அது ஒரு நிசப்தமான இடம்.
முட்கள் பதினோரு மணியை தொட்டது அந்த ரயில்வே ஸ்டேஷன் கடிகாரத்தில்..
ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க நபர் சுற்றிமுற்றி பார்த்தார். அவர் அருகில் ஒரு இளைஞனை தவிர வேறு யாரும் அங்கு இல்லை. அந்த இளைஞன், முகத்தில் சோகத்துடனும் மடியில் பையுடனும் ரயில் வரும் திசை நோக்கி பார்த்துக்கொண்டிருந்தான்.
சற்று கலங்கிய கண்களை பார்த்த அந்த நபர், ” தம்பி ஏன் சோகமா இருக்க ” என கேட்க தான் தாமதம். உடனே அந்த இளைஞன், கண்களில் சேர்த்து வைத்திருந்த நீரை மோற்றமாக அழுகையாய் கொட்டினான். சிறிது நேர அழுகைக்கு பின் பேசத்தொடங்கினான்.
“சார். நா இப்போ தா +2 முடிச்சன். ரெண்டு வருஷமா நானும் ஒரு பொண்ணும் லவ் பண்ணோம். வீட்ல தெரிஞ்சி எங்கள பிரிக்க பாத்தாங்க. அதனால தனியா வந்து வாழ முடிவு பண்ணி இங்க வந்தோம். ரெண்டு நாள் என்கூட இருந்த அவ எனக்கு என் அப்பா தா முக்கியம்னு என்ன விட்டுட்டு போய்ட்டா ” என சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் கண்களில் நீர் சுரக்க ஆரம்பித்தது.
சில மணித்துளிகள் மௌனித்த அவன் மீண்டும் பேசலுற்றான். ” நா அவள அவ்ளோ லவ் பண்ணன் சார். இப்போ என வேணானு விட்டுட்டு போய்ட்டா. இதுக்கு அப்பறம் எனக்கு வாழ விருப்பம் இல்ல சார். நா சாக போறன் ” என கோபமாக வார்த்தைகளை வீசிவிட்டு மீண்டும் அழ தொடங்கினான்.
தன் வலதுகை இல்லாத காரணத்தால் தன் இடதுகையை அவன் தோள்பட்டை மேல் வைத்து, ” தம்பி உனக்கு அட்வைஸ் பண்றளவுக்கு எனக்கு அனுபவம் இல்ல. இருந்தாலும் சொல்றன் கேட்டுக்கோ. நீ இன்னும் பாக்க வேண்டியது நிறைய இருக்கு. ஒவ்வொரு காதலுக்கு பின்னாடியும் ஒரு தோல்வி இருக்கு. இது எல்லா ஒரு வகை அனுபவமே. இத நீ புரிஞ்சிகிட்டா வாழ்க்கைல ஜெய்ச்சிடுவா” என்றார்.
“யோவ் உனக்கு என்னயா தெரியும் என் லவ் பத்தி. பேசாம போ” என மூஞ்சில் அடித்தார் போல் கூறினான். இனிமேல் இவனிடம் பேச முடியாது என்பதை உணர்ந்த அவர், தன் கைப்பிடியை எடுத்துக்கொண்டு பொறுமையாய் நடந்து போக ஆரம்பித்தார்.
அந்த இளைஞனோ நடந்து போகும் அந்த மனிதரை பார்த்து, ” நீங்க யாராவது லவ் பண்ணி இருக்கீங்களா சார்? ” என கேள்வி எழுப்பினான்.
சற்று திரும்பி அவனை பார்த்து சிரித்த அந்த நபர், “ஒரு வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்ல என் 12 வருஷ காதல் முடிஞ்சு போன சோகத்துல வாழ புடிக்காம ஒரு ட்ரெயின் முன்னாடி விழுந்து, என் கெட்ட நேரத்தால உயிர் போகாம ஒரு கை மட்டும் போய், இப்போ எல்லாத்துக்கும் அடுத்தவங்கள நம்பி இருக்க வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கன் தம்பி ” என்றார்.
சில அடிகள் நடந்த அவர் திரும்பி அவனை பார்த்து, ” கவலைப்படாத என்ன மாரி உனக்கு ஆகக்கூடாதுனு வேண்டிக்குறன். நீ நெனச்சது நடக்கும் ” என்று ஒரு சிரிப்புடன் பேசி முடித்தார்.
அவன் குழம்பி போனான். காதுக்குள் இவரின் சொற்கள். நெஞ்சுக்குள் இவன் காதலியின் சொற்கள். இரண்டுக்கும் நடந்த போராட்டத்தில் இப்பொது காதல் தான் வென்றது. அதனால் ட்ரெயின் வருவதை கண்டவுடன் பிளாட்பார்ம் ஓரத்தில் நின்றுகொண்டு குதிக்க தயாரானான். எதற்ச்சையாக வலது பக்கம் பார்த்த அவன் அந்த நபர் நடந்து போவதை கண்டான். மனம் மாறிய அவன், ட்ரெயின் அருகில் வரும் சமயம் பின்வாங்கினான்.
ட்ரெயின் சிறிது நேரம் நின்றுவிட்டு புறப்பட தயாரானது. சிறிது நேர யோசனைக்கு பின் ஒரு தீர்க்கமான முடிவெடுத்தான்.
தன் மனதுக்குள் ‘ லவ் இல்லனா லைப் இல்லையா? இல்ல. லைப் இருக்கு அதுவும் எனக்கு ஒரு லைப் இருக்கு. நா அந்த லைப்ப வாழ போறன்’ என கூறிக்கொண்டே ட்ரைனியில் ஏறி தன் புது வாழ்க்கையை வாழ தொடங்கினான்.
Arumai