இறுதி வணக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2022
பார்வையிட்டோர்: 2,516 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உடலுக்கு எந்த அலுப்பையும் ஏற்படுத்தாது ஊர்தி வழுக்கிப் போய்க்கொண்டிருந்தது, இடையிடையே வீதியோரமாக காப்பரணிலிருந்து நீண்ட துப்பாக்கி முனைகளை, அரைத்தென்னை உயர விளம்பரப் பலகைகளைக் கடந்தவாறு நெரிசலான வீதிவழியே சக்கரங்கள் விரைந்தன. பயணம் சுகமான பயணம்தான். மனம்ம்தான் கொந்தளித்துக்கொண்டேயிருந்தது.

அடையாள அட்டையைக் காட்டி, பெயரைப் பதிவு செய்து, ஊர்தியைப் பதிவு செய்து, வினோத உடைப்போட்டிக்காக அலங்காரம் செய்து மைதானத்தின் நடுவே வரும் சிறு பிள்ளையைப் பார்வையாளர்கள் பார்ப்பது போல சீருடைகளை அணிந்த வீரர்கள் பார்த்த பார்வையைக் கடந்துவந்த கொதிப்பு இன்னும் அடங்கவில்லை.

ஊர்தி தன் வேகத்தை குறைத்தது, மிருசுவில் சந்தியில் வண்ணம் பூசப்பட்டு குறுக்கும் மறுக்கும் வைக்கப்பட்டிருந்த வெற்றுக் கொள்கலன்களாலான தடையை வலமும் இடமுமாய் திரும்பிக் கடந்து வேகம் பிடித்தது. ஊர்தி கொடிகாமத்துக்கு போக முன்னரே நான் சாவகச்சேரிக்கு போய்விட்டிருந்தேன். அன்று நாங்கள் விட்டுச் சென்றது போலவா இன்றும் சாவகச்சேரி இருக்கும்? வீடுகள் உருமாறி… வீதிகள் வடிவம் மாறி… அந்த இடத்தை நான் அடையாளம் காணாமல் விட்டுவிடுவேனா? அடையாளம் தெரியாவிட்டால், மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, முன்பு நாங்கள் பயன்படுத்திய அதே வழியால் மதில்களை, வேலிகளைக் கடந்து போனால், மிகச் சரியாகப் போய்ச் சேர்வேன். தமிழரசி இல்லாவிட்டால் மட்டும்தான் இந்தச் சிக்கல், நாலு நாளின் பின்னர் வருகின்றோம் என்று சொல்லிவிட்டு, திடீரென்று இன்று புறப்பட்டுவிட்டோம். எங்கு என்ன வேலையாக நிற்கின்றாளோ, தெரியவில்லை.

திடீரென்று சுயநினைவு வந்து வீதியைப் பார்த்தேன். அடையாளம் விளங்கவில்லை.

“இது எந்த ரோடு”

“கொடிகாமம் – பருத்தித்துறை வீதி”

ஆ, சரி. தமிழரசியின் தளத்துக்கு போய்க்கொண்டிருக்கிறோம். ஊர்தியை வீதியோரமாக நிறுத்திவிட்டு, கனிமகள் இறங்கி உள்ளே போய்க் கேட்டுவிட்டு உடனேயே வந்தாள்.

“தமிழிரசியக்கா காலையில் தீவுக்குப் போய் விட்டாவாம். பின்னேரத்துக்கிடையில் இஞ்சை வந்திடுவாவாம்”

ம். என்ன செய்யலாம்? “நாங்கள் இடங்களைப் பாத்துக்கொண்டு போய் யாழ்ப்பாணத்துக்குள்ள நிப்பம். மத்தியானம்வரைக்கும் பாப்பம். தமிழரசி வராட்டா, நாங்களாகவே இடத்தை தேடுவம்’ என்றேன். கனிமகள் உள்ளே ஓடிப்போய் சொல்லிவிட்டு வந்து ஊர்தியை எடுத்தாள். வேகத்தை கூட்டினாள்.

“மெதுவாகப் போ” வரும்போது மிக வேகமாக வந்ததில், கொடிகாமத்தில் ஆனையிறவு மாவீரருக்காக அமைக்கப்பட்ட நினைவாலயத்தை காணவில்லை. ஒரு பக்க வெளிச்சுவர் மட்டுமே எஞ்சியிருந்ததாக அறிந்திருந்தேன். அவசரத்தில் அந்தச் சிறு சுவர் கண்களில் விழவில்லை . பார்க்கும் இடமெங்கும் படையினரின் தலைகளே. இவர்களின் முகத்தில் விழிக்காமல் யாருமே எந்த வேலையும் செய்யமுடியாது போலுள்ளது.

இன்னும் ஒரு கொஞ்சத் தூரம் போனால் மீசாலைப் பள்ளிக்கூடம் வரும். சூரியக்கதிர் 02 நேரம் இதற்குள் நின்ற இராணுவத்தினரை வேவு பார்க்க லெப்.கேணல் முகுந்தாவும், லெப்.கௌதமியும் சேலையைக் கட்டிக்கொண்டு, மக்களோடு மக்களாக நடந்துபோய், படையினரிடமே தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு வந்தார்கள். அதன்பின் இப்போதுதான் மீசாலையைப் பார்க்கிறேன்.

அன்று படையினர் நிற்கும் இடங்களை அறியாமல் கிளாலி நோக்கி நகர்ந்துகொண்டிருந்த மக்களை படையினர் மீசாலையில் வைத்துத் திருப்பிக்கொண்டிருந்தனர். சேலை கட்டியிருந்த முகுந்தாவும், கௌதமியும் மக்களோடு சேர்ந்து சாவகச்சேரிவரை நடந்து, கைவிடப்பட்ட எமது நிர்வாகத் தளத்தில் நின்ற மிதிவண்டியை எடுத்துக்கொண்டு படையினருக்குச் சுழித்தவாறு கொடிகாமத்தில் நின்ற எங்களிடம் வந்துவிட்டார்கள். எந்தப் பாதையால் வந்தார்கள் என்பதை அந்த நேர சண்டை நெருக்கடிகளில் மறந்துவிட்டேன். ம்.. அது ஒரு பெரிய விடயமா? கண்ணில் பட்ட ஒழுங்கைக்குள்ளாலெல்லாம் விட்டிருப்பார்கள்.

அட! அதற்குள் புத்தூருக்கு வந்துவிட்டோமா? இந்தச் சந்தியில்தானே முல்லை வீரச்சாவடைந்தாள்? புத்தூருக்கு படையினர் வந்துவிட்டிருந்ததை எதிர்பாராத மோகனா ஊர்தியைச் சந்தியிலிருந்து ஒழுங்கைக்குள் திருப்பவும், பக்கவாட்டாக அடி விழுந்தது, ஊர்தியை விட்டுவிட்டு ஆயுதத்தையும் தொலைத்தொடர்புக் கருவியையும் எடுத்துக்கொண்டு ஏனையவர்கள் புத்திசாலித்தனமாகத் தப்பி வந்துவிட்டார்கள்.

இன்னும் சில நிமிடங்களில் சாவகச்சேரி. என்னுடைய மனநிலையை என்னாலேயே புரிந்து கொள்ளமுடியவில்லை. கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிடுவேனோ என்று பயமாக இருந்தது. ஓயாத அலைகள் 03, கட்டம் நான்கு. அப்போதும் நான் சாவகச்சேரிக்கு வந்தேன். வந்த பாதைதான் வேறு. உடல் அலுங்காமல் விரையும் ஊர்தியில் இப்போது வருவதைவிட, கடலையும் காற்றையும் கிழித்தவாறு உப்பு நீர் முகத்தில் தெறிக்க, ஆயுதங்களை இறுக அணைத்தவாறு இருளில் வந்து கோயிலாக்கண்டியில் இறங்கிய பயணம் இதமானது. கடைசிவரை படகுகள் வரவில்லை . முழங்கால் அளவு ஆழ நீரில் இறங்கி நீண்ட தூரம் நடந்தோம். ஒரு அணி கைதடியைப் பிடித்து நாவற்குழியைப் பிடிக்க இன்னொன்று அரியாலை பூம்புகார், கொழும்புத்துறைவரை போக நாங்கள் மட்டுவில் கனகம்புளியடி, சாவகச்சேரி, தனங்கிளப்பு என்று பரந்து விரிய, தென்மராட்சிச் சண்டை பெரிய சண்டைதான். சாவகச்சேரி நகரைக் கைப்பற்ற ஒரு நாள் முழுவதும் சண்டை நடந்தது. நகரத்தினுள் தம்மை பலமாக நிலைப்படுத்தியிருந்த படையினரிடமிருந்து ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்கக் கொடுத்த உயிர் விலைகள்.

எல்லோரும் நாலு அல்லது ஐந்து பேர் கொண்ட சிறு அணிகளாகப் பிரிந்து கொண்டோம். பாதைகளையும் பிரித்துக்கொண்டோம். லெப்.கேணல் நிஸ்மியா, மேஜர் மாலதி, தமிழ்ச்செல்வி, ஜமுனா என்று எல்லா கட்டளை அதிகாரிகளின் குரல்களும் தொலைத்தொடர்புக் கருவியில் எம்மோடு இணைய, கட்டிடக் காட்டினுள் மறைந்திருந்த படைகளோடு மிகக் கடுமையாக மோதினோம். ஆயுதங்களுக்கு தேவையான மேலதிக ரவைகளும், கையெறி குண்டுகளையும் அளவு கணக்கில்லாமல் சுமந்திருந்தோம். எதற்காகவுமே யாருமே எமது முன்னேற்ற நடவடிக்கையை இடை நிறுத்தவேண்டிய தேவையிருக்கவில்லை. இப்படித்தான் சண்டை பிடித்தோம். அப்படித்தான் சண்டை பிடித்தோம் என்று வரையறுக்க முடியாதபடி அவ்வவ்விடத்து நிலைமை எப்படியோ, அப்படியெல்லாம் சண்டை பிடித்தோம். சில இடங்களுக்கு எறிகணைகள், சில இடங்களுக்கு சுறிபுகள், சில இடங்களில் இலகு இயந்திரத் துப்பாக்கிகள்… நிலைமைக்கேற்ற முடிவுகளை நாமே எடுத்தோம்.

சாவகச்சேரி நகரின் கட்டளை அதிகாரியாக மேஜர் கயல்விழியே நின்று கொண்டாள். பட்டாலியன் கணக்கான இராணுவத்தினரின் ஆயுத முனைகளின் மத்தியில் சாவகச்சேரி நகரைத் தன்னுடைய ஒரு பிளட்டூனை மட்டுமே வைத்துப் பாதுகாத்த கயல்வழி உண்மையிலேயே கெட்டிக்காரிதான்.

ஊர்தி சாவகச்சேரி இந்துக் கல்லூரியை நெருங்கிக்கொண்டிருந்தது கண்கள் தன்னிச்சையாகவே இடது புறம் திரும்பின. ஆ! இதுதான். இந்த ஒழுங்கைதான். இதுதான் எங்களின் காப்பரண் வரிசை. இப்படியே யாழ் நெடுங்சாலையை குறுக்கறுத்து வலது புறம் வீடுகள், காணிகள், மதில்களூடே நீண்ட காப்பரண் வரிசை அப்படியே வளைந்து வளைந்து மண்டான் வெளியின் விளிம்புகளூடாக கோப்பாய் கைதடி வெளியூடாக, செம்மணிச்சந்தி அரியாலை என்று கொழும்புத்துறைக் கடற்கரை வரை நீளும், நெடுஞ்சாலையிலிருந்து வலது பக்கம் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் கயல்விழியின் கட்டளைக் காப்பரண். மதில் பாயாமல் போவதற்கும் ஒரு பாதையுண்டு. கல்லூரியைக் கடந்து சந்திக்குப் போய், சந்தியிலிருந்து வலப்புறம் பிரிந்து செல்லும் முதலாவது தார் வீதியில் கொஞ்சத் தூரம் போய் வலது பக்க ஒழுங்கை ஒன்றால் வளைந்து வளைந்து வளைந்து போனால் ஒரு கல்வீட்டு வாசலில் ஒழுங்கை முடியும். அந்த வீட்டுக்கு அடுத்த காணியில் ஒரு சின்ன மண்வீடு மூன்று புறமுள்ள கல்வீடுகளின் மதில்களால் காணி வேலியிடப்பட்டிருந்தது. அந்தக் காணியில்தான் கயல்வழி நின்றாள்.

ஏன் அந்தச் சண்டை அப்படி நடந்தது? தப்பிவரும் வாய்ப்பிருந்தும் ஏன் கயல்விழி அந்த முடிவை எடுத்தாள்? சீ! அந்த இடத்தில் நான் நின்றிருந்தாலும் அதே முடிவைத்தான் எடுத்திருப்பேன். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் அன்றைய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்கள். மூன்று மாதம் முன்னர் இழந்த நகரை பல முறை முயன்றும் மீளப் பிடிக்க முடியாமல் இழப்புக்களுடன் தோற்றோடிய வெறியுடன் படையினர் பேயாட்டம் போட்டனர். பல் குழல் பீரங்கிகளும், ஆட்லறிகளும் மட்டுப்படுத்தப்பட்ட பகுதியை இலக்கு வைத்து தாக்கின. ஓய்வேயில்லாது வெடித்துக்கொண்டிருந்த எறிகணைகளின் அதிர்வினுள் துப்பாக்கி வேட்டொலிகள் மூழ்கிப்போயின. வானலையில் வந்த குரல்கள் நிலைமையைத் தெளிவாக்கின.

“எங்களில் ஒராள் காயம்” “ரெண்டு பேர் காயம்” “நான்மட்டும் தனியே நிக்கிறன். சமாளிப்பம். சப்போட் அனுப்புங்கோ” “ரெண்டு பேர் இல்லை சப்போட் வேணும்” சில நேரங்களில் அமைதி மட்டும் பேசியது. கயல்விழி தன்னுடைய ஆட்களைக் கூப்பிட்ட குரலுக்குப் பதிலில்லாமல் போனது. எல்லோருக்குமே நிலைமை விளங்கியது. சப்போட்! உடனடித் தேவை அதுதான். ஆனால் எங்கிருந்து… எப்படி? கட்டளைப் பீடத்துக்கும் கயல்விழிக்குமான கடைசி உரையாடல் ஆரம்பமாகியது.

“என்ரை எல்லா பொசிசனுமே ஓஃப் ஆயிட்டுது. என்ரை இடம் மட்டும்தான் என்னட்டை இருக்கு. வலம், இடம், முன்னுக்கெல்லாம் ஆள்தான் எனக்குப் பின் பாதை பிரச்சனையில்லை. சப்போட் அனுப்புங்கோ . திருப்பிப் பிடிப்பம்”

“கயல்விழி நீ பொசிசனை விட்ரோ பண்ணிப் பின்னுக்கு வா ரீமை ஒழுங்குபடுத்திக் கொண்டு போய்ப் பிடிப்பம்” கயல்விழியின் மென்மையான குரல் பிடிவாதத்துடன் பதிலளித்தது.

“விட்டால் திரும்பிப் பிடிக்கிறது கஸ்ரம். நீங்க ரீமை நான் சொல்லுற பாதையால அனுப்புங்கோ. இப்பிடியே அடிச்சுப் பிடிக்கலாம்”

உண்மைதான் விட்டால் திருப்பிப் பிடிப்பது மிகச் சிரமம். ஆனால் அதற்காக அருகிலிருக்கும் எந்த அணியையும் அப்படியே எடுத்து இங்கு அனுப்பினால், அந்த வெற்றிடம் சண்டையொன்றுமில்லாமலே பகைவரிடம் போகும். அரியாலையிலிருந்து ஒரு நாலு பேர், கொழும்புத்துறையிலிருந்து நாலு பேர், அப்படியே வண்ணத்திப்பாலத்தடி, செம்மணி, மண்டாணிலிருந்தெல்லாம் கொஞ்ச கொஞ்சப் பேர் புறப்பட்டு வந்து, ஒன்று சேர்ந்து, அணியாகி, சாவகச்சேரிக்குள் நுழைவதற்குள்…. கயல்விழியையும்கூட இழக்க நேரிடும். பின்வாங்கி வருமாறு கட்டளைப்பீடம் மறுபடி மறுபடி பணித்ததை ஏற்றுக்கொள்ள கயல்விழி மறுத்துவிட்டாள்.

“என்ரை கட்டளையை ஏற்று சண்டை பிடிச்ச பிள்ளையளாலைதான் நான் சாவகச்சேரியைப் பிடிச்சனான். இண்டைக்கும் என்ரை ரீம் முழுக்க, நான் சாவச்சேரியை விடமாட்டன் எண்ட நம்பிக்கையோடைதான் சண்டை பிடிச்சு விழுந்திட்டுது. இந்த இடத்தை விட்டு நான் வரமாட்டன்.”

அதன் பின்னரும் நிலைமையைத் தெரியப்படுத்தியவாறே தனித்து நின்று தன்னைச் சூழ்ந்து வந்த படையினரோடு சண்டை பிடித்துக்கொண்டிருந்த கயல்விழி வரவில்லை. ஒளிப்பட கருவியோடு கூடவே நின்ற மலரினி வரவில்லை. சாவகச்சேரி எமைவிட்டுப் போனது.

அரசியல் பணிக்கென யாழ்ப்பாணத்துக்குள்ளே போன தமிழரசி எல்லா வீடுகளுக்கும் போனபோது அந்தக் கல்வீட்டுக்கும் போனாளாம். தாம் வந்த புதிதில் பக்கத்துக் காணிக் காப்பரணிலிருந்து மணம் வீசிக்கொண்டிருந்ததாக கல்வீட்டு அம்மா சொன்னாராம். மேற்புறம் பழுதடைந்த நிலையிலுள்ள காப்பரணை மதிலுக்கு மேலால் எட்டிப் பார்த்துவிட்டு, தமிழரசி அனுப்பிய தகவல்தான் எமது பயணத்தின்
ஆரம்பம்.

சண்டை நடந்து முழுதாக இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. வித்துடல்கள் முழுதாகக் கிடைக்கப்போவதில்லை. எனினும், தமது வேலை கைக்குண்டுகளால் தம்மை அழித்துக்கொண்ட இருவரின் எச்சங்களும் காப்பரணுள் நிச்சயமாக இருக்கத்தானே வேண்டும். உடையின் சிறு துணுக்கை, ஒரு எலும்புத்துண்டு, ஆயுதத்தினதோ, ஒளிப்படக் கருவியினதோ மிச்சங்கள்… ஏதேனும் எஞ்சியிராதா, எடுத்து நாம் இறுதி மரியாதை செலுத்த?

– புலிகளின் குரல், வானோசை 12, கலை இலக்கியப் போட்டியில் முதற் பரிசு 2002, மலைமகள் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2012, வடலி வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *