மாறுகிறேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 17, 2024
பார்வையிட்டோர்: 806 
 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இன்னும் மூன்று நாட்களுக்குள் கட்டாயமாக முடிவு கூறுகிறேன், கவலையே படாதீங்க!” என்று உத்தரவாதம் தந்தவளின் நாள் அவகாசம் இன்னும் மூன்று மணிநேரம் முப்பத்தெட்டு நிமிடங்கள் பத்து வினாடிகளில் முடிவுக்கு வரவிருக்கிறது. ஆம், இப்போது முற்பகல் பதினொரு மணி இருபத்தொரு நிமிடங்கள் ஐம்பது வினாடிகள் என்று மின்னணுக்கடிகாரம் சிவப்பில் மின்னியது.

“உம்…எல்லாம் சரி! நாம என்ன சொல்லப்போறோம்?” ஒரே தோழியான சித்ரா, “கேன்னாட்” என்று கூறிவிட்டாள். வேறு யாரைக் கேட்க முடியும்? இது என்ன கத்தரிக்காய் முருங்கைக்காய் வாங்கும் விஜயமா? அதைக்கூட நம் மனம் விரும்பியபடி வாங்க விரும்புபவர்கள்தானே நாம்?” தன் மூளையைப் போட்டு, குழப்பு குழப்பு என்று குழப்பிக் குழம்பியவள், “ஒரு பெரிய நன்மைக்காக வொய் டோண்ட் ஐ டிரை?” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள்.

கண்ணாடி முன் நின்று தன் வெளிர்நீலச் சீருடையில் தன்னழகை ரசித்தவள், கண்ணின் மேல் உடைக்கேற்ற நிறத்தில் சாயம் பூசி கருநீல நிற மஸ்காராவால் இமைகளை மயிலிறகால் வருடுவதுபோல வருடிவிட்டபடி, “வேண்டவே வேண்டாம் என்ற ஒன்றை, செய்துதான் பார்க்கலாமே என்று நினைப்பது என் வாழ்வில் இதுதான் முதல்முறை! அந்த அளவுக்கு உறுதியோடு இருந்தவளாக்கும் நான்!” என்று தன்னைப்பற்றித் தன் மனத்திடம் கூறியவள் அப்படி என்னதான் செய்யப்போகிறாள்?

“திருமணம் செய்யமாட்டேன்” என்று ஜென்ம உறுதி பூண்டவள் செய்யலாமா என நினைக்கிறாள். அப்படிப் பிரியா நினைப்பதற்கு எது புரட்டுக்கல்லாக அமைந்தது?

உடன்பிறந்த அண்ணன்கள் இருவரும் திருமணம் செய்து வெளிநாட்டில் குடிபோய்விட்டனர். இந்நிலையில், தன் முப்பதுகளில் விதவையாகிவிட்ட வயதான தாயை நன்கு கவனித்து, ‘ஹாஸ்பைஸ் ஹோமி’ல் சேர்த்து அவரது இறுதி மூச்சுப் பிரியும்வரை அருகிருந்து சேவை செய்து, புத்திரன் செய்ய வேண்டிய கடமைகளைப் புத்திரியாக இருந்து செய்த பிரியா, உறவு ஏதும் இன்றித் தனிமரமாக வாழ முடிவு செய்தவள்.

தன் முப்பது வயதுவரை தோ பாயோ மருத்துவமனையில் தாதியாய் இருந்தவள், அடுத்த மூன்றாண்டுகள், ‘ஃப்ரீலாண்ஸ்’ஸாகத் தாதிப்பணி செய்தாள். தேவைப்பட்டபோது அழைக்கும் வீடுகளுக்குச் சென்று அங்குள்ள நோயாளிகளைப் பார்த்துக் கொள்ளும் ‘ஹோம் நர்ஸிங்’கில் கூடுதல் வருமானமும் நிறைய ஓய்வும் கிடைப்பதாக உணர்ந்தாள். ‘வேகுவேகெ’ன்று நேரத்துக்கு மூன்று ‘ஷிப்ட்’ வேலைக்கும் ஓடவேண்டியதில்லை என்பதால் அதில் மகிழ்ந்தவள் இந்த ஓராண்டாக, ‘ஹாஸ்பைஸ் ஹோமி’ல் பணிபுரிகிறாள்.

அது சரி, அவள் ஏன் இப்போது திருமணம் செய்து கொள்ளலாமா என நினைக்கிறாள்?

எல்லாவற்றுக்கும் இரண்டு நாட்களுக்குமுன் கல்யாணியம்மாள் கேட்ட கேள்விதான் காரணம்.

பிரியா, ‘ஹோம் நர்ஸிங்’ செய்தபோது கருப்பைப் புற்றுநோய்க்கு ஆளான ஐம்பத்தைந்து வயது கல்யாணி அம்மாளுக்குத் தொடர்ந்து தாதிப்பணி செய்யும் வாய்ப்பைப் பெற்றாள். தானே வலிய வந்த அவ்வாய்ப்பை அவள் விரும்பினாள். இந்தியாவின் பட்டுக்கோட்டைப் பகுதியிலிருந்து பகுதியிலிருந்து தன் பத்தொன்பதில், ‘தண்ணீர்க் கப்பலில்’ கணவனுடன் வந்தவர்தான் அந்த அம்மாள்.

அந்த அம்மாள், தான் உயிரை எந்நேரத்திலும் விட்டுவிடலாம் என்பதால் காதல் கீதல் என எதிலும் அதிகம் கவனம் செலுத்தாத கட்டுப்பெட்டி’யான தன் முப்பத்தைந்து வயது மகனுக்குத் திருமணம் செய்து பார்க்க விரும்புகிறார். அதனால்தான் பிரியா தற்போது திருமணம் பற்றிச் சிந்திக்கிறாள்.

தினமும் கரிந்த குடல்பகுதிகள் கருகி விட்ட வெங்காயம் போல தன் நீர் கலந்த மலத்தில் வெளியாவதைக் கண்ட கல்யாணி அம்மாள் தான் ஒரு சில நாள் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்துவிட்டார். அழகு யுவதியாக இருந்த அவர் கருப்பைப் புற்றுநோய் வந்தபின்பு நாளாகி மருத்துவமனை சென்றதால் கதிர்வீச்சுச் சிகிச்சை எனும் ‘கரண்ட்’ வைத்தியத்தினால் அவரது புற்றுநோய்க் கிருமிகளை முழுமையாய் அழிக்க முடியவில்லை. அத்துடன் நோய் மெல்ல மெல்ல விஷப்புகை போலப் பரவி தற்போது, ‘ஹாஸ்பைஸ் ஹோம்’ எனப்படும் அந்திமத்தைச் சுகமாக, சுமுகமாக நடைபெறச் செய்ய உதவும் மருத்துவ இல்லத்துக்கு வந்துவிட்டார்.

தன் பொறுப்புகள் முன்பே இரு தோளிலும் அதிகமாக இருப்பதால் மனைவி எனும் பொறுப்பைத் தாங்க, குடும்ப வாழ்வைச் சுமக்கத் தோள் ஏதும் இல்லாததால் மணம் வேண்டாம் என்று அவரது மகன் கடந்தவாரம் வரை மறுத்ததற்கு, அமெரிக்க ஆங்கிலேயர் ஒருவரைத் திடீரென மணம் செய்து கொண்டு அங்கேயே சென்றுவிட்ட பட்டதாரியான அவர் தங்கை பிரதிபாவும் ஒரு காரணம். எனினும் எப்படியாவது விதவைத்தாய் மகிழ்ச்சியுடன் மரிக்க வேண்டும் என்ற ஒரே நல்ல நோக்கத்துக்காக மணம் புரியச் சம்மதித்தார்.

கல்யாணி அம்மாளின் மகனும் ஒன்றும் எதிலும் குறைந்தவர் இல்லை. அரசாங்க நிறுவனம் ஒன்றில் துறை அதிகாரியாக இருக்கிறார். இலேசாகக் கீறிவிட்டது போலச் சற்று முன்வழுக்கை. அதுதான் அறிவு வளர்ச்சியின் அறிகுறி என்று பலரும் கூறுவதால் பரவாயில்லை; புதுநிறம்; ஐந்தரையடி உயரம். பிரியாவும் ஓரிருமுறை அவருடன் அவர் தாயின் முன்னிலையில் நடப்பு விவகாரங்களை ஒரு தாதியாக இருந்து அலசியிருக்கிறாள். சிந்தித்துப் பேசும் சிக்கனமான மனிதர் என்று புரிந்து, அந்த அம்மாளிடமே பாராட்டும் தெரிவித்திருக்கிறாள். இப்படிப்பட்டவள் இன்று மதியம், “ஏம்மா! உங்களுக்கு வாக்குக் கொடுத்தபடி வழி கண்டுபிடித்துவிட்டேன். கவலையே படாதீங்க!” என்று கூறுவதை, அந்த அம்மாவுக்கு தான் செய்யும் ஒரு பேருதவியாகவே எண்ணுகிறாள். அதனால்தான் முதலில் தோழியைப் பார்க்கலாம் என்ற கருத்தை எண்ணினாள். என்னதான் சொல்வாள்?

மணி பிற்பகல் இரண்டு. முதல் ‘ஷிப்டு’ முடித்த தாதியரும் இரண்டாம் ‘ஷிப்டு’க்கு வரும் தாதியரும் ‘ஹலோ’ என்றும், ‘பைபை’ என்றும் பொருத்தமாகக் கூற வேண்டியவற்றைக் கூறி இடம்பெயர்ந்தனர். மருத்துவமனையில் தங்கியிருக்கும் உறவினர், அவர்களுடன், நண்பர்களைக் காண வந்தவர்களும், நோயாளிகளும் என மக்கள் நடமாட்டம் கொட்டிவிட்ட கடுகு போல அங்குமிங்கும் பரவியிருந்தது. வாடகை உந்துவண்டிகளின் வருகையை வழிமேல் விழி வைத்து எதிர்பார்த்து வரிசையில் நிற்போரை ஏற்றிச் செல்ல அவ்வண்டிகள் வர, இடையிடையே தென்பட்ட சிறிய இடைவெளிகளில் சூரியக் குழந்தை தன் சில்மிஷக் கீற்றுகளைச் சற்றுச் சூடாக விட, பத்தாம் எண் வார்டில் ஏழாம் படுக்கையருகில் கல்யாணியம்மாள் அன்று வாங்கிய பகல் உணவுடன் பேசிக்கொண்டிருக்க, சிராங்கூன் ரோட்டிலிருந்து வந்திருந்த மகனிடம் ஏதோ “எஸ்கியூஸ்…என்னம்மா எப்டியிருக்கீங்க?” என்றபடி நுழைந்தாள் பிரியா. தன் பணிப்படி செய்யவேண்டிய நாடித் துடிப்பு, உடல்வெப்பநிலை போன்ற பரிசோதனைகளை முடித்தவள், தான் கூற வந்ததை நேரில் கூறலாமா, எழுத்தில் கூறலாமா என்று புரியாமல் இரண்டுடனும் தயாராக வந்திருந்தாள்.

ஏனோ ஒருவிதத் தயக்கம் ஏற்பட, “நானே உங்களைக் கல்யாணம் செய்யலாமா? கேன் ஐ மேரி யூ?” என்ற வாசகங்களுடன் கூடிய உறையைக் கல்யாணி அம்மாவின் மகனிடம், “ஸார், திஸ் ஈஸ் ஃபார் w!” என்றபடி கொடுத்துவிட்டுத் தாதியர் அறையில் வந்து தன் அலுவலக வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.

“வீணாய்ப்போன மனம் ஏன் இந்தப்பாடு படுகிறது? கன்னியாய் இருக்க விரும்பியது ஏன் இப்படிக் கன்றுக்குட்டியாய்க் குதிக்கிறது?” என்று நினைத்தவள் திடீரெனத் திரும்பிடுவதற்கு வழி தந்தது, “ஹலோ..” என்ற ஆடவரின் குரல்.

அந்த நிலையிலும், நிர்மலமான நிர்மலமான துடைத்த வைத்த பளிங்குபோலச் சலனமற்ற நிலையில் அவள் தந்தது போலவே ஓர் உறையைத் தந்தார் கல்யாணியம்மாளின் மகன்.

“என்ன? நீங்கள் வேண்டாம் என்றிருக்குமோ? என் சுயமரியாதைக்கு அவமானம் வருமோ? நான் தந்தது, அப்படியே வருகிறதோ?” என்றெல்லாம் எண்ணியவள் பிரித்துப் பார்க்க,

“எப்போது எங்கே சந்திக்கலாம்?” என எழுதிடப்பட்டு ஏழிலக்கத் தொலைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நிமிர்ந்து பார்த்தவள் கல்யாணியம்மாளின் முகத்தை, நடந்து போகும் அவர் மகனின் முதுகில் அன்று பூத்த மலராய்க் கற்பனையில் பார்த்தாள்; மனம் கனிந்தாள்!

– தமிழ் முரசு, 28.12.1997, கண்ணாடி நினைவுகள், முதற் பதிப்பு: ஜூன் 2001, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *