‘மோனலிசாப்’ புன்னகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 22, 2021
பார்வையிட்டோர்: 2,900 
 
 

(2020ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘எங்கள் தகப்பனாருக்கு மிகவும் விருப்பமான ஐயனார் கோவிலுக்கு இன்று போகக் கிடைத்தது. இந்த ஐயனார் கோயிலைப் பற்றியும், அதன் பின் கோபுரத்தோடு வேர்விட்டு வளர்ந்து, பல விழுதுகளை ஊன்றி நிற்கும் பெரிய ஆலமரத்தைப் பற்றியும், அதனயலில் மாரிகாலத்தில் பொங்கித் ததும்பி எப்போதும் வற்றாத குளத்தைப் பற்றியும், கோவிலின் மிக மிக ஆழமான தீர்த்தக் கிணறு பற்றியும், நாங்கள் குழந்தைகளாக இருந்த காலத்தில் எங்கள் தந்தையார் கதைகதையாகச் சொல்வார்.’

‘ஐயனார் கோவில் பிரதேசம் இராணுவத்தின் பிடியிலிருந்து விடுபட்டு விட்டதென்று அறிந்தபோது, தந்தையாருக்கு விருப்பமான ஐயனாரை ஒருமுறை சென்று பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். வெளிநாட்டிலிருந்து நீண்டகாலத்தின் பின், சொந்த ஊருக்கு திரும்பியிருந்த பால்யகால சினேகிதியைப் பார்க்கப் போகும் வழியில், ஐயனாரையும் சென்று பார்க்கக் கிடைத்தது. தந்தையார் சொன்னதுபோலவே ஐயனார் கோயிலும், ஆழமான தீர்த்தக் கிணறும் அப்படியேதான் இருந்தன. நான் கற்பனை செய்திருந்த பிரமாண்டத்திலும் பார்க்க, ஆலமரம் அடக்க ஒடுக்கமாக பவ்வியமாகக் காட்சிதந்தது. இராணுவம் அகன்றதன் பின் ஆலய வளாகத்தைத் துப்பரவு செய்தவர்கள் ஆலமரக் கொப்புகளையும் வெட்டி மட்டுப்படுத்தியிருப்பார்களென்று நினைக்கின்றேன். பொங்கித் ததும்பி அலையெறியும் கரண்டைக் குளத்தைத்தான் காணவில்லை. விசாரித்ததில், காடு மண்டிக் கிடந்த ஒரு இடத்தைக் காட்டினார்கள். கரண்டைக் குளம் தூர்ந்து காடு மண்டிப் போய் கிடந்தது……..’

முகநூலில் வந்த இந்தக் குறிப்பு மேலும் பல விடயங்களைத் தொட்டுச் சென்றது. ஆலய வளாகத்தில் எழுந்துள்ள புதிய ஐயப்பன் ஆலயம் பற்றியும், அங்கே குடியிருக்கும் பூசகர் குடும்பத்தைப் பற்றியும், தாங்கள் அர்ச்சனை செய்து வழிபட்டது பற்றியும்……

எனக்கும் நெருக்கமாக இந்த ஆலயத்தைப்பற்றிய குறிப்பை, யார் எழுதியிருப்பார்களென்று பார்த்தேன். திருமதி பவித்திரா பன்னீர்செல்வன்.

‘பவித்திரா? பவித்திரா? பழக்கமான பெயரைப் போல இருக்கிறதே. ஓ, என்னுடைய கிராமத்து நண்பர் சிவதாசனது மகளாகத்தான் இருக்க வேண்டும்.’

நாங்கள் ஏழு எட்டுப் பேர், எங்கள் கிராமத்திலிருந்து தூரத்து சிறிய நகரிலிருந்த கல்லூரிக்குச் சென்று படித்தோம். காலையிலும் மாலையிலும் ஏறக்குறைய ஒவ்வொரு மணித்தியால நடைப்பயணம். காலையில் எல்லோரும் ஒரே நேரத்தில் சந்திபோமென்று சொல்லமுடியாது. இரண்டு மூன்று பேர் சிலவேளைகளில் தனியனாக, மாலையில் பெரும்பாலும் ஐந்தாறு பேர் ஒன்றாகவே வருவோம்.

அனேகமான நாட்களில் காலையில் நானும் சிவதாசனும் தான் சந்தித்து ஒன்றாகவே நடப்போம். மற்றவர்கள் நேரத்திற்குப் போய் விடுவார்கள். என்னைப் போலவே அவனும் காலையில் தோட்ட வேலைகளை முடித்து வெளிக்கிட நேரமாகிவிடும். ஆத்துப் பறந்து ஓடுவோம். பாடசாலை நேரத்திற்குப் பிந்திச் சென்று அடியும் வாங்குவோம்.

அன்று கொஞ்சம் நேரத்திற்கு வெளிக்கிட்டு விட்டோம் போலிருக்கிறது. தோட்ட வேலை குறைவான நாட்களில் அவசரப்படாமல் ஆறுதலாகவே வெளிக்கிடுவோம்.

ஆடிப்பாடி ஏதேதோ கதைகள் சொல்லியபடியே நடந்து வந்தோம். எங்கள் கிராமத்து எல்லையைக் கடந்து அடுத்த கிராமத்து தொடக்கத்தில், வைரவர் கோயில் முற்றத்தில் மீசையை முறுக்கிய படி நிற்கும் காவல்காரன் சிலை. ஒரு கையில் வாள்; மறுகையில் கம்பு. சிலையின் பாதங்களின் பக்கத்தில் துள்ளியோடும் நாயின் சிலை.

‘ மனோ சிலையின் கண்களைப் பார்’ என்றான் சிவதாசன்.

பார்த்தேன் எனக்கு ஒன்றுமே புலப்படவில்லை. “ஏன்? என்ன……?”

“வெட்கப்படுற மாதிரி தெரியவில்லையா?

பார்த்தேன். “வெட்கப்படுகிற மாதிரித் தெரியவில்லை. எதற்கோ சந்தோசப்படுகிற மாதிரி……. நாய்கூட வாலைக் குழைந்து கொண்டு எதற்கோ சந்தோசப்படுகிறமாதிரி”

இப்படி இப்படியாக அர்த்தமில்லாமல் ஏதேதோ கதைத்தபடி நடந்தோம். எதிர்படும் தோட்டத் தலைப்பில் கும்பலாய் படர்ந்திருந்த நாகதாளிப் புதர்கள். திடீறென்று நின்றவன் நாகதாளிப் புதர்களைப் பார்த்தபடி பரபரத்தான். “இந்தா என்ரை புத்தகங்களையும் பிடி. அந்த பச்சைமட்டைக் கொப்பியின்றை நடு ஒற்றையைக் கிழிச்சுத் தா. நாகதாளிப் பழங்கள் கிடக்கு.”

அடுத்த நாலு ஐந்து நிமிடங்களில், நாகதாளிப் புதர்களை லாவகமாக விலத்தி உட்சென்றவன், அழகான சிவந்த ஐந்தாறு பழங்களுடன் வெளியே வந்தான்.

அன்றும் பாடசாலைக்குப் பிந்திப்போய் அடி வாங்கினோம். ஆனால், அன்று மாலையில், நாங்கள் நாலைந்து நண்பர்கள், ஐயனார் கோயில் ஆலமரத்துக் கொப்பில் ஏறி ஊஞ்சலாடிக் கொண்டு, அழகிய சிவந்த நாகதாளிப் பழத்தின் உள்ளிருக்கும் முள்ளை கவனமாக விலத்தி, பழத்தின் உள்ளீடான சதையை வாய் சிவக்க சிவக்க தின்றோமென்பதும்; பின்னர் ஐயனார் கோயில் ஆழக் கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடித்தோமென்பதும் வேறுகதை.

காலையிலேயே பாடசாலை செல்லும் அவசரத்தில் ஆய்ந்த நாகதாளிப் பழங்களை, ஐயனார் கோயில் ஆலமரப்பற்றையில் ஒழித்து வைத்திருந்தோமென்றும், மாலையில் பாடசாலை விட்டு வருகையில், நண்பர்களை ‘ ஒரு இரகசியம்; ஒரு நல்ல இரகசியம்’ என்று சொல்லி அழைத்து வந்திருந்தோமென்பதும் இன்னோர்கதை.

(இப்போது போலல்லாமல்; அப்போது இரண்டு நேரப் பாடசாலை என்பதையும் கவனத்தில் கொள்க)

எங்கோ பேருந்து குலுங்கி நின்றது. கையிலிருந்த ஐபோனில் முகநூலைப் பார்த்துக்கொண்டு, எங்கெங்கோ நினைவுகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்த என் கவனம் சிதறிற்று. ஜன்னலால் வெளியே எட்டிப் பார்த்தேன். நான் இருக்கும் இடத்திற்கு போக இன்னும் பதினைந்து இருபது நிமிடங்கள் ஆகலாம். சுற்றுச் சூழலை மறந்து, முகநூலைப் பார்த்துக் கொண்டு மீண்டும் நினைவுகளில் ஆழ்ந்து போனேன். சிவதாசனைப் பற்றிய நினைவுகளே இப்போதும்……

தெளிவான மாலை நேரம். பாடசாலை மூன்றரை மணிக்கு விட்டதனால் இப்போது நாலுமணி இருக்கலாம்… ஐயனார் கோயில் கரண்டைக் குள மேற்குக் கரைக் குளக்கட்டில் நாங்கள் நாலைந்து நண்பர்கள் போனவாரந்தான் இரண்டு மூன்று நாள் நீடித்த அடைமழை பெய்ததால், குளம் ததும்பி சிற்றலை எறிந்து கொண்டிருந்தது. மேற்குவானச் சரிவின் சூரியக் கதிர்களால் குளம் மஞ்சளாய் பளபளத்தது. கிழக்குக் குளக்கட்டில் நாலைந்து வெண் நாரைகள். அவற்றின் கழாமுழாச் சத்தமும் மெதுவாகக் காற்றில் கலந்து கேட்டது.

“நான் குளத்தில் குளிக்கப் போகிறேன்” திடீரென சிவதாசன் சொன்னான். எங்களின் பதிலை எதிர்பாராது, சேட்டைக் கழற்றி, புத்தகங்களையும் சேட்டையும் குளக்கட்டில் வைத்து, கல்லால் பாரம் வைத்துவிட்டு குளத்தில் இறங்கிவிட்டான். நாங்கள் ஒருவரை ஒருவர் பர்த்துக் கொண்டோம். தயங்கித் தயங்கி ஒவ்வொருவராகக் குளத்தில் இறங்கி நீண்டநேரமாக நீச்சலடித்தோம்.

அன்று வீடு திரும்ப மாலை ஆறு மணியாகி விட்டிருந்தது. பயந்து கொண்டே வீடு திரும்பினோம்.

‘பாடசாலை மூன்றரைக்கு விட்டால் மூன்று மணிக்கு வீட்டில் நிற்க வேணும்’ என்று அடிக்கடி சொல்லும் எனது தந்தையார், நீண்ட பூவரசம் கம்புடனேயே வழிமேல் விழி வைத்திருந்து என்னை வரவேற்றார். ‘சந்தோசத்தின் மறுபக்கம் துக்கம் தானே என்ன செய்வது?’

தனக்கும் பூசை நடந்ததாகத்தான் சிவதாசன் சொன்னான். மற்றவர்களுக்கு என்ன நடந்ததோ தெரியாது.

இதற்கு இரண்டொரு நாளுக்குப் பிறகு காலை வேளையில் நடந்தது இன்னொரு கதை. வழக்கம் போல நானும் சிவதாசனும், ‘ பிந்தப் போகுது; பிந்தப் போகுது’ என்று கதைத்துக் கொண்டு, அவசர அவசரமாக நடந்து கொண்டிருந்தோம். வைரவ கோயில், தோட்ட வெளிகளை எல்லாம் தாண்டி, பிரதான வீதியை ஊடறுத்து ஐயனார் கோயில் ஒழுங்கையில் இறங்கி நடந்தோம். சிவதாசன் எதற்கோ சங்கடப்படுவது போலத் தெரிந்தது. நடையின் வேகம் குறைந்திருந்தது. முகம் வாடியிருந்தது.

“மனோ கொஞ்சம் கஷ்டமாய் கிடக்கடா”

“என்னெண்டு சொல்லேன்”

“நடக்கேலாமல் இருக்கடா”

“என்னெண்டு சொன்னால்தானே…….”

“காச்சட்டையோடை போகும் போல கிடக்கடா” சொல்லிப் போட்டு சங்கடப்பட்டு நெளிந்தான்.

ஒழுங்கையில் ஆள் நடமாட்டமே இல்லை. ஒழுங்கைக் கரையில் ஒரு மறைவான பற்றையைக் காட்டி போயிருக்கச் சொன்னேன்.

“உன்ரை புத்தகங்களையும் என்னட்டைத் தா. நான் ஐயனார் கோயில் ஆலமரத்தடியிலை வைச்சுக் கொண்டு நிற்கிறேன்.” கூப்பிடு தொலைவிலிருந்த ஐயனார் கோயிலைச் சுட்டிக் காட்டிச் சொன்னேன்.

புத்தகங்களை என் கையில் திணித்தவன் பற்றையை நோக்கி பறந்து போனான். நான் மெது மெதுவாக நடந்துபோய் நிலத்தைத் தொட்ட ஆலமரக் கொப்பில் ஏறியிருந்தேன். மூன்று நாலு நிமிஷங்களில் என்னை நோக்கி வந்தவன், ஆசுவாசமாகப் புன்னகை பூத்தான்.

குளத்தடிக்குப் போகேலையோ என்றேன்.

கல்லாலும்; புல்லாலும் வேலை முடிஞ்சுது என்றான்.

பஸ்ஸினுள் குழந்தையொன்று பலத்த சத்ததில் அழுதது. குழந்தையை அணைத்திருந்த தாய், ஏதேதோ சொல்லி குழந்தையின் அழுகையை நிறுத்த முயன்று கொண்டிருந்தாள். நான் கவனம் சிதறி, ஜன்னலால் வெளியே பார்த்தேன். என்னுடைய இடம் வர இன்னும் நாலு நிறுத்தங்களைக் கடக்க வேண்டும். குறைந்தது ஏழெட்டு நிமிஷமாவது செல்லும்.

மீண்டும் முகப்புத்தக மேய்ச்சல். அப்போதும் சிவதாசன் நினைவுகள். எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தோமென்று நினைக்கிறேன். மற்றவர்கள் நண்பர்கள் தானென்றாலும், சிவதாசன் எனது இணைபிரியாத நண்பன். எனது நினைப்பிலும், மற்றவர்களின் பார்வையிலும் அவன் எனது இணைபிரியா நண்பன் தான். ஒரே வகுப்பில் படிப்பதனாலும், காலையிலும் மாலையிலும் ஒன்றாகவே திரிவதனாலும் அவன் எனக்கு நெருக்கமானவன் தான். நானும் அவனுக்கு அப்படித்தான்; அப்படித்தான்.

மூன்றாம் தவணையின் கடைசி நாள். மதிய உணவு இடைவேளை. சைவ உணவுக் கடையில் இரண்டு மாத்தோசை சாப்பிட்டு விட்டு, ஐஸ்பழக்காரனிடம், ஒன்று – இரண்டு – மூன்று – நாலு என ஐஸ் பழங்கள்.

வருடத்தின் கடைசி பாடசாலை நாள். இதற்கென ஐந்து, ஐந்து சதமாக காசு சேர்த்து வைத்து, நான்கு ஐந்து ஐஸ்பழங்கள் குடிப்போம்.

அன்றைய நாளில் யாரும் நண்பர்கள் காசு கடன் கேட்பார்களென்று நினைத்து, பாடசாலையில் தரும் பணிசின் நடுவில் காசைப் பொதிந்து வைத்திருப்போம்.

நாலாவது ஐஸ்பழம் குடித்துக் கொண்டிருந்தபோது, சிவதாசன் வந்தான்.

“இண்டைக்கு ஒரு ஐஸ்பழம்தான் குடிச்சனான். இனி கனநாளைக்கு குடிக்கேலாது. ஒரு அஞ்சு சதம் தாவென்றா – ஒரு ஐஸ்பழம் குடிக்க”

“என்னட்டை காசு இல்லை”

“நீ பணிசுக்கை வைச்சிருக்கிறாயடா. எனக்குத் தெரியும். தாவேன்றா ஒரு ஐஸ்பழம் குடிக்க”

“என்னட்டை இல்லையடா”

முகம் கறுத்து வாடித் தொங்க அவன் போய்விட்டான்.

நான் ஐந்தாவது ஐஸ்பழத்தையும் குடித்தேன்.

தலையை உலுக்கிக் கொண்டேன். “நான் அற்பனிலும் அற்பன். சிவதாசன் என் இணைபிரியாத நண்பனாம்.”

மீண்டும் தலையை உலுக்கிக்கொண்டு ஜன்னலால் வெளியே பார்த்தேன். அடுத்த தரிப்பில்தான் இறங்க வேண்டும். பரபரப்பாக இருக்கையை விட்டெழுந்து இறங்க ஆயத்தமானேன்.

“நீங்கள் மனோகரன் சேர் தானே” அருகினில் குழந்தையை அணைத்து வைத்துக்கொண்டிருந்த பெண் கேட்டாள்.

ஓமென தலையை அசைத்தவாறே அவளை உற்றுப்பார்த்தேன். எனக்கு ஆரெனப் புலப்படவில்லை.

“நான் பவித்திரா. சிவதாசன்ரை மகள். சின்னனிலை பார்த்திருப்பியள். இப்ப மறந்திட்டியள் போலை.”

“ஓம் பிள்ளை, ஓம் பிள்ளை. இப்ப ஞாபகம் வருகுது. அப்பிடியே சிவதாசனை உரிச்சு வைச்ச மாதிரி இருக்கிறியள்.”

“நீங்களும் கொஞ்சம் மாறித்தான் போனீங்கள். அப்பான்ரை கதையள் கேள்விப் பட்டிருபீங்கள் தானே” அவள் முகத்தில் கண்ணீர் திரள என்னைப் பார்த்து சொன்னாள்.

“ஓம் பிள்ளை; என்ன செய்யிறது. காலம் அப்பிடி. இப்ப இங்கை என்ன மாதிரி”

“நான் இடமாற்றம் கிடைச்சு அப்பா படிச்ச பள்ளிக்குடத்துக்கு படிப்பிக்க வந்திட்டேன். பழைய வீட்டைத்தான் திருத்திப் போட்டு இருக்கிறோம்.”

“நான் அங்கை வந்து உங்களை பார்க்கிறேன்.” என்று கையை ஆட்டி அவளிடம் விடைபெற்றேன். அவளும் தலையாட்டி கண்களில் கண்ணீர் பளபளக்க புன்னகை பூத்தாள். அந்தப் புன்னகை சிவதாசனின் ‘மோனலிசாப்’ புன்னகை போலவே இருந்தது.

-ஜீவநதி ஜனவரி 2020

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *