சென்னை. காலை எட்டரை மணி.
அலுவலகம் செல்வதற்கு முன், நான் ஈஸிஆர் ரோடில் என் பைக்கை நிறுத்திவிட்டு சங்கீதா ஹோட்டலுக்குள் நுழைந்தேன். ஒரு ஒதுக்குப்புறமான டேபிளில் நான் மட்டும் அமர்ந்து அமைதியாக காலை டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
அப்போது என் எதிரே வெள்ளையும் சொள்ளையுமாக ஒருவர் மொபைலில் பேசிக்கொண்டே வந்து அமர்ந்தார். அங்கு வந்த ஹோட்டல் பையனிடம், இடது கையினால் தோசை என்பதுபோல வட்டமாக சுற்றிக் கண்பித்தபடியே தன் பேச்சைத் தொடர்ந்தார்.
“சாதா தோசையா?”
“ஆம்” என்று தலையை ஆட்டிவிட்டு தன் பேச்சைத் தொடர்ந்தார்.
“…. இதபாரு வாழ்க்கை என்பது எல்லோருக்குமே ஒரு பெரிய போராட்டம்தான். நாமதான் வின் வின் சிட்சுவேஷனைக் க்ரியேட் பண்ணனும்…. அவனப் போட்டு ரொம்ப நெருக்காத விட்டுப் பிடி சரியா?“ அமைதியாக அவர் பேசிய இந்த வார்த்தைகள், எனக்கு அவர்மேல் ஒரு அதீதமான சுவாரஸ்யத்தைக் கூட்டியது.
அவருக்கு சாதா தோசை வந்தது. மொபைலில் பேசிக்கொண்டே மெதுவாக சாப்பிட ஆரம்பித்தார். அப்போது குடிக்க தண்ணீர் கொண்டு வைத்த பையன் டம்பளரை சரியாக வைக்காததினால் அது சரிந்து அவர் இலையில் தண்ணீர் பரப்பியது. பாதிக்கும் மேல் அவரது தோசை தண்ணீரில் மூழ்கி விட்டது.
பையன் மன்னிப்புக் கேட்கும் பாவனையில் அவரைப் பரிதாபமாகப் பார்த்தான். அவர் கோபப் படாமல், அவனைப் பார்த்து புன்னகைத்தபடியே தன் பேச்சைத் தொடர்ந்தார். பேசிக்கொண்டே தண்ணீரில் மூழ்காமல் மிச்சம் இருந்த கால்பங்கு தோசையை சாப்பிட்டுவிட்டு எழுந்தார்.
நானும் அவரைத் தொடர்ந்து பின் சென்றேன். அவரிடம் பேச வேண்டும் என்கிற ஆசை எனக்குள் பொங்கியது. ஆனால் அவர் வாஷ்பேஸினில் கையைக் கழுவிக்கொண்டு மொபைலில் விடாமல் பேசிக்கொண்டே வெளியே வந்தார். டிரைவர் இன்னோவா காரின் கதவைத் திறந்துவிட அவர் அதில் ஏறிச்சென்று விட்டார். இன்னோவா நம்பர் மட்டும் என் மனதில் பதிந்துவிட்டது.
எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. இனி நான் அவரைச் சந்திப்பேனா?
அன்று அலுவலகத்தில் அவரது சிந்தனையே எனக்குள் அலையடித்தது. அதெப்படி அந்த ஹோட்டல் சிறுவனிடம் சிறிதும் கோபப்படாமல் அவரால் அவனைப் பார்த்து சிரிக்க முடிகிறது?
பத்து நாட்களுக்கு மேல் சென்றுவிட்டன.
அன்று மாலை திருவான்மியூர் மருந்தீஸ்வரன் கோயில் வாசலில் அவரது இன்னோவா காரைப் பார்த்துவிட்டேன். டிரைவர் வண்டிக்கு வெளியே நின்று கொண்டிருந்தான்.
ஐந்து நிமிடங்கள் சென்றன. அவர் வெளியே வந்தார். இன்னோவாவை நோக்கி நடந்தார். அவர்தான், அவரேதான்… நல்ல வேளையாக அவர் யாருடனும் பேசிக் கொண்டிருக்கவில்லை. கோயில் என்பதால் மொபைலை வண்டியில் விட்டுச் சென்றிருக்க வேண்டும்.
நான் அவசர அவசரமாக அவரை இடைமறித்து, “சார் என் பெயர் கண்ணன். நான் உங்களோடு இரண்டு நிமிடங்கள் பேச வேண்டும்” என்று படபடப்புடன் சொன்னேன்.
“அப்படியா, நான் இதற்குமுன் உங்களைப் பார்த்தது இல்லையே…”
“நான் உங்களைப் பார்த்திருக்கிறேன் சார்… ப்ளீஸ்.”
“சரி வாங்க, வண்டிக்குள் உட்கார்ந்துகொண்டு பேசலாம்…”
டிரைவர் பின் இருக்கை கதவைத் திறந்துவிட, நாங்கள் இருவரும் உள்ளே சென்று அமர்ந்தோம். உள்ளே ஏசியின் ஸ்மெல் வாசனையாக இருந்தது. டிரைவர் வெளியே நின்று கொண்டிருந்தான்.
“ஐயாம் கெளரிசங்கர். சொல்லுங்க சார், என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்?”
“ஒரு பத்து பன்னிரண்டு நாள் முன்னாடி நீங்க சங்கீதா ஹோட்டலில் தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, உங்கள் இலையில் தண்ணீர் கொட்டி தோசை நனைந்து போய்விட்டது. சர்வர் மீது கோபப்படாமல் நீங்கள் மீதம் இருந்த தோசையை சாப்பிட்டுவிட்டு கிளம்பி விட்டீர்கள்.”
“அட, ஆமாம்… அது எப்படி உங்களுக்குத் தெரியும்?”
“அப்போது நான் உங்கள் எதிரே அமர்ந்து இருந்தேன். நீங்கள் யாருடனோ மொபைலில் பேசிக் கொண்டிருந்ததால் என்னைக் கவனிக்கவில்லை…”
“ஓ அப்படியா? சரி, உங்களுக்கு என்ன வேண்டும்?”
“நீங்கள் ஒரு வித்தியாசமான மனிதர். அதெப்படி கோபமே வராமல் அந்தப் பையனைப் பார்த்து உங்களால் புன்னகைக்க முடிந்தது?”
“ஏனென்றால் நான் என் மனதை அழகாக வைத்துக்கொள்ள மிகுந்த பிரயத்தனப் படுகிறேன்…”
“அப்படி என்றால்…”
“நாம் அனைவரும் நம் புற உடலை அழகாக வைத்துக்கொள்ள ஆசைப் படுகிறோமே தவிர, அக அழகை பற்றிக் கவலைப் படுவதில்லை.”
“………………….”
“ஆமாம். நம்முடைய வெளிப்புற அழகை உருவேற்றத்தான் நாம் ஆசைப்படுகிறோமே ஒழிய, உள்மனதைப் பற்றி சற்றும் கவலைப் படுவதில்லை…”
“புரியவில்லை… சற்று விளக்கமாகச் சொல்லுங்களேன்.”
“நம் அழகைக் கூட்டிக்கொள்ள தலை மயிருக்கு டை அடிக்கிறோம்; முகத்தை தினசரி ஷேவ் பண்ணிக் கொள்கிறோம்; மீசையை அவ்வப்போது ட்ரிம் செய்து கொள்கிறோம்; குளித்தவுடன் பவுடர், சென்ட் என்று மணக்கிறோம்; மாடர்னாக உடையணிகிறோம்; உயர்ந்தவகைக் காலணிகளை அணிந்து கொள்கிறோம்… ஆனால் நம் மன அழகைப் பற்றிக் கவலைப் படாமல் கோபம், வெறுப்பு, பொறாமை என்று தினமும் அல்லாடுகிறோம்… அன்னிக்கி அந்தப் பையனிடம் நான் கோபப்பட்டு என்ன பயன்? வீணாக எனக்கு ரத்த அழுத்தம்தான் அதிகமாகும்….”
“நான் எப்படி என் மன அழகை கூட்டிக் கொள்வது?”
“வி ஷுட் லிவ் கான்ஷியஸ்லி. இன் அதர் வேர்ட்ஸ் மைண்ட்புல் (mindful) லிவ்விங்… நம்முடைய பயிற்சியினால் இது சாத்தியமே… உடற் பயிற்சி தினமும் செய்வதுபோல் மனப் பயிற்சியும் தினமும் மிக முக்கியம்.”
“……………………………..”
“பிறரை வெறுக்காமல், மற்றவர்கள் மீது பொறாமைப் படாமல், எதற்கும் கோபப்படாமல், நம்மைச் சுற்றி உள்ளவர்களை பண்பினால் அணைத்தபடி அவர்களிடம் அன்புடன் பழகிப் பாருங்கள், அதுதான் ஏகாந்தம்…”
“நாம் நம்மைக் கவனித்து எதை எண்ணுகிறோம் என்பதை கூர்ந்து பார்க்க வேண்டும். மனம் தெளிந்த நிலையை அடைய வேண்டும். மனம் தெளிதரு நிலை என்றால் சுயக் கட்டுப்பாட்டுடன் ஒன்றை ஆர்வத்துடன் அணுகுதல். இதுதான் mindfulness. அடிக்கடி சில நிமிடங்கள் நம்மை நாமே உற்றுக் கவனிக்க வேண்டும். ஏனெனில் நமது எண்ணங்கள் நாம் அறியாமலேயே நம்மைச்சுற்றி சுயநலத்துடன் வட்டமிடுகின்றன… எப்போதும் விழிப்புடனும், கவனத்துடனும் நிகழ்காலத்தில் வாழ்வதுதான் நம்முடைய வெற்றியே.”
“இதில் கவனம் வைப்பவன்தான் அசாதாரணமான மனிதன். அதனால் அவன் வெற்றியை மட்டுமே அடைபவன். வள்ளலார் என்ன சொன்னார்? விழித்திரு, தனித்திரு, பசித்திரு. இதை நாம் அடைய உதவுவதே மைன்ட்புல்னஸ். மனதை ஒருமுகப்படுத்தி நிகழ்காலத்தில் வாழ்வதற்கு நாம் பழக வேண்டும். இதனால் பிரச்சினைகளை நாம் இனம் காண முடியும்; அதற்கான தீர்வுகளும் கிடைக்கும். நம் உணர்ச்சிகள் நம் கட்டுப்பாட்டுக்குள் வரும். மிக அமைதியாக ஆனால் வெற்றிகரமான ஒருவராக நாம் ஆக முடியும்…”
“……………………”
“அனாவசியமாக அடுத்தவரைக் கவனித்து நம் நேரத்தை வீணாக்குவதை விட்டுவிட்டு, நம்மை நாமே உற்றுக் கவனித்தால் நம் மன அழகு கூடிவிடும். பிறகென்ன பிறகு, வெற்றி நம்மைத் தேடி ஓடி வரும் மிஸ்டர் கண்ணன்.”
நான் அயர்ந்து போனேன். அவர்மீது எனக்கு மரியாதை மிகவும் அதிகரித்தது. அவருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டே இருக்கணும் போலிருந்தது.
“நன்றாக யோசித்துப் பாருங்கள்… நம் மன அழகை அதிகரிக்க பணம் தேவையில்லை. அந்தஸ்து, மதம், இனம், நாடு, வயது, ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை…”
அவருக்கு மொபைலில் ஏதோ மெசேஜ் வந்தது. அதைப் படித்துவிட்டு “ஓகே மிஸ்டர் கண்ணன், ஐ ஹாவ் டு லீவ்..” என்றார்.
நான் இரண்டு கரங்களையும் கூப்பி அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு காரிலிருந்து இறங்கி அமைதியாக நடந்தேன்.
புதிய உத்தி!. மனம் மாறவென்று சொல்லப்பட்ட உண்மைகள். இதில் நாம் 98 சதவிகிதத்தினர் மனதளவில் ஒப்புக் கொண்டு நம்மை உற்று நோக்கத் தொடங்கிவிட்டால், அட்லீஸ்ட் 40 சத விகித மக்கள் மாக்களாகமல் காக்கப் படுவர். பாழும் சுய நலம் இருக்கிறதே! அது நம்மை மாற விடாது என்பது மற்றொரு உண்மை! லென்ஸ்