கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 9,605 
 
 

எழுதியவர்: அன்னதா சங்கர் ராய்.

வெகுநாட்கள் காத்திருந்தபின் நீராவிப் படகு கிடைத்தது. சில இடங்களை மேற்பார்வையிடுவது பாக்கியிருந்தது. ஆண்டு முடிவதற்குள் இந்த வேலையை முடித்தாக வேண்டும். இருபுறமும் ஆற்றங்கரைக் காட்சிகள்; முன்னால் ராங்கா மாட்டிப் பிரதேசத்தின் மலைவரிசை; கர்ணபூலி ஆற்றில் பயணம் தொடங்கும்போது ரொமான்டிக் உணர்வு ஏற்பட்டது. காகிதமும் பேனாவும் கையோடு எடுத்து வந்திருந்தேன். வெகுநாட்களுக்குப் பிறகு கவிதை எழுதத் திட்டம். படகின் சாரங்க், மாலுமி, மற்ற ஊழியர்கள், என் வேலைக்காரன், சமையல்காரன் இவர்கள்தாம் என் சக பிரயாணிகள். அவர்கள் யாரும் என்னைத் தொந்தரவு செய்யக்கூடாதென்று அவர்களுக்கு கடுமையாக உத்தரவிட் டிருந்தேன். மேல்தட்டில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு நங்கூரம் தூக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அவசர அவசரமாக ஓடிவந்தார் போலீஸ் இன்ஸ் பெக்டர். அவரது கையில் ஒரு கடிதம்.

என்ன விஷயம்? மறுபடி என்ன விபத்து நேர்ந்து விட்டது? இவர்கள் என்னை இங்கிருந்து நகர விடமாட்டார்களா என்ன?

கடிதத்தைப் பிரித்துப் பார்த்தேன். அப்படியொன்றுமில்லை. கல்கத்தாவிலிருந்து ஒரு பெரிய போலீஸ் அதிகாரி வந்திருக் கிறாராம். அவருக்கும் அவசரமாக ராவுஜான் போகவேண்டுமாம். நான் அவரை என்கூட அழைத்துப் போகலாமா? எனக்கு அசௌகரியம் இருக்கிறதா? போலீஸ் இலாகாப் படகு நாளைதான் வரும். என்னுடன் வரவில்லையென்றால் அந்தப் போலீஸ் அதிகாரி ஒருநாள் இங்கேயே காத்திருக்க வேண்டும்.

இந்த ஏற்பாட்டால் எனக்கு அசௌகரியம் ஏற்படத்தான் செய்யும். ஆனால் இதை எழுத்தில் தெரிவிக்க முடியுமா? நான் கவிதை எழுதி வாழ்ந்தேன்! மனதுக்குள் அந்த அதிகாரியைச் சபித்துக்கொண்டு, போலிச் சிரிப்பு சிரித்தவாற “ஆகா, இது என் நல்லதிருஷ்டமல்லவா?” என்று சொன்னேன். இன்ஸ்பெக்டர் குதிகாலோடு குதிகாலைச் சேர்த்து ஒரு அழுத்தமான சலாம் செய்துவிட்டுப் போனார்.

நான் நாற்காலியில் சாய்ந்தவாறே எண்ணத் தொடங்கினேன். “மறுத்திருந்தால் என்ன பெரிய பண்புக் குறைவு நேர்ந்திருக்கும்? அந்த அதிகாரி ஒருநாள் தாமதித்தால் வேலை கெட்டுப் போய் விடுமா..?”

வந்த அதிகாரி கான் பகதூரைப் பண்பில் யாரும் விஞ்ச முடியாது. எனக்கு நன்றி கூறப் பொருத்தமான வார்த்தைகள் அவருக்கு வங்காளியில் கிடைக்கவில்லை. ஆகையால் ஆங்கிலத் தையும் உருதுவையும் பயன்படுத்தினார். அவர் ஒரு பஞ்சாபி முஸ்லீம். என்னைவிட வயதில் மிகவும் பெரியவர். மீசை தாடி வைத்துக் கொள்ளாததால் சற்று வயது குறைந்தவராகத் தோற்ற மளித்தார். கலகலப்பான மனிதர். நான் ஒரு எழுத்தாளன் என்பதை இதற்குள் தெரிந்துகொண்டிருந்தார்.

“உங்களைச் சந்தித்துப் பேசணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. அந்த ஆசை இப்படித் தீரும்னு யாரு எதிர்பார்த்தாங்க? ஆனா ஒங்க தனிமையைக் கெடுக்க நான் விரும்பவேயில்லே. நான் ஒரு நாள் காத்திருக்கத்தான் நெனைச்சிருந்தேன். எஸ்.பி.தான் வலுக்கட்டாயமா அனுப்பிட்டார் ஒங்களோட படகுக்கு… செய்தி கேள்விப்பட்டிருப்பீங்களே?” என்றார் கான் பகதூர்.

நான் வியப்புடன் கேட்டேன், “என்ன செய்தி?”

“ரொம்ப மோசமான செய்தி,” அவர் என் காதருகில் சொன்னார். “இல்லாட்டி நான் டிரங்க் கால்லே செய்தியைக் கேட்டதும் இப்படி கல்கத்தாவிலிருந்து ஓடி வந்திருப்பேனா..? சீ, வெட்கக்கேடு!”

விஷயம் என்ன என்று தெரிந்துகொள்ள எனக்கு மிகவும் ஆவல்தான். ஆனால் எப்படியும் கான் பகதூர் தாமாகவே விஷயத்தைச் சொல்லிவிடுவார் என்று தெரியுமாதலால் எனக்குப் பிறர் பற்றிய வம்பில் அக்கறையில்லாதது போல் பாசாங்கு செய்தேன். “நீங்க இலக்கியவாதிகள். அடிக்கடி ‘சத்தியம், சிவம், சுந்தரம்’னு சொல்லுவீங்க. ஆனா சத்தியமாயிருக்கறது சிவமா, அதாவது மங்களமா இல்லே; சுந்தரமாயிருக்கறதும் சிவமில்லே– இதுதான் நான் என் நாப்பத்தஞ்சு வருஷ அனுபவத்திலே அறிஞ்சுக்கிட்டது. நான் என்னிக்காவது ஒரு புஸ்தகம் எழுதி னேன்னா என்ன எழுதுவேன், தெரியுமா? ‘அழகான பெண்கள் அநேகமாகக் கெட்டவங்களாயிருப்பாங்க, கெட்ட பெண்கள் பெரும்பாலும் அழகாயிருப்பாங்கன்னு எழுதுவேன்’ என்று சொல்லிவிட்டு ஹாஹாவென்று சிரித்தார் கான்பகதூர்.

நானும் சிரித்துவிட்டேன்; இருந்தாலும் கூடவே “எங்க வங்காளத்திலே மட்டும் இப்படியில்லே” என்று சொன்னேன்.

கேலியாகப் பேசினார் கான்பகதூர், “உம், வங்காளத்திலே இல்லையாக்கும்! வங்காளத்திலே வேலை பார்த்துப் பார்த்துத் தலை நரைச்சுப் போச்சுங்க.. நான் இப்போ போயிக்கிட் டிருக்கேனே ராவுஜானுக்கு. அந்த ராவுஜான் வங்காளத்துக்கு வெளியில இருக்கா?”

உரையாடல் சுவாரசியமாகத் தொடர்ந்தது. நான் என் சமையற்காரனைக் கூப்பிட்டேன். அதற்குள் அவர் என்னை இடைமறித்து, “இல்லேயில்லே நீங்க என்னோட விருந்தாளி!” என்றார்.

நல்ல வேடிக்கை! பார்க்கப்போனால் படகே என்னுடையது, நான் எப்படி அவருடைய விருந்தாளி ஆவேன்? ஆனால் என் பேச்சு எடுபடவில்லை. அவரே மாலை நேரச் சிற்றுண்டிக்கு ஆர்டர் கொடுத்தார். இதற்குள் படகு துறையைவிட்டுக் கிளம்பி விட்டது.

நாங்களிருவரும் சாய்வு நாற்காலிகளைப் போட்டுக்கொண்டு மலைவரியைப் பார்த்தவாறு அருகருகே வசதியாக உட்கார்ந்தோம். கான் பகதூர் பேசத் தொடங்கினார்..

“அவன் சாதாரண ஆளில்லே. ஒரு சர்க்கிள் இன்ஸ்பெக்டர். ஒரு காலத்திலே நான் அவனோட சூபரின்டென்டாயிருந்தேன், அவனோட வெலையைப் பாராட்டியிருக்கேன். அவன் கிறுக்கு இல்லே, கவி இல்லே – நான் சொல்றதுக்கு மன்னிக்கணும் ஒழுங்கான நடத்தையுள்ளவன்னு நல்ல பேரும் இருந்தது அவனுக்கு. இப்படிப்பட்டவன் திடீர்னு வெலையைத் துறந்துட்டு, குழந்தை குட்டிகளை மறந்து – நல்லவேளை, அவனோட மனைவி உசிரோட இல்லே – காணாமப் போயிட்டான்-!”

“காணாமப் போயிட்டானா?” நான் திடுக்கிட்டேன்.

அந்த வெக்கக்கேட்டை ஏன் கேக்கறீங்க!” கான் பகதூர் பட்டுக் கைக்குட்டையால் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு தொடர்ந்தார்.: “ஒரு கொலையைப் பத்தி விசாரிக்கப் போயிருந்தான். கொலை செய்யப்பட்டவன் ஒரு வங்காளி முஸ்லீம். அவன் ரங்கூன்லேருந்து ஒரு பர்மாக்காரியைக் கலியாணம் பண்ணி கூட்டிக்கிட்டு வந்திருந்தான். அவ ஒரு பிசாசுதான். ரொம்ப அழகாயிருப்பாளாம்; பர்மாவிலேயே அவ மாதிரி அழகி இல்லையாம்.. புருசனோட இங்கே வந்தவ அவனுக்கு ஏற்கெனவே கலியாணமாயிருக்குன்னு தெரிஞ்சதும் புருசனோட கழுத்திலே கத்தியாலே குத்திட்டா!”

“அப்படியா? நான் இதைப் பத்திக் கேள்விப்படலியே!”

“முதல்லே புலன்விசாரணைக்கு இன்ஸ்பெக்டர்தான் போனான். ஆனா பர்மாக்காரிக்கு வங்காளி தெரியாதுங்கறதுக்காக இந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டரும் போக வேண்டியதாச்சு. இந்த விசாரணைதான் அவனுக்குக் கேடா முடிஞ்சது.. ஒரு நாளாச்ச, ரெண்டு நாளாச்சு, புலன் விசாரணை முடியலே.. கடைசியிலே ஒரு நாள் குத்தவாளியையுங் காணோம், விசாரணைக்குப் போன அதிகாரியையுங் காணோம்! ஹா ஹா ஹா ..!”

இது சிரிப்புக்குரிய விஷயமல்ல. பெண்கள் கடத்தப்படுவதை அறவே வெறுப்பவன் நான். ஆகவே சற்றுக் கோபத்துடன் அவரைக் கேட்டேன், “பின்னே இவ்வளவு நாள் நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க? ஏன் அவனைக் கைது செய்யலே? இது போலீஸ் இலாகா மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமில்லே, இதிலே கோர்ட்டுக்கும் சம்பந்தமிருக்கே!” கான் பகதூர் சற்றுக் கடுமை யான குரலில் சொன்னார், “கோர்ட்டுக்கு இதிலே சம்பந்தம் இருக்காங்கறது சந்தேகந்தான். அந்த பர்மாக்காரி வயது வந்தவ, விதவை. ஆகையால் அவளை ஆசை காட்டிக் கடத்திக்கிட்டுப் போனதாக் குத்தஞ் சாட்ட முடியாது. குற்றச் சட்டத்திலே எந்தப் பிரிவின் கீழே அவனைக் கைது செய்வீங்க, சொல்லுங்க!”

என்னிடம் பதிலில்லை.

அவர் குறும்பாகச் சிரித்துக்கொண்டு தொடர்ந்தார். “அப்புறம்.. அவங்க கலியாணம் பண்ணிக்கிட்டிருந்தாங்கன்னா..? உம், அவ்வளவு எளிசான விஷயமில்லீங்க இது. அவனை வேலையைவிட்டு நீக்கலாம்… கல்கத்தாவிலே இதுக்கான ஏற்பாடு செய்வாங்க. ஆனா அதுக்கு மேலே அவனுக்குத் தண்டனை கொடுக்கணும்னா சட்டத்தை நல்லாப் படிச்சுப் பார்க்கணும்.”

அவர் கூறியது உண்மைதான்.. பெரிய மீன் ஒன்று தூண்டிலில் அகப்பட்டுக் கொள்ளாமல் நழுவிப் போய்விட்டால் மீன் பிடிப்பவனுக்கு எப்படி இருக்கும்? அப்படியிருந்தது எனக்கு.

ஆனால் இதற்காக வருத்தப்படவில்லை கான் பகதூர். அவர் சொன்னார், “அவங்க சிட்டகாங் மலைப் பிரதேசத்திலே ஒளிஞ்சுகிட்டிருக்கறதாகக் கேள்வி. அங்கேயிருந்து நடந்தே பர்மா போவாங்க போலிருக்கு.. அதுக்கப்புறம் அவனுக்கு எவ்வளவு நாள் பர்மிய அழகியோட தயவு இருக்குமோ, யார் கண்டாங்க! அவ அவனைக் கொஞ்சநாள் குரங்காட்டம் ஆட்டிப்பிட்டுப் பிறகு கொன்னு போடுவாளோ, அல்லது உதைச்சு விரட்டப் போறாளோ..! நான் அழகான முகத்தைப் பார்த்தா, தூரத்தி லிருந்தே அதற்கு ஒரு சலாம் போட்டுட்டு நகர்ந்து போயிடுவேன்.”

என்னிடம் அப்போது சட்டப் புத்தகம் எதுவுமில்லை. ஆகையால் ஒரு குற்றவாளி தப்பியோட உதவுபவனுக்குச் சட்டத்தில் தண்டனையேதும் உண்டா என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை என்னால். ஆனால் உள்ளூரச் சங்கடப் பட்டேன். இதைக் கவனித்த கான் பகதூர் சொன்னார், “நான் போலீஸ்காரனாயிருக்கறதாலே போலீஸ்காரன் மேலே எனக்கு அனுதாபம், நான் முஸ்லீமாயிருக்கறதாலே இன்னொரு முஸ்லீம் மேலே எனக்குப் பரிவுன்னு நீங்க நினைக்கலாம். ஆனா அப்படி யில்லே. அவன் ஒரு ஆம்பளைங்கறதால அவன்மேலே அனுதாபப் படறேன்.. அந்தப் பொண்ணுதான் அவனைக் கடத்திக் கிட்டுப் போயிருக்கா!”

நான் இயற்கையிலேயே பெண்களிடம் அனுதாபங் கொண்டவன். ஆகவே அவரது கூற்றை மறுக்காமலிருக்க முடிய வில்லை என்னால். நான் சொன்னேன்,” பெண்களிடம் சிறிதாவது மதிப்புள்ள எவனும் அவங்களைக் குத்தஞ் சொல்ல முடியாது. எப்போதும் குத்தம் ஆண்களோடதுதான்.. ஆனால் சில சமயங்களிலே ஆண் மேலயும் குத்தமில்லாமே, பெண் மேலயும் குத்தமில்லாமே இருக்கலாம். அப்போது சொல்ல வேண்டியது இயற்கையைத்தான், விதியைத்தான்.”

“ஆமா, ஆமா, அது சரி! விதிதான் குத்தவாளி!” கான் பகதூர் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார். “இதே மாதிரி விதியின் விளையாட்டு ஒண்ணை நான் என் இளம்வயசிலே பார்த் திருக்கேன். என் சிநேகிதன் ஒருத்தன் வாழ்க்கையிலே.. அவன் இந்து. அடே, இதென்ன? இந்துவும் முஸ்லீமும் நண்பர்களா, என்று நீங்க நினைக்கலாம். ஆனா இப்போ இருக்கிற மோசமான சூழ்நிலை இருபது வருஷத்துக்கு முன்னாலே இல்லே. நாங்க முதல் உலக யுத்தம் முடிஞ்சப்புறம் மிலிட்டரியை விட்டு வந்து போலீஸ் வேலையிலே சேர்ந்தபோது இந்து முஸ்லீம் பாகுபாடு கிடையாது. அந்தக் காலம் திரம்பி வராதா..?”

அவருடைய குரலில் உண்மையான வருத்தம் தொனித்தது. அவர் நினைவுப் பாதையில் இருபதாண்டுகள் பின்னோக்கிப்போய் விட்டார். பிறகு ஏதோ நினைவுகளை அசைபோட்டவாறே சொன்னார், “ரொம்பப் பழைய காலக்கதை. நானே மறந்து போயிட்டேன். இப்போ திடீர்னு ஞாபகம் வருது நல்லா ஞாபகம் வருது.. கண்ணுக்கு முன்னால நடக்கற மாதிரி தெளிவாகத் தெரியுது..”

அவர் பக்கம் திரும்பிப் பார்த்தேன். அதே மனிதர்தானா, அல்லது வேறு யாராவதா..? ஓர் இளைஞன் நாற்காலியில் சாய்ந்தவாறு கனவு காண்கிறானா..?

காற்று நன்றாக வீசுகிறது, காற்றைத் தள்ளிக் கொண்டு முன்னேறுகிறது படகு. துணி கிழிபடுவது பொல படகின் இரு பக்கமும் தண்ணீர் கிழிபடுகிறது. பின்னால் தங்கிவிடுகின்றன அலைகள். அந்த அலைகளின்மேல் மேலுங் கீழுமாக ஊசலாடுகிறது பின்னால் வரும் தோணி. கான் பகதூர் கதை சொல்லத் தொடங்கினார்..

***

மேகர்பான் சிங் ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்தவன். என் முன்னோர்களும் ராஜபுத்திரர்கள்தான். ரத்த பாசம் என்று ஒன்று இருக்கிறது. எனக்கு மற்ற முஸ்லீம்களைவிட ராஜபுத்திரர் களிடம் அதிக ஈடுபாடு உண்டு. ஆனால் இந்து மதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. மத விஷயத்தில் நான் ஒரு தீவிர முஸ்லீம். மதத்தைப் பொருத்தவரையில் இந்த முஸ்லீம் சாரங்க், மாலுமி, வேலைக்காரன், சமையற்காரன் எல்லாரும் என் சொந்த மக்கள், மேகர்பான் சிங் ஒரு சிநேகிதன் மட்டுமே.

ஆனால் அந்தக் காலத்தில் அவனைப் போன்ற நண்பன் எனக்கு இல்லை. நாங்களிருவரும் தினம் சந்திப்போம். மணிக் கணக்காகப் பேசுவோம், பகற்கனவு காணுவோம். எங்களிரு வருக்கும் விளையாட்டில் ஆர்வம் உண்டு. வேட்டையிலும் நாட்டம் உண்டு. அந்தக் காலத்தில் இப்போதிருப்பதுபோல சினிமா கிடையாது. நாங்கள் வேலை செய்த இடத்தில் எப்போ தாவது ஒரு தடவை ஒரு டூரிங் டாக்கீஸ் வந்து சில நாட்கள் திரைப்படக் காட்சிகள் நடத்தும். அந்த நாட்களில் நாங்கள் சேர்ந்தே சினிமாவுக்குப் போவோம். நாங்கள் மற்ற போலீஸ் அதிகாரிகளைப் போல் பாட்டுக் கேட்கத் தொழில் முறைப் பாடகிகளின் வீடுகளுக்குப் போவதில்லை. நாங்கள் இந்த விஷயத்தில் பழைய கட்டுப்பாடுகளை மதிப்பவர்கள்.

மேகர்பானுக்குத் திருமணப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. என் மனைவி பிறந்தகம் போயிருந்தாள். மேகர்பான் படித்த பெண்ணாகத் தேடிக் கொண்டிருந்தான். அந்தக் காலத்தில் பெண்கள் கல்வி கற்கும் வழக்கம் இல்லை.

நாங்கள் இருந்தது பஞ்சாபில் ஒரு கண்டோன்மென்ட் நகரம். அங்கே ஒரு பட்டாளத்துக் காண்டிராக்டர் இருந்தான். பெரிய லட்சாதிபதி.. நாங்கள் அங்கு போய்க் சேர்வதற்குச் சிறிது காலம் முன்புதான் அவன் இறந்து போயிருந்தான். அவனுடைய சொத்தை அவனுடைய இரண்டு மனைவிகளும் பகிர்ந்து கொண்டார்கள். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. மூத்தவள் எப்போதும் பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட்டிருந்தாள். இளையவளோ கேளிக்கை, விளையாட்டுகளில் பொழுது போக்கினாள். இருவரும் அவரவர் மாளிகைகளில் தனித்தனியே வாழ்ந்து வந்தனர். தனித்தனி வேலைக்காரர்கள், தனிவண்டிகள். அவர்களுடைய கணவனுக்கு “ராஜா” பட்டம் கிடைத்திருந்ததால் அவர்கள் “பெரிய ராணி”, “சின்ன ராணி” என்றழைக்கப் பட்டார்கள்.

சின்ன ராணியின் பெயர் சூரஜ்பான். அவள் போன்ற அழகி உலகத்திலேயே இல்லை என்று நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால் அவளது நடத்தை அவ்வளவு சரியில்லையாம். அவள் பர்தா வழக்கத்தைக் கடைப்பிடிக்கவில்லை. கிளப்புக்குப் போவாள், வெள்ளைத் துரைகளுடன் நடனமாடுவாள், ஊரிலுள்ள அதிகாரிகளை அழைத்து விருந்து வைப்பாள். அவள் ஒரு சேலையை இரண்டாம் முறை அணிந்து யாரும் பார்த்த தில்லை. அவளிடம் குறைந்தது ஐந்தாறு ஜோடி செருப்புகள் இருக்குமாம். அவள் பாலாடையை உடம்பில் தேய்த்துக்கொண்டு பால் தொட்டியில் குளிப்பாளாம். பின்னர் அந்தப் பால் ஊரில் விற்பனைக்கு வருமாம்.

யாராவது ஒருவனை – அவன் யாராயிருந்தாலும் சரி – அவளுக்குப் பிடித்துவிட்டால் அவனுடைய எல்லா ஆசை களையும் தீர்த்து விடுவாளாம். அவளுக்குப் பணம் தேவையில்லை, பரிசு தேவையில்லை; அவனை அவளுக்குப் பிடித்திருக்கவேண்டம் என்பதுதான் ஒரே நிபந்தனை. ஆனால் அவளுக்கு யாரையும் எளிதில் பிடித்து விடாது. நாங்கள் அந்த ஊருக்கு வந்து சில நாட்களுக்குப் பிறகு எனக்கு சூரஞ்பானிடமிருந்து அவள் நடத்தும் விருந்து ஒன்றுக்கு அழைப்பு வந்தது. அவளுடைய பூங்காவில் விருந்து. மேகர்பானைக் கேட்டால் அவன் தனக்கும் அழைப்பு வந்திருப்பதாகச் சொன்னான். ஆனால் அவன் போகப்போவ தில்லையாம். நான் வேடிக்கையாகச் சொன்னேன், “ஒருவகை மாம்பழம் இருக்கு, அதுக்குப்பேர் ‘ராணி பசந்த்’, அதாவது ‘ராணிக்குப் பிடித்தது..’ உனக்கு ‘ராணி பசந்த்’ ஆக இஷ்ட மில்லையாக்கும்!”

“நான் மாம்பழமில்லே. எனக்குத் தன்மானம் இருக்கு. பலகாலமா ஆண்பிள்ளைதான் தனக்குப் பிடித்த பெண்ணைத் தேர்ந்தெடுத்துக்கிட்டு வந்திருக்கான். தேர்ந்தெடுக்கற உரிமை ஆணுக்குத்தான். இங்கே விஷயம் நேர்மாறாயிருக்கு. சூரஜ்பான் என்னைத் தனக்குப் பிடிச்சிருக்கான்னு பார்க்கணுமா?” பேசும் போதே மேகர்பானின் இரத்தம் கொதித்தது.

“ஏன் சுயம்வர வழக்கம் இல்லியா? அதுவும் ராஜபுத்திரர் களிடம் உண்டே!”

“உண்டுதான். ஆனா, சுயம்வரத்திலே பெண்ணால் தேர்ந் தெடுக்கப்படாதவங்க சண்டைபோட்டு வலுக்கட்டாயமாக அவளைத் தூக்கிட்டுப் போற வழக்கமும் உண்டே..! தவிர, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? குமரிப்பெண்ணோட சுயம்வரம் எங்கே, நடத்தை கெட்டவளோட காமவேட்டை எங்கே?”

இதற்குப் பிறகு நான் மேகர்பானைத் தொந்தரவு செய்ய வில்லை. நான் தனியாகவே விருந்துக்குப் போனேன். சூரஜ்பான் உண்மையிலேயே பிரமாத அழகிதான்! அவளை எப்படி வருணிப்பேன் நான்! நான் உங்க மாதிரி கவியில்லே. இருண்ட இரவில் வாணவேடிக்கை பார்க்கிறோம். வானத்தை ஒளிமய மாக்கிக் கொண்டு பல நிற நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறு கின்றன. இது வெறும் கந்தகம், வெடியுப்பு போன்ற பொருள்களின் விளையாட்டுதான் என்பதை நாம் கணநேரம் மறந்து மெய் மயங்கிப் போகிறோம். அது மாதிரிதான் இருந்தது. அந்தப் பூங்கா விருந்தில் சூரஜ்பானின் வருகை. அங்கிருந்தவர்கள் கிளர்ந்து சிலிர்த்துக் கொண்டார்கள். கண்ணாடி கிடைத்தால் அவர்கள் அதில் தங்கள் முகங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். தங்களை ராணிக்குப் பிடிக்குமா என்று கவலைப்பட்டிருப்பார்கள்.

அதன்பிறகு அழைப்புக் கிடைத்தபோதெல்லாம் நான் அவளுடைய விருந்துகளுக்குப் போயிருக்கிறேன் – ‘ராணி பசந்த்’ ஆவதற்காக அல்ல, ‘வாண வேடிக்கை’ பார்ப்பதற்காக. ஆனால் மேகர்பான் ஒர பிரச்சினையாகி விட்டான். அவனக்கு விருந்து களில் கலந்து கொள்ள இஷ்டமில்லை. ஆனால் போகாமல் ஒதுங்கியிருக்கவும் முடியவில்லை. மாற்றல் வாங்கிக்கொண்டு வேறோரிடத்துக்கு ஓடிப்போகவும் முடியவில்லை. அவனுடைய அகம்பாவம் அவனை ஓடவிடவில்லை. சூரஜ்பானைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலோ அவனை ஒதுங்கியிருக்கவிடவில்லை. கடமையுணர்வு அவனை ஓடிப்போக அனுமதிக்கவில்லை. அவன் உள்ளூறத் துடித்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரிந்தது.

“நீ லீவு எடுத்துக்கிட்டு ஊருக்குப் போய்க் கலியாணம் பண்ணிக்கிட்டு வா!” என்று நான் அவனிடம் சொன்னேன். அவன் பேசாமல் கேட்டுக் கொண்டான்; பதில் சொல்லவில்லை.

ஒருநாள் சூரஜ்பான் என்னிடம் “மேகர்பான் சிங் உங்க சீநேகிதர்தானே? அவர் ஏன் என் பார்ட்டிக்கெல்லாம் வர்ற தில்லே? நீங்க அவரைக் கூட்டிக்கிட்டு வரக்கூடாதா?” என்று கேட்டாள்.

நான் அவளிடம் உண்மையை எப்படிச் சொல்வது “எப்போதும் உண்மையே பேசவேண்டும்” என்ற உபதேசம் பாடப் புத்தகத்துக்குத்தான் பொருந்தும். ஆகையால் எதையோ சொல்லி மழுப்பினேன்.

பிறகு மேகர்பானிடம் இந்த விஷயத்தைச் சொன்னேன். இதைக்கேட்டு அவன் சஞ்சலமடைந்தான். மகிழ்ச்சியடைவதா அல்லது கோபித்துக் கொள்வதா என்று புரியவில்லை அவனக்கு. அவன் என்னை விட்டுவிட்டுத் தனியே உலவப் போய்விட்டான்.

சூரஜ்பான் அளித்த அடுத்த விருந்துக்கு கேர்பானும் வந்திருந்தான். நான்தான் அவனை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். எனக்குக் கண்ணாடி கிடைத்திருந்தால் அதை மேகர்பானின் முகத்துக்கு நேரே நீட்டியிருப்பேன். ஆனால் கண்ணாடி எதற்கு! சூரஜ்பானின் கண்களேதான் கண்ணாடியாக இருந்தனவே? அவளுடைய அழகிய கருத்த கண்களில் அவன் தன் சிவந்துபோன முகம் பிரதிபலிக்கக் கண்டான்.

ஒன்றிரண்டு கணங்களில் எவ்வளவு பெரிய நிகழ்ச்சியொன்று நடந்துவிட்டது! அதை யாரும் கவனிக்கவில்லை – என்னைத் தவிர.

மேகர்பானைக் கேலி செய்து அவனுக்குக் கோபமூட்ட நினைத்தேன்! ஆனால் துணியவில்லை. அவனுடைய முகத் தோற்றத்தைப் பார்த்துப் பின்வாங்கினேன். அவன் இயந்திரம் போல் தன் கடமைகளைச் செய்தான், நல்ல முறையில் செய்தான். என்னுடன் எப்போதும்போல் பழகவும் செய்தான்; ஆனால் உள்ளூர மாறிக் கொண்டிருந்தான். நானும் வலியப்போய் அவனுடன் பேசுவதில்லை. அவன் ஏதாவது சொன்னால் கேட்டுக் கொள்வேன், அவ்வளவுதான். அவனுடைய உடல் முழுதும் ஒருத்திக்காக ஏங்கிக் கொண்டிருந்தது. அவனுடைய மனமுந்தான். ஆனால் அவன் இந்த உண்மையை ஒப்புக் கொள்ளவில்லை. அவன் பேசியது வேறு. “நான் அவளை வெறுக்கிறேன். அவ ஒழுக்கங் கெட்டவ. அவ ஒரு தேவடியாதானே! பணம் வாங்கிக்காத தேவடியா! எனக்குத் தேவைப்பட்டா நேரடியா ஒரு தேவடியாகிட்டே போவேன். நான் இஷ்டப்பட்டவகிட்டே போவேன். காசு கொடுத்து அவளை அனுபவிப்பேன். நான் ஏன் சூரஜ்பான்கிட்டே போகணும்? நான் அவகிட்டே போனா அவ இஷ்டந்தான் ஜெயிக்கும். அவ விலைகொடுத்து என்னை அனுபவிப்பா. நான் என்ன ராணி பசந்தா?

இந்த மாதிரி ஒவ்வொரு நாளும் என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பான் மேகர்பான். அவனுள்ளே ஒரு போர் நடந்த கொண்டிருந்தது. அவனுக்கு அமைதியில்லை. சுரஜ்பான் அவன் மனதைக் கவர்ந்தவிட்டாள் என்ற உண்மையை அவன் என்னிடம் ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. எனக்கு எல்லாம் புரிந்திருந்தது. ஆனால், நான் புரிந்திருப்பதாகக் காட்டிக் கொள்ளவில்லை.

“யாரும் உன்னை அவகிட்டே போகக் கட்டாயப்படுத்தலே.

நீ போகலேன்னா யாரும் ஒண்ணும் நினைச்சுக்கப் போறதில்லே. அவ எல்லாரையும் விருந்துக்கு அழைக்கற மாதிரி உன்னையும் அழைச்சிருக்கா. அவ தனக்கு யாரைப் பிடிச்சிருக்கு, யாரைப் பிடிக்கல்லேன்னு விளம்பரம் பண்றாளா? அதையெல்லாம் ஜாடை மாடையா உணர்த்திடுவா. அவ தனக்குப் பிடிச்ச ஆளை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரச் சொல்லுவா. அங்கே அவளோட கார் வந்து அவனைக் கூட்டிக்கிட்டுப் போகும். யாரும் அதைக் கவனிக்க மாட்டாங்க. அப்புறம் அவனை இன்னொரு இடத்திலே இறக்கி விட்டுடுவா…” என்று நான் சொன்னேன்.

“மோசக்காரி! முண்டை! ராட்சசி! பிசாசு!” என்றெல்லாம் கெட்ட வார்த்தைகளால் திட்டுவான் அவன்.

“நீ ஏன் இப்படி அசிங்கமாத் திட்டறே அவளை? அவ உனக்கு என்ன கெடுதல் பண்ணினா? நீ ஏன் இவ்வளவு அநாகரீகமா நடந்துக்கறே?” என்று அவனைக் கடிந்து கொள்வேன்.

ஒரு நாள் மேகர்பான் என்னிடம் சொன்னான், “எல்லாம் ஜாடைமாடையா ஏற்பாடாயிடும்னு நீ சொன்னியே. என்ன ஜாடைமாடை? கடையிலே மட்டரகப் புத்தகம் விக்கறாங்களே, அந்தப் புத்தகத்திலே இந்த ஜாடைமாடையெல்லாம் எழுதி யிருக்கு.”

“அதைப்பத்தி உனக்கென்ன? நீதான் அவகிட்டே போகப் போறதில்லையே..! இல்லே, போகப்போறியா?”

“நான் போவேனா அந்தத் தேவடியாகிட்டே! அது நடக்காது! என் பேரு மேகர்பான் சிங். நான் சௌஹான் வம்சத்து ராஜபுத்திரனாக்கும்! காலக்கோளாறு, போலீசிலே வேலை பார்க்க வேண்டியதாயிருக்கு. அதுக்காக நான் தாழ்ந்து போவேனா? நீ கூட என்னைப் புரிஞ்சுக்கலியே!”

நான் மௌனமாகக் கேட்டுக் கொண்டேன். அவன் நாளுக்கு நாள் பைத்தியமாகிக் கொண்டிருந்தான். அவனுக்கு உள்ளூற ஏற்பட்டிருந்த ஆசையைத் தீர்த்துக் கொள்வதானால் அவனது கௌரவமும் அழிந்துவிடும். ஆனால் அந்த ஒழுக்கங் கெட்டவளோ அவனைப் பலமாகத் தன்பக்கம் ஈர்க்கிறாள். அவள் விரும்பிய யாரும் அவளிடமிருந்து தப்பியதில்லை; அவள் அவனைக் காந்தம்போல் இழுத்துக் கொண்டுவிடுவாள்.

அவள் என்னை விரும்பவில்லை என்பது என் அதிருஷ்டந் தான். அவள் மேகர்பானுக்கு வசிய மருந்து போட்டு விட்டாள். அதற்கு முன் எனக்கு வசியக் கலையில் நம்பிக்கையில்லை. இப்போது கொஞ்சங் கொஞ்சமாக நம்பிக்கை வந்தது. மேகர்பான் என் விடுதிக்குப் பக்கத்து விடுதியில் வசித்தான். நான் அவனுடைய நடமாட்டங்களைக் கவனிக்கத் தொடங்கினேன்.

அவன் இரவு பத்துமணிக்கு வெளியே போவான். விடியு முன்னர் திரும்பி வருவான். அலங்கோலமாகத் தோற்றமளிப்பான் அவன். பைத்தியக்காரனின் பார்வை. தொடர்போ ஒழுங்கோ இல்லாமல் ஏதேதோ வேசுவான். அவன் பேச்சில் அசிங்கமான திட்டுக்களைத் தவிர வேறெதுவும் புரியாது. கூடைகூடையாய்க் கெட்ட வார்த்தைகள். நாளுக்குநாள் அவை பெருகுவதைக் கவனித்தேன்.

அவன் வீட்டாருக்குத் தகவல் அனுப்பிக் குடும்பத்துப் பெரியவர் யாரையாவது வரவழைக்கத் தொன்றியது எனக்கு. விவகாரம் இன்னும் முற்றிவிடவில்லை. மோசம் நிகழ்ந்து விட வில்லை இன்னும். நல்ல அழகான ஒரு பெண்ணாகப் பார்த்து அவனுக்கு கலியாணம் செய்து வைத்துவிட்டால் ஒரே நாளில் அவனுடைய அசட்டுப் பைத்தியம் தெளிந்துவிடும். அதன் பிறகு சியால்கோட்டிலிருந்து லாகூருக்கோ அமிருதசரசுக்கோ மாற்றலாகிப் போய்விட்டால் சூரஜ்பானின் நினைவு வாண வேடிக்கைபோல் அணைந்து போய்விடும்.

ஆனால் மேகர்பானின் குடும்பத்துக்குச் செய்தியனுப்பத் துணிவு ஏற்படவில்லை எனக்கு. அவன் கோபித்துக் கொள்வானே என்ற பயம். அவன் சாதாரணமாக நிதானமானவன்தான். ஆனால் கோபம் வந்துவிட்டால் கண்மண் தெரியாது அவனுக்கு.

இதன்பிறகு ஒரு நாள் சூரஜ்பான் அளித்த விருந்துக்கு நானும் போனேன், அவனும் போனான். அன்றே எல்லாம் ஜாடை மாடையாக ஏற்பாடாகி விட்டது.

சில நாட்களுக்குப் பிறகு ஒருநாள் நான் அணிவகுப்புக்குப் போக உடையணிந்து கொண்டிருந்தபோது மேகர்பான் அங்கே வந்தான். அவனது உடலுறுப்பு ஒவ்வொன்றிலும் மகிழ்ச்சிக் கிளர்ச்சி. ஆனால் அவன் அதை மறைத்துக் கொண்டு வருத்தக் குரலில் “நான் செத்துப் போயிட்டேன்!” என்றான்.

அவன் என்ன சொல்கிறான் என்று நான் புரிந்து கொண்டாலும் புரியாதவன்போல, “என்ன ஆச்சு?” என்று கேட்டேன்.

“நான் ராணிபசந்த் ஆயிட்டேன்” என்றான் சோகக் குரலில்.

“நீ செய்யறது சரியில்லே. அதுக்கு அடையாளம் நீ இப்போ அணி வகுப்புக்கு மட்டம் போடறதுதான். இப்படிப் பண்ணினா உனக்கு வேலை போயிடும்!” நான் சொன்னேன்.

அவன் பெருமூச்சு விட்டுக்கொண்டு சொன்னான், “எனக்கு வேற வழியிலே. விதி என்னை எங்கேயோ இழுத்துக்கிட்டுப் போகுது.. நீ என் சிநேகிதன், எனக்கு ஒரு யோசனை சொல்லுவியா?”

“என்ன யோசனை?” அவனுக்காக அனுதாபம் ஏற்பட்டது எனக்கு.

“நான் அனுபவிச்சதுக்கு விலை கொடுக்க ஆசைப்படுகிறேன்,” ஒடுங்கும் குரலில் சொன்னான் அவன், “விலை கொடுக்கலேன்னா நான் அவளோட அடிமையாயிடுவேன். என் கௌரவம் போயிடும்.”

நான் சற்றுச் சிந்தித்துவிட்டுச் சொன்னேன்,” அவகிட்டே என்ன இல்லே? உன் பணம் அவளுக்கு எதுக்கு? நீ அம்பது ரூபாய் மதிப்புள்ள பரிசு கொடுத்தா, அவ உனக்கு ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு தருவா.”

“நான் அவளுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசு தருவேன்!” அழுத்தந் திருத்தமாகப் பதிலளித்தான் மேகர்பான். “ஆனா அவ்வளவு பணம் எங்கே கிடைக்கும். சர்க்கார் கஜானா வைக் கொள்ளையடிக்கட்டுமா?”

கேட்டுத் திடுக்கிட்டேன் நான். உடனே அவன் வீட்டாருக்குக் கடிதம் எழுதினேன் மூடி மறைத்துக் குறிப்பாக விஷயத்தைத் தெரிவித்தேன். அவனை ஜாக்கிரதையாகக் கண்காணிக்கவும் செய்தேன். கிறுக்குத்தனமாக எங்காவது கொள்ளையடித்து விடுவானோ என்ற பயம் எனக்கு.

அவன் அணிவகுப்புக்குப் போவதைத் தவிர்ப்பதற்காக ஒரு சான்றிதழ் வாங்க டாக்டரிடம் போனான். அவனை ஆஸ்பத்திரி யில் சேர்த்துவிடும்படி நான் டாக்டரிடம் சொல்லி வைத்தேன். அவனை ஊருக்கு அழைத்துப் போக அவனுடைய அண்ணன் வந்தார். லீவு கிடைக்காமல் ஊருக்குப் போவது எப்படி? லீவுக்கு மனு செய்தான். லீவு அனுமதிக்கப்படும்வரை காத்திருக்க நேர்ந்தது.

இதற்கிடையில் ஒர விபரீதம் நிகழ்ந்துவிட்டது. ஒரு நாள் காலையில் மேகர்பானைக் காணவில்லை. விசாரித்துப் பார்த்ததில் சூரஜ்பானையும் காணோம் என்று தெரியவந்தது.

ஊரெங்கும் தூற்றுப் பேச்சு. சூரஜ்பானின் பக்தர்கள் வருத்தப்பட்டார்கள் மேகர்பானுக்காக – “பாவம், தற்காலிகமான வெறிக்கு ஆட்பட்டுத் தன் வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டானே மனுஷன்!” என்று ஒரு சிலர் வேடிக்கையாகப் பேசிக் கொண்டார்கள் – “ராஜகுமாரியும் பாதி ராஜ்யமும் கிடைச்சா நாங்களும் ஓடிப்போகத் தயார்..! சூரஜ்பானும் கெட்டிக் காரிதான்! அவளோட காதலன் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன், நல்ல அழகனுங்கூட!”

எனக்குத் தாங்கமுடியாத வருத்தம். மேகர்பானின் அண்ணன் அழுதுகொண்டே ஊர் திரும்பிச் சென்றபோது அவருக்கு விடையளிக்க நானும் சிறிது தூரம் சென்றேன். “எல்லாம் அதிருஷ்டம்” என்றார் அவர். “ஆமா, எல்லாம் கிஸ்மத்துதான்” என்றேன் நான். நாம் இந்துவானாலும் சரி, முஸ்லீமானாலும் சரி, விதியை நம்புபவர்கள். விதி விதிப்பது நடந்தே தீரும்.

மாதங்கள் கழிந்தன. மேகர்பானைப் பற்றிச் செய்தி எதுவுமில்லை. சூரஜ்பானின் வீடு இருண்டு கிடந்தது. அவள் எங்கிருக்கிறாள் என்று அவளுடைய வேலைக்காரர்களுக்குத் தெரியவில்லை.

ஓராண்டுக்குப்பின் அஜ்மீரிலிருந்து அவனுடைய கடிதம் கிடைத்தது. “அஜ்மீருக்கு யாத்திரையாக வாயேன்!” என்று எழுதியிருந்தான். அவனுக்கு என் யோசனை தேவை என்று உணர்ந்தேன். லீவு எடுத்துக்கொண்டு அஜ்மீர் பொனேன். அவன் என்னைச் சந்தித்துத் தன் இருப்பிடத்துக்குக் கூட்டிக்கொண்டு போனான். அவர்களிருவரும் சந்தோஷமாகக் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தார்கள்.சூரஜ்பான் குடும்பப்பெண் மாதிரி நடந்து கொண்டாள். என்னிடம் கூட ஓரளவு பர்தா முறையைக் கடைப்பிடித்தாள்.

அவர்கள் சியால்கோட்டிலிருந்து ஓடிவந்த பின் வெவ்வேறு ஊர்களுக்குப் போனார்களாம். அவர்கள் எங்கே போனாலும் அவர்கள் யார்? அவர்கள் புருஷன் பெண்சாதியா? என்ற கேள்வி அவர்களை எதிர் கொண்டது. சுரஜ்பான் “ஆமா” என்று சொல்லி விடுவாள்.ஆனால் மேகர்பான் வாயை மூடிக் கொண் டிருப்பான். அவளைத் தன் மனைவி என்று ஏற்றுக் கொள்ள அவனுக்குத் தயக்கம். அப்படிச் சொல்வது பொய் மட்டுமல்ல; அவனுக்குப் பிடிக்காத விஷயமுங்கூட. ஆனால் அவர்கள் தங்களைக் கண்வன்-மனைவி என்று சொல்லிக் கொள்ளா விட்டால் அவர்களுக்கு வீடு கிடைக்காது, வேலைக்காரன் கிடைக்க மாட்டான், சமூகத்தின் உதவியோ அங்கீகாரமோ கிடைக்காது. வேசிகளின் குடியிருப்பில் போய் வாழ வேண்டி யிருக்கும். இதற்கு இணங்குவாளா சூரஜ்பான்? தன்மானம் மிக்கவள் அவள். அவள் என்ன சாதாரண வேசியா!

ஆனால் அவர்கள் போகுமிடங்களிலெல்லாம் சி்றிது காலத் துக்குப் பிறகு அவர்களைப் பற்றிய உண்மை வெளியாகி விட்டது. அதன் பிறகு அங்குள்ள இளவட்டங்கள் சூரஜ்பானின் இளமையையும் அழகையும் பங்கு போட்டுக் கொள்ள முற்பட் டனர். மனைவியல்லாத ஒருத்தியின் அழகை ஒருவனே அனுப விப்பதை மற்றவர்கள் பொறுத்துக் கொள்வதில்லை. அவர்கள் காதலரிருவரையும் தொந்தரவு செய்யத் தொடங்கினர். போலீசிடம் உதவிக்குப் போய் பயன் இல்லை. போலீசார் கலியாணம் நடந்ததற்கான ருசு கேட்பார்கள் அல்லது பெரிய தொகையை லஞ்சமாகக் கேட்பார்கள். அழகைப் போட்டியின்றி அனுபவிக்க வேண்டுமென்றால் அதைக் கைப்பற்றினால் மட்டும் போதாது. அதன்மேல் சட்டப் பூர்வமான உரிமையும் இருக்க வேண்டும் என்று மேகர்பான் புரிந்து கொண்டான். சூரஜ்பான் தன் மனைவி என்பதற்கான சான்றைக் காட்ட வேண்டும்.

குழம்பித் தவித்தான் அவன். ராஜபுத்திரனான அவன் ஒரு வியாபாரியின் விதவையைக் கலியாணம் செய்து கொள்வதா? அதுவும் நடத்தை கெட்ட சூரஜ்பானை! அவனுக்கு இதயம் வெடித்துவிடும் போலிருந்தது. ஏற்கெனவே அவனுக்குத் தலைகுனிவு ஏற்பட்டுவிட்டது. இனி அவனது மானம் மண்ணோடு மண்ணாகி விடும். தப்பியோடவும் வழியில்லை என்று கண்டான் மேகர்பான். இனி வேலை கிடைக்காது. சொந்த ஊருக்குப் போய் விவசாயம் செய்வதானால் இரண்டு வேளையும் பெரியவர்களின் ஏச்சைக் கேட்டுக் கொள்ள வேண்டும். அவனை யார் கலியாணம் செய்து கொள்வார்கள்? கலியாணம் இல்லாவிட்டால் பெண் துணைக்கு என்ன செய்வது? இந்த வயதிலேயே அவன் சன்னியாசியாக வேண்டுமா?

அவன் எங்கும் ஓடாமலிருப்பதென்றால் ஒன்று, சூரஜ் பானைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டும், அல்லது அவளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இரண்டு வழிகளுமே பிடிக்கவில்லை மேகர்பானுக்கு. சூரஜ்பானுக்கு இந்த இரண்டுமே பிடித்திருந்ததாக அவனுக்குத் தோன்றியது.

பகிர்ந்துகொள்வதைவிடச் சாவது மேல். ஆகையால் கலியாணந்தான் ஒரேவழி. கலியாணப் பேச்செடுத்தாலே அவனது கண்களில் நீர் பெருகியது. இதயம் தவித்தது. அவனது குலப் பெருமைக்கு இழுக்கு, ஆண்மைக்கு அவமானம்..

இந்த மாதிரி ஒரு கட்டாய நிலை ஏற்படாவிட்டால் அவன் கலியாணம் செய்துகொண்டிருக்கமாட்டான். ஒரு வைசியப் பெண்ணை, அதுவும் நடத்தை கெட்டவளைக் கலியாணம்! பங்கு கேட்பவர்களின் தொல்லை தாங்கமுடியாமல், அவள்மேல் தன் உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்காக, அவளைப் போட்டியின்றி அனுபவிப்பதற்காகக் கலியாணம் செய்துகொண்டு விட்டான் கடைசியில். கலியாணமானபின் சூரஜ்பான் பர்தா முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினான். சூரஜ்பான் இதற்குத் தயாராயில்லை இருந்தாலும் கலியாண மானதில் அவளுக்குத் திருப்திதான். ஒரு உயர்ந்த குலத்தைச் சேர்ந்த ராஜபுத்திரனைத் திருமணம் செய்து கொள்வது அவளது சிறு பிராயக் கனவு. அந்தக் கனவு நனவாகியதற்காக அவள் சில தளைகளைப் பொறுத்துக்கொள்ள இணங்கினாள். மனைவியைப் பர்தாவுக்குள் வைத்தபின் சற்றுக் கவலை குறைந்தது மேகர் பானுக்கு. இப்போது அவன் வாழ வழி தேடவேண்டும். அதற்காகப் பஞ்சாபுக்கு வெளியே போகத் தீர்மானித்தான் அவன். அங் கெல்லாம் ஒளிவு மறைவாக வாழ வேண்டிய அவசியமில்லை. உண்மையான முறையில் அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்.

அவன் எங்கெங்கோ சுற்றிவிட்டுக் கடைசியில் அஜ்மீர் வந்து சேர்ந்தான். தன் ராணுவ அனுபவத்தைக் காட்டி ரயில் வேயில் ஒரு வேலை தேடிக் கொண்டான். சம்பளம் அதிகமில்லை, இருந்தாலும் சொந்த சம்பாத்தியம்.

இப்போது ஒரு புதிய பிரச்சினை தலையெடுத்தது. இந்த வேலையில் அவன் மாதத்தில் இருபது நாட்கள் வெளியூர்களில் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. போகுமிடமெல்லாம் மனைவியைக் கூட்டிப்போக முடியாது. தனியாக விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. இப்பேர்ப்பட்ட விலை மதிப்பற்ற மாணிக் கத்தை வீட்டில் வைத்துவிட்டு அவன் வெளியூரில் இரவுகளைக் கழித்தால் யாராவது வீட்டில் கன்னம் வைத்து விடுவானே! நகை, துணிமணி, பாத்திரம் பண்டம் திருடப்பட்டதாகப் போலீஸ் ரிகார்டில் எழுதப்படும். ஆனால் உண்மையில் திருடு போன பொருளை எழுதி வைக்க முடியாதே! அந்தப் பொருளுக்கு உரிமையுள்ளவன் வெளியூரில் சுற்றிக் கொண்டிருப்பான்.

மேகர்பான் என்ன செய்வான், பாவம்! அவன் வீட்டைக் கவனிப்பானா, வெளி வேலையைக் காப்பாற்றிக் கொள்வானா? சூரஜ்பானுக்கு இந்தப் பிரச்சினை எதுவுமில்லை. அவள் தன் கனவு நனவாகி விட்டதில் திருப்தியடைந்திருப்பதாகத் தோன்றியது. ஆனால் இந்த முடிவையா மேகர்பான் கனவு கண்டான்!

இந்த சமயத்தில்தான் அவன் என்னிடம் யோசனை கேட்க என்னை அஜ்மீருக்கு அழைத்தான்.

அவர்கள் திருமணம் செய்து கொண்ட செய்தி கேட்டு எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. நான் முஸ்லீம். இந்த மாதிரிக் கலியாணத்தில் எனக்கு அருவருப்பு இல்லை. மேகர்பான் கோபித்துக் கொள்வானோ என்று பயந்துதான் நான் முன்னமேயே அவனுக்குக் கலியாண யோசனையைச் சொல்லவில்லை. என் யோசனையைக் கேட்காமலேயே இந்தச் சரியான காரியத்தை அவன் செய்ததில் எனக்குத் திருப்திதான். ஆனால் இனியும் மனைவியைச் சந்தேகிப்பது! இது அசட்டுத் தனம். வாழ்நாள் முழுதும் குடும்பம் நடத்த வேண்டிய மனைவியிடம் இந்த மாதிரி சந்தேகப்படலாமா?

நான் அவனைக் கடிந்து கொண்டபோது அவன், “ஆனா அவ ரொம்ப அழகாச்சே! அவ அவலட்சணமாயிருந்தா சந்தேகப்பட மாட்டேன்..”

மனைவியின் அழகுக்குத்தான் அவன் பயப்படுகிறான் என்று புரிந்தது எனக்கு. இந்த பயம் எப்படித் தெளியும்? அவளுக்கு ஏழெட்டுக் குழந்தைகள் பிறந்தாலா? அல்லது தீராத நோய்வாய்ப் பட்டாலா? அல்லது அவளது இளமை கழிந்த பிறகா?

ஆனால் இவற்றுக்கெல்லாம் நிறைய நேரமிருந்தது. சூரஜ்பான் எங்கள் வயதுதான். அகாலத்தில் கிழமாகும் எண்ணம் அவளுக் கில்லை.

“மனைவி அவலட்சணமாயிருக்கணும்ன ஆசைப்படாதே! உன் ஆசை நிறைவேறினா அப்புறம் கஷ்டப்படப் போறவன் நீதான்!”

அமிலத்தைக் கொட்டி அவளை அவலட்சணமாக்கலாமா என்றுகூட நினைத்தான் அவன்! ஏதோ தற்செயலாக நிகழ்ந்த மாதிரி அமிலத்தைக் கொட்டி விடுவது! நான் திடுக்கிட்டேன். அவனைக் கடுமையாகக் கடிந்து கொண்டேன். “அப்படீன்னா அவளை விவாகரத்து பண்ணிடு, அல்லது அவளை விட்டுட்டுப் போயிடு!” என்றேன்.

அதற்கும் தயாரில்லை அவன். “நான் போலீஸ் வேலையிலே இருந்திருந்தா சம்பளமும் பென்ஷனுமா சில லட்சங்கள் சம்பாதிச்சிருப்பேன். செலவெல்லாம் போக ஒரு லட்ச ரூபாயாவது மிச்சப் படுத்தியிருப்பேன். பார்க்கப்போனா, அந்த ஒரு லட்ச ரூபாயை சீதனமாகக் கொடுத்துத்தான் இவளை கலியாணம் பண்ணிக்கிட்டிருக்கேன், இலவசமா இல்லே. நான் ஏன் விவாகரத்து பண்ணிக்கணும்? விட்டுட்டுப் போகணும்? விதி எங்களை ஒண்ணாப் பிணைச்சிருக்கு.”

சட்டென்று எனக்கு ஒரு யோசனை தோன்றியது. “அது சரி, அவ உனக்கு ஒரு லட்ச ரூபாய் தந்தா நீ அவளை விட்டுடுவியா?” என்று கேட்டேன்.

அவன் திடுக்கிட்டான்; சற்ற நேரம் என்னைப் பார்த்து மலங்க மலங்க விழித்தான்; “கேலி செய்யறியா?” என்று கேட்டான்.

“இல்லே, சீரியஸாத்தான் சொல்றேன், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு இது ஒண்ணுதான்!” என்றேன்.

“நீ அவகிட்டே இதைச் சொன்னா, அவ உடனே ஒரு லட்ச ரூபாயை உன்கிட்டே விட்டெறிவா. நான் அவளோட அடிமை யாயிடுவேன் – ராணி பசந்த்!”

சூரஜ்பான் தனக்கு எசமானியாவதை அவன் விரும்ப வில்லை. தானே அவளுக்கு எசமானனாக இருக்க விரும்பினான்.

அத்துடன் அவள் அழகான யுவதியாக இருக்கக் கூடாது, அவலட்சண மனைவியாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் அவன் கவலையில்லாமலிருக்கலாம். ஆனால் இவ்வாறு வெளிப் படையாக அவளிடம் சொல்ல முடியாதே!

நான் காஜா சாயபுவின் தர்காவில் பிரார்த்தனை செலுத்திவிட்டு அஜ்மீரிலிருந்து திரும்பினேன். அதற்குச் சில நாட்களுக்குப்பின் திடீரென்று ஒருநாள் சூரஜ்பானின் வீட்டில் விளக்குகள் பிரகாசமாக எரிவதைக் கண்டு வியப்பு ஏற்பட்டது. என்ன விஷயம்..? ராணி திரும்பி வந்து விட்டாள்..! கூட யாராவது வந்திருக்கிறார்களா..? இல்லை, வேறு யாரும் வரவில்லை..

***

கான் பகதூர் தொடர்ந்து கூறினார், “அதுக்கப்புறம் மேகர் பானோடு சந்திப்பு ஏற்படலே. கடிதப் போக்குவரத்தும் இல்லே. நான் பஞ்சாபிலேருந்து வங்காளத்துக்கு மாற்றலாயிட்டேன். இரகசியப் புலன் விசாரணை இலாகாவில் போட்டுவிட்டார்கள். அதிலேருந்து இங்கேயே இருக்கேன். கதை இத்தோட முடிஞ்சது.”

“முடிஞ்சு போச்சா?” என் ஆவல் தீரவில்லை. “அப்புறம் என்ன ஆச்சு? சூரஜ்பான் என்ன ஆனா? மேகர்பான் என்ன ஆனார்?” நீராவிப் படகு நீரைக் கிழித்துக் கொண்டு விரைந்தது. நீர்த்துளிகள் எங்கள்மேல் விழுந்தன. சிற்றுண்டி அருந்தி வெகு நேரமாகிவிட்டது. நான் இரவுச் சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுத்தேன். இப்போது கான்பகதூர் என் விருந்தினர். “சொல்லக் கஷ்டமாயிருக்குங்க.. மனிதர்களைப் புரிந்து கொள்வதிலேயே காலங் கழிஞ்சிடுச்சு. கிழவனாயிட்டேன். ஆனா அப்போ எனக்கு இவ்வளவு தெரியாது. அதனால்தான் திடுக்கிட்டுப் போயிட்டேன்.”

“ஏன், ஏன்?” நான் ஆவலடங்காமல் கேட்டேன்.

“மேகர்பான் நிசமாகவே அவ மூஞ்சியிலே அமிலத்தைக் கொட்டப் பார்த்திருக்கான். ஒரு சில துளிகள் அவளோட கன்னத்திலோ, கழுத்திலோ விழுந்துவிட்டது. அதனாலே அவ இப்போ விருந்து வைக்கறதில்லே, வீட்டைவிட்டு வெளியே வரதில்லே. நல்லவேளை, அதிகக் கேடு ஏற்படலே, அவகிட்ட சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் இருந்தது. அவ அதையெல்லாம் அப்படியே மேகர்பான்கிட்டே கொடுத்திட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடி வந்தா. நேரே சியால்கோட் வந்து சேர்ந்துட்டா.”

நான் அருவருப்பில் காதுகளைப் பொத்திக் கொண்டேன்.

இந்த அக்கிரமத்தைக் கேட்கப் பிடிக்கவில்லை எனக்கு.

மேகர்பானுக்கு நகைகளைப் பத்திரப்படுத்துவதில் கவனம், அவன் எப்படி அவள் பின்னால் ஓடுவான்? எது முக்கியம் – நகையா? அல்லது நாயகியா? நகைதான் அவனுக்கு முக்கியமாகத் தோன்றியிருக்கு..”

சூள்கொட்டினார் கான் பகதூர். அவருடைய அனுதாபம் அந்தப் பெண்ணிடந்தான் என்று தோன்றியது. காதுகளிலிருந்து கைகளைச் சற்று நகர்த்திக் கொண்டேன்.

ஆனால் என் எண்ணம் தவறு.

நன்றாக இருட்டிக் கொண்டு வந்தது. நாங்கள் போக வேண்டிய இடம் வந்து சேர வெகுநேரமாகும். இரவுச் சாப்பாட் டுக்கும் நேரமாகும். கதை முடிந்து போய் விட்டால் சாப்பாட்டு நேரம் வரையில் நாங்கள் என்ன செய்வது?

நான் கைகளைக் காதுகளிலிருந்து எடுத்துக் கொண்டேன்.

கான் பகதூர் சொன்னார்,” நடந்த வரையிலே நல்லதுதான். சூரஜ்பான் நல்ல வேளையாகத் தப்பிச்சுட்டா. இது மாதிரி எத்தனையோ பார்த்து விட்டேன். மேகர்பான் அவளைக் கொன்னிருக்கலாமே! அழகிகள் மனம் சபலப் படறது இயற்கை தான். என்னிக்காவது ஒரு நாள் அவளுக்குச் சபலமேற்பட்டா அவன் அவளைக் கொன்று போட்டிருப்பான். அவ பொழைச்சு வந்தது பெரிய காரியம். அமிலம்பட்டு அவ அழகு கொஞ்சம் கெட்டுப் போச்சேன்னா, அது அவளோட பாவங்களுக்கான தண்டனைன்னு வச்சுக்கலாம்.”

நான் பதில் சொல்லவில்லை. பாவ தத்துவத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. தவிர, ஒரு பாவிக்கு இன்னொரு பாவி தண்டனை கொடுப்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மேகர்பானும் பாவிதானே!

“யோசிச்சுப் பாருங்க!” கான் பகதூர் சொன்னார். “கடைசியிலே அந்தப் பொண்ணுக்கு என்ன பெரிய நஷ்டம் ஏற்படுது, சொல்லுங்க? நஷ்டப்பட்டவன் அவன்தான்! அவனோட நஷ்டத்துக்கு அந்த நகைகள் ஈடாகாது. வேலையிலே இருந்திருந்தா அவன் ஐ.ஜி. ஆகாட்டியும் டி.ஐ.ஜி. ஆகவாவது ஆயிருப்பான். விதி! விதிப்படிதான் எல்லாம் நடக்கும். அந்த ரயில்வே உத்தியோகமும் நிலைக்கலே அவனுக்க. லட்சரூபாய் நகை கிடைச்சதும் அவன் மூளை கெட்டுப் போச்சு. அந்த நகை களை சீதனமாக் கொடுத்து ஒரு கௌரவமான ராஜபுத்திரக் குடும்பத்திலே கலியாணம் பண்ணிக்கிட்டான். அவங்க அவனை இங்கிலீஷ்காரன்கிட்டே வேலை பார்க்க விடலே. அவங்க அவனை ஒரு சுதேச ராஜாவோட ராணுவத்திலே சேர்த்துட்டாங்க. அந்த வேலையிலே பதவிப் பெருமையைத் தவிர வேற என்ன இருக்குங்க?”

நான் உம்மென்று உட்கார்ந்திருந்தேன். என்ன சொல்வ தென்று தெரியவில்லை எனக்கு.

“இப்போ இந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டரோட நிலை என்ன ஆச்சுன்னு பார்க்கணும். இவன் இன்னொரு ராணி பசந்த். இந்தப் பொண்ணு அபூர்வ அழகியாம். அழகாயிருந்தா நடத்தை கெட்டவளாயிருப்பாங்கறதிலே என்ன ஆச்சரியம்? எவ்வளவுக் கெவ்வளவு கெட்டவளாயிருப்பாளோ அவ்வளவுக்கவ்வளவு அழகியாயிருப்பா.”

பெருமூச்சு விட்டார் கான் பகதூர்..

அன்னதா சங்கர் ராய் (1904)

பிறந்தது ஒரிஸ்ஸாவிலுள்ள டெங்கானலில். 1927ஆம் ஆண்டில் ஐ.சி.எஸ்.ஸில் சேர்ந்து 1951ஆம் ஆண்டில் அதிலிருந்து விலகினார். 1927 முதல் 1929 வரை இங்கிலாந்தில் வசித்தார். 1957-ல் ஜப்பான் பயணம், 1963-ல் மேற்கு ஜெர்மனி, இங்கிலாந்து பயணம். 1962-ல் சாகித்திய அகாதமிப் பரிசு பெற்றார். பயண நூல் ‘பத்தேபிரவாஸே’ (1931) இவருக்குப் புகழ் சேர்த்தது. இலக்கியத்தின் பலதுறைகளிலும் சிறந்த படைப்பாளி. முக்கிய நாவல்கள் ‘சத்ய சத்ய’ (1932 – 42) ஆறு பாகங்கள்; ‘ரத்னா ஓ ஸ்ரீமதி’ (1956 – 73) 3 பாகங்கள். 50 வருடங்களாகச் சிறுவர்களுக்காகக் கதை எழுதி வருகிறார். இவருடைய ‘சடா’ எனப்படும் எதுகைப் பாடல்கள் புகழ் பெற்றவை. இவருடைய சிறுகதைத் தொகுப்புகள் இரண்டு கல்ப (1960), கதா (1970) கதையின் உருவத்தின் பல்வேறு சாத்தியக் கூறுகள், உள்ளடக்கம் இரண்டிலும் அக்கறை கொண்டவர். நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவமளித்துக் கதை எழுதுவதில் விருப்பமில்லை. கதைகளில் அவர் காட்ட விரும்புவது உண்மையின் தேடல். இவருடைய படைப்புகளை இரண்டு கால கட்டங்களாகப் பிரிக்கலாம். முதல் கட்டம் 1930-1956. இரண்டாவது கட்டம் 1959லிருந்து தொடங்கியது. இந்த இரண்டாவது கட்டத்தின் முதல் கதை மீன் பியாசி. முதல் கட்டத்தில் வெளிப்புற வாழ்க்கையின் உண்மை நிலையை ஆராய்ந்தார். இரண்டாவது கட்டத்தில் உட்புற வாழ்க்கையை ஆராய்கிறார். தொடக்க காலத்தில் ஒரியா, வங்காளீ, ஆங்கிலம் இம்மூன்று மொழிகளிலும் எழுதினார். இப்போது ஆங்கிலத்தில் மட்டும் எழுதிகிறார். இவர் பல பரிசுகளும் விருதுகளும் பெற்றவர். சாகித்திய அகாதமியின் ஃபெலோ. வங்காளி அகாதமியின் தலைவர். கல்கத்தாவில் வசித்தபடியே முழு நேர இலக்கியப் பணி செய்பவர்.

– அனைத்திந்திய நூல் வரிசை, வங்கச் சிறுகதைகள், முதற் பதிப்பு: 1997, தொகுப்பு: அருண்குமார் மகோபாத்யாய், வங்கத்திலிருந்து தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *