வீழ்வேனென்று எண்ணாதே…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 10,218 
 
 

மெரினாவில் அலைகள் ஒன்றையொன்று துரத்தி விளையாடிக்கொண்டிருந்தன.

பிற்பகல் நேரம்.

வெயில் பின் உச்சியில் வெல்டு வைத்தது.

எதற்கும் சலிக்காமல் காதல் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தன சில இளம் ஜோடிகள். பெரும்பாலான மீன் விற்கும் கடைகளும், வண்டிகளும் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன.

இரண்டு படகுகளுக்கு இடையே தொங்கிக்கொண்டிருந்த வலை நிழலில், கண்களைச் சுருக்கிக் கடலையே பார்த்துக்கொண்டு இருந்தான் அவன்.

காற்றில் அலையும் அடர்த்தியான முடி. இரண்டு நாளே ஆன தாடி. மாநிறம். இப்படியெல்லாம் விவரிக்க வேண்டியதில்லை. டிகிரி முடித்து வேலை தேடும் ஒரு நடுத்தரவர்க்க இளைஞன். நாம் அன்றாடம் பார்க்கும் பத்துபேரில் ஒருவன்.

வேந்தன். அவனுடைய பெயர்.

அவன் நம்மைப்பார்த்துவிட்டான். இனி அவன் மனதோடு சேர்ந்து, அவன் கண்களால், அவன் எண்ணங்களால் நாம் பயணிக்கலாம்….இன்று இரவு வரை…

இந்த மாதம் கடந்தால் ஒருவருடம் ஆகிறது நான் சென்னை வந்து.

வாராத்தில் குறைந்தபட்சம் மூன்று இன்டர்வியூக்கள்.. ஒவ்வொன்றிலும் எதிர்பார்ப்பு, காத்திருப்பு, ஏமாற்றம். இன்று கூட ஒரு இன்டர்வியூ. அதேபதில் “கால் பண்றோம்”.

மனம் வெறுமையாகக் கிடந்தது. கடற்கரைக்கு வரலாம் என்று தோன்றியது. வந்துவிட்டேன்.

கிட்டதட்ட மூன்று மணிநேரம் கடந்துவிட்டது. மதியம் பார்த்ததைவிட இப்போது கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருந்தது. சற்று தள்ளி பள்ளிக்கூடக் குழந்தைகள் தங்கள் கால்களைக் கடல் அலையில் நனைத்து விளையாடிக்கொண்டு இருந்தனர். ஒரு ஒல்லியான ஆசிரியை முரட்டுக்குரலில் கத்தினார். கையில் ஒரு ஸ்கேல். கொஞ்சம் கடலை நோக்கி முன்சென்ற குழந்தைகள் சிலர் பின் வாங்கினர். பின்பு அந்த ஆசிரியை கையில் உள்ள ஸ்கேலால் அவர்களுக்கு முன்பு ஒரு கோடு கிழித்தார்.. குழந்தைகள் கொஞ்சம் ஏமாற்றமாக விழித்தனர்.. உடனே வேகமாக ஓடிவந்து கோட்டை அழித்துவிட்டு திரும்பி ஓடியது ஒரு அலை. குழந்தைகள் ஒருசேர “ஹோ!” என்று கத்திக் குதூகலித்தனர். கடலும் தான் ஒரு குழந்தை என்பதைக் காட்டிவிட்டது.

கைகளை மணலில் ஊன்றி எழுந்தேன்.. மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்.. வயிறு பசியில் சுள்ளென்று பிடித்தது.. தினமும் சாப்பிடாமல்தான் நாள் முழுக்க சுற்றித்திரிவேன். பசியே தெரியாது. இன்று என்னவோ பசிக்கிறது. பர்சை எடுத்துப் பார்க்கவேண்டியதில்லை. கிண்டியிலிருந்து பஸ் டிக்கெட் எடுத்தது போக மீதி பதிமூன்று ரூபாய் இருக்கும்.. நல்லவேளை பஸ்ஸில் கூட வொய்ட் போர்டு, க்ரீன் போர்டு, எல்ஈடி, ஏசி பஸ் என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். இல்லையென்றால் நானெல்லாம் நடராசாதான்..

பள்ளிக்குழந்தைகளின் ஆரவாரம் இன்னமும் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். ஒல்லி ஆசிரியை அவர்களோடு கடலில் விளையாடிக்கொண்டு இருந்தார் குழந்தைபோல… மனம் ஏங்கியது என் பள்ளி வாழ்க்கைக்கு.. மறக்கமுடியாத நாட்கள் அவை. நான் அரசாங்க பள்ளியில்தான் படித்தேன். சென்னிமலையில்.. தினமும் தான் வேலைக்குப் போகும் வழியில் அப்பாதான் சைக்கிளில் கொண்டுவந்துவிடுவார்.. சங்கீதா டீச்சரைத்தவிர பள்ளியில் எல்லாமே எனக்குப் பிடித்திருந்தது..ஓவியப்போட்டியில் எப்போதும் ஒரு பரிசு எனக்குண்டு. எப்போதும் வாழ்க்கை அப்படியேதான் இருக்கும் என்றெண்ணிய காலம் அது.. பள்ளிவாழ்க்கை முடிந்து வெளியே வந்தபோது எந்த காலேஜில் என்ன குரூப் எடுப்பது என்று எல்லோரையும்போல் எனக்கும் தெரியவில்லை..

பிடித்ததைப் படித்தால் பெரிய ஆளாக வரலாம்.. ஆனால் அது பணம் படைத்தவர்களுக்கு… எனக்கு நிச்சயமாக வேலை கிடைக்கும் என்று உத்திரவாதம் தரும் கட்டணம் குறைவான படிப்பு தேவைப்பட்டது..

புதிதாகத் தொடங்கிய காலேஜ்.. கம்ப்யுட்டர் சயின்ஸ்.. குறைவான கட்டணம்.. சேர்ந்தேன்.. மூன்றுவருடம் போனது ஒரு அரியர் மட்டுமே.. ஆனால் எனக்கு இரண்டாம் வருடமே தெரிந்துவிட்டது.. செம்மரியாடுபோல் நானும் எதற்கு கம்ப்யூட்டர் எடுத்தேன்…? அப்பாவை அந்த பவர்லூம் தறியின் சத்தத்திலிருந்து மீட்கவா? நாள் முழுக்க நின்றுகொண்டே தறி ஓட்டிக்கொண்டு இருப்பார்.. இரவில் என் தங்கை அவர் கால்களை பிடித்துவிடுவாள்.. நானும் சில நாட்களில்..

கிண்டி போகும் பஸ் வந்தது… ஏறினேன்.. டிக்கெட் எடுத்தேன்.. சீட் இல்லை.. நின்றுகொண்டேன்.. கடற்கரையின் உப்புக்காற்று பட்ட பிசுபிசுப்பு கொஞ்சம் எரிச்சலைத்தந்தது… பஸ் நகர காற்று தாராளமாய் வந்தது.. ஒரு பாட்டி கண்டக்டரிடம் டிக்கெட் விலை ஏறியதை தன்னிடம் சொல்லாமல் போனதற்கு சண்டைபோட்டுக்கொண்டு உள்ளே நடந்து வந்தாள்.. தடுமாறிக்கொண்டே உள்ளே வந்து பார்த்து இடமில்லாமல் போகவே யாரிடம் கேட்கலாம் என்று விழித்தாள்.. அங்கு உட்கார்ந்திருந்த பெண்களோ எதையுமே கவனிக்காததுபோல் வாட்சாப்பிலும், போன் பேசுவதிலும் கவனமாக இருந்தார்கள்.. அந்தப்பாட்டி கொஞ்சம் முன்னால் நகர்ந்து பஸ்ஸின் நடுவில் நின்ற என்னைக் கடந்து போக எத்தனித்த போது, எனக்கு நேராக உட்கார்ந்திருந்த பெண்

“பாட்டி இங்க உக்காருங்க” என்று எழுந்து இடமளித்தாள்..

நான் எழுந்த அந்தப்பெண் சங்கடப்படாமல் தாராளமாக நிற்க, இரண்டு சீட் முன்னால் நகர்ந்து போனேன்.. அவள் ஒரு சிறு மகிழ்ச்சியை தன் கண்களில் காட்டினாள். எனக்குக் கண்களால் பேசத்தெரியாது.. திரும்பி வெளியே பார்க்க ஆரம்பித்தேன்..

ஆனால் அந்த ஒரு நொடிப் பார்வை என் வேலையின்மை, பசி, குடும்பம் எல்லாவற்றையும் மறக்கடித்து மகிழ்ச்சியைத் தந்தது.. இன்னொரு முறை அந்தப் பார்வை எனக்கு வேண்டுமாக இருந்தது.. ஆனால் நான் அவள் பக்கம் திரும்பவில்லை… அடுத்த பஸ் ஸ்டாப்பில் காதில் ஹெட்போன், மாட்டிக்கொண்டு போன் பேசியவாறு ஏறினான்.. அடிடாஸ் டி ஷர்ட், ரிபோக் ஷு என்று…

“ இல்ல ப்ரோ.. இப்பதான் ப்ராக்டீஸ் முடிச்சுட்டு வரேன்.. யா யா……… “

“ஏம்பா போன் அப்பறம் பேசலாம் முதல்ல டிக்கெட் வாங்குப்பா” கண்டெக்டர் கத்தினார்..

“ மச்சி, வெயிட் “ என்று பின் பாக்கெட்டில் கை விட்டு ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்தான்.. என்னிடம் கொடுக்க நினைத்தவன், என்னைக் கடந்து நின்ற அவளைப்பார்த்து..அவளிடம் “எக்ஸ்க்யூஸ்மீ” என்றான்..

அவளும் திரும்பி பார்க்க.. “ ஒரு குரோம்பேட் “ என்றான் சிரிப்போடு..

அவள் என்னைப்பார்த்தாள்.. அதை வாங்கிக் கொடு என்பது போல்.. நானும் அவனிடம் காசை வாங்கி அவளிடம் கொடுத்தேன்..

அவள் கண்டக்டரிடம் டிக்கெட் கேட்க.. நூறு ரூபாயை முறைப்புடன் வாங்கினார் கண்டெக்டர்.. “ ரெண்டு ரூபா இருக்கான்னு கேளும்மா” என்றார்..

அவள் திரும்பும்போதே நான் அவனிடம் கேட்டேன்… அவன் “டூ ரூப்பியா…பாக்கறேன்..” என்று தேடினான்.. என்ன நினைத்தானோ தெரியவில்லை.. என்னைக்கடந்து அவள் பக்கத்தில் போய் நின்றுகொண்டான்… “சேஞ்ச் இல்லங்க” என்றான் அவளிடம்…

கண்டெக்டர்” என்கிட்டயும் சேஞ்ச் இல்ல அப்புறமா வாங்கிக்கோ “ என்று டிக்கெட்டை மட்டும் கொடுத்தார்..

அவன் அதை வாங்கிக் கொண்டான்…

அவளிடம் ஏதோ கேட்டான்.. எனக்கு சரியாக கேட்கவில்லை.. அவள் என்னைப்பார்த்தாள்….. நான் இவ்வளவு நேரம் அவளையே பார்த்துக்கொண்டு இருப்பது உரைத்தது… பார்வையை திருப்பிக்கொண்டேன்..

அவள் மெதுவாக அவனைக்கடந்து வந்து என் பக்கத்தில் நின்றாள்.. தன்னிச்சையாக என் கண்கள் அவளைப்பார்க்க.. அவளும் கன்னத்தில் விழுந்து கிடந்த முடியை ஒதுக்கிக்கொண்டு என்னை நிமிர்ந்து பார்த்தாள்.. மெதுவாக இருவரும் சிரித்துக்கொண்டோம்..

நாம் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் யாரோ ஒரு பெண்ணே நாளை மனைவியாக வரக்கூடும் என்று எத்தனையோ முறை சிந்தித்து இருக்கிறேன்.. இப்போது அது இவளாகக் கூட இருக்கலாம் என்று இதயம் சொன்னது.. இவள் மட்டும் என் மனைவியானால் இந்தப் பேருந்துப் பயணம் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.. அடச்சே.. கொஞ்சம் சுமாரான பெண்ணைப் பார்த்த இரண்டு நிமிடங்களில் அவளை மனைவியாக நினைக்கும் சராசரி இளைஞன் மனது… கொஞ்சம் அவள் மரியாதைக்காக அவள் சிரித்தது எவ்வளவு சிந்திக்கத் தோன்றுகிறது…?

“டிக்கெட் ப்ளீஸ்” என்று டிக்கெட் செக்கர் கேட்க… அவர் எப்போது உள்ளே வந்தார், பஸ் எங்கு நிற்கிறது என்று அப்போதுதான் சுயநினைவுக்கு வந்தேன்..

திரும்பி பார்க்க அவள் டிக்கெட்டை எடுத்து காட்டினாள்.. நானும் என் பாக்கெட்டில் இருந்த டிக்கெட்டை எடுத்….

டிக்கெட்டைக் காணவில்லை!!!!

ஐயோ…

பதட்டப்படாதே பேண்ட் பாக்கெட்டில் இருக்கும்.. பேண்ட் பாக்கெட்டில் கை விட்டுக்கொண்டே.. இல்லையே நான் டிக்கெட் வாங்கியதும் சட்டைபாக்கெட்டில் தானே வைத்தேன்?

எனக்கருகில் இருந்தவரிடம் டிக்கெட்டை வாங்கி பார்த்து விட்டு என்னிடம் நகர்ந்து

“ என்ன ராஜா டிக்கெட்ட காணாமா? “

“ஆ..மா சார்…” வியர்த்தது..

“நல்லா தேடு..”

“இல்ல சார் மேல் பாக்ட்லதா வெச்சேன்… காணோம்..” என்றபடி அவளைப் பார்த்தேன்…

அவள் மிக சாதாரண பார்வையால் என்னைப்பார்த்தாள்..

டிக்கெட் செக்கரும் திரும்பி அவளை ஒரு முறை பார்க்க அவள் பார்வையைத் திருப்பிக்கொண்டாள்…

செக்கர் என்னிடம் திரும்பி.. “எறங்கு ராஜா.. எறங்கி பொறுமையாத் தேடு.. “ என்று என் தோளில் கைவைத்துத் தள்ளினார்..

எனக்கு சட்டை வியர்வையால் நனைந்தே விட்டது.. “ சார் நிஜாமா நான் டிக்கெட் எடுத்தேன் சார்.. கிண்டிக்கு..”

“சரி எடுத்தா எங்க காமி”

“சார் எங்கேயோ விழுந்திருச்சு..”

“இந்தக் கத எல்லாம் வேண்டாம் எறங்கு முதல்ல..” என்று மேலும் தள்ளினார்..

“சார் கண்டெக்டர வேணும்னா கேளுங்க “

கீழே இறக்கப்பட்டேன்…

“ சார், நான் பொய் சொல்லல சார்.. “

பஸ் எடுக்க விசில் சத்தம் கேட்டது.. அவசரமாய் கண்களை மட்டும் சுழற்றி ஓரப்பார்வையில் அவளைப்பார்த்தேன்.. அவள் என்னைப் பார்க்கவே இல்லை தன் மொபைல் போனைக் கையில் எடுத்திருந்தாள்.. எனக்குத்தொண்டை அடைத்தது… அந்த ஹெட் போன் பையன் என்னைப்பர்துக்கொண்டே அவளிடம் ஏதோ சொன்னான்… பஸ் நகர்ந்துவிட்டது…

இப்போ அந்தப் பொண்ணா முக்கியம்? சே…

எவ்வளவு சொல்லியும் என் மொபைல் போனை பிடுங்கி வைத்துக்கொண்டனர்..

என்னிடம் இருப்பது வெறும் நான்கு ரூபாய்… என்ன செய்வது… மூச்சு வாய்க்கும் மூச்சுகுழாய்க்கும் இடையே தடுமாறியது…

தினேஷ்… தினேஷ்க்கு போன் பண்ணலாம்.. அவனுக்கு இன்னும் ரூம் வாடகை பாக்கி… ஐந்நூறு ரூபாய் கடன் வேறு…. ஆனால் வேறு வழியில்லை..

செக்கரிடம் போனை வாங்கி அவனுக்கு மிஸ்ஸுடு கால் கொடுத்தேன்.. திருப்பிக் கூப்பிடுவானா?…

நல்லவேளை கூப்பிட்டான்…

போனை திரும்ப அவரிடம் கொடுத்துவிட்டு பஸ் ஸ்டாப் பெஞ்சில் அமர்ந்தேன்.. அந்தப்பெண் என்ன நினைத்திருப்பாள்? அவளென்னவோ நினைக்கட்டும்… வீட்டில் அப்பாவுக்கு இது தெரிந்தால்… டிக்கெட் எடுக்கக்கூட காசில்லாம பையன் சுத்துறானே னு சங்கடப்படுவார்.. அம்மா… அம்மா என்ன நினைபாள்?….. காசு கைல இல்லாம எப்படி சாப்டியா ராசா ?”

“அம்மா, பசிக்குது மா “ கண்களில் நீர் திரண்டது…

“டிக்கெட்ட தொலைச்சிட்டியா…” பக்கத்தில் பெஞ்சில் உட்கார்ந்திருதவர் கேட்க.. கண்களைத் துடைத்துக்கொண்டேன்.. “ஆமாங்க”..

“ம்ம்ம்.. இப்போ என்ன செய்யப்போற..?”

“இருநூருவா கேட்டாங்க… என் பிரண்ட வர சொல்லிருக்கேன்…” என்றேன்..

“அப்பறம் என்ன…விடுப்பா” என்றார்…

பின்னால் ஒரு டிவி ஷோரூம்.. டிவியில் பரபரப்பாக விவாதம் நடந்துகொண்டு இருந்தது…

“இவங்க ஆட்சியில தான் தமிழ்நாடு முழுக்க பாலம் கட்டுறேன்னு கேளம்பனாங்க.. எண்ணூறு கோடி என்னாச்சுன்னு தெரியல..” ஒருவர்..

“பாலம் என்ன பாத்ரூம் கதவா? ரெண்டு நாள்ல முடிக்க….. அது இன்னும் வேலை பாக்கி இருக்கு… அதுக்குள்ள நீங்க ஆட்சிக்கு வந்தீங்க.. அந்த திட்டம் அப்படியே நின்னு போச்சு… கால்வாய் தோன்டறேன்னு நீங்களும் கோடிக்கணக்குல சுருட்டிட்டு போயிட்டீங்க..இப்போ கஜானா காலி.. வெல வாசியும் எங்கேயோ போயிருச்சு.. இப்போ மறுபடி பாலங்கள கட்ட பணம் இன்னும் தேவைப்படுது…” என்று மற்றொருவர்..

“அப்படிப்போடு.. ஒருத்தனுக்கு ஒருத்தன் சளைச்சவன் இல்ல…” என்றார் என்னருகே உட்கார்ந்திருந்த நபர்…

அது என்னவோ.. கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளை யாரும் கேட்பதில்லை… ஐந்து ரூபாய் டிக்கெட்டைத் தொலைத்தவனை, கொலைக் குற்றவாளிபோல் சட்டையைப் பிடித்து இழுத்து வருகிறார்கள்….

தினேஷ் வந்துவிட்டான்.. காசைக் கொடுத்து என் போனையும் வாங்கிக் கொடுத்தான்..

“ நீ எங்கடா இங்க வந்த.. ?”

“இல்லடா.. இன்டர்வியூ முடிஞ்சு… பீச்க்கு போனேன்…” நான் முடிக்கவில்லை..

“உனக்கு ரோம்பத்திமிரு டா… காலைல தா காசில்லன்னு அம்பது ரூபா வாங்குன? அத ஒழுங்கா செலவு பண்ணாம ஊர சுத்திட்டு திரியற… நீ எங்க உருப்படப்போற..”

உன்னைப்போல்..எனக்கும் பேக் டோரில் லட்ச ரூபாய் கொடுத்து வேலைக்கு சேர்த்துவிட ஆள் இருந்தால் நானும் உருப்பட்டிருப்பேன்..

நான் எதுவும் சொல்லவில்லை… திட்டிக்கொண்டேனும் உதவி செய்கிறான்…

“உன்னால அர மணிநேரம் பெர்மிஷன் போட்டு வந்திருக்கேன்…” என்று பைக்கை உதைத்தான்..

நடக்க ஆரம்பித்தேன்… பசி… இத்தனை நாளும் தோற்றுக்கொண்டே இருந்திருக்கிறேன்…

முட்டாள் தோற்றுதானே போனாய்… இன்னும் சாகவில்லையே… இன்னும் முயற்சி செய்… நிச்சயம் ஒருநாள் ஜெயிப்பாய்…. இனி இண்டெர்வியூ வேண்டாம்… உனக்கு எது வருமோ… உன் திறமை எதுவோ அதைக் கண்டுபிடி… அதையே தொடந்து செல்…

அதன் பின்.. பசித்திருந்தாலும் அவன் நடையில் ஒரு தெளிவு இருந்தது…

இப்போது வேந்தன் வாரப்பத்திரிகை ஒன்றில் ஓவியனாக தன் லட்சியத்தை வரைந்துகொண்டு இருக்கிறான்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *