மாடசாமி மைனி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 9, 2017
பார்வையிட்டோர்: 7,682 
 
 

அண்ணா நகரில் இலவச தையல் மெஷின் வழங்கும் விழா நடந்த நான்காவது நாள் நண்பன் கூறினான் என்ற பெயரில், அத்தனை அறிமுகம் இல்லாத அந்த டூ வீலர் சீட் கவர் தைக்கும் கடைக்காரனை அழைத்துக் கொண்டு டூவி புரம் சென்றேன்.

இருவரும் ஒரே வண்டியில் அமர்ந்து சென்று கொண்டிருந்த போது வண்டியை ஓட்டிக் கொண்டே “ அது வேற தையல் மெஷின், சீட் கவர் தைக்கிறது வேற தையல் மெஷின், தெரியும்ல “ என்றான் அவன்.

“ தெரியும் தெரியும், விக்கப்போற மாடசாமி யாருன்னு எனக்கே தெரியாது. மொதல்ல அவனை போய் பார்ப்போம். அப்புறமா முடிவு பண்ணலாம். அவன் என்ன தையல் மெஷின் விக்கிறதா சொன்னான்னு “

“ இல்ல, எனக்கு நிறைய வேலை கிடக்குது. எல்லாத்தையும் விட்டுட்டு வாரேன் “

“ நாங்க மட்டும் என்ன ஊர் சுத்திட்டா திரியுறோம். பிரண்டு போன் செஞ்சு மாடசாமிக்கு ஹெல்ப் பண்ணுன்னு சொன்னான். அதான் உங்களை கூட்டிட்டு போறேன். உங்களுக்கு இஷ்டமில்லைன்னா வேற ஆளை கூட்டிட்டு போவேன் “ என்று கொஞ்சம் காட்டமாக கூறியதும் எதிராளியிடம் இருந்து சத்தத்தை காணோம்.

மாடசாமி என்பவரிடம் இலவசமாக கிடைத்த இரண்டு புதிய சீட் கவர் தைக்க உதவும் தையல் மெஷின் இருப்பதாகவும் அதை விற்று தந்தால் பெரிய உதவியாக இருக்கும் என கூறியதாக எனது நண்பன் கூற நானும் உதவி செய்யலாமே என்ற நோக்கில் பாத்திமா சீட்கவர் வொர்க்ஸ் சாஜஹானை அழைத்துக் கொண்டு மாடசாமியை தேடி டூவி புரம் எட்டாவது தெருவில் நுழைந்து கண்ணில் பட்ட பலசரக்கு கடை வாசலில் வண்டியை நிறுத்தி “ இங்க தையல்க்காரர் மாடசாமி வீடு எங்க இருக்கு “ என கேட்க

“ இங்க இருந்து அஞ்சாவது வீடு “ என்றார் கத்திரிக்காயை நிறுத்த வண்ணம் கடைக்காரர்.

அஞ்சாவது வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி வாசல் கதவருகில் சென்று காலிங் பெல் தேடியவண்ணம் “ மாடசாமி அண்ணே மாடசாமி அண்ணே “ என்றேன் சற்று சத்தமாக

உள்ளே இருந்து ஒரு பெண் வந்தார். “ என்ன வேணும் “

“ மாடசாமி அண்ணன பாக்கணும் “

“ நான் தான் மாடசாமி சொல்லுங்க “ என்றார் அந்த பெண்.

ஒரு முறை திரு திருவென முழித்து விட்டு “ தையல் மெஷின் விக்கனும்ன்னு கணேஷ் கிட்ட சொன்னதா கணேஷ் சொன்னான். அதான் ஆளை கூட்டிட்டு வந்தேன். இவரு சாஜஹான், ரெக்சீன் சீட் கடை வச்சிருக்கார் “

“ ஒ நான் தான் சொன்னேன், கனேஷ்க்கு என்ன வேணும் நீங்க “

“ என் பிரண்டு “

“ உள்ளே வாங்க “ என மெயின் கேட்டை திறந்து அழைத்துச் சென்றார் மாடசாமி என்ற அந்த பெண்.

வீட்டின் உள்ளே முதல் அறையில் நான்கைந்து பெண்கள் அமர்ந்து சூ செய்து கொண்டிருந்தார்கள். சாம்பிளுக்கு போலியோ சூ நான்கைந்து ஓரமாக செய்து வைக்கப்பட்டிருந்தது.

அடுத்த அறையின் உள்ளே கவர் வைத்து மூடி இருந்த மெஷினை பிரித்துக் காண்பித்தார். மெஷினை சுற்றுலாவுக்கு வந்தவன் போல வளைத்து வளைத்து பார்த்து விட்டு “என்ன விலை “ என்றான் சாஜஹான்

“ நீங்களே சொல்லுங்க. புது மெஷின் வாரண்டி கார்டு எல்லாம் இருக்கு “ என்றாள் மாடசாமி

“ ஆறாயிரம் ரூபான்னா ரெண்டையும் எடுத்துக்கிறேன் “

“ ஆறாயிரமா. அநியாயத்துக்கு இப்படி கேக்குற “ இடைமறித்தேன் நான்

“ அவுங்களே சும்மா இருக்காங்க. நீ ஏன் துள்ளுற. ஓசியில இலவசமாக கிடைச்சது தானே “ என்றான் அவன் சற்று காட்டமாக

“ அதல்லாம் நீ சொல்ல வேண்டாம். புதுசு பனிரெண்டாயிரம் ரூபா, கொஞ்சமும் கூசாம பாதி விலைக்கு கேக்குற. அவுங்க ஏதோ அவசரம்ன்னு தான் மெஷின் விக்கிறாங்க “ என்றேன்

“ வர்றப்போ ஆளே தெரியாதுன்னு சொன்ன, இப்போ அவசரத்துக்கு விக்கிறாங்கன்னு எல்லாம் பேசுற. சரி உனக்கு கமிஷன் எல்லாம் தரமுடியாது, பத்தாயிரம்ன்னா எடுத்துக்கிறேன் “

“ கமிஷனா, நான் உன்கிட்ட கேக்கவே இல்லையே, என்னங்க பத்தாயிரம்ன்னா சம்மதமா “ என்று கேட்க

நாங்கள் இருவரும் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த மாடசாமி “ வண்டி வச்சி நீங்க தான் எடுத்திட்டு போனும். வண்டி கூலி எல்லாம் தரமாட்டேன். சம்மதம்ன்னா பணத்தை கொடுத்திட்டு எடுத்திட்டு போங்க “

“ சரி நீ இங்க நில்லு. ATM ல பணத்தை எடுத்திட்டு, வண்டி புடிச்சிட்டு வாரேன் “ என்று சாஜஹான் கிளம்ப “ உக்காருங்க “ என்று இருக்கையை காட்டி மாடசாமி உள்ளே சென்று விட ஆவல் வந்தவனாக வீட்டின் முதல் அறைக்கு மீண்டும் வந்து போலியோ சூ செய்வதை வேடிக்கை பார்க்கத் துவங்கினேன்.

சற்று நேரத்தில் உள்ளே இருந்து வந்த மாடசாமி “ இந்தாங்க. ஐநூறு ரூபாதான் என்னால தர முடியும் “ என பணத்தை நீட்டினார்.

“ எதுக்கு “ என்றேன் ஆச்சர்யத்துடன்

“ மிஷின் விக்க ஆள் கூட்டிட்டு வந்ததுக்கு கமிஷன் “

“ ஆளாளுக்கு கமிஷன் கமிஷன் ன்னு கொல்லுறீங்களே, நான் கணேஷ் சொன்னான்னு தான் வந்தேன். பணம் எல்லாம் வேணாம் “

ஒரு மாதிரி ஏற இறங்க பார்த்துவிட்டு “ நிஜமாவே வேணாமா “

“ வேற ஒரு உதவி வேணும் “

“ அதானே பாத்தேன், போலியோ சூ பிரீயா வேணும்ன்னு சொல்லிராதீங்க. அது விலை ஜாஸ்தி “

“ அதெல்லாம் இல்ல, உங்க பேரு உண்மையிலே மாடசாமியா. அதை சொன்னா போதும் “

சற்று அமைதி நிலவியது.

“ எங்க அப்பாவுக்கு நான் அஞ்சாவது பொண்ணு. பையன் பொறப்பான்னு எதிர் பார்த்தார். இல்லைன்னு தெரிஞ்சதும் மாடசாமின்னு குல தெய்வம் பேரை வச்சிட்டார் “

“ நெசமாவா “

தலை ஆட்டி சுவற்றில் இருந்த ஒரு போட்டோவை காட்ட, அதில் ஒரு சாமி படத்தின் கீழ் “ பன்னி மாடசாமி துணை “ என்று எழுதி இருந்தது.

“ நல்ல வேளை முழு பேரையும் வைக்கல “ என்றேன் மெதுவான குரலில்

“ என் முழு பேரும் அது தான் “ என்றதும்

“ ஆத்தி…….” என்ற வண்ணம் ஜெர்க் ஆகி நிற்கவும் வெளியே சென்றிருந்த சாஜஹான் வண்டி உடன் வரவும் சரியாக இருந்தது.

இது நடந்து ஒரு வாரம் கழித்து ஒரு சர்ஜிகல் கடையில் வைத்து திருநெல்வேலியில் பிசியோதெரபி சாதனங்கள் செய்யும் நபர் ஒருவர் போலியோ சூ நான்கைந்து வேண்டும் எனக் கூற அவரை அழைத்துக் கொண்டு மீண்டும் மாடசாமியின் வீடு சென்று அங்கே அவரை அறிமுகம் செய்து விட்டு வந்தேன்.

இதுவெல்லாம் நடந்து ஒரு மாதம் கழித்து மாலை நேரத்தில் தெற்கு புது தெரு பஜாரில் சுடிதார் எல்லாம் அணிந்தவண்ணம் சைக்கிளில் கடந்து சென்ற மாடசாமியை நிறுத்தி “ என்ன இந்த பக்கம், டீ குடிக்கீங்களா “ என கேட்க என்னை பார்த்த சந்தோசத்தில் அவளும் சம்மதித்தாள்.

“ இங்க உளுந்த வாடை நல்லா இருக்கும். சாப்பிடுறீங்களா “ என்றேன்.

அவள் தலையாட்ட எனக்கும் சேர்த்து இரண்டு தட்டு எடுத்து உளுந்தவடை சட்னி சகிதம் டீக்கடையில் ஓரம் கட்டினோம்.

அவள் மாடசாமி என்ற பெயருக்கு ஏற்றார் போல சுற்றிலும் ஆண்களாக இருக்கிறார்களே என்ற எண்ணம் எல்லாம் இன்றி சர்வ சாதாரணமாக உளுந்தவடையை வெளுத்து கட்டி டீ குடித்து விட்டு “ உங்க மொபைல் நம்பர் கொடுங்க “ என்றாள்

ஒரு பெண் கேட்டால் மாட்டேன் என்று சொல்லும் அளவுக்கு நான் வளர்க்கப் படவில்லை என்பதால் வேக வேகமாக நம்பரை கூறினேன். சைக்கிளில் ஏறி கிளம்பும் முன் “ நீங்க கூட்டிட்டு வந்த அந்த திருநெல்வேலி ஆள் அன்னைக்கு பத்து போலியோ சூ வாங்கிட்டு போனார். ரொம்ப தேங்க்ஸ். பார்ப்போம் பை “ என்றவண்ணம் செல்ல நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

மாடசாமி நெடு நெடுவென வளர்ந்திருக்கிறாள். சுடிதார் அவளுக்கு அழகாக இல்லை. அவள் உயரத்திற்கு அது வாசலில் தொங்கும் திரைச்சீலை போல இருந்தது. மாநிறம், தெற்றுப்பல் மூன்றும் அவள் வாயை எப்பொழுதும் மூட விடாமல் தடுத்த வண்ணம் இருந்தது.

என்ன வயதிருக்கும் தெரியாது..?, கல்யாணம் ஆகி விட்டதா தெரியாது…?, என்ன படித்திருப்பாள் தெரியாது..? மாடசாமி என பெயர் வைத்துக் கொண்டு படிக்கும் காலங்களில் என்னென்ன அவஸ்தைகளை சந்தித்திருப்பாள் நிறைய எண்ணங்கள் என்மேல் படர படர அவள் தொலைவில் தெரு முக்கை தாண்டி கொண்டிருந்தாள்.

ஒரு வாரம் கழித்து இரவு எட்டு மணிக்கு போன் வந்தது மாடசாமியிடம் இருந்து “ வீட்டுக்கு வா “ என்று.

என்னவாக இருக்கும் என்ற எண்ணத்தோடு அவள் வீடு சென்றேன். வீட்டின் முன் அறையில், தோல் வெட்டும் நீண்ட டேபிள் மீது புதிய சூ இருந்தது.

“ இந்தா போட்டு பாரு “

“ எனக்கா “

“ ஆமா உனக்குத்தான் “

ஆசை ஆசையாய் வாங்கி அணிந்து பார்த்தேன். சர்வ கச்சிதமாய் இருந்தது. சரியான அளவுடன் ஜாக்கெட் தைத்த டெய்லரை பார்ப்பது போல ஆச்சர்யத்துடன் அவளை பார்த்து “ எப்படி என் செருப்பு அளவு கூட தெரியாம இவ்வளவு கரெக்ட்டா சூ செஞ்சிருக்கீங்க “

“ கண்ணு அளக்காததா கை அளக்க போகுது “ என்றாள் தொழில் சுத்தத்துடன்.

“ எவ்வளவு “

“ ஏன் நீதான் எல்லாம் ப்ரீயா செய்வியா, நாங்க செய்ய மாட்டோமா “ என்றாள்.

அதன் பின் தீபாவளி, பொங்கல், புதுவருடம், பிறந்த நாள், இடை இடையே ரோட்டில் காணும் போது என நாங்கள் டீ குடிக்க, ஐஸ் கிரீம் திங்க என பல காரணங்கள் தோன்றின.

பேசும் போதெல்லாம் அதிகம் வாதம் செய்வாள். ஆண்களை விட பெண்கள் எல்லா வகையிலும் உசத்தி என்பாள். முகத்தை நேருக்கு நேர் பார்த்து கணீர் குரலில் பேசுவாள். ஒரு நாள் “ மெதுவா பேசுங்க “ என கூறிய ஐஸ்கிரீம் கடைக்காரனிடம் சண்டைக்கு சென்றாள். அன்றைய தினம் அவன் கம்மியாய் அடிவாங்கியது அவன் பாக்கியம். யாரைக்கண்டும் அவளிடம் பயம் இல்லை.

உழைப்பாளி அவளிடம் ஒரு பெண்ணுக்கான நளினம் எல்லாம் துளியும் இருக்காது. அவள் தலையில் குடும்பம் நடத்தும் பொறுப்பும், பணம் தரும் தொழிலும் ஒப்படைக்கப் பட்டதால் அவள் தேவைகளை முன்னோக்கியே இருந்தாள். அதை தடுக்கும் எல்லா தடைகளையும் தகர்த்தெறியும் வெறிபிடித்த முரட்டுத்தனம் இயற்கையாகவே அவள் மீது படிந்திருந்தது.

திடீர் என ஒருநாள் ரோட்டில் கண்டு எஸ்தர் என்ற பெயரில் திருமண பத்திரிகை நீட்டினாள். “ இது யாரு எஸ்தர் “

“ நான் தான் “

“ இது எப்போ “

“ அதெல்லாம் கேக்காத, என்ன இழவோ செய்றாங்க எங்க வீட்டுல, கல்யாணத்துக்கு வந்திரு “

சரி என்று கூறி கல்யாணத்திற்கு புதியம்புத்தூர் சென்றிருந்தேன். முதலில் கோயிலில் வைத்து தாலி கட்டினார்கள். பின் வீட்டில் வைத்து பாதர் இன்னொரு முறை திருமணம் செய்து வைத்தார். பந்தி இலையில் ஓடுவது சாம்பாரா ரசமா என்ற கவலையில், நடந்து எல்லாம் என் நினைவில் நில்லாமல் போனது.

அப்பா மட்டுமல்ல கணவரும் குடித்திருக்க மகனின் முதல் பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவதாக கூறி அழைத்திருந்தாள்.

பிள்ளை பெற்ற வகைக்கு புசு புசுவென சற்று எடை கூடி இருந்தாள் மாடசாமி என்ற எஸ்தர்.

இது வரை வாங்க போங்க என்று அவளை அழைத்து வந்த நான் வேறு வழியின்றி கூட்டத்தின் நடுவில் “ மைனி ( அண்ணி ) “ என அழைக்கும் நிலைக்கு தள்ளப் பட்டேன்.

சேலையில் வளைய வந்த அவளையே பார்த்துக் கொண்டிருந்த என்னை சட்டென அவள் திரும்பி பார்க்க நான் பார்வையை தரைக்கு தாழ்த்தினேன்.

பிறந்த நாளுக்கு வந்திருந்த ஆட்கள் கூட்டம் குறைந்ததும் பாயாசம் கொண்டு வந்து கையில் திணித்து விட்டு “ என்ன அப்படி வளைச்சு வளைச்சு என்னையே பார்த்திட்டு இருந்த, என்ன விஷயம் “

“ ஒண்ணுமில்ல “ என்று குனிந்து கொண்டேன்.

சிரித்தாள்

“ ஏன் சிரிக்கீங்க “

“ வெக்கப்படுற ஆம்பளைய கண்டா சிரிப்பு வராம என்ன செய்யும். சரி சொல்லு எதுக்கு என்னையே பார்த்திட்டு இருந்த “

“ ம்ம் ……….. ஆளு சதை போட்டு முன்ன விட அழகா இருக்கீங்க “

“ அட கருமம்………முத்துன காய் நான், என்னை போய் ரசிச்சியாக்கும். சீக்கிரமா உனக்கு ஏத்தமாதிரி தண்டியும் தரமும் பாத்து எவளையாவது கல்யாணம் பண்ணு. வக்கட்டையா எவளையாவது கட்டுனன்னு வச்சிக்க மண்டைய பொழந்திருவேன் “ என ஆசிர்வாதம் செய்தாள் அந்த வேதக்காரி.

இரண்டு வருடம் ஆனது அவள் வாக்குத்தத்தம் பலிக்க.

என்னுடைய திருமணத்திற்கு குழந்தையுடன் வந்திருந்த அவள் மேடையில் என் கையை பிடித்து சிறிது நேரம் பேசினாள் மாமனார் பார்வையால் என் மீது அம்பு விடுவதை பற்றிய கவலை இன்றி.

கிளம்பும் போது “ பிரியாணி சூப்பரா இருந்தது, ஒரு ஹெல்ப் பண்ணுவியா “

“ என்ன “

“ சாப்பாடு மிச்சம் ஆச்சுன்னு அண்டால நிரப்பி வீட்டுக்கு தூக்கிட்டு போகாம எனக்கு போன் பண்ணுனா, நான் TTC டிப்போ பக்கத்துல இருக்கிற முதியோர் இல்லத்துக்கு கொண்டு போய் கொடுக்கிறேன். இந்த மாதிரி பிரியாணி எல்லாம் அவுங்க சாப்ட்டிருக்க மாட்டாங்க “

“ இப்போமே கொண்டு போறீங்களா “

“ நெசமாவால……கொஞ்சம் பொறு என் பிள்ளைய யார்கிட்டயாவது கொடுத்திட்டு வாரேன். டிவிஎஸ் சாம்ப்ல தான் வந்திருக்கேன். சட்டியில கொடுத்தா அப்படியே போய் டெலிவரி பண்ணிட்டு வந்திருவேன் “

“ கொஞ்சம் நில்லுங்க, மாப்ள இங்க வா. இவுங்க என்ன கேக்காங்களோ அதை கொடு. யாராவது ஏதாவது சொன்னா நான் சொன்னதா சொல்லு “ என நண்பனை கை காட்ட சந்தோசம் தாளாமல் அவனுடன் சென்று கொண்டிருந்தாள் மாடசாமி.

கிமு / கிபி போலத்தான் எல்லோர் வாழ்வும், திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் என எந்த பாகுபாடும் இன்றி பழைய நினைவுகள் எல்லாம் மறந்து நான் எங்க இருக்கேன் என்று மட்டுமே கேட்காத குறை என்னுடையது.

திருமணத்திற்கு பின் மாடசாமி எல்லாம் என் மூளை செல்லில் இருந்து அழிக்கப்பட்ட பண்டைய செய்தி ஆனது.

நீண்ட காலங்கள் கழித்து மாதாகோவில் திருவிழாவில் மகனுடன் டெல்லி அப்பளம் வாங்க சென்ற இடத்தில் அவளை மீண்டும் சந்தித்தேன்.

“ எல எப்படி இருக்க……..உன் பையனா இது. உன் பேர் என்னது தங்கம் “ என அவனை மடியில் வாங்கி கொஞ்ச ஆரம்பித்தாள். சற்று நேரத்தில் கூட்ட நெருக்கம் தாளாமல் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து சென்றோம்.

அவள் மடியில் எடுத்து கொஞ்சிய மகன் இப்பொழுது ஆறடி உயரம். காலம், கோடைகாலத்து ஆற்று நீர் போல நிதானமாக என்னைக் கடந்து செல்கிறது.

வருடத்திற்கு ஒரு முறையாவது இரத்த தானம் செய்து விடுவது வாடிக்கை. இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி எல்லாம் என்னைத் தொட்டு பார்க்காமல் இருக்க வேண்டும் என்ற சுய நலம் தான் காரணம்.

ஒரு ஞாயிறு காலை இரத்த தானம் செய்யலாம் என்று அந்த மருத்துவமனை சென்றேன். வாசலில் நின்றிருந்த ஆள் “ பிளட் டொனேட் பண்ண வந்தீங்களா “

“ ஆமா “ என்றேன் ஆச்சர்யத்துடன்

“ O பாசிடிவ் தான “

“ ஆமா “ என்றேன் மேலும் ஆச்சர்யத்துடன்

“ வாட்ஸ் அப்ல வர்றதா சொன்ன ஆள் நீங்க தானா, உள்ள வாங்க உள்ள வாங்க “ என அவசரப்பட்டார்.

“ இல்ல, நான் தற்செயலா பிளட் கொடுக்கலாம்ன்னு வந்தேன் “

“ ஒரு மணிக்கு சர்ஜெரி. இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு. ரெண்டு பாட்டில் பிளட் வேணும். ஒரு ஆள் கிடைச்சிட்டார். இன்னொரு ஆளுக்கு தேடிகிட்டு இருந்தோம். ஞாயிற்று கிழமை அதனால யாரையும் சட்ன்னு காண்ட்டக்ட் பண்ண முடியல. வாட்ஸ் அப் எல்லா குரூப்லயும் சொல்லி, என்னடா செய்யன்னு யோசிச்சுகிட்டு இருந்தோம். நல்ல வேளை நீங்களா வந்தீங்க. கொடுப்பீங்கல்ல “

“ அதுக்கு தான் வந்தேன் “ என்று கூறி இரத்தம் கொடுத்து விட்டு அறையை விட்டு வெளியே வந்ததும்

“ சார், இவருக்கு ஜூஸ் வாங்கி கொடுங்க “ என என்னை அழைத்துச் சென்றவர் யாரிடமோ கூற “ சரி “ என்றவண்ணம் என்னை நோக்கி வந்தவரை எங்கேயோ பார்த்தது போல இருந்தது.

“ அடடா இது மாடசாமி வீட்டுக்காரர் ஆச்சே “ என்று யோசித்து “ பேஷன்ட் யாரு சார் “ என்றேன் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில். அவருக்கு என்னை நினைவில்லை.

“ என் மனைவி தான் “ என்றார்.

“ என்ன செய்து அவுங்களுக்கு “

“ யுட்ரஸ் ரிமூவ் பண்ணுறாங்க. ஆபரேசன் தியேட்டருக்கு கூட்டிட்டு போயாச்சு “

“ ஒ…….அப்படியா “

“ ஜூஸ் நான் போய் குடிச்சிக்கிறேன், நீங்க ஹாஸ்பிட்டல இருங்க “

“ இல்ல நீங்க இரத்தம் கொடுத்திருக்கீங்க “ என இழுத்தார்

“ இதுல என்ன இருக்கு, பரவாயில்ல உங்க மனைவி பேரு என்ன “

“ எஸ்தர் “ என்றார் என்னுடைய அந்த கேள்வியை விரும்பாமல்

“ அவுங்களுக்காக ஜெபம் பண்ணுங்க, நான் வாரேன் “ என்றவண்ணம் நிறைய சிந்தனைகளுடன் வண்டியை கிளப்பி நேராக சிரோன் ஜூஸ் பார்க் சென்று ஜன்னல் ஓர சீட் பிடித்து “ பெரிய சைஸ் மாதுளை ஜூஸ் ஒன்னு ஐஸ், சீனி போடாம “ என்று ஆர்டர் செய்து விட்டு மொபைலில் FACEBOOK கில் வந்த நோடிபிகேசனை பார்க்கத் துவங்கினேன்.

“ பொம்பளைன்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா, அதெல்லாம் இல்ல ஆம்பிளைங்களை விட நாங்கதான் எல்லாத்துலையும் பெஸ்ட் “என்று ஒரு பெண்ணின் குரல் லேசான விளக்கு வெளிச்சத்தில் கேட்க “ ஹலோ மெதுவா பேசுங்க “ என்றான் ஐஸ்கிரீம் கடைக்காரன். “ நாங்க ஒன்னும் மைக் போட்டு கத்தி பேசலை. மெதுவாதான் பேசிட்டு இருக்கோம் “ என சண்டை இழுத்தது அந்த பெண் குரல்.

இன்னைக்கு இவன் அடிவாங்க போறான் என்று மனதில் எண்ணியபடி ஜூஸ் குடிக்கத் துவங்கினேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *