மாம்பழ அவதாரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 12, 2019
பார்வையிட்டோர்: 7,357 
 

சென்னை பல்லாவரத்தில் டெக்ஸ் பன்னாட்டு நிறுவனத்தின் மானேஜர் பதவிக்கான நேர்முகத்தேர்வு இன்று. . என்னுடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் அமர்ந்திருக்கிறோம். மற்ற நால்வரிடமும் பேச்சு கொடுத்ததிலிருந்து தெரிந்தது.

எல்லா விதத்திலும் இந்த வேலைக்கு நான் தான் தகுதியானவன். படிப்பு, அனுபவம் எல்லாம் அவர்களை விட எனக்கு தான் அதிகம்.

இருந்தாலும் மனசுக்குள் இருந்த பதட்டத்தை குறைக்க பக்கத்திலிருந்தவரிடம் பேச்சு குடுக்க ஆரம்பித்தேன்.

மும்பையிலிருந்து இப்ப வேலை பாக்குற கம்பெனிக்கு அவசரமா மாற்றுதலாகி வந்ததால படிப்புச் சான்றிதழ்கள் எல்லாம் எடுத்துட்டு வரல. அப்பா இப்போ பத்து மணி விமானத்துல வந்திருப்பார். எடுத்திட்டு வந்திருவார். .

உங்களுக்கென்ன சார். ஆறு ஆண்டு அனுபவம் இருக்கு. இந்த வேல உங்களுக்குத் தான். அவர் உசுப்பேற்றினார்.

ஒவ்வொருவராக மேலாளரின் அறைக்கு அழைக்கப்படவே மீண்டும் பதட்டம் பற்றிக்கொண்டது. .

மிஸ்டர் சம்பத் …..எனது பெயர் கேட்டு நான் எழுந்து உள்ளே சென்றேன். முறைப்படி எல்லாக் கேள்விகளுக்கும் தகுந்த விடையளித்த பின்னர் நானாகவே சான்றிதழ் விவரங்களைச் சொன்னவுடன் அவர் அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டது போல் தெரியவில்லை.

ஒருவழியாக வெளியே வந்தவுடன் அடுத்த அரை மணி நேரக்காத்திருப்பு.

எல்லோரும் எதிர்பார்த்த படியே எனக்கு தான் அந்த வேலை கிடைத்தது. .

மேலாளர் என்னிடம் நியமனக் கடிதத்தைக் கொடுத்து அன்று மாலை நான்கு மணிக்குள் சான்றிதழ்களைக் காட்டி அதன் நகல்களை ஒப்படைக்குமாறு கூறினார்.

அப்பாடா.. இப்ப தான் மனசு நிம்மதியா இருக்கு. ஆனா இந்த அப்பாக்கு என்ன ஆச்சு. ஏன் வரல. யோசித்துக்கொண்டே கைபேசியில் அழைத்தேன்.

மறுமுனையில்.. அது ஒண்ணுமில்ல தம்பி. நீ உள்ள நேர்முகத்தேர்வுக்கு போயிருக்கும்போது நான் வந்தேன். ஆனா தவறுதலா மாம்பழத்த கொண்டு வந்துட்டேன். அதனால தான் திரும்ப உன்னோட குரோம்பேட்ட அறைக்கே வந்துட்டேன்.

அத உடு. நீ உன்னோட வேல முடிஞ்சவுடனே வா. நேர்ல சொல்றேன்.

என்ன ஆச்சு இவருக்கு. உடம்புகிடம்பு சரியில்லையோ. முதல்ல ஒரு ஓலா புடிச்சு நேரா குரோம்பேட்ட போயிரணும். ஆட்டோ புடிச்சா போய்ச்சேர நேரமாயிடும். மனதுள் தீர்மானித்தேன்.

அப்பா அறைக்கு வெளியிலேயே நின்று கொண்டிருந்தார். அந்த விடுதியில் மொத்தம் பத்து பேர் தங்கியிருக்கிறோம். அறைக்கு ரெண்டு பேர் வீதம். சொல்லிக்கொள்ளுமளவு வசதி இல்லைன்னாலும் கல்லூரி மாணவர் விடுதியளவு கட்டில்கள் மற்றும் இதர வசதிகள் இருக்கத்தான் செய்தது. சாப்பாடு பக்கத்திலிருந்த மெஸ்ஸில். என்கூட தங்கியிருப்பவர் தனியார் வங்கியில் வேலை செய்பவர். சிக்கனமா இருக்கணும்னா சில விசயங்கள சகிச்சு தானே ஆகணும்.

என்னப்பா சம்பத் போன காரியம் நல்லா முடிஞ்சதா. வேலை கெடச்சதா. சம்பளம் நீ நெனச்ச அளவு தானே. வேலைல சேந்தவொடனே மொதல்ல இந்த அறைய மாத்து. வசதியா தனி வீடு புடிச்சிக்கோ. நாங்க வந்தா போனா தங்க முடியும்ல. வா மொதல்ல நாயர் கடையில டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.

என்ன இவர். அரக்க பரக்க ஓடி வந்தால் சாவகாசமாக பேசிக்கொண்டிருக்கிறார். சான்றிதழ்கள் தொலைஞ்சு போச்சா. அதுக்குதான் இவ்ளோ பீடிகை போடுறாரோ. மன ஓட்டத்தை வெளிக்காட்டாமலே அவரைப் பின் தொடர்ந்தேன்.

வடை டீ சொல்லிவிட்டு மெதுவாக ஆரம்பித்தார். வர அவசரத்துல பை எதுவும் கெடைக்கல. பத்திரமா கொண்டுவரணுமேன்னு உன்னோட சான்றிதழ்கள் , நீ கேட்ட ரெண்டு மூணு கதை புத்தகம் எல்லாத்தையும் வீட்டுப்பக்கத்துல இருக்கற மோன்டு பழக்கடைலேந்து அட்டை பெட்டி வாங்கி அதில கொண்டு வந்தேன். அதுல பாரு ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு.

கடவுளே…. அடுத்து இவர் என்ன சொல்லப் போறாரோ. மனம் தவித்தது.

எல்லாம் சரியாதான் நடந்துச்சு. விமானத்துலேந்து எறங்கினவுடனே என்னோட பையையும் அந்த அட்ட பெட்டி யையும் கன்வேயர் பெல்ட்லேந்து எடுத்து டிராலில வச்சிக்கொடுக்க ஒருத்தர் உதவி செஞ்சார். அப்புறம் அத தள்ளிட்டே வந்து டாக்ஸி புடிச்சப்போ டிரைவர் எல்லாத்தையும் எடுத்து டிக்கில வச்சார். நேரா அங்கேந்து உன்னைய பாக்கதான் வந்தேன். அங்க வந்து பிரிச்சு பாத்தா அந்த பெட்டில மாம்பழங்களா இருக்கு. யாரோ பெட்டிய மாத்தி எடுத்துட்டு போயிட்டாங்க போல. உனக்கு தெரிஞ்சா பதட்டம் ஆயிடுவ. அதான் என்ன பண்ணணும்னு தெரியாம உன்னோட அறை வாசல்ல வந்து ஒருமணி நேரமா நிக்கறேன்.

என்னப்பா நீங்க. திரும்ப விமான நிலையம் போயி கேக்க வேண்டியதுதானே. ஆமா. இது மேல பெயர் போட்ட சீட்டு ஒட்டியிருப்பாங்களே அது எங்க.

இத தொறக்கற அவசரத்துல அத தூக்கி எறிஞ்சிட்டேன். மெதுவாகச் சொன்னார்..

இப்ப இந்த டீ ரொம்ப அவசியம்.. வாங்க மொதல்ல விமான நிலையம் போகலாம். அவசரமா கிளம்பி அந்த தனியார் விமான நிறுவனத்தின் கவுண்டரை அடைந்தவுடன் அங்கு பணியிலிருந்த பெண் எந்தவித பதட்டமும் இல்லாமல் பொறுமையாக பதில் சொன்னாள்.

நீங்க வைத்திருக்குற பெட்டில ஒட்டியிருந்த சீட்டைக் காண்பித்தா உடனடியா மாற்றி எடுத்துச் சென்ற நபரைக்கண்டு பிடிச்சிடலாம். ஏன்னா அதுல அவர் பெயர் இருக்கும். இப்போ பெட்டி உங்க கிட்ட இல்ல . அதனால கொஞ்ச நேரம் காத்திருங்க.

பெட்டி கொண்டுவந்தாலும் அதன் மேல் ஒட்டப்பட்ட சீட்டு இல்லையே மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

இன்னிக்கு காலைல வருகைல யார் இருந்தாங்களோ அவுங்க கிட்ட யாராவது இதப் பத்தி விசாரிச்சாங்களானு. கேப்போம்.

அப்டி இல்லைன்னா இத மாத்தி எடுத்துட்டு போன நபர் தானா கூப்பிட்டா தான் எங்களால தகவல் சொல்ல முடியும்.

நல்லவேளை பதினைஞ்சு நிமிடத்தில் வருகைல டியூட்டி பார்த்த பெண் எதிரில் நின்றாள். அவள் கையில் ஒரு சிறிய துண்டுக் காகிதம்.

இன்னிக்கு காலை மும்பை சென்னை விமானத்துல மொத்தம் நாற்பது அல்போன்சா மாம்பழப் பெட்டிகள் வந்துச்சு. அதுல முப்பத்துஏழு பெட்டிகள் நங்க நல்லூர்சாயிபாபா கோவிலுக்கு பிரசாதத்துக்காக போகுதுனு அந்த பயணி சொன்னாரு. இரண்டு பெட்டிகள் உங்கள மாதிரி தனி நபரோடது. மதுரை போன் நம்பர் இருக்கறதால அவர் மதுரைக்கு போயிருக்கலாம்.

நங்கநல்லூர் பயணிய மொதல்ல கூப்பிடலாம். அவர்கிட்ட இல்லன்னா மதுரைப் பயணிய கூப்பிடலாம்.

மனசுக்குள் ஒரு சிறு சந்தோசம். இந்தப் பெண் இவ்வளவு உதவியா இருக்காளேன்னு. தனியார் விமான நிறுவனங்கள் நல்லாதான் சேவை பண்ணறாங்க.

அதற்குள் மதியம் ஆகி விட்டதால் அந்தப்பெண்ணிடம் எண்ணை வாங்கிக் கொண்டு நானே நேரில் செல்லத் தீர்மானித்தேன்.

பயணிகளின் தொலைபேசி எண்களை அவர்களின் அனுமதியின்றி தர மாட்டார்களாம். நல்லவேளை நங்க நல்லூர் பார்ட்டி நல்லவர் போல. முகவரியையும் கொடுத்துவிட்டார்.

நேராக அவரைச் சந்தித்தவுடன் அவர் எங்களை மாலை ஐந்து மணி சாயி பஜனுக்கு இருந்துவிட்டு போகவேண்டும் என வற்புறுத்தினார்.

பெட்டி கிடைக்கும் வரை எல்லார் சொல்பேச்சும் கேட்டுதானே ஆகணும்.

சார் என்னோட பெட்டி.. என ஆரம்பித்தவுடன் சாயி சன்னிதானத்துக்குத் தானே போகப்போறோம். அங்க எல்லா அல்போன்சா மாம்பழப் பெட்டிகளையும் அனுப்பியாச்சு. பாபா ஆசிர்வாதத்தோட உங்க பெட்டி உங்களுக்கு கெடைக்கும். கவலைப்படாதீங்க என்றார்.

அவரின் மகனுடைய முப்பத்தேழாவது பிறந்தநாளுக்கு 37 பெட்டிகள் சமர்ப்பிக்கிறாராம். அவர் மகன் நங்கநல்லூரில் தான் பிறந்தானாம். ஒவ்வொரு வருசமும் பிறந்தநாளைக்கு இங்கு வருவாராம்.

அவருடைய எந்த பேச்சிலும் என் மனம் லயிக்கவில்லை. ஒருவழியாக பாபா கோவில் சென்று ஒவ்வொரு மாம்பழப் பெட்டியாகப் பார்த்துஎன்னுடையது இருக்கிறது னு தெரிஞ்சபிறகுதான் உயிரே வந்தது.

சாயி பஜனில் கலந்து கொண்டு மனம் லயிக்க பாடினேன். பக்கத்தில் அமர்ந்திருந்தவர் முதுகைத்தட்டி கூப்பிடவே திரும்பிப்பார்த்தேன்.

காலையில் எனக்குநேர்முகத்தேர்வு செய்த மேலாளர்.

என்ன சொல்ல என யோசிக்குமுன்பே அவரே பேசினார். கவலைபடாதீங்க. எல்லாத்தையும் கேள்விப்பட்டேன். உங்க சான்றிதழ்கள் மாம்பழ அவதாரம் எடுத்ததுக்கு உங்கப்பா மட்டுமல்ல. என் தம்பியும் தான் ஒரு காரணம். அதனால நாளைக்கு கொண்டு வந்து கொடுங்க.

பாபாவே உங்கள கூப்பிட்டு ஆசிர்வாதம் செஞ்சு ஒரு பெட்டி அல்போன்சா மாம்பழத்தையும்குடுத்திருக்கார். மறக்காம நாளைக்கு அத எடுத்துட்டுவந்து எல்லாருக்கும் கொடுங்க. உங்கப்பா சொன்னார் பெட்டிய இங்க கொண்டுவர மறந்துட்டீங்கன்னு.

அப்பதான் ஞாபகத்துக்கே வந்தது. இவ்வளவு நேரம் என் பெட்டி என் பெட்டி எனக் கேட்டுக்கொண்டே இருந்தேன். அவருடையத திருப்பிக் குடுக்கணும்னு நினைக்கவே இல்லையே.

எது எப்படியோ கத்தி போயி வாலு வந்த கதை போல மாம்பழம் போயி என் சான்றிதழ்கள் வந்தா சரிதான். மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *