கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 12, 2023
பார்வையிட்டோர்: 1,404 
 
 

(1969 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டுப் பெருமூச்சு விட்டவாறு, குனிந்து கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான் மாணிக்கம். இரண்டு ஆள் உயரத்துக்குக் குழியாகத் தோண் டியிருந்த அந்த கிணற்றுக்குள் வானத்து மேகம் தெரிந்தது. ‘இப்போதைக்கு ஒப்பேத்தலாம் இல்லே?’ என்றவாறு பக்கத் திலிருந்த ராசப்பனை பார்த்தான். ‘இப்போதைக்குன்னா மழை பெய்ற வரைக்குமா?’ என்றான் ராசப்பன்.

அப்படித்தான் நெனைக்கிறேன்?.

மானத்தைப் பார்த்தியா? இப்ப கிட்டனுசுலே மழை பெய்ற மானமாவா இருக்கு?’

வானம் வரண்டுதான் கிடந்தது. வெளுத்த நீல வெளி யில் காற்றில் பறக்கும் பஞ்சுத் துணுக்குகள் மாதிரி சிறு மேகத் துண்டுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நீந்தின.

அது ஆடிமாதம்.

ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் தோட்டத்தில் இலேசான வரட்சி தட்டுவது வழக்கந்தான். ஆனால் இந்த வருடம் அநியாய வரட்சியாக இருந்தது. தோட்டத்தின் ஒரு மூலையில் சலசலத்து ஓடும் ஒரு சிற்றருவி இம்மாதிரி வரட் சிக் காலங்களில் குளிக்கவும் குடிக்கவும் உதவும். ஆனால் காய் கறித் தோட்ட வேலைக்கு எந்த வகையிலும் உதவ முடியாத தூரம். அதிலும் இவர்களுடைய சேனைப்பகுதி தோட்டத் தில் ஓர் உயர்ந்த மலையின் ஒதுக்குப்புறத்திலிருந்தது.

இதுவரை வானம் வஞ்சனை செய்ததில்லை. அந்த வானத் துக் கருணையைத் தேக்கிக் கொள்ளும் அந்தக் கிணறும் வற் றியதில்லை. இந்த வருடம் தான் சோதனையாக இப்படி!

‘என்ன இந்த வருஷம் மட்டும் இப்படி?’ என்றான் மாணிக்கம்.

‘அம்பது ஏக்கர் காட்டையில்ல அழிச்சிருக்கு! புதுசா தேயிலைக் கண்ணு போடறாங்களாம் … கவோதிப் பயலுக … ! காட்டை அழிக்கையிலே நெனைச்சேன், இந்த வருஷம் மழை கொறையும்னு’

‘அதைக் கொறையாவும் சொல்லப்புடாது ராசப்பன், ஒவ்வொருத்தன் வீட்டிலேயும் அஞ்சாறு புள்ளைகளுக்கும் கொறையாமே இருக்குல்ல. இதுகள்ளாம் தலை எடுக்கிற காலத்திலே வேலை குடுக்குறதுன்னா இந்தத் தோட்டமா போதும்? புதுமலை உண்டாக்க வேண்டியது தான்’.

‘என்னமோ போ! ஆக மழை இல்லாமே போச்சு’

வெயிலில் வதங்கி நிற்கும் காய்கறிப் பயிர்களைப் பார்த்து ராசப்பனுக்கு வயிற்றெரிச்சலாக இருந்தது.

நியாயமாக மாணிக்கத்திற்குத்தான் இது பெரிய நஷ்டம். தோட்டத்துரையின் அனுமதி பெற்று, குடியிருப்புப் பகுதியி லிருந்து வெகு தூரத்தில் இருக்கும் ஒரு புல் மலையில் சேனை போடமுன் வற்றுதற்குக் காரணமே, வீட்டில் வயது வந்த பெண் ஒருத்தி இருக்கிறாள் என்பதுதான். அவளுடைய கல் யாணத்திற்குச் சம்பளத்தை நம்பிக்கொண்டிருக்காமல் ஏதா வது ஓர் அசுர முயற்சி செய்தால்தான் உண்டுஎன்று நினைத்து இந்தப் புல்வெளியில் காய்கறி போட முன்வந்தான். அது வும் பலனளிக்கத் துவங்கியிருந்தது. அந்தத் தெம்பில் வழக் கம் போலப் புடலையும் வெண்டையுமாக இல்லாமல், இம் முறை இங்கிலீஷ் காய்கறி வகையாகப் பயிரிட்டிருந்தான். ‘பாக்கெட்’டுகளில் அழகாகப் படம் போட்டிருந்த பீட்றுட், லீக்ஸ் வகைகளைப் பணம் என்று பாராமல், நல்ல விலை கொடுத்து வாங்கியிருந்தான். பலனளித்தால் அதுமாதிரி பத்து மடங்கு பணம் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால்…

மாணிக்கத்தைத் தொடர்ந்து ராசப்பனும் இன்னும் நான்கைந்து பேரும் சேனை உண்டாக்கியிருந்தார்கள், எல் லோருக்கும் அந்தக் கிணறுதான் கதி. அதில் ஊற்று இருக் கிறதா என்பது இன்றும் புரியாத புதிர்! இதுவரை அது வற்றியதில்லை. அடிக்கடி மழையும் பெய் த காரணத்தால் அவர்கள் அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டதில்லை. இப்போது நிதானிக்க நேரம் வந்துவிட்டதாக மாணிக்கம் எண்ணிக் கொண்டான்.

இருவரும் சேனைக்குள் இறங்கினர்.

***

அன்று மாலையில் மாணிக்கம் வீட்டுக்குத் திரும்பிவரும் போது, மறுநாள் வேலை இல்லை என்று கேள்விப்பட்டான். ஆடிமாதம் வந்துவிட்டால் இது வழக்கம்தான். வரும் வழி யில் அவன் பார்த்துக் கொண்டு வந்த காட்சி, இப்போது கண்முன்னால் வந்து நின்றது.

பச்சைக்கம்பளம் விரித்தது போல் படர்ந்து கிடக்கும் தேயிலைச் செடிகள், தீப்பற்றியவை போலக் காய்ந்து சுருண்டு இலை உதிரத் துவங்கி இருந்தன. சில செடிகளில் இலை எல் லாம் உதிர்ந்து, வாதுகள் மட்டும் குச்சி குச்சியாக நீட்டிக் கொண்டிருந்தன.

கை கால்களைக் கழுவிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந் தான். அவன் மனைவி ஒரு தம்ளரில் தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள். அதை வாங்கிக்கொண்டு ‘நாளைக்கி வேலை இல்லையாமில்ல’ என்றான்.

அவன் மனைவி பெருமூச்செறிந்து விட்டு ‘மலையிலேயும் என்னதான் இருக்கு புடுங்க? பத்துமரத்திலே எடுத் தாக்கூட ஒரு புடி கொழுந்து தேற மாட்டேங்குது’ என்றாள்.

‘நல்ல பொழைப்புடா இது’ என்று சபித்தவாறு, திண் ணையில் போய் உட்கார்ந்து, வெளியே வானத்தைப் பார்த் தவாறு தேநீரைக் குடித்தான். கதவு இல்லாத வெளிவாசல் வழியாக வானமும் அதன் அடியில் கோணலாகக் கீறிய கரை போன்ற மலைகளும் வண்ணச்சித்திரம் போலத் தெரிந் தன. பச்சை மலைகள், பார்த்துக் கொண்டிருக்கையில் நீல மாக மாறிக்கொண்டு வந்தன.

உள்ளே லாந்தரைத் துடைத்து பற்றவைத்துக் கொண் டிருந்த அவன் மனைவி ‘கேக்க் மறந்துட்டேனே! சேனை எப்படி இருக்கு?’ என்றாள்.

‘பதியம் போட்ட கண்ணு எல்லாம் பொழைச்சுக் கிட் டுது. அதிலேயும் செவப்புக் கிழங்கு கண்ணுக ஒண்ணு கூட பழுதாகல்லே …!’ என்றான் மாணிக்கம். அவனுள் சுரந்த பாச உணர்வு அவளுக்குள்ளும் கிளு கிளுத்தது.

‘தண்ணிதான் வேணும் இப்ப’

‘கெணறு?’

‘அது வத்திக்கிட்டே வருது. ஊத்து இருக்குமோன்னு பேசிக்கிட்டமே, இருக்காது போலே தெரியுது’ சொல்லி முடித்துப் பிதுங்கிய உதடு, பிதுங்கிய நிலையிலேயே கொஞ்ச நேரம் வளைந்து நின்றது. கை நெஞ்சுமயிரை நீவி விட்டுக் கொண்டிருந்தது.

அடுத்த நாள் வேலை இல்லை.

காலைப்பொழுது போயா தினம் மாதிரி விடிந்து, சோம்ப லாக நீண்டு கழிந்தது. மாலை நேரத்தில் ஒருவன் லயம் லய மாக வந்து மறுநாளும் வேலை இல்லை என்று சொல்லிவிட்டுப் போனான். மூன்றாவது நாள் உண்மையிலேயே போயா விடு முறை.

நான்காவது நாள் காலைப்பொழுது ‘மஸ்டர்’ களத்தில் கல கலப்பாக விடிந்தது. சற்று நேரம்தான். கணக்கப்பிள்ளை ஏதோ பூடகமாகப் பேசத்துவங்கிய போது சிலருக்கு ‘திக்’ கென்றிருந்தது. ‘ இன்னைக்கும் அரோஹராதானா?” என்று மாணிக்கத்திற்குப் பக்கத்தில் ஒருவன் முணுமுணுத்தான். கணக்கப்பிள்ளை வாய்ச்சுருட்டை எடுத்து, விரல் இடுக்கில் வைத்துக்கொண்டு முழங்கிக் கொண்டிருந்தார். ‘இஞ்ச பாருங்கப்பா! வேலை நிப்பாட்டி உங்க வயித்துலே அடிக் கணும்னு எங்களுக்கு எண்ணம் இல்லே. உங்க எல்லோருக் கும் தெரியும். இரண்டு மாசமா மழை இல்லே தேயிலையெல் லாம் வாடிக்கிட்டு வருது, கொழுந்து வேலையைக் கொஞ்ச நாளைக்கு நிப்பாட்டப் போறோம். ஆவணி புரட்டாசியிலே தான் இனி மழை இருக்கும். அது வரைக்கும் வேலை அப்பிடி இப்பிடித்தான் சொல்லிப்போட்டேன். அப்புறம் கரச்சல் கிரச்சல் பண்ணப்படாது.’

‘அப்ப நாங்க எப்பிடித்தான் பொழைக்கிறது?’ கூட்டத் தில் யாரோ ஒருவன் குறுக்குக் கேள்வி போட்டான். குரல் வந்த பக்கத்தைப் பார்த்தவாறு ‘சரி! மழையைப் பெய்யச் சொல்லு, வேலை தர்றோம்’ என்றார் கணக்கப்பிள்ளை.

கூட்டம் கொல்லென்று சிரித்தது.

கணக்கப்பிள்ளையும் குறும்பு சிரிப்பு சிரித்துவிட்டு எல் லோரையும் பார்த்தவாறு புதிசா கறத்தை ரோட்டு போடு றத்துக்கு ‘எஸ்டிமேட்’ இருக்கு அதையாவது கேட்டுப் பாப் பம்’ என்றார். தோட்டம் காய்ந்து கிடந்தாலும் அவரிடம் ‘ஈரம்’ இருப்பது அவர்களுக்கு ஆறுதலையளித்தது.

அன்று வேலையும் கிடைத்தது. சொன்னதுபோல இரண்டு நாட்களுக்குப் பிறகு ரோடு வேலை வாங்கிக்கொடுத்தார் கணக்கப்பிள்ளை. லொறி வசதியும் கம்பி வசதியும் இல்லாத ஒரு மலைக்கு ரோடு போடும்வேலை. அதுவரை அந்த மலையில் வேலை என்றால் மலையிலிருந்து ‘பாக்டரி’ வரை கொழுந்து மூடைகளைத் தலையில் சுமந்துவர வேண்டும். புதுரோடு ஏற் பட்டுவிட்டால் இனி அந்தச்சிரமம் இராது. எதிர்கால சௌகரியம் இருக்கட்டும்… இன்று வேலை கிடைக்கிறது! வேலை ஆனால் அந்த எஸ்டேட் வெள்ளைக்கார துரை விழித்த பயல். வரவு இல்லாத நேரம் செய்யும் செலவு தண் டச் செலவு என்று கருதுவது போல, வேலை நாட்களைக் குறைப்பதில் கவனமாக இருந்தான். வாரத்தில் நான்கு நாட் கள் மட்டுமே வேலை என்று புது முடிவு செய்து, அதிலும் சிறு மாற்றமாகப் பெண்களுக்கு மூன்று நாட்களும் ஆண்களுக்கு மட்டும் நான்கு நாட்களும் என்று வேலை கிடைத்தது.

அதாவது சாப்பிடுவதற்கு மட்டும் எவ்வளவு தேவையோ, அவ்வளவு சம்பளம் கிடைக்கிறாற்போல!

***

கிணறு வற்றிக்கொண்டே வந்தது. யோசித்து மண்டையை உடைத்துக்கொண்டதில் ஒரேயொரு யோசனை தான் சாத்தியமாக இருந்தது மாணிக்கத்திற்கு. ராசப்பனையும் சக சேனைக்காரர்களையும் கூப்பிட்டு ‘கெணறைப் பார்த்தீங் களா? இன்னம் ஒரு கிழமைகூட தாக்குப் பிடிக்காது போலே ருக்கு உடனடியா நாம் ஏதாவது செஞ்சாகணும்’ என்றான்.

‘அது என்னமோ நெசந்தான். வெயிலு போடுற போடு எடுக்காமலேயே தண்ணி வத்திப்போகும் போலேருக்கு ஆனா என்னதான் செய்யமுடியும்?’ என்றான் ராசப்பன்.

‘எனக்கு ஒரு யோசனை தான் சரீன்னுபடுது’.

‘என்னது?’

‘நம்ப பத்தாம் நம்பர் மலையோட போகுதே பெரிய கானு, அதிலே இருந்து தண்ணி எடுக்க முடியுமா?”

அவர்களுடைய சேனையிலிருந்து பத்தாம் நம்பர் மலை ஒன் றரை மைல் தூரம் என்பதை நினைத்தபோது. அது முடியாத காரியம் என்றே எல்லோருக்கும் தோன்றியது.

‘எங்கேயிருந்து எங்கே தண்ணி எடுக்கிறது? இது என்ன நடக்கற காரியமா அண்ணே?’ என்று ஒருவன் முனகியபோது, மாணிக்கம் பல்லைக்கடித்தவாறு ‘நீங்கள்ளாம் ஆம்புளைக தானா?’ என்றான். ‘நடுராத்திரியிலே புள்ளைக்கோ பொஞ் சாதிக்கோ வாயை வயித்தை வலிச்சா லாந்தரு வெளிச்சத்தை பிடிச்சுக்கிட்டு மருந்து வாங்க ஓடுறதில்லே … அது மாதிரி தானே இதுவும்….

‘நெசம் … நெசம்’ என்றான் ராசப்பன். ‘காய்கறி கண் ணெல்லாம் வெயிலிலே வாடி அழியறதைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்கிறதைக் காட்டிலும் எதையாவது செய்ய முயல்வது நல்லது’ தீர்மானம் பிறந்த கையோட அப் போதே எல்லோரும் பத்தாம் நம்பர் மலையை நோக்கிப் புறப்பட்டார்கள். சேனைக் கிணற்றைக் கடைசி எல்லையா கக் கணித்துக் கொண்டு, அந்தமலையில் நிரம்பியிருந்த புல் காடுகளை எதிர்த்துக் கொண்டு நடந்தார்கள். கத்தி கத்தி யாக நீட்டிக்கொண்டிருந்த புல்லும் முட்செடிகளும் கால் களில் கீறி, வெள்ளைக்கோடு உண்டாக்கி, பின்னர் அவையே செங்கோடுகளாக மாறிக் கசிந்தன.

அந்த மலையில் குறுக்கு வட்டாகச் சென்று கொண்டி ருந்த அவர்கள், அந்த மலைமுடிவில் பெரிய சோதனை காத் திருப்பதைக் கண்டார்கள். அவர்கள் நின்று கொண்டிருந்த புல்மலை அந்த இடத்தில் வளைந்து ஒடுங்கி, அங்கிருந்து பத் தாம் நம்பர் மலை விம்மி எழும்பத் துவங்கியிருந்தது.

ஆனால் அந்த மலைக்கும் இவர்கள் நின்ற விளிம்புக்கும் மத்தியில் கிடந்த இடைவெளி கற்பாறைகளே அருவியாக ஓடிவந்து அங்கு நின்றுவிட்டதுபோலக் கிடந்தது. சிறிது பெரிதுமாகப் பலவித உருவங்களில் பலவித வண்ணங்களில் தலைகளை உயர்த்திப் பார்த்தபோது முடிவே தெரியாமல் நீண்டு கிடந்தது கற்குவியல்.

இவர்கள் நின்ற இடத்துக்கும் அடுத்த மலைக்கும் தொடர்பு ஏற்படுத்த வேண்டுமானால் ஏதேனும் அந்தரத்தின் மூலம் தொடர்பு ஏற்படுத்தினால்தான் உண்டு. நீண்ட வாதப் பிர திவாதங்களுக்குப் பிறகு அது சாத்தியம் என்பதையும் கண்டார்.

மூன்று நாட்களின் கடும் உழைப்புக்குப் பின்னர் பாலம் உருவாயிற்று.

இரண்டு மலைகளின் விளிம்பு ஓரமாக இரண்டு சிறிய மரத் தூண்களை ஊன்றி இரண்டுக்குமிடையில் விரல்பருமனான கம்பியை இழுத்துக் கட்டினார்கள். அந்தக் கம்பியில் வளைந் திருந்த தகரக் குழாயை இணைத்துக்கட்டினார்கள்.

பத்தாம் நம்பர் மலையில் போகும் ஒற்றையடிப் பாதை யின் ஓரமாக உள்ள ‘கான்’களையே வாய்க்காலாக்கி ஓடி வந்துகொண்டிருந்த நீர் தகரப்பாலத்தில் மணிக் கற்களைக் கிணு கிணுவென்று உருட்டிக் கொண்டு பாய்ந்து வந்து புல் மலையில் விளிம்பில் கொட்டியபோது குழந்தைபோல் குதூக லித்த மாணிக் கம் சகாக்களைப் பார்த்து “என்னமோ அப்பாடின்னு வாயைப் பொளந்தீங்களே! இப்ப எப்படி?” என்றான்.

***

தலைவர் கூப்பிட்டு விட்டிருந்தாரம்.

மாணிக்கம் தலைவரின் லயத்தை அடையும்போது அவ னுக்கு முன்பே ராசப்பனும் ஏனைய சேனைக்காரர்களும் திண் ணையில் அமர்ந்திருந்தனர்.

மாணிக்கத்தைக் கண்டதும் “வாப்பா மாணிக்கம்” என்றார் தலைவர்.

“என்ன கூப்பிட்டு விட்டீங்களாம்?” என்றவாறு திண்ணையில் அமர்ந்தான் மாணிக்கம்.

தலைவர் அனுதாபமாகச் சிரித்தவாறு அவர்கள் எல்லோ ரையும் பார்த்து ‘நான் சொல்கிறது ஒங்களுக் கெல்லாம் ஒங்களுக்கெல்லாம் விருப்பமா இருக்காது. ஆனாலும் சொல்லவேண்டிய நெலமை” என்று கூறிவிட்டு ஒருமுறை செருமிக்கொண்டார். எல்லோருடைய பார்வையும் அவர்மீதே குவிந்திருந்தது.

“வேறொண்ணுமில்லே! இப்ப ரெண்டு மாசமா நம்ம தோட்டத்திலே மழையே இல்லேங்கிறது ஒங்களுக்கு நல்லாத் தெரியும். இப்போதைக்குப் பெய்ற கொணமாவும் தெரியல்லே. ஆக கொழுந்து வேலையும் நின்னு சில்லறை வேலையும் சரியா கெடைக்குதில்லே அதனாலே காடு எரிச்சுப் பாப்பமான்னு அபிப்பிராயப்படுறாங்க…”

“யாரு” என்றான் ராசப்பன்.

“ஆளுக தான்”

“காடு எரிச்சா மழை பெய்றதும் உண்டுதான். ஆனா எந்தக் காட்டை எரிக்கிறது? இருந்த காட்டைத்தான் அழிச்சு புது மலை போட்டாச்சே”

“புல்லு மலையைத்தான் எரிச்சுப் பார்க்கணும்”

“நல்லா இருக்கே கதை!” என்றவாறு ராசப்பன் பரப ரப்போடு எல்லோரையும் பார்த்தான். மாணிக்கம் இவை ஒன்றுமே காதில் விழாதது போன்ற முகபாவத்தோடு வாய் சற்றே பிளந்திருக்க கண்களில் பரபரப்பை சுழற்றி சுழற்றித் தேய்த்துக் கொண்டிருந்தான்.

“அப்ப எங்க சேனை என்ன ஆகிறது?”

“இந்த எடத்திலேதான் நீங்க கொஞ்சம் பதற்றப்படாமே யோசிக்கணும்” என்றார் தலைவர்.

“தோட்டத்திலே இருக்கிற எல்லாச் சனங்களுக்கும் நல்ல காரியம் ஒண்ணு செய்றது முக்கியமா, இல்லே உங்க அஞ்சாறு பேரோட லாபம் முக்கியமாங்கிறதை கொஞ்சம் யோசிக்கணும்”

“இதுலே யோசிக்கிறதுக்கு ஒண்ணுமில்லே தலைவரே என்ன பாடுபட்டுச் சேனை உண்டாக்கி இருக்குது!” என்று ஆத்திரமாக பொழிய ஆரம்பித்தான் ராசப்பன்.

“சேனைக்கும் தண்ணி தட்டுப்பாடுதான். பத்தாம் நம்பர் மலையிலே இருந்து தண்ணி எடுத்திருக்கோம் தலைவரே! அதுக்கே ஆளுக்கு பத்துப் பதினைஞ்சு கேட்டுப்புடுச்சு” என்றான் இன்னொருவன்.

“என்ன மாணிக்கம் சத்தத்தையே காணம்!” என்றார் தலைவர். மாணிக்கம் நிமிர்ந்து அவரைப் பார்த்து “என்னைப் பொறுத்தவரைக்கும் நீங்க என்ன சொல்றீங்களோ அதுக்குக் கட்டுப்பட தயார். ஆனா என்னோட மத்தவங்களும் .ேச னை போட்டிருங்காங்க அவங்களை மீறி நான் ஒண்ணு சொல்றது சரி இல்லே. அவங்களைக் கேழுங்க. அவங்க சம்மதிச்சா எனக்கும் சம்மதம்” என்றான்.

ஆனால் யாரும் மசியவில்லை. எல்லோரும் தலைவர் வீட்டி லிருந்து புறப்பட்டு தங்கள் லயங்களை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது மீண்டும் மாணிக்கம் பேச்சைக் கிளப் பினான், “தலைவர் சொன்னதுக்கு சரின்னு சொல்லாமேப் போனது எனக்கு மனசை உறுத்துது” என்றான்.

“சும்மா இருங்கண்ணே!” என்று அதட்டினான் ஒருவன். “எவனோ பொறாமைப்புடிச்சபய கெளப்பி விட்டிருக்கான். அதைக் கேட்டுக்கிட்டு இந்தத் தலைவரும் ஆடுறது. நீங்க இப்பத்தான்…”

“நாம சேனை போட்டுட்டதிலே எத்தனை பேருக்கு வயித் தெரிச்சல் தெரியுமா?”

“நம்ம ஆளுக புத்தியே அதுதானே! தானாகவும் விடமாட் பொழைக்க மாட்டான் பொழைக்கிறவனையும் விடமாட்டான்”

தங்களை மட்டுமே பார்த்துக்கொள்ளும் அவர்கள் பேச் சில் குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டு வந்தான் மாணிக்கம். இவ்வளவு காலமும் தனக்கு அந்நியோன்யமாக இருந்த அவர் கள் இப்போது திடீரென வேற்று மனிதர்களாகிவிட்டனர் போன்றிருந்தது. எதற்காகவோ அவனது உடலும் மனதும் குறுகுறுத்தன.

அன்று நள்ளிரவில் எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் புல்மலை தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது!

கறுப்புப் புடவையில் அகல ஜரிகை இழைவதுபோல இருளில் தீ பரவிக்கொண்டிருப்பதை நிதானித்துக்கொண்டு இனி முயன்றாலும் அணைக்க இயலாது என்பதை ஊர்ஜிதப் படுத்திக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் மாணிக்கம். கையில் வெற்று மண்ணெண்ணெய் ‘டின்’ ஆடிக்கொண்டிருந்தது.

இன்று தீயாகக் கனிந்தாலும் இன்னும் சில நாட்களில் குளிர்ந்து விதைத்து முளைக்கும் கனிவு மண்ணுக்கு உண்டு. இதை எவ்வளவுதான் எடுத்துச்சொன்னாலும் சக சேனைக்காரர்கள் புரிந்துகொள்ளப் போவதில்லை.

வேறு வழி…?

– தினகரன் 12-8-69

– ஒரு கூடைக் கொழுந்து, முதற் பதிப்பு: ஏப்ரல் 1980, வைகறை பப்பிளிகேஷன்ஸ், இலங்கை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *