ஆடு குட்டிகளுக்கு மார்கழிப் பனியும், வைகாசி வெயிலும் ஒன்று. ஆடு குட்டிகள் வாலைப்பிடித்துக் கொண்டு பின்னால் திரிபவர்களுக்கும் அப்படித்தான்.
வைகாசி மாச அக்னி நட்சத்திர வெயில், தீயை அள்ளிக் கொட்டுகிறது. காற்றில்லாத வெயிலின் உக்கிரத்தில் முதுகுத் தோல் காந்துகிறது.
இப்பவும்… எப்பவும் போலவே நீல நிறத்து உல்லன் சால்வையைத் துண்டுக்குப் பதிலாக தோளில் போட்டிருக்கிற லட்சுமணன். அவனது கண்ணில் இரை தேடும் பருந்தின் நிழல். தந்திரம் பதுங்கியிருக்கிற உதடுகள்.
முன்னத்திக் கால்களை அகலப் பரத்திக்கொண்டு வர மறுத்து அடம்பிடிக்கிற பெண்மறியை, கழுத்துக் கயிறு கட்டி முக்கித்தக்கி இழுத்து வருகிறான்.
‘ம்ம்ம்க்க்க்மேய்ய்ய்ய்க்’’ பீதியும் பதற்றமும் கருவிழியில் பரிதவிக்க, கர்ணகடூரமாகக் கனைக்கிற அந்தப் பெண்மறி. செல்லச் சிணுங்கலான கனைப்புடன் பின்னால் வருகிற சின்னஞ்சிறு இளங்குட்டிகள். அதுகளும் தாயைப் போலவே மினுமினுப்பான கறுப்பு. அடி வயிற்றில் வெள்ளை.
ஊரின் கீழ்க் கோடியில் பஸ் வந்து வட்டமடித்துத் திரும்புகிற மைதானம். ‘பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம்’ என்ற போர்டு வெயிலுக்கும் மழைக்கும் நனைந்து மங்கலாகிப் போயிருந்தது.
மைதானத்தின் வடக்-கு எல்லை பூராவும் வேப்ப மரங்-கள். பெரிய சாக்கடை வாய்க் காலின் சிமென்ட்டுச் சுவர். பஸ் வருகிற நேரம், வராத நேரம் எல்லா நேரங்களிலும் மர நிழலே தஞ்சமென்று உட்கார்ந்திருக்கிற கிராமத்து ஆட்கள்.
உலக அரசியல், மார்க்கெட் நிலவரம், ஊர்ப் புரளி என்று சகலமும் பேசப்படும். எந்நேரமும் காட்டசாட்டமான மனிதக் குரல்கள். ஆடு புலியாட்டமும் நடக்கும்.
லட்சுமணன் பெண்மறியை முக்கித்தக்கி இழுத்து, ஒரு வேப்ப மரத்தில் கட்டிப் போட்டான். கயிற்றை உள்ளங்கையில் சுற்றி இழுத்த அழுத்தத்தில், ரத்தம் கன்றிப் போயிருந்த கையை வாயால் ஊதிக்கொண்டான்.
‘‘என்ன லச்சுமணா… உருப்படி எங்க வாங்குனே?’’- காளியப்பன். பெரிய வியாபாரி. ஏகப்பட்ட உருப்படிகளை வாங்கி லோடுவேனில் ஏற்றி, எட்டையபுரம் சந்தைக்குப் போய் விற்கிறவன். சின்ன வயசிலிருந்தே ஆடுகளுடன் சகவாசம். ஆடு மாதிரியே அடிக்கடி செருமுவான். பச்சைக் கலர் உல்லன் சால்வை தோளில் கிடந்தது.
‘‘கோயிலூர்லே!’’
‘‘தீர்ந்த வெலைக்கு மேல அம்பது ரூவா வாங்கிக்கிட்டு அவுத்துடுவியா?’’
‘‘அங்கயிருந்து ரெண்டு மைல் தூரம்.. வேனாக் கொதிக்குற வெயில்லே இழுத்துச் செத்துருக்கேன். சும்மாவா?’’
‘‘நூறு வைச்சுக்கிடுதீயா?’’
‘‘ஏவாரத்துக்குத் தரல்லே. வீட்லே கட்டிப் போட்டு வளர்க்குறதுக்கு யாராச்சும் கேட்டா தரணும். அப்பத்தான் ரெண்டு சில்லறையைப் பார்க்க முடியும்!’’
காளியப்பன் மனசுக்கு சபலம். ‘எப்படியும் உருப்படிகளை வாங்கிப் போட்டுட்டா… நானூறுக்குக் கொறையாம லாபத்தைப் பாத்துரலாம்!’ என்று நினைவுகளுடன் எச்சில் ஊறுகிறது அவனுக்கு. மறியையும், குட்டிகளையும் கூர்மையாகப் பார்க்கிறான். எடை போடுகிற தராசு மனம்.
‘‘முக்காலி(மூவாயிரம்)ன்னு முடிச்-சுருப்பியா?’’ – வியாபாரிக்கு வியாபாரி பேசிக்கொள்கிற ரகசிய மொழி.
‘‘கட்டில் காலு(நாலாயிரம்)க்கு மேலே..!’’
‘‘நீ புளுகுதே… ஒண்ணும் தெரியாத குருட்டுப் பயகூட இந்த விலை போட் டுருக்க மாட்டான். நீயா… போடுவதா?’’
‘‘இல்லேண்ணே… சத்தியமா பொய்யில்-லேண்ணே!’’
‘‘சத்தியந்தான் நம்ம தொழில்லே சக்கரைப் பொங்கலாச்சே..!’’
பீடி எடுத்து உதட்டில் வைத்தான். நுனியைக் கடித்துத் துப்பினான். பற்ற வைத்துக்கொண்டான். காந்தலான புகை, நாசி வழியே சீறியது. தீப்பெட்டியைத் தலைமகுடமாக பருத்திருந்த தலைப் பாகைக்குள் சொருகிக் கொண்டான்.
காளியப்பனைக் கள்ளப் பார்வையாகப் பார்க்கிற லட்சுமணன். அனுபவப்பட்ட பெரிய வியாபாரியான அவன், தனது உருப்படிகளை ஆசை ஆசையாகப் பார்க்கிறான். அப்ப டீன்னா… நல்ல உருப்படிதான். கூடுதலான இருநூறு, முந்நூறு விலை சொல்லலாம்.
ஊருக்குள் போகிறான்.. வெயில் கொளுத்துகிறது. தாட்சண்யமில்லாத கொலைகார வெயில்.
‘‘வளர்ப்புக்கு ஒரு பொம்மறி இருந்தா சொல்லு, லட்சுமணா..!’’ தாகத்தோடு ரெண்டு பேர் சொல்லியிருந்தனர். மேலத்தெரு முருகேசன், நடுத்தெரு முத்தையா… மேற்கொண்டு வடக்குத் தெரு செல்லியம்மாவிடமும் தாக்கல் சொன்னான்.
‘‘நல்ல உருப்படி வந்துருக்கு. அருமை யான வம்சம். ஈத்துக்கு ரெண்டு மூணு குட்டி போட்டு.. சினையாகுற வரைக் கும் பால் குடுத்து வளர்க்குற நல்ல பரம்பரையைச் சேர்ந்தது. வாங்கி வளர்த்தீங்கன்னா வீடே விருத்தி யாகும்!’’
மூன்று பேரும் வந்தாயிற்று. ஒரு சின்னச் சந்தை கூடிய மாதிரிதான். கூட நூறு, இருநூறு கிடைக்கும்.
வந்தவர்கள், அனுபவப்பட்ட வியாபாரியான காளியப்பனிடம் யோசனை கேட்டார்கள்.
‘‘வெள்ளாடு… நல்ல வம்சமா?’’
‘‘ரெண்டாவது ஈத்துலே ரெண்டு குட்டின்னா… நல்ல வம்சந்தான்!’’
‘‘லட்சுமணங்கிட்டே என்ன- வெலை, ஏது வெலைன்னு கேட்டு, நீயே வெலை பேசிவிட்டுரு!’’
பெரிய வியாபாரி காளியப்பன், இப்போ தரகராகிவிட்டான். செருமிக் கொண்டே, ‘‘லட்சுமணா, வெலை சொல்லு’’ என்றான்.
காளியப்பன் கேட்டவுடன் லட்சுமணன் ஒரு விலை சொல்ல, அவன் குட்டிகளைக் குறை சொல்ல…. இவன் பெண்மறியைப் புகழ.. அவன் பெண்மறியைக் குறை சொல்ல.. இவன் கெட்ட வார்த்தையில் வைய…
‘‘சரியப்பா… நிதானமா, ஞாயமா ஒரு வெலை சொல்லப்பா’’ என்று அவன் தணிய… லட்சுமணன் எகிற…
ஒரே சத்தக்காடு. காரசாரமான கூவல்காடு.
அந்தா… இந்தா… என்று ஒரே இழுபறி. வாய்ச் சத்தம்.
கடைசியில் – செல்லியம்மாளுக்கு ஆடு குட்டி என்று முடிவாகி…
‘மூவாயிரத்து நானூற்று எழுபது’ என்று முடிந்தது.
காளியப்பனுக்குத் தரகு ரூபாய் ஐம்பது. செல்லியம்மா தந்துவிட்டாள். தொகையை வாங்கி எண்ணிச் சரி பார்த்துக்கொள்கிற லட்சுமணன் கண்ணில் மனமின்னல்.
மனசுக்கு றெக்கை முளைத்த மாதிரி இருந்தது. கணிசமான லாபம் பார்த்துவிட்ட மனச்சந்தோஷம். சந்தோஷ போதையில் உல்லாச மாகிற மனசு, ‘இன்னும் லாபத்தை உயர்த்த என்ன செய்யலாம்’ என்ற யோசனை-யில் தந்திரம் செய்தது.
கோயிலூர் ராமசாமிக் கோனாரிடம்தான், வெள்ளாட்டை-யும் குட்டிகளையும் வாங்கினான். இரண்டாயிரத்து தொள்ளாயிரம் என்று விலை பேசி, ஐம்பது பைசா அட்வான்ஸ் தந்தான்.
பதினைந்து நாள் வாய்தா கேட்டான், பணத்துக்கு. அவர் ஒரேயடியாக பதறியடித்து மறுத்து-விட்டார். ‘‘நானே ஆத்திர அவசரத்துக்கு வெலை கொறைச்சுத் தந்திருக்கேன். பெத்த புள்ளைக் குக்கூட சீதனம் தர மனசு சம்மதிக்காது. அப்பேற்பட்ட ஐட்டம். ஐஸ்வர்யம். ரொக்கம்னா பத்திட்டுப் போ! இல்லேன்னா வுட்டுப் போ!’’
‘‘சரி, என் சைக்கிளை வைச்சுக்கிரும். சாயங்காலத்துக்குள்ளே ஒம்ம கையிலே ரூவாயை ஒப்ப டைச்சிட்டு, சைக்கிளை வாங்கிக் கிடுதேன்… சரிதானா?’’
‘‘சரி, சரி!’’
ஆற்றைக் கடந்து, பனந்தோப்பைக் கடந்து, செவற்காட்டு உழவுப் புழுதியில் நடந்து… கோயிலூர் போய்ச் சேர்ந்த லட்சுமணன், ராமசாமிக் கோனார் முன்னால் போய் நின்றபோது, மணி ரெண்டரை.
அவர் முகமெல்லாம் ஒளிப் பரவல். நரைத்த மீசை மகிழ்ச்சியுடன் சிரித்தது. ‘‘வந்துட்டீயா?’’
‘‘வந்துட்டேன்!’’ – சுரத்தில்லாமல் உயிர் துவண்ட குரலில் லட்சுமணன்.
‘‘என்னாச்சு… ஒரேயடியா நொந்துபோயிருக்கே?’’
‘‘வாய்தாவுக்கு வுட்டுருந்தீர்னா… ஆற அமர நாலஞ்சு பேரைப் பாத்து, பேசிக் கீசி வித்து… நூறு இருநூறு லாபம் பாத்துருக்கலாம். நீரு, ‘இன்னிக்கே வேணும்’னு சொல்லிட்டீர்லே..?’’
‘‘அதனாலே?’’
‘‘வாய்ச் சுத்தமா நடக்கணுமேனு… ஏவாரிகிட்ட வித்தேன். நூறு ரூவா கை நட்டத்துக்கு வித்தேன். ஆடு குட்டியை அக்னி நட்சத்திர வெயில்லே இழுத்து, நடந்து… உசுரு அ(று)ந்துபோச்சு. சீரழிஞ்ச பொழைப்பு. சேதாரப் பொழைப்பு!’’
முகம் குறாவிப் போய் நின்றான், லட்சுமணன். மடியிலிருந்து இரண்டாயிரத்து எண்ணூறு ரூபாயை மடித்துச் சுருட்டியவாக்கில் நீட்டினான்.
அவர் எண்ணிக்கொண்டு இருக்கும்போதே, அண்ட்ராயர் பையிலிருந்து ஐந்தும் பத்துமாக நூறு ரூபாயை எடுத்து நீட்டிக்கொண்டு இருந்தான். முகத்தில் வேதனை. கண்ணில் வருத்த நிழல். ரூபாயை எண்ணி முடித்து இவன் முகம் பார்க்கிற கோனார்…
‘‘என்ன… இது?’’
‘‘கை நட்டம் என்னோட போகட்டும். பேசுனபடி ஒமக்கு ரெண்டாயிரத்து தொள்ளாயிரம் தரணும்லே?’’
அவன் முகத்தைக் கூர்ந்து பார்க்கிற அவர். ‘இது பொய்யா, நிஜமா’ என்ற சந்தேக நிழல். வெட்டி வெயிலில் போட்ட செடியாக வாடிக்கிடக்கிற இவனது முகம்.
‘‘என்னாலே நீ நட்டமாக வேண் டாமப்பா! அதை நீ வைச்சுக்கோ!’’ – பெருந்தன்மையின் மிருதுவாக அவரது குரல்.
‘‘அப்ப சரி…’’ என்று சைக்கிளை எடுக்கிற லட்சுமணனுக்குள் நிலா வெளிச்சம். மனக் குதூகலம். வெற்றி பெற்றுவிட்ட வியாபார மனக் கும்மாளம்.
வெறும் சைக்கிளுடன் விடியற்காலம் புறப்பட்டவன், வாய்ச்- சாமர்த்தியம், புத்தி சாமர்த்தியத்தால் அறுநூறு ரூபாய்க்கு மேலான லாபத்துடன் வீடு போகிறான். டிராயர் பைக்குள் சுருண்டுகிடக்கிற ரூபாய் கனத்தில், மனசு ஆகாயத்தில் மிதக்கிறது.
பெடலில் கால் வைக்கிறபோது, கோயிலூரின் மேலத் தெருவில்… யாரோ… யாரிடமோ கண்டனக்-கூச்சலாகப் பேசுகிற பெருங்குரல்.
‘‘ஏலேய்… கண்ணு மூக்கு தெரியாம ஆடாதீகடா. நீங்க செய்ற பாவ புண்ணியமெல்லாம் சும்மா போகாது. உங்க புள்ளைக தலையிலே வந்து விடியும்டா!’’
லட்சுமணனின் மனச்சாட்சி போல ஒலித்த அந்தக் குரல். வெற்றிக் களிப்பில் மிதந்த வியாபார மனசு, றெக்கை ஒடிந்து, மனுச மனசாக – தகப்ப மனசாக அவன் தன்னை உணர…
டிராயர் பைக்குள் இருந்த பணம், குற்ற உணர்ச்சியாகக் கனத்தது. உள்மனசில் நடுக்க அதிர்வு.
ஒரு கணம்தான். பெடலை மிதித்து ஏறி, ஸீட்டில் உட்கார்கிற லட்சுமணன்.
கனக்கிற மனசை ஒரு பெருமூச்சில் வெளியேற்றிவிட்டு.. ‘‘நாய் வித்த காசு, கொரைக்கவா போகுது? நாறிக்கிடக்குற பொழைப்பு ஞாயத்தைப் பாப்போம்!’’
லௌகீக வாழ்க்கையின் மூர்க்கத்துக்குப் பணிந்து… மனித மனசு துவள… உடல் விறைத்து மிதிக்க….
சைக்கிள், ‘கொரட், கொரட்’டென்று உருள்கிறது.
– 25th ஜூலை 2007