முனியாண்டிக்கு மிதப்பது போலிருந்தது, அந்தப் புதிய கப்பல் போன்ற ‘எஸ்’ சீரியஸ் மெர்சிடிஸ் பென்ஸை ஓட்டிச் செல்வதால் மிதப்பது போல் உணர்வது இயல்புதானே. அதன் இருக்கைகளின் தோலுறைகள் ஒரு விதமான சுகந்த வாசனையைப் பரப்பிக் கொண்டிருந்தன.
அந்தச் சுகமான உணர்வை நீடிக்கவிடாமல் ஒரு ஏக்கம் வந்தது. “காலாகாலத்துக்கும் இப்படிப் பின்னாடி ஒருத்தனைச் சொகுசா ஒட்கார வச்சி நான் வண்டியோட்டியாகத்தான் காலம் கழிக்கனுமா” வேதனையாக இருந்தது.’கிருஷ்ண பகவானே வண்டியோட்டித்தானே’ கொஞ்சம் திருப்தியாக இருந்தது. குல தெய்வத்தை நினைத்துக் கொண்டான்.
“தாயே முண்டக்கண்ணம்மே கண் திறக்கமாட்டாயா” நினைக்கும்போதே மனசுக்குள் ஒரு சின்ன சிரிப்பு.
முண்டக்கண்காரின்னு பேர் சொல்லிட்டு, முழி திறக்க மாட்டாயானு கேக்கிறது என்ன லோஜிக்? கேள்வி தெய்வகுத்தமாயிருச்சினா என்ன செய்வது?” ஆனால் நேத்து மாலை சக டிரைவர் பாலாவிடம் காண்டினில் “ஆத்தா என்னை கைவிட மாட்டா” என்று சொல்லும்போது அந்தக் குரலின் தொனியில் தெரிந்த நம்பிக்கை இன்னமும் முனியாண்டிக்கு இருக்கத்தான் செய்தது.
ஃ ஃ ஃ
“உனக்குன்னே வந்து மாட்டுதுபாரு பெரச்சன, எப்படித்தான் சமாளிக்கப் போறயோ?” என்று பரிவோடு கேட்டுவிட்டு முனியாண்டியின் முகத்தயே பார்த்துக் கொண்டிருந்தான் பாலா.
காது குடைந்துகொண்டிருந்த முனியாண்டியின் முகத்தில் கலவரமோ, கவலையோ ஏதுமில்லை. என்னதான் மனசுக்குள் இருந்தாலும் அதனை முகத்தில் காட்டுவது புருசலட்சணம் இல்லையே.
காது குடைந்துகொண்டிருந்த முனியாண்டி, தலையைச் சாய்த்து, குடைந்துகொண்டிருக்கும் காதுபக்கத்து கண்களையும் கன்னத்து தசைகளையும் சுருக்கிக் கொண்டிருந்ததினால் முகத்தில் கவலையோ கலவரத்தையோ பார்க்கமுடியவில்லை. எரிச்சலடைந்த பாலா “என்னப்பா நா எவ்வளவு சீரியசா பேசிக்கிட்டி ருக்கேன், நீ என்னாடானா காது கொடைஞ்சிக் கிட்டிருக்கீயே…” என்றான்.
“என்ன பண்ணச் சொல்ற… இருபத்தைந்து வருஷம் பேருபோட்டுட்டேன். இந்தச் சின்ன தப்புக்காகவா வேலையை விட்டு தூக்கிருவானுங்க?” என்று கேட்டுவிட்டு அப்பாவித்தனமாக பார்த்த முனியாண்டியின் வெகுளித்தனம் மேலும் எரிச்சலைத் தந்தது பாலாவிற்கு. “ஒங்கப்பனுடைய கம்பெனி இல்லை இது; ஐப்பாங்காரங் கம்பெனி. ஒம்மேல ரட்னராஜா ரொம்பக் கோவமா இருக்காருன்னு சொல்ரானுங்க… நம்மவுங்க பேர கெடுத்திட்டியாம். அவரு ரொம்ப நேர்மன்னு காட்டுறதுக்காகவாச்சும் ஒன்ன வேலையவிட்டு தூக்கிருவாருன்னு பேசிக்கிறாங்க”.
முனியாண்டியின் முகத்தில் இப்பொழுதுதான் மெல்லக் கலவரத்தின் கோடுகள் நெளிந்தன. பாலாவிற்கு முனியாண்டி, தான் எதிர்நோக்கும் விபரீதத்தின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டான் என்பதில் கொஞ்சம் திருப்தி ஏற்பட்டது.
“நான் அப்படி என்ன செஞ்சுட்டேன்னு இப்படிச் செய்வானுக? முந்தியெல்லாம் கோஷி, மியாமோட்டோ ஜப்பாங்கார எம்.டிக்கெல்லாம் கார் ஓட்டியிருக்கேன். நல்லது கெட்டதுக்கு போறேன்னு சொன்னா கையில காசு கொடுத்து கம்பெனி கார எடுத்துக்கிட்டு போயிட்டு வானு சொல்லுவாங்க. மானேஜரா நம்ம ஆளு வந்ததுக்கு அப்புறம்தான் இந்தச் சிக்கல்ல மாட்டிக்கிட்டேன்”.
“நீ ஒரு அப்பாவிப்பா… அவரு நம்ம ஆளுனு நீதான் சொல்ற. அவரு சொல்லுவாரா? நீ மச்சினிச்சி கல்யாணத்துக்கு மெந்த காப்புக்குக் கம்பெனி காரை எடுத்துக்கிட்டுப் போனது பெரிய குத்தம்னு சத்தம் போட்டுக்கிட்டிருக்காரு. எதுவும் செய்றதுக்கு முன்னால போயீ கைகால்ல விழுந்து மன்னிப்பு கேளு. யூனியன் கீனியன்னு போனாலும் எதுவும் நடக்காது.”
முனியாண்டியின் கண்களில் பீதியின் சாயல் தெரிய ஆரம்பித்தது. “நீ புள்ளக்குட்டிக்காரன் நேரா போய் மானேஜர்கிட்ட உண்மையா நடந்துக்க. மன்னிப்புக் கேளு. நல்ல மனுசன், வேலையவிட்டு தூக்காம ஏதாவது செய்வாரு” என்று சொல்லும்போதே சுற்றி யாரும் தன்னை கவனிக்கிறார்களா என்று நோட்டம் விட்டவாறு சற்றுதாழ்ந்த ரகசிய குரலில் “மானேஜரு சாமிபைத்தியம். நெத்தியில பெரிய பட்டயா தின்னூரு பூசிக்கிட்டுப்போ…” என்றான்.
தொழிற்சாலை கேண்டீனில் யாருமில்லை. மேஜைகளின் மீது அலுமினிய நாற்காலிகள் கவிழ்த்தி வைக்கப்பட்டிருந்தன. நாற்காலிகள் எப்போதுமே அப்படித்தான், தான் தாங்கிக் கொண்டிருக்கும் பிருஷ்டங்களோடு ஒத்துப்போக ஒரு கால அளவை வைத்திருக்கும். அதற்குமேல் அவைகளை தாங்கிக் கொள்ளாது. கேண்டீன் நாற்காலிகளும், பதவி நாற்காலிகளும் ஒரே ஜாதிதான். கால அளவுதான் வித்தியாசம். முக்கியமாக தலைவர்கள் உட்காரும் நாற்காலிகள், மனித சூடு தாங்காமல்(பிருஷ்டத்தை) மாற்றிக்கொண்டே இருக்கும். கவிழ்த்து வைக்கப் பட்டிருந்த நாற்காலிகளையும் தானும் முனியாண்டியும் அமர்ந்திருந்த நாற்காலிகளையும் பார்த்துக் கொண்டிருந்த பாலாவின் நாற்காலி கனவின் புகைமூட்டம் மெல்ல விலக ஏதோ தெரிய ஆரம்பித்தது.
முனியாண்டி தன் தவறை ஒத்துக் கொண்டால் போதும், மானேஜர் ரட்னராஜா அவனை ஷிப்ட்டு டியூட்டி டிரைவராக மாற்றிவிட்டு தன்னை அவருடைய பெர்சனல் டிரைவராக போட்டுக் கொள்வார். ஓவர்டைம், அலவன்சு எக்கச்சக்கமா கிடைக்கும். இதை சாக்குவைத்து தனக்கும் பதவி உயர்வு கிடைத்த மாதிரியும் இருக்கும். முனியாண்டியின் கவலை தோய்ந்த முகத்திற்கும் பாலாவின் கனவுகளுக்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. மானேஜர் ரட்னராஜாவிடம் முனியாண்டியைப் பற்றி கோள் சொன்னது முதல் இப்பொழுது முனியாண்டியை ஒத்துக்கொள்ள செய்தது வரை பாலாவின் கனவுகள் வெற்றிகரமாக அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு நகர்ந்தன.
கேண்டீன் கழுவும் இந்தோனேசியப் பணிப்பெண் பீச்சியடித்த தண்ணீர் அவர்களை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தியது.
ஃ ஃ ஃ
அறையின் நுழைவாயிலில் ‘குட்மானிங் பாஸ்’ சொன்ன லிண்டாலிம்மை, அறைக்குள் யாரையும் அனுப்பவேண்டாம் என்றபடி உள்ளே சென்று தனது கோர்ட்டை கழற்றி கழுத்துப்பட்டையைத் தளர்த்திவிட்டு அந்த அகன்ற சோபாவில் சரிந்தார் ராஜா.
காலணிகள் கழற்றப்பட்ட கால்களை நீட்டி கண்களை மூடிக்கொண்டார். நூற்றியிருபது கிலோ சதைப்பிண்டமாக இருப்பதில் இனிப்பு நீரும் ரத்த அழுத்தமும் வந்து சேர்ந்ததுதான் மிச்சம்.
ரட்னராஜாவிற்கு சமீப காலமாக இரத்த அழுத்தம் தாறுமாறாக ஏறிப்போயிருந்தது. மின்னியல் சாதனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையின் மூன்று இயக்குனர்களில் ரட்னராஜாவிற்குத்தான் தலைமை இயக்குனர் பதவி கிடைக்குமென எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.
சட்டம் பயின்று, தொழிலியல் சிக்கல்களை நிர்வாகத்திற்கு சாதகமாக அவிழ்க்கும் சூட்சுமம் ஒரு பையிலும், தொழிற்சங்கத்தலைவர்களை தனக்கு அணுசரனையானவர்களாக மாற்றி மற்றொரு சட்டைப் பையிலும் போட்டு வைத்திருந்தார் ராஜா.
ஆனால் மற்றொரு இயக்குனரான டத்தோ கமாரூடின் அடிக்கடி ஜகார்த்தா சென்று வருவது, மாந்திரீகர்களை சந்திப்பது ராஜாவை தூக்கமிழக்கச் செய்து கொண்டிருந்தது. சமீபத்தில் கேரளாவிலிருந்து வந்திருந்த மாந்திரீகர் அவரது வீட்டில் ஏழு நாட்களாக தங்கி பகவதியம்மன் பூஜை நடத்தி அதன் பலனாக கேரளத்தில் ஒரு மலையடிவாரத்தில் மாளிகை போன்ற வீடு ஒன்று கட்டிக் கொண்டார் என்றார்கள்.
சற்றுக்கண்ணயர்ந்தவர் கனவில் கண்கள் உருட்டிவிழிக்கும் நாக்கு தொங்கும் பகவதியம்மன் தோன்றியிருக்க வேண்டும், திடுக்கிட்டு விழித்தார். கால்களை இழுத்து முழங்கால் மடக்கி நிமிர்ந்து உட்கார முயன்றார். வலது குதிங்காலில் சுரீரென்று ஏதோ குத்தியது.
காலுறையைக் கழற்றி பார்த்தார். லேசாக ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. காலுக்குகீழ் கார்ப்பெட் லேசாக புடைத்துக் கொண்டிருந்தது. குனிந்து கார்ப்பெட்டின் விளிம்பை தூக்கிப் பார்த்தார். ஒரு சின்ன எலுமிச்சை பழம் பல மெல்லிய சிறு ஊசிகள் குத்தப்பட்டு முள்ளம்பன்றி போலிருந்தது. அதிர்ச்சியோடு அதை உதறி எறிந்தார். நெற்றியில் வியர்வை துளிகள் கோர்த்து நின்றன. வயிற்றைப் புரட்டியது. தலையில் ஜிவுஜிவுவென்று ரத்தம் பாய்ந்து ஓடியது.
கதவை லேசாக தட்டியவாறு கையில் தேனீர் கோப்பையுடன் நுழைந்தாள் பாத்திமா. மேஜையில் தேனீர்கோப்பையை வைத்துவிட்டு தரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் ராஜாவை பார்த்து ‘என்ன துவான்’ என்று கேட்டவாறு அவர் பார்த்துக் கொண்டிருந்த, கொண்டையில் ஊசிகள் குத்தப்பட்ட எலுமிச்சம் பழத்தை அவளும் பார்த்துவிட்டு “யா யா…லா..இலாஹா” என்று அலறிவிட்டு “துவான் உங்களுக்கு யாரோ செய்வினை செய்திருக்கின்றார்கள்” என்றாள் மலாய் மொழியில்.
ஃ ஃ ஃ
தோட்டத்தின் பசுமை செழிப்பில் தோட்டக் காரரின் வியர்வை தெரிந்தது. ஐந்து காசு கொடுத்தாலும் ஆளை கசக்கிப்பிழிந்து வேலை வாங்கிவிடுவார் ராஜா. தூறலுக்குப்பிந்திய மாலைவெயிலில் துளசிமாடத்துப் பச்சையிலைகள் குளித்துவிட்டுத் தலைகாயவைப்பது போலிருந்தது.
முனியாண்டி பதைபதைக்கும் நெஞ்சோடு வாசலில் காத்திருக்க, அவனைக் கடந்து வெளியே கையில் கிடாருடன் புறப்பட்டுப் போகும் ராஜாவின் மூத்தமகன் ஒரு சினேக புன்னகையுடன் “டாடி.. … எண்டி இஸ் ஹியர்” (முனியாண்டியின் சுருங்கிய பெயர் எண்டி) என்று சப்தமாக சொல்லிவிட்டு ஒரு ஸ்போர்ட்ஸ் காரில் தனக்காக காத்திருக்கும் வெள்ளைக்கார பெண்ணுடன் புறப்பட்டுப்போனான்.
முனியாண்டி, அந்த வெள்ளைக்காரி அங்கிருந்த துளசி மாடத்தை பயபக்தியாக கூப்பியக்கரங்களுடன் சுற்றிவருவதை மனக்கண்களால் பார்த்துக் கொண்டிருந்தபோது மாடியில், கினிகினி, என்று மணி அடித்துக் கொண்டு கரகரத்த குரலில் ராஜா ஏதோ சுலோகங்கள் சொல்வது கேட்டது. நல்ல சகுனம்தான் என எண்ணிக்கொண்டான். ஆங்கில உச்சரிப்பின் சாயலில் தேவாரத் தமிழ் பண்ணை ராஜா பாடுவதைக் கேட்க முனியாண்டிக்கு மெய்சிலிர்த்தது. எவ்வளவு படித்தாலும் இவர்களுடைய கடவுள் பக்தி அடடா…. என மனசுக்குள் வியந்து கொண்டான்.
“என்ன மேன்” என்று கேட்டபடி அரைக்கால் சிலுவாருடன் நெஞ்சுக்கு குறுக்கே கோடிட்ட சட்டையின் பொத்தான்களை மாட்டியவாறு வெளியே வந்த ராஜா தோட்டத்தில் உள்ள ஊஞ்சலில் சென்று அமர்ந்தார். அவரை தொடர்ந்து சென்ற முனியாண்டி கைகளை கட்டி யவாறு உடலைச்சற்று குறுக்கிக்கொண்டான் பணிவாக.
ராஜாவின் மிகவும் கனத்த சரீரத்தை சுமந்தவண்ணம் கிரீச்சிட்டவாறு மெல்ல ஆடியது அந்த இரும்பு ஊஞ்சல். அலுவலகத்தில் எப்பொழுதும் கடுகடுப்பாகவும் பரபரப்பாகவும் இருக்கும் அவரை இப்படி பக்தி நிறைந்த பரவச மனதுடன் ஊஞ்சலில் ஆடும் தளர்வான மன நிலையில் மிக இயல்பாக இருப்பதைப் பார்க்க இப்படி இந்நேரம் பார்த்து வந்தது எவ்வளவு புத்திசாலித்தனமான முடிவு என எண்ணியவாறு நின்றான் முனியாண்டி.
“என்ன முனியாண்டி நீ கம்பெனி காரை மிஸ் யூஸ் பண்ணிட்டது ப்ரூப் ஆயிடுச்சி. அடுத்த மாசம் என்குயரில உன்ன வேலையவிட்டு காலிபண்ணச் சொல்லிட்டாரு எம்.டி”. “ஐயா .. அப்படி செஞ்சுடாதீங்கய்யா.. ரெண்டு பிள்ளைங்க இருக்கு.. ஒய்ப்பு கர்ப்பமாவேற இருக்கா..
“இப்பதானய்யா புள்ள பொறந்திச்சு, அதுக்குள்ளவா? ஒய்ப்பயும் மிஸ் யூஸ் பண்றீயா?” கேட்டுவிட்டு கடகடவென சிரித்தார் ரட்னராஜா.
“டோண்ட் இன்சல்ட் ஹிம்” எதிர்பாராவிதமாக ஆணையுடன் அதிகாரமிடுக்குமான பெண்குரல் ஊஞ்சலையொட்டிய ஹாலில் இருந்து கேட்க திடுக்கிட்ட ராஜா தன் சிரிப்பை பாதியில் சுருக்கி முகத்தை கடுமையாக்கிக் கொண்டார்.
தவமா தவமிருந்து ஊரில் உள்ள அத்தனை புண்ணிய ஸ்தலங்களையும் ஏறி இறங்கி தனது நாற்பதா வது வயதில் ஒரே ஒரு புத்திரனை, லோகிதாசனைப் பெற்றெடுத்த அவளால் இந்த மலிவான நகைச்சுவையைச் சகித்துக் கொள்ள முடியவில்லை.
“பரவாயில்லையம்மா… ஐயாதானே!” என்று ஈனசுவரமான குரலில் ஜன்னலைப்பார்த்து முனங்கினான் முனியாண்டி
புண்ணியவதி காரியத்தை கெடுத்திட்டாளேஎன்று மட்டும் மனம் சொன்னது. மனைவியின் அதட்டலுக்கு அடிபணிந்தவராய், “ஒகே நாளைக்கு ஆபிசில் வந்து என்னைப் பாரு. டோண்ட் வேஸ்ட் மை டைம்” என்று கண்டிப்பான தொனியில் முனியாண்டியைப் பார்த்து சொன்னார்.
என்றோ தன் மனைவி கர்ப்பமானது இன்றைக்கு இவ்வளவு விபரீதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று முனியாண்டி எதிர்பார்க்கவில்லை.
“மன்னிச்சிடுங்க ஐயா..” என்றான் மன்றாடும் குரலில்.
“நோ.. நோ.. எண்டி. எம்.டி ஜப்பாங்கார னுங்க. ரொம்ப ஸ்டிரிக்ட் தெரியுந்தானே?”
“இல்லீங்கய்யா.. அவருகிட்ட நா டிரைவரா இருந்தப்ப என் மாமியாரோட அம்மா செத்துப்போச்சு. சொன்னவுடன் கம்பெனி கார எடுத்துக்கிட்டு போயிட்டுவானு சொல்லி காசும் குடுத்தாருங்கய்யா. நல்லவருய்யா…” பேச்சை தொடரமுடியவில்லை முனியாண்டியால்.
“ஷட் அப் மேன்.. எம்.டி வேற, நா வேற, நாளைக்கு இண்டியன்ஸுக்கு இண்டியன் ஹெல்ப் பண்ணான்னு மத்தவுங்க சொன்னா எனக்கு எவ்ளோ கேவலம். நோ வே..”.
இப்பொழுது ஊஞ்சல் ஆடவில்லை. எல்லாமே ஸ்தம்பித்து நின்றது போலிருந்தது. இப்போது அவரது தெய்வபக்திக்கும் மனித நேயத்திற்கும் நடுவில் ஒரு பெரிய இடைவெளி தெரிந்தது முனியாண்டிக்கு.
இந்த வேலையை இழக்க முனியாண்டியால் முடியாது. இந்தச் சம்பளத்தில் பாதிகூட மற்ற இடங்களில் கிடைக்காது என்பதுடன், தனது பதினேழு வருட சர்வீசை இழக்கவும் அவன் தயாரில்லை. இதுவரை மரியாதை நிமித்தம் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்தவன் முன்னேறிச்சென்று தடாலென அவரது காலில் விழுந்தான்.
ரட்னராஜா பதறிப்போய் தனது கனத்த சரீரத்தை ஊஞ்சலைவிட்டு எழுப்ப முயன்று தோல்வியுற, ஊஞ்சல் முன்னும் பின்னுமாக ஆடியது. காலை கைகளால் பற்றினால்தான் காலில் விழுந்த பலன் கிடைக்கும் என்பதால் கால்களை கைப்பற்ற முனியாண்டியின் குவிந்த கைகள் அந்தக் கால்களின் ஊஞ்சல் அசைவோடு அதனை முன்னும் பின்னுமாக தொடர்ந்தான். தாறுமாறாக தவ்வியோடும் தவளையைப் பிடிக்க குவிந்த கைகளோடு அகன்ற அல்லூரில் ஆரவாரத்தோடு சிறுவனாக ஓடி இருக்கிறான் முனியாண்டி
“ஷிட்.. என்னமேன் பண்ற” என்று ஒருவித அச்சத்தோடு ராஜா கால்களை மேலே தூக்க, ஊஞ்சலில் உடல் சரிந்து ஊஞ்சல் இன்னும் வேகமாக ஆடியது. “மன்னிச்சிடுங்கய்யா இந்த ஒரு தடவ மன்னிச்சிடுங்க” என்றான் கால்களைப் பற்றியவாறு. பீதியடைந்த கண்களுடன் நெற்றியில் வியர்வை பொட்டுப்பொட்டாக துளிர்த்து நிற்க, மார்பு மேல்மூச்சு கீழ்மூச்சுமாக ஏறி இறங்க பாதங்களை பற்றி பூமியில் அழுத்திய கைகளோடு விழியுயர்த்தி ராஜாவை கெஞ்சுகிற பார்வையால் முனியாண்டி பார்க்க, இருவரும் மெல்ல தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.
ராஜாவின் முகத்தில் ஒரு தர்மசங்கடமான சிரிப்பு நெளிந்தது. “காலைவிடு மேன், நான் என்னமோன்னு பயந்திட்டேன். ஐ டோண்ட் லைக் ஆல் திஸ். சரி, என்ன நெத்தியெல்லாம் குங்குமம் எந்த கோயிலுக்கு போயிருந்த?” ராஜா மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி மீண்டும் ஊஞ்சலில் ஆட ஆரம்பித்து விட்டிருந்தார்.
ராஜா தன் கால்களை பார்த்தார். முனியாண்டி யின் கைகளில் ஒட்டியிருந்த குங்குமத்தின் மிச்சம் தன் கால்களில் பட்டிருப்பது தெரிந்தது. இதில் ஏதும் இருக்குமோ என எண்ணுகையில் நெஞ்சு துணுக்குற்றது.
பாதி மனதோடு எந்த உத்திரவாதமும் வாங்கிக் கொள்ளாமல் வீடு திரும்பும் முனியாண்டியின் மனமெல்லாம் ஐயா காலில் விழுந்ததற்கு அம்மா காலில் விழுந்திருக்கலாமே என்று தோன்றியது.
ஃ ஃ ஃ
“முண்டக்கண்ணியம்மன் ரொம்ப சக்திவாய்ந்தது காளியம்மோய்”
தார்ச்சாலையை விட்டு செம்பனைகள் சூழ்ந்த மண்சாலையில் இறங்கி சென்றது வண்டி. “கெதியா பேந்து போய் சீக்கிரமாக திரும்பியாகணும் முனியாண்டி” என்று முன்பக்கமாக சாய்ந்து காரோட்டிக் கொண்டிருக்கும் முனியாண்டியிடம் நயமான குரலில் சொன்னார் ராஜா. இப்பொழுதெல்லாம் முனியாண்டியிடம் பேசும்பொழுது ஒருவித மரியாதை கலந்த அன்பு தொனித்தது அவரிடம்.
“பூசாரிக்கு அருள் வரணும், வந்திருச்சின்னா தாயத்து மந்திரிச்சி வாங்கிட்டு உடனே திரும்பிடலாங்கய்யா” மேலிருக்கும் கண்ணாடியை பார்த்தவாறே பதில் சொன்னான் முனியாண்டி. பாதை மிகவும் மோசமாக இருந்தது. மழை நீர் அரித்துச்சென்ற ஓரங்களையும் தேங்கி நின்ற பள்ளங்களையும் தவிர்த்து ஓட்டிச்செல்வது சற்று சிரமமாக இருந்தது.
“எலுமிச்சையில் குத்தியிருந்த ஊசி காலை குத்தின அதே ஸ்பாட்ல பார்த்தேன், உன் கையில் இருந்த குங்குமம் பட்டிருந்த இடம் தெரிஞ்சது. அப்படியே மனசுல காளியம்மாதான் தெரிஞ்சது. அம்பாளுக்கு இப்படி நடக்கும்னு முன்னாடியே தெரிஞ்சிருக்கு மேன்” ஒரு வித பரவசத்தோடு சென்னார் ரட்னராஜா.
“தாயீ! அவளுக்கு தெரியாததா, அவ சன்னதியில் உத்தரவு வாங்கிட்டுத்தானே உங்களவந்து பார்த்தேனுங்கய்யா. அவ அனுப்பிவெச்சிருக்கா, ஈரேழு பதினாலு லோகங்களுக்கும் தாயல்லவா அவ!
“யாரு வெச்சிருப்பாங்க முனியாண்டி”
“கேட்போம், தாயீ காட்டிருவாங்கய்யா.”
முண்டக்கண்ணியம்மன் தோற்றமே தனக்கு நினைவிலும் கனவிலும் வருவதாக திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டே வந்தார் ராஜா.
“அந்த ஊசி குத்தினவுடனேயே உன்னத்தான் நெனச்சேன் முனியாண்டி.”
“ஐயோ! ஏனுங்கய்யா” லேசாக குரல் நடுங்கியது.
“உன் நெத்தியில அன்னிக்குப் பார்த்தேனே அந்தக் குங்குமம், ரொம்ப சக்தி வாய்ந்தது. ரொம்ப பவர் அதுக்கு. என்னையே ஒரு மாதிரி ஆக்கிடுச்சி அன்னிக்கு.”
அது எந்தக் கோவில் குங்குமம் என யோசித்துக் கொண்டிருக்கையில் தோட்டப்புறத்து வீடுகள் தென்பட தங்கள் தோட்டத்திற்கு அன்னியமான பென்ஸ் கார் நுழைவதை துணிகாயப்போடும் பெண்கள், மோட்டார் சைக்கிளில் செல்லும் இளவட்டங்கள், மீசையுடன் நிதானமிழந்து நடந்து போய்க்கொண்டிருக்கும் பெரியவர், ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள், என எல்லோருமே அவரவர் செய்து கொண்டிருப்பதை ஒருகணம் நிறுத்திவிட்டு நின்று பார்த்தார்கள். வாசலில் படுத்திருந்த நாய் காது விடைக்க ‘என்ன விஷயம்’ என்பது போல் எழுந்து நின்று பார்த்தது. ஒருவேளை மேனேஜராக இருந்தாலும் இருக்கும் என்று குரைக்காமல் மரியாதை காத்து மீண்டும் படுத்துக் கொண்டது.
வண்டியைவிட்டு இறங்கிய முனியாண்டி வேகமாக ராஜாவின் கதவை திறந்துவிட்டு மீண்டும் டிக்கியை திறந்து அதிலிருந்து கூடையை தூக்கிக்கொண்டு “இப்படி வாங்கய்யா” என்று நடந்தான்.
அந்தக் கூடையில் பழங்கள், தேங்காய், வாழை இலை, அம்மனுக்குச் சாத்துவதற்கான பட்டுத்துணி, சூடம், சாம்பிராணி, பலகாரங்கள் மற்றும் பூஜைக்கு வேண்டிய எல்லா சாமான்களும் இருந்தன. இவர்களை தொடரும் குழந்தைகளை “ஏய் என்னங்கடா வேடிக்கை இங்க…போங்கடா” என்று விரட்டியவண்ணம் ராஜாவை மரங்கள் அடர்ந்த ஒரு குறுகிய பாதையில் வழி நடத்திச்சென்றான் முனியாண்டி.
சின்ன மலை போன்ற மேட்டு நிலத்தின் உச்சியில், மண்டபம் போன்று தோற்றமளித்த ஒரு கோவில் இருக்கிறது. மூச்சிறைக்க நடந்து வந்த ரட்னராஜா, அந்தச் சின்னக்கோவிலின் அகன்ற படிகளில் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார். காலணிகளைக் கழற்றிவைத்துவிட்டு கோவிலின் உள்ளே நுழைந்தார்.
சன்னதி என்பது இங்கே ஒரு சின்ன அறைதான். முருகன் நிற்கும் படத்துடன் தொங்கிய திரைச்சீலையினூடாக உள்ளே எரிந்து கொண்டிருந்த தீபம் தெரிந்தது. இன்னும் சிறிது நேரத்தில் இருட்டிவிட்டால் எப்படி இருக்குமோ இந்த இடம் என்று சுற்றும்முற்றுமாக பார்த்தார் ரட்னராஜா. மனசுக்குள் லேசாக பயம் துளிர்த்தது. கண்கள் பிதுங்க, நாக்கு தொங்க, மண்டைஓட்டு மாலை அணிந்த காளியாக இருக்குமோ உள்ளிருக்கும் தெய்வம் என எண்ணிக் கொண்டார். கைகளை கூப்பி கண்களை மூடி ‘காப்பாத்து தாயே’ என்றார்.
சமீபத்தில்தான் திருவிழா முடிந்திருக்க வேண்டும் என எண்ணும்படி ஏராளமான காய்ந்துபோன பூக்களும், மாவிலை தோரணங்களும், ஜரிகை தாள்களும் பக்கத்தில் குவிந்து கிடந்தன. தரையெல்லாம் சிவப்பு வண்ணத்தில் பெயிண்ட் கோலம். கோவிலுக்கு பின்னாலிருந்து வந்து கையில் தட்டுடன் வேகமாக சன்னதிக்குள் நுழைந்தார் பூசாரி.
உள்ளே போகும் முன் ராஜாவின் வரவு பற்றி ஏற்கனவே தெரிந்திருப்பதைப்போல அவரைப்பார்த்து தலையாட்டிவிட்டு உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் மணியடிக்கும் ஓசையுடன் தீபாராதனை நடந்தது. திரைச்சீலையை முனியாண்டி விலக்க, அம்மனைப் பார்த்து கைகளை தலைக்கு மேலாக தூக்கி வணங்கினார் ராஜா. உள்ளே இருட்டாக இருந்ததால் தீபாராதனையில் மங்களாகவும் நிழலும் வெளிச்சமும் மாறி மாறி படுகின்ற அந்தச் சிலையில் ஏதோ ரகசியம் இருப்பது போல் தோன்றியது. இந்தப் பக்திக்கு பயமும் தேவையாக இருந்தது. தெய்வத்தின் உருவச்சீலை சரியாகத் தெரியவில்லை.
வெளியே வந்த பூசாரி சூடம் எரிந்து கொண்டி ருக்கும் தட்டை நீட்ட, ராஜாவும் முனியாண்டியும் தீபத்தை கண்களில் ஒற்றிக் கொண்டார்கள். குங்குமத்தை தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டனர். “இந்தா வரேன்… செத்த என் வீட்ல போய் இருங்க” என்று கோவிலின் பின்பக்கம் கையை காட்டிவிட்டு உள்ளே சென்றார்.
முனியாண்டி வழிகாட்ட கோவிலை ஒட்டிய அந்தப் பலகை வீட்டிற்குள் சென்றனர்.
அங்கே கொண்டு வந்திருந்ததை வாழையிலையை விரித்துவைத்து பழங்களையும், பலகாரங்களையும் பரப்பி வைத்தான். “உட்காருங்கள்” என்று சொல்லிக்கொண்டே வந்து அவர்கள் எதிரே அமர்ந்தார் பூசாரி.
நல்ல திடகாத்திரமான கறுத்தமேனி, முறுக்கிய மீசை, சவரம் செய்யப்படாத தாடையில் இருவார தாடி, அடர்த்தியான கேசம், இழுத்துமுடிக்கப்பட்ட கொண்டை, ருத்திராட்சைமாலையும் பவளமாலையும் வெவ்வேறு ஆபரணங்களும் கழுத்து நிறைய தொங்கியவண்ணம் மார்பின் அடர்த்தியான உரோமங்களில் பதிந்திருந்தன. நெற்றியின் புருவமத்தியில் அப்பியிருந்த குங்குமம், தடித்த சிவப்பு கரையுடைய பழுப்பு வேஷ்டி மடங்கிக்கிடக்க அவர்கள் எதிரே அமர்ந்து இருவரையும் பார்த்து, “என்ன முனியாண்டி என்ன விசயம்” என்று விழிகளை உருட்டி புருவத்தை உயர்த்தி கேட்கையில், வெற்றிலை காவி படிந்த பற்களிலும் தடித்த உதடுகளில் ஒரு நையாண்டி சிரிப்பு இருந்தது.
பெண்கள் நடமாட்டம் இல்லாதது போல் தோற்றமளித்த அந்த வீட்டில் அமர்ந்திருந்தார்கள் அவர்கள். சுவர்களெல்லாம் சாமி படங்கள். குடும்பசகிதமாக சிவபெருமான், பார்வதி, விநாயகர், முருகன் மற்றும் ஹரே ராமா இயக்கத்தினர் தீட்டிய ரம்மியமான பசுமை நிறைந்த சோலையின் ஊஞ்சலில் ஆடும் அழகான பாலகிருஷ்ணன்.
“ஐயாவுக்கு ஒரு சிக்கல். யாரோ செய்வினை செஞ்சு வெச்சிட்டாங்க. அது ஆருனு தெரியல. அத நீங்கதான் எடுக்கணும்” கைகளை கூப்பியவண்ணம் முனியாண்டி சொல்லிமுடித்தான்.
முனியாண்டி கைகளை கூப்பியதைப் பார்த்து ராஜாவும் கைகளை குவித்து “ஆமா” என்றார்.
“சரி” என்பதுபோல் தலையசைத்தவண்ணம் பூசாரி எட்டி பக்கத்திலிருந்த உடுக்கையை எடுத்து அடிக்கத் துவங்கினார்.
இடது கை உடுக்கையைப் பற்றிக்கொள்ள வலது கை விரல்கள் அதன்மீது மெல்ல பதிந்து எழுந்தன. செவிப்பறையில் அறைந்து நரம்புகளை சுண்டி இழுக்கும் உடுக்கையின் ஓசை மெல்ல மெல்ல உக்கிரமடைந்து காற்றை நிரப்பியது. பாடும் அவருடைய குரல் சற்றுமுன்னர் அவர் பேசிய குரலிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வினோதமாக ஒலித்தது. உடல் முன்னும் பின்னுமாக லேசாக ஆடியபடி இருந்தது.
“தாயீ வந்திறங்கு… தயக்காட்டு தாயீயீ. உன்மவன் இங்கே கூப்பிட்ட குரலுக்கு எந்தாயி வந்திறங்கு”.
உடுக்கையின் ஓசை ஏறி இறங்கிய சுதிக்கு தகுந்தவாறு அவரது தலையும் சுழன்று சுழன்று ஆடியது. கொண்டை அவிழ்ந்து நீண்ட சுருண்ட கேசம் தோள்களில் துவண்டுகிடந்தது; சில நேரங்களில் முகத்தை மூடியது.
“சொல்லு தாயீ.. சொல்லு தாயீ…
சுருக்கா வந்து சொல்லு தாயீ”…
வீட்டு வாசலில் சில பெண்களும் குழந்தைகளும் கூடி உள்ளே நடப்பதை வேடிக்கை பார்த்தனர். “பூசாரிக்கு சாமி வந்திருச்சி.. சீக்கிரம் வாடி” என்று யாரோ ஒரு பெண் சத்தமாக யாரையோ கூப்பிடுவது கேட்டது வெளியே. நேரமாகிக் கொண்டிருந்தது. ராஜா முனியாண்டியைப் பார்த்தார்.
“தாயீ.. இவ்ளோ தூரம் வந்திருக்கோம்.. வழி சொல்லுங்க, ஐயாவ காப்பாத்துங்க” முனியாண்டி கெஞ்சும் குரலில் பேசினான்.
பூசாரி இப்போது உடுக்கையைக் கீழே வைத்துவிட்டு மேலே கோபமாக பார்த்து பற்களை நற நறவென்று கடித்தார். ரட்னராஜாவிற்கு சற்று பயமாக இருந்தது. ஆனால் வாசலில் பெண்களும் குழந்தைகளும் குசுகுசுவென்று பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் சகஜமாக இருப்பது மனசுக்கு தைரியமாக இருந்தது.
கண்களை அகல விரித்து ,நாசி புடைக்க, மீசை துடிக்க பூசாரி முனியாண்டியை முறைத்து பார்த்த வண்ணமிருந்தார்.திடீரென்று பெருங்குரலெடுத்து முனியாண்டியை பார்த்து, உடம்பை முன்னும் பின்னுமாக அசைத்துக்கொண்டு…ம்ம்…என்று முனங்கிக்கொண்டிருந்தார். அருள் வந்திறங்குவதற்கு ஆயத்த நிலை அது.பூசாரிக்கு சாவகாசமாகத்தான் அருள்வரும். ஆனால் முனியாண்டிக்கு அப்படி அல்ல.
முனியாண்டி மெய்சிலிர்த்து எழுந்து கைகளை விறைப்பாக நீட்டிக்கொண்டு உடலெல்லாம் நடுங்க மெல்ல குதிக்க ஆரம்பித்தான். பூசாரிக்கு வந்திறங்காமல் முனியாண்டிக்கு முண்டக்கண்ணியம்மன் வந்திறங்கியது ரட்னராஜாவுக்கு ஆச்சரியமாகவும் ஆறுதலாகவும் இருந்தது.
“பூசாரி உடனே எழுந்து முனியாண்டியை பார்த்து ” ஆரு நீ.. ஏன் வந்தே.. ஆரு நீ” என்று கேட்க, முனியாண்டி முசுமுசு என்று மூச்சு விட்டுக்கொண்டே குதிக்கலானான். பூசாரி முனியாண்டியின் பின்னால் சென்று முதுகைத் தன் மார்போடு கட்டியணைத்தவண்ணம் அவனது அக்குளின் கீழ் கைகளை கோர்த்து தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.
முனியாண்டி இப்போது ஆக்ரோஷமாக மேலுங்கீழுமாக குதிக்க ஆரம்பித்துவிட்டான். நாக்கை வெளியில் நீட்டவும் ,அதனை உள்ளிழுத்து மடித்து கடிக்கவும் ,நாசி விடைக்க மூச்சு விடுவதையும் பார்க்க பயங்கரமாக இருந்தது. முனியாண்டி இப்பொழுது எவ்வி எவ்வி குதிக்க ஆரம்பித்துவிட்டான். ரட்னராஜா இருவரையும் கலவரத்தோடு மாறிமாறி பார்க்க, யாருக்கு எந்தச் சாமி வந்திறங்கியிருக்கின்றதென்று தெரியாமல் திகிலோடு பார்க்க, பூசாரி, “கால்ல விழுங்க… கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிறுங்க, சாமி மலை ஏறிடும். சீக்கிரம்” என்று பதற்றத்துடன் சொல்ல முனியாண்டியின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார் ரட்னராஜா. முண்டக்கண்ணியம்மா முனியாண்டிக்குள் இறங்கி வந்திருப்பதைப் புரிந்து கொண்டார். ஓங்கிக்குரலெடுத்து முனியாண்டி பேசலானான். “நா இருக்கேன்… நா காப்பாத்துவேன்.. கட்டிட்டேண்டா, அவனை கட்டிட்டேண்டா, இனி பயமில்லை.. மவனே இனி பயமில்லை”.
பூசாரி முனியாண்டியைச் சாந்தப்படுத்துகிறார். “மலையேறு தாயீ மலையேறு” என்று சாந்தமான குரலில் சொல்ல முனியாண்டி அமைதியடைய, பூசாரி தன் பிடியை தளர்த்தி அவனை அமரவைத்தார். முனியாண்டி, ரட்னராஜா தலையில் திருநீறை அடித்து நெற்றியில் குங்குமத்தை பூச, அவரது கையில் ஒரு மஞ்சள் கயிற்றை பூசாரி கட்டினார்.
“பார்த்து…மெதுவாக…சும்மா தூங்குங்க…” என்றவாறு அடிக்கடி சொல்லிக்கொண்டும் பின்னால் திரும்பிப்பார்த்துக் கொண்டும் செம்பனை தோட்டத்து செம்மண் சாலையில் அந்த பென்ஸ் காரை ரட்னராஜா ஓட்டிக்கொண்டிருந்தான்.
பின் இருக்கையில் களைப்பாக படுத்திருந்த முனியாண்டி அடுத்த சில கணத்தில் சன்னமாக குறட்டை விட்டுக்கொண்டிருந்தார்.