வயதுக்கோளாறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2022
பார்வையிட்டோர்: 2,506 
 

(2005 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“மதன்! நீ மட்டும் நல்ல பிள்ளை என்ற பெயர் எடுக்கவா பார்க்கிறாய். நாம் எல்லோரும் நண்பர்கள் என்றால், நீயும் கொஞ்சம் எடுத்தால் தானே நாகரிகமாய் இருக்கும்” என்றாள் சுமன்.

“சுமன்! நான் இப்ப உங்களை எல்லாம் விட்டுப் பிரிந்திருந்தால் தானே நீர் இப்படிச் சொல்லலேலும். நூறுபேரில் தொண்ணூற்றி ஒன்பது பேர் லிக்கர் எடுப்பவர்களாக இருக்கலாம். ஒருவனாவது எடுக்காமல் இருந்தால்தானே சரியான உண்மைகள் தேவையான நேரத்தில் தெரியவரும்.

அவ்வாறு மிஞ்சும் அந்த ஒருவரில் இருந்து இன்னுமொருவர் உருவானால் அதுதானே உண்மையான சந்தோசம். அப்படியும் இல்லாமல் அந்த ஒருவரையும் வளைத்துப் போடுவதால் நூறு வீதம் எதிர் விளைவல்லவா கிடைக்கும். அதை உலகம் தாங்குமா?” மதன் மேலும் கூறிக்கொண்டே போனான்.

“நாம் தொடர்ந்தும் நண்பர்களாக இருப்பதென்றால் இனிமேல் யாரும் என்னை வற்புறுத்தக்கூடாது” என மதன் சற்றுக்காரமாகவே கூறினான்.

“சில நொடி அமைதியின் பின் தொடர்ந்தான். நல்லா யோசித்துப்பார் சுமன் முதலாம் வகுப்பில் நாற்பத்தெட்டுப் பேர் வகுப்பில் நெருக்கி நெருக்கி வியர்க்க வியர்க்க கொப்பிகளைக் கிழித்து தோணிசெய்து ஓடையில் விட்டோம். ஐந்தாம் வகுப்பில் புலமைப் பரிசில் பரீட்சை எடுத்த களைப்பில் கொஞ்சநாள் படிப்பை நிறுத்தி விளையாடினோம். ஆனால் ஆறாம் வகுப்பில் சிலர் போய்விட்டனர். சிலர் வந்து சேர்ந்தனர். பிறகு ஜீ.சி.ஈ.ஓ.எல் எல்லோருமா எடுத்தோம். அந்த பிரிவுகளுக்கெல்லாம் லிக்கரா காரணம்” என்று நிறுத்தினான்.

“இவ்வளவு நேரமும் நீ சொன்னதெல்லாம் சரி, பாம்பு தின்னும் ஊரில் நடுத்துண்டு நமக்கு என்று சொன்னதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் மதன்” என்றான் சுமன்.

“இப்ப நான் நடுத்துண்டுதான் எடுக்கின்றேன்” என்று சொல்லி அங்கிருந்த மீன் பொரியலின் பெரிய துண்டை எடுத்தான் மதன்.

“எல்லாம் சரி சுமன், இப்ப நான் கேட்கிறதுல நியாயம் இருக்கா இல்லையா என்றுபாரு, இப்ப நாம் ஆறுபேர் இருக்கிறம் இதில் ஐந்து பேருக்கு மட்டும் கேள் பிரண்ட்ஸ் இருக்கு, ஏன் உனக்கு மட்டும் இல்லை. என்று ஒரு கேள்வியைக் கேட்டான் மதன்.

“அது… அது வந்து” என இழுத்தான் சுமன்…

“இப்போ, நீ செய்வதிலும் ஒரு நியாயம் இருக்கும் என்றுதானே நீ நினைக்கிறாய், இப்படித்தான் எல்லோரும் தாங்கள் சொல்லுவதும் செய்வதும்தான் சரி, மற்றவர்கள் எப்படிப் போனாலும் பரவாயில்லை . அமெரிக்காவை மட்டும் எல்லோரும் திட்டுகிறார்கள். கேள்வி கேட்பவர்கள் யாருமே எவருக்கும் விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை.

ஏன் சுமன் தினமும் குடிப்பவர்கள் ஏனையவர்களையும் தங்களுடைய வலையில் வீழ்த்துவதில் கவனமாக இருக்கின்றனர். நாங்கள் மட்டுமா குடிக்கிறோம். இங்கு எல்லோரும்தானே குடிக்கிறோம். எனக் கூறி தங்களுடைய கட்சியை நிலைநாட்டுவதில் தினக்குடிகாரனே சிலந்தி வலை பின்னும்போது எவ்வாறு இவர்களால் அமெரிக்காவை குற்றம் சாட்டமுடியும்.

ஏன் நீ கூடப் பிரகாசிடம் நீ ஏன் இன்னும் லவ் பண்ணத் தொடங்கவில்லை என்பதற்காக விளக்கம் சொன்னாயே” என்றவனை இடை மறித்து “என்ன! என்ன! சொன்னான்” என சுமன் கேட்டான்.

“ஆத்திரப்படாத சுமன்” லவ் பண்ணி யார் யாரோட கதைத்தாலும் கோவம் வரும். அடிக்கடி விசாரணையும் சிணுங்கலும், பெரிய அவஸ்த்தை . லவ் பண்ணாட்டா எல்லோரும் ஓடி வந்து கதைப்பார்கள் எந்தக் கவலையும் இல்லை . என்று அன்று நீ பிரகாசிடம் கூறியது எனக்கு நன்றாகவே கேட்டது” என்று கூறிய மதன் மேலும் ஏதும் கதைத்து விடுவானோ என்று “போதும்டாசாமி’ எனச் சுமன் வாலைச் சுருட்டிக்கொண்டான். –

கொண்டு வந்த போத்தல் முடியும் தறுவாயில் மீண்டும் சுமன் “மதன் அப்போதைய கதை வேற இது வேற சீன், நம்மட காந்தி அன்ரி ஏன் அங்கிள தூரத்தி விட்டவ? அதில் ஏதும் நியாயம் இருக்குமோ” எனக் கேட்க மதன் ஆத்திரத்தில்

“யாருடைய கதையை யாரிடம் கேட்பது என்பதற்கு ஒரு முறை இருக்கின்றது. நாம் யாருடைய காசில் படிக்கிறோம். அம்மா அப்பா, அல்லாட்டி வெளியில் மாடாய் உழைக்கும் சகோதரர்கள், அல்லது அரசாங்கம, இவற்றின் ஆதரவில் தான் படிக்கிறோம். அப்படி இருக்கும்போதே நாம் பொறுப்பில்லாமல் எப்படித்திரிகிறோம். நமக்கே இவ்வளவு திமிர் என்றால், அன்ரி அவவாகக் கஷ்டப்பட்டு உழைச்ச காசைக் கரைப்பதற்கு என்றே அவவுடைய பென்சன் காலத்திலே மட்டும் வந்து உறவு கொண்டாட வந்த அங்கிளை விட அவ நேசிக்கும் அந்த இரு நாய்களும் எவ்வளவோ மேல்.

அதுகளுக்கு பிடிச்ச மீன் வாங்கி வந்து மீன் முள்ளு தெரிந்து சோற்றோடு பிசைந்து அவற்றிக்கு தீத்திவிடுறா என்றால் அது பெரிய அதிசயம் ஒன்று இல்லை , ஏன் நேற்றைய சூரியன் எப் எம் இல். வெளிநாட்டில் ஒரு பெண் பல லட்சங்களை வங்கியில் கொள்ளை அடிச்சு தங்களுடைய பூனைக்கு வைத்தியம் பார்த்த செய்தியை நீ கேட்கலையா?

சுமன் இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கிற அதே நேரத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பைத்தியங்களாகவும் இருக்கின்றனர்.

பணம், பெண், பொன், நிலம், விளையாட்டு, கடவுள், கலை, ஆட்சி, அதிகாரம், கௌரவம் என ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான இலட்சியப் பைத்தியங்களாக உள்ளனர். அதில் நீயொரு பைத்தியம், நான் ஒரு பைத்தியம், அன்ரி ஒரு பைத்தியம் அவ்வளவுதான்” என்றான் மதன்

“சரி சரி மேடைப்பேச்சு பேசிப் பழக்க எங்களையெல்லாம் கூட்டிவந்தமாதிரித் தான் எனக்குப் படுகிறது” என்று கூறிய பிரகாஸ் “லவ்சிப்’ என வெறும் கிளாசைக் குடித்தான். –

எல்லோரும் எழுந்து சென்றாலும் மனங்களில் கோடுகள் கீறல்கள் பதிந்து விட்டன என்பது என்னவோ உண்மையாகப் போச்சு.

தினமும் கூடி வம்பழப்பது, முடிந்தால் காசு சேர்த்துக் குடிப்பது அவர்கள் வழக்கம். லவ் பற்றிக் கதைப்பதனால் மதன் தலைமையில் குழு இயங்கும். குடி என்றால் சுமன் தலைமை தாங்குவான்.

நியாயப்படுத்துவதில் எல்லோருமே வல்லவர்கள்.

சில நாட்களாகக் குடிக்கக் காசு கிடைக்கவில்லை. சுமனுடைய ஆலோசனைப்படி அன்ரியின் வீட்டை நோக்கி ஐவர் சென்றார் அன்ரி அவசரமாக வெளியில் போக ஆயத்தமாவதைக் கண்டு ஒளிந்து கொண்டனர்.

இரு நாய்களையும் மடக்கிக் கொண்டனர்.

செல் போனில் சிறு மிரட்டல் விட்டனர். அன்ரி பதறி அடித்துக்கொண்டு பயணத்தையும் பாதியில் நிறுத்தி விட்டு ஓடி வந்தார்.

அன்ரியை வரவேற்ற சுமன் குழு அன்ரி அன்ரி, உங்கட நாய்களைக் கடத்திக்கொண்டுபோகப் பார்த்தனர். நல்லவேளை நாங்கள் வந்துவிட்டோம்” என்று கூறி பரிசாக ஐநூறு ரூபாய் பெற்றுக்கொண்டனர்.

அடுத்தநாள் அன்ரியிடம் வந்தவர்கள் “அன்ரி அன்ரி உங்கட அந்த வீட்டில இருந்தவங்க போன வாரம் போய்விட்டாங்க தானே, புது ஆட்கள் வரும் வரைக்கும் நாங்கள் அதில் நின்று சோதனைக்கு படிக்கிறம் அன்ரி, என்று அன்ரியின் சாறியை ஒரு ஆள், நாடியை ஒருஆள் என்று தொட்டுத் தொட்டு ஐஸ்வைத்து மடக்கி விட்டார்கள்.

மதனுக்கு இவை பிடிக்கவில்லைதான், என்றாலும் அவனுகள் ஐந்துபேர் அன்ரியை ஏமாற்ற இருப்பதை அவன் அன்ரியிடம் சொல்ல விரும்பியும் சொல்லவில்லை. அன்ரி, யாரையாவதும் நம்பிவிட்டால் அவரை ஒன்றும் செய்ய முடியாது என்பது அவனுக்குத் தெரியும்.

இப்போது அன்ரியின் அடுத்த வீடு அமர்க்களப்பட்டது. “இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்” எனும் கவிஞரின் சினிமாப் பாடல்போல் சுமன் குழுவினரின் காலம் கழிந்தது.

பகலினில் அவர்கள் தூங்கும் அழகினைக் கண்ட அன்ரி பிளாஸ்க்கில் ரீ போட்டு அனுப்பி விடுவா.

இப்பொழுது நாய்களும் அன்ரியும் வெளியில் போக வேண்டி வந்தால் சுமன் குழு வீட்டைக்காவல் காக்கும்.

அன்ரியின் வீட்டில் எங்கு என்ன பொருள் இருக்கிறது எனும் விபரம் அன்ரியை விட நாய்களுக்குத்தான் தெரியும். –

இதை அறிந்த சுமன் குழுவினர் விலை குறைந்த டுப்ளிக்கேற் பொருட்களை உரிய இடங்களில் வைத்துவிட்டு விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு தங்களுடைய தேவையை நிறைவு செய்தனர்.

தங்களை ஏற்கனவே சுமன் கோஸ்டியினர் ஒரு முறை ஏமாற்றியதனை மறக்காமல் இருந்த அந்த இருநாய்களுக்கும் இப்பொழுது அன்ரிக்கு நிலமையினை விளங்க வைக்க முடிந்ததையிட்டு வலு சந்தோஷம். திட்டமிட்டபடி அன்ரியும் நாய்களும் அந்த வீட்டில் ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த நேரம் அன்ரியின் வாய் வயிறெல்லாம் ஆத்திரத்தில் எரிந்தது. ஆத்திரத்தில் ”பாவிகளே!” என அலறிவிட்டார்.

ஐவரும் ஒரே நேரத்தில் வெளியில் வந்து தலைதெறிக்க ஓடினர். இருவரை ஒரு நாய் கடித்து குதறியது. அன்ரி விழ்ந்து கிடந்தார்.

செய்தி கேட்ட மதன் ஓடி வந்து அன்ரியைத் தூக்கிச் சென்றான். கடிபட்ட சுமனும், பிரகாசும் வைத்தியசாலையில் இருந்து திரும்பிவர நானாகும் என மதன் அன்ரியிடம் கூறினான்.

அன்ரி இழந்து விட்ட ஒரு நாய்க்காக அழுதுகொண்டிருக்கிறார். கிணற்றைச் சுற்றி தப்பியோடிய மற்றவர்களை ஒரேயடியாகத் தாக்கிவிடலாம். என குறிவைத்து கிணற்றுக்கு மேலால் பாய்ந்த வேளையில் கம்பியில் தட்டுப்பட்டு தலை அடிபட்டு மயங்கிய நிலையில் கிணற்றில் விழுந்த அடுத்த நாய் அழுகிக்கொண்டிருந்தது….

– மறுபக்கம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜனவரி 2005, எழுத்தகம் தமிழ் எழுத்தாளர் பேரவை, மட்டக்களப்பு..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *