மரம் வேண்டுமே மரம்!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,397 
 
 

ஜில் என்று சுகமாய் வீசி, தூக்கத்தை வரவழைத்தது வேப்ப மரத்து காற்று, மரத்தின் கீழ் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் பட்டாளம்.
“”இதுக்குத்தான் இந்த வேப்ப மரத்துக்குக் கீழே படிக்க வர மாட்டேன்னு சொன்னேன். மணிய பாரு, ஒன்பது தான் ஆச்சு. தூக்கம் கண்ணை சொருகுது,” என்று புலம்பினான் முனி; முழு பெயர் பாணா முனி.
“”காத்தாலேயே வயிறு முட்ட தின்னா, தூக்கம் வராம என்ன பண்ணும்? நம்ம நாலு பேர்தான் இருக்கோம். மாரிய காணோமே,” என்றாள் தெய்வானை.
மரம் வேண்டுமே மரம்!“”நீயும், மாரியும், நகையும், கல்லுமா இருப்பீங்க… மாரி எங்கே?” என்றான் பரட்டை.
தினமும் தலைக்குக் குளித்து, எண்ணெய் தேய்க்காமல் இருப்பதால் பரட்டை என்ற பட்டப் பெயர் ஆனது.
“”அது என்னடா நகையும், கல்லுமா… நகமும் சதையுமான்னு தானே சொல்வாங்க?” என்றான் கருப்பு.
“”அது பழைய மொழி; இது புதுமொழி. கல்லு வச்ச நகையில, கல்லு விழுந்துட்டா நகையை போட மாட்டாங்க. நகையும், கல்லும் பிரியவே பிரியாது. அது மாதிரி தான், மாரியும் தெய்வானையும்,” என்றான் பரட்டை.
“”சும்மா இருங்கப்பா… படிச்சது மண்டைலே பதிய மாட்டேங்குது.”
“”மண்டேல பதியணும்ன்னா, ஆணி வச்சு அடிக்க வேண்டியது தானே… அது தான், நல்லா ஆழமா பதியும்.”
“”என்ன கிண்டலா… படிக்க வந்துட்டு… சும்மா பேசாம படிங்க.”
“”என்னத்த படிக்கிறது… துரைசாமி சார் குறிச்சுக் கொடுத்த கேள்வி எல்லாம் மாரிக்கிட்ட தான் இருக்கு,” என்றாள் தெய்வானை.
“”பேர பாரு மாரியாத்தா, தெய்வானை, பரட்டை, கருப்புச்சாமி, பாணா முனி. டவுன் புள்ளைங்க பேர பாரு, எம்புட்டு அழகா வச்சிருக்காங்க. நமக்கும் தான் வச்சு இருக்காங்களே, சாமி பேரு, பூசாரி பேருன்னு,” சலிப்பாய் அலுத்துக் கொண்டான் கருப்பு.
மாரி என்ற மாரியாத்தாள் வந்து கொண்டு இருந்தாள். கொஞ்சம் சிவப்பாய், பாவாடை சட்டை, இரட்டை பின்னல், அழுது வீங்கிய முகமாய் வந்தாள்.
யாருடனும் பேசாமல், மரத்தைச் சுற்றி சுற்றி வந்தாள். பின் வேப்ப மரத்தை சுற்றி போடப்பட்டிருந்த சிமென்ட் சீட்டில் உட்கார்ந்து, அழ ஆரம்பித்தாள்.
நால்வரும் மாறி மாறி, கேள்வியாய் கேட்டனர். ஒன்றும் பேசாமல் அழுது கொண்டே இருந்தாள்.
“”மாரி… என்ன, ஏதுன்னு சொல்லாம, ஊமைக்கோட்டானாட்டம் நைநைன்னு அழுதா, என்ன செய்றது… சொல்லிட்டு அழு.”
கண்களை துடைத்தவள், நால்வரையும் பார்த்து, “”இந்த வேப்ப மரத்தை வெட்டப் போறாங்களாம்,” என்றாள்.
நால்வரும் அதிர்ந்து போயினர்.
“”என்ன சொல்ற மாரி?”
“”ஆமா… திருவிழாவுக்கு மாரியம்மனுக்கு, அறுபதடி பூக்குண்டம் எறக்குவாங்கில்ல, அதுக்கு பூவளக்க, விறகு வேணுமில்ல. அதுக்குத்தான் இந்த மரத்தை வெட்டப் போறாங்களாம்… ஊருக்குள்ள அரச மரம், ஆலமரம், கருவேல மரம் இருக்குதாம்… அதை வெட்டிக் காயப் போட்டா சீக்கிரம் காயாதாம்…
“”வேப்ப மரம் சீக்கிரம் காய்ஞ்சி போயிடுமாம்… அன்னதானம் போட, ஊருக்குள்ள பணம் வாங்கிட்டதாலே, விறகு வாங்க பணம் கேக்க முடியாதாம். சுத்துப்பட்டி கிராமத்துக்கும், அன்னதானம் போடணுமில்ல. எவ்வளவு விறகு செலவாகும்… அதனால, மரத்தை வெட்டி காய போட்டா, பூவளர்க்க ஆகும், சோறு ஆக்கறதுக்கும் ஆகுமாம்.
“”மரத்தை வெட்ட ஆளு கிடைக்கலையாம். அதனால், வர்ற ஞாயிற்றுக்கிழமை, நம்ம கிராமத்தில இருந்து, வீட்டுக்கு ஒருத்தர்ன்னு வந்து, மரம் வெட்டி, காய போடுற வேலை, அன்னதானத்துக்கு செய்யற வேலையை எல்லாம் பங்கு போட்டு செய்யணுமாம். இதெல்லாம், வீட்டுல அப்பாகிட்ட, ஊர் பெரியவங்க சொல்லிட்டு இருந்தாங்க…
“”நமக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து, இந்த மரம், நம்மள்ள ஒன்னா இருக்குது. இதை போய் வெட்டறாங்கன்னு தெரிஞ்சதும், அழுகை தாங்க முடியல,” என்று சொல்லிக் கொண்டே அழுதாள்.
நால்வரும் திகைத்துப் போய், என்ன செய்வது என்று யோசித்தனர். நிமிர்ந்து வேப்ப மரத்தை பார்த்தனர்.
“வானத்தைத் தொடட்டுமா?’ என்று கேட்பது போல், உயர்ந்து நின்றது.
சொர்ணபுரி, பசுமை எழில் கொஞ்சும் அழகிய கிராமம்.
கிராமத்தை சுற்றிலும், பச்சைப் பசேல் என்ற வயல்வெளி, தென்னை, மா தோப்புகள், வாழை, கரும்புத் தோட்டம், வெற்றிலை கொடிக்கால் என்று, எங்கு பார்த்தாலும், பச்øŒ பசேல் என்று காட்சியளிக்கும்.
ஆற்றங்கரைக்கு சற்று தொலைவில் இருக்கிறது இந்த வேப்ப மரம். ஐந்து, ஆறு பேர் கை கோர்த்து சுற்றி கட்டி பிடிக்கும் அளவு கொண்டது. மரத்தின் வேர்களை மூடி, கான்கிரீட் தளம் போடப்பட்டுள்ளது. அதில், முப்பது பேராவது அமரலாம்.
மரத்து நிழலில் ஆடு, மாடு மேய்ந்து விட்டு இளைப்பாறும். வயல் வேலை செய்யும் ஆண்கள், பெண்கள் மதிய சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, சற்று ஓய்வாக கண் மூடுவர். மரத்தில் அணில், காக்கை, குயில், கிளி, மைனா, கொக்கு, நாரை, செம்பூத்து குருவி என்று, பறவை இன பட்டாளமே வசிக்கிறது.
இதை வெட்டப் போகின்றனர் என அறிந்ததும், என்ன செய்வது என்று தெரியாமல், புலம்பினர். என்ன செய்வது என யோசித்ததில், மேலும் இரண்டு நாட்கள் ஓடின.
“”ஏதாவது வழி இருக்கா, சொல்லுங்கப்பா… பேய், பிசாசு இருக்குதுன்னு புரளியை கிளப்பி விடலாமா… நம்ம கிராமத்துக்காரங்களுக்கு சாமி பக்தி அதிகம். மாரியாத்தாளுக்கு கயிறு மந்திரிச்சு கட்டிட்டு வெட்டுவாங்க.”
“”போலீஸ்ல போய் சொல்லலாம். மரத்தை வெட்டக்கூடாதுன்னு சட்டம் இருக்குல்ல.”
“”உருப்படியா ஏதாவது சொல்லுங்கய்யா…”
“”ஒரே வழி தான் இருக்கு.”
வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணி. மாலை நேர பூஜைக்காக சர்வ அலங்காரத்துடன் அருள் பாலித்தாள் மாரியம்மன்.
பூஜை முடிந்ததும், அருள் வாக்கு கேட்க, உடுக்கை அடித்து, அம்மனை அழைத்தார் பூசாரி. பெண்கள் நடுவில், “”டேய்…” என்ற பெரும் குரல் கேட்டது. அனைவரும் திரும்பி பார்த்தனர். மாரி இரண்டு கைகளையும், பின் தலையில் கட்டிக் கொண்டு, கீழே உருண்டாள்.
“”மாரி மேலே, ஆத்தா எறங்கிட்டா… தண்ணீர் ஊற்றி வாக்கு கேளுங்க,” என்றார் ஊர் பெரியவர்.
தண்ணீர் ஊற்றி, திருநீர் போட்டுக் கேட்டனர்.
“”டேய்… இந்த அக்கினி வெய்யிலோட வேக்காளம் தாங்க முடியலடா… ஊருக்குள்ள எறங்கி வரலாம்ன்னு இருக்கேன்டா.”
“”வேண்டாம் ஆத்தா…” என்று பதறினார் பூசாரி.
“”ஊரைக் காப்பாத்தற தெய்வம் நீ… மூணு நேரம் பாலாபிஷேகம் செய்றோமே தாயி.”
“”இந்தக் கோவிலுக்குள்ள இருக்க முடியலேடா… ஆத்தங்கரைக்கு பக்கத்தில இருக்கிற வேப்ப மரத்துல குடிகொள்ள போறேன்டா… ஒரு நேரத்து பூஜை மட்டும், அந்த வேப்ப மரத்துக்கு செய்யுங்கடா… நான் போறேன்டா,” என்று சொல்லி, திருநீறு தட்டில் எரிந்து கொண்டிருந்த சூடத்தை எடுத்து வாயில் போட்டு மயங்கி சரிந்தாள் மாரி.
தண்ணீர் தெளித்து எழுப்பினர். மெதுவாக கண் திறந்தாள். தனக்கு என்ன நடந்தது என தெரியாமல் விழித்தாள்.
“”ஆத்தா, வேப்ப மரம் உனக்கு ஒப்பானதுன்னு தெரியாம, வெட்ட நினைச்சோம். சாமி குத்தம் ஆகியிருந்த காரியத்தை தடுத்து நிறுத்திட்ட. இனி, மரத்தை வெட்டணுங்கிற நினைப்பு, கனவுலே கூட வராது ஆத்தா…” என்று வேண்டினர்.
மறுநாள் காலை 9.00 மணி, மரத்தின் நிழலில் மாரி அமர்ந்து இருந்தாள். கை எல்லாம் சற்று சிராய்ப்பு.
மாரியை பார்த்தவுடன், நால்வரும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தனர். சிரிப்பு தாளாமல், கண்களில் நீர் வழிந்தது.
“”என்னைப் பார்த்தா எப்படி இருக்குது… கிண்டல் பண்றீங்களா?” கோபத்துடன் கேட்டாள் மாரி.
“”இந்த வருஷ சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் அவார்டு, தேசிய விருது எல்லாம் உனக்குத் தான். நாங்க எல்லாரும் உன்னை தான் சிபாரிசு செய்வோம்,” என்றான் பரட்டை.
கோபம் போய் மாரியும் சிரித்தாள். “”போங்கப்பா… இப்பதான் சிரிப்பு வருது. சாமி வந்தா மாதிரி நடிக்க எவ்வளவு பயமா இருந்துச்சு தெரியுமா… மனசு திக்கு திக்குன்னு இருந்துச்சு… இங்க பாரு, கை எல்லாம் காயம். உருண்டு புரண்டப்ப காயம் ஆயிடுச்சு,” என்று, கைகளை காட்டினாள் மாரி.
“”எங்களுக்கும் பயமாத்தான் இருந்துச்சி… வேப்பிலையில அடிப்பாங்களோ என்னவோ… எங்க, நடிப்புங்கறதை கண்டு பிடிச்சிடுவாங்களோன்னு…. இருந்தாலும், உனக்கு ரொம்ப நன்றி மாரி… உண்மையாகவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.”
“”இந்த மரத்தை மட்டும் இல்ல; ஊருக்குள்ள இருக்கிற எந்த மரத்தையும் வெட்ட மாட்டாங்க…” என்றான் கருப்பு.
“”ஒரு மரத்தை நட்டு வச்சு வளர்த்தாலும், இவ்வளவு பெரிய மரமா வளர்றதுக்கு, பல வருஷமாவது ஆகும் இல்ல.”
“”இந்த மரத்தை மட்டும் இல்ல; இதுல வாழற நூத்துக்கணக்கான பறவைகளையும் காப்பாத்திட்டோம்… பறவைகளுக்கு பேசற சக்தி இருந்தா, கண்டிப்பா நமக்கு நன்றி சொல்லி இருக்கும்,” என்றான் முனி.
இவன் சொன்னது, பறவைகளின் காதுகளில் விழுந்தனவோ, என்னவோ… தங்களின் இனிமையான குரலில், “கீச்…கீச்’ என, பாட ஆரம்பித்தன.
ஐந்து பேரும் நிமிர்ந்து மரத்தைப் பார்த்தனர்.
நன்றி சொல்வது போல், “ஜில்’ என்ற காற்றை அள்ளி தெறித்தது. அனைவரின் மனமும், மகிழ்ச்சியால் நிறைந்து இருந்தது.

– மலர்விழி (ஜூன் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *