கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 9,315 
 
 

திங்கட் கிழமை காலை ஒன்பது மணி.

விஷயம் அதி வேகமாகப் பரவி அந்தச் சென்னை கிளை அலுவலகம் பரபரப்புடன் காணப் பட்டது.

பெண் ஊழியர்கள் தங்களுக்குள் கூடி கூடி பேசிக் கொண்டனர். ராமநாதன் அந்த மாதிரி செய்திருக்க மாட்டார்… அவர் அப்படிப்பட்டவரில்லை என்று தங்கள் மனதில் பட்டதை ரகசியமாக விவாதித்தனர்.

பரபரப்புக்கு காரணம் ராமநாதன் மேல் சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு.

‘கடந்த வெள்ளிக்கிழமை மாலை அலுவலகம் முடிந்து அனைவரும் சென்ற பிறகு ராமநாதன் ஜி.எம் மின் செக்ரட்டரி எமல்டாவின் கேபினுக்குள் சென்று அவளை முத்தமிட்டுவிட்டார் என்றும், உடனே எமல்டா தன்னை பாலியல் ரீதியாக துன்பறுத்திய ராமநாதனை வேலையை விட்டு தூக்க வேண்டும் என்று மும்பையிலுள்ள எம்.டி க்கு அன்று இரவே ஈ மெயில் அனுப்பிவிட்டாள் என்றும் இன்னும் இரண்டே தினங்களில் ராமநாதன் மேலுள்ள குற்றச் சாட்டு என்கொயரி கமிட்டி மூலமாக நிரூபிக்கப் பட்டால் அவர் வேலையை இழக்க நேரிடும்’ என்பதுதான் பரபரப்புக்கு காராணம்.

ஒன்பதரை மணிக்கு ராமநாதனுக்கு மும்பை ஹெச்.ஆரிலிருந்து மெயில் வந்தது.

அதில் எமல்டாவின் குற்றச் சாட்டுக்கு இரண்டு மணி நேரத்திற்குள் பதில் விளக்கம் அளிக்குமாறு கோரப்பட்டிருந்தது. அத்துடன் குற்றச்சாட்டு மெயிலும் இணைக்கப்பட்டு எம்.டி., ஜி.எம் மற்றும் சென்னை ஹெச்.ஆர் அமுதாவுக்கும் காப்பி மூலம் தெரியப் படுத்தப் பட்டது.

அமுதா மூலமாக விஷயம் வெளியே கசிந்து அலுவலகம் முழுவதும் பரபரப்பு மேலும் அதிகமானது. .

ராமநாதனுக்கு வயது 52. திருமணம் செய்துகொள்ளவில்லை. அதே கிளை அலுவலகத்தில் 25 வருட சர்வீஸ். அட்மினிஸ்ட்ரேஷன் ஹெட். எம்.டி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யார் சென்னை வந்தாலும் ராமனாதன் அவர்கள் வசதிகளை கவனித்துக் கொள்வார். அவரது 25 வருட உழைப்பை பாராட்டி சென்ற மாதம்தான் எம்.டியின் மனைவி சென்னை வந்திருந்தபோது ரூபாய் 25,000 பண முடிப்பு வழங்கி பாராட்டு நடத்தினார்கள்.

ராமநாதன் மிகுந்த கடவுள் பக்தியுள்ளவர். எப்பொழுதும் நெற்றியில் பட்டையாக வீபூதி இருக்கும். ஒவ்வொரு வெள்ளியன்றும் மாலை ஆறு மணிக்கு கிளம்பி கோவிலுக்கு தவறாமல் செல்பவர். உதவும் குணம் உள்ளவர். அலுவலகத்தை ஒரு குடும்பமாக நினைத்து தானே எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். எல்லோரையும் மதித்து பேசும் பண்பாளர். அந்த அலுவலகத்தில் எது வேண்டுமென்றாலும் ராமனாதனிடம்தான் கேட்டு தெரிந்து கொள்வார்கள். காலை எட்டு மணிக்கு அலுவலகம் வந்தால் இரவு எட்டு மணிக்குத்தான் வீடு திரும்புவார். ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. அவர் மீது அனைவருக்கும் அன்பான மரியாதை இருந்தது.

அப்பேர்ப்பட்ட ராமநாதன் மீது இப்போது பாலியல் குற்றச் சாட்டு.

எமல்டா ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஜி.எம் செகரெட்ரியாக வேலைக்கு சேர்ந்தவள். சின்ன சின்ன விஷயங்களையும் ஜி.எம் மிடம் போட்டுக் கொடுத்து அதிகாரம் செலுத்துபவள்.

மதிய உணவு இடைவெளியின்போது ரிசப்ஷனிஸ்ட் சாப்பிடப் போகும் நேரத்தில் மற்ற பெண்கள் அனைவரும் ஒவ்வொரு நாளுக்கும் ஒருத்தி என்று ரிசப்ஷனை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது ஏற்பாடு. அந்த மாற்று ஏற்பாட்டின்போது அவர்கள் தங்களுக்குள் தேவைக்கேற்ப மாறுதல்களை செய்து கொள்வார்கள். அதில் அடிக்கடி எமல்டா தலையிட்டு குறை கண்டுபிடித்து ஜி.எம் மிடம் வத்தி வைத்து ஊதி பெரிது பண்ணுவாள்.

அன்று ஒருநாள் மாலை நான்கு மணிக்கு அக்கவுண்ட்ஸ் கீதாவுக்கு வயிற்று வலி. ஆறு மாத கர்பிணி. ராமநாதன் உடனே தன் அலுவலகக் காரில் அவளை டிரைவருடன் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்த வலி காரணமாக கீதா வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்துக் கொண்டாள். மறுநாள் அதை எமல்டா பெரிதாக்கி, கீதா நான்கு மணிக்கே வீட்டுக்கு சென்று விட்டாள் என்று ஜி.எம்மிடம் சொல்லி கீதாவுக்கு மெமோ கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜி.எம் ராமநாதனைக் கூப்பிட்டு எச்சரித்து அனுப்பினார். எமல்டா அதில் ஒரு குரூர திருப்தியடைந்தாள்.

கீதா ராமநாதனிடம் மெமோவைக் காட்டி மூக்கைச் சிந்திக்கொண்டு நேரில் அழுத போது மற்ற பெண்களும் சேர்ந்துகொண்டு, “சார் நீங்கதான் எம்.டி.கிட்ட பேசி இதுக்கெல்லாம் ஒரு நல்ல முடிவு கட்டணும்” என்று கோரிக்கை வைத்தனர்.

ராமநாதன் பொறுமையுடன், “எல்லாம் பகவத் சங்கல்பம்… நம்ம வேலைய நாம் செய்வோம். எல்லாத்தையும் கடவுள் பார்த்துப்பார்” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.

இது மாதிரி பல சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறியதால் சமீப காலங்ககளாகவே எமல்டாவுக்கும் மற்ற பெண்களுக்கும் இடையே விரோதமும் வெறுப்பும் அதிகரித்துக் கொண்டே சென்றது.

ராமநாதனுக்கும் எமல்டாவை இப்படியே வளரவிட்டால் ஒரு நாள் தனக்கே வேட்டு வைத்துவிடுவாள் என்கிற பயம் அதிகரித்தது.

குடும்பம் மாதிரி நல்ல புரிதலுடன், ஒற்றுமையுடன் இயங்கிக் கொண்டிருந்த அலுவலகம், எமல்டாவின் வருகைக்குப் பிறகு பெரிதாகப் புகைய ஆரம்பித்தது.

பதினொரு மணிக்கு ராமநாதன் மும்பை ஹெச்.ஆருக்கு பதில் மெயில் அனுப்பி அதை எம்.டி., ஜி.எம். மற்றும் அமுதாவுக்கு காப்பி மூலம் தெரியப் படுத்தினார். அதில் –

‘தான் இந்த கம்பெனிக்காக இருபத்தைந்து வருடங்கள் உண்மையாக உழைத்து நேர்மையானவன் என்று பெயரெடுத்தவன் என்றும், கடந்த வெள்ளிக்கிழமை எப்போதும் போல் ஆறு மணிக்கே கோவிலுக்கு கிளம்பிச் சென்று விட்டதாகவும், தன்னுடைய ஐ.டி. கார்ட் அவுட் கோயிங் ஸ்வைப் டேட்டா மூலமாக உண்மையை அறிந்து கொள்ளலாம் என்றும், தவிர அலுவலகத்தில் எந்தப் பெண்ணிடமும் தன் வாழ்வியல் ஒழுக்கம் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் எனவும், தன் மீது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ளது எனவும், தன்னிடம் இந்த மாதிரி ஒரு விசாரணை நடப்பதே தனக்கு பெரிய அவமானம் என்றும்’ ஒரு தன்னிலை விளக்க மெயில் அனுப்பினார்.

நான்கு மணிக்கு மும்பை ஹெச்.ஆரிடமிருந்து பதில் வந்தது. அதில், மறுநாள் காலை பத்து மணிக்கு எம்.டி.யின் மனைவி சென்னை அலுவலகம் வருவதாகவும். நேரில் விசாரணை நடத்தி முடிவெடுக்கப்படுமெனவும், நேர்மையான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரும்படியும் அறிவுறுத்தப் பட்டிருந்தது.

மறுநாள் காலை. பத்து மணி.

எம்.டியின் மனைவி தனியறையில் அமர்ந்துகொண்டு முதலில் அமுதாவிடம் ரகசியமாக அரை மணி நேரம் பேசினாள். அடுத்து அமுதா முன்னிலையில், எமல்டா தவிர, மற்ற பெண்கள் விசாரிக்கப் பட்டனர். அதன் பிறகு, ராமநாதனின் ஸ்வைப் கார்ட் பெறப்பட்டு, வெள்ளிக் கிழமை டேட்டாவுடன் சோதனைக்கு உள்ளானது. கடைசியாக எமல்டா வரவழைக்கப் பட்டு ஒரு மணி நேரம் விசாரணை நடந்தது.

ராமநாதனின் இருபத்தைந்து வருட நேர்மையான உழைப்பு, அவரின் ஒழுக்கம் பற்றிய அலுவலகப் பெண்களின் நல்ல வார்த்தைகள், வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கே அவருடைய ஸ்வைப் கார்டு வெளியே செல்ல தேய்க்கப் பட்டிருந்த உண்மை, யாவும் சேர்ந்து ராமநாதன் நிரபராதி என முடிவு செய்யப் பட்டது.

மதியம் ஒரு மணிக்கு எமல்டா எம்.டி மனைவி முன்பு அமுதாவால் அழைக்கப் பட்டு டெர்மினேட் செய்யப் பட்டாள்.

மாலை நான்கு மணிக்கு அலுவலகத்தில் உள்ள அனைவரிடமும் எம்.டியின் மனைவி நீண்ட உரையாற்றினாள். அதில் உண்மை, நேர்மை, கடமை, ஒற்றுமை ஆகிய அனைத்தும் வலியுறுத்தப் பட்டன.

எமல்டா தூக்கி எறியப்பட்ட சந்தோஷத்தில் அலுவலக பெண்கள் மேடமுக்கு நன்றி சொன்னார்கள். அனைவரும் கலைந்து சென்றனர். மேடம் ப்ளைட் பிடித்து மும்பை செல்ல தயாரானாள்.

ராமநாதனிடம் அவரது ஐ.டி. கார்ட் அமுதாவால் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

அவர் ஒரு பெரிய நிம்மதிப் பெருமூச்சு விட்டார். தன் மனதிற்குள் வெள்ளிக்கிழமை நடந்த உண்மைகளை நினைத்துப் பார்த்தார்.

வெள்ளிக் கிழமை….

அன்று ஜி.எம் டூரில் இருந்தார். மாலை ஐந்தரை மணி. எமல்டா அவளது கேபினில் லாப்டாப்பில் எதையோ டைப் செய்து கொண்டிருந்தாள்.

சரியாக ஆறு மணி.

ராமநாதன் தன் கேபினைப் பூட்டிவிட்டு, அலுவலக மெயின் டோரை தன் ஐ.டி கார்டினால் ஸ்வைப் செய்துவிட்டு வெளியே சென்றார். செக்யூரிட்டி அவருக்கு சலாம் வைத்தான்.

ஆறு மணி நாற்பது நிமிடங்கள்…

மறுபடியும் அலுவலகம் வந்து செக்யூரிட்டியிடம் அவனுடைய ஏஜன்சி கார்டினால் மெயின் டோரை ஸ்வைப் செய்யச் சொல்லி உள்ளே சென்றார். அட்மினிஸ்ட்ரேஷன் ஹெட் என்பதால் அவர் சொன்னதை செக்யூரிட்டி மறுக்காது செய்தான்.

அலுவலகத்தை ஒரு ரவுண்டு சுற்றி வந்தார். அனைவரும் வெளியேறிவிட்டார்கள் என்பதை உறுதி செய்து கொண்டார்.

எமல்டா மட்டும் தன் கேபினில் வேலை செய்து கொண்டிருந்தாள்.

ஆறு மணி நாற்பத்தைந்து நிமிடங்கள்…

ராமநாதன் எமல்டாவின் கேபினுக்குள் சென்றார். இவரை சற்றும் எதிர்பார்க்காத எமல்டா, “என்ன மிஸ்டர் ராம்… இவ்வளவு தூரம்” என்றாள்.

“குடிக்க தண்ணீர் இருக்குமா?”

அவள் குனிந்து தன் டேபிள் டிராயரைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து நிமிர்ந்த போது, அவளது பின்னந்தலையைப் பற்றி தன் முகத்தருகே இழுத்து அவள் உதட்டில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்து விட்டார். அதிர்ச்சியில் உறைந்துபோன எமல்டா, கலவரமடைந்து, “ஓ ஜீசஸ்…வாட் இஸ் திஸ் ராம் ?” என்று கத்தினாள்.

ராமநாதன் அமைதியாக அங்கிருந்து வெளியேறினார்.

மெயின் டோரை அடைந்து செக்யூரிட்டியை மறுபடியும் கதவை திறக்கச் சொன்னார். வெளியே வந்து அவனிடம், ரொம்ப நாளாக அவன் கேட்டுக் கொண்டிருந்த தாம்பரம் கொடவுனுக்கு அவனை உடனே மாற்றி விட்டதாகவும், ஏழு மணிக்கு வேறு செக்யூரிட்டி வந்து அவனை ரிலீவ் பண்ணப் போவதாகவும் சொன்னபோது, வேறு செக்யூரிட்டி அங்கு வந்து விட்டான்.

ராமநாதன் தன் காரில் வீட்டிற்கு போகிற வழியில் செக்யூரிட்டியை இறக்கி விட்டுச் சென்றார்.

தான் எமல்டாவுக்கு கொடுத்த தண்டனை ரொம்ப அதிகம்தான் என்று நினைத்துக் கொண்டார். கூடவே, “நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவுமே தப்பில்லை” என்று நாயகன் படத்தில் கமல்ஹாசன் சொன்னதை நினைத்துக் கொண்டார்.

Print Friendly, PDF & Email

1 thought on “வாலி

  1. நோக்கம் போன்றே வழிமுறையும் சரியாக இருத்தல் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *