கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 13,148 
 
 

“டேய் தம்பி…!’

கார்பரேட்டரை பெட்ரோல் ஊற்றித் துடைத்துக் கொண்டிருந்த ராஜன் திரும்பினான்.

பஜாஜ் கப் ஸ்கூட்டியில் அமர்ந்தபடி, ஒரு காலைத் தரையிலும், மறுகாலை பிரேக்கிலும் அழுத்தியபடி கூப்பிட்டவரை நோக்கினான்.

கடைக்கு வரும் பல கஸ்டமர்களில் ஒருவர். பெயரெல்லாம் தெரியாது.

மெக்கானிக்சாக்லெட் கலர் கைனடிக் ஹோண்டா சார்… என்று வண்டிகளை வைத்துத்தான் கஸ்டமர்களை அடையாளம் சொல்வது ஆட்டோ மொபைல் ஒர்க்ஷாப்பில் வழக்கம்.

“மெக்கானிக் இருக்காரா?’

“யாருங்க முதலாளியா?’

“பின்னே! உன்னையா மெக்கானிக்கும்ப்பேன்.’

சுருக்கென்றது அவரின் வார்த்தைப் பிரயோகம்.

“முதலாளி இப்ப வந்துடுவாரு. வெளியிலே போயிருக்காரு’ என்றான்.

கைகள் தம்பாட்டுக்கு கார்பரேட்டரைச் சுத்தம் செய்து கொண்டிருந்தன.

“ம். சரி, கொஞ்சம் காத்து அடிச்சு விடு, பின் வீலுக்கு.’

எட்டிப் பார்த்த லேசான எரிச்சலை அடக்கியபடி எழுந்தான். அம்ப்ரசரில் காற்று இருந்தது. அளவை சரிபார்த்துவிட்டு காற்றைப் பிடித்தான் ஹோஸ் மூலம்.

“இந்தா’ என்று ஒரு ரூபாயை நீட்டினார்.

“மெக்கானிக் வந்தா நான் வந்துட்டுப் போனதா சொல்லு. மதியம் வரேன்.’

“அங்கப்பா மெக்கானிக் ஷாப். அனைத்து டூவிலர்களும் பழுதுபார்க்கப்படும்.’

புது பெயர் பலகை முகப்பில் பளபளத்தது. இவனையும் சேர்த்து ஆறு பேர் எடுபிடிகள் இங்கே. அங்கப்பன் முதலாளி.
ராஜனுக்கும் பதினாறு வயது முடிந்து விட்டது. நல்ல வளர்த்திதான்.

போட்டிருந்த கிரீஸ் கறை படிந்த அழுக்கு டிராயர், சட்டை போட்டுக் கொண்டால் சின்ன பையன் என்று கூப்பிட்டுவிட முடியாதுதான்.

“டேய்! என்னடா யோசனை! வேலையை முடிச்சுட்டியா? இன்னும் கார்ப்ரேட்டரை மாட்டலையா? தடிப்பயலே.’
பின்னாலிருந்து தலையில் “ணங்’கென்று அடி விழுந்தது. முதலாளிதான்.

“தண்டச்சோறு சார் இவங்க. டேய், வண்டியை சாய்ச்சுப் பிடி. இரண்டரை இன்ச் ஸ்பேனரை எடு. டேய் அந்தத் திருப்புளியை எடுடா.’

அதிகாரம் தூள் பறக்கும் அங்கப்பனிடம். அவரின் கை லாவகத்தையும், அதிகாரத்தையும் ஏக்கத்தோடு கவனிப்பான் ராஜன் எப்போதும்.

“என்ன, டாக்டர் சௌக்கியமா?’

சுகுமாரன் அண்ணன்தான். “மனுஷங்களுக்கு எம்.பி.பி.எஸ். டாக்டர் மாதிரி வண்டிக்கு நீங்க டாக்டர்’ என்பார் முதலாளியை.
அவர் டாக்டர் என்றால், நான் குட்டி டாக்டரா? இல்லை கம்பவுண்டரா? இல்லை அதிலும் எடுபிடிதானா?
“வாங்க சுகுமாரன் சார்! என்ன சொல்லுது கவாசாகி?’
“உங்க கைபட்ட பிறகு ஏதாவது சொல்ல முடியுமா? அதான் வெண்ணெயாய்ப் போகுது.’

சுகுமாரன் சாருக்கு குரலும் பெரிது! மனசும் பெரிது!
சுகுமாரன் சார் தாராளமாய்க் கொடுப்பார். கொடுக்கும் போதும் பிச்சை போடுவதைப் போலத் தராமல் மதிப்பாய்க் கொடுப்பார்.
நான் முதலாளியானால் தன்னிடம் வேலை பார்க்கும் பையன்களை சுகுமாரன் சார் நடத்துவது போலத்தான் நடத்த வேண்டும் என்று ராஜன் நினைத்துக் கொள்வான். கூடவே சிரிப்பு வரும்.

தானாவது முதலாளியாவதாவது? காசுக்கு எங்கே போவது? அவனது ஒரே சொத்து அம்மாதான். பாதி நாள் முதுகுவலி, கால் வலி என்பாள்.

ராஜன் கொண்டு போகும் கூலிதான் குடும்ப வருமானமே. குடிசை வீடுதான். புறம்போக்கு நிலம்தான்.

“மெக்கானிக்!’

அவனது மந்திர உச்சரிப்பு அது.

“என்ன’ கம்பீரமாய்க் கேட்டபடி தான் எழுந்து வருவதாய்க் கனவு காணுவான் ராஜன் அடிக்கடி.

ஆனால், கனவு கலைந்தபின் காதில் முதலில் குறுகுறுக்கும் வார்த்தை…

“டேய் எடுபிடிப் பையா!’

இதுதான் யதார்த்தம் என்று மனத்தைச் சமாதானம் செய்து கொள்வான்.

பிற்பகலில் அம்மாவை அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

முதலாளியிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டால் சரியாய் இருக்கும். இங்கிருந்து பஸ்ஸில் பத்து நிமிஷ தூரத்தில் இவனது வீடு. டவுனை விட்டு விலகி, தனியாய் நிற்கும் கிராமம்.
சில சமயம் ரிப்பேருக்கு வந்திருக்கும் வண்டியை எடுத்துக் கொண்டு போவான். அப்போது அவன் முகத்தில் தனி கர்வம் மின்னும். அதுவும் வீடு நெருங்க நெருங்க அண்டை அயலார் முன் தன் தெருவில் பந்தாவாய் போய் இறங்குவான் வண்டியில்.
லைசென்ஸ் இல்லாததால் பெரும்பாலும் முதலாளி இதை அனுமதிப்பதில்லை. இன்று வேண்டுமானால் கேட்டுப் பார்க்கலாமா? ராணி மாதிரி அம்மாவை பின்னே உட்கார வைத்து… வேண்டாம் சீக்கிரம் வீட்டுக்குப் போக அனுமதி கிடைப்பதே போதும்.

“முதலாளி’

“என்ன?’

“அம்மாவை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகணும்.’

“ம்… சரி, சரி. அந்த டயரில் பஞ்சர் பார்த்துட்டுப் போ’ என்றார் உடனே.

ஏதோ நல்ல மூடில் இருக்கிறார். அவசரமாய் வேலையை முடித்து விட்டுக் கிளம்பினான். பஸ் பிடித்து, ஊரில் சென்று இறங்கினான். ஐந்து நிமிஷ நடையில் வீடு.

“அடடே, தம்பியே வந்துடுச்சே..’ என்று வழிமறித்தார் பராங்குசம் தாத்தா.

“என்ன தாத்தா?’

“இந்த அடி பம்பு மக்கர் பண்ணுது தம்பி. என்னன்னு பாரேன். இருக்கிறது தெருவுக்கே ஒரே பம்பு. எப்படித் தண்ணி பிடிக்கிறது அதுவும் கெட்டுப் போச்சுன்னா?’ என்றார்.

இவனைச் சுற்றி நாலைந்து பெண்கள் முகத்தில் கவலையுடன். இடுப்பில் குடத்துடன் நின்றிருந்தனர்.

ஓரளவுக்கு பைப் வேலையும் இவனுக்குத் தெரியும். ஒரு வருடம் போல ப்ளம்பரிடம் எடுபிடியாய் இருந்திருக்கிறான். அங்கும் எடுபிடிதான். கூலி சரிப்பட்டு வராததால் விட்டு விட்டான்.
இவனிடம் பாக்கெட்டில் ஸ்பேனர் செட் எப்போதும் இருக்கும்.
பம்ப்பை அடித்துப் பார்த்தான். வாஷர் போய் விட்டது போலும். பராங்குசம் தாத்தா கொஞ்சம் காசு உள்ள ஆள். அவரே போய் வாஷர் வாங்கி வந்தார். சிறு வேலைதான்.

வெயிலில் சட்டை தெப்பமாய் நனைந்துவிட்டது.

“ரொம்ப நன்றிப்பா. நம்ம மெக்கானிக் தம்பி இல்லாட்டி கஷ்டப்பட்டிருப்போம். எல்லாரும் நன்றி சொல்லுங்க.’

தாத்தா சொல்லவும் பளிச்சென்று நிமிர்ந்தான்.

“என்ன சொன்னீங்க? திருப்பிச் சொல்லுங்க.’

“எதை மெக்கானிக் தம்பி?’ என்றவரை முகமெல்லாம் பூரிப்புடன் நோக்கினான் ராஜன்.

– மார்ச் 2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *