மண்ணில் விழாத வானங்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 7, 2022
பார்வையிட்டோர்: 7,830 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்னப்பா… ‘ஜுயிவில் சிப்போர்ட், எல்லாம் கொடுத்தாச்சா?”

பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த கணித ஆசிரியர் கந்தசாமியின் குரல் கணீரென்று சுப்பையாவை வரவேற்கிறது.

“ஆமாம் சார்! காலையிலேயே ‘ரிப்போர்ட்’ பண்ணிட்டேன். இப்ப ஆஃபீஸ்ல சர்ட்டிஃபிகேட்ஸ் எல்லாம் சரி பார்த்துக்கிட்டு இருக்காங்க. அது தான் கொஞ்சம் தாமதமாயிடுச்சு” என்றவன், சற்றுத் தயங்கியபடி அவரிடம் கேட்கிறான்: –

“இன்னிக்கு ஷாருக்குக் கொஞ்சம் லேட்டாயிடுச்சு போலிருக்கே? ஸ்கூல்விட்டு நாலரை மணிக்கே எல்லோரும் போயிட்டாங்களே?”

“நாம என்ன இயந்திரங்களோடேயா வேலை பார்க்கிறோம்? ‘டயம்’ முடிஞ்ச வுடனேயே ஸ்விட்சை ஆஃப் செஞ்சிட்டு வர்றதுக்கு! எல்லாம் மனித மூளைகளப்பா! எப்ப ஏத்துக்கிற மனநிலை இருக்கோ அப்ப, நாமே வேண்டாம்னு சொன்னாலும், இந்தப் பையங்க விடறதில்ல! ஆனா… ‘மூட்’ இல்லாதப்ப, எவ்வளவு வலுக்கட்டாயமாகத் திணிச்சாலும் அவங்க மண்டையிலே ஏறப் போறதுமில்லே! பரீட்சை நெருங்குது பார்த்தியா! இத்தனை நாளா இல்லாத சந்தேகங்களெல்லாம் இப்பத்தான் அவங்களுக்கு வருது! அவங்களாகவே வந்து கேக்கறப்போ சொல்லிக் கொடுக்கிறதை விட இந்த ஆசிரியத் தொழிலிலே வேறே என்ன ஆனந்தம் இருக்க முடியும். சொல்லு” – அனுபவித்து விளக்கம் கொடுத்தபடி… அப்பொழுது தான் வந்து நின்ற ஒரு பஸ்ஸில் தாவி ஏறுகிறார் கந்தசாமி வாத்தியார்.

மெலிந்த நெடிய உருவமானாலும் பார்வையிலேயே மரியாதையைக் கேட்டு வாங்கும் கண்ணியம் கலந்த கம்பீரமான தோற்றம்: இளைஞனைப் போன்ற சுறு சுறுப்பு: செய்யும் தொழிலைத் தெய்வமாகவே எண்ணிப் போற்றும் இலட்சிய வெறி ததும்பும் கண்கள். மாணவப் பருவத்தில் அவரைத் தன் இலட்சிய நாயகனாய் வரித்ததற்கும், ஆசிரியத் தொழில் மீது ஈர்ப்புக் கொண்டு, இப்பொழுது அதனை நாடி வந்திருப்பதற்கும் மூலகாரணமான அந்தப் பண்புகள்… இன்றும் வயோதிகத் தளர்ச்சி காரணமாய் எள்ளளவும் குறையாமலிருப்பது கண்டு வியந்து நிற்கிறான் சுப்பையா.

***

“ஆகவே, பத்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து நாம் நடத்தற இந்த மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு எல்லா ஆசிரியர்களும் ஆதரவு தரணும்னு கேட்டுக்கிறோம், ஆசிரியரைத் தெய்வம்னு சொல்லுவாங்க! தெய்வத்துக்கு நிவேதனம் செய்த மாதிரி நமக்கும் அப்பப்ப… ஏதோ காட்டப்படுது! ஆசிரியரும் சாதாரண மனுஷங்க தான், கேட்டுப் பெற முடியாததைப் போராடிப் பெறுவதைத் தவிர வேற வழியில்லை.

இன்னும் தொடர்ந்து ஏதேதோ பேசிக் கொண்டே போகிறார்… ஆசிரியர் சங்கம் செயலாளர் தியாகராஜன்.

தனித் தனியாக ஆதரவு கேட்டு வருகிறார்கள், சிலர் பணிகிறார்கள், பலர் ‘பேப்ரரி’யில் செய்ய வேண்டிய ‘ரெபரன்ஸ்’ வேலை அப்பொழுது தான் நினைவுக்கு வரப்பெற்றவர்களாய் அங்கே போய் முடங்கிக் கொள்கிறார்கள்.

கந்தசாமி சாரின் குரல் மட்டும் கொஞ்சமும் பிசிறு தட்டாமல் ஒலிக்கிறது.

“என்னைத் தயவு பண்ணி மன்னிச்சிடுங்க தியாகராஜன், நான் இந்தத் தொழிலிலே முப்பது வருஷம் ‘சர்வீஸ்’ போட்டவன்! நாள் வளர்த்த ஒண்னோட ‘ஆத்மாவை’ என் கையாலேயே மென்னி முறிச்சுப் போடறது…என்னாலே முடியாது!”

“ஸார் நீங்க புரியாமப் போசறீங்க! நாங்க தனிப்பட்ட மனிதர்களுக்கோ…இல்லே…நிர்வாகத்தினருக்கோ எதிராக இந்தப் போராட்டத்தை நடத்தலை! நம்ம கோரிக்கைகளை உரத்த குரலிலே அரசாங்கத்துக்குத் தெரிவிச்சுக்கிறோம்.. அவ்வளவு தான்”

“ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் இட் வெரி வெல் மிஸ்டர் தியாகராஜன்! ஆனா.., என்ன செய்யறது? என் மனசுக்கு நீங்க போற வழி உகந்ததாகப் படவில்லையே? பழகின பாதையை விட்டு வர்றதுக்கு இந்தப் பழங்காலத்து மனுஷனாலே முடியலியோ” -ஆதரவு நாடி வந்தவர்கள் ஏமாற்றத்துடன் நகர்கிறார்கள்.

***

“புனிதமான தொழிலாம்! பண்பாடு கெட்டுப் போகுமாம்! யாரைய்யா ஏமாத்தறாங்க இவங்க எல்லாம்?”

“நான் ஒன்று சொல்றேன்! ஒருவேளை நாம் நடத்தற போராட்டம் ஜெயிச்சிடுத்துன்னு வெச்சுக்குவோம்! அப்ப… அதனாலே கிடைக்கப் போற லீவு சலுகைகள், ‘இன்க்ரிமெண்ட்’ இதையெல்லாம் வேண்டாம்னு எழுதிக் கொடுத்திடுவாங்களாமா?”

”அதெப்படி! அப்ப முதல் பத்தி அவங்களுக்குத் தானே”

மதியச் சாப்பாட்டுக்கு ஆசிரியர் அறையை நாடி வந்த சுப்பையாவின் காதுகளில் நாக்கில் நரம்பற்ற இச்சொற்கள் நாராசத்தை ஊற்ற….. அங்கிருந்து நகர்கிறார்.

***

“என்னப்பா சுப்பையா உன்னேட இலட்சியக் கதாநாயகன்… அதுதாம்பா கந்தசாமி வாத்தியார், ‘பிளாக் பாட்ஜ்’ கூடக் குத்திக்க மாட்டேன்னு சொல்லிட்டாராமே!” தமிழாசிரியர் தங்கமணி சுப்பையாவைக் கேட்கிறார்.

”அப்படியா? எனக்குத் தெரியாதே சார்”

‘ஸார் மட்டும் ஏன் இப்படி வித்தியாசப்பட்டு நின்று வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்?’ சுப்பையா குழம்புகிறான்.

“சட்டையிலேயே கறுப்புப் பட்டையைக் குத்திக்கிட்டு நான் கணக்கு எடுக்கப் போனா பயங்க கண்ணிலே கறுப்புத்தான் உறுத்தும்! மூளையிலே கணக்குப் படியாதுன்னு சொல்லி அனுப்பிட்டாராம்! தன்னோட கோழைத்தனத்தை மறைக்க நல்ல கவசம் கிடைச்சுதுப்பா உங்க ஸாருக்கு!”

***

“உங்களை ஹெட் மாஸ்டர் கூப்பிடறார் சார்!”

அங்கே… தமை ஆசிரியரின் அறையில் ஒரு சிறு ஆசிரியர் குழு கூடியிருக்கிறது.

“உட்காருங்க மிஸ்டர் கந்தசாமி! போராட்டத்திலே கலந்துக்காமே, உங்கள் மாதிரி முழு மனசோடே நிர்வாகத்துக்கு ஒத்துழைப்புத் தந்த ஆசிரியர்களுக்கு நம்ம ஸ்கூல் கரஸ்பாண்டண்டே நேரில் வந்து நன்றி தெரிவிக்கப் போறதாச் சொல்லி அனுப்பியிருக்கார்! வெயிட் பண்ணுங்க! இன்னும் அஞ்சு நிமிஷத்திலே வந்திடுவார்!”

“எக்ஸ்கியூஸ் மீ ஸார்! விஷயம் இப்படின்னு தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன்! நான் போராட்டத்திலே கலந்துக்காம ஒதுங்கி யிருந்தது உண்மைதான், ஆனா…. யாரையும் ஆதரிக்கனும்கிறதோ அல்லது எதிர்க்கிதோ என்னுடைய நோக்கமில்லை, மாணவர் நலன் அப்படிங்கிற ஒன்றுதான் அதுக்குக் காரணம், நான் கலந்துக்கிட்டா அது எங்க ஆசிரியர் வர்கத்தையே காட்டிக் கொடுக்கிற மாதிரி! அந்தத் துரோகத்தைச் செய்ய தான் விரும்பவில்லை!”

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையோடு அவர் அறையை விட்டு வெளியேறுகிறார்.

விஷயமறிந்த சுப்பையா இன்னும் அதிகமாகக் குழம்புகிறான்.

***

“உங்களோட கான்ஃபிடன்ஷியலா ஒரு விஷயம் பேசனும் கந்தசாமி!”

“என்ன சார், சொல்லுங்க!”

எச். எம்.மாக இப்பொழுது நாற்காலியில் வீற்றிருக்கும் தியாகராஜன் இரகசியம் பேசும் பாணியில் மேஜை மீது சரிகிறார்.

“நீங்க ‘மேத்ஸ்’ எடுக்கிற ‘நைன்த் ஸ்டாண்டர்ட் ‘ஏ’லே.. அழகேசன்னு ஒரு மாணவன் இருக்கானே அவன் நம்ம ஸ்கூல் கமிட்டி மெம்பர் கதிரேசன் பிள்ளையுடைய மச்சினி பையன்! ‘மேதஸ்’லே மட்டும் தான் கொஞ்சம் ‘வீக்’ அதுக்காக பெயிலாக்கிடாமே எப்படியாவது பத்துக்குத் தள்ளிவிட்டா , ‘ஃபைனல் எக்ஸாம்’ ‘கோச்சிங்கை’ அவங்க பார்த்துக்குவாங்க! கதிரேசன் கமிட்டியிலே ஆக்டிவ் மெம்பர்கிறது உங்களுக்கு நல்லாத் தெரியும்! நீங்க எப்படியாவது ‘அட்ஜஸ்ட்’ செய்து ஒரு முப்பத்தைஞ்சு மார்க்குக்குக் கொண்டு வந்தீங்கன்னா…”

“நீங்க சொல்ற காரியத்துக்கு என்னாலே உடந்தையாய் இருக்க முடியாது சார்! இந்த ‘டர்ம்’ ஆரம்பிச்சதிலேயிருந்து இன்னிக்குத் தேதி வரையிலே அழகேசன், பத்து மார்க்கை ஒரு தடவை கூடத் தாண்டின தில்லை. மனச்சாட்சியைக் குழி தோண்டிப் புதைச்சுட்டு இப்படி ஒரு செயலைச் செய்ய நான் ஒத்துக்கவே மாட்டேன்…”

தியாகராஜனின் முகம் பாறையாய் இறுகுகிறது.

“எப்பவும் மூங்கிலாகயே இருந்துவிட முடியாது கந்தசாமி! சில வேளைகளில் நாண லாகவும் மாறித்தான் ஆகவேண்டும்! ஆல் ரைட்! யு கேன் கோ!”

***

மறுநாள் வந்ததும் வராததுமாக ஆசியர்கள் எல்லோரும் ‘நோட்டீஸ் போர்டை’ சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

“என்னப்பா ! என்ன விஷயம்?”

கந்தசாமி கேட்க சயன்ஸ் வாத்தியார் குமுறி வெடிக்கிறார்.

“கேளுங்க ஸார் இந்த அநியாயத்தை! ஒரு நாளும் இல்லாத அதிசயமா வருஷ முடிவிலே எல்லா ஆசிரியர்களையும் இஷ்டத்துக்கு ‘செக்க்ஷன்’ மாத்தி மாத்திப் போட்டு சர்குலர் அனுப்பியிருக்கார் சார் நம்ம எச்.எம்.”

”என்னது! செக்ஷன் சேஞ்சா?” -வியப்போடு அறிவிப்பைப் பார்த்தவருக்குத் தம் பெயர் ‘நைன்த்-பி’க்கு மாற்றப்பட்டிருப்பதைக் கண்டதுமே, விஷயம் இன்னதென்பது தெளிவாக…எச்.எம். அறைக்கு விரைகிறார்.

“இயர் எண்டிலே செக்ஷன் மாத்தறதுக்கு என்ன காரணம்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா?”

“அட்மினிஸ்டிரேஷனிலே சில வசதிகளுக்காகச் சில மாற்றங்கள் செய்யப்படலாம். ஒவ்வொண்ணுக்கும் எக்ஸ்பிளனேஷன் கொடுக்க வேண்டிய அவசியமில்லை!”

“ஆன… இதனாலே பாதிக்கப்படுவது ஒரே கிளாஸிலே இத்தனை நாட்களாகப் பழகிக்கிட்டிருந்த ஆசிரியர்களும். மாணவர்களும் தான்! அதைக் கொஞ்சம் நினைச்சுப்பாருங்க!”

“ஸ்டாப் இட் மிஸ்டர் கந்தசாமி!” தியாகராஜனின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.

“தலைமை ஆசிரியர் அப்படிங்கிற முறையிலே…மாணவர்களோட நலனிலே உங்களை விட அதிக அக்கறை எனக்கு இருக்கு! மைண்ட் பூ! நீங்க எனக்குப் புத்தி சொல்ல வேண்டிய அவசியமில்லே! ஐ ஹேவ் பெட்டர் ஒர்க் டு டூ! யு கேன் லீவ் திஸ் பிளேஸ்”

***

அந்த உயர்நிலைப் பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக மாற்றியமைப்பதற்கான பெற்றோர் – ஆசிரியர் சங்கக் கூட்டம் அன்று நடந்து கொண்டிருக்கிறது. பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவனிடமிருந்து குறைந்த பட்சம் ரூ. 50 வசூல் செய்ய வேண்டுமென்ற தன் திட்டத்தைப் பள்ளி நிர்வாகக் கமிட்டி அறிவிக்கிறது.

பல பெற்றோர்கள் வாயடைந்து உட்கார்ந்திருக்கக் கந்தசாமி எழுத்து பேசினார்.

“மேல் நிலைப்பள்ளியா இதை உயர்த்தறது ரொம்ப உன்னதமான பணிதான். ஆனா… அதுக்குப் – பொதுமக்கள் கிட்டே ஆதரவு கேட்டு நன்கொடை திரட்டியோ கலை நிகழ்ச்சிகள் நடத்தியோ பண வசூல் செய்யலாமே தவிர அத்தனை சுமையையும் மாணவர்கள் தலையிலே வலுக்கட்டாயமாகத் திணிக்கிறது சரியான காரியமாய்ப்படலே..”

ஆணித்தரமான அவரது கருத்தை ஆமோதித்து அடுத்தடுத்துப் பல குரல்கள் எழவே தீர்மானம் நிறைவேற்றப்படாமலே கூட்டம் கலைகிறது.

***

தார் உருகிக் குழம்பாய் ஓடும் உச்சி வெய்யில் வேளையில் பள்ளி முகப்பைக் கடந்து தெருவில் காலெடுத்து வைக்கிறார் கந்தசாமி,

சுப்பையா அவரைத் தேடிக் கொண்டு தலைதெறிக்க ஓடி வருகிறார். “வேலையை ராஜிநாமாச் செஞ்சிட்டீங்களாமே ஸார்!” –

அவர் தம் சட்டைப் டையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து அவன் கையில் கொடுக்கிறார்.

பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளில் ஒத்துழைக்க மறுத்ததாகவும், தலைமை ஆசிரியரின் அன்றாட நிர்வாகப் பணிகளில் குறுக்கிட்டு இடையூறு செய்வதாகவும் குற்றம் சாட்டிக் கந்தசாமி சாருக்குப் பள்ளி நிர்வாகம் அனுப்பி வைத்திருக்கிற அந்த ‘ஷோகாஸ் நோட்டீ’ஸை உதடுகள் துடிக்கப் படித்து முடிக்கிறான் சுப்பையா.

“ஆனா.. சார்! இதுக்காக நீங்க வேலையை!”

“தம்பி! இந்தக் கடிதத்துக்கு நான் விளக்கம் கொடுத்தேன்னா அவங்க சொல்றதை ஒத்துக்கிட்டதா ஆயிடும்!.. மேலும் என்ன விளக்கம் கொடுத்தாலும் அவங்க ஏத்துக்கப் போறதுமில்லை…அதுக்கெல்லாம் மேலே அப்படிச் செய்யறது… என்னோட ஆத்மாவை நானே குரூரமா அவமானப் படுத்திக்கிறதுக்குச் சமம்!… எந்த வகை யிலேயாவது என்னோட எதிர்ப்பை நான் காட்ட வேண்டாமா? அதுக்கு எனக்குத் தெரிஞ்ச ஒரே மௌனமான மொழி…வழி… இதுதான்!”

தெருத் திருப்பத்தில் மறைகிற வரையில் அந்த நெடிய கம்பீரமான புன்சிரிப்பு மாறாத உருவத்தைக் கண் கொட்டாமல் பார்த்தபடி நிற்கும் சுப்பையா மனத்துக்குள் சொல்லிக் கொள்கிறான்- “சாருடைய வேர்கள் ரொம்பவும் ஆழமானவை!”

– 11-05-1980

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *