(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மிகப்பெரும் கோயில்களுக்குச் செல்லும்பொழுதெல்லாம் ஏற்படும் ஒருவிதமான சிலிர்ப்பு, இந்த நீண்ட நெடிய வரிசையில் வாடிகன் நகரம் / நாட்டிற்குள் நுழைய நிற்கும்பொழுதும் ஏற்பட்டது. சிலிர்ப்பிற்கு காரணம் பக்தியல்ல, கடவுளின் பெயரால் அமைக்கப்பட்ட எந்த ஓர் இடமும், அதிகார மையத்தின் மற்றொரு வடிவம் தான். வரலாற்றின் நீட்சிகளையும் மிச்சங்களையும் கடக்கும்பொழுது சிலிர்ப்பு ஏற்படுவது இயற்கைதானே!!!
சிறுவயதில், வாடிகன் தபால்தலைக்காக 20, வெவ்வேறு நாட்டுத் தபால்தலைகளை பரிமாற்றம் செய்த்தில் இருந்து வாடிகன் மேல் ஈர்ப்பு, தொடர்ந்து கத்தோலிக்கப் பள்ளியில் படித்ததால், முதலில் இறை சார்ந்த அபிமானமும், பின்னர் அதிகாரம் சார்ந்த அபிமானமும், தொடர்ந்து ரோமப் பேரரசின் எச்சங்களைப் பாதுகாத்து வருவதால் தொன்மை சார்ந்த அபிமானமும் தொடர்கின்றது.
நாட்டிற்குள் நாடு என்பதைக்காட்டிலும், நகரத்திற்குள் நாடு என்பதே சரி, பொடிநடையாக நடந்து ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு கடப்பது என்பது சுவாரசியமானதுதான். உள் நுழைவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. வரிசையில் எனக்கு முன்னால் சில அமெரிக்க மக்கள், அதற்கடுத்தாற்போல ஒரு முஸ்லீம், தாடி, உடை மத்தியக் கிழக்கு முஸ்லீம் எனச் சொல்லியது. எனக்கு முன்னிருந்தவர்களும் பின்னிருந்தவர்களும் அவரை ஒரு கருப்பாட்டைப் போலவே பார்த்துக் கொண்டிருக்க, நான் அரைக் கால்சட்டை, மெலிதான மேலாடை அணிந்து இருந்த அமெரிக்கப் பெண்களை ரசித்துக் கொண்டிருந்தேன். அந்த முஸ்லீம் மனிதருக்கு ஒருத் தயக்கம் இருந்திருக்கும் போல, மெல்ல பின் நகர்ந்து, சினேகமாக சிரித்த என்னருகில் வந்து நின்று கொண்டார்.
எல்லோரையும் அனுமதிக்கும் இந்த பாங்கிற்காகவே எனக்கு கிறித்தவ புனிதத் தலங்களை எனக்குப்பிடிக்கும். ஓரளவிற்கு சமத்துவம் நிலவும் தமிழ்நாட்டில் கூட இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புப் பலகைகளைப் பார்த்து நொந்ததுண்டு.
ONLY HINDUS ARE ALLOWED-BEYOND THIS LIMIT
இந்துக்கள் மட்டும் இதற்கு அப்பால் செல்லலாம்.
நிர்வாக அதிகாரி
“மெக்கா, மதீனாவிற்கு ஏனையவர்களை விட மாட்டார்கள், இவர்கள் மட்டும் ஏன் இங்கு வருகிறார்கள்” பின்னால் இருந்த சிலப் பழமைவாதிகள் இத்தாலிய மொழியில் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். ஏறத்தாழ இதையொட்டி என் மனதிலும் ஒரு கேள்வி இருந்தது. கடவுளுக்கு முன்னர் அனைவரும் சமம் என்பவர், அந்தந்த மதம் சார்ந்தால் மட்டுமே அனுமதிப்பதேன்!!!
எனக்கு முன்னால் இருந்த முஸ்லீம் துருக்கி நாட்டவராம். அவர் ஆபிராகமிய மதங்கள் பற்றிய ஆராய்ச்சிப்படிப்பைப் படித்துவருகின்றாராம். வரிசை மெல்ல பாதுகாப்பு பரிசோதனை வளையத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. சமீபத்தில் வாடிகன், துருக்கிய ஆட்டோமான் பேரரசு சம்பந்தப்பட்ட பழமையான குறிப்புகளைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளிக்கொண்டுவந்தது. துருக்கிய ஆட்டோமான் பேரரசர்களின் பெருந்தன்மைதான் இன்னும் வாடிகனை நிலைகுலையாமல் வைத்திருக்கக் காரணம் என்று எங்கேயோப் படித்து இருக்கின்றேன்.
முன்னால் இருந்த அரைக் கால் சட்டை கவர்ச்சி அமெரிக்கக் கும்பலை, புன்னகையுடன் வரவேற்று பாதுகாப்பு அதிகாரி எந்த தடவல் சோதனைகளையும் செய்யாமல் இடது புறம் நுழைவாயிலின் வழியாக ஆலயத்திற்கு செல்லுமாறு கைக்காட்டினார். அடுத்து துருக்கியரை நிறுத்தி, முடிந்தவரை தடவல் சோதனை நடைபெற்றது. அவர்களின் சந்தேகம் தீரும் வரையில் சோதனைக்குட்படுத்தப்பட்டு பின்னர் உள்ளே நுழைய அனுமதிகப்பட்டார்.
எனக்குப் பின்னிருந்த இத்தாலியர்கள் அவைக் குறிப்புகளுக்கு ஒவ்வாத வகையில் இஸ்லாமியர்களைப் பற்றிய தங்களுக்கான கருத்துக்களைக் கூறிக்கொண்டிருந்தனர். இணையாக இருந்த அடுத்தடுத்த பாதுகாப்பு சோதனைத் தளங்களில் இத்தாலியர்கள், வெள்ளைக்காரர்கள் எந்தவிதமான தடவல் சோதனைகளுக்கும் உட்படுத்தப்படாமல் உள்ளே அனுப்பப்பட்டனர். அடுத்தது நான், மாநிறத்திற்கும் சற்று குறைவான எனக்கும், தடவல் சோதனை இருந்தது, ஆனால் கடமைக்கென, கையை மேலேத்தூக்கு அகட்டு என நடந்து முடிந்த பின்னர் அந்தத் துருக்கிய முஸ்லீமைக் கண்கள் தேடியது. வலதுபுறம் இருந்த வாயிலின் வழியாக வேகமாக வாடிகனை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்.
– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு: http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.