மனிதர்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 4,416 
 
 

சனிக்கிழமை. அலுவலக விடுப்பு நாள். காலை மணி 10. 00

தாசில்தார் பாலு. வயது 40. கைலி பனியனில் தன் வீட்டைவிட்டு வாசலில் வந்து அமரும்போதுதான் பால்ய நண்பன் ரகு அவனைத் தேடிக்கொண்டு வாசலுக்கு வந்தான்.

“ஒரு உதவிடா…”அருகில் அமர்ந்தான்.

“என்ன..?”

“என் தம்பி தனசெயனுக்கு திருமணம் முடிக்கனும்…”

“அதுக்கு நான் என்ன செய்யனும்.? பொண்ணு பார்க்கனுமா…?”

“தேவை இல்லை. பொண்ணு தயாராய்க் கையில இருக்கு. ஆனா… என் தம்பி பரமேஸ்வரன்தான் வேணாம்ன்னு சொல்லி அடம் பிடிக்கிறான். !”

“விபரமா சொல்லு..?”

“கும்பகோணத்தில் என் மனைவி சித்தி பெண் இருக்காள். பேர் அபிராமி. பட்டப்படிப்பு. தனியார் பள்ளியில் மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பளம். நான்கு பொண்ணுகளில் இவள்தான் மூத்தவள். ஏழைப்பட்ட குடும்பமாய் இருந்தாலும் அஞ்சு பவுன் போட்டு அம்பதாயிரத்துக்கு சீர்வரிசை செய்து மாப்பிள்ளைக்கு ரெண்டு சவரனில் சங்கிலி போடுறேன்னு சொல்றாங்க. என் தம்பி வேணாம்ன்னு சொல்றான்.”

“ஏன்.?”

“அவனுக்குப் பெண் பிடிக்கலையாம். உடல் கொஞ்சம் பூசி, கருப்பாய் இருக்கிறாளாம். கருப்பு அழகில்லையா என்ன..? இவனை மாதிரி சிவந்த நிறம் உடையவனெல்லாம் கருப்பு நிற பெண்ணைக் கட்டிக்கலையா என்ன..? நாம கருப்பு, சிகப்பு நிறத்தைப் பத்தி கவலைக் கூடாது. பெண் குணமாய், மணமாய் குடும்பத்துக்கு ஏற்றவளாய் இருக்கனும். அதுதானே முக்கியம். சொல்றேன் கேட்க மாட்டேன் என்கிறான். “என்றான்.

“………………………………………”

“உன் மேல அவனுக்கு மதிப்பு மரியாதை இருக்கு. அவன் உனக்குக் கீழே வேற வேலை செய்யறான். நீ என் நண்பன் என்கிறதைவிட ஒரு அதிகாரி சொன்னால் கேட்பான்ன்னு எனக்குத் தோணுது. அதான் சொல்றேன். “சொன்னான்.

‘நண்பனின் தம்பி. தனக்கும் தம்பி. அண்ணன் சொல்லி கேட்காதவன் தான் சொல்லி எப்படி கேட்பான்..?! தான் அவனுக்கு அதிகாரி என்ற முறையில் பிடிக்காத பெண்ணை சிபாரிசு செய்வது எந்த முறையில் நியாயம்..?’ பாலுவிற்குள் ஓடியது.

“பாலு! என் குடும்பத்தைப் பத்தி உனக்கு நல்லாத் தெரியும். என் அண்ணன், அக்கா, தங்கைகளெல்லாம் திருமணம் முடித்து வெளியூர்களில் குழந்தை குட்டிகளோடு குடும்பமாய் எல்லாரும் நல்லா இருக்காங்க. இவன் மட்டும் திருமண வயதைத் தாண்டி இன்னும் மொட்டையாய் நின்னு அம்மாவுக்குப் பாரமாய் இருக்கான். எண்பது வயதைத் தாண்டிய அம்மா திடீர்ன்னு மண்டையாய்ப் போட்டுவிட்டால் இவன் உள்ளூரில் இருக்கும் என் வீட்டில் வந்து அண்டனும். இல்லே…தனி ஆளாய் இருந்து ஆக்கி சாப்பிடனும். இது எனக்கும் அழகு கிடையாது. அவனுக்கும் சரி கிடையாது.. எல்லாத்தையும் யோசித்துதான் இந்த வரனை சீக்கிரம் முடிக்க ஏற்பாடு செய்யறேன் முரண்டு பிடிக்கிறான். நீயும் இதையெல்லாம் சொல்லி அவனைச் சம்மதிக்க வை. “என்றான்.

ரகு சொல்வது அனைத்தும் உண்மை. புரிந்த பாலு…

“சொல்றேன்!” சொன்னான்.

அவ்வளவுதான்! ரகு சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு சென்றான்.

அவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் சதீஷ் வந்தான்.

இவனும் ரகுவைப் போலவே பாலுவின் பால்ய நண்பன். இவன் ரகு வீட்டிற்கும் அடுத்த வீடு.

“ஒரு செய்திடா! “சொல்லி அருகில் அமர்ந்தான்.

“என்ன..?”

“ரகு மனைவி சொல்லை மந்திரமாய் எடுத்துக்கிட்டு தன் தம்பித் தலையில் மண்ணையள்ளிப் போட முயற்சி செய்யறான். !”

பாலு துணுக்குற்றான்.

“அவன் மனைவி சித்திப் பெண் எனக்குத் தெரியும். எனக்கும் சொந்தம். ரெட்டைநாடி உடம்பு. அட்டைக்கரி லட்சணமாய் இருக்க மாட்டாள். ஏழைக் குடும்பம். நாலு பெண்களில் இவள் மூத்தவள் இவன் தம்பி மூத்தவளைக் கட்டினால் அடுத்து உள்ள மூணு பொண்ணுகளையும் இவன்தான் முன்னின்று கலியாணம் காட்சி எல்லாம் முடித்து கரை ஏத்தனும். இவன் முன்னேற முடியாது. இதை எல்லாம் மனசுல வச்சுக்கிட்டுதான் அவன் தம்பி வேணாம்ன்னு பிடிவாதம் பிடிக்கிறான். ரகு அங்கெ இங்கே சொல்லி அவனை சம்மதிக்க வைக்க துடியாய்த் துடிக்கிறான். “என்றான்.

“………………………..”

“பாலு ! பரமேஸ்வரன் நல்லவன்டா. அவனுக்குப் போய் அண்ணன்காரன் இப்படி ஒரு பெண்ணைப் பார்க்கலாமா..? நான் இவனுக்கு ஒருத்தியைப் பார்த்திருக்கேன். என் மனைவி ஊர். புதுக்கோட்டை. நல்ல அழகு அம்சமாய் இருப்பாள். இவனுக்கு கட்டிக்க விருப்பம். ஆனால் அண்ணன் குறுக்கே நிற்பதால் முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறான். நீ ரகுவை அடக்கி இந்த பெண்ணுக்கு அவன் தம்பியை சம்மதிக்க வை. நீ சொன்னால் ரெண்டு பேரும் கேட்பார்கள் ! “முடித்தான்.

இரு பால்ய சிநேகிதர்கள். ரகு தம்பி என்கிற முறையில் அக்கறை காட்டுகிறான். சதீஷ் பக்கத்து வீட்டுக்காரன் என்கிற முறையில் அக்கறை காட்டுகிறான்.

யாருக்குப் பரிந்து பேச..? – குழம்பினான்.

“என்ன ! பேசி ஒரு நல்ல முடிவை சொல்லு..? “சதீஷ் அகன்றான்.

சிறிது நேரத்தில் அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்த பாலுவிற்கு அதிர்ச்சி.

மாலையும் கழுத்துமாக பரமேஸ்வரன். !

இவள் எந்தப் பெண்..? யாரிவள்..? ‘ குழப்பத்திற்கிடையே…

“உள்ளே வாங்க” அழைத்தான்.

படி தாண்டி உள்ளே வந்ததுமே…

“சார்! அண்ணன் அண்ணி சொல் பேச்சு கேட்டு எனக்குப் பொருத்தமில்லாதவளைக் கட்டி வைக்க முயற்சி செய்யறார். பக்கத்து வீட்டு சதீஷ்..! தனக்கு தொண்டூழியம் செய்யனும்ன்னு நினைச்சி அவர் ஒரு பெண்ணைப் பார்த்து ஏற்பாடு பண்றார். எனக்கு இவர்களிடமிருந்து தப்பிக்க ஒரே வழி…அநாதை ஆசிரமம் போய் எனக்குப் பிடித்த பெண்ணை பார்த்து பதிவு திருமணம் செய்து உங்களிடம் ஆசீர்வாதம் வாங்க வந்திருக்கேன். வாழ்த்துங்கள் சார் ! “சொல்லி அவன் குனிய…

இருவரும் பாலு காலில் விழுந்தார்கள்.

பாலு… பரமேஸ்வரனின் புத்திசாலித்தனத்தை மெச்சியவனாய் அவர்களை எழுப்பி திருப்தியாய் ஆசீர்வதித்து அணைத்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *