மனிதர்களில் ஒரு சிலர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 22, 2018
பார்வையிட்டோர்: 5,106 
 
 

நின்று கொண்டிருந்த என்னை யாரோ இடித்து கடந்து சென்று கொண்டிருந்தன்ர்.அவர்களை திரும்பி பார்த்து திட்டலாம் என நினைத்தவன் தெரிந்த முகம் போல் தெரியவும் யாரென யோசித்து பார்த்தவன் அட.! நம்ம மூணாவது சீட் பாலுவோட பையன் மாதிரி இருக்குது,கையில சிகரெட் வச்சிட்டு போறான்,கூட ஒரு பொண்ணு கூட பேசிகிட்டே போறானே?காலம் கெட்டு போச்சு, எருமை மாடாட்டம் முட்டிட்டு ஒரு சாரி கேக்காம, இரு வச்சுக்கறேன் உங்கப்பன் கிட்ட மனதுக்குள் கருவினேன்.

மறு நாள் ஆபிசில் எல்லோரும் பேசிக்கொண்டு நிற்கும்போது நான் வேண்டுமென்றே சத்தத்துடன் என்ன பாலு நேத்து உன் பையன் வாயில சிகரெட்டோட, கூட ஒரு பொண்ணை அதுவும் ஒரு மாதிரி டிரெஸ் பண்ணிகிட்டு, கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம நின்னுகிட்டு இருந்த என்னைய இடிச்சுகிட்டு போறான்.பேசிக்கொண்டிருந்த கூட்டம் அப்படியே அமைதியானது.பாலுவின் முகம் வாட்டமாகிவிட்டது. அங்கு நின்று கொண்டிருந்த ஒருவருக்கும் நான் பேசிய தோரணை பிடிக்காமல் அமைதியாக இருந்தனர். எனக்கு இதுதான் வேண்டும், என்னை இடித்ததற்கு அவன் அப்பனை பலி வங்கி விட்டேன். மகிழ்ச்சியுடன் வெளியேறினேன். நான் அந்த இடத்தை விட்டு அகன்றதும் மீண்டும் அவர்கள் தங்களுக்குள் கச முச என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.

என் தலை தெரிந்தால் போதும் அப்படியே கப் என்று வாயை மூடிக்கொள்வார்கள். அவ்வளவு பயம் என் மீது.இந்த ஆபிசில் வேலை செய்யும் கடை நிலை ஊழியன் கூட என்னிடம் பேச பயப்படுவான். எனக்கொன்றும் பொ¢ய நட்டமில்லை.நான் உண்மையே பேசுவதால் என்னை கண்டு பயப்படுகிறார்கள் என்று மனதுக்குள் நினைத்துக்கொள்வேன்.

என சக பத்தினி “பெரிய அறிவுரை சொலவது போல சொல்லுவாள் “நீங்கள் உங்கள் வாயை மூடிக்கொண்டிருந்தாலே போதும். எந்த பிரச்சினையும் வராது என்பாள். என் பெண் அதற்கு மேலே “அப்பா உனக்கு அடுத்தவங்க வேலையிலயே தலையிடரதே பிழைப்பா போச்சு.சும்மா அடுத்தவங்களை குற்றம் சொல்லிட்டு, அடுத்தவங்களை போட்டு கொடுக்கறது, இதை எல்லாம் எப்பத்தான் விடப்போறயோ என்று சண்டையிடுவாள். அவளுக்கு அவள் நண்பிகளை பற்றி அவர்கள் அப்பாவிடம் போட்டு கொடுக்கிறேனாம். இதற்கு என் மீது கோபப்படுகிறாள்.நான் என்ன செய்வது? அவர்கள் என் முன்னால் செய்வதை அவர்கள் அப்பா, அம்மாவிடம் சொல்கிறேன். இது என் குற்றமா?

எங்கள் காலனியில் கூட பக்கத்து வீடு, அக்கம்பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்கள் இருக்கிறார்களே அவர்கள் கூடி பேசிக்கொண்டிருக்கும்போது நான் அந்த பக்கம் வந்து விட்டால் போதும் அப்படியே அமைதியாகி விடுகிறார்கள். காய் விக்கிற பெண் கூட என்னைப்பற்றி பயப்படுகிறாள்

இதெல்லாம் எனக்கு தெரியாமல் இல்லை, என் சுபாவம் அப்படி, ரொம்ப நியாயமாக நடப்பதாக சொல்லி கொள்வேன்.இவர்கள் வேறு,! வேறு யார்? என் மனைவியும், மகளும்தான், நேர்மையானவன்னு சொல்லிகிட்டு நீங்க செய்யறதுக்கு பேரு “போட்டுக்கொடுக்கறது” அதுவும் அடுத்தவங்களை பத்தி இல்லாதத்து பொல்லாததும் சொல்லி அவங்களை அவமானப்படுத்தறது,இதை தவிர உங்க நேர்மை என்ன செஞ்சுது.உருப்படியான விசயம் ஏதாவது உங்களால நடந்திருக்கா? அவ ஓடிப்போனது, இவ ஓடிப்போனது, அவன் சிகரெட் பிடிக்கிறது, இவன் இப்படி ட்ரெஸ் பண்றான்,ஆபிசிலயாவது ஒழுங்கா இருக்கீங்களா, எல்லாத்தையும் “கோள்” சொல்றது இதுதான் உங்க வேலையே.இவர்கள் புலம்பலை எல்லாம் கண்டு கொள்ள மாட்டேன்.

என் எதிரில் நின்று மானேஜர் கூப்பிடறாரு என்று சொன்ன அலுவலக உதவியாளன் கன்னையனை பார்த்து என்ன கன்னையா உன் புள்ளை அவ வீட்டுக்காரன் கூடத்தான் இருக்கறாளா இல்லை உன் வீட்டுக்கே கோபிச்சுட்டு வந்துட்டாளா?இடம் பொருள் தெரியாமல் கேள்வி கேட்ட என்னை முறைத்து பார்த்த கன்னையன் சார் உங்களை மேனேஜர் கூப்பிடறாரு, அதைய பாருங்க, என் பொண்ணை பத்தி அப்புறம் விசாரிக்கலாம் சொன்னவனை தப்பா நினைச்சுக்காத கன்னையா கூட வேலை செய்யறவங்க பேசிகிட்டாங்க அதான் கேட்டேன் என்று சொல்லிவிட்டு மானேஜரை பார்க்க விரைந்தேன்.நல்ல வேளை கன்னையன் முணுமுணுத்தது என் காதில் விழ வில்லை “யார் யாருக்கோ சாவு வருது இவனுக்கு வர மாட்டேங்குது” அங்கு வேலை செய்து கொண்டிருந்த பலரின் காதில் இவன் சொன்னது விழ “மேல போனாலும் இவன் அடுத்தவனை போட்டுக்குடுக்கறதை நிறுத்தமாட்டான் என்று சொல்லி சிரித்துக்கொண்டனர்.

வாய்யா ராமனாதா இப்படி வந்து உட்காரு, உங்கிட்ட முக்கியமான விசயம் ஒண்ணு பேச வேண்டியிருக்கு, போய் பவ்யமாய் எதிரில் உட்கார்ந்தேன். நம்ம பாலுவுக்கு அடுத்த மானேஜர் போஸ்ட் வந்திருக்கு, அவனைப்பத்தி “பர்சனல் ஒப்பீனியன்” கேக்காறாங்க, உன் ஞாபகம் வந்துச்சு அதுதான் கூப்பிட்டேன்.வஞ்சகமாக புகழ்கிறாரா,இல்லை உண்மையிலேயே கேட்கிறாரா தெரியவில்லை. மனதுக்குள் பாலுவின் மீது பொறாமை பொங்கி வழிந்தது. என்னை விட ஒரு வருடம்தான் சீனியர், மானேஜரானால் எப்படியும் அலவன்ஸ், அது இது என்று ஐம்பது அறுபது வரும், ஒரே பையந்தான் இவனுக்கு இவ்வளவு சம்பளம் வந்து என்ன செய்ய்ப்போகிறான் என்று மனதுக்குள் நினைத்தாலும், உங்களுக்கு தெரியுது சார் என்னைப்பத்தி, ஆனா இங்குள்ளவங்களுக்கு என்னைப்பத்தி புரியாம கோபப்படறாங்க என்று அலுத்துக்கொண்டு “சார் பாலு ரொம்ப நல்லவன் சார், ஆனா அவன் பையன் தான் சார் கொஞ்சம் வேற மாதிரி, ஆனா இவன் பையனுக்கு ரொம்ப இடம் கொடுக்கறான் சார்..என்று இழுக்கவும் அதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்? இவன் எப்படி? நல்லவந்தான் சார், பையனால எதிர்காலத்துல இவனுக்கு கெட்ட பேரு ஆகி அதனால நம்ம கம்பெனிக்கும் கெட்ட பேரு ஆகிடக்கூடாது, மத்தபடி நல்ல மனுசன் என்று வழக்கம்போல சொல்லிவிட்டு என் சீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டேன்.

பாலுவுக்கு வந்த பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியைப்பற்றி ஆபிசில் அரசல் புரசலாக பேசிக்கொண்டனர். நான் உள்ளே வரும்போது பலரின் கோபப் பார்வை என் மீது படுவதையும் பார்த்தேன். நான் ஒன்றும் பொய் சொல்லவில்லையே? இருப்பதை சொன்னேன், அதற்கு நிர்வாகம் எதோ செய்தால் அதற்கு நானா பொறுப்பு? உட்கார்ந்து என் வேலையை பார்த்தேன்.

இரண்டு மூன்று நாட்கள் ஓடியிருந்தது, மாலை வீட்டுக்கு வந்தவுடன், கை கால் கழுவிக்கொண்டு தொலைக்காட்சி முன் உட்கார்ந்து ஏதோ படம் பார்த்து கொண்டிருந்தேன். மணி ஏழுக்கு மேல் ஆகிவிட்டது, என் மனைவி வந்தவள் ஏங்க மாலதி சாயங்காலமே வந்திருக்கணும், இன்னும் வரலை, போய் அவ டூயூசன் எடுக்கற எடத்துல பார்த்துட்டு வாங்க, “செல்லையும்” எடுத்துட்டு போகலை.மாலதி இன்னும் வரலையா? சொன்னவன் விறு விறுவென எழுந்து சட்டையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தவன் அவள் டூயூசன் எடுக்கும் இடம் “இரண்டு பஸ் ஸ்டாப்” தள்ளி இருந்ததால் காலனி பக்கம் இருக்கும் ஆட்டோ ஒன்றை பிடித்து டுயூசன் செண்டர் சென்றேன். அது பூட்டப்பட்டிருந்த்து. அக்கம் பக்கம் விசாரிக்கும்போது மாலை ஆறு மணிக்கெல்லாம் பூட்டி விட்டார்கள் என் தெரிவித்தார்கள். என் மனதில் பயம் வந்து உட்கார்ந்தது. ஆறு மணிக்கெல்லாம் பூட்டி விட்டார்கள் என்றால் இப்பொழுது மணி எட்டாகிறதே, இந்நேரம் வரை இவள் எங்கு சென்றாள்? ஏதோ எடாகூடமாக நடந்து விட்டதா? மனம் கண்டதை நினைத்து குழம்ப ஆரம்பித்தது.மீண்டும் வீட்டுக்கு ஆட்டோவை விடச்சொன்னேன்.வீட்டிற்கு அவள் வரவில்லை.என் மனைவி அழுகையுடன் வெளியே நின்று கொண்டிருந்தாள். அவள் நண்பர்களுக்கு போன் செய்து பார்ப்போம் என்று போன் செய்ததில் பொ¢ய முன்னேற்றமுமில்லை.டுயூசன் முடிந்து வரும்போது ஏதோ ஒரு ஆட்டோவில் ஏறிச்சென்றதாக மட்டும் ஒரு செய்தி கிடைத்தது.தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன், மனைவியோ அக்கம் பக்கத்துக்கு தெரியாமல் அழுது கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

மணி பத்து இருக்கும் ஒரு வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது,வெளியே ஓடி வந்து பார்த்தோம், பாலுவின் பையன் வண்டியை வேகமாக ஓட்டிக்கொண்டு வீட்டு முன்னால் நினறவன் நீங்க இறங்கி உள்ளே போங்க அக்கா என்று சொல்லிவிட்டு வேகமாக வண்டியை எடுத்துக்கொண்டு விரைந்தான்.

உள்ளே ஓடி வந்தவளை மறித்த என மனைவி என்னடி ஆச்சு என்று சொல்ல அவள் அப்பா உடனே ஒரு ஆட்டோ பிடிச்சுட்டு நம்ம காலனி ஆளுங்க இரண்டு மூணு பேரை கூப்பிட்டுட்டு பை பாஸ் பாலம் பக்கம் போங்க, அங்க எனக்காக பாலு அங்கிள் அவங்களோட சணியடை போட்டிட்டிடுக்காரு.

நான் உதவிக்கு ஆட்களை கூப்பிட்ட போது எனக்கு உதவ யாரும் வரவில்லை, ஆட்டோ காரரிடம் சொல்ல அவர் நான்கைந்து ஆட்களை வரவழைத்து அந்த பாலத்துக்கு நாங்கள் சென்றபொழுது பாலுவையும், அவன் மகனையும் நானகைந்து பேர் தாக்கிக்கொண்டிருப்பதை பார்த்தோம்.ஆட்டோ சென்று நின்றவுடன் ஆட்டோவில் வந்தவர்கள் இறங்கி அங்கு ஓட, தாக்கிக்கொண்டிருந்தவர்கள் இவர்கள் வருவதை பார்த்து ஓடிவிட்டனர்.

நல்ல வேளை இருவருக்கும் பொ¢ய காயமில்லை, மருத்துவமனைக்கு கூட்டி வந்து காயங்களுக்கு மருந்திட்டு வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு பாலுவின் கையை பிடித்து நன்றி கூறினேன்.இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி என்று சொல்லிவிட்டான்.

என் மகளை அவள் மாணவி ஒருத்தி அடிபட்டு பக்கத்து ஹாஸ்பிடலில் சேர்த்திருப்பதாகவும்,அவள் “உங்களை பார்க்க”விரும்புவதாக சொல்வதாகவும் சொல்ல அவளும் அதை நம்பி ஆட்டோவில் ஏறியிருக்கிறாள். வழியில் நான்கைந்து இளைஞர்கள் இவளை கடத்திச்செல்ல முயன்ற போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த பாலுவும், அவர் மகனும்,இது ராமனாதன் பொண்ணு மாதிரி இருக்கே என்று அடையாளம் கண்டு, பாலு மட்டும் பயப்படாமல் இறங்கி அவ்ர்களை தடுக்க, பாலுவின் பையன் இவளை ஏற்றி வீட்டில் கொண்டு விட்டு விட்டு தன் தந்தைக்கு உதவியாக அந்த இடத்துக்கு மீண்டும் விரைந்திருக்கிறான்.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து கையில் கட்டுடன் வேலைக்கு வந்த பாலுவிடம் உடன் வேலை செய்வோர் என்னவென்று விசாரிக்க வண்டியில் செல்லும்போது அடிபட்டு ஹாஸ்பிடலில் இருந்ததாக புன்னகையுடன் தெரிவித்தான்.இதைக்கேட்டு மனம் முழுக்க நன்றியுடன் அவனை பார்வயால் பார்த்தேன்

பாலுவின் இடத்தில் நான் இருந்திருந்தால் நான் எப்படி நடந்து கொண்டிருப்பேன், நினைத்துப்பார்த்து தலை குனிந்தேன்.

– வாசகர்கள் “மனிதர்களில் ஒரு சிலர் “தலைப்பை நான்(ராமனாதன்) அல்லது பாலு இரு கதாபாத்திரங்களிலும் பொருத்தி பார்த்துக்கொள்ளலாம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *