ராமலிங்க வாத்தியார்

0
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 10,618 
 
 

ராமலிங்க வாத்தியாருக்குப் பெருமிதமாக இருந்தது. கிட்டத்தட்ட மூன்று, நான்கு ஆண்டுகள் முன்பு வரை இப்படி ஒரு கிராமமே இந்திய தேசப்படத்துக்குத் தெரியாமலிருந்த நிலை மாறி, இன்றைக்குப் புஞ்சை மேடு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு, சுற்றிலும் வேலி போடப்பட்டு, நீல நிற அறிவிப்புப் பலகைகளுடன் காட்சியளித்தது. நிறைய ஜீப்கள், வேன்கள் அந்த இடத்துக்கு வர ஆரம்பித்துவிட்டன.

முருகேசுவின் டீக்கடை முன்னால் உள்ளூர்க்காரர்கள் டீயும் பீடியுமாக உட்கார்ந்திருந்தார்கள். ராமலிங்கத்தைப் பார்த்ததும், உட்கார்ந்திருந்த இளவட்டங்கள் பீடியைச் சுண்டியெறிந்துவிட்டு, டீ குடிப்பது மாதிரி பாவ்லா செய்தனர்.

கடைக்கு முன் சென்று தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்தார் வாத்தியார்.

ஒருவன் அவசர அவசரமாகத் திண்ணையிலிருந்து எழுந்து, ”இப்படி வந்து உக்காருங்க வாத்தியாரே” என்றான்.

”பரவால்லேப்பா! இப்ப உட்கார்ந்திருக்கற இடம் ஒண்ணும் சாதாரண இடம் இல்லேப்பா… பாண்டியன் முடத்திருமாறன் ஆண்ட இடம்” என்றார் வாத்தியார்.

இளைஞர்கள், தர்மசங்கடத்துடன் ஒருவரையருவர் பார்த்துக்கொண்டனர்.

இந்த நேரத்தில்தான் சாமிக்கண்ணு ஒரு ஆளுடன் வந்தான்.

”ரெண்டு சாயா குடு முருகேசு…” என்ற சாமிக்கண்ணு, திரும்பிப் பார்த்தான்.

ராமலிங்க வாத்தியார் உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததும் அவனுக்கு எரிச்சல் வந்தது.

”இதப் பாரு சாமிக்கண்ணு… காசு இருந்தா டீ குடி, இல்லேன்னா சும்மா தொங்காதே… ஒரு மாசமா, ரெண்டு மாசமா… ஆறு மாசப் பாக்கி…” என்றான் முருகேசு.

சாமிக்கண்ணுவுக்கு ஏகப்பட்ட கோபம் வந்துவிட்டது. தனியாக வந்திருந்தால்கூட இந்தப் பேச்சை அவன் சகித்துக்கொண்டு போயிருப்பான். ஆனால், கூட ஒரு விருந்தாளி, பக்கத்தூரிலிருந்து வந்திருக்கிற அவனது உறவுக்காரர். அவருக்கு முன்னாடியே தன்னை இப்படி முருகேசு அவமானப்படுத்தியது அவனுக்கு அசிங்கமாக, தலைக்குனிவாக இருந்தது. வேட்டி மடிப்புக்குள் வைத்திருந்த மாடு விற்ற பணத்தில் ஒரு முழு நூறு ரூபாய்த் தாளை எடுத்து முருகேசுவின் முன் வீசினான்.

”எலே முருகேசு… இந்தா, உன் பிச்சைக் காசு… எடுத்துக்க. மனுஷனுக்கு மானம்தான்டா முக்கியம். ரெண்டு வருஷம் முன்னாடி நீ எப்படி இருந்தேன்னு நெனைச்சுப் பாரு. இன்னிக்கு உனக்குப் பவுசு வந்துருச்சுன்னு ஆடாதே…” என்று முருகேசுவைப் பார்த்துத் திட்டியவனின் ஆத்திரம், ராமலிங்க வாத்தியார் மீது பாய்ந்தது. ”எல்லாம் இந்தக் கெழட்டு வாத்தியான் இருக்கான்ல… அவனால வந்ததுடா இது. உன்னை என்ன சொல்றது… இந்தக் கெழட்டு வாத்தியானைச் சொல்லுணும்டா. சும்மா அப்புராணியா உழுது பொழைச்சிட்டிருந்த என் பொழைப்பைக் கெடுத்தான்ல. அதனால நீ இதுவும் பேசுவே… இதுக்கு மேலயும் பேசுவே” என்றான் ஆத்திரத்துடன்.

‘என்னமோ நடக்கப்போறது’ என்ற தவிப்புடன், டீக்கடையில் இருந்தவர்கள் எதிர்பார்த்தபடி இருக்க, ”என்னப்பா சாமிக்கண்ணு, நான் உன் பொழைப்பைக் கெடுத்தேனா… என்னப்பா சொல்றே?” என்றார் வாத்தியார் அமைதியாக.

”யோவ்..! இந்த எகடாசியெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதே! உன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுய்யா… பரம்பரை பரம்பரையா உழுது பொழைச்சிட்டிருந்த அந்த மேட்டுப் புஞ்சையை கவர்மென்டுக்காரங்ககிட்ட நீதான்யா புடுங்கிக் குடுத்தே.”

”நான் எப்படிப்பா கொடுக்க முடியும்? அரசாங்கம், அதுக்குத் தேவைப்பட்டதுன்னா, எந்த நெலத்தையும் எடுத்துக்கலாம்னு சட்டமே இருக்கே. அதுவும் போக, அரசாங்கம் எடுத்ததனால நம்ம ஊருக்குத்தானே இப்ப பேரு!”

”நீதானேய்யா கவர்மென்டுக்கு எழுதிப் போட்டே. அதனாலதானே அந்த ஆக்காலசிகாரன் வந்து மயிரு மட்டைன்னு தோண்டிப் போட்டான். கோயிலைக் கண்டுபுடிச்சானாம், குளத்தைக் கண்டுபுடிச்சானாம். எவன்யா இதெல்லாம் இல்லேன்னு அழுதான். சரி, எடுத்ததுதான் எடுத்துக்கிட்டான், அதுக்கு நஷ்டஈடாவது வாங்கிக் குடுத்தியா நீ?”

”அது நத்தம் புறம்போக்கு நெலம்ப்பா. பட்டா இல்லாதது. உனக்குப் பட்டா இருந்தா நஷ்டஈடு வாங்கலாம்… பட்டா இல்லேன்னா, அனுபவப் பாத்தியதையைக் காட்டி எழுதிக் கேட்கலாம். அரசாங்கம் தந்தாலும் தரலாம். அதுக்கும் முயற்சி பண்ணிட்டிருக்கேன்” என்றார் ராமலிங்கம்.

முருகேசுக்கு, சாமிக்கண்ணு மீது கோபம் வந்தது. ”என்னா சாமிக்கண்ணு! வரமொறை இல்லாமப் பேசிட்டிருக்கே. உம் புஞ்சைக்காட்டை மட்டுமா எடுத்துட்டாங்க. ஊர்ல பாதிப்பேரு காட்டையும்தான் எடுத்துட்டிருக்காங்க. வாத்தியார் என்ன, உன்னை மோசம் செஞ்சுட்டு தனக்கா எடுத்துட்டிருக்காரு? சும்மா ஒரு அப்புராணி மனுஷரை மெரட்டறியே!” என்றான்.

”சித்த சும்மா இரு முருகேசு. சரி சாமிக்கண்ணு… புஞ்சைக் காடு புஞ்சைக் காடுன்னு புலம்பறியே! அந்தப் புஞ்சைக் காடுதானப்பா பாண்டியன் முடத்திருமாறன் ரெண்டாயிரம் வருஷத்துக்கு முந்தி முதமுதல்ல கோட்டை கட்டி ஆண்டது. உம்… இதெல்லாம் சொல்லி என்ன ஆகப்போகுது. பேசினா பைத்தியாரன்னு சொல்லுவீங்க” – ராமலிங்கம், மௌனமாக எழுந்து நடந்தார். அவருக்கு சாமிக்கண்ணு மேல் கோபம் வரவில்லை. மாறாக, அனுதாபம் எழுந்தது. நிலம் பறிபோன ஆத்திரத்தில் அவன் இப்படிப் பேசுகிறான் என்றும் புரிந்தது.

ராமலிங்கம், ஓய்வுபெற்ற ஆசிரியர். சரித்திரம் என்றால் அவருக்கு இஷ்டம். அதற்கேற்ற மாதிரி, அந்த ஊர் புஞ்சைக் காட்டுத் திடல் வேறு அவரைப் பல வருஷங்களாக ஆர்வம் ஊட்டிக்கொண்டிருந்தது. அதைப் புஞ்சையாக்கி உழுதவர்களில் சிலர் உழுதுகொண்டிருந்த போது, சின்னச் சின்னக் காசுகளைக் கண்டெடுப்பார்கள். அதைத் தெரிந்துகொண்டு ராமலிங்கம் அவற்றைச் சேகரித்து ஆராய்ச்சி செய்வார். காசுகள் புராதனமானவை. சாதாரணமாக, அதில் என்ன இருக்கிறதென்று யாருக்கும் தெரியாது. ராமலிங்க வாத்தியாரின் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, புராதனக் காசுகளில் புதைந்துகிடக்கும் செய்திகளை அறியவைத்தது.

”எலே முருகேசு… இது பாண்டிய ராசா காலத்துக் காசு டோய்!” என்று ஒருநாள் கண்டுபிடித்த ஆர்வத்தில் ஆர்க்கிமிட்டிஸ் போல (வேட்டியோடுதான்!) கூவி அழைத்தார்.

அந்த மனுஷர்களுக்கு அதில் ஆர்வம் இல்லை. முத்துராசு கேட்டான்: ”அந்தக் காசுல பீடி வாங்க முடியுமா வாத்தியாரே…” என்று.

”எலே போக்கத்த பயலே… இந்தக் காசு பாண்டிய ராசா காசுடா. நாம நிக்கிற இடம் பாண்டியன் நின்ன இடம்டா. இந்தப் பூமியோட புனிதம் தெரியாம பேசறியேடா மரமண்டை” என்பார் வாத்தியார்.

புஞ்சைத் திடல் பற்றி தொல்பொருள் துறைக்காரர்களுக்கு எழுதிப் போட்டார். அவர்கள் வந்து பார்த்துப் பேசினார்கள். பாண்டியன் முடத்திருமாறன் அரசாண்ட இடம் என்பதை அவர்கள் மறுத்தார்கள். ”முடத்திருமாறன், இடைச்சங்கம் அழிந்த பிறகு கபாடபுரத்திலிருந்து வந்து முதன்முதலில் அரசமைத்த இடம் இது அல்ல” என்றார்கள். பழைய காசுகளைப் பார்த்து ”இது அவன் காலத்தியது அல்ல; பிற்காலப் பாண்டியர்கள் காலத்தது” என்று உற்சாகமிழக்கச் செய்து கிளம்பிப் போனார்கள்.

அந்த விஷயம் அதோடு நின்றுபோகவில்லை. கிராமத்தை நோக்கி மூன்று இளைஞர்கள் வந்தார்கள்… பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள். இன்னோர் இளைஞன் ஒரு பத்திரிகையாளன். வந்தவர்கள் முருகேசு கடையில் டீ குடித்தார்கள்.

”ஏங்க… நாங்க ஊர்களைப் பற்றிய ஆராய்ச்சி செய்றோம். இந்த ஊரைப் பத்தின வரலாறு தெரியுமா?”

”வரலாறா..? அதெல்லாம் நமக்குத் தெரியாதுங்க. வாத்தியார்கிட்டப் போனீகன்னா, வெலாவாரியா சொல்லுவாரு!” என்றான் முருகேசு.

ராமலிங்கத்துக்கு, அவர்கள் தன்னைத் தேடி வந்தது உற்சாகமாக இருந்தது.

”இந்த ஊர்தாங்க தாய்க் கிராமமா, ஒரு காலத்தில் தலைநகரமா இருந்திருக்கு. என்னோட அனுமானம் என்னான்னா, கபாடபுரம் அழிஞ்ச பிற்பாடு பாண்டியன் முடத்திருமாறன் வடதிசை நோக்கிக் கிளம்பி வந்து, மணலூர்ங்கற இடத்துல ஆட்சி அமைச்சானாம். அந்த மணலூர் இந்த இடத்துலதாங்க அமைஞ்சிருக்கணும். ஏன்னா ஒரு தலைநகரம் அமைஞ்சா, சுற்றுப்புறங்கள்லே பல சிறு குடியிருப்புப் பகுதிகள் ஏற்பட்டதா சரித்திரம் சொல்லுது. இப்ப இந்த ஊரைச் சுற்றி எடுத்துக்கிட்டிங்கன்னா. சுற்றுப்புற ஊர்கள் நிறைய இருக்கு. கிழக்கே ஒரு மைல் தூரத்தில் கொத்தன்குளம்னு இருக்கு. இந்த ஊர்ல கொத்தனார்ங்க நிறைய இருந்தாங்கன்னு சரித்திரம் தெரியாதவங்க சொல்வாங்க. ஆனா, அது கொத்தன்குளமில்லே… கொற்றவன் குளம். ‘கொற்றவன்’னா அரசன்னு அர்த்தம். அப்புறம் பாருங்க… ஊருக்கு வடக்கே பாபாங்குளம்னு இருக்கு. அந்த நாள்லே மன்னர்கள் எல்லாம் அந்தணர்களுக்குப் பலப்பல கிராமங்களை மானியமா அளிச்சிருக்காங்க. அந்தணர்களுக்கு மானியமா வழங்கப்பட்ட கிராமங்களை ‘சதுர்வேதி மங்கலம்’னு கல்வெட்டுகள்ல சொல்லுது.”

”சதுர்வேதி மங்கலம்னா என்ன சார்?” என்று இடைமறித்தான், பரபரப்பாகக் குறிப்பு எடுத்துக்கொண்டிருந்த பத்திரிகையாளன்.

”சதுர்வேதி மங்கல்ம்னா நான்கு வேதங்களையும் கற்று ஓதுகிற அந்தணர்களுக்கு அளிக்கப்பட்ட பகுதி. இப்ப சோழவந்தான்ங்கற ஊர் இருக்கே… அதுகூட ஒரு சதுர்வேதி மங்கலம்தான். அதுக்குக் கல்வெட்டுல இருக்கற பெயர், சோழ குலாந்தக சதுர்வேதி மங்கலம்தான். ‘சோழ குலாந்தக’ என்றால், சோழர் குலத்தை அந்தகம் செய்தவன். இல்லாமல் அழித்தவன்னு அர்த்தம். ‘சோழ குலாந்தக’ என்பதுதான் ‘சோழவந்தான்’னு மாறிப்போயிடுச்சு.”

”அதுக்கும் பாப்பாங்குளத்துக்கும் என்னங்க தொடர்பு?” என்றான் ஆராய்ச்சியாளன்.

”அப்போ அந்தணர்கள் வாழ்ந்த பகுதிதான் அது. பார்ப்பான்குளம் என்று மாறிப்போச்சு.”

”கொச்சைவழக்குன்னு சொல்லுங்க” என்றான் பத்திரிகையாளன்.

”இல்லே தம்பி… பார்ப்பார்ங்கற சொல்லை சிலப்பதிகாரத்திலேயே பார்க்கலாம். ‘பார்ப்பார் அறவோர் பசுபத்தினிப்பெண்டிர்…’ என்று அப்பவே இளங்கோவடிகள் சொல்லியிருக்காரு. அப்புறம் பறையன் குளம். இது பறையடித்துச் செய்தி சொல்பவர்கள் வாழ்ந்த இடம். வேலங்குலம், வில்லியர் ஏந்தல் இதெல்லாம் வேல் வீரர்களும் வில் வீரர்களும் தங்கியிருந்த இடம். இதெல்லாம் வெச்சுப் பார்த்தா, இந்தப் புஞ்சைத்திடல் அந்தக் காலத்தில் பெரிய நகரமா இருந்திருக்கணும்!” என்றார் ராமலிங்கம்.

”அந்தத் திடலை, ராயன்திடல்னு சொல்றாங்களே சார்…” என்றான் ஆராய்ச்சி இளைஞரில் ஒருவன்.

”அது பிற்காலத்துல நாயக்கராட்சி வந்த பிற்பாடு ஏற்பட்ட பேரு.”

”அது சரி… அதுக்கும் முடத்திருமாறனுக்கும் என்ன சம்பந்தம்கிறீங்க…?”

”எனக்குக் கிடைச்ச காசுகள்லே ‘பாண்ட்ய முடத்திருமா…’ என்று வட்டெழுத்துகள் இருக்கு. முடத்திருமாறன் இடைச்சங்கம் இருந்த கபாடபுரத்தைத் தலைநகராகக்கொண்டு, குமரியாற்றுக்கும் தாமிரபரணி யாற்றுக்கும் இடைப்பட்ட பகுதியை ஆண்டவன். அப்போதுதான் இரண்டாவது கடற்கோள் ஏற்பட்டது. அதிலிருந்து தப்பிப் பிழைத்த முடத்திருமாறன், வடதிசை நோக்கி வந்து இந்த இடத்தில் அரசமைக்கிறான். மகாபாரத்தில்கூட ‘மணலூர்’ங்கற இடத்தில பாண்டிய மன்னன் ஒருவன் இருந்ததாச் சொல்லப்படுது. அதுக்குப் பின்னாலதான் முடத்திருமாறன் மதுரையை அமைத்து அதைத் தலைநகராக்கினான். இதை வெச்சுப் பார்க்கிறபோது அந்த மணலூர் இந்த இடத்துலதான் அமைஞ்சிருக்கணும்.”

”இதை ஆர்க்கியாலஜிக்காரங்ககிட்ட சொன்னிங்களா சார்?”

”அ… நம்ம ஆர்க்கியாலஜிக்காரங்க இருக்காங்களே… அவங்களுக்கு ஏதாவது பரபரப்பா செய்தி இருந்தாத்தான் அக்கறையே எடுத்துப்பாங்க. கோவலன் எலும்புக்கூடும்பாங்க. தஞ்சாவூர் சுரங்கப் பாதைம்பாங்க. இல்லேன்னா, எக்ஸ்கவேஷன் பண்றதுக்கு ஃபண்ட் இல்லேன்னு கையை விரிப்பாங்க. நீங்களாவது எழுதுங்க. விடிவுகாலம் பொறக்குதானு பார்ப்போம்!” என்றார் ராமலிங்கம் ஒரு பெருமூச்சுடன்.

வந்த இளைஞர்கள் புறப்பட்டுப் போனார்கள். பல்கலைக்கழக இளைஞர்கள், ஆராய்ச்சி நூல் எழுதினார்கள். பத்திரிகையாளன் ‘தொல்பொருள் துறையின் அலட்சியம்’ என்று வாங்கு வாங்கென்று வாங்கினான். தமிழ்நாடு முழுக்க இது பேசப்படும் செய்தியாக ஆக, தொல்பொருள் துறை சுதாரித்துக்கொண்டு தோண்டிப் பார்த்தது. தோண்டத் தோண்ட அத்தனையும் அற்புத வரலாற்றுச் சுரங்கம். பாண்டியனின் கலாசாரம். பாண்டியனின் கலைக்கோயில், அரண்மனை, நீர்த்தடாகம், பண்டைய பாரம்பரியத்தின் அற்புதச் சின்னங்கள்!

தொல்பொருள் துறை, ‘பாண்டியன் முடத்திருமாறன் அமைத்த நகரம்’ என்று சாவகாசமாக அறிக்கை வெளியிட்டது. கிட்டத்தட்ட 2,000 வருஷப் பாரம்பரியம்மிக்க அற்புத வரலாற்றுச் சின்னங்கள்.

‘கபாடபுரம் கடற்கோளில் அழிந்த பிற்பாடு, முடத்திருமாறன் அமைத்த முதல் தலைநகரைக் கண்டுபிடித்த பெருமை எங்கள் முதலமைச்சரையே சாரும்’ என்று முழங்கினார் மாநில அரசின் அமைச்சர் ஒருவர்.

ராமலிங்கம் கனத்த நினைவுகளில் கரைந்துபோயிருந்தார். ‘இப்படி வரலாற்றுப் புகழ்மிக்க இடத்தில் புஞ்சைப் பயிர் செய்ய முடியவில்லையே என்று புழுங்கிப்போய்ச் சண்டைக்கு வருகிறானே சாமிக்கண்ணு’ என்று மனம் நொந்தார்.

ஈஸிசேரில் படுத்திருந்தவர் எழுந்து நடந்தார். புஞ்சைத் திடல் பகுதியை நோக்கிக் கால்கள் சென்றன.

திடல் இப்போது முழுதும் மாறியிருந்தது.

இரண்டு, மூன்று கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. பார்த்தார். யாரோ சில வெளிநாட்டுக்காரர்கள். ஒரு வழிகாட்டி அவர்களிடம் விளக்கிச் சொல்லிக்கொண்டிருந்தார்.

கேட்கக் கேட்க ராமலிங்கத்துக்குச் சினம் கனன்றெழுந்தது. வழிகாட்டிக்கு வரலாறும் தெரியவில்லை. சரியான ஆங்கிலமும் தெரியவில்லை. இந்தப் பகுதியை ”ராயன் திடல்” என்றார். ”கிருஷ்ணதேவராயர் கட்டியதால் இது ‘ராயன் திடல்’ என்று பேர் வந்தது” என்றார். பாண்டியன் முடத்திருமாறன் பற்றி மூச்சுக்கூட விடவில்லை.

வழிகாட்டி கூறுவதையே கேட்டுக்கொண்டிருந்த வெளிநாட்டுக்காரர்களுக்கு ஒரே கல்லால் அமைக்கப்பட்டிருந்த அந்த ஆலயம் பற்றிச் சந்தேகம் எழுந்தது. ‘வழக்கமாக இந்த மோனோலித் டைப் பல்லவர் காலத்தியதுதானே! நாயக்கர் காலத்தில் இல்லையே!’ என்ற சந்தேகம் கிளம்ப, வழிகாட்டி திணறி உளறினார்.

ராமலிங்கம், பொறுக்க முடியாமல் நேரே அவர்களிடம் சென்று ”ஸாரி டு இன்ட்டர்வீன்… மே ஐ ஹெல்ப் யூ சார்!” என்றார்.

வெளிநாட்டுக்காரர்களில் ஒருவர் ”ஓ ஷ்யூர் ஷ்யூர். யூ ஆர் வெல்கம்” என்று சொல்லித் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

”நாங்கள் அமெரிக்காவிலிருந்து வருகிறோம். யுனெஸ்கோவின் புராதனக் கலைச்சின்னங்கள் பராமரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இடத்தில் நிகழ்ந்த அகழ்வாய்வு பற்றிக் கேள்விப்பட்டுத்தான் பார்வையிட வந்திருக்கிறோம். ஆனால், இந்த வழிகாட்டி வரலாற்றைத் திசை திருப்புகிறார். நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய முடியுமா?”

”வித் ப்ளெஷர் சார்!” என்று தொடங்கிய ராமலிங்கம். எளிமையான ஆங்கிலத்தில் விளக்கினார். ஒரே கல்லில் அமைக்கப்பட்ட கோயில் பல்லவ காலத்ததுதான் என்ற இதுவரை நம்பப்பட்ட வரலாற்று உண்மையை, இந்த இடத்திலுள்ள கோயில் உடைக்கிறது என்று தெளிவாக்கினார்.

வந்திருந்தவர்கள் அசந்துபோனார்கள். ”அடடா..! மோனோலித் ஆர்ட் பல்லவர் காலத்தது என்றுதானே இதுவரை வரலாறு இருக்கிறது. இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பே தமிழகத்தில் இப்படி மோனோலித் கலாசாரத்தை பாண்டியர்கள் உருவாக்கி இருக்கிறார்களே” என்று வியந்துபோனார்கள்.

அவர்கள் பாராட்டில் ராமலிங்கத்தின் மனசு நிறைந்துபோனது.

”எங்கள் கிராமம் வரை வந்து செல்லுங்கள்” என்று அவர் விடுத்த அழைப்பை ஏற்று, அவர்கள் அவர் பின் சென்றார்கள். கார் போக முடியாததால் குறுக்கு வழியாக வயல் வரப்புகளில் பேலன்ஸ் செய்து நடக்கத் தெரியாமல் நடந்து சென்று ”ஓ… திஸ் இஸ் த்ரில்லிங்” என்றார்கள்.

கிராமத்தில் நுழைந்தார்கள். சுவர்களில் தட்டிவைக்கப்பட்டிருந்த வரட்டிகளைப் பார்த்து வியந்தார்கள். ராமலிங்கத்தை விளக்கச் சொன்னார்கள்; பிரமித்தார்கள்.

கிராமத்தின் திண்ணைகளும் தெருக்களும் அவர்களைக் கவர்ந்தன.

ராமலிங்கம், அவர்களுக்கு இளநீர் கொடுத்து உபசரித்தார்.

அவர்கள் கிராமத்தைச் சுற்றிப் பார்த்தார்கள். நுணுக்கமாக எல்லாவற்றைப் பற்றியும் விசாரித்தார்கள்.

ஆறு மாதங்கள் கழிந்திருக்கும். ஒரு ஜீப் ஊருக்குள் வந்து நின்றது. ஆபீஸர் மாதிரி யாரோ ஒருவர் இறங்கினார்.

முருகேசு டீக்கடையில் வந்து விசாரித்தார். ”நாங்க பஞ்சாயத்து யூனியன் ஆபீஸ்லேர்ந்து வர்றோம். ராமலிங்க வாத்தியார் இருக்காருங்களா… அவரைப் பார்க்கணும்” என்றார்.

முருகேசு மனம் கனத்துப்போய் ”அவரு செத்துப்போய் 15 நாள்தாங்க ஆச்சு. பாவம், நல்லவரு. திடீர்னு நெஞ்சுவலினு சொன்னாரு… டவுனுக்கு வண்டி கட்டிப் போறதுக்குள்ள இடைவழிலேயே செத்துப்போயிட்டாருங்க!” என்று கூறும்போதே, அவனுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

”அடடா..! செத்துப்போயிட்டாரா அந்த நல்ல மனுஷன்! அவராலதான்யா உங்க ஊருக்கே விடிவு காலம் பொறந்திருக்கு. அதைச் சொல்லிட்டுப் போகணும்னுதான் நாங்க வந்தோம்” என்றார் அவர்.

இதற்குள் ஜீப் வந்ததைப் பார்க்கச் சிறுவர்களும் பெரியவர்களும் கூடி நிற்க, சாமிக்கண்ணுவும் கூட்டத்தில் வந்து நின்றான்.

”ஆறு மாசம் முன்னாடி இங்க வந்தாங்கள்லே ஒரு வெளிநாட்டு கோஷ்டி…” என்றார் அவர்.

”ஆமா, ஆமா… வந்தாக வந்தாக… நம்ம வாத்தியார் கூட்டிட்டு வந்து ஊரையெல்லாம் சுத்திக் காமிச்சார்!” என்றார்கள் கூட்டத்தில்.

”அவங்களோட யுனெஸ்கோ நிறுவனம், இங்க இருக்கிற புஞ்சைத் திடல் நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கற பொறுப்பை ஏத்துக்கிட்டது. அதோட, இந்த ஊரையும் அவங்க பாத்தாங்களாம். இப்படியரு புராதன கலாசாரத்தின் நினைவுச்சின்னங்கள் இருக்கற ஊரோட நெலைமையைப் பாத்து, அவங்க ரொம்ப வருத்தப்பட்டு இந்த ஊரையே தத்து எடுத்துக்கிட்டிருக்காங்க. இந்த ஊருக்கு வேண்டிய அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், ரோடு, பள்ளிக்கூடம், லைப்ரரி, ஆஸ்பத்திரி… எல்லாம் கட்டுறதுக்கு அங்கேருந்து 20 லட்ச ரூபாய் மதிப்புக்கு டாலர் அனுப்பியிருக்காங்க. இதெல்லாம் ராமலிங்கம் சார் முன்னிலையிலதான் நடக்கணும்னு அவங்க எழுதியிருக்காங்கய்யா…” என்றார் அந்த ஆபீஸர்.

”அப்புறம்… புஞ்சைத் திடல் அரசாங்கம் எடுத்துக்கிட்டதால, அதை இதுவரை அனுபவிச்சவங்களுக்கு நஷ்டஈடா ஆளுக்கு 5,000 ரூபாயை அரசாங்கம் சாங்ஷன் பண்ணியிருக்கு” என்றபோது, சாமிக் கண்ணுவின் தலை அவனை அறியாமலேயே நிலம் பார்த்தது. கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன.

ராமலிங்கம் என்கிற சரித்திரம் மறைந்தது. ஆனாலும் அந்த ஊரில் புதிய சரித்திரம் ஒன்று அன்றையிலிருந்து தொடங்கியிருந்தது.

– பரசுராம் பிஸ்வாஸ் (11.10.87)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *