முற்றுகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2022
பார்வையிட்டோர்: 2,590 
 
 

(2000 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நு… ங்… ங்… என்ற சத்தம் காதைக் குடைந்தது. ‘சனியன்! விடியற்காலையிலேயே வந்துவிடும். இனி பதுங்குகுழியுனுள்ளே இருக்கவேண்டியதுதான்’ போன பிறகுகூட, தலைக்கு மேலே நிற்பதுபோல் காதுக்குள் இரைந்து கேட்கும். காதுக்கு ஓய்வே இல்லை. ஒன்றில் ஆளில்லா வேவு விமானம் திரியும் அல்லது வேவு விமானம். அதுவுமில்லாவிட்டால் மிக் 27 வந்து இந்த சாவகச்சேரியில் இன்னும் எஞ்சி நிற்கும் ஏதேனும் ஒரு கட்டிடத்தைத் தூக்கிப் படுக்க வைத்துவிட்டுப் போகும். ஒன்று மாறி ஒன்று.

இப்போது ங்… ங்… ங்… ஒலி தலைக்கு மேலேயே கேட்டது. “எனக்கு வாற எரிச்சலுக்கு ஒரு நாள் சந்தியில இருக்கிற மாடிக்கடையில் ஏறி நிண்டு இதுக்கு கல்லாலை அடிப்பன்” பொறுமையே இல்லாமல் புறுபுறுத்தாள் அத்தியரசி. அவளின் அவசரம் அவளுக்கு. அன்று அவளின்ர வேவு அணியினர் ஒன்றுகூடலுக்காக நகருக்கு வந்திருந்தனர். திரும்பிப் போகும்போது இவர்களிடம் வருவதாக கூறியிருந்தார்கள்.

“நெடுக முன்னுக்குப் போய் நிண்டு பிஸ்கற்றைச் சாப்பிடுற பிள்ளையளுக்கு இண்டைக்காவது ஒரு நல்ல சாப்பாடு குடுப்பமெண்டு பாத்தா, அதுக்குள்ளை வந்திட்டுது”

பக்கத்து வீட்டினுள்ளே மதிலேறிப் பாய்ந்து பிடுங்கி வைத்திருந்த முருங்கைக்காய்களைத் திரும்பிப் பார்த்தாள். இது ஒரு அதிசயம்தான். பக்கத்து வீட்டுத் தென்னைகள் ஒன்றில் ஷெல்லடியில் வட்டோடு அறுபட்டு உடல் பிய்ந்து நின்றன அல்லது மிக் 27 இன் புண்ணியத்தில் வேரோடு பிடுங்கப்பட்டு நிலத்தில் நீட்டி நிமிர்ந்து கிடந்தன. அந்த முருங்கை மரம் மட்டும் ஒரு கொப்புப் பறந்ததோடு சரி. காய்த்துத் தள்ளுகின்றது. இவர்களும் சமைத்துத் தள்ளியபடி….

ஆளில்லா வேவு விமானம் கொஞ்சம் விலகினால் போதும், இவள் பறந்து போய் வாசலில் தபாற்பெட்டி தொங்கும் வீட்டில் தேங்காய் பிடுங்கி வந்து விடுவாள். விட்டால் அல்லவா?

கும்கும் என முன்னணியில் ஷெல்கள் வெடிக்கத் தொடங்கின. என்ன சண்டையோ என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே ஷெல் ஒன்று தலைக்கு மேலால் கூவிப்போனது. வீட்டின் மாடியில் தொலைத்தொடர்பு கருவியுடன் நின்ற தமிழ்ப்பாவை, “அடியேய், எல்லாரும் பங்கருக்குள் போயிட்டீங்களா” என்று கீழே பார்த்துக் கத்தினாள்.

“ஏற்கனவே எல்லோரும் பங்கருக்குள்ளைதான் இருக்கிறம். நீ கெதியா வா” என்று பதிலுக்கு கத்தினாள் அத்தியரசி. இந்தப் பக்கம் விழுந்தால் இறங்கலாம் என்று நினைத்தவாறு சண்டை நிலைமையை கேட்டுக்கொண்டிருந்தாள் தமிழ்ப்பாவை. சண்டை கடுமையாக நடக்கின்றது. சில நேரம் இவர்களின் உதவியும் தேவைப்படும். எதற்கும் இப்போதே தொலைத்தொடர்பைக் கீழே நகர்த்துவோம் என்று யோசிச்சுக்கொண்டிருக்கும்போதே கூரையில் ஒரு ஷெல் விழுந்தது. இவளையும், வோக்கியையும் மூடி கற்கள், ஓடுகள், தூசி….

“தமிழ்ப்பாவை… தமிழ்ப்பாவை…” அத்தியரசி கீழே நின்று கத்துவது கேட்டது. வோக்கியை மட்டும் கழற்றியெடுத்துக்கொண்டு கீழே இறங்கும்போதுதான் பார்த்தாள் ஏரியல் அறுந்து கிடந்தது.

“நேரத்துக்கே கழற்றியிருக்க வேணும். சரி. இனித் தொடர்பு இல்லை” பதுங்குகுழியை நோக்கி ஓடிவரவும், அடுத்த ஷெல் கூரையில் விழுந்தது. தொடர்ந்து மளமளவென ஷெல்கள் விழத்தொடங்கின.

“இவடத்தில ஆரோ பெரிய ஆக்கள் நிக்கிறாங்கள் எண்டு நினைச்சுப் போல கிடக்குது. விளாசித் தள்ளுறான். ஐயோ…. அது நாங்களடா, முருங்கைக்காய் சமைக்கிறதைத்தவிர வேறையொண்டும் நாங்கள் செய்யிறதில்லை” என்ற இராணுவக் காவலரண் அமைந்திருந்த பக்கம் கைகாட்டி அத்தியரசி கதைக்கத் தொடங்க, மற்றவர்களுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“சத்தம் போடாமல் இரு. தொடர்பில்லாமல் நிக்கிறன் எண்டு நான் யோசிச்சுக்கொண்டிருக்கிறன். பம்பல் அடிக்காதை” என்றவாறு பதுங்குகுழியினுள் கிடந்த தொலைத்தொடர்புக்குரிய பொருட்களை எடுத்து, தொடர்பை ஏற்படுத்த முயற்சித்துக்கொண்டிருந்தாள் தமிழ்ப்பாவை. அவ்வளவு நேரமும் வாயை மூடிக்கொண்டிருந்த பூங்கா, “ரவுண்ஸ் அடி ஓய்ஞ்சு பின்னுக்கு ஷெல்லடிக்கிறான். சத்தம் எல்லாம் வித்தியாசமாக இருக்குது” என்றவாறு வீதிப்பக்கத் துவாரத்தால் வெளி நிலைமையை அவதானித்துக்கொண்டிருந்தாள்.

காயங்கள், வீரச்சாவுகளால் ஆள் எண்ணிக்கை குறைந்ததில் ஏற்கனவே வைரவர் கோயிலடிக் காப்பரணைக் கைவிட்டு இருந்தார்கள். நேற்று கோணல் புளியடிக் காப்பரணில் இருவருக்கு பொக்கிளிப்பான் வந்ததால், ஆள் போதாது அதையும் கைவிட்டிருந்தார்கள். இன்னமும் ஆட்கள் கொடுக்கவில்லை. இன்றுதான் அனுப்பவேண்டும். ஆனாலும் சண்டை தொடங்கியவுடன் பக்கத்து காப்பரணிலிருந்து இரண்டு பேராவது போய் அருகிலே நிற்பார்கள். ஆனால், இரண்டு பேரின் முன்னால் இருபது இராணுவம் வந்து நிற்குமே…..

தமிழ்ப்பாவை யோசித்துக்கொண்டிருக்கும்போதே பக்கவாட்டாக மிக அண்மையில் சூட்டுச் சத்தம் கேட்டது ஷெல்லடி சற்றும் குறையவில்லை. சூட்டுச் சத்தமோ மிக அண்மையில். யார் இங்கு நின்று சுடுவது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது இன்னொன்று புலனாகியது. சூடும் எதிர்ச்சூடும் நடப்பது கேட்டது. என்ன நடந்திருக்கும்? உள்ளுக்குள் இராணுவம் வந்ததிருந்தால் ஏன் செல்லும் விழுகின்றது? ஏதோ சிக்கல் நடந்துவிட்டது என்பது தமிழ்ப்பாவைக்கு விளங்கியது.

“எல்லோரும் ரைபிள், கோல்சரை எடுத்துக் கட்டு…” என்று சொல்லியவாறு திரும்பிப் பார்த்தாள். மற்ற இருவரும் ஏற்கனவே தயார் நிலையில்தான் நின்றார்கள். தமிழ்ப்பாவை கோல்சரைக் கட்டிக்கொண்டு மறுபடியும் தொலைத் தொடர்புப் பொருட்களுடன் போராடத் தொடங்க, வீதியில் யாரோ தடதடவென ஓடி வரும் சத்தம் கேட்டது. சூட்டு நிலையில் நின்றவாறு அத்தியரசி கூர்ந்து வீதியைப் பார்த்தாள். கௌரியும், பாவரசியும், செவ்வந்தியும் ஓடி வருவது தெரிந்தது.

“ஐயோ… அது எங்கடை ஆக்கள் வருகினம்” என்றவள். “கெதியா வாங்கோ… கெதியா வாங்கோ” என்று கத்தினாள். “ஆர் வேவுக்காரரோ” என்று தமிழ்ப்பாவை அடுத்த ஓட்டையால் பார்க்க, மூவரும் ஓடிவந்து பதுங்குக்குழியில் பாய்ந்தார்கள்.

“மீற்றிங் நடக்கேல்லையோ” “ஏன் இந்த ஷெல்லடிக்குள்ள வந்தனீங்கள்?” “உதில நிண்டு ஆர் ரவுண்ஸ் அடிச்சது?” இவர்கள் மூவரும் ஒரே நேரம் கேட்க, பெரிய ஒரு மூச்சு விட்டு தன்னை நிதானப்படுத்தியவாறு செவ்வந்தி சொன்னாள்.

“நாங்கள் போய் மீற்றிங்கில இருக்கவும் சண்டை தொடங்கிவிட்டது. அங்கேயே நிண்டு நாங்கள் நிலைமை கேட்டுக்கொண்டிருந்தனாங்கள். கனபேர் வீரச்சாவும் காயமும். எல்லாரையும் பின்னுக்கு வரச் சொல்லியாச்சு. காயக்காரரை எடுத்துக்கொண்டு வரக்கூடிய ஆக்கள் வந்திட்டினம். கொஞ்சப்பேர் கயல்விழியோடை மெயினில நிக்கினம். கன நேரமா உங்கடை தொடர்பு இல்லை நிலைமையை நேரே பாப்பம் எண்டு வந்தால், உந்தப் பக்கத்துக் கடைக்குள்ள ஆமி. விலத்தேலாமல் போச்சுது. அடிச்சுப் போட்டு வந்திட்டம். பங்கருக்கை இறங்கேக்குள்ளைதான் பார்த்தன் முன் வீட்டுக்கையும் ஆமி. வீட்டுக்குள்ளை நிண்டு யன்னலால் பார்த்துக் கொண்டிருக்கிறான்.”

சரியாகப் போய்விட்டது. இப்போது நாங்கள் முற்றுக்கைக்குள்ளேயா? செவ்வந்தியிடமும், பாவரசியிடமும், கௌரியிடம், எங்களிடமும் ரைபிள்கள். சண்டை வந்தால் ஒரு கை பார்க்க வேண்டியதுதான்.

“பின் வீட்டுக்கையும் நிக்கிறானோ… எண்டொருக்கா நான் பாக்கிறன்” என்று அத்தியரசி வெளியே வர முயல, முன் வீட்டிலிருந்து பதுங்குகுழி வாசலுக்குச் சூடு வந்தது. சடாரனத் தலையை உள்ளே இழுத்துக்கொண்ட அத்தியரசி, “ஏனடா சுடுகிறாய்? சும்மா எட்டித்தானே பார்த்தனான்?” என்றாள்.

“ஏன்ரி சீரியசான நேரங்களிலையும் பம்பல் அடிக்கிறாய்?” சினந்தாள் பூங்கா .

“ரவுண்டப்பை உடைச்சுக்கொண்டு வெளியில போவம்” என்றாள் அத்தியரசி.

“கொஞ்சம் பொறு. வோக்கி வேலை செய்யத் தொடங்கிவிட்டுது. நிலைமையைக் கேப்பம்” என்றும் சொல்லும்போதே, தொலைத்தொடர்பில், கயல்விழி மெயினுடன் கதைப்பது கேட்டது.

“சுத்தி வர அவன்தான் நிக்கிறான். வீரச்சாவுக்காரரைத்தவிர இந்தப் பக்கம் மிஞ்சின எல்லாரையும் ஒண்டாக்கிப்போட்டு, அடிச்சுக்கொண்டிருக்கிறன். நான் பின்னுக்கு வரமாட்டன். நீங்கள் ஆக்களை அனுப்புங்கோ. நான் திரும்பிப் பிடிப்பன்” மெயினின் பதிலும் கேட்டது.

“நீ குடுத்துக்கொண்டிரு” “பிரச்னையில்லை. அப்பிடித்தான் நிக்கிறன்” உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த கௌரி இடை புகுந்தாள். “கயல்விழி… கயல்விழி, நான் கௌரி கதைக்கிறன்” “எங்கை நிக்கிறாய் கௌரி?” “உனக்கு கிட்டத்தான். தமிழ்பாவையின்ரை இடத்தில் நிக்கிறம். எங்களுக்கும் சிக்கல்தான். நாங்களும் நிக்கிறம் யோசிக்காதை”

சிறிது மௌனத்தின் பின், “சரி பாப்பம்” என்று முடித்தாள் கயல்விழி. “எதுக்கும் ஒருக்கா எட்டிப் பாப்பம். இடைவெளி கிடைச்சுதெண்டா கயல்விழியிட்டை ஓடிப்போவோம்” என்றவாறு எட்டிப் பார்த்த அத்தியரசியின் பின் கழுத்தை உரசிப் போனது ஒரு ரவை. அப்படியே விழுந்து கிடந்து கழுத்தை தடவி, பிரச்சனையில்லை என்று கண்ட பின்தான் உயிர் வந்தது அவளுக்கு.

“இனி எட்டிப் பார்த்தா, வாங்குவாய் என்னட்டை” அதட்டினாள் தமிழ்ப்பாவை.

நேரம் போய்க்கெண்டேயிருந்தது சூரியன் தலைக்கு மேலே வந்துவிட்டான். அவனும் அசைந்தபாடில்லை. முன் வீட்டில் நடமாடும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. பக்கத்து கடையிலிருந்து இடையில் ரவைகள் சீறின. அடுத்த பக்க வீட்டினுள்ளும் ஏதோ தட்டுப்பட்டு விழுமோசை கேட்டது. வந்து விட்டானோ?

இவர்கள் பதுங்குகுழி அமைத்திருக்கின்ற வளவிலுள்ள வீட்டுள்ளும் அவன் வந்துவிட்டான் என்றால், பிறகு யாரையும் பார்க்காமல் சண்டையை தொடங்கவேண்டியதுதான். அந்த வீட்டுக்கு வரமுயலும் இராணுவத்தை சுடுவதற்கான தயார் நிலையில் பூங்காவும் அத்தியரசியும் ஆயத்தமாக நின்றார்கள். கயல்விழியின் நிலைமை சிக்கலாகிக்கொண்டிருந்தது. ஒவ்வொருவராக வீரச்சாவடைந்து விழ

விழ, நிலைமை சொல்லிக்கொண்டிருந்தாள். இப்போது வோக்கியில் அவளின் குரலைவிட அவள் நின்ற பதுங்குகுழி வாசலுக்கு எதிரி அடித்த PKLMG அடிதான் பெரிதாக கேட்டது. தானும் மலரினியும் மட்டுமே எஞ்சி நிற்பதாக குறிப்பிடுகின்றாள். வாசலுக்கு இந்த மாதிரி அடி விழ, எப்படித்தான் இவ்வளவு நிதானமாக கதைக்கின்றாளோ?

தன்னிலிருந்து பதினைந்து மீற்றரில் மதிலுக்கு மறு பக்கம் இராணுவம் நிற்பதாக குறிப்பிட்டபோது, கௌரி இடை புகுந்தாள்.

“கயல்விழி, ஒண்டும் செய்து போடாதை. அப்பிடியே நில். எங்கடை ஆக்கள் வந்து சேரும்வரை சமாளி. நாங்களும் கிட்டத்தான் நிக்கிறம்”

சிறிது நேர இடைவெளியின் பின் கயல்விழியின் பதில் அமைதியாக, மிக அமைதியாக வந்தது.

“சரி கௌரி பாப்பம்” இவர்களின் பதுங்குகுழி இருந்த வளவு வீட்டினுள்ளே கல்போல எதுவோ விழுமோசை கேட்டது. தொங்கிக்கொண்டிருந்த கற்களில் ஏதேனும் ஒன்று ஷெல் அதிர்வில் விழுகின்றதோ? அல்லது அவன்தான் பின் பக்கத்தால் வீட்டுக்குள்ள வந்துவிட்டானோ? உற்று உற்றுப் பார்த்தாள் அத்தியரசி. ஒன்றும் தெரியவில்லை.

“ஒண்டும் செய்து போடாதை கயல்விழி” கௌரி இடையிடையில் கயல்விழியிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள். திடீரென வோக்கியில் கயல்விழியின் குரல் கேட்டது.

“மதிலுக்கு இஞ்சாலை இருக்கிற பங்கருக்குள்ளை குதிச்சிட்டான் என்னில இருந்து எட்டு மீற்றர் கௌரியின் மனக்கண்ணில் கயல்விழியின் மெயின் பங்கரும், மதிலோர பங்கரும் ஒரு தரம் வந்து போனபோதுதான், அது உறைத்தது. நேற்றுத்தானே இரண்டு பங்கர்களுக்குமிடையே நகர்வகழி வெட்டி முடித்திருந்தார்கள். விறைத்துப்போனாள் கௌரி. கயல்விழியை கூப்பிட கௌரியின் வாய் எத்தனிக்கவும், வோக்கியில் அவளின் குரல் கேட்டது. மிக அமைதியாக, நிதானமாயிருந்தது அந்தக் குரல்.

“இனி என்ரை தொடர்பிராது. இந்த நம்பரில நிக்கிற எல்லா நிலையங்களுக்கும் நன்றி. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

“கயல்விழி… கயல்விழி…. கயல்விழி” வோக்கியில் எல்லோரும் கத்தினார்கள். கௌரியும் கத்தினாள். கைக்குண்டுகள் வெடித்த ஓசை கேட்ட பின்னரும், நம்ப இயலாமல் கத்திக்கொண்டிருந்தாள் கௌரி. தமிழ்ப்பாவை அவளைப் பிடித்து உலுப்பிய பின்னரே அமைதியானாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்துகொண்டிருந்தது.

“என்னோடை ஒண்டா ரெயினிங் எடுத்து, ஒண்டாச் சண்டையில நிண்டவளை இவ்வளவு பக்கத்திலையிருந்தும் என்னாலை காப்பாற்ற ஏலாமல் போச்சு” இரண்டு நிமிட அமைதியின் பின் கௌரியிடமிருந்து கட்டளைகள் பிறந்தன.

“பாவரசி, உன்ரை wpK யாலை முன் வீட்டுக்கை நிக்கிறவனுக்கு குடு. செவ்வந்தி நீ சுறிபுயாலை அந்தக் கடைக்கு குடு. தமிழ்ப்பாவை நீ வோக்கியை எடு. மெயினுக்கு நிலைமையை சொல்லிக்கொண்டு வா. நாங்கள் உடைச்சுக்கொண்டு போவம்.” செவ்வந்தியின் சுறிபுயிலிருந்து ஒரு ஷெல் கூவிக்கொண்டு கடையை நோக்கிப் புறப்பட்டது.

– புலிகளின் குரல், வானோசை 10, கலை இலக்கியப் போட்டியில் மூன்றாம் பரிசு 2000. மலைமகள் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2012, வடலி வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *