மடிப்பிச்சை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 14, 2023
பார்வையிட்டோர்: 3,974 
 
 

கடலுக்கிடையே இல்லையே தவிர, அந்தக் கிராமம் தீவாகத்தான் காட்சி அளிக்கிறது. இந்த அகன்ற நிலப்பரப்பில் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில், எந்த நகரமும் தென்படாததால், நாகரீக வளர்ச்சி அற்றுப் போயிருந்தது. இதேபோல், முகங்களிலும் ஜீவகளை இல்லை.

ஆனால், ஜனநாயக நாட்டில் இதுவொரு அங்கம்தான் என்பதை, காலையில் தென்பட்ட காட்சி உறுதி செய்வதாக இருந்தது. வெள்ளைச் சட்டைகளுடன், கட்சிக் கரைவேட்டிகள் நின்று, அளவளாவிக் கொண்டிருந்த்தைப் பார்த்தால், அப்படித்தான் தோன்றுகிறது. அதம்பையூர் ஊருணியின், வடகிழக்குத் திசையில் இருந்து, கட்சிப் பணிகளை தொடங்கியிருந்தது கரைவேட்டிக் கும்பல். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை, செயல் வீரர்களாகப் பழகிப் போனவர்கள், இரண்டரை ஆண்டுகளிலேயே, கட்சிப் பணி, கழகப் பணி என, வெள்ளை வீச தொடங்கியிருந்தார்கள்.

ஊருணிக்கரையின் வடக்கே, இரண்டு வீடுகளுக்கு முன் உறுப்பினர் விவரங்களைச் சேகரித்தவர்கள், வடக்கு பார்த்த ஒரு வீட்டுக்கு முன் குழுமினார்கள். காலையிலேயே சுட்டெரிக்கத் தொடங்கிய வெயில் கூட, கனகராசுவின் மூடியிருந்த இமைகளை திறக்க முடியவில்லலை. இயற்கைக்கே சவால்விடும் அளவுக்கு இருந்தது, அவனது குறட்டையுடன் கூடிய தூக்கம்.

சரியாகச் சீவிக் கொள்ளாத ஒரு பரட்டைத் தலையைக் கொண்ட ஒருவன்,’வீட்லெ யாரு’ என குரல் கொடுத்தான். சூரிய வெப்பத்திற்கே எழாத அந்த சயன உருவத்தை, இந்த சப்தம் அசைத்தபாடில்லை. ‘ அவமேலே ஆசைதான், பாய்மேலே கிடக்கேன்’ என்பதுபோல, நித்ய சயனத்தில் இருந்தான் கனகராசு. ஆளரவமே அற்றுப்போன அந்த வீட்டு வாயிலைவிட்டு, நகர எத்தனித்தபோது, காலைக்கடனுக்காக, கண்மாய்க் கரையில் ஒதுங்கிவிட்டுத் திரும்பிய கனகராசுவின் மனைவி, குறுக்கே புகுந்து, பல்துலக்காத வாயை கொஞ்சம் அகலத் திறந்தாள்.

‘என்ன விசயம் வந்தவுடனே கெளம்பிட்டீங்க’

‘லோக்சபா தேர்தல் அறிவிச்சிருக்காங்கல்ல, அதுக்கான அப்ரோச்சுக்கு வந்தம்மா’, பத்து நிமிசமா கத்துறோம் யாருமே எட்டிப் பாக்கலை., அதாங்கெளம்பிட்டோம்’

‘வாங்க நாங்களும் உங்க கட்சிதான். பிறந்த புள்ளையளுக்குத்தான் இங்கெ ஓட்டு இல்லை. மத்த எல்லாருக்கும் இருக்குங்க’

‘ரொம்ப சந்தோசம்மா, நம்ம கட்சிக்கு ஓட்டுப் போட்ருங்க, தெரிஞ்சவங்கட்டே சொல்லி போடச் சொல்லுங்க’

‘போடச் சொல்றதுதானே என்னோட வலை, போட்றோம் காபி சாப்புட்டுப் போங்களே’

‘வேண்டாம்மா, இன்னும் ரெண்டு ஊருக்குப் போகணும்’ என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார்கள்.தெருக் கடைசியிருந்து நான்காவது வீட்டி் நின்று, பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கணக்கம்மாளின், மூத்த மகள் வீட்டிலிருந்து பாட்டுச் சத்தம் கேட்டது.

‘என்னம்மா அந்த வீட்லே விசேசமா?

‘விடிஞ்சா எந்திரிச்சா இதே வேலையா போச்சுங்க, மாம்பலம் கேட்டான், கொடுத்தேன் வேண்டானுட்டான்னு, இதையே போட்றாளுக போக்கத்த சிறுக்கிய..பாட்டைக் காதில் வாங்கியபடி, கணக்கம்மாள் மகள் வீட்டுக்கு முன் நின்று கொண்டு அழைத்தார்கள்.

இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, எண்ணெய் குடத்தில் குளிப்பாட்டிய யானையைப் போல, ஒரு உருவம் வாயிலை நோக்கி வந்தது.

‘காதலுக்குப் பின்னாலே கல்யாணம் ஆகும் என்றே கையடிச்சான்
அவள் ஆகட்டும் என்றே ஆசையில் நின்றே அத்தானின் காதை கடிச்சா’

என்ற பாடல் வரிகளைக் கேட்டு ரசித்த வர்கள். நெருங்கி வந்த கருத்த உருவத்திடம், நையாண்டியாக கேட்டான் ஒருவன். ‘என்னம்மா நீங்க இங்க இருக்கீங்க, அங்கு யாரோ காதைக் கடிச்சதா பாடுறாங்க’

‘இல்லங்க அது டேப்புலெ பாடுதுங்க’ என்று கையைப் பிசைந்தாள்

‘நீங்க கையைப் பிசைறதப் பாத்தா, பிரச்சினை மாதிரி தெரியிது. ஓங்கி அடிச்சிட்டாரோ கையில’

‘சிரிப்புக்காட்டாதீங்க, சும்மாருங்கோ கையை பிசைஞ்சுக்கிறது என்னோட பழக்கதோசம், வேறொண்ணும்மில்லை, என்னோட வீட்டுக்காரச் சண்டாளன் கொறட்டைவிட்டுத் தூங்கிட்டு இருக்கு, சரி நீங்க வந்த வெவரத்தைச் சொல்லுங்க’

‘எலக்சன் அறிவிச்சிருக்காங்கள்ல, பாத்து பேசிட்டுப் போலாம்னுதா வந்தோம்’

‘உங்க கரை வேட்டியப் பாத்தாலே தெரியிது, நீங்க எங்க கச்சிக்காரங்க இல்லேனு. ஓட்டுப்போட்டா என்ன தருவீங்க?’

‘எப்பவும் கொடுக்கிறமாதிரி கொடுத்திருவோம்மா’

‘ஓட்டுக்கு எரநூறு, முந்நூறு ரூவாயா?’

‘அதுசரி, நாங்க ஓட்டை மாத்திப் போடனும்னா இப்பவே ஏதாவது வெட்டிட்டுப் போங்க, இதை அட்வான்சா வச்சிக்கோங்க’

‘நம்பிக்கையில்லையாம்மா’ என்று 200 ரூபாயைக் கொடுத்தான் அந்தக் கும்பலில் ஒருவன்.

‘சரிம்மா பசிக்கிது, ஏதோ மாம்பழம் வேண்டான்னு சொன்னதா, உங்க வீட்ல இருந்து கேட்டுச்சு, இருக்கா, இருந்தா குடுங்கமமா, பசி வயித்தைக் கிள்ளுது’

‘இருக்கு, ஆனா அந்த மாம்பழம் சரியில்லைங்க, என்னோட வீட்டுக்கார மூதேவி எந்திருச்சா, மறுபடியும் கேக்கும். பக்கத்துலெ ஏந்தங்கச்சி வீடு இருக்கு, அங்கு வேணுன்னா போய்க் கேட்டுப்பாருங்க’

‘அப்டியா… கெடைக்குமா?’

‘யாராருக்கோ கொடுத்திருக்கா, உங்களுக்கு இல்லேன்னு சொல்லப்போறா, அப்டிச் சொன்னா நா பேசிக்கிறேன். வந்த வழியே திரும்ப நடந்து,அவளது தங்கை வீட்டு வாசலில் நின்று அழைத்தார்கள்.இரவில் சேலையை நம்பி, இடுப்புக் கந்தையை எறிந்தவளைப்போல, ஒருத்தி அலங்கோலமாக வந்து நின்றாள்.

‘இப்பத்தானே பேசிட்டுப் போனீங்க, மறுபடியும் வந்திருக்கீங்க, என்ன வேணும்?

‘பசியா இருந்ததாலே, உங்க அக்காகிட்ட மாம்பழம் கேட்டோம். உங்கட்டெ இருக்கிறதா சொன்னாங்க, அந்த நம்பிக்கைலே வந்திருக்கோமா’

‘நீங்க கேட்டு கொடுக்க முடியாத சூழ்நிலையில, நா இப்ப இருக்கேன். வருத்தமாத்தான் இருக்கு. எங்க அக்கா வீட்லதா ஏகப்பட்ட மாம்பழம் இருக்கு, நா வாங்கித்தர்றேன், வாங்க..என்று திரும்பவும் அழைத்துச் சென்றாள்.

‘அக்கா நீயே அவங்க கேக்கிற பழத்தைக் கொடுத்திருக்கா, அது இல்லாட்டி வயித்துக்கு வடையவாவது குடுக்கா’

‘அடியே நேத்து தங்கச்சி வந்திருந்தா, இருந்துச்சு, இன்னைக்கு இல்லைடி. அதான் உங்கிட்ட அனுப்புனேன். என்று சொல்ல, இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அதில் ஒருவன், சரிம்மா, நாங்க கெளம்புறோம்.இன்னொரு சமயம் கிடைக்கும்போது வர்றோம்மா’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கள். அதில் ஒருவன் மல்லுக்கு நிற்காத குறையாக பேசிக் கொண்டிருந்தான்.

‘நீ ஏண்டா இவ்ளோ கோவமா இருக்கே?’ என்னாச்சு’

‘அவளுக்கிட்டே போயி இருநூறு ரூபாயைக் கொடுத்தியே, நம்மை அவ அலைய விட்டதுதா மிச்சம். ஈட்டி எட்டு முழம் பாஞ்சா, பணம் பாதாளம் வரைக்கும் பாயுங்கிறது பொய்யா, ஒரு நாலு முழங்கூட, பாயலையேங்கிற வருத்தந்தான்டா’ என, அங்கலாய்த்தபடியே நடந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *