யாருக்காக அது..?!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 5,064 
 

குமார், காலை 9. 10 த்திற்கெல்லாம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நுழைந்தான்.

அப்போதுதான் கடைநிலை ஊழியன் கந்தசாமி…. அலுவலக முகப்பில் பார்வையாளர் பகுதியில் எல்லோர் பார்வையும் படியுமிடத்தில் ஸ்டூல் மேல் ஸ்டூல் போட்டு சுவரில் ஆணி அடித்து அதை மாட்டினான்.

நீலக்கலர் பிரேம் போட்டு , கண்ணைப் பறிக்கும் சிகப்பு ப்ளோராசன்ட் கலரில் எழுத்துக்கள் பளிச்சென்றிருந்தது. வாக்கியங்கள் படிக்க அழகாக இருந்தது. பார்க்க பரவசமாகவும், படிக்க சந்தோசமாகவும் இருந்தது.

குமார், அதை நின்று நிதானித்துப் படித்துவிட்டு செக்சன் நோக்கிச் சென்றான்.

குமார்… சிவில்பொறியியல் படித்து முடித்த ஒரு புது ஒப்பந்தக்காரன். இந்த படிப்பு படித்தால் உடனே வேலை கிடைத்துவிடும் என்று யாரோ சொன்னார்கள். படித்தான்.

முடித்துவிட்டு…. வேலைக்கு விளம்பரம் பார்த்த இடங்களுக்கெல்லாம் விண்ணப்பங்கள் அனுப்பினான்.

இது மட்டுமில்லாமல் வங்கித்தேர்வு, அந்தத் தேர்வு இந்தத்தேர்வு என்று இவன் கண்ணில் பட்ட தேர்வுகளை எல்லாம் எழுதினான். வேலை. ..? அதுதான் கிடைக்கவில்லை. !!

ஏதோ கொஞ்சம் நிலம், அதில் வரும் வருமானம், குடும்பத்திற்கே ஆதாரம். வேலை வேண்டாம் விவசாயம் பெருக்கலாம் என்கின்ற எண்ணமிருந்தாலும்..தண்ணீர் தட்டுப்பாடு, உரத் தட்டுப்பாடு என்று ஏகப்பட்ட சிக்கலிருந்தாலும். .. இந்த ஆட்கள் தட்டுப்பாடு என்பது பெரும் பிரச்சனை.

அரசாங்கம்…. தன் வருமானத்தைப் பெருக்க டாஸ்மாக் என்கிற சாராய ஆளை திறந்தாலும் திறந்தது. ஒட்டுமொத்த சமுதாயமும். .. விட்டில் பூச்சிகளைப் போல அதில் போய் விழுந்து. …மயங்கிக் கிடக்கிறது. அப்புறம் எப்படி விவசாயம் பார்க்க முடியும். .? அப்படியே ஒன்றிரண்டு ஆட்கள் வேலைக்கு வந்தாலும்… வயல் தலைமாட்டிற்கு சாராயம் வாங்கி கொண்டு வந்து கொடுக்க வேண்டிய நிலை. அப்புறம் எப்படி விவசாயம் பார்க்க. …?! அதனால் அவன் அந்த விவசாய பக்கமே போகவில்லை.

வயதாகிக்கொண்டிருக்கிறது. பூமிக்குப் பாரமாய், சோற்றுக்குத் தண்டமாய் இல்லாமல் வேறு என்ன செய்யலாமென்று யோசிக்கும்போது தான்….

‘ வேலை வேலையென்று அலைந்து வெட்டித்தனமாய் காசையும் காலத்தையும் ஏன் செலவு செய்ய வேண்டும். .? படித்தப் படிப்பை தானே உபயோகப்படுத்திக் கொண்டாலென்ன. .? ‘ – தோன்றியது. புரட்டிப் புரட்டி யோசித்தான். இப்படி ஒப்பந்தம் எடுத்து செய்யலாம் ஏற்கிற எண்ணம் தோன்றியது.

அம்மா, அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடி சம்மதம் வாங்கி இருந்த நிலத்தில் பாதி விற்று காசாக்கி. ஒப்பந்த உரிமம் பெற்று. .. சூட்டோடு சூடாய் பத்து லட்சம் தொகைக்கு பலத்த போட்டிக்கிடையே ஒரு மதகு காட்டும் வேலை எடுத்து முடித்தும் விட்டான். அலுவலகத்தில் செய்ய வேண்டியது செய்து பணம் வரவேண்டும். அதற்காக வந்திருக்கிறான்.

செக்சனிலில் இவனை நேர்பார்வைப் பார்த்த நாகராசன் இளநிலைப் பொறியாளர் ஏதோ மும்முரமாக

எழுதிக்கொண்டிருந்தான்.

” வணக்கம் சார் ! ”

எழுதியவன் நிறுத்தி. ..

” வணக்கம் . கொஞ்சம் உட்காருங்க. கையில இருக்கிற வேலையை முடிச்சிட்டு கூப்பிடுறேன். ” பவ்வியமாய்ச் சொல்லி கை வேலையைத் தொடர்ந்தான்.

அவனுக்கு பக்கத்தில்… இவனது வேலை சம்பந்தமாக ‘ எம் ‘ புத்தகம், மற்றும் வேலையை அளவெடுத்ததற்கான தாட்கள் இருந்தன.

குமார்…. ஒப்பந்தக்காரர்கள், பார்வையாளர்கள் அமரும் இடத்தில் அமர்ந்தான்.

சந்திரசேகரன் ஒப்பந்தக்காரன் வேறொரு இளநிலைப் பொறியாருக்காக உட்கார்ந்திருந்தான்.

நாகராசன் எழுதினான். எழுந்து கழிவறைக்குச் சென்றான். இங்கே சென்றான், அங்கே சென்றான் ரொம்ப மும்முரமாக வேலை பார்த்தான். இவனையும் ஓரிரு முறை அடிக்கண்ணால் பார்த்தான். ஆனால் அழைக்கவில்லை.?!……

ஒரு மணி நேரத்திற்கு மேலாக உட்கார்ந்து காத்திருந்த குமாருக்கு ஒரே இடத்தில் இருந்த அலுப்பு. காத்திருந்த வெறுப்பு. நாகராசன் அருகில் சென்றான்.

” சார் ! ” அழைத்தான்.

இவனை ஒருமாதிரியாகப் பார்த்த அவன். …

” ரொம்ப அவசர வேலை. காலையில வந்து உட்கார்ந்ததுமே தலைமை அதிகாரி இந்த வேலையைக் கொடுத்து உடனே முடின்னு கொடுத்துட்டாரு. வேலைத் தொடத்தொட வளருது. உங்க வேலையை நாளைக்குப் பார்ப்போம் ! ” கெஞ்சும் பாவனையில் சொன்னான்.

இவனுக்கு நம் வேலை மட்டுமில்லை. அலுவலகத்தில் இன்னும் எத்தனையோ அவசர வேலைகள். நாளைக்குப் பார்த்துக் கொள்வோம் !… நினைத்து. ..

” சரி சார் ! ” தலையாட்டிவிட்டு வெளியே வந்தான்.

மறுநாள். போனான்.

அடுத்த நாளும் சென்றான்.

நாகராசன் தினமும் ஒரு நம்பகமான சேதி, காரணம் சொல்லி குமாரை அனுப்பினான்.

‘ தன் வேலை….. ‘ எம் ‘ புத்தகத்தில் எழுதி, வவுச்சர் எழுதி அனுப்ப வேண்டியது. மிஞ்சிப் போனால் மூன்று, மூன்றரை மணியில் முடிக்க வேண்டிய வேலை. எதற்காக இப்படி இழுத்தடிக்க வேண்டும். .? ‘ இந்த வேலையைச் செய்ய தன்னிடம் ஏதாவது எதிர்பார்க்கின்றானா..? ஆள் மலை புடுங்கி மலையப்பா ! என்று சொன்னார்களே. .! இதுதானா விசயம். ..? ‘ அவனுக்குத் தோன்றியது.

நேரே…இளநிலைப் பொறியாளருக்கு மேல் அதிகாரியாய் இருக்கும் உதவி பொறியாளரிடம் சென்றான்.

” என்ன குமார் விசயம். ..? ” அவர் இவனை எதிரில் அமரச் சொல்லி விசாரித்தார்.

” வேலையெல்லாம் முடிச்சி பத்து நாட்களுக்கு மேல் ஆகுது சார். செலவு செய்த தொகை வேணும். ‘பில் ‘ செய்யணும் சார் .”

” உங்க வேலையைக் கவனிச்ச இளநிலைப்பொறியாளர் நாகராசனைப் பார்த்தீங்களா. ..? ”

” பார்த்தேன் சார். நாலு நாளாய் நடக்கிறேன். நடக்கல. ”

” அப்படியா. .? ! ” என்று யோசனையாய்க் கேட்டு ஒரு நிமிடம் மவுனமாய் இருந்தவர்….

” இருங்க. கூப்பிட்டுக் கேட்கிறேன் .” பியூனை அழைப்பதற்காக வாசலைப் பார்த்தார்.

” வேணாம் சார். உங்களிடம் புகார் பண்ணினேன்னு தெரிஞ்சா ஆள் வருத்தப்பட்டு இன்னும் இழுத்தடிப்பார். அதனால. ..நீங்களா கேட்கிறாப்போல கேட்டு ஏற்பாடு பண்ணுங்க. ” சொல்லி வெளியே வந்தான்.

மறுநாள் சென்ற பொது நாகராசன் முகம் கடுகடு. குமாரை நிமிர்ந்து பார்க்கவில்லை.

” சார் ” இவனாகவே அழைத்தான்.

” என்ன. .? ”

” பில்…? ”

” உங்க வேலைதான் நடந்துக்கிட்டிருக்கு. மதியம் வாங்க. ”

உண்மையில் இவன் வேலையைத்தான் அவன் செய்துகொண்டிருந்தான்.

‘ அதிகாரியிடம் சொன்ன கோபம். வேலை ! ‘ குமாருக்குப் புரிந்தது.

போய் மதியம் வந்தான். மறுநாள் வந்தான். மறுநாளும் வந்தான்.

‘ கோபம் ! இழுத்தடிக்கிறான் ! ‘ – புரிந்தது.

உதவிப்பொறியாளர் அறையை நோக்கி நடந்தான்.

அதேசமயம். ..

இன்றும் இவன் அலைச்சலைக் கவனித்த சந்திரசேகரன். ..

” கிட்டத்தட்ட பத்து நாளாய் அலையுறீங்க. என்ன விசயம்..? ” வலிய இவனை மரித்துக் கேட்டார்.

‘ குமாருக்கே இந்த அநியாயத்தை யாரிடமாவது கொட்ட வேண்டும் போலிருந்தது.’

சொன்னான்.

பொறுமையாய்க் கேட்ட அவர்…..

” இப்படி வாங்க. ..” என்று அழைத்து அவனைத் தனியே அழைத்துச் சென்றார். அலுவலகத்தில் ஒதுக்குப் புறமாய் ஓரிடத்தில் நிறுத்தி. ..

” தம்பி ! ஒரு உண்மையைச் சொல்றேன் கேளுங்க. ”

” சொல்லுங்க சார் .? ”

” இது சம்பந்தமா நீங்க எந்த மேலதிகாரியைப் பார்த்தாலும் வேலை நடக்காது ! ” மெல்ல சொன்னார்.

” ஏன் சார். .? ” துணுக்குற்றான்.

” அவனவனுக்கு வெட்ட வேண்டியதை வெட்டினால்தான் நடக்கும் ! ”

அதிர்ந்தான்.

” தம்பி ! பல வருடங்களாய் நானும் இங்கே வேலை எடுத்து செய்யிற ஒரு ஒப்பந்தக்காரன். கடைசியாய்…. ஒரு வேலை முடிச்சபிறகு மிச்சம் வைத்துவிட்டுப் போன வைப்புத் தொகை வாங்குறதுக்காக அலையறேன். இவனுங்களுக்கு கொடுத்து கட்டுப்படியாகல. அதனால இந்த தொழிலையே விட்டுட்டேன். வேலைக்கான மொத்தத்தொகையில் சதவிகித அடிப்படையில் காசு கேட்கிறானுங்க. இல்லே புடுங்குறானுங்க. சம்பாதிக்க முடியல. நம்ப நட்டத்தைப் பத்தி இவனுங்களுக்குக் கவலை இல்லே. நம்ம வேலை நடக்கணும்ன்னா பணம் வெட்டணும். கொடுக்கலைன்னா மொறைக்கிறானுங்க. கொடுக்காம நேர்மையா நல்லா செய்தாலும் வேலையில குற்றம் குறை கண்டுபிடிச்சி மிரட்டுறானுங்க. கொஞ்சமா கொடுத்தா இழுத்தடிக்கிறானுங்க. நம்ம காசைப் போட்டுட்டு எடுக்க திண்டாட வேண்டியிருக்கு. உங்க வேலைக்கு எவ்வளவு தொகை பில்லாகானும். ? ” கேட்டார்.

” பத்து லட்சம் ! ”

” ஒரு மாசத்துக்கு இழுக்கடிச்சானுங்கன்னா இந்த பத்து லட்சத்துக்கு வட்டி என்னாச்சு. .?” கேட்டு நிறுத்தினார்.

குமார் வாய் பேசவில்லை.

” அதை நினைச்சு ஒவ்வொருத்தனுக்கும் வெட்ட வேண்டியதை வெட்டுங்க. ரெண்டு நாளையில அவனுங்களே காசைக் கூப்பிட்டுக் கொடுப்பானுங்க. ”

குமார் யோசித்தான். ஜீரணிப்பதற்குக் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் வழி. .??.

ஒரு முடிவிற்கு வந்தான்.

” யார் யாருக்கு எவ்வளவு சார் கொடுக்கணும். .?” கேட்டான்.

” தலைக்குப் பத்து. உதவிக்கு எட்டு. இளநிலைக்கு அஞ்சு. பில் செய்யிற எழுத்தருக்கு மூணு. காசு கொடுக்கிற காசாளருக்கு ரெண்டு. வெட்டுங்க. பணம் தானா ஓடிவரும். ”

” சரி சார் ! ” தலையாட்டிக் கொண்டான்.

சென்றான்.

இரண்டே நாட்களில் சந்திரசேகரன் சொன்னது மாதிரி மொத்தப் பணமும் வந்தது.

கையில் பணத்துடன் அலுவலகத்தின் தலைமை அதிகாரி அறைக்குள் நுழைந்தான்.

ஏறிட்டார்.

” பணம் கிடைச்சிடுச்சி நன்றி சார். ”

” சந்தோசம். ”

” உங்களுக்கு ஒரு சின்ன வேலை சார். ”

” என்ன. .? ”

” வெளியில மாட்டியிருக்கிற விளம்பரப்பலகையைக் கழட்டனும். .”

” என்ன விளம்பரப்பலகை அது. .? ”

” காலதாமதம் செய்வது லஞ்ச ஊழலை உருவாக்கும். !

கால தாமதம் செய்தால் உயர் அதிகாரிகளை அணுகவும் !. – விளம்பரப்பலகை. !! ”

”………………………..”

” நீங்களே வாங்கி இருக்கீங்க. எதுக்கு அது வெட்டியாய். வெறுமனாய். .? ”

இருக்கையில்…. தலைமை ஆடவில்லை. அசையவில்லை. முகம் இறுகி கல் மாதிரி இருந்தார்.

குமார் வெளியேறினான்.

ஆமாம் யாருக்காக அது. ..? ?????!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *