கை விலங்குகளால் பூட்டப்பட்டது போல சிலர் ஊர் மத்தியில் நின்று கொண்டு இருந்தனர். அடக்கி ஆளும் கூட்ட ம் ஆந்தைகளென அலறிக்கொண்டு இருந்தனர். கண்களுக்குள் கதிரவன் உதிப்பது போல் காட்சி; நரம்புகள் துடித்தன; பற்கள் நறுநறுவென்றன; கால்கள் தளராமல் சிகரம் போல் இளமை அரும்ப நின்று கொண்டு இருந்தான் கந்தன்.
“கை கட்டி வாய் மூடும் கயவர்களுக்கு கால் செருப்பு கேடா” தீயவன் ஒருவனின் நாக்கு சொற்களை தீட்டிக் கொண்டிருந்தது. “கந்தை கட்டி திரிய வேண்டிய கூட்டம் நம் மந்தையில் நடப்பதா; தீண்டத்தகாதவன் உடலை தீட்டி விடுங்கடா” ஆண்டை இனத்தில் இன்னொருவன் சீறினான். பட்டமரம் பால்காட்சியளித்தனர் கந்தன் இன மக்கள்.
கந்தனின் உதடுகள் மெளனமாக இருக்க விரும்பவில்லை. அவன் கணக்களில் ஒளிந்து கொண்டிருந்த கதிரவன் பிரகாசிக்கத் தொடங்கியது.
“கால்களுக்கு பாதுகாப்பாக நான் செருப்பணிந்து சென்றது குற்றமா? தீண்டத்தகாதவன் என்று எங்களை எந்தத் தீயவன் சொன்னான். உயிர்களைப் படைத்தவன் இறைவன் என்றால் அவனா உங்களை உயர்ந்தவன் என்று சொன்னான்.
அப்படி இறைவன் சொல்லியிருந்தால் அவனை வணங்க எங்கள் கைகள் மறுக்கும் மனிதன் மனிதனை மதிக்காமல் மாடுகளா மதிக்கும். அவைகளுக்கு மிதிக்கத்தான் தெரியும். நீங்களும் அவைகள் எனில் மாளிகையும் மண்குடிசையும் எதற்கு? வாழ்வதற்கு கட்டுத்தறியும் கால்வாயுமே போதுமே! எங்களை தீண்டத்தகாதவன் என்று சொன்ன நீங்கள் தான் தீண்டத்தகாதவர்கள்”.
மேலும் “மனிதனுக்கு மனிதன் அடிமை; மன்னிக்க முடியாத கொடுமை. ஒருவனின் நல்ல தனியுடைமை மற்றொருவனால் பறிக்கப்படுவதா?”
பேச்சின் இடையில் ஆதிக்க இனத்தில் ஒருவன் “நாவை அடக்கு, சொல்வதை கேட்டு கையை மடக்கு” கை நீட்டி கர்ஜித்தான்.
ஒடுக்கப்பட்ட மக்கள் ஊமைகளாகவே காட்சியளித்தனர்.
“அடக்கி ஆள்வது உன் உரிமை என்றால் எதிர்ப்பது எங்கள் உரிமை. எனக்காக பேசவில்லை; பாவப்பட்டட மனித ஜென்மத்தில் பிறந்துவிட்டு பரிதாபத்தோடு நிற்கும் பாமரர்களுக்காக பேசுகிறேன். கோயிலுக்கு செல்ல தடை; டீக்கடையில் இரட்டை டம்ளர் முறை; கை கட்டி நிற்பது என்று எங்களுக்கு சட்டம் போடுவதற்கு நீங்கள் யார்?” ஊர் கூட்டத்தில் பேசினான்.
உதடுகள் ஓய்வதாக இல்லை. வார்த்தைகளை உதிர்த்தன. “உலகம் மாறிவிட்டது என்று நாம் நினைத்தாலும் பல ஊர்களில் இந்த நிலைதான் நீடிக்கிறது. பொங்கி எழுங்கள்! தடை விலங்ககளை தகர்த்து எறிந்துவிட்டு ஒற்றுமை நிலைக்கப் போராடுவோம்.” உரைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
ஊமை இன மக்கள் மனக்கட்டுக்களை அவிழ்த்துவிட்டு ‘சமத்துவப்போர்’ நடத்த ஆயத்தமானார்கள். மக்கள் அலை கடலென திரண்டனர். கந்தனைப் பின் தொடர்ந்தனர். மக்கள் சக்திக்கு முன் சிறிய ஆதிக்க சக்தி என்ன செய்ய முடியும்…
வீட்டுக்குள் ஏதோ உருட்டும் சத்தம் கேட்கவும் உறங்கிக்கொண்டு இருந்த கந்தன் விழித்தெழுந்தான். இதுவரை கண்டது கனவா? திகைத்துப் போனான். இரவும் விடியலுக்கு வழிவிட்டுக்கொண்டு இருந்தது. மெதுவாக வாசலைப் பார்த்தான். அவன் எதிரே நாய்கள் இரண்டு சண்டை போட்டுக்கொண்டு இருந்தன.
– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.