மலைக்காளிக்கோவிலின் முற்றத்துத் திண்ணையில் காளிதேவியும் ஆனந்தனும் சும்மா அமர்ந்திருந்தனர். இங்கிருந்து பார்த்தால், 610 பாறைப் படிக்கட்டுகளுக்குக் கீழே இருக்கும் மலையடிவாரக் கடைகளும் அவற்றுக்கு அருகே அமந்திருக்கும் சிற்றாலயங்களின் கோபுர முகப்புகளும் தெரியும்.
மலையடிவாரத்தில் மக்கள் நடமாட்டம் குறைவாகத்தான் இருக்கும். விடுமுறைக்காலங்களில் மட்டும் கூட்டமே மிகும். அங்குள் சிற்றாலயங்களில் மக்கள் நுழைவர். ஆனால், மக்களுள் மிகச் சிலர்தான் பாறைப்படிகளில் ஏறி மலைக்காளிக்கோவிலுக்கு வருவார்கள். அவ்வப்போது இளங்காதலர்கள் தங்களின் கைகளைக் கோத்தபடியே மகிழ்ந்து பேசிக்கொண்டே, பாறைப்படிகளில் ஏறி நூறு அல்லது நூற்றைம்பது படிகளைக் கடந்ததும் களைத்து, அங்கேயே அமர்ந்திருந்து, பொழுதைக் கழித்துவிட்டு, இறங்கிச் செல்வர்.
ஒவ்வொரு நாளும் மலைக்காளியை வணங்க, காலையில் இரண்டு அல்லது மூன்று குடும்பத்தினர்களோ ஒன்றிரண்டு தனிநபர்களோதான் வருவர். மாலைப்பொழுதில் ஒரு குடும்பத்தினரோ அல்லது நான்கு அல்லது ஐந்து தனிநபர்களோதான் வருவர். இந்த எண்ணிக்கையில் குறைவு ஏற்படலாம். ஆனால், ஒருநாளும் இந்த எண்ணிக்கையைத் தாண்டியதில்லை. சிறப்புத் தினங்களில் அல்லது விடுமுறைநாட்களில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்குகள் அல்லது நான்கு மடங்குகள் மிகலாம். அதையும் உறுதியாகக் கூற முடியாது.
மக்கள் கூட்டம் வராத அந்த மலைக்காளிக்கோவிலில் காளிதேவியும் ஆனந்தனுமே மட்டுமே எப்போதும் இருப்பார்கள். பக்தர்கள் யாராவது மலைக்கோவிலின் பாறைப்படிக்கட்டுகளில் கீழிருந்து 500 படிகளைக் கடந்து மேலேறிக் கொண்டிருந்தால், உடனே காளிதேவி கோவிற்கருவறைக்குள் நுழைந்து, சிலையாக மாறி, அமர்ந்துகொள்வார்.
பக்தர்களுள் சிலர் பாறைப்படிகட்டுகளுள் 550 படிகளைக் கடந்துவிட்டு, ‘இனிமேலும் தம்மால் படியேற முடியாது’ என்ற முடிவுக்கு வருவதும் உண்டு. அந்த நிலையில் அவர்கள் மலைக்காளிக்கு எனக் கொண்டுவந்த நைவேத்தியப் பொருட்களைப் பாறைப்படியோரத்தில் வைத்துவிட்டு, அங்கேயே ஓய்வெடுத்து, பின்னர் இறங்கிச் செல்வதும் உண்டு. அந்த நைவேத்தியங்களைப் பறவைகளும் மலைவாழ் சிறு விலங்குகளும் எறும்புகளும் உண்டுவிடும்.
அப்படி எத்தனையே நைவேத்தியங்களைக் காளிதேவியும் ஆனந்தனும் மலைக்கோவிலின் முற்றத்துத் திண்ணையில் அமர்ந்தபடியே பார்த்திருக்கின்றனர். ஆனந்தன் காளிதேவியின் காலடியில் வைத்து, படைக்காத நைவேத்தியத்தைக் காளியின் பிரசாதமாக நினைத்து, உண்ண மாட்டான். ஆனந்தனால் உண்ண முடியாததைக் காளிதேவியால் எப்படித் தனக்குரிய நைவேத்தியமாக ஏற்க முடியும்?
‘ஒவ்வொருநாளும் யாராவது ஒரு பக்தராவது பாறைப்படிகளேறி வந்து, காளிதேவிக்குச் சிறிய அளவிலேனும் நைவேத்தியத்தைத் தந்துவிட வேண்டும்’ என்றுதான் ஆனந்தன் விரும்புவான். பெரும்பாலும் இந்த வேண்டுதல் நிறைவேறிவிடும். இந்த வேண்டதல் நிறைவேறாத நாட்களில் ஆனந்தன் பசியோடு இருப்பான். அவன் பசியோடு இருப்பதைக் காளிதேவி விரும்பமாட்டார். பிள்ளை பசியோடு இருப்பதை எந்தத் தாயால் பொறுத்துக் கொள்ள முடியும்?
ஆனால், காளிதேவியால் தன் பக்தர்களிடம் ‘தனக்கு நைவேத்தியம் தா’ என வலியுறுத்த முடியாது. காளிதேவி எல்லாவற்றையும் எல்லோருக்கும் கொடுத்துத்தான் பழகியிருக்கிறார்; யாரிடமும் எதையும் கேட்டு அல்ல. அதனால், காளிதேவி ஆனந்தனோடு சேர்ந்து தானும் பசிக்கொடுமையை அனுபவிப்பார். இருவரும் ஒருவாரம் வரையும்கூட பல்லைக் கடித்து, பசியைத் தாங்கிக் கொண்டிருப்பார்கள். பசியும் பசியின்மையும் அவர்களிருவருக்குமே பழகியிருந்தன.
மலைக்காலங்களில் பெரும்பாலும் மக்கள் மலைகாளிக்கோவிலுக்கு வருவதே இல்லை. கோடைக்காலத்திலும் அவ்வாறுதான். மக்கள் வரவில்லை என்றால் நைவேத்தியமும் இல்லை. நைவேத்தியம் கிடைக்கவில்லை என்றால், பிரசாதமும் இல்லை. மலைக்காளிகோவில் வளாகத்தில் காற்றைப் போலவே பசியும் சுற்றிக் கொண்டிருந்தது.
மலைக்காளிகோவில் வளாகத்துக்குப் பின்புறத்தில், வெளியே ஆனந்தனுக்கு என ஓர் அறை இருக்கிறது. அவன் இரவில் அங்குத் தங்கிக்கொள்வான். அவனுடைய தந்தை திலகன் அவனை இந்த மலைக்காளியிடம் ஒப்படைத்துச் சென்ற பின்னர், அவன் இந்த மலையைவிட்டு இறங்கவே இல்லை. அவன் மலையைவிட்டு இறங்கி இருபதாண்டுகளுக்கு மேலாகிறது.
ஆனந்தன் தன்னுடைய பதினெட்டாவது வயதுமுதல்தான் தன் தந்தையோடு இங்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டான். அதற்கு முன்பு பலமுறை ஆனந்தன் தன் தந்தையுடன் இங்கு வந்திருக்கிறான். கருவறைக்குள் நுழையாமல், உட்பிரகாரத்தில் நின்றபடியே காளிதேவியை வணங்கிவிட்டு, கோவிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு, கண்ணுக்கு எட்டிய தொலைவு வரையில் தெரியும் ஊரை வேடிக்கை பார்ப்பன். ‘இவ்வளவு உயரத்திலிருந்து ஊரைப் பார்ப்பது’ அவனுக்கு எப்போதுமே பிடித்தமான ஒன்றாகவே இருந்திருக்கிறது.
தன்னுடைய இருபதாவது வயது வரை அவன் தன் தந்தையோடு இங்கு வருவதும் தங்குவதுமாக இருந்தான். இந்த இரண்டு ஆண்டுகளில் அவரிடமிருந்து காளிக்குப் பூசைகளைச் செய்யக் கற்றுக்கொண்டான். திலகன் வாரத்தில் இரண்டு நாட்கள்தான் மலைக்கோவிலில் தங்குவார். மற்ற நாட்களில் காலையில் மலைக்கு வந்து மாலையில் திரும்பி விடுவார். அவரின் குடும்பம் மலையடிவாரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். அவருடைய இளைய மகன்தான் ஆனந்தன்.
ஆனந்தனைக் காளிதேவிக்குப் பிடித்திருந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்பாக, ஒருநாள் காளிதேவிதான் கேட்டார் திலகனிடம், “திலகா! உனக்குப் பிறகு எனக்கு யாரு பூசைசெய்வாங்க?” என்று.
“அதை நீதான் தாயீ முடிவு செய்யணும்” என்றார் திலகன்.
காளிதேவி சிரித்துக்கொண்டே, “என்னோட முடிவை நீ ஏத்துக்குவியா?” என்று கேட்டார்.
“-என்னதாயீ இப்படிக் கேட்டுப்புட்ட? உன்னோட முடிவுதான்தாயீ என்னோட முடிவு” என்றார் திலகன்.
காளிதேவி புன்னகைத்துக்கொண்டே, “சரி, உன்னோட இளைய மகனை எனக்குப் பூசை செய்யச் சொல்லு?” என்றார்.
மறுநாளே தன்னுடைய இளைய மகன் ஆனந்தனோடு, மலைக்காளிக்கோவிலுக்கு வந்தார் திலகன். காளிதேவியை வணங்கிவிட்டு, அவனுக்குப் பூசைமுறைகளைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். மாதங்கள் கடந்துகொண்டிருந்தன. ஆனந்தன் பூசை முறைகளைக் கற்றுத் தேருவதற்குள் இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. ஆனந்தனுக்கு இருபது வயது.
ஒருநாள் திலகன் தன் மகனைக் காளிதேவியின் கருவறைக்குள் நிறுத்தி, காளிதேவியிடம் பேசத் தொடங்கினார். தன் அப்பா காளிதேவியிடம் பேசுவதை முதன் முதலில் பார்த்தான் ஆனந்தன். அவனுக்கு அது மிகப்பெரிய வியப்பாக இருந்தது. காளிதேவி வாயைத் திறந்துபேசுவது அவனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாகவும் இருந்தது. இதெல்லாம் அவனுக்கு முதலில் அது கனவில் நடப்பதுபோலத்தான் தெரிந்தது.
காளிதேவியும் தன் தந்தையும் பேசிக்கொள்வதை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தான். காளிதேவி சிரிப்பதும் தன் தந்தை காளிதேவியைக் கேலிசெய்வதும் அவனுக்கு மிகுந்த மகிழ்வைத் தந்தன. தான் சொர்க்கத்தில் இருப்பதாகவே அவன் நினைத்தான்.
திலகன் தான் காளிதேவிடம் பேசுவதை யாரிடமும் ஏன் அவருடைய மனைவி, குழந்தைகளிடம்கூட இதுவரை கூறியதே இல்லை. திலகனுக்கு மலைக்காளிக்கோவில் சொர்க்கலோகம்; மலையடிவாரம் பூலோகம். ஓர் உலகத்தில் நடப்பவற்றை அவன் அடுத்த உலகத்தில் கூறுவதே இல்லை.
திலகன் இறுதியாகக் காளிதேவியிடம், “சரி, தாயீ! நான் உத்தரவு வாங்கிக்குறேன். இனி, எம்மகன் உன்னைப் பார்த்துப்பான்” என்று கூறிவிட்டு, கோவில் சாவியை ஆனந்தனின் கையில் கொடுத்தார்.
இருவரையும் திரும்பிப் பார்க்காமல் அவர் மலைக்கோவிலை விட்டு அகன்று, பாறைப் படிகளில் வேக வேகமாக இறங்கினார். மகனைச் சொர்க்கத்தில் இருத்திவிட்ட தந்தையின் பெருமிதம் அவரின் நடைவேகத்தில் தெரிந்தது. அவரின் நிழலாக, மகனை இழந்த தந்தையின் தவிப்பு பாறைப் படிகளில் படிந்து படிந்து இழுபட்டது.
இதுநாள்வரை திலகன் காளிதேவிக்கு அபிஷேகம் செய்ய பாறை இடுக்குகளில் வழியும் நீரைத்தான் பயன்படுத்தினார். அதையே தானும் பயன்படுத்த நினைத்தான் ஆனந்தன். காளிதேவிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆனந்தன், அதிகாலையில் அங்கிருந்து எடுக்கும் முதல் நீரைச் சேமித்து வைத்தான். அதைக்கொண்டு காளிதேவிக்கு அபிஷேகம் செய்தான். மற்ற நேரங்களில் அங்கிருந்து எடுக்கும் நீரைப் பருகினான். அதிலேயே குளித்தான்.
ஆனந்தனுக்குரிய உணவுகளாகக் காளிதேவிக்கு நைவேதியமாகப் படைக்கப்படுபவை மட்டுமே. பெரும்பாலும் அவை தேங்காயாகவும் வாழைப் பழங்களாகவும்தான் இருக்கும். காளிதேவிக்குப் படைக்கப்பட்டவற்றைப் பிரசாதமாக ஏற்று, அவற்றை மட்டுமே உண்டுவந்தான். அங்கேயே தங்கியிருந்து, முழுக்க முழுக்க மலைக்கோவில் வாசியாகவே மாறிவிட்டான் ஆனந்தன்.
ஆனந்தன் பகல் முழுவதும் காளிதேவியோடு பேசி, சிரித்துக் கொண்டிருப்பான். காளிதேவியும் அவனும் மலைக்காளிகோவில் வளாகத்தைச் சுற்றி வருவார்கள். கோவிலுக்குள் நடப்பார்கள். முற்றத்தில் அமர்ந்து தட்டாங்கல், ஆடு-புலியாட்டம், தாயம், பல்லாங்குழி என எதையாவது விளையாடிக் கொண்டிருப்பர்கள். விளையாட்டும் சலிப்பைத் தந்தால், முற்றத்துத் திண்னையில் அமர்ந்து, ஊர்க்கதைகளைப் பேசுவார்கள்.
ஆனந்தனுக்குக் காளிதேவியிடம் பேச மிகவும் பிடிக்கும். அதுவும் அவன் காளிதேவியிடம் ஊர்க்கதைகளைப் பேசுவதையே பெரிதும் விரும்புவான். அந்த ஊரில் வாழும் அத்தனைபேருடைய வாழ்க்கையும் காளிதேவிக்குத் தெரியும் என்பதால், இவன் யாருடைய பெயரைச் சொல்லிக் கேட்டாலும் காளிதேவி அவர்களின் பூர்வகுடிமுதல் அவர்களின் இப்போதைய நிலைமை வரை விரிவாகச் சொல்லிவிடுவார். அதுமட்டுமா, அவர்கள் இனி என்ன ஆவார்கள் என்பதையும் அவனுக்குக் கூறிவிடுவார் காளிதேவி.
ஆனந்தன் காளிதேவியின் சொற்களின் வழியாகவே இந்த இருபதாண்டுகாலமும் உலக நடப்புகளையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் மக்களின் வாழ்க்கை முறைகளையும் அறிந்துவந்தான். அவன் மலையைவிட்டு இறங்காவிட்டாலும் மலையடிவாரத்தில் நிகழ்பவற்றை முழுவதுமாக அறிந்திருந்தான். ஆனால், அவன் ஒருநாள்கூட தன் தந்தை, தாய், உடன்பிறந்தவர்கள் பற்றிக் காளிதேவியிடம் கேட்கவே இல்லை. ‘அவர்களைப் பற்றி நினைத்தாலோ அல்லது அவர்களைப் பற்றிக் காளிதேவியிடம் விசாரித்தாலோ தனக்கு உலக வாழ்க்கையின் மீது ஆசை ஏற்பட்டு தான் காளிதேவியைவிட்டு விலகிவிட நேர்ந்துவிடுமோ!’ என்று அஞ்சினான்.
ஆனந்தனுக்குக் காளிதேவியிடம் விளையாடுவதுதான் கொஞ்சம் பிடிக்காது. தனக்குப் ‘பொழுதுபோகவில்லை’ என்றால் மட்டுமே காளிதேவியை அழைத்து முற்றத்துத் திண்ணையில் அமர்ந்து விளையாடுவான். ஆனால், விளையாட்டுக்கு இடையில் காளிதேவி செய்யும் சில மாயங்களை அவன் வெறுப்பான்.
விளையாட்டில் காளிதேவி மாயம் செய்யத் தொடங்கினால், உடனேயே அவன் காளிதேவியின் மீது சினங்கொள்வான். காளிதேவியைத் திட்டத் தொடங்கிவிடுவான். “விளையாட்டில் மாயங்கள் புகுந்தால் அது ‘கள்ளாட்டை’தான். அந்த விளையாட்டு எனக்கு வேண்டாம்” என்று அவன் காளிதேவியிடம் சண்டையிடத் தொடங்கிவிடுவான். ஆனாலும், காளிதேவி ஒவ்வொரு விளையாட்டிலும் சிறிய மாயத்தையாவது செய்யாமல் இருக்கமாட்டார்.
கடந்தவாரம் இப்படித்தான் இருவரும் ‘ஆடு-புலியாட்டம்’ விளையாட நினைத்தார்கள். திண்ணையில் கோடு போட்ட அரங்கம். முக்கோணக் கூம்புக் கோடு. கூம்பின் உச்சியிலிருந்து அடிக்கோட்டை உள்ளே தொடும்படியாக மேலும் இரண்டு கோடுகள். இந்தக் கோடுகளை வெட்டும்படி போட்ட மூன்று கிடைக்கோடுகள். கிடைக்கோடுகளின் முனைகள் இருபுறமும் குத்துக் கோடுகளால் இணைக்கப்பட்டிருக்கும்.
‘ஆடு’கள் என்று 15 சிறு காய்கற்கள். ‘புலிகள்’ என்று சற்றே பெரிய காய்கற்கள். கோடுகள் ஆடும் புலியும் ஓடும் வழிகள். கோடுகள் கூடும் சந்திகள் காய்கள் வைக்குமிடம். புலிக்காய்கள் உச்சியில் ஒன்றும் அடுத்த சந்திகளில் இரண்டுமாக முதலில் வைக்கப்பட்டிருக்கும்.
ஆடுகள் ஒவ்வொன்றாகச் சந்திகளில் இறங்கும். ஓர் ஆடு இறங்கியதும் புலி அடுத்த சந்திக்கு நாலாப்பக்கமும் நகரும். நகரும்போது அடுத்த சந்தியில் ஆடு இருந்து அடுத்த நேர்த்திசைச் சந்தி காலியாக இருந்தால், புலியை வெட்டிவிட்டுத் தாவும். இவ்வாறு புலி தாவ இடம் இல்லாமல் ஆடு புலியைக் கட்டவேண்டும்.
எல்லா ஆடுகளும் இறங்கிய பின்னர் ஆடும், புலியும் மாறி மாறி நகர்த்தப்படும். புலி நகரமுடியாமல் ஆடுகள் புலியைக் கட்டிவிட்டால் ஆட்டுக்கு வெற்றி. எல்லா ஆடுகளையும் வெட்டிவிட்டால் புலிக்கு வெற்றி. இதுதான் ஆட்டம். ஆனால், காளிதேவிக்கு, ‘இந்த ஆட்டத்தில் நிஜ ஆடுகளும் நிஜப் புலிகளும் இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று தோன்றியது.
காளிதேவி ஆனந்தனிடம், “ஏம்பா! எதுக்கு வெத்துக் காய்கள். ஆட்டுக்கு ஆடு, புலிக்குப் புலி. அப்படி வச்சி ஆடலாமா?” என்று கேட்டார்.
முதலில் ஆனந்தன் தயங்கினான். பின்னர் சிந்தித்துவிட்டு, “தேவீ! நெசப் புலியா?” என்று கேட்டான்.
“ஏம்பா! உனக்குப் புலியின்ணா பயமா?” என்று கேட்டார் காளிதேவி.
“எனக்குப் புலியக்கண்டு எதுக்கு பயம்?. அதான் நீங்க எம்பக்கத்துலயே இருக்கீங்களே! உங்க முன்னாடி ஆடுகளை வைக்கத்தான் எனக்குப் பயம்” என்றான் ஆனந்தன்.
காளிதேவி சிரித்துக்கொண்டே, “என்னை நம்புப்பா. நான் ஆடுகளை ஒன்ணும் பண்ண மாட்டேன்” என்றார்.
ஆனந்தன் ஒப்புக்கொண்டான். உடனேயே முற்றத்துத் திண்ணை மிகப் பெரிய திடலாக மாறியது. காளிதேவியின் எண்திசைக்காவற் பெண்கள் எட்டுப் பேரும் அங்கு வந்தனர். அவர்கள் அந்தத் திடலில் மனித ரத்தத்தால் ‘ஆடு-புலி’ ஆட்டத்துக்குரிய கோடுகளை வரைந்தனர். கொழுத்த பதினைந்து வெள்ளாடுகளையும் சினம்கொண்ட மூன்று வரிப்புலிகளையும் கொண்டுவந்த நிறுத்தினர். காளிதேவியும் ஆனந்தனும் அந்தத் திடலுக்கு வெளியே எதிரெதிரே நின்றனர்.
புலிகள் காளிதேவிக்கும் ஆடுகள் ஆனந்தனுக்கும் என வகுத்துக் கொண்டனர். ஆட்டம் தொடங்கியது. எண்திசைக்காவற் பெண்கள் திடலுக்கு வெளியே நின்றிருந்தனர். புலி முதல் ஆட்டைத் தாண்டியதும். காளிதேவி துள்ளிக் குதித்தார். காளிதேவி மகிழ்ச்சியில், தன் புலியால் தாண்டப்பட்ட அந்த ஆட்டை எடுத்து விழுங்கிவிட்டார். ஆனந்தன் காளிதேவியைப் பார்த்து முறைத்தான்.
உடனே காளிதேவி, ஆனந்தனைப் பார்த்து ஒரு சிறுமியின் சிணுங்கலோடு “மன்னிச்சுக்கோப்பா! சந்தோஷத்துல என்னை செய்யுறேன்ணே எனக்குத் தெரியலப்பா” என்றார்.
ஆனந்தன் மகளை மன்னிக்கும் தந்தையின் பெருந்தன்மையோடு, “சரி, தேவீ. பரவாயில்ல. இந்தப் பதினாலாவது உயிரோட இருக்குற மாதிரி பார்த்துக்கோ” என்றான்.
ஒரு தருணத்தில் ஒரு புலி வெட்டுப்படும் நிலைக்கு வந்துவிட்டது. அது தான் ஆட்டிடம் தோற்க விரும்பாமல், ஓடிச் சென்று, காளிதேவியின் காலடியில் படுத்துக்கொண்டது. ஆனந்தன் எவ்வளவு கூறியும் எத்தனை முறை அழைத்தும் அது ஆடுகளத்துக்குள் வர மறுத்துவிட்டது. அந்தப் புலியை அதைத் தாண்டி வெற்றிகொள்ள ஆனந்தனின் ஓர் ஆடு ஆடுகளத்தில் ஆயத்தமாக நின்று கொண்டிருந்தது. புலி காளிதேவியின் பாதங்களைவிட்டு எழவேயில்லை.
காளிதேவி அந்தப் புலியின் முதுகைத் தடவிக்கொடுத்து, அதை எழுப்பி, அதன் மீது அமர்ந்துகொண்டார். ஆனந்தன் விளையாட்டைத் தொடர விருப்பம் இல்லாமல் அந்தத் திடலைவிட்டுச் சென்றான்.
காளிதேவி தன்னுடைய எண்திசைக்காவற் பெண்களுக்குச் சைகைகாட்டினார். உடனேயே அவர்கள் பதின்நான்கு ஆடுகளையும் பங்கிட்டு, விழுங்கினர். மூவர் மட்டும் ஆளுக்கு ஒரு புலியை அழைத்துக்கொண்டு சென்றனர். மற்ற ஐவர் ரத்தக்கறைபடிந்த ஆடுகளத்தைத் தூய்மை செய்தனர். ரத்தத்தால் வரையப்பட்ட ஆடுகளத்தை அழித்தனர். திடலைச் சுருக்கித் திண்ணையாக்கிவிட்டுச் சென்றனர். காளிதேவி முற்றத்துத் திண்ணையில் அமர்ந்துகொண்டு, ஆனந்தனைச் சமாதானம் செய்தார்.
நேற்று முந்தினம் பகலில் இங்கு வந்திருந்த ஒரு பக்தர் கொடுத்த தேங்காயைத்தான் காளிதேவிக்கு நைவேத்தியமாக ஆக்கியிருந்தான் ஆனந்தன். உடைக்கப்பட்ட அந்தத் தேங்காயின் அரைமூடியைப் பக்தருக்கே கொடுத்துவிட்டான். மீதமிருந்த அரைமூடியைத்தான் நேற்று இரவு வரை ஆனந்தன் உண்டான்.
இன்றைய காலைப்பொழுதில் எந்தப் பக்தரும் வரவில்லை. காளிதேவிக்கு நைவேத்தியம் ஏதும் இல்லை. அவன் தன் பசியை மறப்பதற்காகக் காளிதேவியைத் ‘தட்டாங்கல்’ விளையாட அழைத்தான். காளிதேவியும் ஆனந்தனும் கோவில் முற்றத்துத் திண்ணையில் அமர்ந்து ‘தட்டாங்கல்’ விளையாடினார்கள். முதலில் ஆனந்தன் ஆடினான்.
ஏழு கற்களையும் கீழே விரித்தவாறு இட்டு, அதில் ஒரு கல்லைத் ‘தாய்ச்சிக்கல்’ எனக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தக் கல்லை மட்டும் மேலே வீசியெறிந்துவிட்டு, அது கீழே கைக்கு வந்து சேருவதற்குள் கீழே இருக்கும் மற்ற ஆறு கற்களையும் ஒன்று மற்றொன்றுடன் இடித்துக்கொள்ளாமல் கையில் எடுக்க வேண்டும். அதுமட்டுமல்ல, மேலிருந்து விழும் தாய்ச்சிக்கல்லையும் பிடித்துவிட வேண்டும்.
தாய்ச்சிக்கல்லை மேலே எறிந்துவிட்டு, ஆறு கற்களையும் அலுங்காமல் எடுத்துவிட்டான் ஆனந்தன். மேலிருந்து விழுந்த தாய்ச்சிக்கல்லையும் சரியாகப் பிடித்துக்கொண்டான். இப்போது காளிதேவியின் முறை.
காளிதேவி ஏழு கற்களையும் வீசினார். அவர் வீசிய வேகத்தில் ஒரு கல் மட்டும் உருண்டு, திண்ணையை விட்டுக் கீழே விழுந்து, துள்ளிச் சென்று, முற்றத்தின் விளிம்பில் நின்றது.
இனி, காளி தன் கையிலிருக்கும் தாய்ச்சிக்கல்லை உயரத்தில் எறிந்துவிட்டு, அது கீழே விழுவதற்குள் கீழே உள்ள கற்களையும் உருண்டு சென்ற அந்த கல்லையும் எடுக்க வேண்டும். தாய்ச்சிக்கல்லையும் பிடிக்க வேண்டும். அது எப்படி முடியும்? ‘காளிதேவி தோற்றுவிடுவார்’ என்றுதான் ஆனந்தன் நினைத்தான். ஆனால், காளிதேவி வென்றார்.
காளிதேவி தன் கையிலிருந்த தாய்ச்சிக்கல்லைத் தூக்கி உயர்த்தில் எறிந்தார். அந்தக் கல் முற்றத்து உத்தரக் கல்லைத் துளைத்துக்கொண்டு, விண்ணுக்கு ஏறியது. ஆனந்தன் விழித்தான்.
காளிதேவி திண்ணையிலிருந்து இறங்கி, ஓடிச் சென்று, முற்றத்து விளிம்பில் கிடந்த அந்தக் கல்லையும் எடுத்துவந்தார். திண்ணையிலிருந்த கற்களையும் எடுத்தார். பின்னர் நிமிர்ந்து பார்த்தார். கற்கள் நிறைந்த உள்ளங்கையை ஏந்தினார். இதுவரையிலும் விண்ணில் உயரே உயரே பாய்ந்து சென்று கொண்டிருந்த அந்தத் தாய்ச்சிக் கல், மீண்டும் இறங்கி இறங்கி, முற்றத்து உத்தரக் கல்லில் தான் துளைத்திருந்த துளைவழியாகவே கீழிறங்கி, காளிதேவியின் உள்ளங்கையில் வந்து விழுந்தது.
உடனே, ஆனந்தன் எரிச்சலுடன் எழுந்தான். “போ தேவீ! உன்னோட மாயத்தையெல்லாம் விளையாட்டுல எதுக்குக் காட்டுற? உனக்குத் தெறமையே இல்லை. நீ தோத்துட்ட” என்று கூறிவிட்டு, பாறைப்படிக்கு முன்பு வந்துநின்றான்.
அப்போது கீழிருந்து 560ஆவது பாறைப்படியைத் தாண்டி இருவர் ஏறிவருவதைப் பார்த்தான். உடனே, திரும்பி காளிதேவியைப் பார்த்தான். காளிதேவி திண்ணையிலிருந்து துள்ளிக்குதித்திறங்கி, கருவறைக்குள் ஓடிச் சென்று சிலையாக அமர்ந்தார்.
வந்தவர்கள் ஆனந்தனிடம் ஒரு பெரிய பையைக் கொடுத்தனர். ஆனந்தன், அந்தப் பையை உட்பிரகாரத்துத் தரையில் கவிழ்த்தினான். உள்ளிருந்து செம்பட்டுச் சேலையும் வாழைப்பழசீப்பும் பத்திக்கட்டும் சூடப்பெட்டலமும் விளக்குக்கு ஊற்றும் எண்ணெய் பாட்டிலும் தேங்காயும் சம்பங்கிப் பூமாலையும் இருந்தன. ஆனந்தன் கருவறையைப் பார்த்தான். விளையாண்டுவந்த களைப்பில் காளிதேவிக்கு உடல் முழுவதும் வியர்த்திருந்தது. ஆனந்தன் பக்தர்களிடம் காளிக்கு அபிஷேகம் செஞ்சுட்டு இந்தப் பட்டை உடுத்திவிடட்டுமா?” என்று கேட்டான்.
அவர்கள் மகிழ்ச்சியோடு, “அப்படியே செய்யுங்க. நாங்க கொடுக்குறத காளி இப்பவே ஏத்துக்கிட்டா அதைவிட எங்களுக்கு வேற என்ன வேணும்?” என்று கேட்டனர்.
சரி, அரைமணிநேரம் ஆகும். நீங்க ஒக்காந்திருங்க. இல்லாட்டி கோவிலைச் சுத்திப் பாருங்க” என்றான் ஆனந்தன்.
அவர்கள் இருவரும் உட்பிரகாரத்துத் தூணில் சாய்ந்தபடி கால்களை மடக்கி அமர்ந்தனர். ஆனந்தன் அந்தப் பொருட்களை எல்லாம் ஓரமா ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்கள் கொண்டுவந்த பையை ஒரு மூலையில் தூக்கி எறிந்துவிட்டு, பட்டுச்சேலையை மட்டும் எடுத்துக்கொண்டு கருவறைக்குள் நுழைந்தான். கருவறையின் திரையினை இழுத்து, அடைத்தான்.
காளிதேவியின் முன்பாக நெடுங்சாண்கிடையாக விழுந்து வணங்கிவிட்டு, எழுந்தான்.
“தேவீ! உனக்கு ரெம்ப வேர்த்துருக்கு. இப்ப குளிச்சுட்டு இந்தப் பட்டுச் சேலையைக் கட்டிக்குறீயா?” என்று கேட்டான்.
“சரி. எனக்கு மஞ்சத்தண்ணீல அபிஷேகம் பண்ணு” என்றார் காளிதேவி.
“நம்ம கிட்ட ஏது மஞ்சள்? அவுங்க மஞ்சள் வாங்கிட்டு வரலையே!” என்றான் ஆனந்தன்.
“அவங்க கொண்டுவந்த பையை நல்லாப் பாத்தீயா?” என்று கேட்டார் காளிதேவி.
“தேவீ! அதைத் தலைகீழாக் கொட்டிப் பார்த்துட்டேன். அதுல இல்லை” என்றான்.
காளிதேவி மௌனமாக இருந்தார்.
ஆனந்தன் காளிதேவியின் மௌத்தைப் புரிந்துகொண்டு, “சரி, சரி. அடுத்து யாராவது மஞ்சள் வாங்கிட்டு வந்தா உடனேயே அதை வச்சு அபிஷேகம் பண்ணீறேன் தேவீ!” என்றான்.
காளிதேவியின் கையிலிருந்த சூலத்தை எடுத்து ஒரு மூலையில் சாய்த்து வைத்தான். காளிதேவியின் வெள்ளித்தண்டைகளையும் புல்லாக்கையும் மூக்குத்தியையும் காதணிகளையும் மணிமுடியை எடுத்து, அருகில் இருந்த பித்தளைத் தாம்பளத்தில். பழைய சேலையை நீக்கிவிட்டு, காளியின் உடலுக்கு எண்ணெய் தேய்த்தான். காளிதேவி மின்னும் கருஞ்சிற்பமாகத் தங்கத்தாலியுடன் அமர்ந்திருந்தார்.
பித்தளை அண்டாவிலிருந்து நீரை எடுத்து காளியின் தலைவழியாக ஊற்றினான். வழக்கமாக, காளிதேவி குளிக்கும் போது அவனிடம் ஏதாவது பேசிக்கொண்டுதான் இருப்பார். ‘இப்போது காளிதேவி தன்னிடம் ஏதும் பேசவில்லையே!’ என்று நினைத்தான் ஆனந்தன்.
காளிதேவி தன் உதடுகளை இறுக்கி, ‘உம்’ என்று தன் முகத்தை வைத்திருப்பதை பார்த்தான். பார்ப்பதற்குச் சினம்கொண்ட சிறுமிபோல இருந்தார் காளிதேவி. அவரைப் பார்த்து, ஆனந்தன் தன் வாயைத் திறக்காமலேயே சிரித்தான். காளிதேவி அவனைப் பார்த்து முறைத்தார்.
காளிதேவிக்கு இரண்டு குடம் தண்ணீரை ஊற்றியதும் அண்டாவில் தண்ணீர் தீர்ந்துவிட்டது. எப்போதும் மூன்று குடம் நீரை ஊற்றுவான். அதனால், இன்னொரு குடம் நீரை எடுத்துவருவதற்காக, அவன் பித்தளைக் குடத்தை எடுத்துக்கொண்டு, கருவறைத் திரையைச் சிறிதளவு விலக்கி, வெளியே வந்தான்.
கோவிலின் வெளிப்பிரகாரத்தில், வலப்புறத்தில் இருந்த பாறையூற்றிலிருந்து குடம் நிறைய தண்ணீரைப் பிடித்தான். குடத்தைத் தன் தோளில் இருத்திக்கொண்டு நடந்துவந்தான். உட்பிரகாரத்தைக் கடக்கும்போது, அவன் வழிகள் தற்செயலாக அவர்கள் கொடுத்த பையைப் பார்த்தான். அப்போது அவனுக்குக் காளிதேவி தன்னிடம், “அவங்க கொண்டுவந்த பையை நல்லாப் பாத்தீயா?” என்று கேட்டார் காளிதேவி தன்னிடம் கேட்டது நினைவுக்கு வந்தது.
குடத்தை அங்கேயே இறக்கிவைத்துவிட்டு, அந்தப் பையை எடுத்து, அதனுள் தன் கையை நுழைத்துத் துழாவினான். ஒரு டப்பா இருந்தது. அதைத் திறந்தான். கஸ்தூரி மஞ்சள். புன்னகைத்துக்கொண்டே அதையும் குடத்து நீரையும் எடுத்துக்கொண்டு, கருவறைத் திரையைச் சிறிதளவு விலக்கி, உள்ளே சென்றான்.
கருவறையின் ஈரத்தரையில் காளிதேவியின் முன்பாக நெடுங்சாண்கிடையாக விழுந்து, “மன்னிச்சுக்கோ தேவீ! நான்தான் சரியாப் பார்க்கலை” என்று கூறி, வணங்கிவிட்டு, எழுந்தான்.
அந்தக் குடத்து நீரில் கஸ்தூரி மஞ்சளைக் கரைத்தான். காளிதேவியின் தலைவழியாக மஞ்சள்நீரை ஊற்றினான். காளிதேவியின் உதடுகள் மஞ்சள்பூவாக விரிந்தன. காளிதேவி சிரிக்கத் தொடங்கினார்.
குடத்தை ஓராமாக வைத்துவிட்டு காளிதேவியிடம், ஆனந்தன் புன்னகைத்தவாரே, “தேவீ! இப்ப திருப்தியா?” என்று கேட்டான்.
காளிதேவி சிரித்துக்கொண்டே, “ஆமாம். இப்ப திருப்திதான். நீ குடத்துல தண்ணீ எடுக்க போனப்பத்தான் நான் அந்தப் பையில நான் மஞ்சள் டப்பாவை வச்சேன்” என்றார்.
உடனே, ஆனந்தன் சற்றுக் கண்டிப்புடன், “இந்த மாயமெல்லாம் செய்யக்கூடாது. பக்தர்கள் கொண்டுவரதத்தான் ஏத்துக்கணும்” என்றான்.
குற்றாலத் துண்டால் காளிதேவியின் உடலைத் துடைத்தான். அவர்கள் வாங்கிவந்திருந்த செம்பட்டைப் பிரித்து, நேர்த்தியாக மடித்து, காளிதேவிக்கு உடுத்திவிட்டான். அணிகலன்களை ஒவ்வொன்றாக அடுத்து காளிதேவிக்கு அணிவித்தான். இறுதியாகக் காளிதேவியின் கையில் அந்தச் சூலத்தைக் கொடுத்துவிட்டு, கருவறைத் திரையை விலக்கினான். உடனே, தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த இருவரும் துடிப்புடன் எழுந்தனர்.
சம்பங்கிப் பூமாலையை எடுத்துச் சென்று, காளிதேவிக்கு அணிவித்தான். மீண்டும் வெளியே வந்தான். வாழைப்பழங்களையும் தேங்காவையும் எண்ணெய் டப்பாவையும் எடுத்துச் சென்றான். வாழைப்பழத்தைக் காளிதேவிக்குப் படைத்தான். தொங்கும் சரவிளக்கில் எண்ணெய்யை ஊற்றி நிறைத்தான். திரியைத் தூண்டிவிட்டான்.
இதுவரைத் தூங்கிச் சுடர்ந்த தீபம், துள்ளி எழுந்து, தீப்பந்தம்போலச் சுடரத் தொடங்கியது. அந்த ஒளியில் தேவியின் அழகுமுகம் மஞ்சள்நிலா போலப் பொலிந்தது. ஆனந்தன் தேங்காயை எடுத்து, உடைத்தான். காளிதேவிக்குத் தீபாராதனை செய்தான். தீபத்தட்டை எடுத்துக்கொண்டு, வெளியே வந்தான். அவர்கள் வணங்கிவிட்டு, தீபத்தட்டில் பத்து ரூபாய்த்தாளை வைத்தனர்.
ஆனந்தன் அந்தத் தாளை எடுத்து அவர்களிடமே நீட்டி, “மலையடிவாரத்துல இருக்குற சிவராமன் பலசரக்குக் கடையில இந்தப் பணத்தைக் கொடுத்துடுங்க” என்றான்.
அவர்கள் அந்தப் பணத்தை வாங்க மறுத்தனர். “சாமி! எதுக்கு இது?. நாங்க வேணும்ணா அந்தக் கடையில பத்து ரூபாயைக் கொடுத்துடுறோமே. இந்தப் பணம் காளிக்கு எங்களோட காணிக்கையாச்சே” என்றனர்.
ஆனந்தன் அவர்களிடம், “தேவீயோட கணக்கை தேவீயோட காணிக்கையில இருந்துதானே தீர்க்கணும்?” என்று அவர்களிடம் கேட்டுவிட்டு, தொடர்ந்து அவர்களிடம் பேசினான்.
“இந்தப் பணம் எதுக்குன்ணா, தேவீ அந்தக் கடையில இருந்து இப்ப எடுத்துட்டு வந்த கஸ்தூரி மஞ்சள் டப்பாவுக்கு” என்றான் ஆனந்தன்.
அவர்களுக்குப் புரியவில்லை. ஆனந்தன் அவர்களுக்கு இதைப் பற்றி விளக்குவதற்காக மேலும் பேச வேண்டியிருந்தது. ஆனால், அதைப் பற்றி இவர்களிடம் பேசிப் பயனில்லை. இவர்களுக்குத் தேவீயின் விளையாடல்கள், மாயங்கள் ஏவையும் புரியாது.
ஆனந்தன் அவர்களிடம் சுருக்கமாக, “இது தேவீயோட கணக்கு. நமக்கெல்லாம் புரியுமா என்ன? நீங்க போறப்ப அந்தக் கடையில ‘இது தேவீ கணக்கு’ன்ணு சொல்லிக் கொடுத்துடுங்க” என்றான்.
அவர்கள் மிகவும் பணிவோடு அந்தப் பத்து ரூபாய்த் தாளை வாங்கிக்கொண்டனர். அவர்கள் சென்றவுடன், ஆனந்தன் அந்த வாழைப்பழங்களுள் ஒன்றை எடுத்துக்கொண்டு, முற்றத்துத் திண்ணையில் வந்து அமர்ந்தான்.
அதை அவன் உண்ணத் தொடங்கும்போது, காளிதேவி செம்பட்டுச் சேலையில் வந்து அவனுக்கு அருகில், திண்ணையில் புன்னகையோடு அமர்ந்தார். இந்தச் சேலை எனக்கு எப்படி இருக்கு?” என்று கேட்டார் காளிதேவி.
உனக்கு என்ன தேவீ! எதுனாலும் உனக்கு நல்லாத்தான் இருக்கும். அந்தத் துணியாலையா நீ அழகாகுற? உன்னாலத்தானே அந்தத் துணி அழகாகுது!” என்றான் ஆனந்தன்.
காளிதேவி வெட்கப்பட்டார்.
“ஆனா தேவீ, இங்க வர்ற யாரும் இந்தப் பூசாரிக்கு ஒரு வேட்டித் துணியக் கொடுக்க மாட்றாங்க. நான் ரொம்ப நாளாவே உன்னோட பழைய சேலயத்தான் கிழிச்சு கிழிச்சுக் கட்டிக்கிட்டு இருக்கேன். அது உனக்குந்தெரியுந்தான். ஆனா, அதைப் பாத்தும் பாக்காமலும் நீ இருக்க” என்றான் ஆனந்தன்.
அவன் கூறுவது தன் காதில் விழாதவாறு அமர்ந்திருந்தார் காளிதேவி.
அவனும் அமைதியாக இருந்தான்.
காளிதேவி பழைய நினைவில் மூழ்கியவராக, “ஆனந்தா! முன்னாடியெல்லாம் செவ்வா, வெள்ளிக்கு இங்கக் கூட்டம் அலைமோதும். வருஷப் பெறப்புன்ணாபோதும் கூட்டம் இந்தக் கோவில் கொள்ளாது. வாரத்துல ஒருநாள் ஆடோ, வாரத்துல மூணுநாள் சேவலோ அறுப்பாங்க. சிலநாள் எலுமிச்சை மாலையைக் கொண்டுவந்து என்னோட கழுத்திலேர்ந்து கால்வரை தொங்க விடுவாங்க. உங்க அப்பா மறுநாள் அந்த மாலையைக் கழட்டி, பழச்சாறை பனைவெல்லத்தோட கரைச்சு, பாணக்கரமாக்கி எனக்குப் படைப்பாரு. அது அப்படித் தித்திக்கும்” என்றார்.
ஆனந்தன் காளிதேவியின் முகத்தை நிமிர்ந்து பார்த்து, “இப்பெல்லாம் மக்களுக்கு நேரமுமில்லை, கையில காசும் இல்லை” என்றான்.
காளிதேவி அமைதியாக இருந்தார்.
ஆனந்தன் சற்றுத் தயங்கியபடியே, காளிதேவியை, “தேவீ!” என்று அழைத்தான்.
காளிதேவி, ‘என்ன?’ என்பதுபோல அவனைப் பார்த்தார்.
ஆனந்தன் காளிதேவியிடம், “தேவீ! எனக்குப் பிறகு உன்னை யாரு பார்த்துப்பா?” என்று கேட்டான்.
“யாரும் இல்லை” என்றார் காளிதேவி.
“அப்புறம் நீ எப்படி இருப்ப?” என்று கேட்டான் ஆனந்தன்.
“அப்படியேதான் இருப்பேன்” என்று கூறிய காளிதேவி, தன் வலக்கையை வானை நோக்கி உயர்த்தி, ஆட்காட்டி விரலை நிமிர்த்தி, “அதோ அந்த அந்தரத்துல” என்றார்.
“அந்தரத்துலையா? ஏன் இந்த மலையிலேயே இருக்க வேண்டியத்தானே!” என்றான்.
காளிதேவி கலகலவெனச் சிரித்துக்கொண்டே, “மலையிலேயோ? இந்த மலையே இருக்காது” என்றார்.
ஆனந்தன் அதிர்ந்துவிட்டான். “என்ன தேவீ சொல்ற? மலை இருக்காதா?. இது உன்னோட இடம். இது எப்படி இல்லாமல் போகும்?” என்று கேட்டான்.
“ஆமாம். இது என்னோட இடம்தான். இப்போதைக்கு இது என்னோட இடம். ஆனா, இது எனக்கு நிரந்தரமான இடம் இல்லையே! என்னோட நிரந்தரமான இடம் அந்த அந்தரம்தான்” என்றான் காளிதேவி.
“தேவீ! அப்படின்ணா நீ நான் இருக்குற வரைக்குந்தான் இந்த மலையில இருப்பியா?” என்று கேட்டான்.
“ஆமாம். இந்த மலையை உடைக்க ஆரம்பிச்சதும் நீ இந்த மலையில இருந்து உருண்டு, செத்துடுவ. நான் அந்தரத்துக்குப் போயிடுவேன்” என்றார் காளிதேவி.
“மலையை உடைப்பாங்களா? யாரு?” என்று கேட்டான் ஆனந்தன்.
அப்போது அந்தக் கோவிலுக்குப் பின்புறத்தில், மலையடிவாரத்தில் வெடிவைத்து பாறைகள் உடைக்கப்படும் சப்தம் கேட்டது. மலையே மெல்ல அதிர்ந்தது.
காளிதேவி கருவறைக்குள் நுழைந்து சிலையானார். ஆனந்தன் கோவிலுக்குப் பின்னால் ஓடிச் சென்று, முடிந்தவரை குனிந்து, மலையடிவாரத்தில் இருப்பது யார் என்பதை அறிய முயன்றான்.
ஆனந்தனின் தந்தை இறந்த பின்னர், அவனின் அண்ணன் குவாரி ஏஜெண்டாகி, சட்டவிரோதமாக வெவ்வேறு மலைக்குன்றுகளை அழித்துவந்த விசயம் ஏதும் ஆனந்தனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
இப்போது ஆனந்தனின் கண்களுக்கு மலையடிவாரத்தில் இருந்த பெரிய பெரிய எந்திரங்கள் மட்டுமே தெரிந்தன. அவை எந்திரங்களா? அல்லது எந்திரங்களைச் சுமந்த வாகனங்களா? என்பதை அறிய, அவன் மேலும் குனிந்தான்.
அடுத்த பாறைவெடி வெடித்த அதிர்ச்சியில், அவன் அந்த மலைக்காளிக் கோவிலின் பாறை விளிம்பிலிருந்து மலையடிவாரத்தை நோக்கி வேகமாக உருளத் தொடங்கினான். காளிதேவி கோவிற் கருவறையிலிருந்து வான்நோக்கி எழுந்து, வானில் நிரந்தரமாகவே எறியப்பட்டுவிட்ட ‘தாய்ச்சிக்கல்’ போலச் சென்றுகொண்டிருந்தார்.
வணக்கம் ஐயா! இச்சிறுகதையில் தோன்றும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் இயல்பு வாழ்க்கையில் பார்க்கும் கதாப்பாத்திரமே.அதிபுனைவு கதையாக இருந்தாலும் கட்டாயத்திற்காக எப்பாத்திரமும் புகுத்தப்படவில்லை .காளியின் உரையாடல் மிக அருமை . இயற்கையின் மீதும் மனிதன் அன்பைச் செலுத்த வேண்டும் என்பதை அருமையாகக் கூறியுள்ளீர்கள். தங்களின் மொழி நடை கதைக்கு வலு சேர்க்கிறது . வாழ்த்துக்கள்.