M D விஸிட் என்று அலுவலகமே திமிலோகப்பட்டுக்கொண்டிருந்த்து. இரண்டு காரணங்களால். ஒன்று அவர் எல்லோராலும் விரும்ப்ப்படும் அன்பும் அறிவும் ஒருங்கே சேர்ந்தவர். இன்னொன்று அவர் இந்த மாதம் பணி ஓய்வு பெறுகிறார். இப்போது பார்த்து பேசினால் தான் உண்டு. அப்புறம் சொந்த ஊர் போய் விடுவார். பணியில் இருக்கும் போதே அதிகம் ஆடம்பரம் பண்ண மாட்டார். அத்தனை பேரும் பரபரப்பாக தயார் செய்து கொண்டிருந்தார்கள் அவர் வருகைக்காக.
ராமசாமிக்கு கையும் காலும் ஓடவில்லை. பழைய நண்பர் அவர். இப்போது எம்.டி. போன் அலறி, சிந்தனையைக் கலைத்தது.
ஹலோ!!
ராமசாமியா? நான் தான் சிவானந்தம்
சார், நீங்க வரப்போறீங்கன்னு தான் எல்லாரும் பம்பரமா வேல பாக்கறாங்க. எப்ப சார் வர்றீங்க?
ரெண்டு நாள்ல பா. உன்ன பாக்கணுமே!
இங்க தானே சார் இருப்போம். பார்ப்போம். உங்கள வரவேற்க நிறைய வேல ப்ளான் எல்லாம் போட்டு ஜரூரா நடக்குது. நானும் பிஸி அதுல.
அதிருக்கட்டும். அதுக்கு முன்னாடி உன்ன பாக்கணும்.
சரி எதுல வர்றிங்க? பிக்கப் பண்றேன். அப்ப பாத்துடலாம்.
சரி. ப்ளைட் நம்பர் குறிச்சுக்கோ.
பிக்கப் கமிட்டியிடம் வேலையை தான் செய்வதாக கேட்டு வாங்கி நல்ல பெயர் பெற்றுக்கொண்டார் ராமசாமி.
ப்ளைட் கரெக்ட் டைம் இல்ல சார்?
ஆமா. எவ்ளோ நாளாச்சு பாத்து. உன்ன பாக்கணும்னு தான் இந்த ப்ளைட் போட்டேன். ரெகுலரா வரது, கொஞ்சம் லேட்டாகும். அப்போ ரொம்ப அஃபிஷியலாப் போயிடும்.
சரி எங்க போலாம்?
ஹோட்டலுக்கு போய் குளிச்சுட்டு, சாப்டுகிட்டே பேசலாம்.
சரி. அவர் ரூம் போனார். ராமசாமி லௌஞ்சில் பேப்பர் பார்த்து பொழுதைக் கழித்தார்
அப்புறம் நிறைய பேசி கொஞ்சம் சாப்பிட்டு, வலுக்கட்டாயமாய் பில்லுக்கு ராமசாமி பணம் கொடுத்து, பின் இருவரும் எங்கே போவதென்று பேசி, படித்த பள்ளி, காலேஜ் (ராமசாமி மட்டும் முதல் வருடத்தோடு நின்று விட்டார் கல்லுரியில், அப்பா இறந்ததால்.), இன்னும் ஊர் சுற்றித்திரிந்த எல்லா இடங்களையும் காரிலேயே சுற்றி, பழைய நினைவுகளில் மிதந்து, திரிந்து, ஒரு வழியாக அலுவலகம் நெருங்க…
சார், இப்ப நான் இறங்கிக்கிறேன்
ஏன், என்னோட சேர்ந்து இறங்கினா என்ன? சிவானந்தம் கேட்டார்
நீங்க ரெண்டு நாள்ல ரிடையர் ஆயிடுவீங்க. நானும் தான். அப்புறம் உங்களை, உன்னைன்னு கூப்பிட்டு, உரிமையோடு ஊர்சுற்றி, சேர்ந்து வண்டியில வந்து இறங்கிக்கறேன், நான் யூனிபார்ம் வேற போடணும் என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு இறங்கினார் ராமசாமி
அலுவலக மீட்டிங்க் நல்ல படியாக நடந்த்து. ராமசாமிக்கு ஏக பாராட்டு, அவர் தான் பல பொருப்புகளை விரும்பி ஏற்று குறையில்லாமல் முடித்தார்.
எம்.டியின் உரை வந்தது. இந்த இடம் இவ்வளவு அருமையாக ஏற்பாடு செய்து, சுத்தமும் செய்து, நான் வருகிறேன் என்பதற்காகவும் பொதுவாகவுமே, மிக நேர்த்தியாக பணிகள் புரியும் இந்த அலுவலகத்தின் க்ளீன்ங்க் ஸ்டாஃப் திரு ராமசாமி அவர்களை மேடைக்கு அழைக்கிறேன் என்று கூப்பிட, வந்த போது போட்ட மாலையிலிருந்து விழுந்த மலர்களைக் கூட்டிக்கொண்டிருந்த ராமசாமி, சடாரென திரும்பி, கண்ணீருடன், என்னையா??? என்றார்
அனைவர் கண்களும் அவர் மேல்.
எம்.டி… தொடர்ந்து….. என் பள்ளித் தோழன், கல்லூரி நண்பன், பக்கத்து வீடு, இதையெல்லாம் தாண்டி, இந்த அலுவலகத்தில் நான் சேர்ந்தபோது வேறு ஒரு கேடரில் தானும் சேர்ந்தாலும், விதியால், அவருக்கு பெர்மனெண்ட் போஸ்ட்டிங்க் கிடைக்க லேட் ஆனாலும், என்னைப்பொருத்த வரை, உழைப்பு யாரிடமிருந்தாலும் போற்ற வேண்டும் என்ற காரணத்தால், நான் என் சார்பாக, அவருக்கு இந்த மாலையை அணிவித்து, அவரது வேலையைப் பாராட்டுகிறேன்…..
மாலையுடன் இறங்கி வந்த ராமசாமியை இத்தனை நாளும் கூட்டும் அண்ணனாக மட்டும் பார்த்தவர்கள் அத்தனை பேரும், அவரை இப்போது மரியாதையுடன் பார்த்தார்கள். சொல்பவர் சொன்னால் தான் வேலையின் மதிப்பும் தெரிகிறது.
சுத்தம் செய்வது இடத்தை, ஆனால் சுத்தம் மனதில் அவருக்கு. இத்தனை வருடமும், தானும் படித்தவர் என்றல்லாம் வெளியில் காட்டாது எப்படி இருந்தார் என்று அத்தனை பேரும் வியந்த படி நின்றிருந்தனர்.
மேன்மக்கள் மேன்மக்களே!!