(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருமலைப் பிரதேசம் இருட் போர்வைக்குள் குடங்கி, சனசஞ்சாரமற்ற, ஊரடங்கு உத்தரவு அமுலிலிருக்கும், ஒரு பிரதேசமாகக் காட்சியளித்தது.
அந்த நேரத்தில், அது –
அநுராதபுரத்திலிருந்து ஹொரவப் பொத்தான ஊடாக வந்த கடைசி பஸ், நிலையத்திற்குப் போய் ஆறுதலாக நிற்க முன்னமே மூட்டை முடிச்சுகளுடன் விழுந்தடித்துக் கொண்டு இறங்கிய, அந்த விரல் விட்டு எண்ணக் கூடிய பிரயாணிகளுக்கு எப்படித் தான் இறகுகள் முளைத்தனவோ!
அப்படி என்ன அவசரம்?
பஸ்ஸை விட்டு இறங்கிய முனாஸ் மாஸ்டர் கிட்பேக் சுமையுடன் கடைத் தெருவை நோக்கி வெறுப்புடன் நடந்து கொண்டிருந்தார்.
அவரால் வேகமாக நடக்க முடியவில்லை .
வானத்திலிருந்து இலேசான தூறல், தொடர்ந்து ஒரு மின் வெட்டு, பாதைக்கு ‘டோச்’ அடிக்க. மறுகணம் எங்கோ இடி முழக்கம். அது இடி முழக்கமா அல்லது வேறு எதுவுமா? ஆசிரியருக்குப் பிரமை தட்டியது. இடி முழக்கம் தான் என்பதற்கு மின்னல் சாட்சியமளித்துள்ளதால், அவர் உள்ளத்தில் எழுந்த ஐயத்தை அந்தக் கணமே பொசுக்கிக் கொண்டார்.
எனினும் ஜன சந்தடியற்ற ரோடு.
உள்ளம் பதட்டப் படாமல் இல்லை .
‘ஹுய்….’ என்ற இரைச்சலோடு சுகாதாரப் பகுதியின் அவசரச் சிகிச்சைக்குச் செல்லும் ‘அம்புலன்ஸ் வண்டியின் திகிலோசை வேறு.
இனம் புரியாத ஒரு ‘டென்ஷன்’ தான்! மூடியிருந்த கடையோரங்களில் சற்று நின்று, நிதானித்து. தூறல் நின்றவுடன் போக அவருக்குத் தைரியமில்லை .
நிலைமை சூழலை மாசடையச் செய்து விட்டிருந்தது.
நடையில் சற்று வேகத்தைக் கூட்டி விட்டோம் என்ற நினைப்பில் அதே ஆமை வேகத்தில் தான் நடக்கிறார். நனைந்துகொண்டே….
தொழுகைக்காகப் பாவிக்கும் வெள்ளைத் தொப்பியை இழுத்தெடுத்து தலையில் போட்டிருந்ததால் உச்சந் தலைக்கு மட்டும் ஒரு சிறு பாதுகாப்பு. அவ்வளவு தான்.
நிலைமை இப்படி ஆளைக் கொல்லும் என்றிருந்தால், நாளைக்குக் காலையில் ஆறுதலாகப் புறப்பட்டிருக்கலாமே!
இப்படியும் அடிமனம் குத்திக்காட்டுகிறது. அத்தோடு, ‘இனிமேல் ஊருக்குப் புறப்படுவதாக இருந்தால், இரண்டுங் கெட்ட நேரத்தில் புறப்படக் கூடாது. காலங் கெட்டுப் போயிருக்கிற சங்கட வேளையில்:
ஒரு தீர்க்கமான முடிவையும் எடுத்தாகி விட்டது.
என்ன செய்வது? காசோலை மூலம் ஆசிரிய வேதனம் – என்ற நிலை வந்ததும், முனாஸ் மாஸ்டரின் பாடு படு சிக்கல் தான் பெரும் அலைச்சல்களுக்குள்ளும் ஆக்கிவிட்டிருந்தது.
பாடசாலையிலிருந்து பல மைல் தூரத்திலுள்ள வங்கியில் தமது சேமிப்புக் கணக்கில் காசோலையைப் போட்டு விட்டு ‘இன்று போய் நாளை வா’ என்று எத்தனை அலைக்களிப்பு! இருபது வருடங்களுக்கு மேலாக இருபதாம் திகதியையே மையமாக வைத்து, சம்பளப் பணத்தைப் பெற்றுத் தமது பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் அவருக்கு, ஊரில் உள்ள கொடுக்கல் வாங்கல் உட்பட, எதையுமே திட்டமிட்டுக் கருமமாற்ற முடியாத சங்கடங்கள்.
‘ஹொரவப் பொத்தான’ சந்தியிலிருந்து சில மைல் தொலைவில் ஒரு கிராமிய முஸ்லிம் மகாவித்தியாலயத்தில், ஒரேயொரு – விசேஷ பயிற்சி பெற்ற கணித ஆசிரியரே முனாஸ் மாஸ்டர்.
பயிற்சி முடிந்ததும் சொந்த மாவட்டத்திற்கு வந்த மாற்றல் கடிதத்தை ரத்துச் செய்து. நாட்டின் எப் பகுதியாயிருந்தாலும் பரவாயில்லை. தனக்கு ஒரு முஸ்லிம் பாடசாலை மட்டுந்தான்’ வேண்டும் என்று காரசாரமாய் நின்று வெற்றி கொண்ட மகாவித்தியாலயம் இது.
பின் தங்கிய கிராமப் பாடசாலைகளில் விசேஷ தராதரம் பெற்ற ஆசிரியர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வது கடினமானதால், அதிபரின் பூரண அனுசரணையும். ஏனைய ஆசிரியர்கள். ஊர் மக்கள் போன்றோரின் ஒத்துழைப்பும் உதவிகளும் அவருக்கு எப்போதும் காத்திருந்தன.
அதே கிராமத்தைச் சார்ந்த அதிபருக்குப் பெரிய கல்வீடு இருப்பதால் விடுதியை இரு ஆசிரியருக்கு ஓர் அறை என்ற விகிதத்தில் பகிர்ந்தளித்திருந்தார். முனாஸ் மாஸ்டருக்கு மட்டும் வசதி கூடிய ஒரு தனி அறை.
ஆனால், புதிதாக மாற்றலாகி வந்த தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர் ரவீந்திரனுக்கு அறைப் பிரச்சினை வந்தபோது…
முனாஸ் மாஸ்டர் ஊர் பள்ளிவாசலில் ஓர் அறையைப் பெற்றுக் கொள்வதாக, தனது தியாக மனப்பான்மையைக் காட்டி ஒதுங்கிக் கொண்டார்.
இரு தஸாப்தங்களுக்கு மேலாக அதே ஊரில் காலம் கடத்தியதற்கு மற்றுமொரு காரணமும் இருந்தது.
வருடா வருடம் இரண்டு ஏக்கர் வயல் உழுவதற்கு நெருக்கமான சிலர் கைகொடுத்து உதவுகின்றனர்.
வருடத்திற்கு ஒருமுறை மேலதிக வயல் வருமானம் ஒரு வரப்பிரசாதம்.
ஆனால் முனாஸ் மாஸ்டர் வயலுக்குப் போனதாகச் சரித்திரம் இல்லை. உரிய முதலீடு செய்து விட்டால் எல்லாமே அவரது நம்பிக்கைக்குரிய நண்பர்களின் உதவியால் வெற்றிகரமாக நடந்து முடியும்.
விதை நெல், கிருமி நாசினி, உரம், உழவு இயந்திரம் அது இதுவென்று, கணித ஆசிரியர் மனக்கணக்குப் போட்டுப் பார்ப்பதோடு சரி, ஒரு காலத்திலும் நட்டம் போனதில்லை. காலத்தை கணிப்பீடு செய்து ‘இந்த வருஷம் பருவ மழையை நம்பி அதிகமாக முதலீடு செய்யாதீர்கள்’ என்று சொல்லி விட்டால் அது அச்சொட்டாக இருக்கும். பழுத்த விவசாயிகளாலும், அது முடியாத காரியம். ஆகவேதான் அவர் கிராம மக்களின் விவசாய ஆலோசகர்.
ஒரே வித்தியாலயத்தில் இரு தஸாப்தங்களுக்கு மேலாக கடமையாற்றுவதற்கு அவர் எந்த வித யுக்தியையும் கையாளவில்லை. அவரிடம் ஓர் ஆசிரியனுக்கேயுரிய, மிக நேர்மையான யுக்தி பிறவிப் பலனாக அமைந்திருந்தது.
தனது கணித பாட போதனையை மிக அற்புதமாகச் செய்து, சில வேளைகளில் இலவச வகுப்புகளையும் வைத்து. ஒவ்வொரு வருடமும் நல்ல பெறு பேறுகளை ஈட்டிக் கொண்டிருந்தார். முஸ்லிம் இளைஞர்கள் கணித பாடத்தில் பின் தங்கிவிடக் கூடாது’ என்பார். அது அவருக்கே உரித்தான, அவரது உள்ளத்தில் ஊறிப்போன சம்பவம்.
பிறந்த ஊருக்கு மாறிப்போக வேண்டும் என்ற எண்ணம் துளி கூட இல்லை .
சொந்த ஊரில் போட்டியும் பொறாமையும், இன சன விரோதங்களும் தவிர வேறு என்ன இலாபம்.
சொந்த வீடும், வீட்டைச் சுற்றிய வளவும் தான் அவருடைய பரம்பரைச் சொத்து.
இது போன்ற பின் தங்கிய கிராமங்களில் ஆசிரியனுக்கு எப்போதும் மந்திரிக்குரிய கௌரவம் தானே!
கல்வி முடிந்ததும் வெறுமனே இரண்டு வருடங்கள் தான் சொந்த ஊர்ப்பாடசாலையில் சேவை செய்துள்ளார். பின்னர் இரண்டு வருடங்கள் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் முடங்கிக் கிடந்த பின்னர் கிடைத்த இந்த ஹொரவப் பொத்தான மாற்றத்தைத்தான் அவர் வாழ்க்கையில் விமோசனமாகக் கருதி வருகிறார். அது தவிர மாஸ்டருக்கு வெளியூர் அனுபவங்கள் கிட்டவில்லை.
பல இன மக்கள் வாழும் இடங்களில் சேவை செய்து அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் கிட்டவில்லை. அவருடைய ஆசிரிய உள்ளம் ஒரு சிறு வட்டத்தினுள்ளேயே அமிழ்ந்துவிட்டது. இது துரதிர்ஷ்டம் தான்.
சூழல் அவரை அப்படி ஆளாக்கிவிட்டிருந்தது.
சுமையோடு நடந்து கொண்டிருந்தவருக்கு மீண்டும் ஒரு மின்வெட்டு அவர் பாதையைத் தெளிவாக்கியது. எங்கேயோ இடி முழக்கம் கேட்டது.
ஒரு சிறுவன் அரைக் கடையில் வந்து கொண்டிருந்தான்.
“தம்பி உன் பேர்?”
“முஹம்மது ரிஸ்வி”
“நானெனச்சேன். சரி மெடீனா ஓட்டல் திறந்திருக்கா?”
“நான் காணல்ல சேர்…பக்கத்தில் சைவக்கடை திறந்திருக்கு…”
பையன் எதிர் திசையில் நடந்துவிட்டான்.
சைவ ஓட்டல் திறந்திருந்தால் நிச்சயம் மெடீனாவும் திறந்திருக்கும் –
சில நிமிடங்கள் நடை.
அவர் எதிர்பார்த்தது போல் மெடீனாவும் திறந்திருந்ததைக் கண்டு. மனம் பூரித்தார்.
மிக நீண்ட தேநீர்க்கடை அவருக்குப் பழக்கப்பட்டதால், உள்ளுககே நுழைந்து. ஈர கிட் பேக்கை’ மேசை மீது வைத்துக் களைப்பாறினார். முகம் கைகளைக் கழுவி. நனைந்த பாகங்களைத் துடைத்து விட்டு தலையைச் சீப்பினால் வாரிச் சுவரில் தொங்கும் . கண்ணாடியில் பார்த்தார். அவர் அவராகத் தான் இருந்தார்.
வெயிட்டர் வந்து ‘என்ன சாப்பிடப் போறீங்க?’ என்ற தோரணையில் முன்னால் நின்றான். வயிற்றுக்குள் ‘கர் முர் ரென்று போர் தொடுத்த கோரப்பசிக்கு. கோதுமை ரொட்டியும், மின கறியும் கொடுத்து சமாதானப்படுத்தி தேநீரும் அருந்தி இராப் போசனத்தை முடித்து விட்டு, பணம் செலுத்த வந்த போது
வெளியில் முற்றாக ஓய்வு எடுத்திருந்த தூறல் மீண்டும் மாஸ்டருக்குப் பன்னீர் தெளிக்க ஆரம்பித்தது. “மட்டக்களப்பு மெயில் ரெயில் இன்றைக்கு…?”
காஸியராக இருந்த இளைஞனுக்கு எந்த வித அக்கறையுமில்லை. “தெரியாது” என்ற சொல்லை மட்டும் உதிர்த்தான். மேசையின் பக்கத்தில் ரெலிபோன் பூட்டப்பட்டுக் கிடந்தது.
முனாஸ் மாஸ்டர் புகைவண்டி நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.
மீண்டும் ஒரு மின்வெட்டு
வானம் ‘சோ’வென்று கதற ஆரம்பித்தது. சோகமாக.
நிலையத்தை அடைவதற்குள் தூறலில் ஊறித் தெப்பமாகிவிட்டார்.
“…இரவு ரெயில் இன்றைக்கு இல்லை. நாளை காலை ஐந்து முப்பதுக்கு ஒரு எக்ஸ்பிரஸ் இருக்கு…”
ஸ்டேஷன மாஸ்டரின் அழுத்தம் திருத்தமான மறுமொழியால் நிலை குலைந்து நின்றவர். மேலும் தாமதிக்கவில்லை.
இராத் தொழுகைக்கும். இராத் தங்கலுக்காகவும் தக்கியா என்னும் பள்ளி வாசலை நோக்கி நடந்தார்.
அந்தச் சிறு ஆலயம் தான் இப்போதைக்குத் தஞ்சமளிக்கக் கூடிய ஒரேயொரு புகலிடம்.
முனாஸ் மாஸ்டருக்கு என்றால் இன்றைய பிரயாணம் ‘சீயென்று வெறுத்துவிட்டது.
ஆனால், அடுத்த மாதத்திலிருந்து இந்தப் பிரச்சினை இருக்காது ‘கரன்ற அகவுன்ற் வைத்திருப்பவர்கள் அடுத்த மாதம் தொடக்கம் உதவுவதாக வாக்களித்துள்ளார்கள். செக்கை’ ஒப்படைத்த மறுகணமே பணத்தைத் தருவார்களாம்.
அப்படியே அவர்கள் தந்தாலும், இப்படியான இரண்டுங் கெட்ட நேரத்தில் புறப்பட்டு வந்து மாட்டிக் கொள்ளக் கூடாது.
முன் யோசனையற்ற மடத்தனமான அவசரச் செய்கையை மனம் இடித்துக் கண்டித்தது.
வானத்தின் சோக கீதம் சற்று அடங்கியிருந்தது.
நன்றாக நனைந்ததாலும், நிறைய நடந்ததாலும் களைத்துப் போய் அந்தப் புனிதமான வணக்க ஸ்தலத்தை அடைந்தார்.
கூட்டுத் தொழுகை முடிந்து நீண்ட நேரமாகிவிட்டிருந்ததை பள்ளிவாசலின் சுவர்க் கடிகாரம் படீரென்று அறைந்து உறுத்தியது.
தன்னைத் தொழுகைக்காக சுத்திகரித்துக் கொண்டு, உள்ளே நுழைந்தார்.
தொழுகைகளைச் செவ்வனே நிறைவேற்றிவிட்டுச் சுவரில் சாய்ந்தவர். இலேசான நித்திரையில் சில கணங்கள் தன்னை மறந்துவிட்டார்.
அதற்குள் அந்த மனிதன் வந்து அந்த ஆட்டம் ஆடுமென்று அவர் எதிர்பார்க்கவில்லைத்தான்.
வார்த்தைகளைப் பிரயோகிப்பதற்கும் ஒரு இங்கிதமான முறை இருக்கிறது தானே!
“இது. யார் இங்க…? எழும்புங்க…! எழும்புங்க பத்துமணிக்கு ஊரடங்குச் சட்டம், நேர காலத்தோடை இடத்தக் காலி பண்ணுங்க…”
“தொழுது போட்டு, விறாந்தையில் தங்கி, காலையில் போகத்தான் வந்தன், முந்தியும் இப்படித்தான் தங்கிப் போறது வழக்கம்…”
“இந்தாங்க…அந்தக்காலமெல்லாம் இப்ப இல்ல. யாரையும் தங்கவிட வேண்டாமென்று ரஸ்டிமார் முடிவு. சுணங்காம போங்க…”
மரியாதையாக வெளியே போ – ‘பிளீஸ் கெட்டவுட்’ என்று சொல்லாமல் சொல்கிறான்.
முனாஸ் மாஸ்டரின் உள்ளத்தில் எரிமலை வெடித்தது.
இது ஒரு ஜடம், இதனிடம் பேசிப் பிரயோசனம் இல்லை. இவன்களெல்லாம்……?
முனாஸ் மாஸ்டரின் உள் மனம் முதன் முறையாகக் கேள்வி எழுப்பியது.
மீண்டும் ஒரு மின் வெட்டு.
பாதை தெளிவாகிறது. இலேசான தூறல். சமீபத்தில் எங்கோ இடிமுழக்கம் தான்.
அவருடைய கால்கள் மீண்டும் புகைவண்டி நிலையத்திற்குத் திரும்புகின்றன. எதிர்பாராத விதமாகத் தூறல் மழையாகப் பொழியத் தொடங்கியது.
அவர் கண்ணுக்கெட்டிய ஒரு வீட்டுத் தாழ்வாரத்தில் ஒதுங்கினார். இருந்தாலும் மழையிலிருந்து அவரால் தப்ப முடியவில்லை . மிக ஒடுங்கிய தாழ்வாரம் அது. சற்று நேரத்தில் அரை குறையாகத் – திறக்கப் பட்ட வாசல் ஊடாக ஒரு பெண்மணியின் முகம் தெரிந்தது மட்டுமல்ல “என்ன…பெரும் மழை அடிக்குது..உள்ளுக்கு வாங்க…என்றதும் அவரிடம் கேளாமலே அவரது கால்கள் அவ்வழைப்புக்குக்குக் கட்டுப்பட்டன. “எங்களுக்கு உள்ளுக்க இருக்க முடியல்ல…… நீங்க அங்க நிக்கிறீங்களே! இந்தாங்க தலை துடைங்க…” என்றவாறு ஒரு துவாயை நீட்டினாள்!
அந்தச் சிங்களப் பெண்ணின் செய்கையால் அதிர்ந்து போனார்.
தலையை இலேசாகத் துடைத்தவாறே அவரது கண்கள் துழாவின. தரையில் ஒரு சிறுவன் ஆழ்ந்த நித்திரை பக்கத்தில் ஒரு பருவமாது பத்திரிகையில் மூழ்கியவாறு. அடிக்கடி இருமியபடி ஒரு முதியவர். தலைக்கு மேல் கொடியில் தொங்கும் ஆடைகள், ஒரு சின்னஞ்சிறிய டிரான்ஸிஸ்டர் ரேடியோ சத்தமிட்டுக் கொண்டிருந்தது. நான்கைந்து கதிரைகள். அந்த அறை தவிர அதை ஒட்டினாற் போல ஒரு சிறு அறை. அது சமையலறையாக இருக்க வேண்டும் இதற்கிடையில் முதியவரின் வேண்டுகோள் “தம்பி நிக்கிறது, உட்காருங்க….” என்றவாறு ஒரு சிறிய ஸ்ரூலை காட்டினார்.
அவர்களுக்கு அரைகுறையாகத் தமிழ் தெரியும். அவருக்கோ – அறவே சிங்களம் தெரியாது.
குசினிப் பக்கமாக இருந்து எட்டிப் பார்த்த ஒரு புதிய முகம் “நல்லா நனஞ்சிட்டீங்க……. போலிருக்கு…’ என்று முடிக்க முன்பே, முதலில் தன்னை அழைத்த மாது. “இந்தாங்க இதக் குடிங்க…….. என்றவாறு ஒரு கப்பை நீட்டினாள். மாஸ்டருக்கு வார்த்தைகள் திக்குமுக்காகின. முதியவர் சொன்னார், “நாங்க மல நாட்டு சிங்கள ஆக்கள்… தமிழ் பேச ஏலும்…… மாஸ்டர் சாயத்தை உறிஞ்சினார். “மலை நாட்டுச் சாயம் போலிருக்கே….” என்று பாராட்டினார் – “ஓ.. தம்பி அனுப்பியிருந்திச்சி…”
இந்தச் சிறிய வீட்டுக்குள் இவ்வளவு ஜீவன்களா? எப்படி வாழுதுகள்? அவரது மனம் அங்கலாய்த்தது.
“தம்பி இந்த நேரம் எங்க போறீங்க?” என்ற முதியவரின் வினாவுக்கு –
“ஸ்டேசனுக்கு” என்றார் மாஸ்டர்.
“இந்த நேரத்துக்கு எந்தக் கோச்சியும் இல்லையே..! இனி காலயில தான்… இன்னும் கொஞ்சத்தில் ‘ஊரடங்கு போடுவாங்க…ம்…என்ன செய்யிறது பாருங்களே எங்கட வீடு இவ்வளவு தான், உங்கள நிக்கச் சொல்லவும் வழில்லயே!” என்றவாறு யோசித்தாள் அந்த மாது.
இதற்கிடையில் மழையும் ஓரளவு தணிந்திருந்தது.
“இல்ல வேண்டியதில்ல…நீங்க செஞ்ச இந்த உதவியே வாழ்க்கையில் மறக்க ஏலாது…நான் இன்னொரு நாளக்கி வாறன்…” என்று தனது நன்றியைத் தெரிவித்தவாறு அவரது பயணம் மீண்டும் ஸ்டேஷனை நோக்கித் தொடர்ந்தது. “சிங்கள மனிதராயிருந்தாலும், எவ்வளவு பண்பான மனிதர்கள்…”
அவரது உள்ளம் பள்ளிச் சம்பவத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தது. தான் இதுவரை வாழ்ந்த வட்டத்தை நினைத்து வெட்கினார். வெறிச்சோடிக் கிடந்த நிலையத்தை வந்தடைந்து மீண்டும் தலைமயிரை கையால் நீவி விட்டுக் கொண்டிருக்கும் போது –
தற்செயலாக ஸ்டேசன் மாஸ்டரின் கண்களில் பட்டு விட்டார்.
“ஓ…நீங்களா? நல்லா நனஞ்சி போட்டீங்கள் போலிருக்கு….சாப்பிடப் போனிங்களே?”
“சாப்பாடும் முடிந்து விட்டது. குளிப்பும் முடிந்து விட்டது” என்று நகைச்சுவையாகக் கூறிய முனாஸ் மாஸ்டர், துவாயை இழுத்தெடுத்து மீண்டும் தலையைத் துடைத்தார்.
இருவரும் சற்று நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.
“இருங்க மாஸ்ரர் ஒரு நிமிஷத்தால வாறன்” என்று அப்பால் நகர்ந்தார் எஸ்.எம்.
நொந்து போன முனாஸ் மாஸ்டருக்கு எரிச்சலாக இருந்தது. மீண்டும் வெளியேற்றினால் எங்கே போவது என்ற யோசனையில் ஆழ்ந்தார்.
“மாஸ்ரர் வாருங்கோ…”
ஒன்றும் புரியாமல் சற்றுத் திகைத்துப் போன அவர், ‘கிட்பேக் குடன் அவர் பின்னால் நடந்தார்.
வெளியில் மின் வெட்டு.
“மாஸ்ரர் இதைக் கவனமா வைத்திருங்க. இது முதலாம் வகுப்புப் பிரயாணிகள் தங்கும் அறைத் திறப்பு. உள்ளே உங்களுக்கு எல்லா வசதிகளும் கிடக்கு. உடுப்பை மாற்றி பயமில்லாம நித்திரை கொள்ளுங்க. விறாந்தையில் குளிர், பாதுகாப்பும் இல்லை. காலையில் அறையைப் பூட்டித் திறப்பைத் தர மறந்துவிடாதீங்க…”
அந்தக் குளிரிலும் முனாஸ் மாஸ்டருக்கு வியர்த்து விட்டது.
நிம்மதியான நித்திரைக்குப் பின் விடியல் பிறந்தது.
புகை வண்டி நிலையக் கன்ரீனில் ஆள் நடமாட்டம் காணப்பட்டது. பிரயாணிகள் மிகச் சிலரே.
மாற்றுடையில் முனாஸ் மாஸ்ரர் தூய்மையாக, புது மலர்ச்சியுடன் காணப்பட்டார்.
எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வந்து, ஸ்ரேஷன் மாஸ்டருக்குத் தமது மனம் நிறைந்த நன்றியைச் சமர்ப்பித்துத் திறப்பை ஒப்படைத்து, தயங்கித் தயங்கி –
“உங்களது பெயர்…?”
“தியாகராசா…”
வானம் தெளிவாக இருந்தது.
இதுவரைக்கும் தான் வாழ்ந்த வட்டத்தை நினைத்துப் பார்த்தார் ஒரு கணம் அவருக்கே ஆச்சரியமாக இருந்தது.
விசேஷ கடுகதிப் புகைவண்டி ஒரு புதிய மனிதரைச் சுமந்து கொண்டு புதுப் பொலிவுடன் கிழக்கு மாகாணம் நோக்கி விரைந்து கொண்டிருந்தது.
– மல்லிகை இதழ் 228 – ஏப்ரல் 1990.
– மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.
– நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: 2003, மல்லிகைப் பந்தல் வெளியீடு, கொழும்பு.