(1990ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 13-14 | அத்தியாயம் 15-16 | அத்தியாயம் 17-18
அத்தியாயம்-15
மூர்த்தியைப் பிரிந்த சோகத்தில் சங்கர கனபாடிகள் அமைதி இழந்து தூக்கமிழந்து அடிக்கடி படுக்கையில் உட்கார்ந்து ‘மூர்த்தி, மூர்த்தி!’ என்று துயரம் தோய்ந்த குரலில் முனகிக் கொண்டிருந்தார்.
துயரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த தவிப்பில், தள்ளாமை மேலிட்டு, தளர்ந்து, உலர்ந்த திராட்சை போன்ற சுருக்கங்களுடன் இளைத்துப் போனார்.
அன்று அவர் ராமாயண பாராயணம் செய்து கொண் டிருந்தபோது, ராமனின் பிரிவாற்றாமையால் வாடிக்கொண்டிருந்த தசரதனின் புத்திர சோகத்தை வால்மீகி வர்ணித்திருந்த வார்த்தைகள் கண்ணீர் உகுக்கச் செய்தன. மேலும் படிக்க முடியாமல் கண்ணீர் திரையிட்டபோது விம்மி வந்த துக்கத்தை அடக்கிக் கொண்டார்.
இச்சமயம் “அதோ, கிட்டா வந்துட்டானே!” கமலாவின் உற்சாகக் குரல் கேட்டதும், கனபாடிகள் கிட்டா வரும் என்ற திசையை நோக்கி “வா கிட்டா, எல்லாரும் க்ஷேமம்தானே? மூர்த்தியைப் பார்த்தயா?” என்று ஆவல் பொங்கக் கேட்டார்.
“போன முதல் நாளே பார்த்துட்டேன். மாப்பிள்ளை காசி யாத்திரை போறப்ப அவனே குறுக்கே வந்து சேர்ந்தான்! அப்புறம் நாலு நாளும் என்னோடதான் இருந்தான்.
‘வேதத்தைப் பாதில விட்டுட்டு நடுத்தெருவில நிக்கறேண்டா, கிட்டு! திடீர்னு விளக்கணைஞ்சு இருட்டில தவிக்கற மாதிரி இருக்கு. நீதான் உதவி பண்ணணும்’னு கேட்டான். எங்க மாமா கிட்டப்பாவிடம் அழைச்சுண்டு போய் அவனைப்பத்தி சொன்னப்போ ‘அதுக்கென்னடா! நம்ம பாட சாலைலயே சேர்த்துட்டாப் போச்சு. அச்சுத கனபாடிகள் கவனிச்சுக்குவார். கவலைப்படாதேன்னு ரொம்ப சுலபமா பிரச்னையைத் தீர்த்துட்டார். மூர்த்தியைப் பத்தி நிறையவே தெரியும்னு வேற சொன்னார்.”
“அப்படியா! அச்சுத கனபாடிகள் பாடசாலைல சேர்ந்திருக்கானா? ரொம்ப சந்தோஷம்! அவர் சாஸ்திர சிரோமணி. பிரகஸ்பதின்னு சொல்லுவா.”
மகிழ்ச்சியில் திளைத்த கனபாடிகள் கமலாவை அழைத்து “கேட்டயா கமலா! மூர்த்தி தஞ்சாவூர் வேத பாடசாலைல சேர்ந்திருக்கானாம். என் வயிற்றில் பால் வார்த்த மாதிரி இருக்கு! பாகீரதிக்குத் தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவா. அவளைக் கூப்பிடு இங்கே! இன்னைக்கு ஸ்வாமி நைவேத்தியத்துக்கு பால் பாயசம் பண்ணச் சொல்லணும்!” என்று மகிழ்ச்சிப் பெருக்கில் திக்குமுக்காடினார்.
“மூர்த்தியானா உங்ககிட்ட சொல்லிக்காமப் போயிட்டான்! நீங்களோ அவன் மேல உயிரையே வெச்சிருக்கேள்!” என்றான் கிட்டா!
“இவனுக்கு நீங்கதான் மாதா பிதா குரு தெய்வம் எல்லாம் என்று சொல்லி மூர்த்தியை அவன் தகப்பனார் என்னிடம் ஒப்படைச்சுட்டுப் போனார். மூர்த்தி காணாமப் போனதும் அவருக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம தவிச்சுப் போனேன். தினம் தினம் பகவானைப் பிரார்த்தனை பண்ணிண்டிருந்தேன். என் பிரார்த்தனை வீண்போகலே. ஸ்வாமி செவி சாய்ச்சுட்டார்!”
பாகீரதி, முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இன்றி சாதுவாக வந்து நின்றாள்.
“ஏண்டா,மூர்த்தியை இங்க அழைச்சுண்டு வரதுதானே? இங்க எல்லாரும் அவனைப் பாக்கறதுக்கு ஏங்கிப் போயிருக்கான்னு சொல்றதுதானே!” என்று பாகீரதியை ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டே கிட்டாவைக் கேட்டாள் கமலா.
“சொல்லாம இருப்பனா! புதுக் கன்னுக்குட்டிக்கு உன் பேரைத்தாண்டா வெச்சிருக்கோம். பாகீரதிதான் வைக்கச் சொன்னான்னுகூடச் சொல்லிப் பார்த்தேன். ஆனா அவன் எதுவுமே பேசலே. இடிச்ச புளியாட்டம் இருந்துட்டான்” என்றான் கிட்டா.
“அவன் எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும் க்ஷேமமா இருந்தா சரி. நம்மையெல்லாம் மறந்தாலும் வேதத்தை மறக்காம இருக்கானே, அது போதும் எனக்கு!” என்று பரம திருப்தியோடு பேசினார் கனபாடிகள்.
“சும்மா சொல்லக் கூடாது. வேதத்துல அசைக்க முடியாத நம்பிக்கை வெச்சிருக்கான். பக்தின்னா கொஞ்ச நஞ்சமில்லே. உலகத்துலயே வேதம்தான் பெரிசுங்கற அளவுக்குப் பெரிய ஞானி மாதிரி பேசறான்” என்றான் கிட்டா.
”எனக்குத் தெரியும். மகா உத்தமமான பையன்டா அவன். ம்..ஏதோ ஒரு கெட்ட வேளை அவனை ஆட்டிப் படைக்கிறது. கிட்டா, நீ போய் சீக்கிரம் ஸ்நானத்தை முடிச்சுண்டு வா. நேரமாறது” என்று சொல்லி அனுப்பினார்.
தோட்டப்பக்கம் போன கிட்டாவை பாகீரதி வழியில் மடக்கி “மூர்த்தி என்னைப் பத்தி ஏதாவது சொன்னானா?” என்று குரலைத் தாழ்த்திக் கேட்டாள்.
“ஒண்ணும் சொல்லலை. பட்டுவேட்டியையும் புஸ்தகத்தையும் கொடுத்தேன். வாங்கிண்டான். அவ்வளவுதான்”
“யார் கொடுத்தான்னுகூடக் கேட்கலையா?”
“நானே சொல்லிட்டேன்.”
“அதுக்கு என்ன சொன்னான்?”
“அதுக்கும் ஒண்ணும் சொல்லலை. முகத்தில் ஒரு திருப்தி மட்டும் தெரிஞ்சுது!”
“என்னைப் பத்தி ஒரு வார்த்தைகூடப் பேசலையா!”
“பேசலையே!”
“அப்புறம்?…”
“உள்ளே போயிட்டு கொஞ்ச நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்து பாக்கறேன். அந்த புஸ்தகத்துக்கு நீ போட்டிருந்த அட்டையைக் கிழிச்சுப் போட்டிருந்தான். ஏண்டா அட்டை போட்டா உனக்குப் பிடிக்காதோன்னு கேட்டேன். பதில் மழுப்பலா ஒரு சிரிப்பு அதோடு சரி!”
பாகீரதி முகம் பிரகாசமாயிற்று. அம்மாடி! அட்டையைப் பிரிச்சுப் பார்த்திருக்கான்’ என்பதில் ஏற்பட்ட மகிழ்ச்சி அது!
“அவனுக்கு அட்டை போடறதும் பிடிக்காது; சட்டை போடறதும் பிடிக்காது!” என்று கேலியாகச் சொல்லிச் சிரித்துக் கொண்டே போய் விட்டாள்.
மேல வீதி பங்காரு காமாட்சி அம்மன் கோயிலுக்குப் போய் கோபுரம் தரிசித்து பிரதட்சிணமாக நடந்து போனபோது ஆலயமணியின் ரீங்காரம் மூர்த்தியை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது.
வெள்ளிக்கிழமை சந்தியாகால பூஜை நேரம். தேங்காய், புஷ்பம், சுற்பூரத் தட்டுடன் சந்நிதியில் போய் நின்றான்.
“அர்ச்சனையா, தீபாராதனையா?” அர்ச்சகர் கேட்டார்.
“அர்ச்சனை!”
“பேர், நட்சத்திரம், கோத்ரம்?”
“அம்மன் பேருக்கே பண்ணிடுங்க…”
அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை முடித்து கற்பூர ஹாரத்தி காட்டி தட்டுடன் மூர்த்தியிடம் வந்து நின்றார் குருக்கள்.
மஞ்சுவின் உடல்நிலை தேறி பழையபடி கழைக்கூத்து செய்யத் தொடங்கினால் சுவாமிக்கு அர்ச்சனை செய்வதாக மூர்த்தியின் பிரார்த்தனை.
கோயிலிலிருந்து சத்திரத்துக்குப் போகும் வழியில் ஒரு முழம் தஞ்சாவூர்க் கதம்பம் வாங்கிக் கொண்டான். ‘கதம்பம் என்றால் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்!’ என்று அவனுக்குத் தெரியும்.
சத்திரத்து வாசலில் குதிரை வண்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. வண்டிக்குள் பாண்டு வாத்தியக்காரர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
வண்டி மீது ஒட்டப்பட்டிருந்த போஸ்ட்டர் ‘தஞ்சைக்கு கேரள சர்க்கஸ் விஜயம்’ என்று சொல்லிற்று.
சத்திரத்துக்குள் போனபோது அங்கே மஞ்சு யாரோ ஒரு கேரளாக்காரனுடன் பேசிக் கொண்டிருந்தாள். பார்வைக்கு சர்க்கஸ்காரன் போலிருந்தான்.
அழகாக, அரும்பு மீசையுடன் ஒரு நிர்வாகிக்குரிய மிடுக்குடன் காணப்பட்டான்.
மஞ்சுவின் திறமை பற்றி கேள்விப்பட்டு அவளைத் தன்னுடைய கம்பெனியில் சேர்த்துக் கொள்வதென்ற நோக்கத்தோடு வந்திருந்தான். தன் கம்பெனியிலுள்ள வசதிகள் கட்டுப்பாடுகள் பற்றியும் மஞ்சு மயங்கிப் போகும் அளவுக்குப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தான்.
“வெய்யில் மழையில் தெருத் தெருவாக மூட்டையைத் தூக்கிக்கொண்டு அலையறது ஒரு பொழைப்பா! சர்க்கஸ்ல சேர்ந்தா கௌரவமா வாழலாம். உங்கப்பாவுக்கு வயசாச்சு. உனக்கு ஒரு பாதுகாப்பான இடம் வேணாமா? உன்னாட்டம் நிறையப் பெண்கள் என் கம்பெனில வேலை உனக்கு அங்க நல்ல எதிர்காலம் இருக்கு. யோசிச்சு முடிவு செய்றாங்க. சொல்லு” என்று அவன் கூறிக் கொண்டிருந்தபோதுதான் மூர்த்தி கோயில் பிரசாதத்துடன் அங்கு போய்ச் சேர்ந்தான்.
“வா, மூர்த்தி! நல்ல நேரத்துக்கு வந்தே!தட்ல என்ன?” என்று கேட்டாள் மஞ்சு.
“காமாட்சியம்மன் கோயிலுக்குப் போய் அர்ச்சனை பண்ணி பிரசாதம் கொண்டு வந்திருக்கேன்.”
பிரசாதத்தை அவளிடம் கொடுத்தான்.
“நல்ல சகுனம்! சாமிப் பிரசாதம்கூட வந்திருக்கு!” என்றான் சர்க்கஸ்காரன்.
“இவர் சர்க்கஸ் கம்பெனிலிருந்து வந்திருக்கார். என்னை சர்க்கஸ்ல சேரச் சொல்றார்!” என்று மூர்த்தியின் முகத்தைப் பார்த்தாள் மஞ்சு.
“நீ என்ன சொன்னே?”
“நா ஒண்ணும் சொல்லலே. உன் அபிப்ராயத்தைச் சொல்” என்றாள்.
“உங்க அப்பாவும் நீயும் முடிவு செய்ய வேண்டிய விஷயம் இது, இதல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு?”
மஞ்சு இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. மூர்த்தி அக்கறை காட்டாமல் பேசியது அவளுக்கு வருத்தமாயிருந்தது.
“எதுக்கும் நீங்க நாளைக்கு வாங்கய்யா. பேசிக்குவம்” என்று சர்க்கஸ் ஆசாமியிடம் சொல்லி அனுப்பிவிட்டாள்.
மூர்த்திக்கு அவனை அறியாமல் அந்த சர்க்கஸ்காரன் மீது ஒரு வெறுப்பு தோன்றியது. பொறாமையாகவும் இருந்தது.
“நேரமாச்சு, மஞ்சு! போயிட்டு நாளைக்கு வந்து பாக்கறேன். பாடசாலைல காத்திண்டிருப்பா” என்று சொல்லிப் புறப்பட்டான் மூர்த்தி.
மஞ்சுவிடம் தனக்குள்ள உரிமை என்ன, உறவு என்ன என்பதை மூர்த்தியால் திட்டவட்டமாகப் புரிந்துகொள்ள முடிய வில்லை.ஆயினும் மஞ்சு தன்னைவிட்டு விலகிச் செல்வதுபோல் உணர்ந்தான்.
‘மூர்த்தி! நீதானே வேதம், வேதம்னு சொல்லிண்டு அவளை விட்டு விலகிப்போயிருக்கே? நன்னா யோசிச்சுப் பார்! அவளாகவா விலகிச் செல்கிறாள்! அவள் இதுவரை உன்னைத்தானே நம்பிக் கொண்டிருந்தாள். நீ வேத பாடசாலையில் சேர்ந்தப்புறம் தானே அவள் நம்பிக்கை குறைய ஆரம்பிச்சிருக்கு? சர்க்கஸ்காரன் அவளுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகச் சொல்கிறான். பாதுகாப்பு இருக்கிறது என்று அழைக்கிறான். நீதான் அவள் கேள்விக்குச் சரியான பதில் சொல்லாமல் அந்த சர்க்கஸ்காரனைக் கண்டு பொறாமைப்படுகிறாய்? இப்ப சொல். விலகிப் போறது நீயா, அவளா?’ என்று மூர்த்தியின் உள் மனம் கேட்டது.
‘உண்மைதான்; மஞ்சுவிடமிருந்து நான்தான் விலகி வந்திருக்கேன், வேதத்தின் மீதுள்ள பற்றுதல் காரணமா அவள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாம் வந்திருக்கேன். இப்போது அவள் சர்க்கஸ் கம்பெனியில சேருவதற்கு சரியாக பதில் சொல்லாமல் அலட்சியமா வந்தது என் தப்புதான்’ என்றது இன்னொரு மனம்.
இந்த எண்ணங்கள் அவனைக் குழப்பத்தில் ஆழ்த்த, ஒரு முடிவுக்கும் வர முடியாமல் மேலும் சிந்தித்தவாறு சப்தரிஷி பாடசாலையை அடைந்தான்.
மூர்த்திக்காகக் காத்திருந்த அச்சுத கனபாடிகள் இவனைக் கண்டதும் “மூர்த்தி! சாயந்தரம் வெள்ளிக்கடை. கிட்டப்பா உன்னைத் தேடிண்டு வந்திருந்தார். நீ கோயிலுக்குப் போயிருப் பதாச் சொன்னேன். அவசரமா உன்னைப் பார்க்கணுமாம்” என்றார்.
அப்படி என்ன அவசரமாம்? யாராவது என்னைத் தேடிண்டு வந்திருப்பளோ? யார் வந்திருப்பா?” என்று
யோசித்தான் மூர்த்தி.
அத்தியாயம்-16
“அப்பா, கமலா காஞ்சீபுரம் போறாளாம்!” என்று சொல்லிக் கொண்டே வந்தாள் பாகீரதி.
“ஏன்? என்ன அவசரமாம் அவளுக்கு?” என்று கேட்டார் கனபாடிகள்.
“வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆறதே! இத்தனை நாள் தங்கியிருந்ததே அதிசயம்!”
“வாஸ்தவம்தான் அவள் எங்க இப்போ?”
“அம்புலுவைக் குளிப்பாட்டப் போயிருக்கா. மத்தியானம் பஸ்ஸுக்கே போகப் போறாளாம்.”
“கிட்டாவையும் காணலையே?”
“தோட்டத்துலேந்து கொஞ்சம் கத்தரிக்கா பறிச்சிண்டு வரச் சொன்னேன். கமலா போறப்போ கொடுத்தனுப்பலாம்னு. மழை இல்லாம தோட்டமே வறண்டு கிடக்கு.’
“அத பார், அக்கூ பட்சி கத்தறது. அது கத்தினா மழை வரும்னு சொல்லுவா.
“அது தினம்தான் கத்தறது. ஆனா அந்த மழைக்குத்தான் காது கேட்கலை! இப்படியே காஞ்சுதானா பயிர் பச்சையெல்லாம் வாடவேண்டியதுதான். தாது வருஷத்துப் பஞ்சம்னு சொல்வாளே, அந்த மாதிரி ஆயிடுமோ, என்னவோ?” என்றாள் பாகீரதி.
“உலகத்துல அக்கிரமம் அதிகமாயிடுத்து. அதான்” என்றார் கனபாடிகள்.
கமலா வந்தாள்.
“காஞ்சீபுரம் போறயாமே? போயிட்டு வா. ஒன்பது பத்தரை ராகுகாலம். அதுக்கப்புறமா புறப்படு. துணைக்கு யாரு?” என்று கேட்டார் கனபாடிகள்.
“நொண்டி கிட்டாதான்…” என்றாள் கமலா.
“அங்கஹீனமானவாளை நொண்டி, கூனன், குருடன்னு சொல்லக் கூடாது. அவா மனசு கஷ்டப்படும். அது பாவம் மில்லையா? கிட்டாவுக்குச் சின்ன வயசுல இளம்பிள்ளை வாதம் வந்து கால் ஊனமாயிடுத்து. ஆனாலும், அவன் மாதிரி யாரால் வேகமா நடக்க முடியும்?”
மூட்டை முடிச்சுகளைக் கொண்டு போய்த்திண்ணையில் வைத்துவிட்டு, சவாரி வண்டி அழைத்து வரப்போனான். கிட்டா.
பாகீரதி உள்ளே போயிருந்த சமயம் பார்த்து கமலா அப்பாவின் காதில் கிசுகிசுத்தாள்:
“அப்பா, நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும். ஏதோ நடந்திருக்கு. ஆனா எதையும் தீர்மானிக்க முடியலை. அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துடாதீங்க!”
பாகீரதி கொண்டு வந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்ட கமலா, “வரேன் பாகீரதி! ஒரு மாசமா சேர்ந்து இருந்துட்டு இப்ப பிரியறதுக்கு கஷ்டமாயிருக்கு” என்று சொல்லும்போதே கமலாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
“பஸ்ஸுக்கு நேரமாச்சு,புறப்படு” என்று துரிதப்படுத்திய கிட்டா மூட்டைகளை வண்டியில் ஏற்றினான். பாடசாலைப் பிள்ளைகள் கும்பலாக வாசலுக்கு வந்து வழி அனுப்பி வைத்தார்கள். எல்லாருக்கும் கமலா காசு கொடுத்தாள்.
அவள் புறப்பட்டுப் போனதும் பாடசாலையே வெறிச்சோடி விட்டது.
கனபாடிகள் ஒரு சூன்யமான நிலையில் உள்ளே போகப் பிடிக்காமல் திண்ணையிலேயே சாய்ந்துகொண்டார்.
புழுக்கம் அதிகமாகியிருந்தது. எழுந்துபோய் ஆகாசத்தைப் பார்த்தார். வடமேற்கில் இருண்டிருந்த கருமேகம் இப்போது முழுமையாய்க் கரைந்து போயிருந்தது. மரங்களில் சருகுகள் இங்கொன்று அங்கொன்றாய் உதிர்ந்து கொண்டிருந்தன. அக்கூ பட்சி மட்டும் பிடிவாதமாக இன்னமும் கத்திக் கொண்டிருந்தது.
இச்சமயம் ஏழெட்டு பிராம்மணர்கள் கூட்டமாக வந்து கனபாடிகளைப் பார்த்து கைகூப்பி வணங்கினார்கள்.
“இந்த பதைபதைக்கிற வெயில்ல எல்லாருமா எங்க இவ்வளவு தூரம்…?” என்று இழுத்தாற்போல் கேட்டார் கனபாடிகள்.
“மழையே இல்லாம ஏரி குளமெல்லாம் வறண்டு போச்சு. பயிர் பச்சையெல்லாம் பாழாப் போயிடும் போல இருக்கு, ஆடு மாடெல்லாம் ஒவ்வொண்ணா செத்துண்டிருக்கு. நீங்கதான் காப்பாத்தணும்” என்றார்கள்.
“நான் என்ன பண்ண முடியும்?” என்று கேட்டார் கனபாடிகள்.
“உங்க வாயால விராடபர்வம் வாசிச்சா போதும்! மழை கொட்டு கொட்டுன்னு கொட்டிடுமே!” என்றார்கள்.
‘விராட பர்வம் யார் வாசிச்சாலும் மழை வரும்! அந்தக் கதையின் மகிமை அப்படி” என்றார் கனபாடிகள்
“இருக்கலாம். ஆனா உங்க மாதிரி யாகம் பண்ணவா, வாயால் சொன்னா சாஸ்திரம் படிச்சவா, வேதம் ஓதினவா அதனுடைய மகிமையே தனி” என்றார்கள்.
“நீங்கள்ளாம் கொஞ்ச நாளைக்கு முன்னால எங்கிட்ட சாஸ்திர விளக்கம் கேட்க வந்தப்போ நான் சொன்ன தீர்ப்பு உங்களுக்குப் பிடிக்கல. அதுக்காக என் மேல கோபப்பட்டு என்னையே பாய்காட் பண்ணப் போறதாப் பேசிண்டேளாம். நான் சாஸ்திரம் படிச்சவன் வேதம் ஓதினவன் என்பதெல்லாம் உங்களுக்கு அப்பத் தெரியாமப் போச்சு. இப்ப மழை வேணுங்கறப்ப மட்டும் தெரியறது இல்லையா? தயவுபண்ணி என்னை மன்னிச்சுடுங்க. என்னை பாய்காட் பண்றேன்னு சொன்ன உங்களை இப்ப நான் பாய்காட் பண்றேன். விராட பர்வம் வாசிக்கறதுக்கு வேற ஆளைப்பாருங்க. என்னால் முடியாது” என்று கோபமாகச் சொல்லிவிட்டு எழுந்தார்.
”அப்படியா சொல்றேள்? முடிவான வார்த்தைதானா?” என்று கொஞ்சம் கோபமாகவே குரல் கொடுத்தார் ஒருவர்.
”அதான் சொல்லிட்டனே! நான் வாசிக்கப் போறதில்லை. முடிவாத்தான் சொல்றேன்.”
“சரி, வாங்கய்யா போகலாம். அவர்தான் சொல்லிட்டாரே! அப்புறம் என்ன? அடுத்தாப்பல நாம செய்ய வேண்டியதைச் செஞ்சுக்குவம்” என்றார் இன்னொருவர்.
“வெய்யில் வேளையில் வந்திருக்கீங்க. தாகத்துக்கு ஏதாவது சாப்பிட்டுவிட்டுப் போங்க” என்றார் கனபாடிகள்.
“உங்க வீட்ல இனி பச்சைத் தண்ணிகூடக் குடிக்க மாட்டோம்; ஆமாம், நாங்க வரோம்” என்று அத்தனை பேரும் விறைப்பாகப் புறப்பட்டார்கள்.
“விராட பர்வம் வாசிக்கறதுக்கு மட்டும் நான் வேணுமோ? ஊரார்னா இந்த பிராம்மணாள் மட்டும்தான் ஊராரா? குடியானவாளெல்லாம் வரலையே! அவாதானே பயிர் பண்றவா? அவாளும் சேர்ந்து வந்து கேட்டிருந்தா, நான் ஒத்துண்டிருப்பேன். எதுக்காக இந்த பிராம்மணாள் மட்டும் தனியா ஒதுங்கி வந்து கேட்கணும். இதல ஏதோ உள்நோக்கம் இருக்கு!” என்று சந்தேகப்பட்டார் கனபாடிகள்.
அன்புள்ள அத்தைக்கு…
பின்கட்டுத் தாழ்வாரத்தில் அமர்ந்து பேனாவை உதறி உதறி கௌரி அத்தைக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள் பாகீரதி.
திடீரென்று பாடசாலைப் பிள்ளைகள் “அதோ மூர்த்தி வந்துட்டான்!” என்று உற்சாகம் பொங்கக் கூவினார்கள்!
“யாருடா? நம்ப மூர்த்தியா” என்று ஆவலோடு கேட்டுக் கொண்டே வாசல் பக்கம் பார்த்தார் கனபாடிகள்.
மூர்த்தியும், அவனோடு கூனல் விழுந்த ஆசாமி ஒருவரும் உள்ளே வராமல் வாசலிலேயே தயங்கித் தயங்கி நின்றனர்.
“உள்ளே வாடா! வழி தெரிஞ்சுதா உனக்கு! தஞ்சாவூர் லேந்தா வறே? இவர் யாரு?” என்று எதிர்பாராத மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார் கனபாடிகள்.
வெட்கமும், அச்சமும், குற்ற உணர்வும் மூர்த்தியைத் தலைகுனிய வைத்தன. சாஷ்டாங்கமாய் அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து, “என்னை மன்னிச்சுடுங்கோ! உங்ககிட்ட சொல்லிக்காமப் போனது மகா பெரிய தப்பு. உங்க வாயாலே மன்னிச்சேன்னு சொன்னாத்தான் என் மனசு ஆறும்” என்றான் மூர்த்தி.
“எனக்குத் தெரியும், நீ எந்தத் தப்பும் பண்ண மாட்டேன்னு. ‘ஏன் சொல்லிக்காமப் போனே? எதுக்கு இங்க மறுபடியும் வரமாட்டேங்கறே?’ என்றெல்லாம் உன்னை நான் கேட்கப் போறதில்லே. உன் பேரில் எனக்கு வருத்தமோ கோபமோ கிடையாது. உன் இஷ்டப்படியே நீ தஞ்சாவூர்லயே படி. எங்க இருந்தாலும் வேதத்தை மறக்காதே. அவ்வளவுதான் நான் வேண்டுவது” என்றார்.
“வெள்ளிக்கடை கிட்டப்பா இந்த லெட்டரை உங்கட்ட கொடுக்கச் சொன்னார்” என்று கவர் ஒன்றைக் கொடுத்தான்.
“இவர் யார்னு சொல்லலையே!”
“சப்தரிஷி பாடசாலைல சமையல் வேலை செஞ்சிண்டிருந்தார். இங்க சமையலுக்கு ஆள் வேணும்னு நீங்க கேட்டிருந்தேளாம் கிட்டப்பாதான் இவரை என்னோடு கூட்டி அனுப்பிச்சார். இவரைக் கொண்டுவிட்டுட்டு கனபாடிகளிடம் பேசிட்டுவான்னு சொல்லி அனுப்பிச்சார். ஆனந்த ராவ்னு பேர்.”
“ராவ்ஜியா! என்ன வயசு?” என்று கேட்டார் கனபாடிகள்
“அறுபது வயசு முடியப் போறது!” என்றார் ராவ்ஜி.
“நன்னா சமைப்பேளா?”
“கிட்டப்பாவையே கேட்டுப் பாருங்க; நான் ரசம் பண்ணா டம்ளர்ல வாங்கிக் குடிச்சுட்டு உம்ம பேர் ஆனந்த ராவ் இல்லே, பிரம்மானந்த ராவ்னு சொல்லுவார்!” என்றார் ராவ்ஜி.
“கிட்டப்பா, எப்பவுமே தமாஷாத்தான் பேசுவார். மூர்த்தி! இவரை உள்ளே அழைச்சிண்டு போ. பாகீரதியைப் போய்ப் பார் முதல்ல” என்றார். அவர்களிருவரும் உள்ளே போனதும் கவரைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார்.
கனபாடிகள் ‘பாகீரதியைப் போய்ப் பார்’ என்று சொன்னதும் மூர்த்தி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டான். ‘அவள் முகத்தில் எப்படி விழிப்பது? என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது?’ என்று யோசித்தபடியே பின் பக்கம் போனபோது, அங்கே சொர்ண விக்கிரகம் போல் நின்று கொண்டிருந்த பாகீரதி மூர்த்தியைக் கண்டதும் மகிழ்ச்சிக் குரலில் ”வா, மூர்த்தி! சௌக்கியமா? கிட்டா உன்னைப் பத்தி எல்லாம் சொன்னான்” என்றாள்.
– தொடரும்…
– வேத வித்து, முதற் பதிப்பு: மே 1990, சாவி பப்பிளிகேஷன், சென்னை.