அஞ்சாம் வகுப்பில படிச்சிக்கிட்டு இருந்த ஆர். கணேஷ்தான் எனக்கு ரொம்பக் கூட்டாளியா இருந்தான். அவன்தான் எனக்கு ‘ஸ்லேடு’ எழுதிக் கற்றுக் கொடுத்தான். ஒடஞ்சிப்போன கண்ணாடிச் சில்லுங்கள எடுத்து, மண்ணெண்ண வெளக்குலக் காட்டி கரி படிஞ்சவொடனே, அதுல சம்பூர்ண ராமாயணம், நீலமலைத்திருடன், நான் பெற்ற செல்வம், வஞ்சிக் கோட்டை வாலிபன், மலைக்கள்ளன், புதுமைப் பித்தன்னு வரிசையா எழுதி டார்ச் லைட் அடிச்சி சொவர்ல சினிமா காட்டுறதுக்குக் கூட ஆர். கணேஷ்தான் எனக்கு சொல்லிக் கொடுத்தான்.
மொதமொதலா கண்ணாடிச் சில்லுங்கள்ள எழுதி சினிமா படம் மாதிரி ஆர்.கணேஷ் படம் காட்டுனப்போ எனக்கு சந்தோஷம் தாங்கல. இது மாதிரி நெறய விஷயங்கள, ஆர்.கணேஷ் கத்து வெச்சிருந்தான். நாங்க அப்ப புருவாஸ் 32 எஸ்டேட்டுக்கு மாறி வந்தப்ப ஆர்.கணேஷ்தான் எனக்கு மொத கூட்டாளியா கெடச்சான். தோட்டத்து பள்ளிக் கோடத்துல என்னய மூன்றாம் வகுப்புல சேர்த்துவுட்டாங்க.
எம்.தம்பிராஜா சார்தான் அந்தப் பள்ளிக் கோடத்துல ஆசிரியரா இருந்தாரு. ஒரு நா ‘அறிவு விளக்கு’ வாசகத்திலர்ந்து ‘அபு பக்கர் நல்ல பையன்’ன்ற ஒரு பாடத்த தம்பிராஜா சார் சொல்வதெழுதலாப் போட்டாரு! அதுக்கு மொதல்லயே ஆறாம் வகுப்புல படிக்கிற ஆர்.நடராஜன் வந்து மூணாம் வகுப்பு பசங்ககிட்ட இருந்த, ‘அறிவு விளக்க வாசக’ புத்தகங்கள எடுத்துக் கிட்டுப் போய், சாரோட மேசையில வச்சிட்டாங்க.
தம்பிராஜா ஆசிரியரு சொல்ல..சொல்ல.. மூணாம் வகுப்பு பசங்கலான நாங்க சொல்வதெழுதல் பாடம் எழுதி முடிச்சோம்.
கொஞ்ச நேரம் கழிச்சி என்னய மட்டும் கூப்புட்ட எங்க தம்பிராஜா ஆசிரியரு “இதயெல்லாம் எப்படி காப்பியடிச்சே”னு கேட்டு மெரட்டுனாரு. மொதல்ல எனக்கு எதுவும் வெளங்கல. எனக்கு அழுக வந்திடுச்சி. அடக்கிக் கிட்டேன்.
அதுக்கு அப்பறம், என்னோட மேசயில இருந்த ‘பேக்’கெல்லாம் தொறந்துப் பாத்துபுட்டு அவரோட மேசமேல இருந்த என்னோட ‘அறிவு விளக்க வாசகத்த’ எடுத்துப் பிரிச்சுப் பாக்கிறாரு. அதுக்கு அப்பறம், என்னோட சொல்வதெழுதல் நோட்டுப் புஸ்தகத்தயும் பிரிச்சுப் பாக்கிறாரு. பழைய பக்கத்தயெல்லாம் பொரட்டிப் பாரத்துகிட்டே வந்த தம்பிராஜா ஆசிரியரு, எல்லார் முன்னுக்கும் வெச்சி என்னய ரொம்பவே பாராட்டினாரு.
அன்னயிலர்ந்து தான் அஞ்சாம் வகுப்பு ஆர்.கணேஷ் எனக்கு ரொம்ப கூட்டாளியாயிட்டான்.
ஆர்.கணேசோட அப்பா கூட ஒரு காலத்துல கெடா பக்கத்துல இருந்த எஸ்டேட் பள்ளிக் கோடத்துல ஆசிரியரா வேல பார்த்தவர்தான்னும் ஏதோ பெரச்சினயினால அந்த வேலய விட்டுட்டு குடும்பத்தோட புருவாஸ் பக்கம் வந்துட்டாங்கன்னு ஆர்.கணேஷ் எனக்கு சொல்லியிருந்தான். ஆர்.கணேஷ் பள்ளிக் கோடம் விட்டு வந்த வொடனே சட்டயக் கழட்டி துணிக்கொடியில போடுவான். அதுக்கு அப்பறம் ராத்திரி குளிக்கிற வரைக்கும் சட்ட போட மாட்டான்.
சனிக்கெழம, ஞாயித்துக்கெழம, அவுங்க அம்மா அப்பாவுக்கு ஒதவி செய்ய ‘கித்தா’ காட்டுக்குப் போயிட்டு வருவான். கித்தா மங்குலேர்ந்து கித்தா பாலை வளிச்சி எடுத்து வாளியில சேக்கும் போது மேல ஒடம்பெல்லாம் கித்தாப் பால் பட்டு காஞ்சி போயிடும்.
திங்கக்கெழம அவன் பள்ளிக்கூடத்துக்கு வரும்போது பாத்தாக் கூட, அவன் ஒடம்புல கித்தாப் பால் அங்கங்க காஞ்சி போயி ஒட்டிக்கிட்டு இருக்கும். அதப்பத்தி அவன் கிட்ட சொன்னா, சொல்லரப்ப மட்டும் காஞ்சிப் போன கித்தாப் பால கொஞ்சம் உருட்டி எடுப்பான். அதப் பத்தியெல்லாம் ஆர்.கணேஷ் கவலப்பட மாட்டான். ஆனாக்கா ஆர்.கணேஷ்தான் அஞ்சாம் வகுப்பிலயே ரொம்ப கெட்டிக்கார மாணவன்.
கூட்டல் கழித்தல் வகுத்தல் பெருக்கல் கணக்குலயும், செய்யுள் பாடத்துலயும் அவன்தான் ஒன்னா நெம்பரா இருந்தான்.அஞ்சாம் வகுப்புல படிச்சாலும் ஆர்.கணேஷ் ரொம்பவே நோஞ்சானாகத்தான் இருந்தான். ரெண்டு கைங்களும், ரெண்டு காலுங்களும் அவனுக்கு சூம்பிப் போய்தான் இருக்கும். ஒரு தரம் ஆர்.கணேசோட அம்மாதான் சொன்னாங்க, அவனுக்கு ரெண்டு வயசு இருக்கும்போது ‘நிமோனியா’ காச்ச வந்து இப்படி ஆயிட்டானு.
ஆர்.கணேசோட அண்ணன் நடராஜன் ஆறாம் வகுப்பிலயும் தம்பி தாமோதரன் நாலாம் வகுப்பிலயும் எங்கப் பள்ளிக் கோடத்துலதான் படிச்சிகிட்டு இருந்தாங்க.ஆர்.கணேஷ் கிட்ட நெறய தெறமைங்க இருக்கிறதா தோட்டத்துல எல்லாரும் பேசிக்குவாங்க.
ரொட்டி டின்னுல்ல ஒரு பக்கத்த வெட்டியெடுத்துட்டு, மேலயும் கீழயுமா நாலு ஓட்டய போட்டுட்டு, ரெண்டு கம்பிங்கள சொருவி, சினிமா படம் காட்டுற புரோஜெக்டர் தயார் செய்திடுவான்.தமிழ் முரசு, தமிழ் நேசன், பத்திரிகைங்கள்ள வர்ற சினிமா விளம்பரப் படங்கள கத்தரிச்சி எடுத்து, பிலிம் சுருள் தயார் பண்ணுவான். ஒவ்வொரு படத்தயும், கித்தா பால் தொட்டு எடுத்து ஒட்டி அதை படம் காட்ட தயார் பண்ணி வெச்சிருக்கிற, புரோஜெக்டர் கம்பியில சொருவிட்டு, கிராமபோன் பாட்டுப் பெட்டிக்கு சாவி குடுக்கிற மாதிரி சுத்துனா, படம் மேலயும் கீழயும் ஏறும் இறங்கும்.
இத வேடிக்கப் பார்க்க பத்துப் பதினஞ்சி பசங்க கூடிடுவாங்க. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஆர்.கணேஷ் (ஜெமினி கணேசன்) எஸ்.எஸ்.ராஜேந்திரன், ரஞ்சன், சாவித்திரி, பத்மினி, பானுமதி, அஞ்சலிதேவி, ராஜகுமாரியெல்லாம் எங்க ஆர்.கணேஷ் காட்டுற சினிமாவுல வருவாங்க.படம் போட்டு முடிஞ்சதும், அவுங்க வீட்டுக்குள்ள இருக்கிற கொஞ்சம் இருட்டான எடத்துக்குக் கூட்டிக்கிட்டு போயி எங்களுக்கு ‘ஸ்லேடு’ போட்டுக் காமிப்பான்.
கைலாம்பு போட்டு கரி புடிச்ச கண்ணாடிச் சில்லுங்கள்ள இருக்கிறத காட்டுவான். சுண்ணாம்பு அடிச்ச பலகச் சொவர்ல எல்லாம் பெரிய பெரிய எழுத்துல படப் பேருங்க விழும். நாங்க எல்லாரும் சேந்து பலமா கைங்களத் தட்டுவோம்.
இதெல்லாம் ஆர்.கணேசுக்கு ரொம்ப பெருமையா இருக்கும். என்னய ஆர்.கணேசுக்கு ரொம்ப பிடிக்குங்கிறதுனால என்ன கூட வெச்சிக்கிட்டுதான் இத எல்லாம் ஆர்.கணேஷ் தயார் பண்ணுவான்.இந்த விசயத்துல ஆர்.கணேஷ் ரொம்ப கவனமாக இருப்பான். ஜெமினி கணேசன் பேரு மாதிரி எங்க ஆர்.கணேசுக்கு அமஞ்சி இருக்கிறதுனாலதான், இவன் கிட்ட இவ்ளோ தெறமங்க இருக்குதுன்னு நானும் நெனச்சுக்குவேன்.
எம்பேரக் கூட கொஞ்ச நாளக்கி எம்.ஜின்னு, ஆர்.கணேஷ் கிட்ட சொல்லி ‘ஸ்லேடெல்லாம்’ எழுதிக் காமிக்க சொன்னேன். ஆர்.கணேசும் எனக்காவ, எம்.ஜின்னு எழுதி ‘ஸ்லேடு’ போட்டுக் காமிச்சான். சொவர்ல எம் பேரு தெரிஞ்சதும் எனக்கு சந்தோசம் பிடிபடல.
சனிக்கெழம, ஞாயித்துக்கெழம ரெண்டு நாளும் நானும் அப்பா அம்மாவுக்கு கித்தா மங்கு தொடச்சி பால் சேகரிச்சு ஒதவ தீம்பாருக்கு போவேன்.ஆர்.கணேசோட அப்பா அம்மா நெரயத் தாண்டித்தான் எங்க அம்மா அப்பா தீம்பாருக்கு போகணும். ஆர்.கணேஷ் நெறயச் சினிமாப் பாட்டுங்களத் தெரிஞ்சி வெச்சிருந்தான்.‘வருவேன் உனது மாளிகையின் வாசலுக்கே!’
‘நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே! ‘வருந்தாதே மனமே!’‘பொன்னான வாழ்வு புண்ணாகிப் போமோ’னு வித விதமான பாட்டுங்கள அவன், தீம்பார் காட்டுல பாடரதக் கேட்டாங்கண்ணா ஒரு தரம் நின்னுக் கேட்டுட்டுப் போவாங்க.
தீம்பார் காட்டுல அவன் இருந்தான்னா கித்தா மங்கு தொடச்சிகிட்டு பாட்டுப் பாடுவான்.
அவன் பாட்டுப் பாடாம கித்தா மங்கு தொடச்சி கிட்டு இருந்தானா அவனோட அப்பா அம்மாவுக்கு பக்கத்து நெரயில மரம் சீவுரவுங்க சும்மா இருக்க மாட்டாங்க. ஆர்.கணேஷ் பாட்டுப் பாடுற சத்தம் எங்க அப்பா அம்மா நெர வரைக்கும் கேக்கும்.கொஞ்சம் கொஞ்சமா ஆர்.கணேஷ்கிட்டருந்து எல்லாப் பாட்டுங்களயும் நானும் கத்துக்கினும்னு ஆச வந்திருச்சி.
ஆர்.கணேஷ் கிட்ட நான் கேட்டப்ப அவன் ஒத்துக்கல.எனக்கு ரொம்பவே வேதனையா போயிடிச்சி.புருவாஸ் டவுன்ல குஸ்தி சண்ட நடக்கப் போவுதுன்னும் அதுல ‘கிங்காங்’, ‘தாரா சிங்’கெல்லாம் வந்து சண்டப் போட போராங்கன்னும் ஒரே பேச்சா இருந்துச்சி. என்னையும் எந்தம்பி மணியையும் அப்பா சைக்கிள்ள வச்சி கூட்டிக்கிட்டுப் போயி காமிச்சாரு. வெல்லனயே எங்க ரெண்டு பேரயும் அப்பா அன்னிக்கு புருவாஸ் டவுனுக்கு கூட்டிக்கிட்டுப் போயிட்டாரு. அங்கப் போனப்பதான் தெரிஞ்சது, மொதல் காட்சி, புதுமைப் பித்தன் படம் பாக்கிர திட்டத்தோடதான் எங்க ரெண்டு பேரையும் வெல்லனக் கெளப்பிக் கூட்டிக்கிட்டு வந்திருக்கார்னு.
அங்க போனப்பதான் தெரிஞ்சது, அங்க அப்பாவோட கூட்டாளிங்க, தவுக்க முனுசாமி, சதாசிவம், எஸ்.ராகவன், யூனியன் காரியதரிசி மாரியப்பன்னு எல்லாருமே தியேட்டர் வாசல்ல நின்னுக்கிட்டு இருக்கிறது.அப்பாவப் பாத்து யூனியன் காரியதரிசி மாரியப்பன்தான் கேட்டாரு. என்னப்பா, நீ ஒரு ஆளுதான் வருவன்னு பாத்தா ரெண்டு புலிக்குட்டிங்களயும் கூட்டிக்கிட்டு வந்துட்டன்னு.
இவங்க எல்லாருமே, எங்க வீட்டு வராந்தாவுக்கு வந்து 904 சீட்டு ஆடரவங்க.
எங்க தம்பி நடராசு கிட்ட ரொம்ப அன்பா இருப்பாங்க. மூனு வயசுதான் அவனுக்கு, இவங்க எல்லாரோட பேரயும் கொஞ்சம் கூட தயங்காம சொல்லுவான். ஏதாச்சும் வேணுமின்னு அவங்க யாராச்சும் ஏதாச்சும் கேட்டுவச்சாங்கன்னா உள்ளே போயி பாட்டிக்கிட்டயோ அம்மாகிட்டயோ கேட்டவங்க பேரச் சொல்லி இன்னதக் கேட்டாங்கன்னு சொல்லுவான்.
அம்மாவும் பாட்டியும் மட்டுமில்லே. வெளிய சீட்டாட்டத்துக்கு உக்காந்திருக்கிற ஆளுங்களும் விழுந்து விழுந்து சிரிப்பாங்க.எம்ஜிஆரு கத்திச் சண்டயெல்லாம் அந்தப் படத்துல ரொம்ப வாட்டி போட்டாரு. சந்திரனுல ஏறி பறந்துகிட்டு ‘உள்ளம் ரெண்டும் ஒன்னு’னு பாட்டெல்லாம் பாடுனாரு. சந்திர பாபு ரொம்ப சிரிப்புக் காட்டுனாரு.
குஸ்திச் சண்ட நடக்கிற எடத்துல எடம் கெடைக்கிறது ரொம்ப கஷ்டமா போயிடிச்சி.
எங்க தோட்டத்துல அதுக்கு அப்புறம், தவக்க முனுசாமி மாமாதான் எங்களுக்கு குஸ்தி சண்டயெல்லாம் போடரத்துக்கு கத்துக் குடுத்தாரு.எம் வயசுப் பையனுங்க எல்லாத்தயும் கூட்டிவச்சிகிட்டு ‘குஸ்தி’ சண்டயில் எப்படிப் புடிக்கிறது, எப்படி மடக்கிரதுன்னுள்ளாம் போட்டுக் காமிப்பாரு.தவுக்கன்னுதான் தோட்டத்துல இருந்தவங்க அவரக் கூப்பிடுவாங்க. தவுக்க மாமா, குஸ்தி சண்ட சொல்லிக் குடுக்க ஆரமிச்ச ஒடனே, ஆர்.கணேஷ் கிட்ட அது வரைக்கும் இருந்த கூட்டாளித் தனமெல்லாம் கொறஞ்சி போயிடிச்சு. அவங்க வீட்டுப் பக்கம் போரதயே விட்டுட்டேன். ஒரு நாளு ஆர்.கணேசோட அம்மாகிட்ட மாட்டிக்கிட்டேன்.
என்னய இழுத்துப் புடிச்சி அணைச்சிக்கிட்டாங்க.
“ஏண்டா! எங்க வூட்டுப் பக்கம் வர்ரதே இல்ல. புதுக் கூட்டாளிங்க ஒனக்கு கெடச்சிட்டாங்களா இப்ப”ன்னு கேட்டு, எம் மொகம் தலயயெல்லாம் தடவிக் குடுத்து கேட்டுக் கிட்டு இருந்தாங்க.அவங்க மொகத்தப் பாக்கிரப்ப அவங்க அழுகிற மாதிரி இருந்திச்சி.அப்பறம் அவங்க கிட்டர்ந்து திமிறிக்கிட்டு, தப்பிச்சு வீட்டுக்கு ஓட்டம் புடிச்சேன்.
ஒரு நாளு அம்மாவோட தீம்பாருல, கித்தா மங்கு தொடச்சிக்கிட்டே ‘நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே’ன்னு பாடிக்கிட்டு இருந்ததக் கேட்டுக்கிட்டு இருந்த பக்கத்து நெர ஆதிலட்சுமி அத்தை சொன்னாங்க, பாட்டு ரொம்ப நல்லா இருந்ததுன்னு.எனக்கு ரொம்ப தைரியம் வந்துடிச்சி.
அதுக்கு அப்பறம் சனிக்கெழம ஞாயித்துக்கெழம லீவுல தீம்பாருக்குப் போனா, நானும் பாட்டுங்கள வெளுத்துக் கட்ட ஆரமிச்சேன்.
இது மாதிரிதான் ஒரு நாள் காலையில மங்கு தொடச்சி கித்தாப் பால் வளிச்சி எடுத்து ஒதவி செய்ய அம்மா மரம் சீவுர தீம்பாருக்குப் போயிக்கிட்டு இருந்தப்ப, ஆர்.கணேஷ் வந்து வழிமறிச்சி வம்பிளுத்தான்.தீம்பாருல அவன் பாடுர பாட்டுங்கள நான் பாடக் கூடாதுன்னும் அப்படி மீறிப் பாடினினா பள்ளிக் கோடத்துல சார் கிட்ட சொல்லி அடிவாங்க வெச்சிடுவேன்னு மெரட்டினான். நான் பயப்படல.அதுக்கு அப்புறம் ‘ஆசையே அலைபோலே’ பாட்டெல்லாம் கத்து மனப்பாடம் பண்ணிக்கிட்டு தீம்பார்ல பாடிக்கிட்டு இருந்தேன்.
முனுசாமி மாமா எங்களுக்கு குஸ்தி சண்ட பழகிக் குடுத்த எடத்துல பேட்மிண்டன் கோர்ட் கட்டணும்னு பெரிய ஆளுங்க முடிவெடுத்தாங்க.பேப்பர்லயும், ரேடியோவுலயும் ‘தோமஸ் கப்’ வெளயாட்டப் பத்தி அடிக்கடி சொல்லிக்கிட்டு இருப்பாங்க. தவுல்காரர் வீட்டாண்ட பத்துப் பதினஞ்சி பேருங்க வந்து ஒக்காந்துக்கிட்டு, ரேடியோவுல வர்ற சேதிங்கள ரொம்ப கவனமா கேப்பாங்க.‘வோங் பெங் சூன், எட்டி சூங்’னு பேரெல்லாம் சொல்லுவாங்க.
ரேடியோ கேக்கிர ஆளுங்க எல்லாம், இங்கிலிஸ் பள்ளிக் கோடத்துல போய் படிக்கிரவங்க. சாரதா அக்கா, செல்வராஜா, ராதா, நடராஜா, ஆதி மூலம், சுப்பராயன்லாம் ஆயர்தாவா வரைக்கும் போய் இங்கிலிஸ் பள்ளிக் கோடத்துல படிக்கிரவங்க.எங்களுக்கு குஸ்தி சண்ட பழகிக் குடுத்த தவுக்க முனுசாமி மாமாவோட தம்பி அங்காளன் மாமாவும் அவுங்க கூட்டத்துல இருப்பாரு. எல்லப்பன் மாமாவோட தம்பி, சின்னையாவெல்லாம் தவுல்காரி வீட்டாண்ட ரேடியோ கேக்க வர்றவங்கதான்.
ஆர்.கணேஷ் கூட இப்ப எனக்கு கூட்டாளித் தனமெல்லாம் இல்லாமப் போயிடிச்சு.
ஏழு மணியிலர்ந்து எட்டு மணிவரைக்கும் ஆதிலட்சுமி அத்த வீட்டுக்குப் போயி, சாரதா அக்கா கிட்ட இங்கிலிஸ் டியூசன் எடுக்கணும்னு அப்பா கண்டிஷனா சொல்லிட்டாரு.
மத்தியானம் பள்ளிக் கோடம் விட்டு வந்தொடனே, வீட்டுப் பாடமெல்லாம் எழுதி முடிச்சிடுவேன்.
அதுக்கு அப்பறம், ‘பாசா’ பக்கம் போயி மூணு நாலு தரம் காண்டா வாளி போட்டு தண்ணி கொண்டாந்து சேத்தி வச்சிட்டு அஞ்சி மணி ஆச்சினா, பேட்மிண்டன் கோர்டு பக்கம் போயி பெரிய ஆளுங்க வெளயாடரத வேடிக்கப் பாப்பேன்.
இது மாதிரிதான் ஒரு நாளு பேட்மிண்டன் வெளயாட்டப் பார்த்துக்கிட்டு இருந்தப்போ, லயத்து ஆளுங்க திபு திபுன்னு கள்ளுக் கட பக்கம் ஓடுனாங்க.வெளயாட்டப் பாத்துக்கிட்டிருந்த பசங்களும் கள்ளுக் கட பக்கம் பாத்தா, தவுக்க முனுசாமி, மாமா, சதாசிவம் மாமா, சகாதேவன் மாமா மூனு பேரும் சேர்ந்துக்கிட்டு ஆயிரம் ஏக்கர் தோட்டத்திலிருந்து கள்ளுக்குடிக்க வந்த ஆளுங்க பத்துப் பன்னென்டு பேரை வெரட்டி வெரட்டி அடிச்சி தொவச்சிகிட்டு இருக்கிறாங்க.
யார் யாரோ போய் தடுத்துப் பார்த்தும் அடிக்கிறத இவங்க மூணு பேரும் நிப்பாட்டவே இல்ல.
அந்த சண்ட நான் நாலாம் வகுப்புக்குப் போர வரைக்கும் நிக்கவே இல்ல. இந்த சண்டக்கி ஏதோ பொண்ணு விசயம்தான் காரணம்னு பேசிக்கிட்டாங்க.அங்காளன் மாமாவுக்கு அப்பதான் கல்யாணம் நடந்திச்சி.தவுக்க மாமா வீட்டுக்கும், யூனியன் காரியதரிசி மாரியப்ப அண்ணன் வீட்டுக்குமா பெரிய பந்தல் போட்டிருந்தாங்க. கல்யாணத்தன்னிக்கு பஞ்ச நாதன், மாமா நாதசொரமும், ஆத்ம நாதன்ணன் தவலும் வாசிச்சாங்க.என்னயப் பாத்தொடனே பஞ்சநாதன் மாமா அவர் பக்கத்துல கூப்புட்டு உக்காத்தி வெச்சிக்கிட்டாரு.
பஞ்ச நாதன் மாமாவும் ஆத்ம நாதண்ணனும் அண்ணன் தம்பிங்க.ரெண்டு பேருமே தோட்டத்துல வேற வேற வீட்டுல இருந்தாங்க. எனக்கு நாதசுர சத்தம் ரொம்பப் பிடிக்கும். நாதசுரத்த ஊதி பயிற்சி எடுக்கும்போது பஞ்சநாதன் மாமா வீட்டுக்கு போயி வேடிக்கப் பாத்துக்கிட்டு இருப்பேன். இப்படி அடிக்கடி போயி வேடிக்க பார்க்க ஆரமிச்ச எனக்கு அவரும் அவங்க வீட்டு ஆளுங்களும் ரொம்ப பழக்க மாயிட்டாங்க.அவரூட்டு அக்கா தோட்டத்துல எங்க அம்மாவெல்லாம் செய்யிர மாதிரி கித்தா மரம் சீவுர வேலதான் செஞ்சிகிட்டு இருந்தாங்க.
தோட்டத்துல மூனு லயம் மேக்கட கீக்கட லயமா இருந்திச்சி. பஞ்சநாதன் மாமாவெல்லாம் ரெண்டு மூனு படி வச்சி கட்டுன ரெட்ட ரெட்ட வீடுங்கள்ள குடியிருந்தாங்க. தோட்டத்து பால் கொட்டாயில வச்சி அனார்கலி படம் போட்டாங்க.
பால் கொட்டாயிக்குப் பக்கத்துல அம்மன் கோயிலு. கோயிலுக்கு எதிர்ல ஓர் அரச மரமும், ஓர் ஆலமரமும் ரொம்ப பெரிசா வளர்ந்திருச்சு.அம்மன் கோயிலுக்குப் பின்னாடி பெரிய பாசா. அதுல தென்ன மரம் ஏராளமா நட்டிருந்தாங்க. அம்மன் கோயில் பக்கம் தோட்டத்து ஜனங்க தனியா போய் வந்தத எப்பவுமே பாத்தது கெடயாது.
எப்ப வாச்சும், வெளியூர்லர்ந்து வர்ற பிச்சக்காரங்க வந்து பிச்சயெடுத்திட்டு ராத்திரி மட்டும் அங்க தங்கியிருந்திட்டு போயிடுவாங்க.மத்தபடி அந்த எடம் ஜனநடமாட்டமில்லாத எடமாவே இருக்கும்.பக்கத்துல இருக்கிற பெரிய பால் கொட்டாயில இப்ப எந்த வேலயும் நடக்கிறதில்ல. பச்ச கித்தாப் பால, பெரிய டாங்கி வச்சி புடிச்சி, லோரியில ஏத்தி மாத்தாங் டிவிஷனுக்கு அனுப்பிடுவாங்க. அம்மன் கோவிலுக்கு எதிர்ல இருக்கிற அரசமரத்துக்கும் ஆல மரத்துக்கும் விதம் விதமா குருவிங்க வந்துட்டுப் போவும். முன்ன, ஒரு தடவ பஞ்சவர்ண கிளி கூட்டம். ஆயிரம் கிளிங்க இருக்கும். வந்து அரச மரத்துலயும் ஆலமரத்துலயும் ஒரு வாரம் போல தங்கியிருந்துட்டு பக்கத்துலயே இருக்கிற புக்கிட் மல பக்கம் பறந்து போனிச்சிங்க.
தோட்டத்துல இருந்து ஆளுங்க எல்லாம் வந்து ரொம்ப அழகா இருந்த கிளிங்கலப் பாத்துட்டுப் போனாங்க. பள்ளிக் கோடத்துல உள்ள பசங்க கிட்ட ரோத்தான் எடுத்து மேச மேல தட்டி சொன்னாரு, “யாராச்சும் அரசமரத்துல ஒக்காந்திருக்கிற கிளிங்க மேல கல்ல விட்டு எரிஞ்சாலோ லாஸ்டிக் வச்சி அடிச்சாலோ முதுகுத் தோல உரிச்சிப் புடுவேன்”னு எச்சிரிக்கப் பண்ணாரு.
பெரிய பெரிய சடயோட தொங்கின வேருங்கள்ளல்லாம் கிளிங்களோடு நீலம்,பச்ச, செகப்பு, ஊதா கலர்ல பஞ்சவர்ண கிளிங்களோடு சிறகு முடிங்க ஒட்டிக்கிட்டி காத்துல அசஞ்சிகிட்டு இருந்தப்ப, எங்க யாருக்கும் எந்தப் பயமும் இல்லாம, ஒருத்தர ஒருத்தர் அடிச்சி புடிச்சிகிட்டு கிளிங்களோட செறகுங்களப் பொறுக்கிகிட்டு இருந்தோம்.அந்தக் கூட்டத்துல ஆர்.கணேசும் இருந்தான். அவனப் பார்க்கும்போது எம்பேர்ல ஒரு வெறுப்பு இருக்கிற மாதிரி தெரிஞ்சது. அவன் பக்கமே நான் போக விருப்பப்படல.
அம்மன் கோயில் பக்கமிருந்துப் பாத்தா, பாசா பள்ளத்துல இருக்கிற தென்னந்தோப்பும் அகலம் அகலமா இலையோட சேமச் செடிங்களும் மண்டியிருக்கிறதும், தோட்டத்துக்கு நொழயிற மண் பாதையும், மேட்டுல, நீலக்கலர்ல பாலன் கெராணியார் பங்களாவும், பங்களாவுக்கு கொஞ்சம் தள்ளி, பச்சக் கலர்ல பலகக் கட்டடத்து பள்ளிக் கோடம் பளீர்னு தெரியும்.
தம்பிராஜா சார் மட்டும்தான் எங்க பள்ளிக் கோடத்துல சொல்லிக் குடுத்து கிட்டு இருந்தாரு.
கெராணி பங்களாவுக்குப் பள்ளிக் கோடத்துக்கும் எதிர்ல உள்ள பள்ளத்துலதான் இருக்குது குடி தண்ணிக் கெணறு. இந்தக் கெணத்துல இருந்துதான் தோட்டத்து ஆளுங்க காண்டாவாளி போட்டு சுத்தமான குடி தண்ணிய சேந்தி எடுத்து கிட்டுப் போவாங்க.
அப்பாவும், அம்மாவும் ஆளுக்கு ஒரு நட குடி தண்ணிய இங்கிருந்துதான் எடுத்து கிட்டு வருவாங்க.நானும் கூட, மூணு கலம் வாளி ரெண்டு காண்டாவுல மாட்டி எடுத்து கிட்டு வந்து நல்ல தண்ணிய சேந்திக்கிட்டு போவேன்.
ராத்திரி எந்நேரமானாலும், இந்தக் கெணத்துலர்ந்து தோட்டத்து ஆளுங்க தண்ணி சேந்தி எடுத்துக் கிட்டு போய்கிட்டு இருப்பாங்க. இதுக்கு அடுத்தாப்புல தான், கள்ளுக் கடை இருந்தது. இருட்டுர வரைக்கும் கள்ளுக்கட பக்கம் ஆளுங்க நடமாடிக்கிட்டு இருப்பாங்க.அதயும் தாண்டுனா, மலாய் கார போர்மேன் மூசான் வீடு. அதுக்கு அப்பறம், தோட்டத்து லோரி டிரைவர் வீடு. அதோட லயம் வந்துடும்.
அப்பல்லாம் தம்பிராஜா சார், ஆறாம் நம்பர் தீம்பாரத்தாண்டி தோட்டத்து தொர பங்களாவுக்கு போர வழியில இருந்த சின்ன தொர பங்களாவுலதான் குடும்பத்தோட தங்கியிருந்தாரு.புது ஹெர்குலிஸ் சைக்கிள்ள அங்கிருந்து வந்து எங்களுக்கு பாடம் சொல்லிக் குடுத்துட்டுப் போவாரு.
பாடம் நடக்கிறப்ப, தோட்டத்து பெரிய கெராணி பாலன் வந்து எங்க தம்பிராஜா சார்கிட்ட பேசிட்டுப் போவாரு.பெரிய கெராணி ஒரு தரம் ‘கிங்’ தொரயக் கூப்புட்டுக்கிட்டு வந்து, தம்பிராஜா சார்கிட்ட ஏதோ பேசிட்டு, எக்கள்ள இருவது பசங்களக் கூப்புட்டுக்கிட்டுப்போயி மலக்காட்டு தீம்பார்ல கித்தா கொட்டாய பொறுக்கச் சொன்னாரு. ரெண்டு மூனு அரிசிச் சாக்கு நெறய கித்தா கொட்ட பொறுக்குனதுக்கு அப்பறம், ஜீப்ல வச்சி கொண்டாந்து பள்ளிக் கோடத்துல எறக்கி விட்டாங்க. ரெண்டு நாள் கழிச்சி, பள்ளிக் கோடத்துக்கு வந்த ‘கிங்’ தொர சொக்கலேட்டுங்களும், கித்தா கொட்ட பொறுக்குன பசங்களுக்கு ஆளுக்கு ஒரு வெள்ளியும் குடுத்துட்டு போனாரு. நாதசுரம் வாசிக்கிற பஞ்சநாதன் மாமாவுக்கெல்லாம் எங்க தம்பிராஜா சார் ‘ஒறவுக்காரர்’னு அம்மா சொல்லித்தான் எனக்குத் தெரியும்.
தோட்டத்துல ‘அனார்கலி’ படம் போட்ட மறுநாளு பஞ்சநாதன் மாமா அந்தப் படத்துல வந்த எல்லாப் பாட்டுங்களயும் வாசிச்சி காட்டுனாரு. பஞ்சநாதன் மாமா ஒரு தரம் என்னய புருவாஸ் டவுனுக்கு கூட்டிக்கிட்டு போனாரு.
நாங்கெல்லாம் ‘மார்க்கெட்டு’ன்னு சொல்றத பஞ்சநாதன் மாமா ‘பசார்’னு சொல்லுவாரு. நாங்கெல்லாம் முட்டைக் கோசுன்னு சொல்றத அவரு ‘கேபேஜ்’ன்னு சொல்லுவாரு.அன்னக்கி எனக்கு ரொம்பப் பிடிக்கும்னு மண்டைங்கா பழமெல்லாம் வாங்குனாரு. தவுல் வாசிக்கிறத ஆத்மநாதண்ணன், பஞ்சநாதன் மாமாவுக்கு கூடப் பொறந்த தம்பி.
ஆத்மநாதண்ணன் எப்பவாவது ஒரு தரம்தான் தோட்டத்துப் பக்கம் வருவாரு. ஈப்போவிலயோ, தைப்பிங்கிலயோ உள்ள கோவில்ல அவரு தவல் வாசிக்கிறதா சொல்லிக்குவாங்க.எங்க தோட்டத்துல எந்தக் கல்யாணம் நடந்தாலும் அண்ணன் தம்பிங்க ரெண்டு பேரும்தான் நாதஸ்வரம் தவிலு வாசிப்பாங்க.
தோட்டத்து ஜனங்க ஒரு வாரமா பாசா பக்கம் போயி ஊத்துத் தண்ணி எடுக்க பயந்துக் கிட்டு இருந்தாங்க.புக்கிட் பக்கம் பண்டி வேட்டைக்குப் போனவுங்க, திரும்பி வர்றப்போ ரெட்டைப் புலிங்க, பாசா பக்கம் போயி தண்ணி குடிச்சிட்டு மேடேறிப் போனதப் பாத்ததாவும் அதுங்க நடமாடிக்கிட்டு இருந்த எடத்துல இருந்த பாறைங்க மேல புலி பால் சிந்தி ஒறஞ்சி போய் இருக்கிறதாகவும் சொன்னதுலர்ந்து அம்மா பாசாப் பக்கமெல்லாம் போயி தண்ணி சேந்திக்கிட்டு வரவேணாமுன்னிட்டாங்க. அப்பதான், தோட்டத்துல இன்னொரு அதிசயம் நடந்துப் போச்சி.
ஆறாம் நம்பர் தீம்பார் பக்கம், ஆட்டுக் குட்டிய முழுங்கிட்ட மலப்பாம்பு ஒன்ன தோட்டத்து பால் லோரியிலிலே ஏத்திக்கிட்டு வந்து ஸ்டோர் பக்கம் போட்டு வச்சிருந்தாங்க. ஆறாம் நம்பர் தீம்பாருக்கு பக்கத்துல இருந்த மலாய்க்காரங்க கம்பத்துல மொதுல்ல கோழி, வாத்துங்கள புடிச்சி முழுங்கிக் கிட்டிருந்த மலப்பாம்பு, ஆட்டுக்குட்டிய முழுங்கிட்டு தெனறிக் கிட்டு இருந்தப்ப, மலாய்க்காரவங்க கிட்ட வசமா மாட்டிக்கிச்சு.தோட்டத்து ஆளுங்கதான் பால் லோரிய வச்சி ஸ்டோர்ல கொண்டாந்து போட்டு வச்சிருந்தாங்க. வாழ மரம் கணக்கா, தலையையும் வாலையும் சுருட்டி வச்சிகிட்டு, மஞ்ச மஞ்சேன்னு படுத்துக் கெடந்திச்சி. ஒடம்புல்ல ஒரு இடம் மட்டும் சாக்கு மூட்டை மாதிரி முண்டா தெரிஞ்சது. அதுதான் ஆட்டுக் குட்டின்னு எல்லாரும் பேசிக்கிட்டாங்க. தோட்டத்து ‘கிங்’ தொர படமெல்லாம் புடிச்சாரு. ஆறாம் நம்பர் தீம்பாருல மரம் சீவுனவுங்க எல்லோரோடும் பாலன் கெராணி, தம்பிராஜா சார், மலப்பாம்பு பக்கத்தில பயப்படாம உக்காந்து படம் புடிச்சிக்கிட்டாங்க.
பக்கத்துல இருக்கிற 1000 ஏக்கர் தோட்டத்து ஆளுங்க, செராப்போ தோட்டம், பாரிட் பேரா தோட்டம், சண்டிகிராப் தோட்டம், இன்னும் எங்கிருந்தெல்லாமோ ஆட்டை முழுங்குன மலப்பாம்ப பாக்கிறதுக்குக் காடிங்கள்ளயும் எஸ்டேட் லோரிங்கள்ளயும் ஜனங்க வந்து பாத்துப்புட்டு போயிக்கிட்டு இருந்தாங்க.
ஒரு தரம் பாதி ராத்திரியில, பாசாப் பக்கம் இருந்து அஞ்சாரு தரம் ரெட்டப் புலிங்க உறுமுற சத்தம் கேட்டுச்சி. தோட்டத்துல இருந்த வேட்டக்காரரு இன்னும் நாலஞ்சு ஆளுங்களக் கூட்டிக்கிட்டு, துப்பாக்கியோட பாசாப் பக்கம் போனாரு. ஆம்பளப் பொம்பளங்க பசங்களெல்லம் தெரண்டு பாசாப் பக்கமே பாத்துக்கிட்டு இருந்தப்ப திடீர்னு நாலஞ்சி வேட்டுச் சத்தம் கேட்டுச்சி.
அதுக்கு அப்பறம் பாசாப் பக்கம் போர பாதையில பேச்சு சத்தமும் ஆளுங்க நடந்து வர சந்தடியும் கேட்க, மூனு மூசாம் பூனைங்கள தூக்கிக்கிட்டு வர்ராங்க.
வீட்டுலயும், பேட்மிண்டன் வெளயாடரதையும் வேடிக்கப் பாத்துப்புட்டு நல்ல தண்ணி கெணத்துலர்ந்து ரெண்டு மூணு நட தண்ணிய கொண்டாந்து ஊத்திப்புட்டு எப்பவாச்சும் அம்மா சுள்ளி பொறுக்கிவரச் சொல்லுவாங்க.ஏழு மணி ஆனதும் ஆதிலட்சுமி அத்தவூட்டு சாரதா அக்கா கிட்ட இங்கிலிஸ் பாடம் டியூசன் எடுக்க போயிடுவேன். சாரதா அக்காவோட அப்பா பொன்னுசாமி மாமா. தோட்டத்துல அவர எல்லாரும் டைலர்ன்னுதான் கூப்பிடுவாங்க.
எப்ப பாத்தாலும் மிஷின்ல துணி தச்சிக்கிட்டே இருப்பாரு. மாமாவுக்கு தடிப்பான ஒடம்பு. எப்பவாச்சும் எங்கிட்ட ரெண்டு வார்த்த பேசரதோட நிறுத்திக்குவாரு. ஆதிலட்சுமி அத்தமாதிரியும் சாரதா அக்கா மாதிரியும் பொன்னுசாமி மாமா அழகாவெல்லாம் இருக்க மாட்டார். வீட்டுல யாருக்கிட்டயும் சொல்லிக்காம ஒரு தரம் ஈயக்குட்டையில தூண்டிப் போட பசங்களோட சேர்ந்துக்கிட்டு போயிட்டேன். அன்னக்கி அப்பா இடைவாரக் கழட்டிக்கிட்டு வாங்கிவிட்டுப் புட்டாரு.
அதுக்காவ அப்பா மேல எனக்கு ரொம்ப நாளு கோவம் இருந்திச்சி.
எங்களுக்குத் தூரத்து சொந்தக்காரர் கண்ணன் மாமான்னு ஒருத்தர். அவரு சைக்கிள்ள வச்சி தோட்டத்துல இருந்த சுடுகாட்டு மேட்டயெல்லாம் தாண்டி ஒரு எடத்துக்கு கூட்டிக்கிட்டு போனாரு.
அடர்த்தியான காட்டுக்கு உள்ள போரதுக்கு ஒத்தடி பாதை இருந்தாலும், ரோத்தான் செடிங்கள ஒதுக்கி தள்ளிக்கிட்டு உள்ள நொழஞ்சா, குருவிங்க சத்தம். எங்க பாத்தாலும் மங்குஸ்தீன், ரம்புத்தான், பூனைப் புடுக்கு, சிம்பட்டா, பழமரங்களும் கொத்து கொத்தா பழங்களுமா இருந்திச்சி.
அங்க இருந்து பாத்தா, மீனு புடிக்கப் போயி அப்பாகிட்ட மாட்டிகிட்ட அதே ஈயக்குட்டைங்க தெரிஞ்சது. ஹோ..ன்னு தண்ணி எரயிர சத்தம் ஈயக்குட்டைங்க பக்கம் இருந்து கேட்டுக்கிட்டே இருக்குது.கண்ணன் மாமா மட..மட..ன்னு நாலு அஞ்சி மரத்துல ஏறி ரம்புத்தான், மங்குஸ்தீன், பூனைப்புடுக்கு, சிம்பட்டி, மாச்சாங் காயெல்லாம் அறுத்துப் போட்டாரு. மரத்து மேல இருந்தே சத்தம் போட்டாரு. “ஐயா! டேய்! கீழ இருக்கிறதெல்லாம் ஒரு எடத்துல கொண்ணாந்து போடு”ன்னு கேட்டுக்கிட்டாரு.
கண்ணன் மாமா கையோட ரெண்டு அரிசிச் சாக்க கொண்ணாந்திருந்தாரு.சைக்கிள் கேரியர்ல வச்சி ரெண்டு மூட்டையையும் கட்டிட்டு என்னய ஹேண்டல் பார்ல வச்சி ஏத்திகிட்டு வந்து வீட்டுல விட்டுட்டு ஒரு மூட்டய ‘அக்கா .. அக்கான்னு’ அம்மாவக் கூப்புட்டு வச்சிப்புட்டு, எங்கிட்ட ஒன்னுமே சொல்லிக்காம போயிட்டாரு. அதுக்கு அப்புறம் ஒரு வாரத்துல தோட்டத்துல யார் வீட்டு வாசலப் பார்த்தாலும் பழத் தோலுங்கதான் கெடந்திச்சி.
மத்தியானம் பள்ளிக் கோடம் விட்டு வீட்டுக்கு வரும் போது பாத்தா, தோட்டத்து ஆளுங்க நாலஞ்சி பேரு வீட்டு வாசலுக்கு வந்து அப்பாகிட்ட ஏதோ தகராறு பண்ணிக்கிட்டு இருந்தாங்க.ஜிம்மிய சங்கிலி போட்டு கட்டி வச்சிருந்தாங்க. எந்தம்பிதான் சொன்னான், “வேட்டக்காரவங்க வீட்டு நாய நம்ம ஜிம்மி கொதறிப்புடிச்சி. அதான் வந்து சத்தம் போட்டுட்டு போராங்க”ன்னு.
ஜிம்மிய பாத்தேன். அதுக்கு ஹாங்காரம் இன்னும் அடங்குனதா தெரியல.ஜிம்மிக்கு இருந்தா நாலு வயசு இருக்கும். நல்ல செவப்பு. சர்வ சாதாரணமா ரெண்டு நாய்ங்கள அது சமாளிக்கும். சங்கிலி போட்டு கட்டலைன்னா வீட்டுக்கு வந்துட்டு யாரும் சும்மா போயிட முடியாது.சிலோனியா தோட்டத்த விட்டு வரும் போது செவத்தியாம் பெருமாள் அண்ணன் லோரியில் சாமானுங்களோடயும் எங்களோடயும் சேத்துதான் அப்பா கொண்ணாந்து சேத்தாரு.
செவத்தியாம் பெருமாளு அண்ணன் எவ்வளவோ கேட்டு கெஞ்சியும் ஜிம்மியைக் குடுக்க அப்பா மறுத்திட்டாரு. டவுனுக்கு போயி மாட்டு எறச்சிய வாங்கிக்கிட்டு வெல்லன வந்துட்டாரு அப்பா. ஜிம்மிக்கு ராவு ஒரே கொண்டாட்டம்.
எங்க தோட்டம் புருவாஸ் டவுனெல்லாம் அப்ப கருப்பு பிரதேசம். ஆறு மணியானா ஊரடங்குச் சட்டம். ஆபத்து அவசரம்னா மட்டும் டானாவுல கேட்டுக் கிட்டுப் போய் வருவாங்க. தெனமும் தோட்டத்துல இருந்த ஆளுங்க பத்து இருவது பேருங்க பள்ளிக் கோடத்துக்கு வந்து தம்பிராஜா சார்கிட்டே பேசிட்டுப் போவாங்க.
தோட்டத்துலயும் தொர பங்களாவுலயும் துக்கான் வேலப் பாத்துக்கிட்டிருந்த தவுக்க முனுசாமி மாமா பள்ளிக்கோடத்து பக்கம் லோரி கொண்ணாந்து எரக்கிட்டுப் போன சட்டம் பலகயயெல்லாம் அளந்து அறுத்து அடுக்கிக் கிட்டு இருப்பாரு.
பள்ளிக்கோடத்து பிள்ளைங்களுக்கு அன்னாடம் வெளையாட்டுப் பயிற்சியெல்லாம் விடாம நடத்துனாங்க.எனக்கு தம்பிராஜா சார் 100 கெஜம் நேர் ஓட்டம் ஓடச் சொல்லி குடுத்திட்டாரு.
அஞ்சாம், ஆறாம் வகுப்பு பசங்களோட என்னய சார் ஓட வச்சி பயிற்சி குடுத்தாரு.
பள்ளிக் கோடத்துல தயார் பண்ன, பலக சட்டத்த யெல்லாம் தூக்கிக் கிட்டு போயி, தோட்டத்து வாசல்ல நட்டு வச்சி அலங்காரம் செஞ்சாங்க. பள்ளிக் கோடத்துல தம்பிராஜா சார் சொன்னாரு. 31ம் தேதி மெர்டேக்கான்னு. துங்கு அப்துல் ரகுமான் படம் போட்ட பேட்ஜ் விதம்விதமாக சார் கிட்ட இருந்திச்சி. பள்ளிக் கோடத்துல இருந்த எல்லா பிள்ளங்களுக்கும் மெர்டேக்கா பேட்ஜ் குத்திவிட்டாங்க.
மெர்டேகாவுக்கு இன்னும் ரெண்டு மூனு நாளு இருக்கும்போதே தோட்டத்து வாசல அலங்காரம் செஞ்சி கலர் கலரா லைட்டெல்லாம் போட்டு அழகு படுத்தியிருந்தாங்க. புருவாஸ் டவுன்ல இருக்கிற இங்கிலிஸ் பள்ளிக் கோடத்துல நடக்கப் போர ஓட்டப் பந்தயத்துக்கு எங்கள தம்பிராஜா சார் ரொம்ப மும்முரமா தயார் படுத்திக்கிட்டு இருந்தாரு. இளம் நீலக் கலர்ல எங்க பள்ளிக் கோடத்து டீம் பனியன் இருந்துச்சி.
சம்பந்தன், துங்கு அப்துல் ரகுமான், படமெல்லாம் எல்லா எடத்துலயும் ஒட்டியிருந்தாங்க.
மெர்டேக்காவுக்கு மொத நாள் ராத்திரி நடந்த யூனியன் கூட்டத்துக்கு போயிட்டு வந்த அப்பா ரொம்ப கவலையோட அம்மாகிட்ட சொன்னது எனக்கு காதுல விழுந்தது.
கலைவாணர் செத்துப் போயிட்டாராம்.
யாரு? ‘யார் பையன்’ படத்துலயும், ‘மதுர வீரன்’ படத்துலயும் நடிச்சிருந்தாரே அந்தக் கலைவாணரா?
நான் தூங்கிப் போயிட்டேன்!
– அக்டோபர் 2009