(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“அம்மா!”
“யார், அது?”
“ஐயா இருக்கிறாரா, அம்மா?”
“இருக்கிறார்: என்ன சமாச்சாரம்?”
“ஒண்ணுமில்லை, அம்மா! அவரைக் கொஞ்சம் பார்க்கணும்.”
“ரொம்பப் பார்க்க வேண்டியதில்லையோ! ஒண்ணுமில்லாததற்கு அவரைப் பார்ப்பானேன்?”
“இல்லை அம்மா! வந்து …..”
“என்னத்தை வந்து……? ஐயாவைப் பார்ப்பதற்கு வேளை நாழி ஒன்றுமே கிடையாதா? நினைத்த நேரத்திலெல்லாம் பார்க்க வந்து விட வேண்டியது தானா? இந்தக் கொட்டும் மழையிலே எப்படித்தான் நீங்கள் வந்து இப்படிக் கழுத்தை அறுக்கிறீர்களோ தெரியவில்லையே!”
இந்தச் சமயத்தில் புதிதாகச் சிநேகமான ஒரு பெரிய மனிதருடன் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்த ‘ஐயா’, “என்னடி அது? இப்படி உள்ளே வா!” என்று தம்முடைய தர்மபத்தினியை அழைத்தார்.
“அது என்ன எழவோ! இங்கே வந்து பாருங்கள்! அசல் தரித்திரங்களா ஏழெட்டு வந்து நிற்கிறதுகள்!” என்று சொல்லிக் கொண்டே ‘அம்மா’ உள்ளே சென்றாள்.
இன்னொரு சமயம் வந்து தம்மைப் பார்க்கும்படி அந்தப் பெரிய மனிதரிடம் சொல்லிவிட்டு, ‘ஐயா’ எழுந்து வெளியே வந்தார். ‘அம்மா’ சொன்னபடி அங்கே ஏழெட்டு ‘அசல் தரித்திரங்கள்’ தங்கள் தங்கள் மனைவி மக்களுடன் தலைவிரி கோலமாக வந்து நின்று கொண்டிருந்தன.
“என்னடா, இது? நீங்கள் யார்? என்ன சேதி?” என்று வெளியே வந்த ‘ஐயா’ அதிகாரத் தோரணையில் இரைந்து கேட்டார்.
“சாமி! நாங்க செம்படவனுங்க! சமுத்திரக் கரையோரமா ஆளுக்கொரு குடிசை போட்டுக்கிட்டு எங்க தொழிலைச் செஞ்சிக்கிட்டு இருந்தோம். அந்தக் குடிசைகள் இருக்கிறது சமுத்திரக் கரையின் அழகைக் கெடுக்குதாம். அதுக்காவ யாரோ அஞ்சாறு பேர் வந்து எங்க குடிசைகளை யெல்லாம் பிரிச்சுப் போட்டுட்டாங்க! நாங்க என்ன செய்வோம், சாமி? எங்களுக்கு இருக்க இடமில்லை……”
“ஏன், உங்களுக்கெல்லாம் நஷ்ட ஈடு கொடுத்தார்களோ, இல்லையோ!”
“கொடுக்காம என்ன, சாமி! ஆளுக்குப் பத்து ரூவாக் காசு கொடுத்தாங்க…!”
“பத்து ரூபாய்க் காசு கொடுக்காமல் உங்களுடைய பங்களாக்கள் ஒவ்வொன்றுக்கும் பத்து லட்சமா கொடுப்பார்கள்?”
“பத்து லட்சம் கேட்கலை, சாமி! ‘அப்பாடி!’ ன்னு படுக்கப் பத்தடி இடந்தான் கேட்கிறோம். அதுக்கு இந்தப் பத்து ரூவாயை வச்சிக்கிட்டு நாங்க என்ன செய்வது, சாமி?”
“அதற்கு என்னை என்ன செய்யச் சொல்லுகிறீர்கள்? ஊரிலே எந்த எழவு நடந்தாலும் அதற்கு இந்த அன்ன விசாரம்தானா பொறுப்பாளி?—போங்கடா, வேலையைப் பார்த்துக்கொண்டு!” என்று எரிந்து விழுந்தார் ‘ஐயா.’
“அப்படிச் சொல்லிப்பிட்டா எப்படி, சாமி? கோடி வீட்டு ஐயா சொன்னாரு—உங்கக்கிட்ட சொன்னா மேலிடத்திலே சொல்லி எங்களுக்காக ஏதாச்சும் செய்விங்கன்னு!”
“அவனுக்கும் வேலை கிடையாது; உங்களுக்கும் வேலை கிடையாது. நானும் உங்களைப் போலவா இருக்கிறேன்? எனக்கு எவ்வளவோ வேலை இருக்கிறது. நீங்கள் போய்த் தொலையுங்கள்!”
“வேலையோடு வேலையா இந்த ஏழைகளையும் கொஞ்சம் கவனிச்சிக்கிட்டா நீங்க நல்லா யிருப்பீங்க, சாமி!”
“இல்லாவிட்டால் கெட்டு விடுவேனுக்கும்!—அட சனியன்களே! நீங்கள் மட்டுந்தானா ஏழைகள்? நாங்களுந்தான் ஏழைகள்!—முதலில் நீங்கள் இங்கிருந்து நடையைக் கட்டுங்கள்; அப்புறம் நான் உங்களைக் கவனித்துக் கொள்கிறேன்!” என்று சொல்லிவிட்டுக் கதவைப் ‘படா’ரென்று சாத்திக் கொண்டு ‘ஐயா’ உள்ளே சென்று விட்டார்.
***
ஸ்ரீமான் அன்னவிசாரம் எம். எல். ஏ. ஒரு காலத்தில் வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் அவர் தம்முடைய மனைவியை மாமனார் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, வேறு வழியின்றி நகரிலிருந்த சேவாசிரமத்தில் சேர்ந்தார். அந்த ஆசிரமத்தில் அவருக்கு மாதா மாதம் ரூபாய் ஐம்பது சம்பளம் கிடைத்து வந்தது. அதை அவர் வெளியே சொல்லிக் கொள்வதில்லை. அப்படிச் சொல்லிக் கொள்வது தம்முடைய தொண்டுக்குத் தாமே மாசு கற்பித்துக் கொள்வதாகுமென்று அவர் நினைத்தார்.
அந்த ஆசிரமத்தில் பொதுஜனச் செல்வாக்குள்ள ஒரு நண்பரின் சிநேகம் ஸ்ரீ அன்னவிசாரத்துக்குக் கிடைத்தது. நண்பர் நல்ல பேச்சாளர்; அடிக்கடி பல பொதுக் கூட்டங்களில் பங்கெடுத்துக் கொள்வார். அவர் சமயம் வாய்க்கும் போதெல்லாம் ஸ்ரீ அன்னவிசாரத்தைப் பற்றிச் சக்கைப்போடு போட்டு வந்தார். ஸ்ரீ அன்னவிசாரத்தின் தன்னலமற்ற சேவையைப் பற்றியும், தேசத்துக்காக அவர் தம் உடல், பொருள், ஆவி மூன்றையும் அர்ப்பணம் செய்திருப்பதைப் பற்றியும் அந்த நண்பர் சாங்கோபாங்கமாக எடுத்துச் சொல்லி வந்தார்.
இந்த விஷயத்தில் ஸ்ரீ அன்னவிசாரத்துக்கு மட்டும் அடிக்கடி சந்தேகம் வந்து விடும். அவ்வாறு சந்தேகம் வரும் போதெல்லாம் அவர் தம் உடலே ஒரு முறை தடவிப் பார்த்துக் கொள்வார்; அது என்றும் இருப்பது போல் வாடாமல் வதங்காமல் இருக்கும். அதற்குள் ‘ஆவி இருக்கிறதா?’ என்று தெரிய வேண்டாமா? அதற்காக ஒரு முறை அவர் தம் அங்க அவயங்களையெல்லாம் அசைத்துப் பார்த்துக் கொள்வார்; அதன் மூலம் ஆவியும் இருப்பதாகத் தெரிய வரும். பொருளைத்தான் அவர் பார்ப்பதேயில்லை. ஏனெனில், அதுதான் அவரிடம் கிடையவே கிடையாதே!
இருப்பதைச் சொல்லட்டும், இல்லாததைச் சொல்லட்டும்—அந்தப் பக்கத்து ஜனங்கள் அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படுவதேயில்லை. இத்தகைய மகாஜனங்களின் அசட்டுத்தனத்தினாலும், நண்பருடைய பிரசார பலத்தினாலும் ஸ்ரீ அன்னவிசாரம் எம். எல். ஏ. ஆனார். கனம் அங்கத்தினரானதும் ஸ்ரீ அன்னவிசாரத்தின் கவலை ஒருவாறு தீர்ந்தது. மாமனார் வீட்டிலிருந்த தம்முடைய மனைவியை அழைத்துக் கொண்டதோடு, இன்னொரு மாதரசியையும் காதலித்து இரகசியமாக மறு விவாகம் செய்து கொண்டார்!
‘பொதுஜனப் பிரதிநிதி’ என்ற ஒரே ஒரு காரணத்துக்காக, அவருடைய ‘சிக்கலான வாழ்க்கை’யைச் சிலர் இன்னும் சிக்கலாக ஆக்கி வந்தனர். அவர்களைச் சேர்ந்தவர்கள்தான் அந்தச் செம்படவர்களும். அந்தத் ‘தரித்திர’ங்களை அனுப்பிவிட்டு உள்ளே வந்த ஸ்ரீ அன்னவிசாரத்துக்கு ஒன்றுமே ஓடவில்லே.
அவருக்கு எதிரே பிரெஞ்சு அறிஞனான ரூஸ்ஸோவின் புத்தகமொன்று கிடந்தது. ஒரு காரணமுமில்லாமல் அதை எடுத்துப் புரட்டினர். அரசியல் நிர்வாகிகளைப் பற்றி அந்த மேதை எழுதியிருந்த ஒரு விஷயம் அவருடைய கவனத்தைக் கவர்ந்தது:
‘அரசியலை நிர்வகிக்கும் ஒவ்வொரு அதிகாரிக்கும் மூன்று வித மனப்பான்மைகள் இருக்கின்றன. முதலாவது, அவனுடைய சொந்த மனப்பான்மை; இது சுயநலத்தை நாடுகிறது. இரண்டாவது, ஆளுகின்ற மனப்பான்மை; இது சர்க்கார் நலத்தை நாடுகிறது. மூன்றாவதாகத்தான் மக்களுடைய மனப்பான்மை இருக்கிறது; இது மக்களுடைய நன்மையை நாடுகிறது.
நியாயமும் நேர்மையும் கொண்ட அரசாங்கம் நடைபெற வேண்டுமானால், சர்க்கார் நிர்வாகிகள் முதலாவது மனப்பான்மையைக் கைவிட வேண்டும். அதாவது, அவர்கள் சுயநலத்தைக் கருதக் கூடாது. இரண்டாவது மனப்பான்மை ஓர் அளவுடன் இருக்க வேண்டும். அதாவது, சர்க்காருடைய நன்மையைக் கவனிக்க வேண்டுமென்றாலும் அதுவே முக்கிய மானதாயிருக்கக் கூடாது. மூன்றாவது மனப்பான்மையைத் தான் அவர்கள் முதன்மையானதாகக் கொள்ள வேண்டும். அதாவது, மக்களுடைய நன்மையை முக்கியமாகக் கொண்டு, அந்த நன்மையின் மூலமாக மற்ற இரண்டு நன்மைகளையும் அடையப் பார்க்க வேண்டும். இந்த முறையை விட்டுவிட்டு, முதல் இரண்டு நன்மைகளின் மூலமாக மக்களுடைய நன்மையை நாடவே கூடாது.’
இந்த ‘அரசியல் சித்தாந்தம்’ ஸ்ரீ அன்னவிசாரத்தை என்னவோ செய்தது. புத்தகத்தை மூடி வீசி எறிந்துவிட்டு எழுந்தார். எதிரே சகதர்மிணி காப்பியுடன் வந்து நின்றாள். அதை அலட்சியமாக வாங்கி ஒரே மூச்சில் குடித்துவிட்டு, அவசர அவசரமாகச் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டார். இன்று சட்ட சபையில் அந்த ‘அசல் தரித்திரங்’களைப் பற்றி எப்படியாவது வெளுத்து வாங்கி விடுவது என்றும், ரூஸ்ஸோவின் கூற்றைப் பொய்யாக்கி, மூன்றாவது மனப்பான்மையான மக்கள் மனப்பான்மையை இனி முதல் மனப்பான்மையாகக் கொள்வதென்றும் தீர்மானித்துக் கொண்டு கிளம்பினார்.
என்றுமில்லாத விதமாக அன்று ஸ்ரீ அன்ன விசாரத்தைக் கண்டதும் மற்ற எம். எல். ஏ. க்கள் எல்லோரும் முகமலர்ச்சியுடன் வரவேற்றனர். ஸ்ரீ அன்னவிசாரம் ஒன்றும் புரியாமல் அவர்களைப் பார்த்து விழித்தது விழித்த படிநின்றார்.
“அன்னவிசாரத்துக்கு என்ன அப்பா! அடிக்கிறது யோகம்!” என்றார் ஒருவர்.
“இனிமேல் நம்மையெல்லாம் அவர் எங்கே கவனிக்கப் போகிறார்!” என்றார் இன்னொருவர்.
“எப்பொழுதாவது ஒரு சமயம் பேட்டியாவது அளிப்பாரோ, என்னமோ!” என்றார் மற்றும் ஒருவர்.
ஸ்ரீ அன்னவிசாரத்துக்கு ஒன்றும் விளங்கவில்லை. “என்ன விசேஷம்?” என்று மெள்ளக் கேட்டார்.
“விசேஷமா! உங்களுக்குத் தெரியவே தெரியாதா, நீரும் ஒரு மந்திரியாகப் போகிறீர் ஐயா, மந்திரியாகப் போகிறீர்!” என்றார் ஒருவர்.
தூக்கி வாரிப் போட்டது ஸ்ரீ அன்னவிசாரத்துக்கு! இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, “இதென்ன பிதற்றல்? எந்த இலாக்காவும் காலியாக இருப்பதாகக் கூடத் தெரியவில்லையே! என்றார் அவர்.
“இலாக்கா காலியாக இல்லாவிட்டால் என்ன? நீர் ‘இலாக்கா இல்லாத மந்திரி’யாக இருந்து விட்டுப் போகிறீர்!” என்றார் ஒரு வயிற்றெரிச்சல்காரர்.
இப்பொழுதுதான் இந்த விஷயத்தில் ஏதோ உண்மை இருக்க வேண்டுமென்று தோன்றிற்று ஸ்ரீ அன்னவிசாரத்துக்கு. உடனே அவருடைய கவனம் ‘அசல் தரித்திரங்’களின் மீது சென்றது.
‘இந்தச் சமயத்தில் அந்த ‘அசல் தரித்திரங்களைப் பற்றி நாம் இங்கே ஏதாவது உளறுவானேன்? சமுத்திரக்கரை அழகாக இருக்கவேண்டு மென்பது நகரத்துப் பெரிய மனிதர்கள், பிரமுகர்கள் ஆகியவர்களின் அபிப்பிராயம். அவர்களுடைய விருப்பத்துக்கு இணங்கிக் காரியம் செய்வது அரசாங்கத்துக்கு நல்லதா, அந்தத் தரித்திரங்களுடைய விருப்பத்துக்கு இணங்கிக் காரியம் செய்வது நல்லதா?— சீ, வேண்டாம்: வேண்டவே வேண்டாம். என்ன இருந்தாலும் நம்முடைய புத்தி இப்படிக் கீழே போகவேண்டாம். நாளுக்கு நாள் முன்னேற வேண்டிய நாம், அப்படி ஏதாவது இப்போது கேட்டு வைத்தால் அது சிலருக்கு பிடிக்கும்; சிலருக்குப் பிடிக்காது. அதன் பயனாக ஒரு வேளை மந்திரிப் பதவி கிடைக்காமலே போனாலும் போய்விடலாம். நமக்கு எதற்கு வீண் வம்பு? ‘எடுத்ததற்கெல்லாம் கையைத் தூக்கினோம், வீட்டுக்குப் போனோம்’ என்று இருப்பதே மேல்!’
இந்தத் தீர்மானத்துக்கு வந்ததும் ஸ்ரீ அன்ன விசாரம் ‘அசல் தரித்திரங்க’ளைப் பற்றிய விசாரத்தை விட்டார். சட்ட சபையில் ‘சிவனே!’ என்று உட்கார்ந்து கொண்டிருந்து விட்டு, வீடு திரும்பினார்.
அன்றிரவு அவருக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. காரணம், அவருடைய மனம் ‘மந்திரியின் மகாத்மிய’த்திலேயே லயித்து விட்டதுதான்!
***
மறுநாள் காலை ஸ்ரீ அன்னவிசாரம் படுக்கையை விட்டு எழுந்திருப்பதற்கும், அந்த ‘அசல் தரித்திரங்க’ளில் ஒன்று வந்து ஜன்னல் வழியே தலையை நீட்டுவதற்கும் சரியாயிருந்தது.
“யாரடா, அது?”
“நான் தான் குப்பனுங்க!”
“குப்பனா!”
“ஆமாங்க, நேத்து வந்து குடிசையைப் பிரிச்சுப், போட்டுட்டாங்கன்னு முறையிட்டுக்கிட்டோ மில்லே, அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவனுங்க!”
“ஓஹோ! இப்போது ஏன் இங்கே வந்தாய்?”
“மேலிடத்திலே எங்களைப் பற்றி ஏதாச்சும் சொன்னீங்களான்னு கேட்கத்தான் வந்தேனுங்க!”
“மேலிடம் என்னடா மேலிடம்! எனக்கு மூளைகீளை ஒன்றும் கிடையாதா? நாலு பேருக்கு நல்ல தென்று எண்ணி ஒரு காரியம் செய்தால், அது ஓரிருவருக்குக் கெடுதலாகவும் முடியுந்தான்! அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா, என்ன?—போ, போ!”
“என்ன சாமி, இப்படிச் சொல்றீங்க? ‘நீங்க எங்க பிரதிநிதி, எங்க பக்கமாப் பேசத்தான் மேலிடத்துக்குப் போயிருக்கீங்க’ன்னு கோடி வீட்டு ஐயா சொன்னாரே! உங்க பேச்சைப் பார்த்தா நீங்க ‘யாருக்குப் பிரதிநிதி’ ன்னு தெரியலைங்களே!” என்றான் குப்பன் வியப்புடன்.
அவ்வளவுதான்; ஸ்ரீமான் அன்னவிசாரத்துக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்துவிட்டது. அவர் படுக்கையை விட்டுத் ‘தடா’லென்று கீழே குதித்தார், குப்பனுக்கு நேராகச் சென்று ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு, “அடேய், அதிகப் பிரசங்கி! நான் யாருக்குப் பிரதிநிதி என்றா கேட்கிறாய்? சொல்கிறேன், கேட்டுக் கொள்: நான் எனக்குப் பிரதிநிதி; என் மனைவிக்குப் பிரதிநிதி, என் மக்களுக்குப் பிரதிநிதி; என் வீட்டுக்குப் பிரதிநிதி! உனக்கும் பிரதிநிதி இல்லை; உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதி இல்லை, போ!” என்று கத்தி விட்டுக் குளிக்கும் அறையை நோக்கி ‘மந்திரி நடை’ நடந்து சென்றார்.
“அப்படிப் போடுங்கள், ஒரு போடு! அடுத்த ‘எலெக்ஷன்’ வரும் வரை தான் நமக்குக் கவலையில்லையே!” என்று தன் பதி சொன்னதை அப்படியே ஆமோதித்தாள் அவருடைய சதி.
– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.
– ஒரே உரிமை, 1950, வெளியீடு எண்:6 – அக்டோபர் 1985, புத்தகப் பூங்கா, சென்னை.