வாத்தியார் அழுதார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 9, 2021
பார்வையிட்டோர்: 4,006 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பள்ளிக்கூடம் விடுகிற நேரம். நாலாம் வகுப்புக்குக் கடைசிப்பாடம் வரைதல். முருகேசு உபாத்தியாயர் கரும்பலகையில் ஒரு பெரிய பூசினிக்காயின் படம் வரைந்திருந்தார். அதைப்பார்த்து மாணவர்கள் கொப்பிகளில் வரைந்து கொண்டிருந்தார்கள்.

சுந்தரம் அந்த வகுப்பிலேயே முதலாம் பிள்ளை. அவனுடைய ‘ஆட்டுப்புழுக்கைப்’ பென்சிலாலே ஒருமாதிரி பூசினிக்காய்க்கு உருவம் போட்டு விட்டான். அதன் ஒரு பக்கம், மறுபக்கத்திலும் பார்க்கக் கொஞ்சம் ‘வண்டி’ வைத்துவிட்டாற் போலிருதது. அழித்துக் கீறலாமென்றால் அவனிடம் றப்பர் இல்லை. பக்கத்திலிருந்த ‘தாமோரி’யிடம் இரவல் கேட்டான். தாமோரி, தன்னுடைய பெரிய ‘ஆர்ட்டிஸ்ற் றோய்ங்’ கொப்பியிலே புத்தம்புதிய வீனஸ் பென்சிலால், பூசினிக்காயென்று நினைத்துக் கொண்டு பனங்காய் மாதிரி ஏதோ ஒரு உருவம் போட்டுக் கொண்டிருந்தான். சுந்தரம் வடிவாகக் கீறியிருப்பதைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு எரிச்சலாக இருந்தது. ஒரு பக்கம் கொஞ்சம் வண்டியாக இருப்பதையும் சுந்தரம் அழித்துத் திருத்துவதை அவன் பொறுப்பானா? “போடா! என்னுடைய றப்பர் தேய்ஞ்சுபோம்; நான் தரமாட்டேன்” என்றான்.

சுந்தரம் விரலிலே சாடையாக எச்சியைத் தொட்டு பிழையான கோட்டை அழிக்க முயன்றான். இதுகூடப் பொறுக்கவில்லை தாமோரிக்கு. டக்கென்று எழுந்து, “வாத்தியார்!” என்று ஒரு பெரிய சத்தம் போட்டான்.

மத்தியான இலவச போசனத்தை அரசாங்கத்தார் நிறுத்தப் போவதைப் பற்றிப் பத்திரிகையிலே வாசித்துக் கொண்டிருந்த உபாத்தியாயர் தாமோரி போட்ட சத்தத்தில் நிமிர்ந்து “என்னது?” என்றார்.

“வாத்தியார், இங்கே சுந்தரம்……. எசிலைத் தொட்டுப் படத்தை அழிக்கிறான்!”

முருகேசு உபாத்தியாயர் அந்த ஊர் மனுசர்தான். அவருக்குப் பணக்கார வீட்டுப் பிள்ளையான தாமோரியையும் தெரியும்;தந்தையை இழந்தவுடன் ஏழைப் பிள்ளையாகிவிட்ட சுந்தரத்தையும் தெரியும். அதோடு இருவரின் குணத்தையும் நன்றாக அறிவார்.

“இங்கே வா சுந்தரம்!” என்றார்.

படபடக்கும் நெஞ்சோடும், அதைப் பிரதிபலிக்கும் முகத்தோடும், இயற்கையாகவே மெலிந்த உடம்போடும் சுந்தரம் வந்தான்.

“நீ எச்சில் தொட்டு அழித்தாயா?”

சுந்தரம் பதில் சொல்லுமுன்பே தாமோரி எழும்பி, “நான் பார்த்தேன் வாத்தியார்!” என்றான்.

“நீ இரடா அங்கே! உன்னை யாரடா கூப்பிட்டது?” என்று விழித்துப்பார்த்த உபாத்தியாயரின் கண்ணில் பொறி பறந்தது! அதைப் பார்த்ததும் சுந்தரத்தின் உடம்பு பதறத் தொடங்கிவிட்டது.

ஆனால் திரும்பிச் சுந்தரத்தைப் பார்த்த உபாத்தியாயரின் முகத்தில் கருணை தவழ்தது. “இங்கே வா, சுந்தரம்” என்று அவாஇப் பக்கத்தில் கூப்பிட்டு முதுகில் லேசாகத் தட்டினார். “நீ எச்சில் போட்டாயா?” என்றார்.

“என்னிடம் றப்பர் இல்லை வாத்தியார்; அம்மாவிடம் காசும் இல்லை!” என்ற சுந்தரத்தின் கண்களில் நீர் ந்றைந்து விட்டது.

“றப்பர் இல்லாவிட்டால் எச்சில் போடக்கூடாது…” என்றார் உபாத்தியாயர். ஆனால் வேறு என்ன செய்யச் சொல்லலாம் என்று யோசித்தவருக்கு ஒரு யோசனையும் ஓடவில்லை. குனிந்து பார்த்தவர் சுந்தரத்தினுடைய கால்சட்டைப் பையுக்குள்ளே என்னவோ மொத்தமாகத் தள்ளிக்கொண்டு கிடப்பதைக் கவனித்தார்; “கால்சட்டைப் பையுக்குள்ளே என்ன வைத்திருக்கிறாய்?”

சுந்தரம் பரிதாபமாக உபாத்தியாயரைப் பார்த்தான். அந்தப் பார்வை அவரை என்னவோ செய்தது. “ஏன் பயப்படுகிறாய்? நீ நல்ல பையன்; பிழையான காரியம் செய்ய மாட்டாய். பயப்படாமல் சொல்லு!” என்றார்.

சுந்தரம் அப்போதும் பதில் சொல்லவில்லை. தலையைக் குனிந்தான். பொல பொலவென்று நாலு சொட்டுக் கண்ணீர் அவன் காலடியில் விழுந்தது. உபாத்தியாயர் அவனை இன்னும் கிட்ட இழுத்து அவன் முதுகைத் தடவிக்கொடுத்து “அழாதே சுந்தரம், அதற்குள்ளே என்ன, புத்தகமா?” என்றார்.

சுந்தரம் இல்லையென்று தலையசைத்தான். பிறகு துடித்துக் கொண்டிருந்த உதடுகளைக் கஷ்டத்துடன் திறந்து மெதுவாக, “வாத்தியார்…. அது… அது… கொஞ்சப் பாண்!” என்றான்.

“ஏன், நீ சாப்பிடவில்லையா?…. பசிக்கவில்லையா?”

“கூப்பன் அரிசி விலை கூடிப்போச்சென்று அம்மா அரிசி வாங்கவில்லை. வீட்டிலே இருக்கிற தங்கச்சிக்கு சாப்பிடக் கொடுக்கத்தான் அதை வைத்திருக்கிறேன்….”

‘நீ போ சுந்தரம்’ என்று உபாத்தியாயர் வாயால் சொல்லவில்லை; அவரால் சொல்ல முடியவில்லை. ‘அண்ணை பள்ளிக்கூடத்தால் வரும்போது பாண் கொண்டுவருவார் என்று, பசியோடு வழி பார்த்திருக்கும் அந்த மூன்று வயதுக் குழந்தையின் வயிறுமல்லவா இனிமேல் துடிக்கப்போகிறது!’ சுந்தரத்தைப் போகும்படி தலையசைத்து விட்டு, உபாத்தியாயர் சால்வைத் தலைப்பினால் தமது கண்களை ஒற்றிக்கொண்டார்.

சுந்தரம்! ….. உன்னைப்போல எத்தனை சுந்தரங்கள்!

– ஆனந்தன், கயமை மயக்கம், முதற் பதிப்பு: 1960, வரதர் வெளியீடு, யாழ்ப்பாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *