விஸ்வரூபம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 7,692 
 

சரத்பெரேரா ஒரு முரட்டுத்தனமான ஆள். அவனது சுபாவம் மட்டுமல்ல, தோற்றமும் அப்படித்தான். மெலிந்த தேகமாயினும் நல்ல உயரமானவன். ஒருபோதுமே வாரிவிடப்படாத பரட்டைத் தலைமுடி. காய்ந்த முகம். குழி விழுந்த வாடிய கண்கள். பட்டன் பூட்டப்படாது நெஞ்சைத் திறந்து காட்டும் சேர்ட். கைகளைப் பின்நோக்கி அசைத்து நெஞ்சை முன் தள்ளுவது போன்ற நடை. ஆடாவடித்தனத்துக்கென்றே படைக்கப்பட்டவன்போல அவனது நடவடிக்கைகள் இருந்தன.

சரத்பெரேரா கட்டுநாயக்கா பிரதேசத்தைச் சேர்ந்தவன். விமான நிலையத்தில் வான் வைத்திருந்து ஹயர் ஓடியவன். குவைத்துக்கு பெல்ட் ஒப்பரேட்டராக வந்திருந்தான். அவனுக்கு அந்த வேலையில் முன் அனுபவமும் இல்லை.

வெளிநாட்டு வேலைகளுக்குப் போய் வருகிறவர்கள் விமான நிலையத்திற் சுமந்து வருகிற ரீவி, டெக் போன்ற உன்னதப் பொருட்களை அவன் தனது வானில் ஏற்றி இறக்கியிருக்கிறான். மத்தியகிகிழக்கு நாடுகளுக்கு ஹெளஸ் மெயிட் வேலைக்குப் போய் வருபவர்கள்கூட உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பொருட்களைக் கொண்டு வருகிறார்களே என அவனுக்கு ஆசை ஏற்பட்டிருக்கிறது. அதுதான் வெளிநாட்டுக்குப் போகும் ஆசையை அவனுக்குள் ஏற்படுத்தியது. வெளிநாடுகளுக்கு ஆட்களை எடுக்கும் உள்நாட்டு ஏஜன்ட்டுக்கு ஒரு தொகைப் பணத்தைக் கட்டிவிட்டு குவைத்துக்கு வந்து சேர்ந்திருந்தான். இந்த விஷயங்களையெல்லாம் அவன் என்னிடம் ஒப்புவித்தது ஒரு தவிர்க்கமுடியாத சந்தர்ப்பத்திற்தான்.

சரியான வேலை அனுபவம் இல்லாதவர்களைத் திரும்ப அனுப்பிவிடவேண்டுமென்பது கம்பனியின் விதிமுறை. நடத்தை சரியில்லாவிட்டாலும் திரும்ப அனுப்பிவிடலாம். வேலை முன் அனுபவம் உள்ளதாக ஏற்கனவே சில சேர்ட்டிபிக்கட்டுகளை சமர்ப்பித்திருக்கிறான் சரத்பெரேரா. ஆனால் முதன்முதலில் பெல்ட்டை இயக்குவதற்கு நேரடியாக விடப்பட்டபோது பிடிபட்டுப்போனான். அவனுக்கு அந்த விஷயத்தில் ஆனாவும் தெரியாது, ஆவன்னாவும் தெரியாது என்பதைப் பக்கத்தில் நின்ற என்ஜினியர் ஒருவன் கண்டுபடித்துவிட்டான். அவன் இங்கிலாந்துக்காரன். ‘வேலை செய்த முன் அனுபவம் இல்லையா…?” என அந்த என்ஜினியர் கோபத்துடன் கேட்டபோது இந்த முரட்டுத்தனமான ஆள் பயந்துவிட்டான். சரணடைந்து உள்ளதைச் சொல்லிவிட்டான். தொழிற்சாலை முகாமையாளர் பொப்கோலுக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது.

‘இது மோசமான ஏமாற்று வேலை…” என அவரும் கோபப்பட்டார். ‘இவனை இலங்கைக்கு அனுப்பிவிட்டு… அதற்குப் பதிலாக வேறு ஆளை எடுக்கலாம்…” எனக் கூறிவிட்டார். சரத்பெரேரா சோகத்தில் ஆழ்ந்துபோனான். இந்தச் சம்பவங்களின்போதெல்லாம் (மொழிபெயர்ப்பு செய்யும் காரணமாக) நான் பக்கத்தில் நின்றேன். எனக்குக் கவலையாக இருந்தது.

பின்னர் அவனைத் தனிமையிற் கூப்பிட்டு விசாரித்தேன். சரத் கிட்டத்தட்ட அழுகிற கட்டத்துக்கே அப்போது வந்துவிட்டான். தனது வானை விற்று அந்தப் பணத்தை ஏஜன்ட்டுக்குக் கட்டித்தான் இந்த வேலைக்கு வந்ததாகக் கூறினான். இனித் திரும்பப் போனால் ஏஜன்டிடம் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. தனது வாழ்க்கையே அஸ்த்தமித்துப்போகும் எனத் தெரிவித்தான். முரட்டுத்தனமான ஒருவன் என்முன்னே கலங்கிக்கொண்டு நிற்பதைக் கண்டு நான் உருகிப்போனேன். ‘ஒன்றுக்கும் கவலைப்படவேண்டாம்… நான் பார்த்துக்கொள்கிறேன்…” என ‘யாமிருக்கப் பயமேன்” ஸ்டைலிற் சொன்னேன்.

இத்தனைக்கும் பெல்ட் ஒப்பரேட்டர் என்பது அப்படியொன்றும் பாரதூரமான வேலையல்ல. அதற்குக் கல்வி ஞானமோ வேறு எவ்வித உடற்பலமோ தேவையுமில்லை. இதிலுள்ள சூட்சுமம் என்னவென்றால், ஒரே நேரத்தில் ஆறு லொறிகளுக்கு சீமெந்து ஏற்றும் வசதிகொண்ட பெல்ட் தொகுதியை இடைநிறுத்தல் இல்லாமல் தொடர்ச்சியாக இயக்கவேண்டும். (இப்படி தொடர்ச்சியாக ஓடினாற்தான் உற்பத்தி பாதிக்கப்படாமல் நாளொன்றுக்கு ஏழாயிரம் எண்ணாயிரம் தொன் சீமெந்து விநியோகிக்கக்கூடியதாயிருக்கும்.) பெல்ட்டில் ஓடிவரும் சீமெந்துப் பைகளை லொறிக்கு லொறி மாற்றுவதற்கான உருளை முறையிலான ‘கேற் கொன்வேயர்”களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பெல்ட் கொன்வேயர் தொகுதியின் மத்தியில் ஸ்விட்ச் வரிசைகளைக் கொண்ட ‘கொன்ற்றோல் பனல்” உள்ளது. இதில் நடு நாயகமாக நின்றுகொண்டு பெல்ட்களை இயக்குவதுதான் அந்தப் பணி. இந்த வேலையை சில நாட்கள் பயிற்சி கொடுத்து சரத்தைப் பழக்கியெடுத்துவிடலாம் என எனக்கு நம்பிக்கையிருந்தது.

ஆனால் ஏற்கனவே அவன்மேற் கோபம் கொண்டிருக்கும் பொப்கோலைச் சமாளிக்கவேண்டும். ‘சரத் பெரேராவைத் திருப்பி அனுப்பினால் ரொம்பக் கஷ்டப்படுவான்.. இங்கு வருவதற்காகத் தனது வாகனத்தையும் விற்றுவிட்டான்…” என அவரது இதயத்தின் மென்மையான பக்கத்தை மெல்லத் தொட்டேன். அது வேலை செய்தது. ‘இரண்டொரு நாட்களில் அவனைப் பழக்கியெடுப்பது எனது பொறுப்பு…” என அவருக்கு நம்பிக்கையூட்டினேன். அவர் அதற்கு ஒத்துக்கொண்டார்.

சரத்துக்கு இந்தத் தகவலைக் கூறியபோது, அவனது வாடிய கண்களில் ஒரு வெளிச்சம் பளிச்சிட்டது. ‘சீக்கிரம் பழகிவிடுவாயென அவருக்கு உறுதியளித்திருக்கிறேன்… எனது வார்த்தையைக் காப்பாற்றவேண்டும்…” எனக் கேட்டுக்கொண்டபோது சரத் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டான்.

விரைவில் சரத்பெரேரா ஒரு கை தேர்ந்த பெல்ட் ஒப்பரேட்டர் ஆகிவிட்டான். ஏனைய ஒப்பரேட்டர்களை விடத் திறமையாக வேலை செய்தான். வேலைகளில் சுறுசுறுப்பாயிருந்தாலும், அவனது வழமையான முரட்டு சுபாவத்திற்குக் குறைவில்லை. முப்பது நாற்பது வருடங்களாக ஒருவன், தான் வளர்ந்த சூழ்நிலையில் பழக்கப்பட்ட பழக்கத்தை மாற்றுவது கஷ்டம் அல்லது முடியாதுதான். எனவே அவனை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

குவார்ட்டேசிலும் மற்றவர்களுடன் சண்டை சச்சரவு என முறைப்பாடுகள் அடிக்கடி வரும். சரத்திற்கு என்னைவிட வயது சற்று அதிகமானாலும், எனது சொல்லுக்கு மறுகதை பேசமாட்டான். சற்று அடங்குவான் என்றும் சொல்லலாம். ஆனால் அது அந்த நேரத்துக்கு மட்டும்தான். பிறகு வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிடும்.

இலங்கையிலிருந்து சுமார் நூறுபேர் வரை இந்த புறஜெக்டிற்கு வந்திருந்தார்கள். இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து வந்தவர்கள். பலவித பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தவர்கள். சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், கிறிஸ்த்தவர்கள், பௌத்தர்கள், இந்துக்கள் எனப் பலவிதமான பிரிவுகளின் சங்கமம். ஊரிலே தங்களது நெஞ்சுக்கு நெருக்கமான உறவுகளைப் பிரிந்து வந்திருப்பவர்கள் இவர்கள். பிரிவாற்றாமை ஏக்கத்திலும் அந்தக் கவலைகளிலும் மூழ்கியிருப்பவர்கள். அவ்வித மன அழுத்தங்களால் வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும்போது சட்டெனக் கோபத்திற்கு ஆட்படக்கூடியவர்கள். புதிய நண்பர்களாச் சேர்ந்திருந்தாலும் சிறுசிறு பிரச்சினைகளுக்கே முரண்பட்டு முண்டிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் இருந்தன.

பிரச்சினைகள்… அல்லது சச்சரவு வேறு வேறு இனத்தையோ மதத்தையோ சார்ந்தவர்களுக்கிடையில் வந்துவிட்டதால், துவேஷத் தீ பக்கெனப் பற்றிக்கொள்ளும். ஒருவர் மற்றவரது இனத்தையோ மதத்தையோ இழுத்துத் தூஷிக்கும் அபாயமும் நேரும். இவர்களையெல்லாம் மனோநுட்பத்துடன் அணுகி சுமுக நிலையில் வைத்திருக்கவேண்டிய கைங்கரியத்தையும் செய்ய வேண்டியிருந்தது.

சரத்பெரேராவுக்கு ரசூலைப் பிடிக்காது. ரசூல் ‘ரெலி கிளார்க்” ஆக இங்கு வேலைக்கு வந்திருந்தான். கண்டியைச் சேர்ந்தவன். லொறிகளுக்குள் ஏற்றப்படும் சீமெந்துப் பைகளை எண்ணிக் கணக்கிடுவது இவன் வேலை. லொறியொன்றுக்கு ஐம்பது தொன் சீமெந்து ஏற்றப்பட வேண்டுமெனில், லொறியில் நிற்கும் ரெலி கிளார்க் பெல்ட் ஒப்பரேட்டருக்கு இத்தனை வரிசையில் இத்தனை பைகள் வீதம் போடப்படவேண்டும் எனக் கூறுவான். அதற்கு ஏதுவாக ஒப்பரேட்டர் பெல்ட்டை மூவ் பண்ணிக் கொடுக்கவேண்டும். இறுதி வரிசையில் பைகள் போடப்படும்போது, ரெலி கிளார்க் இன்னொருமுறை ஒப்பரேட்டருக்கு நினைவூட்டுவான். இதில் எங்காவது தவறு நிகழ்ந்துவிட்டால், ரெலி கிளார்க்குக்கும் பெல்ட் ஒப்பரேட்டருக்கும் இடையில் வாக்குவாதமும் வந்துவிடும்.

ஈரானிய லோடர்கள் சில சமயம் இரண்டொரு சீமெந்துப் பைகளை நெருக்கி அடுக்கி, மேலதிகமாகப் போட எத்தனிப்பார்கள். (அதற்கு லொறி சாரதிகளிடமிருந்து அவர்களுக்கு மறைமுகமான கொடுப்பனவு கிடைக்கும்.) அப்படி ஏதாவது நிகழ்ந்துவிட்டால் பெல்ட்டை நிறுத்தும்படி ரெலி கிளார்க் ஒப்பரேட்டரிடம் கத்துவான். (திரும்ப எண்ணவேண்டும்.) இது பெல்ட் ஒப்பரேட்டருக்கு கோபத்தை ஊட்டும். (எங்க பிடரிக்கையா கண்ணை வச்சிருந்தாய்…?) ரெலி கிளார்க்காக இருந்தவர்களுக்கு சரத்தை விட வயது குறைவு. அதிலும் சிலர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தனர். அவர்கள் தன்னை மதிக்கிறார்களில்லை என்பதும் சரத்தின் ஆதங்கம். பெல்ட்டை, ‘நிறுத்து.. ‘இயக்கு” என அவர்கள் கட்டளையிடுவதுபோலக் கத்துவது (அது தொழில் ரீதியாக தவிர்க்க முடியாததாக இருந்தாலும்) சரத்பெரேராவுக்குக் கிரகிக்க முடியாமலிருந்தது. இவர்களுக்கு சரியாகக் கணக்கெடுக்கத் தெரியாதமையாற்தான் அடிக்கடி பெல்ட்டை நிறுத்தவேண்டியிருக்கிறது என முறையிடுவான். நான் அதற்கு ஏதாவது சமாதானம் கூறினால், ‘தம்பிலாவுக்கு இடம் கொடுக்கக்கூடாது சேர்…” எனத் துவேஷம் கொட்டுவான்.

ரசூல் கொஞ்சம் வாய்த் துடுக்கானவன். சரிக்குச் சரி பேசுவான். விட்டுக்கொடுக்கமாட்டான். இதனால் சரத்துக்கும் ரசூலுக்குமிடையே வாக்குவாதம் உச்சக்கட்டத்தை அடைவதுமுண்டு.

இவர்களுக்கிடையேயான சச்சரவு மறைமுகமாக ஒருவித குரோதமாக வளர்ந்துகொண்டிருந்தது. வேலைநேரம் முடிந்தபின்னரும், குவார்ட்டேசிலும் இந்தப் பிரச்சினைகள் கதைக்கப்பட்டு சரத்திற்கு ஆதரவாக ஒரு குழு அவனுடனும், ரசூலுக்கு ஆதரவாகச் சிலர் இவனுடனும் சேர்ந்திருப்பது அறியவந்தது. இயன்றவரை அட்வைஸ் பண்ணி என்ஜினியர்களான நாங்கள் சுமுக நிலையைப் பேணிக்கொண்டிருந்தோம்.

சரத் பெருங்குடிமகன். ஆனால், குவைத்தில் குடிவகை எடுக்க முடியாது. எனினும் அரிசி, அப்பிள்துண்டுகள், சீனி, திராட்சைரசம் போன்ற திரவியங்களை தண்ணீரிற் கலந்து புளிக்கவைத்து ஒரு வகைக் குடிவகை தயாரிக்கும் முறையை சரத் கண்டு பிடித்திருந்தான். இது வெளித் தெரியவந்தால் பொலீஸ் கேசில்தான் போய் முடியும். இதுபற்றிய தகவல்களையும் ரசூல் வெளிப்படுத்துகிறான் எனும் சந்தேகமும் சரத்துக்கு இருந்தது.

சீமெந்து விநியோகம் நாள்முழுவதும் நடைபெறும். இரண்டு ஷிப்ட்களில் வேலை. காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணிவரை ஒரு ஷிப்ட். இரவிலிருந்து பகல்வரை மற்றது.

ஒரு நடுச்சாமம் இது நிகழ்ந்தது…

…அந்த ஷிப்டிற்குப் பொறுப்பான என்ஜினியராக நான் இருந்தேன். வேலை மும்முரமாகப் போய்க்கொண்டிருந்தது. வழக்கம்போல வேலைகளைக் கண்காணித்து ஒரு சுற்று வந்துகொண்டிருந்தேன். சீமெந்து பையிடும் பகுதிக்கு நான் வந்து நின்றபோது, சட்டென சகல இயந்திரங்களும் நின்றன. (அவசர நேரங்களில் நிறுத்தப்படுவதற்கென ஆங்காங்கே ‘எமஜன்சி ஸ்விச்”சுக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதை அழுத்தினால் ஒரேயடியாக எல்லா மெசின்களும் நின்றுவிடும்.) யன்னலூடு வெளியே பார்த்தேன். நிறுத்தப்பட்ட பெல்ட்களின் மேல் சீமெந்துப் பைகள் அப்படி அப்படியே ஓடாது கிடந்தன. சரத் பெல்ட்டுக்கு மேலாக ஏறி ஒரு லொறியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான். அந்த லொறியில் ரசூல் நின்று கொண்டிருந்தான். ஏதோ இழுபறி நடந்தது. (சரத்பெரேராதான் கொன்றோல் பனலிலுள்ள எமெர்ஜன்சி ஸ்விச்சை அழுத்தி மெசின்களை நிறுத்தியிருக்கிறான்.)

