அந்த தெரு மக்கள் அன்று வழக்கமான மகிழ்ச்சியில் இருந்து நழுவியிருந்தனர்.
அவர்களின் பேச்சில் இருக்கும் துள்ளல் விடுப்பில் சென்றுவிட்டது.
அவர்களின் அன்பும்,உணவும் அவனுக்காக காத்திருந்தன.
அவனுக்கு பிடிக்கும் என்று அங்காடி அரிசியில் வடித்த “வெள்ளை சாதமும்,மீன் குழம்பும்” சில மீன் துண்டுகளோடு அவனுடைய தட்டில் நிரம்பியிருக்கிறது.
ஒருநாள் ஆகியும் அவனது பாத சுவடுகளோ,அவன் தூரத்தில் வரும்போதே ஒரு காத தூரம்வரை தூக்களாக வீசும் அவனது தண்ணீர்படாத மேனியின் தாராள துர்நாற்றமோ இப்போது அங்கே இல்லை.
யார் வீட்டிலாவது அசைவ வாடை வந்தால் விருந்தாளிக்கு முந்தி கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்துவிடுவான்,அந்த வீட்டு மனிதர்கள் அவனை கடிந்துகொள்வர், எல்லாறும் சாப்பிட்ட பின்பே அவனுக்கு சாப்பாடு வைப்பர் அதை அவன் முழுமனதோடே சாப்பிடுவான்.
அப்படித்தான் ஒருநாள் அசைவ உணவென்று ஒரு வீட்டினுள் நுழைய முயற்சித்த போது எதிர்பாராத ஆச்சரியம் காத்திருந்தது, அவனுக்கான உணவு ஏற்கனவே வைக்கப்பட்டாயிற்று அதை சாப்பிட சென்றவன் ஏனோ தயக்கத்துடன் சாப்பிடாமலே சென்றுவிட்டான்.பிறகு தான் தெரிந்தது அந்த உணவில் “விஷம்” கலந்துள்ளது என்று.அது அவனது தொல்லை தாளாமல் அவனைக் கொல்ல நடந்த பிரத்யேக சதி என்று அந்த தெருபெண்கள் நடத்திய கூட்டு விசாரணையில் தெரிய வந்தது.அவனது திறமையை மெச்சி அந்த பெண்கள் விழா மட்டும்தான் எடுக்கவில்லை.
நள்ளிரவில் தெருவிற்குள் அந்த தெருவாசிகள் நுழைந்தாலே அவன் நண்பர்களில் சில முரடர்கள் வழிமறிப்பது சகஜம்,அப்போது அந்த முரடர்களோடு இவன்தான் பேசி அந்த தெருவாசிகளை தெருவுக்கு பத்திரமாக அனுப்பி வைப்பான்-தெருவாசிகள் ஊர் பயணம் சென்றாலும் வாகனம் ஏறும்வரை துணைச்சென்று வழியனுப்பி வைப்பான்.அந்த தெருவில் எதாவது ஒரு குடும்பம் ஒரிருநாள் வெளியூருக்கு சென்று திரும்பிவரும்போது இவன்காட்டும் பேரன்பில் அவர்கள் கரையாமலிருப்பது சாத்தியமில்லை !
இதனாலேயே பகுதி மக்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றவனாயிருந்தான்.
அவ்வளவு அன்பை பொழிபவன், அத்தனை அன்பிற்குரியவன் யாரிடமும் சொல்லாமல் எங்கு சென்றிருப்பான் என்கிற கேள்வி அவர்களின் மனதை துளைக்கிறது.
அவன் அந்த தெருவுக்கு வந்த போது யாராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, எல்லாராலும் துரத்தப்பட்டான்.அப்படி வெறுத்த மக்களையே இன்று உறவாக மாற்றி உருக வைத்த மென்மையான இதயக்காரன்.
சேறு பூசிய கால்கள்,ஒழுங்கற்ற பல்வரிசையின் இடுக்குகளில் வழியும் நீரோடை,எளிதில் புடிபடாத உடல்மொழி,வாழ்வில் நீரையே காணாத உடல் என அவனை புறக்கணிப்பதற்கான அத்தனை தகுதிகளும் ஒருங்கே பெற்றிருந்தான்.
அவனது தோற்றத்தை பார்த்து பாவப்பட்ட மக்கள் அவனை குளிக்க வைக்க முனைந்த போது எல்லாரையும் கோபத்தோடு பார்த்தான்,சிலர் விளையாட்டாக தண்ணீரை அவன் மீது பீய்ச்சிய போது ஓட்டம் பிடித்துவிட்டான்,பிறகு மெல்ல மெல்ல அவர்கள் மத்தியில் ஐக்கியமாகி இன்று அவர்களுள் ஒருவராகவே ஆகிவிட்டான்.
இதோ அவன் வருகையை சொல்லும் மெல்லிய துர்நாற்றம் காற்றில் கலப்பதை நுகர முடிகிறது
“அவன்தான் அவன்தான் என்று தெருவில் ஒரு மெல்லிய குரல் ஒலிக்கிறது”…
அவன் நடந்து வருகிறான் இல்லை இல்லை பாய்ந்து வருகிறான் அங்கு நின்றிருந்த மக்களிடம் தன் பெரும் நேசத்தை கொட்ட வந்தவன்;பாத்திரம் நிரம்ப மீன்குழம்புசாதமும் மீன்துண்டுகளும் இருந்ததை கவனித்து பாத்திரத்திற்கு தாவினான்,அவ்வளவு எளிதில் அந்த மக்களால் சிரித்துவிட முடியவில்லை.காரணம்,அவன் பசிதாங்க மாட்டான் என்று அனைவரும் பரிதவிப்பில் இருந்தபோது அவன் சாப்பிட்டது அவர்களுக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.
தாய்ப்பால் அருந்தும் குழந்தைப் போல- சாப்பிட்டுக்கொண்டே ஓரக்கண்ணால் நின்ற அத்தனை பெண்களையும் தாயாக பார்த்தபோது எல்லார் கண்களிலும் நீர் கசிந்தது.அவனுக்கும் கண்ணீர் துளிர்த்தது.
நன்றியுள்ள-பாசமுள்ள-ஈரமுள்ள-நாலுகாலுள்ள அவன் தெருவில் ஐக்கியமானபின்பு “லைகா”என்று அழைக்கப்படுகிறான்.