முதல் நிகழ்ச்சி மேடம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 18, 2024
பார்வையிட்டோர்: 1,080 
 
 

(superiority complex)

குணசீலத்துக் கதை – 6

‘திறத்துக்கேத் துப்புறவாம் திருமாலின் சீர்’. என்ற நம்மாழ்வார் வாக்குப்படிக், குணசீலம் பெருமாள் மனநலத்தைக் காக்கும் பெருமாள் என்பது பிரசித்தம். அந்த வகையில் மனநலம் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் பற்றிய நிகழ்வுகளை ஊர், பெயர் எல்லாம் மாற்றி, கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

வாசகர்களுக்குக் கட்டுரையாய் சொல்வதை விட கதாபாத்திரங்கள் மூலம், மனநல பாதிப்புகளையும், அதனை எப்படிச் சரி செய்து கொள்ளலாம் என்ற விழிப்புணர்வையும் ஊட்டுவதே இந்தக் குணசீலத்துக் கதைகளின் நோக்கம்.


“சப் எடிட்டர் சனாவிடமிருந்து அழைப்பு என்றதுமே, மனதில் கிலேசம் படர்ந்தது ஐஸ்வர்யாவுக்கு.

“ஹலோ…! சொல்லுங்க மேடம்…!” – என்று வழக்கமாக. உயர் அதிகாரிகளிடம் சொல்லும் ஐஸ்வர்யா, “ஹலோ…” என்பதுடன் நிறுத்திக் கொண்டாள்.

‘ஊருக்கு ஊர் தன் கூடவே அழைத்துப்போய், இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசத்தின் அனைத்து சூட்சுமங்களையும் கற்றுக் கொடுத்து அவள் திறமையை வளர்த்துவிட்டதோடு, சனா’விற்குச் சப்-எடிட்டர் பதவியைப் பரிந்துரைத்ததும் நான்தானே?’- என்கிற சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வலுவாய்த் தலைகாட்டியதே அதற்குக் காரணம்.

‘நாம இருக்க வேண்டி இடத்துல, சனா இருக்காளே?’ ; என்ற ஆதங்கம் வந்தது.

கூடவே, ‘ குடும்பத்தில் வேறு சப்போர்ட் ஏதும் இல்லாத நீ, உன் கைக்குழந்தை, ஓரளவு வளரும் வரை அருகிலிருந்து கவனமாக வளர்க்கவேண்டும் என்பதற்காகத்தானே, உனக்கு வந்த சப் எடிட்டர் பதவியை  நீ விட்டுக் கொடுத்தாய்? ;

ஒன்றை இழந்தால்தானே இன்னொன்றைப் பெற முடியும். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது தவறல்லவா?

நீ விருப்பப்பட்டுத்தானே ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ வாங்கிக்கொண்டு, வீட்டிலேயே அமர்ந்து, டேட்டா எண்ட்ரி, எடிட்டிங், மேட்டர் பப்ளிஷிங் எல்லாம் செய்துகொண்டிருக்கிறாய்…!” – அவள் மனசாட்சி ‘டக்-டக்’ கென்று பொட்டிலடித்தாற்போல் பட்டியலிட்டுக் காட்டுவதும் கூடக் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது.

இத்தனை நாள்  உனக்குப் ஃபீல்டு ஒர்க் போட்டார்களா? இல்லையே, வேறு வழியில்லாமல்தானே இன்று உனக்குப் போட்டிருக்கிறார்கள். உன் வீட்டுக்கு மிக அருகில் இருக்கிறது பேருந்து நிலைய டெர்மினஸ். பஸ் ஏறினால் பத்துப் பதினைந்து நிமிடங்களில் கலெக்டர் ஆபீஸ். மேட்டரும் ஒன்றும் சென்சிடிவ் இல்லை. குறை தீர்க்கும் நாள் நிகழ்ச்சியை லைவ் ரிலே செய்து, ஜனங்களுக்கு விழிப்புணர்வூட்டுகிற ப்ரோக்ராம். சொல்லப்போனால் உனக்கு மிகவும் பிடித்த ஏரியா இது ? எதற்கு இப்படி அழுது வடிகிறாய்…?.;

நீ ஏற்றுக் கொண்டாலும் , ஏற்காவிட்டாலும் இன்று சனாதான் உன் சுப்பீரியர். சனா அசைன் செய்யும் வேலையைச் செய்யவேண்டியது உன் கடமை..” – இப்படியெல்லாம், பற்பலக் கோணங்களில் ஐஸ்வர்யாவின் மனம் ஓயாமல் உணர்த்திக்கொண்டே இருந்தது.

யதார்த்தங்கள் அனைத்தையும் மீறி, உயர்வு மனப்பான்மை என்கிற (superiority complex). ஐஸ்வர்யாவின் மனக் குறைபாடு, அவளைக் கழிவிரக்கத்தால் கலங்கச் செய்தது.

‘கலெக்டர் ப்ரொக்ராம் என்பதால் காலத்தில் செல்ல வேண்டும்!’ – என்றத் தொழில் தர்மம் உந்த, அவசர அவசரமாய்ப் புறப்பட்டாள் ஐஸ்வர்யா.

குழந்தையை ‘Creche’ என்ற குழந்தைகள் காப்பகத்தில் கொண்டு போய் ஒப்படைத்தாள்.  

பேருந்து நிலையம் விரைந்தாள்.

காலியாக நின்றது பேருந்து.

முன் படிக்கட்டில் ஏறினாள் ஐஸ்வர்யா.

முதல் இருக்கையில் ஒரே ஒரு முதியவர் மட்டும் அமர்ந்திருந்தார்.

பொதுவாக இந்த டெர்மினஸ்ஸில் கூட்டம் ஏறாது. அடுத்தடுத்த நிறுத்தத்தில்தான் ஏறும்.

தற்செயலாக, அந்த முதியவரைப் பார்த்தவுடன் ஐஸ்வர்யாவுக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை.

“சார் வணக்கம்.. நான் உங்க ஸ்டூடண்ட்…” –  எதிரில் நின்றுக் கைக் கூப்பிய மங்கையைக் கண்டு தானும் பதிலுக்குக் கூப்பினார்,

கிட்டத்தட்ட 38 வருடங்கள் ஆசிரியர் பணியாற்றி, ஐந்தாண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற வரதராஜன் சார்தான் அவர் .

“அப்படியா ரொம்ப சந்தோஷம்மா…!” –  உட்காருங்க…” – என்றார்.

அமர்ந்ததும், “உங்க பேரும்மா..?” – எனக் கேட்டார்.

“நீங்களா கண்டுபிடிக்க முடியுதாப் பாருங்க சார்…!” – உரிமை எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாய் மலர்ந்த புன்னகைக் கலந்து பேசினாள் அவள்.

புன்முறுவலுடன், நெற்றிபொட்டில் வலது ஆள்காட்டி விரலால் கீறியபடியே, யோசனை செய்தார் வரதராஜன்.

தன்னுடைய 38 வருஷப் பணி அனுபவத்தில், இது போல் உரிமை எடுத்துக் கொண்டுக் கலகலப்பாகப் பேசக்கூடிய, தைரியமான, தன்னம்பிக்கை மிகுந்த, மிடுக்காய் நடந்துகொண்ட, சாதனைகள் பல புரிந்த மாணவிகளின் பெயர்களை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தார்.

நினைவில் எழுந்தப் பெயர்களையெல்லாம்   தனக்குள் அடுக்கடுக்காய்ச் சொல்லிப் பார்த்தார். 

உயரம் தாண்டுதலில் மாநில அளவில் முதலாக வந்த அகிலா. 

ஓவியப் போட்டியில் மாநில அளவில் வென்ற ஓவியா.

சாரணர் இயக்கத்தில் ஜனாதிபதி விருது வாங்கிய   உத்ரா.

யோகாவில் உலக அளவில் சாதனை புரிந்த சுபானு.  இப்படிப் பலப்பலப் பெயர்கள் நினைவுக்கு வந்தன.

கீழுதட்டைக் கடித்துக் கொண்டேத், தீவிரமாக யோசித்தார். ம்ஹூம்.. கண்டுபிடிக்க முடியவில்லை.

“நினைவுக்கு வர மாட்டேங்குதுமா…!” – தோல்வியை ஒத்துக் கொண்டார் வரதராஜன்.

அவளும் விடுவதாய் இல்லை. “ஒரு ‘குறிப்பு’க் கொடுக்கிறேன் சொல்றீங்களா சார்..! என்றவள், பதிலுக்கு காத்திராமல், “சீக்கிரம் உடையேன்…!” – என்று சொல்லிவிட்டுக் கலகலவென்று சிரித்தாள்.

“ஏய்…! சங்கரலிங்கம் மகள் ஐஸ்வர்யாவா.?  என்னமா வளந்துட்டே நீ. கொஞ்சம் கூட அடையாளமே தெரியலமா, அடேயப்பா…!” – என்றபோது, கண்கள் மலர்ந்து, பூரித்து, மகிழ்ச்சிக் கலந்த வியப்பைப் அவர் முகம் பிரதிபலித்தது.

மேலும் அவளின் பெற்றோர்கள், அவள் பணி…, அவள் கணவர், வாரிசுகள்… என்று நிறையப் பேச வாயெடுத்தபோது, ஐஸ்வர்யாவின் கைப்பேசி, சிணுங்கியது.

“சார் ஒரு நிமிஷம்” என்று சொன்னவாரே, கைப்பேசியின் தோல் மூடியைத் திறந்தாள்.  

‘தன்னிடம் பேசியபோது  மலரச் சிரித்த முகம், கொதிநீர்ப் பட்ட நெகிழிப் பை’ போல், வதங்கி வாட்டம் கண்டதையும் கவனிக்கத் தவறவில்லை, வரதராஜன். 

 ‘ஹெட் ஃபோன்’  பொருத்திக் கொண்டு ஹலோவினாள் ஐஸ்வர்யா.

“மேடம்…!”

“ம்..!”

“கட்டம் கட்டமாக ஒவ்வொரு நிகழ்வையும் க்ளிக் பண்ணி, அப்டேட் பண்ணிக்கிட்டே இருங்க மேடம் ..! உடனுக்குடன் ஆன் லைன்ல உள்ளீடு செய்ய வசதியா இருக்கும்.!” – என்றாள் சனா.

“என்னோட தற்போதைய நிலை தெரிஞ்சும், எனக்குப் ஃபீல்டு ஒர்க் போட்டதோட, எனக்கே ஜர்னலிசம் சொல்லிக் கொடுக்கறாளா இவ…? இவளை…!” – கருவினாள் ஐஸ்வர்யா. கட் செய்தாள் தொடர்பை.

வரதராஜனுக்கு இப்போது நினைத்தாலும், “சீக்கிரம் உடையேன்…!” – என்று மழலை மொழியில் கத்திய அந்தச் சின்னக் குட்டி ஐஸ்வர்யாதான் நினைவுக்கு வந்தாள்.

காட்சிப் படிமங்கள் கண் முன் வர, சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

பள்ளியின் ஆண்டு விழா, ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா, என மும்பெரும் விழாவிற்குக் கோலாகலமாக ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

நாடகம், நாட்டியம், பாட்டு, பேச்சு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு; நூலகம், கம்ப்யூட்டர் டட்டன்-லேப், இஞ்சினியரிங்-ப்ளாக்… எனப் பள்ளியின் வளாகங்களில் செயல்திறனுக்குத் தயாராகிக்கொண்டிருந்தார்கள்.

நாடகத்துக்கு ஒத்திகை பார்த்துப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தவர்கள், தருமை சிவா என்றத் தமிழ்ப் பண்டிதரும், வரதராஜனும்.

சிலப்பதிகாரத்தில், கண்ணகி வழக்குறைத்த காதையைக் காட்சிப்படுத்தும் சிறு நாடகக் காட்சிதான்.

ஐஸ்வர்யா, பாண்டிய மன்னன் வேடமிட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். வசந்தகுமாரி.

கண்ணகியாய் தலையைப் பரத்திக் கொண்டு வந்து ஆவேசமாக எதிரில் வந்து நின்றவள் வழக்குறைத்தாள்.

‘தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின்…

‘தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின்… இமையவர் வியப்ப புள் உறு….
தேரா மன்னா.. செப்புவது உடையேன்..” –

என்றுத் தடுமாறித் தடுமாறி, மீண்டும் மீண்டும் தேரா மன்னா…” – என்பதிலிருந்துத் தொடங்கித் தொடங்கி, ஒப்பித்துக் கொண்டிருந்தாள்.

‘இவளை வைத்து எப்படி நிகழ்ச்சியை முடிக்கப் போகிறோமோ?’ -என்ற கவலையும், அச்சமும், வரதராஜன் , தருமை சிவா இருவர் முகத்திலும் அப்பியிருந்தது..

வசந்தகுமாரியோ, முடிப்பதாகத் தெரியவில்லை.

காலம் கடந்து கொண்டிருந்தது. பேருந்துக்குச் செல்ல நேரமாகிவிட்டது.

வரதராஜன் சார் செல்லும் பேருந்தில்தான் ஐஸ்வர்யாவும் செல்வாள்.

ஐஸ்வர்யா தவித்தாள். வரதராஜன் சார் தவிப்பையும் பார்த்தாள்.

அடுத்த முறை தேரா மன்னா செப்புவது உடையேன் என்றதும், ஒரு கனமும் தாமதிக்காது, ‘சீக்கிரேம் உடையேன்…” என்று கத்திவிட்டாள் ஐஸ்வர்யா.

அவள் அப்படிச் சொன்ன கனம், வசந்தகுமாரி கையிலிருந்த சிலம்பைப் போட்டு உடைத்துவிட்டு, அவள் உட்பட அனைவருமே வாய்விட்டு, உரத்துச் சிரித்துவிட்டனர்.

ஐஸ்வர்யாவின் பள்ளி நாட்களை அசைப்போட்டு மகிழ்ந்த வரதராஜன், அந்த இனிய நாட்களைப் பகிர்ந்துகொள்ள நினைத்து அவளைப் பார்த்தார். முகம் இருள அமர்ந்திருந்த ஐஸ்வர்யாவைத் பார்த்து அதிர்ந்தார்.

“ஏன் ஐஸ்வர்யா டல் ஆயிட்டே…? ஏதாவது ப்ராப்ளமா?”

“ம்…”விழிகளை உயர்த்தாமலே பதில் சொன்னாள்.

“படிக்கும்போது, ஜர்னலிஸ்ட் ஆகணும்னு சொல்லுவியே.. உன் கனவு..?”

“நான் இப்போ ஜர்னலிஸ்ட்டாத்தான் இருக்கேன் சார். இப்போக்கூட நான் கலெக்டர் ஆபீசுக்குத்தான் லைவ் ரிலேவுக்குப் போறேன்…”

“அப்படியா, ரொம்பச் சந்தோஷம்…” – என்றவர், குடும்பம், உத்யோகம், என்று எல்லாவிவரங்களையும் கேட்டு அறிந்தார். இப்படியேப் பேசப் பேச இயல்பாகிவிட்டாள் ஐஸ்வர்யா.

“சார்.. நீங்க இந்த ஊர்லதான் இருக்கீங்களா? பணி ஓய்வுக்குப் பின் என்ன செய்யறீங்க சார்? என்றெல்லாம் நிறையக் கேள்விகள் இருந்தாலும் கேட்டு அறிந்து கொள்ள நேரம் இடம் கொடுக்கவில்லை.

கலேக்டர் ஆபீஸ் இறங்கு…? என்றுவிட்டு பீ….ப்’ – என்று விசிலடித்தார் கண்டக்டர்.

“நான் வரேன் சார்…!” – என்று அவரசரமாகத் தன்னுடைய முகவரி அட்டையைத் திணித்தாள் ஐஸ்வர்யா.

“நானும்.. இறங்கறேன் ஐஸ்வர்யா…?” – என்றபடி அவள் தந்த அட்டையை வாங்கி சட்டைப் பையில் செருகிக் கொண்டார்.

கலெக்டர் அலுவலகத்தில், குறிப்பிட்ட வளாகத்தை அடையும் வரை வரதராஜன் தன் தற்போதைய விபரங்களை ஐஸ்வர்யாவிடம் சொல்லிக் கொண்டே வந்தார்.

ஆசிரியர் சங்கத்தில் ஒரு ஆபீஸ் பேரராக இருப்பதாகவும், ஆசிரியர் நலத் திட்டம் சார்ந்து ஒரு மனு தர வந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

வளாகத்துக்குள் நுழைந்ததும், ஐஸ்வர்யாவின் அடையாள அட்டையைப் பார்த்துவிட்டு, மட்ட பத்திரிகையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட முன் வரிசைக்குப் போகுமாறு வழிகாட்டினார், சேவகர்.

வரதராஜனிடம், மனு கொடுப்பதற்கான, பதிவு எண் என்ன? என்று கேட்டு, அந்த எண் எழுதப்பட்ட நாற்காலியில் சென்று அமரவும் சொன்னார்.

“சார் என்கூட வரட்டும்..” – என்று இடைமறித்துக் கேட்டுக்கொண்டாள் ஐஸ்வர்யா..

அவர் பணிபுரியும் அந்தப் பத்திரிகையின் பெயரைக் கண்டதும், ‘நமக்கேன் வம்பு…” என்று என்று அனுமதித்து விட்டார். சேகவர்.

முன் வரிசையில் ஐஸ்வர்யாவின் அருகாமை நாற்காலியில் அமர்ந்தார் வரதராஜன்.

கலெக்டர் உள்ளே நுழைய, வரதராஜன் உட்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.

வரதராஜன் தன் அருகில் நிற்கும் ஐஸ்வர்யாவின் காதைக் கடித்தார். “கலெக்டர், என் ஸ்டூடண்ட்டாக்கும்.” என்றார்.

ஐஸ்வர்யாவுக்குள் ஆயிரமாயிரம் வேதிவினைகள் ரசவாதம் நிகழ்ந்தன. “அப்டியா சார்…!”

நிகழ்ச்சியை இறை வணக்கம் தொடங்கும் முன், டவாலியிடம் என்னவோ சொல்லி அனுப்பினார் கலெக்டர். கலெக்டரின் பார்வை, வரதராஜன் மேல் விழுந்தது.

“இறை வணக்கம் முடிஞ்சவுடனே, உங்க டோக்கன் நம்பர் 12 ம் நம்பர் நாற்காலில, உங்களை ஒக்காரச் சொன்னாங்க கலெக்டரய்யா..! முதல் வரிசை பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்பப்பட்டிருக்காம்!” – என்று பணிவுடன் சொன்னார் டவாலி.

“இறைவணக்கத்துக்கு அப்பறமென்ன, இப்பவே அய்யாச் சொன்னபடி என் இடத்துக்கு போயிடறேன்…!” – என்று இடத்தை விட்டு நகர்ந்தார் வரதராஜன்.

நகர்ந்து கொண்டே, அவள் பக்கம் திரும்பி, “ஐஸ்வர்யா, மீட்டிங் முடிஞ்சதும் பிற்பாடு பேசுவோம், என் ஸ்டூடண்டாக்கும் கலெக்டர்! ; இருந்தாலும் அவர் இப்போ கலெக்டர். நான் மனு கொடுக்க வந்தவன்.  அவர் உத்தரவுக்குக் கட்டுப்படறதுதானே நம் கடமை..” – என்றபோது நெகிழ்ந்தாள் ஐஸ்வர்யா.

அதோடு நிறுத்தவில்லை.  கலெக்டர் என் ஸ்டூடண்ட் மட்டுமில்லை. நான் பெற்ற ஒரே மகன் அவர்.”

இப்போது ஐஸ்வர்யாவின் தன்முனைப்புத் தவிடு பொடியானது.

இறை வணக்கம் தொடங்கியது.

புகைப்படம், மற்றும் வீடியோக் காட்சிகளோடு  ‘முதல் நிகழ்ச்சி இறை வணக்கம் மேடம்’ என்று இணைத்து சனாவுக்குத் தகவல் அனுப்பினாள் ஐஸ்வர்யா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *