்திக் கொட்டையும் தவிடும் கலந்து வைத்துக் கொண்டிருந்தான். திடீரென்று சூரியன் பிள்ளை ‘ஏ ஏய். வெந்நி எடு! வாளியை எடு’ என்று கத்தினார். பாய்ந்து சென்று ஒரு வாளியில் வெந்நீரை அவசரம் அவசரமாக மொண்டு எடுத்தார்.

‘மாணிக்கம், ரெடியா நில்லு, அதோ பண்ணி வருது… நம்ம பக்கமாகத்தான் வருது’ என்று மெதுவாக ஆனால் பதட்டத்தோடு கூறினார்.

மாணிக்கம் அங்குமிங்கும் பார்வை எறிந்தான். அவன் கண்ணில் எதுவுமே தென்படவில்லை. அதைச் சொல்ல வாயெடுத்தான் அவன்.

ஆனால், ‘சத்தம் போடாதேடா முட்டாள்!’ என்று சீறினார் பண்ணையார். வாளித் தண்ணீரை வேகமாக வீசி அடித்தார். இன்னொருதடவை வெந்நீரை அள்ளி வாளியோடு விட்டெறிந்தார். வேகமாகக் குனிந்து செம்பை எடுத்தார். இன்னும் வெந்நீர் கோதுவதற்காகத்தான்.

‘எசமானுக்குப் பைத்தியம் சரியானபடி முத்திவிட்டது!’ என்றுதான் எண்ணினான் அவரையே கவனித்து நின்ற மாணிக்கம். ஆனால் அவன்கூடத் திடுக்கிட்டுத் திகைப்படைய நேர்ந்தது அதே வேளையிலே,

பண்ணையார் வெந்நீரை வாளியோடு விட்டெறியவும், அது பன்றிமீது நன்றாகத் தாக்கியது. கொதிக்கும் நீர் படவும் – வாளியின் தாக்குதலும் சேரவே – பன்றியிடமிருந்து ஒரு அலறல் பிறந்தது. வேதனைக் குரல். மிருகத்தின் கூச்சலாகவும் இல்லாமல் மனித ஓலமாகவும் இல்லாமல் ஆயினும் இரண்டும் ஒன்றிக் கலந்தது போன்ற துயரக் கதறலாக ஒலித்தது அது. சூரியன் பிள்ளையின் உடலை உலுக்கியது. மாணிக்கத்துக்குப் பெருத்த அதிர்ச்சி உண்டாக்கியது அது. பண்ணையார் கண் முன்னாலேயே அந்தப் பன்றி மறைந்துவிட்டது.

அது எப்படி மறைந்தது. எங்கே போயிருக்கும் என்று பண்ணையாருக்கும் புரியவில்லை. பன்றியைக் காண முடியாது நின்ற மாணிக்கத்துக்கோ அந்த அலறலே பயங்கரமாய், புரிந்து கொள்ள முடியாத மர்மமாய், உள்ளத்தை என்னென்னவோ பண்ணுவதாய் அமைந்துவிட்டது.

அவ்விருவரும் அதைப்பற்றிப் பேசக்கூடத் தயங்கினர். இனம் புரிந்துகொள்ள முடியாத ஒருவித அச்சம் இருவர் தேகத்தையும் நடுங்க வைத்தது…

மறுநாள் வழக்கம் போல் விடிந்தது. வழக்கமான அலுவல்கள் தொடங்கின. பண்ணையில் வேலை செய்யும் ஆட்களில் ஒருவன் மட்டும் வரவில்லை.

‘திடீரென்று அவனுக்கு என்னவோ ஏற்பட்டுவிட்டது. உடம்பெல்லாம் ஒரே ரணம். தீ பட்டது போல் தேகம் வெந்து புண்ணாகியிருக்குது. நெஞ்சுக்கிட்டே பலமான காயம் வேறே. அதெல்லாம் எப்படி ஏற்பட்டது என்று விசாரித்தால் அவன் வாய் திறந்து பதிலே சொல்ல மாட்டேன்கிறான்’ என்று ஒருவன் பண்ணையாரிடம் முறையிட்டான்.

சூரியன் பிள்ளைக்கு இந்தப் பேச்சு எதையோ தெளிவுபடுத்துவது போலிருந்தது. பூசாரி மாடசாமி சொன்னதும் வேறு நினைவில் எழுந்தது. அவர் மாணிக்கத்தையும் கூட்டிக்கொண்டு சுடலைமுத்து என்கிற அந்த நபரைக் காணச் சென்றார்.

அவரிடம் ஒருவன் வர்ணித்தானே அதே நிலையில்தான் அவன் கிடந்தான். பண்ணையாரைக் கண்டதும் அவன் கண்கள் ஆத்திரத்தோடும், பகைமையோடும், வெறியோடும் அவரை உற்று நோக்கின. அந்தக் கண்கள். அவற்றின் பார்வை… பண்ணையாருக்கு தடிப்பன்றியின் நினைவு தானாகவே எழுந்தது. மிகத் தெளிவாக – கண் முன் நிற்பது போல் – நிழலாடியது அத்தோற்றம்.

அவர், என்ன சொல்வது என்று புரியாதவராய் – என்ன செய்ய வேண்டும் என்று அறியாதவராய் – மேலும் கீழும் பார்த்தபடி நின்றார்.

சுடலை முத்து சரியாக வேலை செய்யவில்லை என்பதற்காக ஒரு சமயம் அவர் அவனைச் சாட்டையில் அடித்ததும், இன்னொரு தடவை அவனைப் பட்டினி போட்டதும் அவர் நினைவுக்கு வந்தது.

“அதுக்கெல்லாம் சேர்த்து, பயல் நமக்குப் பாடம் கற்பிக்க ஆசைப்பட்டான் போலிருக்கு அவனே சரியானபடி பாடம் படித்துவிட்டான்” என்று எண்ணினார் பிள்ளை. வாய்விட்டுச் சிரித்தார். ‘அடேய் பண்ணிப் பயலே! உனக்கு ஏன்லேய் இந்தப் புத்தி வந்தது?’ என்று கேட்டுவிட்டு, மேலும் சிரித்தார் பண்ணையார்.

– 1958, ஆண் சிங்கம், முதல் பதிப்பு: ஜூன் 1964, எழுத்து பிரசுரம், சென்னை
– வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள் – முதற் பதிப்பு ஆகஸ்ட், 2002 – பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *