மாற்றம் மட்டுமே மாறாதது!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 1, 2023
பார்வையிட்டோர்: 3,476 
 

அய்யனாரு கோயிலை ஒட்டிய நிழல் மரத்திற்கு அடியில், கூட்டமாய்ப் பெண்கள் அமர்ந்திருந்தார்கள். நேரம் இன்னும் இருப்பதால் முனைக் கடையில் பாடிய எம்.ஜி.ஆர். பாடலை ரசித்துக் கொண்டு அமர்ந்து இருந்தார்கள். ஆனாலும் மனசுக்குள் எப்போதும் கும்மியடிக்கும் உற்சாகம் இல்லை.

அய்யாவுச் செட்டி வயலில் இன்று கடைசி அறுப்பு. கடைசி அறுப்பு என்றால், இந்த வருடத்தின் கடைசி அறுப்பு மட்டுமில்லை, காலம் காலமாய் பலபேரின் வயிறு நிறைத்த, வளம் கொழித்த அந்த பூமிக்கே அது கடைசி அறுப்பு. நினைக்கும் போதே பாதம் சில்லிட்டது.

தூக்குச்சட்டியைத் துணியில் கட்டி தோளில் தொங்க விட்டுக் கொண்டு வரப்பு மேட்டில் நடக்க, நாலாவது கல் தொலைவில், அய்யாவு செட்டி வயல் வந்து விட்டது. மூக்கில் மூக்குத்தி மின்ன, வள்ளியம்மை அத்தாச்சி புளியமர நிழலில் அமர்ந்திருந்தது.

“வந்துட்டீங்களா.. தம்பி இப்பத்தான் வந்து கேட்டுட்டு போனான்”

கிழக்கு சூரியனைக் கும்பிட்டு, களத்து மண்ணை தொட்டு,கண்ணில் ஒற்றிக்கொண்டு ஈர மண்ணை நெற்றியில் இட்டுக் கொண்டது. மகமாயிடம் கதிர் அரிவாளை வாங்கி முதல் கீற்றாய் முற்றிய நெற்கதிரை அறுத்து வரப்பில் போட்டது.

அதன் பிறகு எல்லோரும் தத்தம் பணிகளில், லயிக்கத் தொடங்கினர். கதிருக்கும் அரிவாளுக்கும் இடையே நடனமாடிய அவர்களின் விரலின் வேகம்,காற்றில் நாணல் நடனமாடுவது போல்,நெளிவு சுளிவாய் இருந்தது.

“எலே பேச்சி, குயில் தொண்டைக்காரி. இன்னைக்கு ஏன் இப்படி பேச்சத்தவளா வேலை செய்யுற? வழக்கம் போல ஒரு பாட்டை எடுத்து விடேன்” கூட்டத்தில் மூத்த மகமாயி, செல்லமாய்க் கிசுகிசுத்தாள்.

“ப்ச்… போக்கா, பாட்டு பாட மனசு ஒப்பல”

“ஏன்வே.. உன் புருசன் விறகு கட்டையில நிமுத்தி போட்டானா நிமித்தி?”

அனைவரும் நமுட்டலாய் சிரித்தார்கள்.

“எனக்கு முப்பத்தி நாலு வயசாகுது.. அய்யாவு ஐயா களனிக்கு பதினாறு வயசுல இருந்து வேலைக்கு வர்றேன்.. பதினாறு வயசுல தான் செம்பியத்துல இருந்து, இங்க வாக்கப்பட்டு வந்தவ.. எனக்கு இந்த களனிதான் இன்னொரு ஆத்தா வூடு”

அவளுடைய மௌனத்தின் வலி புரிந்தது எல்லோருக்கும். காற்றில் நடனமாடிய அவர்களின் கதிர் அரிவாள்கள் ஒரு நொடி நின்று நிதானித்தது.

மகமாயி பெருமூச்சு விட்டாள்.

“சரி வுடு, நாம என்ன களனி வேலையேவா செய்யணும்னு உத்தேசம்? என் தம்பி அழகு, என்னை சேலத்துக்கு கூப்பிடறான். அங்க மரவள்ளிக் கிழங்கு கூழாக்குற பேக்டரி இருக்காம். நித்தமும் இருநூறு ரூவா சம்பளமாம். நாளயெண்ணி காசு வாங்குட்டு போறது. எதுக்கு இந்த வெயில்ல காயுற பொழப்பு?”

மகமாயி சமாதானமாய் சொன்னது.

“ஆங் அதென்னமோக்கா எங்கவூட்ல ரெண்டு பசு நிக்குது, முறையா அதுகளுக்கு தண்ணிகாட்டி, தீவனம் போட்டா அந்த அந்த வரும்படியே தலைக்கு போய் காலுக்கு வரும்”

தன்னுடைய பொருளாதாரம் ஒன்றும் தாழ்ந்து போய்விடவில்லை என்று சிவகாமி அக்கா சமாதானம் பேசியது.

“ம்க்கும் எனக்கென்ன நோக்காடு? எங்க வீட்டு ஆம்பள கிளப் கடை போட்டுருக்கு. அதுக்கு ஒத்தாசணை பண்ணா கிடக்குது” வலங்கியம்மா வாய் கொள்ளாமல் பூரித்தது.

ஆனால் அவர்கள் எல்லாருக்கும் தெரியும். இந்த வேலைகளைப் பற்றிய அவர்களுக்கு இதற்கு முன்னும் தெரியும். கழனி வேலையில் பாடுபட்டு அடைந்த சுகம், இந்த வேலைகளில் நிச்சயமாய் தங்களுக்குக் கிடைக்காது என்பதை அவர்கள் நன்கறிவார்கள்.

இங்கே அவர்கள் காசுக்காக மட்டும் வரவில்லை. நினைத்ததைப் பேசி, நினைத்ததைப் பாடி, பழைய சோற்றை பங்கிட்டு குடித்து, வரப்பில் நிழலாறி, பம்பு செட்டில் குளித்து,காலாற கதை பேசியபடி நடப்பது அலாதி சுகம். இன்னொரு பக்கம் கதிரறுத்து, நெல் தூற்றி,புடைத்து, சலித்து,குவிந்து கிடக்கும் நெல்மணிகளைப் பார்க்கும் போது கிடைக்கும் ஆத்ம திருப்தி வேறு வேலைகளில் கிடைக்குமா?

அய்யாவு செட்டி இறந்து பல வருசமாகிறது. குடும்ப நிர்வாகம் அத்தாச்சி கையில்தான். பிள்ளை இல்லாத சொத்து அத்தாச்சியின் தம்பி மகன்களின் பெயரில் மாறிப் போக, கழனியை இன்று கூறு கட்டி ப்ளாட்டுகளாக்க அச்சாரம் போடப்பட்டுவிட்டது.

“ஏன் அத்தாச்சி இப்படிச் செஞ்சீங்க? செட்டி இருக்க மட்டும் பூமிய சாமியா நினைச்சாகளே உம்ம காலத்துலயே இதெல்லாம் கண்ணுல காணணுமா..” பெரியதனக்காரர்கள் கேட்டபோது அத்தாச்சி விரக்தியாய்ச் சிரித்தது.

“ஊருல பாதி நிலம் எம்படது. நம்ப நட்ட செடியா இருந்தா நாலு காய் பறிக்கலாம். நாம பெத்த புள்ளையா இருந்தா ரெண்டு அடி அடிக்கலாம். என்னதான் உறவுமுறையா இருந்தாலும், நம்பள காபந்து பண்றதே புண்ணியம்னு நினைக்கறாங்க. அப்படி இருக்கயில ஒத்த பொம்பள நான். என் சொத்து பத்தைக் காட்டி மெய்சாட்டியம் பண்ணிக்கவா முடியும்?”

வாஸ்தவம் தான். ஊர் எல்லையில் முக்கால் பங்கு கழனி அய்யாவு செட்டி உடையது தான். அவர்களே நிலத்தை கொடுக்கத் துணியும் போது, மற்றவர்களைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா? எல்லாருக்கும் காசு ருசி எடுத்துக் கொண்டது. சிங்கார முதலி புளியம் தோப்பும் விலையாகி விட்டது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் அந்த ஊரில் வேளாண்மை இருந்ததிற்கான அடையாளமே இருக்காது.

என்னதான் சமாதானமாய்ப் பேசிக் கொண்டாலும், எல்லாருடைய மனசிலும், பசுத்தோல் போர்த்திய வயல்காடு இனி இல்லை என்ற நினைப்பே வேதனையில் விம்ம வைத்தது.

ஆயிற்று, அன்றைய வேலை. ஓங்கி நின்ற கதிர்களை அறுத்து வரப்புகளில் கிடத்தியாயிற்று. பூமி வயிற்றுச் சுமை இறக்கிய கர்ப்பிணிப் பெண்ணாய் தாய்மை பொங்க பூரித்து நின்றது தன்னுடைய கடைசி மகசூலில்.

அத்தனை பேருக்கும் கூடுதலாய் இருநூறு ரூபாய் கூலி தந்தது அத்தாச்சி. வாங்கும் போது கை நடுங்கியது இவர்களுக்கு. நிச்சயமாய் காசு பணம் உசத்தியாய்த் தெரிவதில்லை, மனசு செத்து போகும் போது.

“ஏதோ என்னால ஆனது.. எங்கயாவது போய் நல்லா இருங்க” குரல் கமற அத்தாச்சி சொன்னது.

“நாங்க நல்லாத்தேன் அத்தாச்சி இருப்போம். ஆனா, நம்ம பூமி நல்லா இருக்காதே. கோரைப் புல்லை காட்டி கன்னுக்குட்டியை கூட்டிட்டு போற மாதிரி, பணக்கற்றையை காட்டி நம்ம மனுசங்களை கூட்டிட்டு போயிட்டானுக. உங்க வயலோட நின்னு போயிடல இந்த விவகாரம். மேல வீட்டு புளியம்தோப்பு விலையாகிருச்சு. நித்தமும் இதப்போல செய்திதான் வந்துகிட்டே இருக்கு. பயமாயிருக்கு அத்தாச்சி. பய புள்ளைக குந்த குடிசை இல்லாம எல்லாத்தையும் வித்துட்டு போயிடும்க போல பேச்சி” நிஜமான வருத்தத்தில் சொன்னாள்.எல்லோரும் மௌனமாக நடந்தார்கள். வரும்போது தூக்குச் சட்டி கனத்தது. இப்போது காலி பாத்திரம் கனத்தது.

“ஏக்கா,நீ கொண்டாற கருவாட்டு குழம்பும், கடஞ்ச கீரையும் எனக்கு கிடைக்காது தானா?” துர்கா கண்ணில் நீர் தழும்பக் கேட்டாள்.

“எலே பேச்சி,செத்த நில்லுவே. நாங்களும் வந்துட்டோம்ல”

கிழக்காலே புளியம்தோப்பில் இருந்து காமாட்சி, பர்வதா எல்லோரும் இவர்களை நோக்கி ஓடி வருவது தெரிந்தது. நெற்றியில் கைவைத்து அவர்களைப் பார்த்தபடி காத்திருந்தார்கள்.புளியம்காட்டில இன்னைக்கு கடைசி புளிஉலுப்பு.. நூறு ரூபாய் தரவே அழுகும் மேலவீட்டுக்காரம்மா, இன்னைக்கு முந்நூறு ருவா கூலி, ஆளுக்கு மூணு கிலோ புளி வேற அவர்களின் பூரித்தமடி,புளியின் சுவையைக் கசிய விட்டது.

“வெள்ளிக்கிழமை கருக்கல்ல பட்டணத்துல இருந்து மரம் அறுக்கிற மிஷினு வருதாம்ல.. நாலே நாள்ல நம்ம புளியம்காடு, பொட்டக்காடா ஆயிடுமாம்” நினைச்சாலே வயிறு எரியுது. காமாட்சி அக்காவின் கண்கள் அனிச்சையாகக் கசிந்தது.

“நீ ஏக்கா அழுவற? உன் புருசன் செத்தப்பயே அழுவாதவ நீயி..” காந்திமதி நையாண்டி செய்தாள். ஆனால் இன்று ஏனோ காமாட்சிக்கு கோபம் வரவில்லை.

“இந்த எடக்கு மடக்குப் பேச்சை கேட்டுத்தான் என்ன மாதிரி பொம்பளைக எல்லாரும் சோகத்தை மறந்து இருப்போம். இனி இந்தப் பேச்சுக்கு நான் எங்க போவேன்?”

எல்லோருடைய பையும், கையும் நிறைந்து இருந்ததுஆனால் அவர்கள் மனசு மட்டும் அமைதியாகவே இல்லை.

“ஏக்கா நாலு நாள்ல அத்தனை மரத்தையும் வெட்டிருவானுகளாம் அந்த நாய்ங்க. அவனுகளால ஒரு மரத்தையாவது இந்த நாலு நாள்ல வளத்திக் காட்ட முடியுமா? அவன் கையில பாம்பு புடுங்க… எங்காத்தா சொல்லும் செடி கொடிக்கெல்லாம் உசுரு இருக்காம். இத்தனை உசுருகளை ஒட்டு மொத்தமா சாகடிக்க போறானுகளே பாவி மக்க” பர்வதா அழுதாள்.

“ஏக்கா நாமெலாம் ஒண்ணாச் சேர்ந்து போய் கேட்டா இதைத் தடுக்க முடியாதா?” சிவகாமி அப்பிராணியாய் கேட்டாள்.

“அடிப் போடி இவளே, எம் புருசன் என் சின்னாத்தா மகளையே ரெண்டாவதா கட்டிக்கிட்டான். அதையே என்னால தட்டிக் கேட்க முடியல. இதைப் போய் கேட்க சொல்ற?” மகமாயி சொல்ல, துக்கத்தை மறந்து எல்லாரும் “கொல்’லென்று சிரித்தார்கள்.

எல்லாரும் அமைதியாக நடந்தார்கள். ஊர் எல்லையில் ஐயனார் கோயில் வந்தது. கம்பீரமான அய்யனாரு குதிரையின் மீது, கண்களை உருட்டி அமர்ந்திருந்தார். அனைவரது கால்களும் நிதானித்தன.

“ஐயா சாமி, அய்யனாரப்பா மழைக்கு கூட பள்ளிக்கூடப் பக்கம் நாங்க ஒதுங்கினதில்ல. ஆனா எங்களுக்குப் புரியுற விசயம், அந்த படித்த சீமான்களுக்கு புரியாம போச்சே. விவசாய பூமிய வீடு கட்ட தந்துப் புட்டு, உசிரோட மனுசங்களை பிச்சுத் திங்க போகுதா நம்ம சனங்க? அவங்களுக்குப் புத்தியூட்டு அய்யனாரப்பா”

“அய்யா எல்லைச்சாமி, நாங்க ஏழைங்க. அதிலும் பலமத்த பொம்பளைங்க. ஆனாலும் ஏதாவது செய்யணும்னு மனசு ஆலா பறக்குது. ஆனா என்ன செய்றதுன்னு தெரியல. ஏதாவது நீர் செய்யுங்க காகித பணத்தை விட, பூத்து, காய்ச்சு,நம்பள தாங்கி நிற்கிற பூமி ரெம்ப ரெம்ப உசந்ததுன்னு எங்க மக்களுக்கு புரிய வைங்க”

கண்ணீர் மல்க எல்லோரும் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள்.

அதன் பிறகு அவர்கள் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. இனம் புரியாத மௌனம் அவர்களைச் சூழ்ந்து இருந்தது.

“எங்கக்கா போறீங்க?” வீட்டுக்குப் போவாம நடை திசை மாறுவதை பார்த்து காமாட்சி கேட்டாள்.

“நாமெல்லாம் சின்னப்பா டாக்கீஸ்ல படம் பாக்கப் போறோம். மனசு ரெம்ப விசனமா இருக்குல” பேச்சி சொன்னது.

“அதுவும் நல்ல யோசனை தான்.. என்ன படம்கா..”

“எம்.ஜி.ஆர். படம் தாண்டி. விவசாயி படம் இன்னைக்கு கடைசின்னு போட்ருக்கான். நமக்கும் இன்னைக்குத்தானா கடைசி?” சிவகாமி வருத்தமாய் சொன்னாள்.

“அக்கா, அப்படிச் சொல்லாத, எல்லாமே மாறும்னு எங்க பள்ளிக்கூட வாத்தியார் சொல்வாரு. படம் இன்னைக்கு போகும். பாரு… நாலே மாசத்துல வேற கொட்டகையில வரும், வந்து சக்கை போடு போடும் பாரு. நம்ம விவசாயமும் அப்படித்தான்க்கா அழிஞ்சு போறாப்புல இருக்கும். யாருமே எதிர்பாக்காத இடத்துல இருந்து அது துளிர்த்து வரும். ஏன்னா விவசாயமும், விவசாயியும் இல்லாத உலகம் அழிஞ்சு போயிடும்ல” பர்வதா நம்பிக்கையையும் ஆதரவுமாய்ச் சொன்னாள்.

அந்த வார்த்தைகள் எல்லோருக்கும் இதமாய் இருந்தது. நம்பிக்கையோடு நடந்தார்கள். அந்த பெண்களிடம் ஏற்பட்டு இருந்த தெளிவு, நிச்சயமாய் அடி வானில் விடிவெள்ளி போல் தோன்றியது. நிச்சயமாய் மாற்றம் வரும். ஏனென்றால் மாற்றம் ஒன்றுதானே மாறாதது?

-செப்டம்பர் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *