“ட்வெல்வ் அன் அன்டர் பாய்ஸ் iஃபனல். மிஸ்டர் சூரன் நாதன்! மிஸ்டர் மார்க் ஆண்டர்சன்!” ஆண்ட்ரூ வீல் அழைத்தார். நல்ல உயரம். பல ஆண்டுகளாக வெய்யிலில் டென்னிஸ் விளையாடிப் பழுத்த ஆரோக்கியமான உடல். சற்று கடுமையான ஆனால் புன்னகைக்குத் தயாராக இருக்கும் முகம். கோச்சுகளே உரிய கணீரென்ற குரல். அந்தக் குரலில் ஒட்டிக் கொண்டிருந்த ப்ரிட்டிஷ் உச்சரிப்பைச் சாமி கவனித்தான். சூரனுக்குத் தன்னை மிக மரியாதையாக மிஸ்டர் என்று அழைத்ததில் சிரிப்பு வந்தது. எப்போதும் அணியும் கண்ணாடியை எடுத்துவிட்டு ஸ்போர்ட்ஸ் காக்ல்ஸ் மாட்டிக் கொண்டான். டென்னிஸ் பையையும், தண்ணீர் ஜாடியையும் எடுத்துக் கொண்டு அவர் முன்னால் சென்று நின்றான். காத்தி;ருந்த கும்பலில் விலகி அவனுயரத்திற்கு ஒரு டென்னிஸ் பையைச் சுமந்த படி இன்னொரு பையனும் வந்தான்.
“நீங்கள் இருவரும் ஏற்கனவே சந்தித்திருக்கிறீர்களா ?”
சூரன், “நாங்கள் சென்ற ஆண்டுதான் இந்த ஊருக்கு வந்தோம். அதனால் அவனை எனக்குத் தெரியாது” என்றான்.
மார்க், “அவன் பெயரை சில டோர்னமென்ட்களில் பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான்” என்றான்.
மிஸ்டர் வீல் கேட்டுக் கொண்டபடி இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள். “உங்கள் இருவருக்கும் நான் சொல்லப் போவது தெரிந்தி;ருக்கும். ஆனால் டோர்னமென்ட் டிரெக்டர் என்கிற முறையில் உங்களுக்குச் சொல்ல வேண்டியது என் கடமை. இந்த இறுதி ஆட்டத்தில் ஜெயிப்பவனை நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட டென்னஸியிலிருந்து அனுப்புவோம். மற்றபடி…”
சென்ற புதன் கிழமை பன்னிரண்டு வயதுக்குட்பட்ட பையன்களின் டிராவைப் பார்த்த போது இறுதி ஆட்டம் வரை சூரன் வருவான் என்று சாமி துளி கூட எதிர் பார்க்கவில்லை. அன்று மாலை சாமி சூரனை க்ரீன் ஹில்ஸ் அத்லெடிக் க்ளப்பிற்கு அழைத்து வந்தான். திரைகள் தொங்க விட்டு, பலூன்கள் கட்டி அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். அவற்றில் எழுதியிருந்த வார்த்தைகளிலிருந்து புதிய அங்கத்தினர்களைக் கவரும் ஓபன் ஹவுஸ் கொண்டாடுகிறார்கள் என்று தெரிந்தது. நுழை வாயிலின் அறிவிப்புப் பலகையில் ஒட்டி இருந்த டிராவைப் பார்த்த சூரனுக்கு ஒரே ஏமாற்றம். “எனக்கு சீடிங் கொடுக்கவில்லை” என்று முறையிட்டான். “என்னால் அவர்கள் எல்லாரையும் தோற்கடிக்க முடியும்.” பதினொரு வயதுப் பையனின் அளவு கடந்த உற்சாகத்தை அப்போதே சாமி தன்னுடைய நாற்பத்தி எட்டு வயது விவேகத்தால் அழிக்க விரும்பவில்லை. இருந்தாலும் அவனுக்குப் பின்னால் வரக்கூடிய ஏமாற்றத்தைக் கட்டுப் படுத்த, “நீ எந்த அளவு வரை விளையாடினாலும் எனக்குத் திருப்திதான்” என்று சொல்லி வைத்தான்.
“உள்ளே இருக்கும் கோர்ட் எண் ஐந்து. சூரன்! உனக்கு அது எங்கே இருக்கிறது என்று தெரியாவிட்டால் மார்க் உன்னை அழைத்துச் செல்வான். ஹாவ் அ குட் கேம்.” மார்க் அவரிடமிருந்து மூன்று புதிய பந்துகளை வாங்கிக் கொண்டான். இருவரும் பேசியபடி நடந்தார்கள்.
அவர்கள் விளையாடுவதை எங்கே உட்கார்ந்து பார்க்கலாம் என்று சாமி யோசித்தான். சூரன் மாட்ச் விளையாடும் போது அவனுக்கு மிக அருகில் இருப்பது சாமிக்குப் பிடிக்காது. இருவருக்கும் நடுவில் ஒரு மாயத்திரை தொங்க வேண்டும். ஒன்பது வயதில் சூரன் கன்னி மாட்ச் விளையாடிய போது அவனுக்கு ஆதரவாக வேலிக்குப் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தான். முதல் செட் மிக விரைவாக முடிந்து விட்டது. “டாட்! ஐ வொன் தி ஃபர்ஸ்ட் செட்” என்று சூரன் கத்தினான். மாட்ச் முடிந்த பிறகு அவனிடம், “மாட்ச் நடக்கும் போது நீ என்னோடும் சரி, போட்டியில் சம்பத்தப் படாத மற்ற யாரோடும் சரி பேசக் கூடாது” என்று கண்டிப்பாகச் சொன்னான். அது அப்போது. இப்போதெல்லாம் நன்றாக விளையாடும் போது சாமியின் ஒப்புதலுக்காகவோ, தவறாக ஆடும் போது அவனுடைய மன்னிப்பிற்காகவோ அவன் பக்கம் சூரன் பார்ப்பது கிடையாது. வெற்றியும், தோல்வியும் அவன் கையில்.
வெளிப்புறம் என்றால் தூரத்தில் ஆனால் கண்ணில் படும் இடத்தில் பெஞ்ச்சிலோ அல்லது புல் தரையிலோ உட்கார்வது வழக்கம். நேற்று வரை டோர்னமென்டிற்குத் துணை செய்த சூரியனை இன்று காணவில்லை. வீட்டிலிருந்து கிளம்பிய போது தொடங்கிய மழை க்ளப்பிற்கு வரும் வரையில் நிற்க வில்லை. மரங்களில் மிச்சம் இருந்த இலைகளும் உதிர்ந்து விடும் என்று சாமி சூரனுக்குக் காட்டினான். நல்ல வேளை இந்த க்ளப்பில் இன்டோர் கோர்ட்டுகள் இருப்பதால்… “யூ மஸ்ட் பி சூரன்ஸ் டாட்” என்ற பெண்ணின் குரல் கேட்டுத் திரும்பினான். இந்திய சராசரிக்கும் குறைவான உருவம். அவள் தலையில் அணிந்திருந்த வைசரும், காலில் போட்டிருந்த உயர் காலணிகளும் அவளை அமெரிக்க சராசரிக்கு உயர்த்தின. “அந்தப் பிரபலமான சாம் நான்தான்”
“நான் சின்டி ஆன்டர்சன், மார்க் என் முதல் பையன். இது எமிலி” என்று அவள் பக்கத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணைக் காட்டினாள். தன் கையில் அணைத்திருந்த பொம்மையை விட எமிலி மிக அழகாக இருந்தாள். “மாட்ச்சை எங்கே பார்க்கப் போவதாக உத்தேசம் ?”
“கோர்ட்டின் திரைக்குப் பின்னால் நிற்கலாம் என்றிருக்கிறேன்.”
“அது அவ்வளவு சௌகர்யமில்லை. நாங்கள் இந்த க்ளப்பின் அங்கத்தினர்கள். அதனால் உட்கார்ந்து மாட்ச்சைப் பார்ப்பதற்கு வேறொரு நல்ல இடம் எனக்குத் தெரியும். அங்கே போகலாமா ?”
அவள் அழைப்பை ஏற்றுக் கொள்வதற்கு சாமி ஒரு கணம் தயங்கினான். சூரன் டென்னிஸ் மாட்ச் ஆடும் போது எதிர்ப் பக்கம் விளையாடும் பையனுக்கு ஆதரவாக – பெற்றோர், தாத்தா, பாட்டி, நண்பர்கள், கோச் – இப்படி யார் இருந்தாலும் அவர்களைத் தவிர்ப்பது அவன் வழக்கம். சூரனின் ஆட்டத்தை, அதுவும் சரி சமமாக இருக்கும் மாட்ச்சுகளை, ஆர்வத்துடன் பார்க்கும் அவனுக்கு அவர்களின் குறுக்கீடு பிடிப்பதில்லை. அதே போல் அவர்களின் நடத்தை சில சமயங்களில் ஏற்கத் தக்கதாக இல்லை என்றால் ஒதுங்கி இருப்பதே மேல். இரண்டாவது சுற்றில் எதிராளி அம்மாவின் உரத்த குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. ‘பேபி! அந்தப் பையன் உன்னை ஏமாற்றாமல் பார்த்துக் கொள்.’ ‘அவன் சீட் செய்யப் படாத ஆட்டக் காரன். அவனிடம் நீ எப்படி தோற்கலாம் ?’ ‘கவலைப் படாதே! அந்த ஆசியப் பையன் விரைவில் களைத்துப் போய்;விடுவான்.’ பன்னிரண்டு வயதிலேயே ஐந்தரை அடி உயரமும், எழுபத்தைந்து கிலோ பருமனும் கொண்ட அந்த ‘பேபி’யால் சூரன் அளவுக்கு நகர முடியவில்லை. ஆனாலும் அவன் அம்மாவின் குரல் கடைசி வரை ஓயவில்லை. சாமி வெகு தூரம் தள்ளி நின்று கொண்டான்.
அரை இறுதி ஆட்டத்தில் சாட்டனூகாவிலிருந்து வந்த மைகில் ஸ்டெப்ஸ் சூரனுக்கு எதிராக விளையாடினான். அவன்தான் டோர்னமென்ட்டை ஜெயிப்பான் என்று எல்;லோரும் எதிர் பார்த்தார்கள். அந்தப் பையனின் தந்தையே அவனுடைய கோச். அதனால் முதல் பெஞ்ச்சிலே உட்கார்ந்து கொண்டு மாட்ச் நடக்கும் போதே அவன் எப்படி விளையாட வேண்டும் என்று சைகையில் காட்டிக் கொண்டிருந்தார். அவர் செய்தது விதிகளுக்குப் புறம்பானது என்று சுட்டிக் காட்ட சாமிக்கு உரிமை இல்லை. சூரன்தான் அதைச் செய்ய வேண்டும். ஆனால் அவன் அவரைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவருக்கு எதிர்ப் புறமாக அமர்ந்திருந்த சாமி அவர் என்ன சொல்கிறார் என்று ஊகிக்க முயற்சித்தான். அவனுக்கு டென்னிஸ் விளையாடவும், ரசிக்கவும் ஓரளவு தெரியும் என்றாலும் எல்லா நுணுக்கங்களும் தெரியாது. அதனால் அந்த முயற்சியில் தோல்வியே கண்டான். ஆனால் அந்தப் பையன் காட்டிய கேம்ஸ்மன்ஷிப் அவன் எதிர் பார்த்தபடியே நடந்தது. மாட்சின் ஆரம்பித்தில் தன்னை விடச் சிறந்த ஆட்டக்காரனுடன் விளையாடுகிறோம் என்கிற எண்ணத்தில் சூரன் வெகு விரைவாக ஆனால் மிக நன்றாக விளையாடிதைப் பார்த்த அவர் கையைப் பிரித்து தன் பக்கம் மெதுவாகச் சுற்றினார். அதைப் பார்த்த அவன் பாய்ன்ட்டுகளுக்கும், கேம்களுக்கும் நடுவில் ஏகப்பட்டி நேரம் எடுத்துக் கொண்டான். ஷ_வின் கயிற்றை அடிக்கடிப் பிரித்து இறுக்கக் கட்டினான். ஆட்டத்தின் வேகம் வெகுவாகக் குறைந்தது. முதல் செட்டில் சூரன் ஆறு-ஐந்து என்ற கணக்கில் பந்தை சர்வ் செய்யத் தொடங்கிய போது ஆள் காட்டி விரலைக் காண்பித்தார். அந்தப் பையன் ஓய்வு அறைக்குச் செல்ல வேண்டும் என்று அனுமதி கேட்டு பத்து நிமிடங்கள் கழித்துத்தான் திரும்பி வந்தான். சூரன் அடுத்த கோர்ட்டில் நடந்த மாட்ச்சைப் பார்த்து பொழுதைத் தள்ள வேண்டியதாயிற்று. சூரனின் இடது கையால் செய்த சர்வ்களை அவனால் சமாளிக்க முடியவில்லை. அதனால் இரண்டாவது செட் நடக்கும் போது கோச்-தந்தை காற்றில் விரலால் ஒரு கோடு இழுத்து அதே விரலால் அந்தக் கோட்டைத் தாண்டினார். அதைப் புரிந்து கொண்ட அவன் தூரத்தில் இருந்த ஒரு அதிகாரியை அழைத்து வந்து சூரன் பந்தைப் போடும் போது ஃபுட் ஃபால்ட் செய்கிறான் என்று முறையிட்டான். அவரும் சூரன் சர்வ் செய்யும் போது அவனுடைய காலைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். இப்படி பல குறுக்கீடுகளுக்கு நடுவில் இரண்டு செட்டுகளில் சூரன் ஆட்டத்தை முடித்தான்.
எமிலியின் அழகில் மயங்;கிய சாமி சின்டியின் அழைப்பை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு அவளுடன் நடந்தான்.
“மிஸ்டர் வீல்தான் மார்க்கைக் கோச் செய்கிறாரோ ? அவரைப் பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன்.”
“ஆமாம். அவர் இங்கே ஹெட் கோச். அவருடைய மனைவியும் சில சமயம் சொல்லிக்; கொடுப்பாள். அவர்கள் இருவரும் சேர்ந்து நாற்பது ஆண்டுகளுக்கு முன் விம்பில்டனில் ஒரு சுற்று ஜெயித்தார்களாம். அந்தக் கதையை எல்லாரிடமும் பல தடவை கோச் வீல் சொல்லி யிருக்கிறார். உங்களைச் சந்திக்கும் போது உங்களிடமும் பாய்ன்ட் பாய்ன்டாக விவரமாகச் சொல்லி விடுவார்.”
“நான் அதற்குத் தயாராக இருக்கிறேன்.”
“ஆனால் மிக மிக நேர்மையான மனிதர். அவர் டோர்னமென்ட் டிரெக்டராக இருந்தாலும் அவர் கோச் செய்யும் யாருக்கும் டோர்னமென்ட் நடக்கும் போது எந்த உதவியும் செய்ய மாட்டேன் என்று ஆரம்பத்திலேயே கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.”
க்ளப்பின் பின் பக்கம் வரை சென்று மாடி ஏறி ஒரு நடை வழியைக் கடந்தார்கள். திறந்திருந்த இரட்டைக் கதவு வழியாக பால்கனியில் நுழைந்தார்கள். கீழே தரையிலிருந்து இருபத்தைந்து அடியாவது இருக்கும் போல் தெரிந்தது. டென்னிஸ் கோர்ட்டுகளைக் காட்டி, “முன்னொரு காலத்தில் இந்த இடம் ஒரு டான்ஸ் ஹாலாக இருந்ததாம்” என்றாள் சின்டி. “டான்ஸ் நடக்கும் போது இந்த பால்கனியில் இசைக் கலைஞர்கள் வாத்தியம் வாசிப்பார்கள். ஹாலை டென்னிஸ் கோர்ட்டாக மாற்றிய பிறகும் இதை அப்படியே விட்டு விட்டார்கள்.”
இரண்டு நாற்காலிகளில் சாமியும், சின்டியும் உட்கார்ந்தார்கள். சுற்றி இருந்த கைப்பிடியின் இரும்புக் கம்பிகளின் அகன்ற இடைவெளி வழியாகக் கீழே நன்றாகப் பார்க்க முடிந்தது. தள்ளி இருந்த மூன்றாவது கோர்ட்டில் மார்க், சூரன் இருவரும் பைகளையும், தண்ணீர் ஜாடிகளையும் கீழே வைத்து விட்டு ராக்கெட்டுகளைக் கையில் எடுத்துக் கொண்டார்கள். மார்க், “எம் ஆர் டப்ல்யூ” என்று கேட்டு விட்டு அவனுடை வில்சன் ராக்கெட்டைச் சுழல விட்டான். “எம்” என்று கூறிய சூரனிடம் கீழே விழுந்த ராக்கெட்டை எடுத்துக் காட்டினான். “டப்ல்யூ. நான் முதலில் சர்வ் செய்வேன்.” இருவரும் நிதானமாகப் பந்தை அடிக்க ஆரம்பித்தார்கள்.
“நேற்று சூரன் ஸ்டெப்ஸைத் தோற்கடித்ததில் மார்க்குக்கு ஒரே மகிழ்ச்சி. அவனுடன் சில மாட்ச்சுகள் விளையாடி இருக்கிறான். மார்க் எவ்வளவு நன்றாக விளையாடினாலும் ஸ்டெப்ஸ் எதாவது திரிசமம் செய்து அவனுடைய கவனத்தைக் கலைத்து விடுவான்.”
“அரை இறுதி ஆட்டத்திலும் அப்படித்தான் நடந்தது. எப்படியோ சூரன் அவனைச் சமாளித்தான்.”
“இது சூரனுக்கு அதிர்ஷ்ட்ட சட்டையோ ? நேற்றும் இதையே போட்டிருந்தானே.”
“ஆமாம். ஒரு டோர்னமெண்ட் ஜெயித்தால் அதில் கொடுத்த சட்டையை அடுத்து வரும் ஒவ்வொரு மாட்சிலும் போட்டுக் கொள்வான். அடுத்த டோர்னமெண்ட் ஜெயிக்கும் வரை அதுதான் அதிர்ஷ்ட்ட சட்டை. நேற்று அந்த சட்டையை இரண்டு முறை தோய்த்து உலர்த்த வேண்டி இருந்தது.”
“எனக்கு அந்த வேலை இல்லை. மார்க் அணிந்திருக்கும் அந்த டென்னஸ்ஸி டி போட்ட தொப்பியைத் தோய்த்தால் அதன் அதிர்ஷ்டம் கரைந்து விடுமாம். சூரன் சட்டையில் வைல்ட் வுட் ஸ்ப்ரிங் என்று போட்டிருக்கிறதே. அதற்குப் பிறகு அவன் எதுவும் ஜெயிக்க வில்லையா, ஆச்சர்யமாக இருக்கிறதே.”
“இரண்டு டோர்னமென்ட்களில் இறுதி ஆட்டம் வரையில் சென்று தோற்றுவிட்டான்.”
“ஒரு வேளை இன்று ஜெயிப்பானோ என்னவோ.” வஞ்சனை இல்லாமல் அவள் சொன்னதைக் கேட்ட சாமி “சரியாகச் சொல்லப் போனல் மார்க்தான் இன்று ஜெயிக்க வேண்டும். சூரன் அடுத்த ஆண்டு கூட விளையாடலாம்.”
“சூரனுக்குப் பதினொரு வயதுதான் ஆகிறதா ? பார்ப்பதற்கு இவ்வளவு உயரமாக இருக்கிறானே. எங்கள் வீட்டில் எல்லோரும் சின்ன சைஸ். எமிலிக்கு இரண்டு வயதாகப் போகிறது, நம்ப முடிகிறதா ?” என்று கேட்டாள்.
“அதனால் என்ன ? எதிர்காலத்தில் அவள் மிக அழகான சியர் லீடர் ஆகப் போகிறாள்.” சாமி சொன்னது புரிந்தது போல் அவனைப் பார்த்து எமிலி சிரித்தாள்.
ஐந்து நிமிட வார்ம்-அப்பிற்குப் பின் சூரன், “நான் தயார்” என்றான். நானும் என்று சொல்லிவிட்டு மார்க் மாட்ச்சைத் தொடங்கினான். அது வரை பொறுமையாக இருந்த எமிலி சிணுங்கவே சின்டி அவள் பையிலிருந்து வண்ண மெழுகுகளும் ஒரு புத்தகமும் எடுத்து அவளிடம் கொடுத்து விட்டுத் தானும் ஒரு புத்தகத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள்.
சாமி மாட்ச்சைப் பார்ப்பதில் கவனம் செலுத்தினான். மார்க் சூரனுடன் விளையாட ஏன் விரும்பினான் என்று மிக விரைவிலேயே தெரிந்தது. உருவத்தில் சிறிய அவன் கோர்ட்டில் மிகத் துரிதமாக நகர்ந்தான். அவன் பலவீனம் எதுவாக இருக்கும் என்று சூரன் வௌ;வேறு விதமாக அடித்தும் பலனில்லை.
கேம்ஸ் 4-0.
பார்வையைப் பக்கத்தில் கொண்டு வந்தான். தரையில் அமர்ந்து எமிலி எதையோ கிறுக்கி விட்டுத் தன் பொம்மைக்கு முதலில் காட்டினாள். “லுக் மாமி! லுக் மாமி!” சின்டி அவளுடைய ஓவியத்தைப் பாராட்டி விட்டுப் படிப்பதைத் தொடர்ந்தாள். சாமி எமிலியிடம், “உன் படத்தை எனக்குக் காட்டுகிறாயா ?” என்று கேட்டுப் பார்த்தான். அவள் சாமியைப் பார்த்து சிரித்தாலும் ஒதுங்கியே இருந்தாள்.
6-0 என்று முதல் செட் மார்க்குக்குச் சாதகமாக முடிந்தது. இரண்டு பக்கமும் அடிக்காமல் மார்க்குக்கு எதிரிலேயே ஆனால் பந்து தரையில் பட்டு எகிறும் படி சூரன் அடிக்கத் தொடங்கினான். அப்படிப் பட்ட பந்துகளைப் பார்த்து அடிப்பதில் மார்க்குக்குக் குழப்பமாக இருந்தது. முதல் இரண்டு கேம்களை அவன் வென்ற பிறகு தான் அதற்குப் பலன் தெரிந்தது.
‘4-2 செகன்ட் செட்’ என்று அறிவித்துவிட்டு மார்க் பந்தை மேலே எறிந்து அதை அடக்க… அவன்தான் ஜெயிக்கப் போகிறான். ஆட்டம் மிஞ்சிப் போனால் இன்னும் பத்து நிமிடம். மாட்ச் முடிந்த பிறகு சாமி முதலில் சூரனின் எதிராளியிடம் ‘குட் கேம்’ என்றோ, ‘கன்கிராஜூலேஷன்’ என்றோ சொன்ன பிறகுதான் சூரனை அழைத்துச் செல்வான். சூரன் தோற்றுவிட்டால் அவன் ஒருவாறு இளைப் பாறிய பிறகுதான் அவனுக்குச் சமாதானம் சொல்வது வழக்கம். இன்று என்ன சொல்லலாம் ? ‘நேற்று இரண்டு நீண்ட கடினமான மாட்ச்சுகள் நீ விளையாடினாய். அவனுக்கு அப்படி இல்லை. அதனால் உன்னை விட அவனால் நன்றாக ஓட முடிந்தது. உருவத்தில் சிறியவனாக இருந்தாலும் அவன் உன்னை விட ஒரு வயது பெரியவன். அடுத்த ஆண்டிற்குள் இன்னும் முன்னேறினால் நீ சுலபமாகவே ஜெயிக்கலாம்.’ சின்டியின் கைப் பையில் செறுகி இருந்த செல்; Nஃபான் அழைத்தது. அதைக் கையில் எடுத்துக் கொண்டு சாமியிடம், “எக்ஸ்க்யுஸ் மீ!” என்றும், எமிலியிடம், “நீ இங்கேயே இரு!” என்றும் சொல்லிவிட்டு கதவைக் கடந்து சென்றாள். “உங்களுக்கு வீடு பிடித்திருக்கிறதா ? …. விலையில் இரண்டாயிரம் டாலருக்கு மேல் குறைக்க மாட்டார்கள்.”
40-15.
பால்கனிக்கு நேர் கீழே காலியாக இருந்த கோர்ட்டில் விளையாட இரு பெண்கள் நுழைந்தார்கள். ஓபன் ஹெளசிற்காகக் கட்டப் பட்ட பலூன் ஒன்று நெட்டில் ஆடிக் கொண்டிருந்தது. அது விளையாடுவதற்குத் தொந்தரவாக இருக்கும் என்று ஒருத்தி நினைத்திருக்கலாம். கட்டியிருந்த கயிற்றை அவிழ்க்க, சிவப்பு வண்ண பலூன் அவள் கையிலிருந்து விலகி மெதுவாக மேலே ஏறி, காற்றில் தவழ்ந்து, அவன் பக்கம் மெல்லப் பறந்தது. இன்னமும் ஹீலியம் மிச்சம் இருக்கிறதே என்று அவனுடைய கெமிஸ்ட்ரி மூளை ஆச்சரியப் பட்டது.
டியுஸ்.
சின்டி வெளியே சென்றவுடன் எழுந்து நின்ற எமிலியின் கண்கள் பலூனைத் தொடர்ந்தன. கை நீண்டது. கால்கள் மெல்ல நகர்ந்தன. அவள் பால்கனியின் ஓரத்திற்கே வந்து விட்டாள். திடீரென்று சாமிக்குச் சில காட்சிகள் தோன்றி மறைந்தன. ஒரு இரண்டு வயதுப் பெண் யாரோ கை நீட்டி அழைக்க மேல் மாடியின் கைப்பிடிச்சுவரில் ஏறுகிறாள். பலர் சூழ்ந்திருக்கிறார்கள். ஒரு ஆட்டோ விரைகிறது. உடலைத் தூக்கிச் செல்கிறார்கள். டாக்டர் மன்னிப்புக் கேட்கிறார். கம்பிகளின் இடைவெளி எமிலியை விழுங்குவதற்காக அகன்று கொண்டே இருக்கிறது. சாமி மிக வேகமாக ஆனால் சத்தம் எழாமல் அவளுக்குப் பக்கமாகச் சென்று வெளிப் புறமாக அவளைச் சுற்றி கையை நீட்டி அவளை உட்புறத்தில் தள்ளினான். பின்னால் தள்ளாடி விழுந்த எமிலி, “ஹி புஷ்ட் மீ! “ஹி புஷ்ட் மீ!” என்று அழுதாள். இதைப் பார்த்தபடி பால்கனிக்குள் சின்டி ஓடி வந்தாள். “தாங்க்யூ சாம்! தாங்க்யூ சாம்!”
கீழே விளையாடுபவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாதென்று சின்டி எமிலியைத் தூக்கிக் கொண்டு நடை வழிக்குச் சென்றாள். அவர்களுக்கு ஆதரவாகச் சாமி பின்னால் சென்றான். “நீ கீழே விழுந்து கை கால் உடைத்துக் கொள்ளாமல் தடுக்கவே சாம் உன்னைத் தள்ளினான்.” அந்த விளக்கம் அவளுக்குப் புரியாவிட்டாலும் அழுகையைச் சிறு விசும்பலாகக் குறைத்துக் கொண்டாள். “அதற்காக நீதான் அவனுக்கு நன்றி உடையவளாக இருக்க வேண்டும்.”
‘நான் இந்தியாவில் என் கல்லூரி ஆசிரியர் வீட்டிற்குச் சென்றிருந்த போது அவருடைய இரண்டு வயதுப் பெண் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்து விட்டது. இன்று நீங்கள் என்னை இங்கே அழைத்து வந்த போது கம்பிகளுக்கு நடுவில் இருந்த இடைவெளியின் அகலமும், பொம்மை போன்ற எமிலியின் சின்ன உருவமும் என் மனதில் உறுத்திக் கொண்டிருந்தன. அதனால்தான் அவள் பலூனைப் பார்த்துக் கொண்டே பால்கனியின் ஓரத்தை அடைந்த போது என்னால் வேகமாகச் செயல் பட முடிந்தது. நான் பின்னால் சென்று பிடிக்க முயற்சித்தால் என்னிடமிருந்து விலகிப் போய் விடுவாளோ என்ற பயத்தில் நான் வெளிப் புறத்திலிருந்து அவளைத் தள்ளினேன். எப்போதோ எங்கோ ஓர் உயிர் பிரிந்ததற்கு அர்த்தம் இருப்பதாகவே நான் உணர்கிறேன். உண்மையில் நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது எனக்கல்ல’ என்ற வார்த்தைகள் அவன் மனதில் உருவெடுத்தன. ஆனால் “அதெல்லாம் அவசியமில்லை. குழந்தையைப் போல நாமும் நடந்ததை மறந்து விட வேண்டும்” என்கிற சுருக்கமான பதில்தான் வந்தது.
அந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இருவரும் மீளட்டும் என்று சாமி பால்கனிக்குள் திரும்பி வந்தான். எதுவும் அறியாதது போல் பலூன் மேல் கூரையில் சிக்கிக் கொண்டிருந்தது. கீழே மாட்ச் இன்னும் முடிந்திருக்க வில்லை. சூரன் 40-30 என்று அறிவித்து விட்டு சர்வ் செய்யத் தயார் ஆனான். ஸ்கோர் அட்டை சூரன் 5-4 என்று காட்டியது. சாமியால் நம்ப முடியவில்லை. மார்க் அடித்த பந்து வலையில் சிக்கவே அவன் ராக்கெட்டைத் தரையில் வைத்து விட்டுத் தளர்ந்த நடையில் கோர்ட்டிலிருந்து வெளியேற, சூரன் பழைய பந்துகளைப் பொறுக்கிக் கையில் எடுத்துக் கொண்டான். சாமி நடைவழிக்கு வந்து சின்டியிடம், “அவர்கள் ஆளுக்கொரு செட் ஜெயித்திருக்கிறார்கள்” என்றான். அந்த செய்தியைக் கேட்ட அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. தூங்கி விட்ட எமிலியைச் சின்டி தூக்கிக்; கொண்டாள். மூவரும்; கீழே இறங்கி கோர்ட்டிலிருந்து வெளியே வரும் கதவுக்கு முன் காத்திருந்தார்கள். முதலில் மார்க் வருவதைப் பார்த்து சாமி விலகி நின்றான். சின்டியின் வருத்தம் தோய்ந்த முகத்தின்; காரணம் தெரியாமல், “இரண்டாவது செட்டில் அவன் நன்றாக ஆட ஆரம்பித்து விட்டான்” என்று சொல்லியபடி அவள் பின் நடந்தான்.
பிறகு வந்த சூரனிடமிருந்து சாமி தண்ணீர் ஜாடியை வாங்கிக் கொண்டான். சூரன் விளையாடிய பந்துகளை அதற்கான கூடையில் போட்டான்.
“டாட்! மார்க் ஒரு நல்ல ஆட்டக் காரன்.”
“அவன் விளையாட்டை விட அவன் நடந்து கொண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.” சூரன் உட்கார்ந்து இளைப்பாற சாமி கும்பல் இல்லாத இடமாக அழைத்துச் சென்றான். இந்த மாதிரி பத்து நிமிட இடைவெளியில் மூன்றாவது செட்டை எப்படி விளையாட வேண்டும் என்று பிரும்மோபதேசம் போல் தந்தையோ, கோச்சோ சொல்லிக் கொண்டிருப்பார்கள். சாமி அப்படி யெல்லாம் சூரனைக் குழப்பியதில்லை. மிக மிக எளிமையான அறிவுரை. முதல் செட்டை வென்று இரண்டாவதை இழந்திருந்தால், முன்னால் எதைச் செய்தாயோ அதையே மறுபடியும் செய். இரண்டாவது செட்டை வென்றிருந்தால் ஆட்டத்தை உன் பக்கம் திருப்பிக் கொண்டு விட்டாய். அதையே தொடர்ந்து செய். அந்த விதியின்படி, “இரண்டாவது செட்…” என்று சொல்லத் தொடங்கும் போது சூரனே, “இரண்டாவது செட் நடுவில் மேலே ஒரே சத்தமாக இருந்ததே, என்ன நடந்தது ?” என்று கேட்டான்.
“ஓ, அதுவா ? மார்க்குக்கு இரண்டு வயதில் ஒரு தங்கை. அவள் கீழே இருந்த கோர்ட்டிலிருந்து மேலே பறந்து வந்த பலூனைப் பிடிக்கத் தாவினாள். அவள் கீழே விழாமல் நான் தடுத்துத் தள்ளி விட்டேன். அதனால் அவள் அழுது கொண்டிருந்தாள்.”
“நீ அவளைக் காப்பாற்றினாயா ? ஐயாம் ரியலி ப்ரௌட் ஆஃப் யூ, டாட்” என்று சாமியைக் கட்டிக் கொண்டான். “அது ஒன்றும் பெரிதில்லை. யாருமே செய்யக் கூடியதுதான்” என்று சொல்லி சாமி அவனுடைய பாராட்டையும், சட்டையின் வேர்வையையும் ஏற்றுக் கொண்டான்.
“நீ இந்த டோர்னமெண்ட்டில் நன்றாக விளையாடியது கூட எனக்கு ரொம்பப் பெருமைதான்.”
“நான் இன்னும் இதை ஜெயிக்கவில்லையே.”
“அது அவசியமில்லை. நீ ஒவ்வொரு மாட்ச்சிலும் நடந்து கொண்டது, எதிர்ப்புகளைச் சமாளித்தது, கவனம் இழக்காமல் விளையாடியது எல்லாம் தான்.”
சற்று நேரம் இருவரும் பேசவில்லை.
“இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது ?”
“இரண்டு நிமிடங்கள். சாப்பிட ஏதாவது வேண்டுமா?”
“தண்ணீர் போதும்.” சூரன் எழுந்திருந்தான். இருவரும் டோர்னமென்ட் டெஸ்க் பக்கம் சென்றார்கள். போட்டியின் கடைசி நாள். கும்பல் அதிகமில்லை. இறுதி ஆட்டத்தில் வெல்பவர்க்கும், தோற்பவர்களுக்கும் என்று ட்ரோஃபிகள் அணி வகுத்து நின்றன. வரிசையில் சில குறைந்திருந்தன. சில இறுதி மாட்ச்சுகள் ஏற்கனவே முடிந்திருக்க வேண்டும்.
மார்க் அவர்களுக்கு முன்பே அங்கு வந்திருந்தான். அவர்களைப் பார்த்தவுடன் மிஸ்டர் வீல், “மார்க்கினால் மூன்றாவது செட் விளையாட இயலாது போலிருக்கிறது” என்றார்.
ஏதாவது ஒரு காரணத்தால் ஆட முடியாமல் போவது சிறுவர் டென்னிஸில் நடப்பதுதான். ஆனால் இவ்வளவு முக்கியமான மாட்ச்சில் மூன்றாவது செட் விளையாடாமலே சூரனுக்கு வெற்றி கிடைக்குமானால்… தவறான் அந்த எண்ணத்; தொடரை சாமி வெட்டினான். அவன் கேட்க நினைத்த கேள்வியை வீல் கேட்டார். “உனக்கு எப்படி இருக்கிறது, மார்க் ?”
மார்க் அதற்குப் பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தான். அவனுக்குப் பின்னால் நின்றிருந்த சின்டி அவருக்கு மிக அருகில் சென்று தோளில் தூங்கிக் கொண்டிருந்த எமிலியைக் காட்டி ஏதோ சொன்னாள். அதைக் கவனமாகக் கேட்ட அவர் உடனே அவளுக்குப் பதில் சொல்லவில்லை.
“மிஸஸ் ஆன்டர்சன் என்ன சொல்கிறாள் என்று தெரிகிறது. ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை” என்றான் சூரன்.
தான் மேலே அணிந்திருந்த யூ எஸ் டி ஏ போட்ட வரிச் சட்டையைக் கழற்றி வைத்து விட்டு அவர்கள் நால்வரையும் வீல் தனியே அழைத்துச் சென்றார். “இப்போது நான் டோர்னமென்ட் டிரெக்டர் என்றில்லாமல் அனுபவப் பட்டவன் என்ற முறையில் உங்கள் ஒவ்வொருவருக்கும் சொல்ல வேண்டியது இருக்கிறது. முதலில் சூரன்! மார்க்! மாட்ச் நடக்கும் போது காட்டும் போட்டி மனப் பான்மையையும், எதிராளியை மடக்குவதற்குக் காட்டும் விளையாட்டுத் திறமையையும் அது முடிந்த பிறகு மறந்து விட வேண்டும். கோர்ட்டுக்கு வெளியில் யாரும் உனக்கு எதிரி இல்லை. அது போல வெளியில் நடப்பது எதுவும், நல்லதானாலும் கெட்டதானாலும், மாட்ச்சை பாதிக்க விடக் கூடாது. உன் முயற்சி குறையக் கூடாது.”
சிறு இடைவெளிக்குப் பிறகு அவர் தொடர்ந்தார். “சூரன்! மூன்றாவது செட்டை எப்படி முடிவு செய்யலாம் ? காசைச் சுண்டிப் போடலாமா ?”
“வேண்டாம் மிஸ்டர் வீல். மூன்றாம் செட் விளையாடுவதைத்தான் நான் விரும்புகிறேன்.”
“யூஆர் அ குட் ஸ்போர்ட். மார்க்! உன்னுடைய நிலைமை எனக்குப் புரிகிறது. உடனே விளையாடுவது சுலபமல்ல. ஆனால் நான் மாட்ச்சைத் தள்ளிப் போட்டால் உனக்கு நான் உதவி செய்தது போலாகும்.”
“பரவாயில்லை கோச். நான் இப்போதே விளையாடுகிறேன்.”
டோர்னமென்ட் டெஸ்கிலிருந்து மூன்று புதிய பந்துகளை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தார். “மார்க்! கோர்ட்டுக்குள் இருக்கும் வரை நீ எந்த விதத்திலும் அவனுக்குக் கடமைப் பட்டவனில்லை. சூரன்! விளையாடும் போது நீ அவனுக்கு இரக்கம் காட்ட வேண்டாம்.”
மார்க் சாமியின் அருகில் நெருங்கி வந்து, “மிஸ்டர் நேதன்! நான் எமிலியுடன் விளையாடும் போதெல்லாம் உங்களை நினைத்துக் கொள்வேன்” என்றான்.
“மார்க்! நீ அவளுடன் சண்டை போடும் போதும் என்னை மறக்கக் கூடாது” என்று சொல்லி அவன் முகத்தில் மங்கிய சிரிப்பை சாமி வரவழைத்தான்.
அவர்கள் கோர்ட்டிற்குத் திரும்பிச் சென்ற பிறகு சாமி, சின்டி இருவர் பக்கம் திரும்பினார் வீல். “இந்த நிலைமையில் அவர்கள் இருவரும் விளையாட ஒப்புக் கொண்டதே எனக்கு சந்தோஷம். ஆனால் ஒருவன்தான் ஜெயிக்க முடியும் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. மிஸ்டர் சாம்! ஒரு உயிரை மட்டுமில்லை இந்த க்ளப்பின் பெயரையும் காப்பாற்றினீர்கள். அதற்காக நான் உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். நாங்கள் எதிர் காலத்தில் இது மாதிரி நடக்காமல் பார்த்துக் கொள்வோம்.”
“கோச்! அதுதான் மிகவும் முக்கியம்.”
“மிஸ் ஆன்டர்சன்! எமிலியின் உயிருக்கு ஒரு டென்னிஸ் மாட்ச், விம்ப்ல்டனில் முதல் சுற்று உட்பட, சமம் ஆகாது.”
– மே 2007