முன் எப்போதோ வாழ்ந்திருந்த அரசமரங்களும் ந(க)ரமாகிப்போன மண்ணும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 9,504 
 
 

இன்னிக்குன்னு வானத்துல ஏராளமா நட்சத்திரக் கூட்டம். அந்தக் கோடிக்கும், இன்னொரு கோடிக்கும் கண்ணாமூச்சி ஆடுற நட்சத்திரங்க அதுக்கு அப்புறம் காணாமப் போய்க்கிட்டு இருக்குதுங்க.

ஒரு நட்சத்திரம் ஓடி ஒளிஞ்ச எடத்துலருந்து நூறு நட்சத்திரங்க மொளைக்குது. எங்க பாத்தாலும் என்னமோ மல்லிகைப் பூவத் தூவி விட்டது மாதிரி ஆகாயம் முழுசும் நட்சத்திரங்களே பரவிக் கெடந்திச்சு.

இப்படி இதுங்களே எடத்தப் புடிச்சிகிட்டு இருந்தா, நெலா வந்து அங்க எப்படி உட்கார முடியும்.

தூரத்துல, நாய்ங்க விடாமக் கொலச்சிக்கிட்டு இருக்குதுங்க. வெரட்டரதும், இளிச்சிக்கிட்டு பின் வாங்குறதும் எதுக்கோ பயந்துக்கிட்டுக் கொஞ்சநேரம் அமைதியா இருந்து சிணுங்குறதும் நடந்துகிட்டே இருந்திச்சு. நேரம் பத்து மணிக்குமேல ஆயிடிச்சி. யார் யாரோ கதவத் தெறந்து நாய்ங்கள அதட்டி மெரட்டுறதும் கேக்குது. யாரோ ஒரு பக்கி கல்ல எடுத்து வீசுனதுல, ‘வீல் வீல்’னு கத்திக்கிட்டு ஒரு நாய் தீம்பாரு பக்கம் ஓடுது. கதவத் தெறந்தவங்க யாரோ கல்லவுட்டு எறிஞ்ச பையனப் பார்த்து திட்டுனாங்க..

“சும்மா மூடிக்கிட்டு போவ முடியலயா, என்ன? அப்புறம் அதுங்க மேலவுழுந்து புடுங்கிச்சின்னா அப்பா அம்மாவக் கூட்டிக்கிட்டுச் சிவாரிசுக்கு வருவீங்க…”

பஜனைக்குப் போயி தூக்கம் பொறுக்காம பாதியிலயே திரும்பி வர்ற பயலுங்களோட தொந்தரவு பொறுக்க மாட்டாமதான், அதுங்க கொலச்சி கொதர்றதுக்குப் பல்ல இளிச்சிக்கிட்டு வந்து வந்து பாயுதுங்க…

மெயின் ரோட்டுக்கு அந்தாண்ட இருக்கிற ‘ரெட்டியார்’ கடயில சந்தடியெல்லாம் அடங்கிடுச்சு. கேஸ் லைட் எண்ணெயும் காத்தும் இல்லாம தூங்கித் தூங்கி வழியறப்பதான், செங்கா ரெட்டியாரு அதக் கவனிச்சாரு. “எல்லாம் எங்க போய் தொலஞ்சானுங்க, வௌக்குக்கு எண்ணெய் இருக்கான்னும் பாக்காம அதுங்களுக்குக் காத்தும் அடிக்காம.”

அந்த நேரத்திலும் ரெட்டியாரு கடைப் பையனுங்களக் காணோம்னு போட்ட சத்தம், லயத்துக்கும் கேட்டது. எங்கிருந்தோ ஓடிவந்த குப்பு ரெட்டியாரு, மளிகைச் சாமானுங்க பக்கம் இருந்த வௌக்க விட்டுட்டு கோப்பிக் கடயில எரியுற வௌக்க எடுத்து வெச்சிக்கிட்டு காத்து ஏத்திக்கிட்டு இருந்தாரு.

“டேய்! டேய்! நீ ஒரு ஆக்கங்கெட்ட கூவடா, நல்லா எரிஞ்சிகிட்டு இருக்கிற வௌக்க நோண்டிக் கிட்டு’ன்னு போட்ட சத்தமும் லயத்துக்கு கேக்குது!”

ரெட்டியாரு சொன்னதக் காதுலயே போட்டுக் காத குப்பு ரெட்டி, கேஸ்லைட்டுக்கு காத்து ஏத்துறதுலயே குறியா இருந்தாரு.

சிலுசிலுன்னு காத்து அடிக்க ஆரமிச்சது. ரெட்டி யாருக்குத் தெரியும். கடல்ல தண்ணி பெருவுதுன்னு. இன்னும் அரை மணி நேரத்துல கடலுக்கு நண்டு, நத்தை, குத்த போனவனுங்க திரும்பிடுவானுங்க

பத்துப் பதினஞ்சி பேராவது வந்து திமுதிமுன்னு நொழஞ்சிடுவானுங்க.

அரை மணி நேரம் ஒரு மணி நேரம், செங்கா ரெட்டியார் தேத்தண்ணி கடை அமளிப்படும்.

எட்டு மணிக்கெல்லாம் தூங்கப் போயிடுற செங்கா ரெட்டியார் மனைவி வேதம்மா, கீழ தேத் தண்ணி குடிக்க வந்த ஆளுங்க போடுர சத்தம் கேட்டு எறங்கி வந்திடுவாங்க. நண்டு, மீனு, ஊடானுங்கள்ள பாதி அங்கயே கூட வித்துப்புட்டு காசு வாங்கிக்கிட்டு போயிடுர ஆளுங்களும் இருந்தாங்க. தோட்டத்துல, நூறு ஏக்கரைத் தாண்டுனா வர்ற கடலுப் பக்கம் போயி நண் டுக் குத்துரவுங்க யாரும் இந்தப் பக்கம் வர மாட்டாங்க.

பெரும்பாலும் அவுங்கள்ளாம், சின்னத் தோட் டத்து ஆளுங்களாத்தான் இருப்பாங்க. பஞ்சுசிக் கடலுக் கும், கம்பாச்சி கடலுக்கும் போயி நண்டுக் குத்துரவங்க தான் ரவ்வானா ரெட்டியார் கடைக்கு வந்து தேத்தண்ணீ குடிச்சிப்புட்டு, கொண்டார்ற மீனு நண்டுங்கள வெல வெச்சி வித்துப்புட்டு, வீட்டுப்பக்கம் போய் சேர்வாங்க. தண்ணியிலே மேய்ஞ்சிக்கிட்டு வர்ற மீனு நண்டுங்கள வளைக்கிறதுக்கு வலைங்களும் பொந்துக்குள்ள வளையில இருக்கிற நண்டுங்கள இழுக்கிறதுக்கு தொரடுகளும் அவங்க தோளு மேல எப்பவும் இருக்கும்.

அரை மணி நேரத்துக்கு அப்புறம் ரெட்டியார் கடை அமைதியாயிடும்.

மறுபடியும் காலைல ஆறு ஆறரைக்கெல்லாம் கடயத் தெறந்துடுவாங்க.

செங்கா ரெட்டியாருக்கு ஆறோ ஏழோ பொண் ணுங்க; ஒரே ஒரு பையன்தான். ரெண்டு பொண்ணுங் கள, உள்ளூர்யே சொந்தத்துலயே தம்பிக்கும் அண்ணனுக்கும் கட்டி குடுத்துட்டாரு. அவுங்களும் சிம்பம்பாவுல (சித்தியவான்) மளிகை கடை வெச்சி பிரபலமா இருக்கிறாங்க.

ரெண்டு பொண்ணுங்கள ஊருல கொண்டு போயி கட்டிக் குடுத்திட்டாரு.

இன்னும் மூணு பொண்ணுங்களும் படிச்சிக்கிட் டும் கட வேலயில ஒத்தாசையாவும் இருக்கிறாங்க. ஒரு பொண்ணு மட்டும் இந்தத் தோட்டத்து தமிழ்ப் பள்ளிக் கோடத்துல டீச்சர் வேல பாக்குது. சனிக்கெழம மீனாட்சியம்மன் கோயில்லர்ந்து பொறப்படுற பஜனக் கோஷ்டி, மொதல்ல குப்பு ரெட்டி லயத்துக்கு போகும். அப்படி இப்படின்னு எட்டு மணி ஆயிடும் பையனுங்க வந்து சேர்றதுக்கு. அம்பது பேராச்சும் கூடிருவாங்க. அதுக்கு அப்புறம் தீவட்டி ஏத்திக்கிறது எண்ணெய் தொட்டி ஏந்திக்கிறது, அரிசிப் பைக்கு ஒரு ஆளு, மிருதங்கம் ஜால்ராவுக்கெல்லாம் ஆள் இருக்கும்.

ரெண்டாவது குத்தாமூட்டு லயம், அப்புறம் ஓட்டு லயம், அது முடிஞ்சி எஸி லயம், கடேசியா காத் தாடி லயம் அதுக்கு அப்புறம் மாட்டுக் கொட்டா லயம் முடிஞ்சா ரெட்டியார் கட வாசல்ல மங்களம் பாடிடு வானுங்க.

எல்லாம் முடிஞ்சி சுண்டலும் பொங்கலும் வாங்கிக்கிட்டு இடிச்சித் தள்ளிக்கிட்டுக் கிள்ளி கிண்டல் பண்ணிக்கிட்டு அவனவன் வீட்டுக்குப் போயி கையக் கால அலம்பிக்கிட்டு அடையறதுக்குப் பதனொன்னு பண் ணென்டு ஆயிடும்.

விடிஞ்சா ஞாயித்துக் கெழம, எளவெட்டுங்கஅதுக்கு அப்புறமும் குழு குழுவா பிரிஞ்சி நின்னு கதயிலயும் கேலியிலயும் கெக்களிக்கிற சத்தம் கேட்கும். அதுங்கள்ள, பெரும்பகுதியா 222 பீடித்துண்ட வாயில கவ்விக்கிட்டு துண்டு நெருப்பு சிணுங்கச் சிணுங்க பொகய உள்ள இழுத்து வெளிய உட்டுக்கிட்டு கதைக்குங்க. பஜனயில சுத்துனப்போ கண்ணும் கண்ணும் கண்ணடிச்ச கதங்கதான் இப்ப அங்க சினிமாப் படமா ஓடிக்கிட்டு இருக்கும். கெழக்கே தானா மேரா கடல்லேர்ந்து கௌம் புன காத்து வந்து அறஞ்சதில? திமிரோட சொழண்டு எழுந்து ‘கிறீச் கிறீச்’சுனு போட்ட சத்தம், இங்க புது லயத்துப் பக்கம் இருக்கிற சேரி மரத்துக்கு கீழ, பலகையில அடிச்சிப் போட்டிருந்த வாங்கு மேல படுத்துக்கிட்டு இருக்கிறவனோட சிந்தனையக் கலைச்சிடுச்சு.

நைனா சொன்னது இப்பவும் ஞாபகமிருக்கு. 41-ல ஜப்பான்கார சோல்ஜருங்களுக்கு, தண்ணி எரச்சிக் குடுக்கரதுக்காவதான் அங்க இருந்த கெணத்துத் தண்ணிய குடிச்சி ருசிப்பார்த்துப்புட்டு, ஜப்பான் கார கேப்டன் ஒருத்தன், தண்ணி தொட்டிய கட்டி, காத்தாடியப் பயன்படுத்தி தண்ணி எரச்சி கொடுத்தானாம்.

வெள்ளையன் திரும்பி வந்துப் பார்த்துப் புட்டு இதுவும் நல்லாதானே இருக்குன்னு விட்டுப்புட்டானாம். மாட்டுக் கொட்டா லயத்துக்கு கூட பேரு முன்ன அது இல்லயாம். காத்தாடி லயம்ன்னுதான் பேராம்.

அந்த லயம் ரொம்ப பழசா 20-ல கட்டுன லயமா இருந்து குடியிருக்கிறதுக்கு பொருத்தமானது இல்லன்னு சஞ்சி தொர கம்ப்ளேய்ன் பன்னுதுனால, மிக்கேல் தொர கார புது லயத்தக்கட்டி எல்லாரையும் அங்க குடி வெச்சிட் டார்னும் நைனா சொன்னாங்க.

பெரிய ரோட்டுக்கு இந்தாண்டப் பக்கமே புது லயத்துக் கட்டி எல்லாரையும் குடி வைச்சிட்டதுனால நைனாவும் அங்க குடியிருந்தவங்களும் வெச்சிக்கிட்டு இருந்த மாடு ஆடுங்கள அங்கேயே வச்சி வளக்க அது மாட்டுக் கொட்டா லயமா எல்லாருக்கும் ஆயிடிச்சி.

புது லயத்துக்கு ஆளுங்கள கொண்டாந்து வச்ச துக்கு அப்புறம், மிக்கேலு தொரதான் ஏழு மலை அண்ணன, மாட்டுக்கு ரெண்டு வெள்ளிமாசத்துக்குன்னு மாடு மேய்க்க நியமிச்சாராம்.

புது லயத்துக்கு ஆளுங்கள கொண்டாந்து வச்செ மிக்கேலு தொரதான் காய்கறி கேவுறு பயிறு செய்யறதுக்கு லயத்துக்கு முன்னாடி இருந்த கோச நெலத்த ஒதுக்கிக் கொடுத்தாராம்.

மிக்கேலு தொரயும் மேமுவும் எப்பவாச்சும் தானாமேரா (லுமூட்)வுக்கு போவும் போது, நைனை வோட காய்கறித் தோட்டத்துல இறங்கி நெலக் கடலச் செடி, ‘கேவுறு’ (கேழ்வரகு) பப்பாளிச் செடிங்க எல்லாத்த யும் பாத்தியெடுத்து வச்சிருக்கிற அழகப் பாத்துப் புட்டு ரொம்பவே பாராட்டிட்டுப் போவாங்களாம்.

நைனா எப்பவும் கோமணத்த இழுத்து சொருவிக்கிட்டுதான் தோட்டத்துக் கொல்லைய கொத்த இறங்குவாரு. கொல்லயில எறங்கிட்டாருன்னா கொரஞ்சது ரெண்டு மூனு மணி நேரமாச்சும் நைனா மம்மட்டிய போட்டிக்கிட்டு நிப்பாரு.

தொரயவும், மேமுவையும் பாத்தப் புட்டா ருன்னா நைனா தலயில சுத்தி வைச்சிருக்கிர தலப்பாவக் கழட்டி இடுப்புல கட்டி கோமணத்த மறச்சிக்கிடுவாரு. தோட்டத்துலன்னு இல்லாம எங்கப் பாத்துப் புட்டாலும் எப்டி… இருக்குது… பெருமாளுக்கான்னு முழு பேரையும் சொல்லி வெசாரிப்பாராம் மிக்கேலு தொர.

தொரயும் மேமுவும் நைனாவோட கொல் லைக்கு வந்து எரங்குன விஷயம் தெரிஞ்ச வொடனே, புது லயத்துப் பசங்க ஒரு பத்துப் பதினஞ்சி பேரு வேடிக்கப் பாக்க வந்து கூடிடுவாங்க. அந்தப் பசங்களப் பாத்தா மிக்கேலு எல்லாருக்கிட்டயும் கண்டிப்பா கேப்பது, “எல்லாம், படிக்கப் போவுதான்னு”தான்.

சப்போக் தோட்டத்துக்கு மிக்கேலு தொர வந்து பத்துவருஷத்துக்கும் மேல ஆயிடிச்சி. நைனான்னு இல்ல, தோட்டத்துல இருக்கிற பழய ஆளுங்க யாரப் பாரத்துப் புட்டாலும் மிக்கேலு பேர் சொல்லித்தான் கூப்புடுவாரு. சப்போட்டாரு, கொடக்காரு, கொட்டக் கொட்டாரு, கொண்டையா, மன்னாரு, விஸ்வநாதன், ஒட்டுக் கட்டி பெருமாளுன்னு? கூப்புடுவாரு மிக்கேலு தொர.

பஜனை இப்ப எஸி லயத்துக்கு வந்திருச்சி. மிருதங்கமும் ஜாலராவும் தெரிக்குது. பூமியில் மானிட ஜென்மமடைந்து ‘தியாகராஜ பாகவதர் பாட்டு’ ஏழுமல அண்ணன் ஊட்டுப் பையன் வேலாயுதத்தோட கொரலுதான் அது.

என் வயசுதான் அவனுக்கும்.

பஜனையில சாமி பாட்டுதான் பாடனும்னு இருந்த மொறய தங்கவேலு வாத்தியாருதான் மாத்து னாரு. அதுக்கு முன்னாடி சுப்பா ரெட்டி லயத்துக் கொண் டையா தான், பஜனைப் பொறுப்புங்களப் பாத்துக்கிட்டு இருந்தாரு. ரொம்ப காலமாப் பாத்துகிட்டு இருந்து கண்ணு பார்வை கொஞ்சம் தெளிவில்லாமல் போன வொடனே எளவட்டுங்க பஜனை நடத்த ஆரமிச் சிட்டாங்க.

சுப்பா ரெட்டி லயத்து கொண்டையாவெல்லாம் அந்தக் காலத்துல மச்ச சுப்பையா வாத்தியார் கிட்ட நாடகம், பாட்டு, கூத்துக் கத்துக்கிட்டவங்க.

கிட்டப்பாவோட தசரத ராஜகுமாராவை கொண்டையா பாடினாருன்னா ஒரு லயமே தூக்கிக் கிட்டு போயிடும். பங்கோர் மீனுங்கள ஏத்திக்கிட்டு மொதோ லோரி எரைச்சலோட, சிம்மம்பா பக்கம் போக ஆரமிச்சிடுச்சி. வெடியிர வரைக்கும் அரை மணி நேரத் துக்கு ஒரு லோரி ஈப்போ, கோலாலம்பூர், சிங்கப்பூருன்னு போயிக்கிட்டே இருக்கும்.

கடலுக் காத்து வாசமெல்லாம் போயி விடியிர வரைக்கும் மீனு கவுச்சி தான் அந்த வட்டாரம் முழுசும் வீச ஆரம்பிக்கும்.

விடிஞ்சதும் சப்போட்டாரு மீன் வக்குல சைக்கிள்ள வச்சி கட்டிக்கிட்டு லயம் சுத்த வந்திடுவாரு. நைனாகிட்ட ஒக்காந்து ஒரு வாயிக்கு வெத்தலை வாங்கிப் போட்டிக்கிட்டுப் பத்துப் பதினொரு மணிக்கெல்லாம் மூட்டயக் கட்டிக்கிட்டு வீட்டுக்கு போயிடுவாரு.

“என்னா சப்போட்டாரே, புது மீனு நல்ல மீனை யெல்லாம் எங்கெங்கயோ கொண்டுபோய் வித்துப்புட்டு வெறும் நாத்த மீனையும் அவிச்ச மீனையும் கொண்டாந்து எங்க தலயில கட்டிப்புட்டு போறதுதான் ஒம் வேலை யாப்போச்சி”ன்னு லயத்துல எப்பவும் யாருக்கிட்டயாவது வசவு வாங்குறது சப்போட்டாருக்கு பொழப்பா போயிடிச்சி.

அப்பதான் நைனாவ தொணக்கி வைச்சிக்கிட்டு அப்படிப் பேசரவங்கள வைவாரு சப்போட்டாரு.

“இங்க பாரு பெருமாளு! இந்தப் பொம்பளங்க நாக்குல நரம்பில்லாம பேசுராளுங்க பாரு”.

“யாண்டி! ஓம் புருஷங்காரனவுட்டு புது மீன வாங்கியாந்து ஆக்கித் துண்ணு. யாரு வேணாங்கிறது.”

“போவாண்டி ஓம் புருஷங்காரன் இங்கிருந்து துல்லோமூரோவுக்குப் போயி, கடல்லருந்து புடிச்சிக்கிட்டு வந்து குடுப்பான் அதுக்கு அப்புறம், அடுப்புல சட்டிய வச்சி ஆக்கித் துண்ணு. புருஷனுக்கும் பங்கு வெய்யி! யாரு வேண்டாங்கிறது. இவளுங்களுக்கு வாயெல்லாம் கொளுப்பு ஏறிப் போயிக் கெடக்குது”.

“அப்புறம் ஏண்டி, அப்புறம் ஏண்டி… நாத்த மீன வக்குல வந்து ஆராயிர”.

“வாய்ல கொறச்சலு இல்லடி ஒங்களுக்கெல் லாம்”னு சொல்லிக்கிட்டே மீன தராசுல வெச்சி நிறுத்துக் குடுப்பாரு.

“தொ பாரு! சொல்லிப்புட்டேன். சம்பளம் போட்ட ஒடனே சப்போட்டாங்கிட்ட மீனு வாங்கித் துண்ணக் காச சல்லி பாக்கி வெக்காம பைசல் பண்ணிப் புடனும். ஆமா! கண்டிசனா சொல்லிப் புடரே. ஆமா!”

ஏறக்குறைய எல்லா வீட்டுக்கு முன்னயும் சப் போட்டாருக்கிட்ட பேரமும் நடக்கும், சப்போட்டாரோட ஓனிங்கும் இருக்கும்.

நைனா தோட்டத்துல வேலயா இருந்தாலும் தேடிக்கிட்டுப் போயி வாயக்குடுத்துக் கதயவெல்லாம் வாங்கிக்கிட்டு அவருக்கு உள்ள மனக் கொறச்சலச் சொல்லிட்டு, வாய்க்கு இன்னொரு தரம் வெத்தலய வாங்கிக்கிட்டுதான் போவாரு, சப்போட்டாரு.

சப்போட்டாரு மேல ஒடம்புல சட்ட போட்டு யாரும் பாத்ததில்ல. வெறும் ஒடம்போடதான் எப்பவும் பாக்க முடியும். “ஆமா பெருமாளு கோலானம்பூர்ல கட்டிக் குடுத்த பொண்ணு எப்படி இருக்குதாம்

“ஏதும் நல்லது கெட்டது. சேதி ஏதும் வந்துச்சா? சரி, சரி போயிட்டு பெறவு வரேன்”.

சைக்கிள்ள, காலத்தூக்கிப் போட்டுகிட்டுத் திரும்பி மீனு வக்குலப் பாத்தப்ப திருக்க மீனுல ரெண்டும் ஒரே ஒரு சொறாக் குட்டியும் தான் இருந்திச்சு.

ஏறி உக்காந்து பெடல சுத்திவுட்டு மெதிச்சிக்கிட்டே வீட்டுப்பக்கம் போவாரு.

பஜனமெயின் ரோட்டுல நடந்து ரெட்டியார் கடப்பக்கம் போயி மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போயி சேந்து பத்து நிமிசமிருக்கும்.

நைனா லாந்தர் வௌக்க புடிச்சிக்கிட்டு மாட் டுக் கொட்டாயிலர்ந்து திரும்பிவந்தாரு.

லாந்தர் வெளிச்சத்துல, சேரி மரத்துக்கு கீழ ஒக்காந்திருக்கிறத பாக்காமயே போயி சின்னக்காவ பேர் சொல்லிக் கூப்புடறாரு.

“லச்சிமி இன்னிக்கு ஒரு மாதிரி இருக்கிறதப் பாத்தா, வெடியரதுக்குள்ள கண்ணுப் போட்டாலும் போட்டிடும்.

எதுக்கும் வெளி அடுப்பப் பத்த வச்சி கஞ்சியப் போட்டுடு”ன்னு சின்னக்கா கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தவரு “பஜனக்கிப் போன குட்டிப் பையன் வந்துட் டானா இல்லையா. அவன் வந்தான்னா கஞ்சிய கொஞ் சமா ஆறவுட்டு குடுத்தனுப்பு.”

ஒரு சின்ன காத்து வந்து வீசிட்டுப் போனப்போ, வேலிக்குப் பக்கத்துல இருக்கிற முருங்க மரத்திலிருந்து பிஞ்சிப் பூவுங்களோட வாசன மூக்குல நொழஞ்சிடுச்சி. பச்சையும் தொவர்ப்பும் கலந்த வாசன.

எப்பவும் கரு கருன்னு கரும் பச்சயா அடர்த்தி யோட முருங்க மரம் தள
தளன்னு இருக்கும்.
அஞ்சாறு வருஷத்துக்கு முந்தி தானா மேரா கள்ளுக் கடைக்கிப் போயிருந்தப்ப தெரிஞ்சவுங்க யாரோ குடுத்தாங்கன்னு கௌயக் கொண்டாந்து ராவு பூரா தண்ணித் தொட்டியில ஊரப் போட்டு வச்சிருந்து, மறுநாளு புது லயத்துக் கொல்லயில ஆழமா குழியெடுத்து நைனாதான் ஊணிவெச்சி ஏழுமலை அண்ணன் வூட்டுப் பக்கம், கத பேசிக்கொண்டிருந்த என்னை மெனக்கெட்டுக் கூப்புட்டு, முருங்கக் கௌக்கி மொதோ தண்ணிய ஊத்த வெச்சாரு.

அது இப்ப தள தளன்னு வளந்து வீட்டுக்கு யார் வந்து கேட்டாலும் சலிக்காம கீரயக் குடுத்துக் கிட்டு இருக்குது.

எங்க வரிசயில இருக்கிற வீடுங்கள்ள யார் வீட்டுல முருங்கக் கீர சாம்பார் வச்சிருந்தாலும் எங்கக் கொல்ல கீரன்னா அது வாசனயிலேயே தெரிஞ்சிடும். அந்த முருங்க மேல நைனாவுக்கு ஒரு சமயத்துல பெரிய வெசனமே வந்து, அந்த மரத்த இண்டு இணுக்கு வெடாம வெட்டி முட்டுலப் போட்டு கொளுத்திப்புடரேன்னு கொதிச்சுப்போனாரு.

அம்மா கூப்புட்டு வெச்ச சத்தத்துலதான் அந்தத் திட்டத்தக் கைவுட்டாரு நைனா.

“யாரோ குடுத்தாங்கன்னு கொண்டாந்து நட்டுப்புட்டு இப்ப பச்சப் புள்ளயாட்டம் வளந்து நிக்கிறத வெட்டி முட்டுல போடரேன்னு சொல்ரயே, உனக்கு என்னா கூரா கெட்டுப் போச்சி”ன்னு அம்மா போட்டு வச்ச சத்தத்திலதான் நைனா முருங்க மரத்த பொலி போட்டுப் பொதக்கிறத கைவிட்டாரு. நைனாவோட கோவம் வேற எதுக்காவயும் இல்ல. தோட்டக்காட்டுலயும் சுத்துவட்டாரத்துலயும் முருங்க மரங்க பூவும் காயுமா செழிச்சப்போ, எங்கத் தோட்டத்துல இருக்கிற முருங்க மட்டும் வெறுங் கீரையோட இருந்தது நைனாவுக்கு என்னமோ மாதிரி ஆயிடிச்சி.

அடுத்த தரம், கண்டிப்பா மரத்துல காய்ங்க தொங்கும். நம்ம வீட்டு சாம்பார்லயும் முருங்கக்கா மெதக்கும்னு நைனா சொன்னாரு. நம்ம மரத்துல காய்ங்க காய்ச்சாதான் நம்ம வூட்டுச் சாம்பார்ல இனி காய்ங்கன்னு நைனா சபதமே செஞ்சிட்டாரு.

அப்படிச் சபதம் வெச்சதோட இல்லாம நைனா காரியத்தலயும் எறங்கிட்டாரு.

யார் சொல்லி வச்சாங்களோ அல்லது நைனா வுக்கு இருக்கிற அனுபவமோ தெரியாது.

வீட்டுல இருக்குற எல்லாருமே பாத்துக்கிட்டு இருக்கும் போதுதான், நைனா அந்தக் காரியத்தை செஞ்சாரு. முருங்க மரத்த சுத்தி அரை அடியில பள்ளம் தோண் டுன நைனா, அதுல நாலஞ்சி துண்டுங்க எல் ஜி பெருங் காயத்த பொதச்சி வச்சாரு.

நைனா செஞ்ச இந்தக் காரியத்தப் பாத்த அம்மா கூட சொன்னாங்க.

“இந்த ஆளுக்கு பயித்தியம் கியித்தியம் ஏதும் புடிச்சிகிடுச்சா?!”.

வீட்டுல இருந்த ரெண்டு அக்காங்களும் அண்ணியும் அம்மாவுக்கும் நைனாவுக்கும் நடந்த சின்ன சண்டய சிரிச்சிகிட்டே ரசிச்சாங்க.

முருங்கக் கீரய இணுக்கியெடுத்து மொத மொதலா வீட்டுல சமயல் செஞ்சப்போ, வீடு பூராவும் நெறஞ்சி கெடந்த வாசனய வீட்டுல உள்ள யாருமே மறக்காம இருந்த சம்பவம் மாதிரியே தான், எங்க தோட்டத்துல இருந்த முருங்க மரம் மூணு அடி நீளத்துக்கு இலையும் பூவும் தெரியாம, காய்ச்சுத் தொங்குனப் போவும் அதப் பறிச்சு சமைச்சப்போவும் எல்லார் மனசுலயும் அந்தச் சந்தோசஷம் நெரம்பி இருந்திச்சு.

நைனாவுக்குச் சந்தோஷம் தாங்கல.

எங்க வரிசலயும், அதுக்கு அடுத்த வரிசயலயும் இருந்தவங்க வீடுங்களுக்கெல்லாம் பேர் சொல்லி பேர் சொல்லிக் கூப்புட்டுக் கொடுத்தாரு.

பள்ளிக்கொடமெல்லாம் ஒடஞ்சி எந்த நேரத் துலயும் லட்சிமி கண்ணு போட்டுடும்.

லச்சிமிக்கு இது பத்தோ பதினொன்னாவதோ ஈத்து. இத்தன வயசாகியும் அதோட ஒடம்பு அப்போ பாத்த மாதிரி ஒடயாம பாரியாவேதான் இருந்திச்சு.

நைனா அதுக்குத் தேவைப்படுற புல்லுக்கட்டைப் பக்கத்துலயே போட்டு வந்திருந்தாரு.

வாளியில வெச்சு கொண்டு போன தவட்டுக் கஞ்சி ரொம்ப பதமான சூடா இருந்திச்சு.

கலக்கி வெச்ச ஒடனே, ஒரு முங்கு முங்கிடுச்சு. ‘ம்மான்னு..’ ஒரு சத்தம் குடுத்துப் படுத்துக்கிடுச்சி. பக்கத்துலயே நைனா மூட்ட மெல்லாம் போட்டு வச்சி சூடு காமிச்சிக்கிட்டு இருந்தாரு.

ராவுலயும்….ஈ..ய்ங்க தொல்ல குடுக்கிறதோட, அப்படியே அப்பிக்கிட்டு ரத்தத்த உறிஞ்சிடும். மாட் டுக்குப் பக்கத்துல இருக்கிற மனுசாளயும் இந்த ஈ…ய்ங்க விடாதுங்க.

பட்டுன்னு ஒன்னு போட்டா, கையில பச்ச ரத்தம் செதறும். ரத்தம் குடிக்கிறதுல வேற எதுக்கும் சளச்சதுங்க இல்ல. பக்கத்துல நெருப்பு இருந்தா ஈ..ய்..ங்…க தொல்ல இருக்காது. இந்த மாதிரி நேரத்துல நைனாவத் தவிர வேறயாரும் லச்சுமிகிட்ட நெருங்க முடியாது.

அன்னிய ஆள் யாரும் கிட்டத்துல நெருங்குனா நல்ல பாம்பும் படமெடுத்து சீர்றது கணக்கா புஸ்… புஸ்…னு லச்சிமி சீரறது நூறு அடிக்கும் அந்தாண்ட வரைக்கும் கேக்கும்.

ரெண்டு மூணு தரம் எழுந்து எழுந்து படுத்துக்கிடுது லச்சிமி. நைனா கிட்டத்துல போயி அதும் மொகத்த கழுத்தயெல்லாம் தடவித் தடவி குடுக்கிறாரு.

அதுங்கிட்ட இருக்கிற கெட்ட குணம், கன்னு வெளியில வரும்போது எழுந்து நின்னுக்கிடும்.

டக்குன்னு எழுந்துக்கிச்சி.

கெடேரின்னு நைனா சொன்னாரு.

இனி லச்சுமிக்குச் சிஷ்ருசையெல்லாம் செஞ்சி முடிச்சிட்டுதான் வீட்டுக்கு வருவாரு.

நாகரெத்தின அக்கா இருந்த வரைக்கும் அது தான் நைனாவுக்குப் படுக்கயத் தட்டிப் போடரது, எச்சிக் குவள பிள்ள மார்க் சுருட்டு தீப்பெட்டி எல்லாத்தயும் எடுத்து வெக்கிறது எல்லாமே.

இப்போ அண்ணி வந்ததுல இருந்து அவுங்கதான் எல்லாத்தயும் எடுத்து வெச்சிடுவாங்க.

போனவாரம் அண்ணிக்கு திடீர்னு ஒடம்புக்கு முடியாம போயி ரெண்டாவது தடவையும் பிள்ள தங்காம போயி, தானா மேரா ஆஸ்பத்திரியில சேத்துட்டாரு அண்ணன்.

வீட்டுல வந்து, ஆஸ்பத்திரியில டாக்டர் ரொம் பவே கோவிச்சுக் கிட்டதா சொன்னாரு.

ஒடம்பு ரொம்ப பலவீனமா இருக்கிற பொண் ணுன்னு போன தடவ இப்படி ஆனப்பவே சொல்லித்தான அனுப்புனோம். இப்ப மறுபடியும் கொண்டாந்து சேர்த்திருக்கியேன்னு மேனா டாக்டர் (டாக்டர் மேனன்) ரொம்பவே கோவிச்சுக்கிட்டாருன்னு அண்ணன் சொன்னாரு. தானாமேராவுல கிஸ்டண்ணன் டாக்டர் வீட்டுலயே தங்கி வேலப் பாரத்துக்கிட்டு இருந்தாரு.

டாக்டர் குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் இருந்த நெருக்கம், அவுங்க வூட்டுத் தேவை எதுன்னாலும் எங்க வூட்டு ஆளுங்களுக்கும் அழைப்பு வந்து போயி கலந்துகிட்டு வருவாங்க. மேனன் டாக்டர் வீட்டுல, ரெண்டு பொம்பளைப் புள்ளங்க; ஒன்னு மணி இன் னொன்னு லட்சுமி. இதுங்க ரெண்டு பேரையும் கிஸ்டண்ணன் தான் வளத்தாரு.

தானா மேரா பெரிய ஆஸ்பத்திரியில பெரிய டாக்டரா இருந்தாரு. அதனால எங்க குடும்பத்துல எல்லாரையும் அவருக்குத் தெரியும்.

அதுமட்டும் இல்லாம சியாம்ல போய்ச் செத்துப் போன எங்க ஏழுமல பெரியண்ணன், மேனா டாக்ட ருல்லாம் டிஸ்டிரிக் இண்டியன் புட்பால் டீமுல வௌ யாடிக்கிட்டு இருந்ததுனாலயும் எங்க குடும்பத்தோட மேனா டாக்டருக்கு நல்ல பழக்கம் இருந்திச்சு.

அந்த அக்கறயிலதான் அண்ணன கூப்புட்டு வெச்சி, கொஞ்சம் அதிகமாவே திட்டி அனுப்பியிருக் கிறாரு.

ஆஸ்பத்திரியில கொண்டு போயி அண்ணிய சேர்த்திட்டு அண்ணிக்கு இப்படி ஆயிடுச்சின்னு வந்து வீட்டுல எல்லாரும் இருக்கும் போது அண்ணன் சொன்னப்போ, நைனா தோளு துண்ட எடுத்து வாயில வச்சிப் பொத்திகிட்டு ரொம்ப நேரம் அழுதாரு. வீட்டுல இருக்கிற கிருண்ணம்மாக்காவையும், பத்மாக்காவையும், அண்ணனையும் நைனா ரொம்பவே பேசினாரு. “வேலடா, அந்தப் பொண்ணுக்கு ஓயாம ஒழியாம இந்த வூட்டுல வேல.

அதது வேல வுட்டு வந்தொடனே தின்னுப்புட்டு மாடுங்க மாதிரி தூங்கி எழுந்திரிக்குதுங்க. இந்தப் பொண்ணு மட்டும் நெஞ்சொடிஞ்சி போற மாதிரி வேல வேற! என்னா நடக்கும். இதான நடக்கும். கடவுளு ஏண்டா இப்படி எப்பப் பார்த்தாலும் இந்தப் பொண்ண மட்டும் சோதிக்கிரா”ன்னு சொல்லி அழுதப்ப, வீட்டுல இருக்கிற எல்லாருக்கும் அழுக வந்திருச்சி.

சாயங்காலம் தொங்கவீட்டு ஏழுமல அண்ணன் மாடுங்கள ஓட்டியாந்து விட்டுட்டு வீட்டுக்கு உள்ளார வந்து அண்ணி விஷயத்றைக் கேள்விப்பட்டதா சொல்லி, சமாதானப்படுத்திட்டுப் போனதுக்கு அப்புறம்தான் அதுவரைக்கும் இருந்த தொயரம் ஒடஞ்சி, கொஞ்சம் கொஞ்சமா வழக்கத்தக்கு வந்துச்சு வீடு. மாடு ஓட்டர தொங்கவூட்டு ஏழுமல அண்ணன் எங்களுக்குத் தூரத்து ஒறவு.

அவுங்களும் சித்தூரு, வேம்பாக்கம் நாகலாபுரம்தான். ஒருவகயில எல்லாருக்கும் மாமா மொற.

பெரியண்ணன் சியாமுல போய் செத்துட்டதா சேதி வந்ததுக்கு அப்புறம், இவரையே அண்ணன் அண் ணன்னு கூப்புட ஆரமிச்சி அதுவே பின்னால பழக்கமாயிடிச்சி.

இன்னும் ரெண்டு வாரத்துல சந்திரஹாசன் நாடக ஒத்திக எல்லாம் முடிஞ்சிடும்.

இந்த வருஷம் தீபாவளிக்குத் தெடல்ல மேடை கட்டி நாடகம் போடுவாங்க.

தங்கவேலு வாத்தியாரு சுங்கை வாங்கி தோட்டத்துல இருந்து வந்து ஒவ்வொரு நாளு ராத்திரியும், கௌப்புல வச்சிதான் நாடக ஒத்திக நடத்துவாரு.

அவருகூட ஒத்தாசயா எங்க தருமன்ணனும், பேங்க் கெராணியும் இருப்பாங்க.

பேங்க் கெராணி, ஹார் மேனியம் போடுவாரு.

ஆறு மாசமா நடக்குர ஒத்திக இது.

ஏழுமல அண்ணன் மகன் வேலாயுதம் பெரியக் காவூட்டுப் பசங்க திருக்குலாமணி தேவராஜா, ஏகாம் பரத்து மாமா வூட்டு பசங்க, குணசேகரன், நடராஜா சுப்பையாவெல்லாம் அதுல இருந்தாங்க. எனக்குதான் அதுல்ல ராஜபார்ட் சந்திரஹாசன் வேஷம் கட்ட தங்கவேலு வாத்தியாரு பலமான சிபாரிசு செஞ்சாரு. வசனமெல்லாம் எழுதிக்குடுத்துச் சோதன வெச்சதுல என்னையே சந்திரஹாசனா நடிக்க தேர்ந்து எடுத்தாங்க.

எனக்கு ஜோடியா முருகையாவோட தங்கச்சி சித்திரைதான் இளவரசியா நடிச்சது.

சந்திரஹாசன் நாடகத்துல, ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா’ பாட்டெல்லாம் பாடி ரெண்டு பேரும் நடிச்சோம்.

அந்த வருஷம் தீவாளிக்கி, தோட்டத்துத் தெடல்ல சந்திரஹாசன் நாடகம் நடக்கிறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னயே சுத்துவட்டாரம் பூரா அதே பேச்சா இருக்கிறதா தங்கவேல் வாத்தியார் கிட்ட வந்து சொல்லிக் கிட்டுப் போவாங்க. தோட்டத்துல பஜன எடுக்கிற எல்ல எளவெட்டுப் பசங்களும் சந்திரஹாசன் நாடகத்துல வர்ற கதா பாத்திரங்கள்ள இருந்தாங்க.

கிளப்புக்கு முன்ன தெடல்ல பெரிய மேடை கட்டியிருந்தாங்க. ஆயிரம் பேருக்கு மேல தெடல்ல ஒக்காந்திருந்தாங்க. நாடகம் ஆரமிக்கிறதுக்கு முன் னாடியே மிக்கேல் தொரைக்கும் மேமுவுக்கும் மாலை மரியாதையெல்லாம் செஞ்சி முன் வரிசயில உக்கார வச்சாங்க.

நாடகத்துக்கு இட வேளையில ஆயர்தாவாவி லிருக்கிற அன்னம்மாக்காவும் கோலாலம்பூர்லருந்து இங்கயே வந்திட்ட நாகரெத்தின அக்காவும், எனக்கு மோதிரமெல்லாம் போட்டு வாழ்த்துனாங்க.

நாடகத்துல, பபூன் வேஷம் போட்டவரு கெங்கன் அண்ணாமல அண்ணன்தான்.

இதுக்கு முன்ன பங்கோர் மச்ச சுப்பையா வாத்தியார் வந்து இங்க சொல்லிக் கொடுத்த நாடகத்துல எல்லாம் பபூன் வேஷம்னா கெங்கன் அண்ணாமல அண்ணன்தான். இப்ப சந்திரஹாசன் நாடகத்துலயும், அண்ணாமல அண்ணனுக்கு தான் பபூன் வேஷம்னு அடிச்சி சொல்லிட்டாரு தங்கவேலு வாத்தியாரு.

‘தாரன் தாரன் தைல முட்டை
நானே திம்பேன் நூறு முட்டை’னு மேடையில நையாண்டி பண்ணிக்கிட்டே அண்ணாமல அண்ணன் மேடையில நடிக்கும் போதெல்லாம் நாடகம் பாக்க வந்தவங்க வயிறு வலிக்க ரசிச்சு சிரிச்சாங்க.

இளவரசனா நடிச்ச எனக்கு ஒரு அசரீரப் பாட்டு. அதுக்காவ சுங்கை வாங்கித் தோட்டத்துல இருந்து சந்திரய்யாங்கிற பெரிய பாட்டுக்காரரக் கூட்டிக்கிட்டு வந்த தங்கவேலு வாத்தியாரு, ‘சத்தியமே லட்சியமாய் கொள்ளடா, செல்லடா’ன்னு பாட வெச்சாரு.

நாங்கள்ளாம் ஒரு பதினஞ்சி இருவது பேரும் தங்கவேலு வாத்தியார் கால்ல விழுந்து வணங்கி ஆசிர்வாதமெல்லாம் வாங்கிக்கிட்டுதான் மேடைக்கு மேல ஏறினோம். எல்லாருக்கும் ஜனங்க ரொம்ப ஆரவாரம் செஞ்சி மாலையெல்லாம் போட்டாங்க.

தீபாவளிக்கு மூணு நாள் இருக்கும் போது நடந்த நாடகமா!? தீம்பாரு வேலக்காடு, ரெட்டியாரு கடன்னு எங்கப் போனாலும் சந்திரஹாசன் நாடகத்தப் பத்தியே பேச்சாதான் இருந்துச்சு.

நான் எங்கப் போனாலும், ‘வாங்க இளவர சரே!’ன்னு கேலியும் கிண்டலும் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.

அந்த வருசம் தீபாவளி, சந்திரஹாசன் நாடகத் துல நடிச்ச எளவெட்டத்துக்கெல்லாம் பெரிய மதிப்பும் மரியாதையும் எங்க தோட்டத்துல கெடச்சிப்போச்சி.

தீவாளி அன்னிக்குக் காலயில இருந்தே ரோட் டோரத்துல இருக்கிற பெரிய அரச மரத்தாண்ட இருந்து கூட்டம் கூட்டமா தோட்டத்துல ஜனங்க, சிம்மம்பா (சித்தியவானுக்கு) போற பஸ்ல ஏறிப்போய்க் கிட்டு இருந்தாங்க.

‘என்னடா வெசயம்’னு வெசாரிச்சுப் பாத்தப்ப தான் தெரிஞ்சது ஜனங்க எல்லாம், தியேட்டர்ல ‘மல்லிகா’ படம் பாக்கப் போயிட்டு வந்துக்கிட்டு இருந்தது.

ஆறு மாசம் ஒரு வருஷம் வரைக்கும் ஜெமினி கணேசனும், பத்மினியும் பாடின, ‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே’ என்ற பாட்டுதான் எல்லார் வாயிலர்ந்தும் வந்திச்சு.

எங்கூட நாடகத்துல நடிச்ச எளவெட்டுங்க கூட, பத்மினியையும் ஜெமினியையும் சொல்லிச் சொல்லி வருத்தத்துல இருக்கிறானுங்க.

கிருஷ்ணம்மாக்காவ, சீம தொர தோட்டத்துல கட்டிக் குடுத்துட்டாங்க. பத்மாக்காவுக்கு சிங்கப் பூர்லருந்து மாப்பிள வந்தப்ப, வீட்டுல கொஞ்சம் பிரச் சனயாயிடிச்சி. அதுவும் கிருஷ்ணமக்கா கல்யாணத் தன்னிக்குத்தான் அந்தப் பிரச்சினை பொயலு மாதிரி எழுந்து அடங்கினிச்சி. பத்மாக்காவ ரொம்ப தொலவுல சிங்கப்பூர்ல கொண்டுபோயி கட்டிக்குடுக்கிறதுல, சின்னக்கா புருஷனுக்கும் நாகரெத்தின மக்கா புருஷனுக்கும் அவ்வளவா திருப்தி இல்லேன்னு ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தத கேட்டுட்டு வந்த சின்னக்கா மவன் கோபாலு ஏதோ வௌயாட்டுத்தனமா நெனச்சிகிட்டு அம்மா கிட்ட வந்து சொல்லிப்புட்டான்.

அம்மா தாண்டுன தாண்டவத்தப் பாத்த ரெண்டு அக்காவுங்களுக்கும் மனசு சங்கடமாப் போயிட்டது. “என்னடா நெனச்சானுங்க என்னிய நான் செங்கம்மா! எம் பொன்னுங்களுக்குப் புருஷன் சிங்கப் பூர்லே பார்ப்பேன். தஞ்சாவூர்லே போய்ப் பார்ப்பேன். பொத்திக்குனு வந்து கல்யாணத்த மட்டும் பாத்துப்புட்டுப் போகச் சொல்லுங்கடி அவங்கவங்க புருஷனுங்கள. அது போதும் எங்களுக்கு”ன்னு சாமி வந்து ஆடுனது மாதிரி நின்னாங்க அம்மா.

நைனா ஊருக்குப் போயி, நல்ல மாதிரி சேர்ந் துட்டதா எழுதன லட்டர் வந்திருக்குது. அட்ரஸ் சித்தூர் ஜில்லா, நாகலாபுரம் போஸ்டு, வேம்பாக்கம்னு எதுவும் மாறாமக் கொறையாம அப்படியே இருந்திச்சு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *