விபத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தாள் ஓர் ஏழைக் கிழவி. அந்த வழியாக காரில் வந்துகொண்டு இருந்த அமைச்சர் ஆதிமூலம், சட்டென்று காரை நிறுத்தச்சொன்னார். கீழே இறங்கி, தன் அலைபேசியை எடுத்து போன் போட்டு ஆம்புலன்ஸை வரவழைத்தார். கூட இருந்து கிழவியை ஏற்றி அனுப்-பினார்.
உடன் வந்த கட்சி பிரமுகர் ஒருவர், அமைச்சரின் துரித நடவடிக்கைகளைத் தன் செல்போனில் பதிவு செய்துகொண்டு இருந்ததைக் கவனித்த அமைச்சர், “என்னய்யா பண்ணிட்டிருக்கீங்க? இது ஒரு மனிதாபிமான நடவடிக்கை. இதையெல்லாம் படம் பிடிச்சு விளம்பரம் பண்ணாதீங்க!” என்றார் கண்டிப்புடன்.
‘அடடா! என்ன மனுஷன்யா..! இந்தக் காலத்துல இப்படியும் ஒரு அரசியல்வாதியா!’ என வியந்துபோனார்கள் கூடியிருந்த ஜனங்கள்.
மறுநாள், நாளேடுகளில் இந்தச் செய்தி முக்கிய இடத்தைப் பிடித்தது. குறிப்பாக, ‘இதையெல்லாம் படம் பிடிச்சு விளம்பரம் பண்ணாதீங்க!’ என்று அமைச்சர் தன் கட்சிப் பிரமுகரைக் கண்டித்த விஷயம் மறக்காமல் சேர்க்கப்பட்டிருந்தது.
ஆதிமூலம் புன்னகைத்துக்கொண்டார். பின்னே… வெறுமே ஒரு கிழவிக்கு உதவி பண்ணினார் என்பதைவிட, அதை விளம்பரமாக்க வேண்டாம் என்று அவர் தடுத்ததுதானே மக்களிடம் அவருக்கு இன்னும் நற்பெயரைத் தேடித் தரும்?
– 10th அக்டோபர் 2007