சீமெந்து பையிடும் பகுதியிலிருந்து சிறிபால யன்னலூடு எட்டிப் பார்த்துவிட்டு சட்டெனக் குனிந்து அவ்விடத்திலிருந்த ஒரு இரும்புக் கம்பியை எடுத்துக்கொண்டு ஓடினான். ‘வாங்கடா…!” என மற்றவர்களையும் அழைத்துச் சத்தமிட்டவாறு பெல்ட் கொன்வேயர் பகுதியை நோக்கி ஓடினான் சிறிபால. கையிற் கிடைத்த இரும்புகளையும் பொல்லுகளையும் தூக்கிக்கொண்டு இன்னும் சிலர் அவனோடு ஓடினார்கள். ரசூலைத் தொலைக்கப் போகிறார்கள் என்று தோன்றியது.

நானும் அவர்களுக்குப் பிறகால் ஓடினேன்.

‘கஹண்ட் எப்பா… கஹண்ட எப்பா… (அடிக்கவேண்டாம்… அடிக்கவேண்டாம்..)” எனக் கத்திக்கொண்டே ஓடினேன்.

யாரை நோக்கி யாருக்குச் சொல்லுகிறேனென்று புரியாமலே ஓடிக்கொண்டிருந்தேன்.

அடிபடும் இடத்தில் கூட்டமாகக் குழுமிக்கொண்டிருந்தார்கள். ஒருவருக்கொருவர் இழுபறி பட்டுக்கொண்டிருந்தார்கள். குழுவாகச் சேர்ந்து அடிபடுவதுபோலிருந்தது. உதை விழும் சத்தங்களும் கேட்டன. சரத் முரடன். கண்மண் தெரியாமல் அடிக்கக்கூடியவன். அவனை முதலிற் பிடித்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில், ஆட்களை விலத்திப் புகுந்துகொண்டு போனேன். சரத் கையையும் காலையும் வீசி வீசி விளாசிக்கொண்டிருந்தான்.

‘சரத்…!” என உச்சஸ்தாயியில் சத்தம் போட்டேன்.

‘அடிக்கவேண்டாம்… இந்தப் பக்கம் வா…!”

அப்போதுதான் கவனித்தேன்… அடி விழுந்தது ரசூலுக்கு அல்ல! ஈரானிய லோடர்களுக்கு!

அவர்களுக்கும் இவர்களுக்கும் (சரத், ரசூல் ஆகியோர்) இடையே சண்டை நடந்திருக்கிறது. சிலருக்கு முகங்களிற் காயம், இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. ஈரானிய லோடர்களின் சுப்பவைசருடன் பேசி குழப்பத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தேன்.

சரத்தைப் பார்க்கக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. ‘என்ன சரத் இது…? தேவையில்லாத சண்டை…?” என சத்தம் போட்டேன்.

‘இல்லை சேர்… அவங்கள் ரசூலுக்கு அடித்தாங்கள்… அதுதான் அவங்களுக்கு நான் போய் அடித்தேன்…!”

ஒருவாறு நிலைமையைச் சமாளித்து மீண்டும் சீமெந்து லோட் பண்ணும் வேலையைத் தொடங்கினோம். நான் அந்த இடத்தை விட்டு விலகாமல் (மீண்டும் ஒரு குழப்பம் ஏற்படாமற் தவிர்க்கும் முகமாக) சரத்பெரேராவுடன் நின்றுகொண்டேன். ஏதும் தடையின்றி வேலைகள் போய்க்கொண்டிந்தது.

என் மனதைக் குடைந்துகொண்டிருந்த கேள்வியை சரத்திடம் கேட்டேன்.

‘ஏன் சரத்…? ரசூல் கிட்டத்தட்ட உனது எதரிபோல… எந்நேரமும் பிடுங்குப்படுவீர்கள்… இப்போது எப்படி அவனுக்காக அவங்களுக்கு அடிக்கப் போனாய்…?”

அவன் சற்றும் தாமதியாமல் என்னிடம் பதிற் கேள்வி கேட்டான்.

‘அது எப்படி சேர்…? எங்கட நாட்டைச் சேர்ந்தவனுக்கு அவங்கள் அடிக்க… அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கேலுமா…?”

சரத்பெரேரா தோற்றத்தில் இங்குள்ள எல்லோரையும் விட உயரமானவன்தான்… இப்போது எனக்கு அவன் இன்னும் உயரமாகத் தோன்றினான்.

(மல்லிகை சஞ்சிகையிற் பிரசுரமானது – 2003)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *